பராமரிப்பவரை பராமரித்தல் மற்றவர்கள் எவ்வாறு உதவலாம்
“லேரிக்கும் எனக்கும் திருமணமாகி 55 வருடங்கள் ஆகின்றன—நீண்ட காலம்—என்னே சந்தோஷமான ஆண்டுகள்! என்னால் அவரை வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடிந்திருந்தால், அவ்வாறு செய்திருப்பேன். ஆனால் எனது உடல்நிலை மோசமாக ஆரம்பித்தது. கடைசியில், அவரை பராமரிப்பு இல்லத்தில் சேர்க்க வேண்டியதாயிற்று. அந்த வேதனையை விவரிக்க முடியாதபடி சோகம் நெஞ்சை அழுத்துகிறது. நான் அவரை நேசிக்கிறேன், ஆழ்ந்த மரியாதை செலுத்துகிறேன்; முடிந்தவரை அடிக்கடி அவரைச் சென்று சந்திக்கிறேன். சரீரப்பிரகாரமாக இதற்கும்மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது.”—78 வயது பெண்மணி ஆன்னா; ஆல்சீமர்ஸ் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது கணவரை 10 வருடங்களுக்கும் மேலாக பராமரித்திருக்கிறார், மேலும் குரோமோசோம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது மகளையும் கடந்த 40 வருடங்களாக பராமரித்துவருகிறார்.a
ஆன்னாவின் நிலை அபூர்வமானது அல்ல. பிரிட்டிஷ் தீவுகளில் நடந்த ஓர் ஆராய்ச்சி, “வயதுவரம்புக்குட்பட்டவர்கள் சிலரில் (40-கள் மற்றும் 50-களில் உள்ளவர்களில்) ஒவ்வொரு இரண்டு பெண்களுக்கும் ஒருவர் பராமரிப்பாளராய் இருக்கிறார்” என்பதைக் காட்டியது. முன்பு கலந்தாலோசிக்கப்பட்ட விதமாக, பராமரிப்பாளர்கள் எதிர்ப்படும் மன கலக்கமும் பிரச்சினைகளும் சிலசமயங்களில் தாங்கமுடியாதவையாய் தோன்றலாம்.
“பராமரிப்பவர்களில் 50 சதவீதத்தினராவது முதல் வருட பராமரிப்பின்போது மனச்சோர்வடைகின்றனர் என நான் நினைக்கிறேன்,” என்பதாக அமெரிக்க மூப்பியல் மருத்துவ சொஸைட்டியைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரெடிரிக் ஷர்மன் சொல்கிறார். ஆன்னாவைப் போன்ற முதியோருக்கு, அவர்களது சொந்த பலம் குறைந்துவருவதும் உடல்நிலை மோசமாவதும் சூழ்நிலையைச் சமாளிப்பதை குறிப்பிடத்தக்க விதத்தில் அதிக கடினமாக்குகிறது.
பொறுப்புகளைச் சமாளிக்க பராமரிப்பாளர்களுக்கு உதவ, அவர்களது தேவைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். அந்தத் தேவைகள் என்ன, அவற்றிற்கு நாம் எவ்வாறு உதவலாம்?
பராமரிப்பாளர்கள் பேச வேண்டும்
“என் பாரத்தை நான் இறக்கிவைக்க வேண்டியிருந்தது,” என மரணப் படுக்கையிலிருந்த சிநேகிதியை பராமரித்துவந்த ஒரு பெண் சொல்கிறார். சென்ற கட்டுரையில் காண்பிக்கப்பட்ட விதமாக, புரிந்துகொள்ளும் நண்பரோடு பேசுகையில் பிரச்சினைகளை சுலபமாக எதிர்ப்பட்டு அவற்றைக் கையாளலாம். தங்கள் சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டவர்களாய் உணரும் அநேக பராமரிப்பாளர்கள், பேசுவது தங்களது உணர்ச்சிகளை சமாளிக்கவும் அழுத்தங்களிலிருந்து விடுபடவும் உதவுகிறதென்பதை உணருகிறார்கள்.
