உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 2/8 பக். 3-6
  • பராமரிக்கும் சவால்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பராமரிக்கும் சவால்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது”
  • “நாங்கள் கவனமின்றி இருந்துவிட்டால், . . . என நான் பயப்பட்டேன்”
  • “அவர்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதை நினைத்து நீங்கள் வருந்தலாம்”
  • ‘நான் ஒதுக்கப்பட்டவளாக உணர்ந்தேன், எரிச்சலடைந்தேன்’
  • “குற்றவுணர்வு இருக்கிறது”
  • பராமரிப்பவரை பராமரித்தல் மற்றவர்கள் எவ்வாறு உதவலாம்
    விழித்தெழு!—1997
  • உணர்ச்சிகளை எவ்வாறு சமாளிப்பது
    விழித்தெழு!—1997
  • பராமரிப்பாளர்கள் என்ன செய்யலாம்?
    விழித்தெழு!—1998
  • நாம் நேசிக்கும் ஒருவர் மோசமான வியாதியால் கஷ்டப்படும்போது...
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 2/8 பக். 3-6

பராமரிக்கும் சவால்

“சில சமயங்களில் அந்த நிலைமையிலிருந்து எப்படியாவது தப்பி ஓடிவிட வேண்டுமென விரும்பினேன். ஆனால் முன்னொருபோதும் இருந்ததைவிட அவருக்கு நான் அதிகம் தேவைப்பட்டேன். சில சமயங்களில் நான் தன்னந்தனிமையாக உணர்ந்தேன்.”—தனது 29-வயது கணவர் மூளைக் கட்டியால் இறப்பதற்கு முன் 18 மாதங்களாக அவரைக் கவனித்துக்கொண்டுவந்த ஜினி.a

“சில சமயங்களில் அம்மாவைக் கண்டால் எரிச்சல் வரும், ஆனால் அதன்பின் என்னையே எனக்குப் பிடிக்காது. நன்றாக சமாளிக்க முடியாதபோது நான் தோல்வியடைந்துவிட்டதாய் உணருகிறேன்.”—59 வயது ரோஸ்; இவர், சக்தியற்று படுத்தபடுக்கையாய் இருந்த தனது 90 வயதான அம்மாவைப் பராமரித்தார்.

தீராத அல்லது நாள்பட்ட வியாதியைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் குடும்பத்தினரும் நண்பர்களும் நிலைகுலைந்துபோகலாம். “நோய் கண்டுபிடிக்கப்படும் சமயத்தில் ஒவ்வொரு குடும்பமும் கைவிடப்பட்டதாக உணரலாம். இதே பிரச்சினையை எதிர்ப்பட்டிருந்த வேறெவரையும் அவர்களுக்கு ஒருவேளை தெரியாமலிருக்கலாம்,” என்பதாக ஜின் மன் ப்ரேக்கன் என்பவர் புற்றுநோயுள்ள பிள்ளைகள் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் சொல்கிறார். அவர்கள் அடிக்கடி “அதிர்ச்சியால் மரத்துப்போய், செய்வதறியாதவர்களாய்” ஆகிவிடுகின்றனர்; எல்சா தனது நெருங்கிய சிநேகிதியான 36 வயது பிட்டிக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்துகொண்டபோது இப்படித்தான் ஆகிவிட்டாள். சூ என்ற பெண்ணுக்கு, தனது அப்பா புற்றுநோயால் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டுவருவதை இறுதியில் அறிந்தபோது “பயம் வயிற்றைக் கலக்கியது.”

பராமரிப்பாளருடைய—வியாதிப்பட்டிருப்பவரது சரீர மற்றும் மன ரீதியான தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொறுப்பு—திடீரென தங்கள்மீது சுமத்தப்படுவதை குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும் உணரலாம். அவர்கள் ஒருவேளை ஊட்டச்சத்துள்ள உணவைத் தயாரித்து, நேரத்திற்கு மருந்து கொடுத்து, டாக்டரிடம் செல்வதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்து, வியாதிப்பட்டிருப்பவரை சந்திக்கவருவோரை உபசரித்து, வியாதிப்பட்டிருப்பவர் சார்பாக கடிதங்கள் எழுதி, இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்ய வேண்டியிருக்கலாம். பெரும்பாலும் அப்படிப்பட்ட வேலைகள் ஏற்கெனவே வேலை நிறைந்த அட்டவணையில் நுழைக்கப்படுகின்றன.