“எங்கள் இருவருக்குமே உணர்ச்சி சம்பந்தமான ஆதரவு தேவைப்படுகிறதென்பதை நண்பர்கள் உணர்ந்தபோது நான் போற்றினேன்,” என தனது கணவரைப் பராமரித்த சமயத்தை நினைவுகூர்ந்து ஜினி சொல்கிறார். பராமரிப்பாளர்களுக்கு உற்சாகம் தேவை எனவும் சிலசமயங்களில் பாரத்தை இறக்கிவைப்பதற்கு செவிகொடுக்கும் ஒருவர் தேவை எனவும் அவர் விளக்குகிறார். தனது மைத்துனனை பராமரிக்க உதவிய யால்மார் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “எனக்கிருந்த பயங்களையும் பிரச்சினைகளையும் செவிகொடுத்துக்கேட்டு நான் எவ்வாறு உணருகிறேன் என்பதைப் புரிந்துகொள்ளும் ஒருவர் எனக்கு தேவைப்பட்டார்.” ஒரு நெருங்கிய நண்பரைப் பற்றி சொல்லுகையில், யால்மார் இவ்வாறு கூடுதலாக சொல்கிறார்: “வெறுமனே அரை மணிநேரத்திற்கும்கூட அவரை சென்று சந்திப்பது மிகவும் நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. அவர் எனக்கு செவிகொடுத்துக் கேட்பார். உண்மையிலேயே அவர் என்மீது அக்கறை காட்டினார். அதன்பிறகு நான் புத்துயிர் பெறுவேன்.”
புரிந்துகொள்ளும் விதத்தில் செவிகொடுத்துக் கேட்கும் ஒருவரிடமிருந்து பராமரிப்பாளர்கள் அதிக உற்சாகத்தைப் பெறலாம். ‘யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் இருங்கள்’ என்பதாக பைபிள் ஞானமான ஆலோசனையளிக்கிறது. (யாக்கோபு 1:19) தி ஜர்னல்ஸ் ஆஃப் ஜிரன்டாலஜி-ல் வெளிவந்த ஓர் அறிக்கை, “ஆதரவு கிடைக்கிறதென்பதை அறிந்திருப்பதுதானே மெய்யான நிம்மதி கிடைக்க போதுமானதாய் இருக்கிறது,” என்பதை வெளிப்படுத்தியது.
எனினும், செவிகொடுத்துக் கேட்போரும் ஆதரவும் தவிர, வேறெதுவெல்லாம் பராமரிப்பாளர்களுக்குத் தேவைப்படுகிறது?
நடைமுறை உதவி அளித்தல்
“அன்பும் உற்சாகமும் எந்த விதத்தில் வெளிக்காட்டப்பட்டாலும் அதிலிருந்து நோயாளியும் குடும்பத்தினரும் நன்மைபெறுகின்றனர்,” என்பதாக டாக்டர் எர்னஸ்ட் ரோசன்பாம் சொல்கிறார். தொடக்கநிலையாக, அப்படிப்பட்ட “அன்பும் உற்சாகமும்” தனிப்பட்ட சந்திப்பு, தொலைபேசி அழைப்பு, அல்லது சிறிய கடிதம் (பூக்களோடோ அல்லது வேறெதாவது அன்பளிப்போடோ அளிக்கப்படலாம்) போன்றவற்றின் மூலம் வெளிக்காட்டப்படலாம்.
“எங்கள் நண்பர்கள் எங்களை சிறிது நேரம் வந்து சந்தித்தபோது எங்களுக்கு ஆறுதலாயிருந்தது,” என்பதாக தனது அப்பா ஹாட்ஜ்கின்ஸ் நோயால் இறந்துகொண்டிருந்தபோது அவரது குடும்பத்தினர் அளித்த ஆதரவைப் பற்றி சூ நினைவுகூருகிறார். “எங்கள் நண்பர்களில் ஒருவர், ஃபோனில் பதிலளிப்பதற்கும், எங்கள் அனைவரது துணிகளையும் துவைத்து இஸ்திரிபோடுவதற்கும் உதவினார்,” என அவர் தொடர்ந்து சொல்கிறார்.
பராமரிப்பவர்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு, குறிப்பிட்ட நடைமுறையான உதவியை உட்படுத்தலாம், உட்படுத்தவும் வேண்டும். எல்சா இவ்வாறு நினைவுகூருகிறார்: “நண்பர்கள் நடைமுறை உதவியளித்தபோது உண்மையிலேயே அது உபயோகமானதாக இருந்தது. அவர்கள் வெறுமனே, ‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னா, எனக்குத் தெரியப்படுத்துங்கள்’ என சொல்லவில்லை. அதற்கு மாறாக, இவ்வாறு சொன்னார்கள்: ‘நான் கடைக்கு செல்கிறேன். உங்களுக்கு என்ன வாங்கிவரட்டும்?’ ‘உங்களது தோட்டத்தை நான் கவனித்துக்கொள்ளட்டுமா?’ ‘நான் வியாதிப்பட்டிருப்பவர் அருகில் உட்கார்ந்து எதையாவது வாசித்துக் காட்டுகிறேன்.’ நடைமுறையாய் எங்களுக்கு உதவியளித்ததாய் நாங்கள் கண்ட மற்றொரு காரியம், நோய்வாய்ப்பட்ட என் சிநேகிதி களைப்பாக இருக்கும்போதோ தூங்கிக்கொண்டிருக்கும்போதோ அவளைப் பார்க்க வருபவர்களிடம் தாங்கள் சொல்ல விரும்புவதை ஒரு புத்தகத்தில் எழுதிவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகும். அது எங்கள் அனைவருக்குமே பேரளவான இன்பமளித்தது.”
குறிப்பிட்ட விதத்தில் உதவியளிப்பது அநேக வேலைகள் செய்வதை உட்படுத்தலாம். ரோஸ் இவ்வாறு விளக்குகிறார்: “படுக்கைகளை மடித்து வைப்பது, நோயாளியின் சார்பாக கடிதங்கள் எழுதுவது, நோயாளியைப் பார்க்கவருவோரை உபசரிப்பது, மருந்துகள் வாங்குவது, நோயாளியின் தலையை குளிப்பாட்டி முடியை வாரிவிடுவது, பாத்திரங்களைக் கழுவுவது போன்ற வேலைகள் செய்ய அளிக்கப்பட்ட உதவியை நான் போற்றினேன்.” குடும்பத்தினரும் நண்பர்களும் உணவளிக்கும் வேலையை மாறிமாறி செய்வதன் மூலமும்கூட பராமரிப்பவருக்கு உதவியாயிருக்கலாம்.
பொருத்தமான சமயத்தில், அடிப்படையான பராமரிப்பு வேலைகளில் உதவியளிப்பதும் நடைமுறையானதாய் இருக்கலாம். உதாரணத்திற்கு, நோயாளிக்கு உணவூட்டுவதிலும் அவரைக் குளிப்பாட்டுவதிலும் பராமரிப்பவருக்கு ஒருவேளை உதவி தேவைப்படலாம்.
அக்கறைகொண்ட குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும் வியாதியின் ஆரம்ப காலத்தில் நடைமுறை உதவியளிக்கலாம், ஆனால் வியாதி நாள்பட்டதாய் இருந்தால் அப்போது என்ன? நமது சொந்த வேலைகளிலேயே மூழ்கிவிட்டு, பராமரிப்பாளர்கள் எதிர்ப்பட்டுக்கொண்டிருக்கும்—ஒருவேளை அதிகரித்துக்கொண்டே செல்லும்—அழுத்தங்களை நாம் எளிதில் கவனியாது விட்டுவிடலாம். மிக அதிகம் தேவைப்படும் ஆதரவு குறைந்துவர ஆரம்பிப்பது எவ்வளவு சோர்வூட்டுவதாய் இருக்கும்!