எனினும், நோயாளியின் நிலைமை மோசமாகும்போது பராமரிக்கும் வேலை இன்னும் அதிக கடினமாகிறது. இது எதை உட்படுத்தும்? “எல்லாவற்றையுமே!” என படுத்தபடுக்கையாய் கிடக்கும் தனது சிநேகிதியான பிட்டியைப் பற்றி சொல்லும்போது எல்சா உணர்ச்சிபொங்க சொல்கிறார். “அவளைக் குளிப்பாட்டி உணவளிப்பது, வாந்தியெடுக்கும்போது அவளுக்கு ஒத்தாசை செய்வது, அவளது சிறுநீரக பையை சுத்தம்செய்வது.” முழுநேர வேலை செய்துகொண்டிருந்தபோதிலும் நோய்வாய்ப்பட்ட தனது அம்மாவை காத்தி என்ற பெண் பராமரிக்க வேண்டியிருந்தது. முன்பு குறிப்பிடப்பட்ட சூ, “ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் [அவளது அப்பாவிற்கு] எவ்வளவு ஜூரம் இருக்கிறதென்பதைப் பார்த்து பதிவு செய்வது, ஜூரம் அதிகமாகும்போது தண்ணீரில் நனைத்த துணியை வைப்பது, ஒருசில மணிநேரங்கள் இடைவெளிவிட்டு அவரது துணிமணிகளையும் படுக்கை விரிப்புகளையும் மாற்றுவது,” போன்றவற்றை செய்வதாக சொல்கிறார்.

நோயாளி பெறும் பராமரிப்பின் தரம் பராமரிப்பாளர்களின் நலனின்பேரில் பெருமளவு சார்ந்திருக்கிறது. ஆனாலும், நோயாளிகளைக் கவனித்துக்கொள்வோரது உணர்ச்சிகளும் தேவைகளும் அடிக்கடி கவனிக்காமல் விடப்படுகின்றன. பராமரிப்பது வெறுமனே முதுகு வலியையும் தோள்களில் வேதனையையும் ஏற்படுத்தினாலே அதிக கஷ்டம். ஆனால், பெரும்பாலான பராமரிப்பாளர்கள் சொல்லும் விதமாக, உணர்ச்சி சம்பந்தமான அதிக பாதிப்பின் மத்தியிலும் பராமரிப்பு அளிக்கப்படுகிறது.

“மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது”

“[நோயாளி] அலைந்து திரிவது, சங்கடப்படுத்தும் விதமாக நடந்துகொள்வது, வார்த்தைகளால் பொரிந்துதள்ளுவது போன்றவற்றால் ஏற்படும் துயரத்தை ஆராய்ச்சிகள் அடிக்கடி விவரிக்கின்றன,” என்பதாக தி ஜர்னல்ஸ் ஆஃப் ஜிரன்டாலஜி அறிக்கை செய்கிறது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவ கூட்டத்தின்போது ஜில்யனின் அம்மாவை சந்திக்கவருவதாக ஒரு சிநேகிதி சொன்ன பிறகு என்ன நடந்ததென்பதை ஜில்யன் விவரிக்கிறார். “அம்மா உணர்ச்சியற்று இருந்தார், ஒன்றும் பேசவில்லை,” என ஜில்யன் சோகமாக நினைவுகூருகிறாள். “எனக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது, நான் கண் கலங்கிவிட்டேன்.”

“சமாளிப்பதற்கு மிகவும் கடினமான காரியங்களில் இது ஒன்று,” என ஜோன் சொல்கிறார்; அவரது கணவர் டிமென்ஷியா மனக்கோளாறினால் பாதிக்கப்பட்டிருப்பவர். “அவர் பண்போடு நடந்துகொள்வதில்லை,” என ஜோன் விளக்குகிறார். “மற்றவர்களோடு சேர்ந்து வெளியில் சென்று சாப்பிடும்போது, மற்ற டைனிங் டேபிள்களுக்கு சென்று அங்கிருக்கும் ஜேம்மை எடுத்து ருசிபார்த்து, பயன்படுத்தின ஸ்பூனை திரும்பவும் ஜேம் பாட்டிலில் போட்டுவிடுவார். பக்கத்து வீட்டுக்காரர்களை பார்க்க செல்லும்போது, அவர் தோட்டத்தின் நடைபாதையில் எச்சில் துப்புவார். இந்த செயல்களைக் குறித்து மற்றவர்கள் ஒருவேளை பேசிக்கொண்டும், நல்லொழுக்கம் சிறிதுமில்லாத ஒரு ஆள் என ஒருவேளை அவரைக் கருதிக்கொண்டும் இருப்பார்கள் என்ற நினைப்பை என் மனதிலிருந்து அகற்றுவது மிகவும் கடினமாயிருக்கிறது. அப்படியே கூனிக்குறுகிப்போகிறேன்.”

“நாங்கள் கவனமின்றி இருந்துவிட்டால், . . . என நான் பயப்பட்டேன்”

தீராத வியாதியுள்ள அன்பானவர்களைப் பராமரிப்பது மிகவும் பயமூட்டும் அனுபவமாக இருக்கலாம். வியாதி கடுமையாகையில் என்ன நடக்குமோவென—ஒருவேளை தனது அன்பானவர் இறந்துவிடுவாரோ எனவும்—பராமரிப்பாளர் பயப்படலாம். நோயாளியின் தேவைகளை கவனித்துக்கொள்வதற்கு தனக்கு பலமோ திறமையோ இருக்காது எனவும்கூட அவர் பயப்படலாம்.

எல்சா பயப்படுவதற்கான காரணத்தை இவ்வாறு விவரிக்கிறார்: “பிட்டிக்கு சரீரப்பிரகாரமாக வேதனையளித்து இவ்வாறு அவளது துயரத்தை அதிகப்படுத்திவிடுவேனோ அல்லது அவளது உயிருக்கு ஆபத்தான ஏதாவது செய்துவிடுவேனோ என நான் பயப்பட்டேன்.”

சிலசமயங்களில் நோயாளியின் பயம் பராமரிப்பவரின் பயமாகிவிடுகிறது. “என் அப்பா மூச்சுத் திணறல் ஏற்படுமோவென மிகவும் பயப்பட்டார், சிலசமயங்களில் பயத்தால் நடுங்கினார்,” என சூ சொன்னார். “நாங்கள் கவனமின்றி இருந்துவிட்டால், அவர் மூச்சுத் திணறி, எதற்காக மிகவும் பயப்பட்டாரோ அது அவருக்கு ஏற்பட்டுவிடுமோ என நான் பயப்பட்டேன்.”

“அவர்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதை நினைத்து நீங்கள் வருந்தலாம்”

“தீராத வியாதியையுடைய அன்பானவர்களைப் பராமரிப்பவர்களுக்கு வருத்தம் சாதாரண அனுபவம்,” என டிமென்ஷியா வியாதியுள்ள நபரைப் பராமரித்தல் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. “நோயாளியின் சுகவீனம் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு துணையின் இழப்பையும் உங்களுக்கு முக்கியமானதாயிருந்த ஓர் உறவின் இழப்பையும் நீங்கள் ஒருவேளை உணருவீர்கள். அவர்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதை நினைத்து நீங்கள் வருந்தலாம்.”

தொடர்ந்து மோசமடைந்துவந்த தனது அம்மாவின் உடல்நிலையால் எவ்வாறு தனது குடும்பம் பாதிக்கப்பட்டது என்பதை ஜெனிஃபர் விவரிக்கிறார்: “எங்களுக்கு வேதனையாயிருந்தது. அம்மாவின் கலகலப்பான பேச்சைக் கேட்காமல் தவித்தோம். சோகத்தின் சுமை நெஞ்சை அழுத்தியது.” ஜில்யன் இவ்வாறு விளக்குகிறார்: “அம்மா சாவதையும் நான் விரும்பவில்லை, அவர் அவதிப்படுவதையும் நான் விரும்பவில்லை. குமுறிக்குமுறி அழுதேன்.”