அது நடந்தால், நோயாளியைப் பராமரிப்பது குறித்து கலந்தாலோசிக்க குடும்பத்தினரை பராமரிப்பாளர் ஒன்றுகூடிவரச் செய்வது நல்லது. உதவியளிக்க விருப்பப்படும் நண்பர்கள் மற்றும் உறவினர்களது உதவியை பெற்றுக்கொள்வது பெரும்பாலும் சாத்தியமானது. அதைத்தான் சூ-வும் அவரது குடும்பத்தினரும் செய்தனர். “தேவை எழும்பியபோது, உதவியளிப்பதாய் சொன்னவர்களை நாங்கள் நினைவுபடுத்திப் பார்த்து அவர்களுக்கு ஃபோன் செய்தோம். அவர்களிடம் உதவி கேட்கலாமென நாங்கள் நினைத்தோம்,” என அவர் சொல்கிறார்.
அவர்களுக்கு ஓய்வு அளியுங்கள்
“தீராத வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள நபரை இருபத்திநான்கு மணிநேரமும் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பிலிருந்து அவ்வப்போது ‘விட்டுவிலகுவது’ உங்களுக்கும் [பராமரிப்பவருக்கும்] அவருக்கும் [நோயாளிக்கும்] மிக அத்தியாவசியமானது. . . . எவரையாவது பராமரிக்கும் வேலையை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய காரியங்களில் ஒன்று, [நோயாளியை] பராமரிப்பதிலிருந்து அவ்வப்போது ஓய்வெடுப்பதாகும்,” என 36 மணிநேர நாள் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. பராமரிப்பவர்கள் இதை ஒப்புக்கொள்கிறார்களா?
“ஆம், நிச்சயமாகவே,” என மரியா பதிலளிக்கிறார்; இவர், புற்றுநோயால் இறந்துகொண்டிருந்த தனது நெருங்கிய சிநேகிதியை பராமரிக்க உதவியவர். “அவ்வப்போது, நான் ஓய்வெடுத்து அந்தக் கொஞ்ச நேரத்திற்கு வேறெவராவது பராமரிக்கும் வேலையைச் செய்வது அவசியமாயிருந்தது.” ஆல்சீமர்ஸ் நோயுள்ள கணவரைப் பராமரிக்கும் ஜோன் இதையேதான் சொல்கிறார். “எங்களுக்கு மிக அதிகம் தேவைப்படுவது, அவ்வப்போது ஓய்வு,” என அவர் சொல்கிறார்.
ஆனாலும், அவர்களது பொறுப்புகளின் அழுத்தங்களில் இருக்கையில் எவ்வாறு அவர்கள் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க முடியும்? வயதான பெற்றோரை பராமரிக்க உதவிய ஜெனிஃபர் தனது பளு எவ்வாறு குறைந்ததென்பதை குறிப்பிடுகிறார்: “எங்களது குடும்ப நண்பர் ஒருவர் சிலசமயங்களில் எங்களுக்கு ஓய்வளிக்க அம்மாவை ஒரு நாளைக்கு கூட்டிக்கொண்டு செல்வார்.”