‘நான் ஒதுக்கப்பட்டவளாக உணர்ந்தேன், எரிச்சலடைந்தேன்’

பராமரிப்பவர் இவ்வாறு யோசிக்கலாம்: ‘இது ஏன் எனக்கு ஏற்பட்டது? மற்றவர்கள் ஏன் உதவக்கூடாது? என்னால் சமாளிக்க முடியவில்லையென்று அவர்களுக்கு தெரியவில்லையா? நோயாளி ஏன் இன்னும் கொஞ்சம் ஒத்துழைக்கக்கூடாது?’ நோயாளியும் மற்ற குடும்ப அங்கத்தினர்களும் தன்னிடம் நியாயமற்று எதிர்பார்க்கும் காரியங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வதைக் குறித்து பராமரிப்பாளர் மிகவும் எரிச்சலடையலாம். முன்னுரையில் குறிப்பிடப்பட்ட ரோஸ் இவ்வாறு சொல்கிறார்: “மனசுக்குள் என்மீதே எனக்கு கோபம் வருகிறது. ஆனால் அது என் முகத்தில் தெரிவதாக அம்மா சொல்கிறார்.”

நோயாளியின் சொந்த ஏமாற்ற உணர்வுகள் மற்றும் கோபத்தின் பாரத்தை பராமரிப்பவர் சுமந்துகொண்டிருக்கலாம். புற்றுநோயோடு வாழ்தல் என்ற ஆங்கில புத்தகத்தில், சில நோயாளிகளுக்கு “ஒருசில சமயங்களில் ஆத்திரமும் மனச்சோர்வும் ஏற்படலாம்; அவற்றிற்கு பலியாகுபவர்கள் அந்தச் சமயத்தில் அங்கிருக்கும் ஆட்களே . . . சாதாரண சமயங்களில் சிறிதும் பொருட்படுத்தாத அற்ப காரியங்களுக்காக இப்போது எரிச்சலடைவதன் மூலம் நோயாளிகள் இந்த ஆத்திரத்தைக் காண்பிக்கின்றனர்” என சொல்லப்பட்டிருக்கிறது. நோயாளியை பராமரிப்பதற்காக தங்களால் முடிந்தவற்றை செய்துவரும் அன்பானவர்களுக்கு இது அதிக எரிச்சலூட்டலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.

உதாரணத்திற்கு, மரியா மரணப் படுக்கையிலிருந்த தனது சிநேகிதிக்கு போற்றத்தக்க விதத்தில் பணிவிடை செய்தார். ஆனாலும், அவ்வப்போது, அவளது சிநேகிதி எல்லாவற்றையும் தப்பாக எடுத்துக்கொண்டு சட்டென தவறான ஒரு முடிவுக்கு வந்துவிடுவதாக தோன்றியது. “அன்பானவர்களை சங்கடப்படுத்தும் விதத்தில் அவள் மிக குத்தலாகவும் இரக்கமில்லாமலும் பேசுவாள்,” என மரியா விளக்குகிறார். இது எவ்வாறு மரியாவை பாதித்தது? “அந்தச் சமயத்தில், ஒருவர் நோயாளியை ‘புரிந்துகொள்வதாய்’ தோன்றுகிறது. ஆனால் அதன் பிறகு அதைக் குறித்து யோசித்தபோது, நான் ஒதுக்கப்பட்டவளாக உணர்ந்தேன்; எரிச்சலடைந்தேன்; நிச்சயமற்றும் உணர்ந்தேன்; தேவைப்பட்ட அன்பைக் காண்பிக்க விருப்பமில்லாமல் இருந்தேன்.”

தி ஜர்னல்ஸ் ஆஃப் ஜிரன்டாலஜி-ல் பிரசுரமான ஒரு ஆராய்ச்சி இவ்வாறு ஒரு முடிவிற்கு வந்தது: “பராமரிக்கும் வேளைகளில் கோபம் தலைக்கேறுவதற்கான வாய்ப்பிருக்கிறது, [மேலும்] சிலசமயங்களில் அது உண்மையிலேயே வன்முறையை அல்லது அதுபோன்ற ஒன்றை விளைவிக்கலாம்.” பராமரிப்பாளர்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐந்து பேருக்கும் ஒருவர், தான் முரடனாகிவிடுவாரோ என பயப்பட்டார். ஒவ்வொரு 20 பேரில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உண்மையிலேயே நோயாளியோடு முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர்.

“குற்றவுணர்வு இருக்கிறது”

அநேக பராமரிப்பாளர்கள் குற்றவுணர்வினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சிலசமயங்களில் குற்றவுணர்வு கோபத்தைப் பின்தொடர்கிறது—அதாவது, சிலசமயங்களில் அவர்களுக்கு கோபம் வருவதால் அவர்கள் குற்றமுள்ளவர்களாய் உணருகின்றனர். இனியும் தாக்குப்பிடிக்க முடியாதென உணரும் நிலையை அடையுமளவுக்கு அப்படிப்பட்ட உணர்ச்சிகள் அவர்களை படாதபாடுபடுத்திவிடலாம்.

சில சந்தர்ப்பங்களில், நோயாளியை ஒரு பராமரிப்பு இல்லத்திலோ மருத்துவமனையிலோ விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியேயில்லாமல் ஆகிவிடும். இது பராமரிப்பாளரின் உணர்ச்சிகளை பெரிதும் பாதித்து அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஒரு தீர்மானமாகும். “கடைசியில் அம்மாவை ஒரு விடுதிக்கு கொண்டுசெல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, நான் அவருக்கு துரோகம் செய்வதாகவும் அவரைக் கைவிட்டுவிடுவதாகவும் உணர்ந்தேன்,” என ஜெனி சொல்கிறார்.

மருத்துவமனையில் நோயாளி சேர்க்கப்பட்டிருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவரது அன்பானவர்கள் அவருக்கு போதுமானதை செய்ய முடியாததை நினைத்து குற்றமுள்ளவர்களாய் உணரலாம். எல்சா இவ்வாறு சொன்னார்: “எனக்கு மிகக் குறைவான நேரமிருந்ததை நினைத்து நான் அடிக்கடி வருத்தப்பட்டேன். சிலசமயங்களில் என் சிநேகிதி என்னை விடவேமாட்டாள்.” மற்ற குடும்பப் பொறுப்புகள் புறக்கணிக்கப்படுவதைக் குறித்தும் கவலை ஏற்படலாம்; முக்கியமாக, பராமரிப்பவர் மருத்துவமனையில் நீண்ட நேரம் செலவிடும்போதோ அல்லது அதிகமாகிக்கொண்டே செல்லும் செலவுகளை சமாளிக்க நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிவரும்போதோ கவலை ஏற்படலாம். “செலவுகளை சமாளிக்க நான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது, ஆனாலும் என் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள என்னால் வீட்டில் இருக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்வு இருக்கிறது,” என ஒரு தாய் புலம்பினார்.

முக்கியமாய், பராமரிக்கப்பட்டவரின் இறப்பிற்கு பின்பு பராமரித்தவருக்கு ஆதரவு மிகவும் தேவைப்படுகிறதென்பதில் சந்தேகமில்லை. “[நோயாளி இறந்தபின்] எனது மிக முக்கிய பொறுப்பு . . . பராமரிப்பாளர்களால் பெரும்பாலும் வெளிப்படுத்தப்படாத குற்றவுணர்வை போக்குவது,” என நியூ யார்க்கிலுள்ள ஹன்ட்டிங்டனைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரெடிரிக் ஷர்மன் சொல்கிறார்.

இந்த உணர்வுகள் வெளிப்படுத்தப்படவில்லையென்றால், பராமரிப்பவர், பராமரிக்கப்படுபவர் என இரண்டு பேரையுமே அது மோசமாக பாதிக்கலாம். அப்படியென்றால், இந்த உணர்ச்சிகளை சமாளிப்பதற்கு பராமரிப்பவர்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள்—குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும்—அவர்களுக்கு உதவியளிக்க என்ன செய்யலாம்?

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

[பக்கம் 5-ன் பெட்டி]

எல்லாவற்றையும் அவர்கள் தலையில் கட்டிவிடாதீர்கள்!

“வீட்டில் வயதானவர்களைப் பராமரிப்போரில் 80% பெண்களே என எங்களுக்குத் தெரியும்,” என நியூ யார்க்கிலுள்ள மவுன்ட் சைனை மருத்துவக் கல்லூரியிலுள்ள கம்யூனிட்டி மெடிசின் இலாகாவில் துணை பேராசிரியராய் சேவிக்கும் மர்னா எல். லூயிஸ் சொல்கிறார்.

தி ஜர்னல்ஸ் ஆஃப் ஜிரன்டாலஜி-ல்b பிரசுரமான பெண் பராமரிப்பாளர்களைப் பற்றிய ஓர் ஆராய்ச்சி, 61 சதவீத பெண்கள் குடும்பத்தினரிடமிருந்தோ நண்பர்களிடமிருந்தோ எந்த விதமான உதவியையும் பெறவில்லையென சொன்னதாக காண்பிக்கிறது. பாதிக்கும் அதிகமானோர் (57.6 சதவீதத்தினர்) தங்கள் கணவர்களிடமிருந்து மனரீதியில் போதுமான ஆதரவு பெறவில்லையென கூறினார்கள். புற்றுநோயுள்ள பிள்ளைகள் (ஆங்கிலம்) புத்தகத்தில், அதிகப்படியான பராமரிப்பு சுமையை தாய் சுமக்கும் சமயத்தில், “தகப்பன் தனது வேலையிலேயே மூழ்கிவிடலாம்,” என ஜேன் மன் ப்ராக்கன் குறிப்பிடுகிறார்.

எனினும், ஆண்களும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு பராமரிப்பு அளிக்கின்றனர் என்பதாக டாக்டர் லூயிஸ் சொல்கிறார். உதாரணத்திற்கு, ஆல்சீமர்ஸ் என்ற மனக் கோளாறைப் பெற்றிருக்கும் மனைவிகளுள்ள கணவன்மார் கணிசமானளவு பெரிய தொகுதியினர் ஆவர். வியாதிப்பட்டிருக்கும் அன்பானவர்களை பராமரிப்பதால் ஏற்படும் அழுத்தங்களுக்கு அவர்கள் நிச்சயமாகவே விதிவிலக்கல்ல. லூயிஸ் தொடர்ந்து சொல்கிறார்: “இப்படிப்பட்ட ஆண்கள் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றனர், ஏனெனில் அவர்கள் பொதுவாக தங்களது மனைவிகளைவிட வயதில் மூத்தவர்களாய் இருப்பதால் அவர்களே உடல்நலக் குறைபாடுள்ளவர்களாய் இருக்கலாம். . . . அவர்களில் பெரும்பாலானவர்கள் நடைமுறையில் பராமரிப்பதன் பேரில் பயிற்சியளிக்கப்பட்டில்லை.”

இந்தச் சவாலை நன்கு சமாளிக்கும் ஒரு குடும்ப அங்கத்தினர்மீதே முழு பாரத்தையும் சுமத்திவிடும் மனப்பான்மைக்கு எதிராக குடும்பத்தினர் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். “அடிக்கடி ஒரு குறிப்பிட்ட குடும்ப அங்கத்தினர்தான் பராமரிப்பாளராகிறார்; சிலசமயங்களில் அவரேதான் பலபேரை தொடர்ச்சியாக பராமரிக்கிறார்,” என பராமரிப்பவரைப் பராமரித்தல் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. “இவர்களில் அதிகமான சதவீதத்தினர் ஏற்கெனவே வயதாகிவரும் பெண்கள். . . . பொதுவாக பெண்கள் ‘இயல்பான’ பராமரிப்பாளர்களாகவும் கருதப்படுகின்றனர் . . . , ஆனால் குடும்பத்தினர்களும் நண்பர்களும் இதையே காரணம்காட்டி எல்லாவற்றையும் அவர்கள் தலையில் கட்டிவிடக்கூடாது.”

[அடிக்குறிப்பு]

b ஜிரன்டாலஜி என்பது “முதுமை மற்றும் முதியோரின் பிரச்சினைகள் பற்றிய ஆராய்ச்சிப் பிரிவு.”

[பக்கம் 6-ன் படம்]

குற்றவுணர்வு மற்றும் கோபத்தை சமாளிக்க பராமரிப்பவர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்