நடைமுறைக்கு ஒத்துவந்தால், நீங்கள் நோயாளியை சிறிது நேரத்திற்கு வெளியே கூட்டிச்செல்வதன் மூலம் பராமரிப்பவருக்கு ஓய்வளிக்கலாம். ஜோன் இவ்வாறு சொல்கிறார்: “என் கணவரை எவராவது வெளியில் கூட்டிக்கொண்டு செல்லும்போது எனக்கு சோர்வு நீங்குகிறது, ஏனென்றால் சிறிது நேரத்திற்கு என்னால் தனிமையில் இருக்க முடிகிறது.” மற்றொரு வழி, நீங்கள் ஒருவேளை நோயாளியோடு அவரது வீட்டில் நேரத்தை செலவழிக்கலாம். இரண்டில் எதைச் செய்தாலும், பராமரிப்பவருக்கு மிகவும் தேவைப்படும் ஓய்வை அவர் பெறும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆனாலும், பராமரிப்பவர்கள் ஓய்வெடுப்பது எப்போதுமே சுலபமல்ல என்பதை நினைவில் வையுங்கள். அவர்கள் தங்கள் அன்பானவர்களைவிட்டு வந்ததைக் குறித்து குற்றமுள்ளவர்களாய் உணரலாம். “அந்தச் சூழ்நிலையை விட்டுவிலகி பொழுதுபோக்கிற்காகவோ ஓய்விற்காகவோ நேரம் செலவிடுவது சுலபமல்ல,” என யால்மார் ஒப்புக்கொள்கிறார். “நான் எல்லா நேரத்திலேயும் அங்கேயே இருக்க வேண்டுமென விரும்பினேன்.” ஆனால் அவரது மைத்துனனுக்கு அதிக கவனிப்பு தேவைப்படாதபோது ஓய்வெடுத்ததன் மூலம் அவர் அதிக மன அமைதியைப் பெற்றார். மற்றவர்கள் தங்கள் அன்பானவர்களை பராமரிப்பு இல்லத்தில் சிறிது நேரம் விட்டுவிடுகின்றனர்.
எல்லா வியாதிகளுக்கும் முடிவு
தீராத வியாதியுள்ள ஓர் அன்பானவரைப் பராமரிப்பது நிச்சயமாகவே ஒரு மிகப் பெரிய பொறுப்பு. இருந்தபோதிலும், அன்பானவரைப் பராமரிப்பது அதிக மன நிறைவையும் திருப்தியையும் அளிக்கும். குடும்பத்தினர்களோடும் நண்பர்களோடுமுள்ள உறவு பலப்படுமென்பதாக ஆராய்ச்சியாளர்களும் பராமரிப்பவர்களும் குறிப்பிடுகின்றனர். பராமரிப்பவர்கள் தொடர்ந்து புதிய குணாதிசயங்களையும் திறமைகளையும் கற்றுக்கொள்கின்றனர். அநேகர் ஆவிக்குரிய நலன்களையும் அனுபவிக்கின்றனர்.
எல்லாவற்றையும்விட முக்கியமாக, யெகோவாவும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் அதிக இரக்கமுள்ள பராமரிப்பாளர்கள் என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. எல்லா விதமான வியாதியும் துன்பமும் மரணமும் சீக்கிரத்தில் ஒரு முடிவிற்கு வரப்போவதாக பைபிள் தீர்க்கதரிசனம் நமக்கு உறுதியளிக்கிறது. சீக்கிரத்தில், மனிதன்மீது அக்கறைகொண்டிருக்கும் சிருஷ்டிகர், பூமியிலுள்ள நீதியுள்ள குடிமக்களுக்கு பரிபூரண ஆரோக்கியம் நிறைந்த புதிய உலகில் நித்திய ஜீவனை பரிசளிப்பார்; அங்கே ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லமாட்டார்கள்.’—ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:4.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையிலுள்ள சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
வியாதிப்பட்டிருப்பவரின் நலன் உங்கள் நலனின் பேரில் நேரடியாக சார்ந்திருக்கிறது
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
மிகக் கடினமான காலங்களைச் சமாளிக்க நல்ல நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு அதிகத்தைச் செய்யும்
[பக்கம் 13-ன் பெட்டி]
ஒரு பராமரிப்பாளரைச் சந்திக்கையில்
• ஒற்றுணர்வோடு செவிகொடுத்துக் கேளுங்கள்
• இருதயப்பூர்வமாக போற்றுங்கள்
• குறிப்பிட்ட உதவியளியுங்கள்
[பக்கம் 10-ன் படங்கள்]
கடைக்குச் செல்வதன் மூலமாக, சமைப்பதன் மூலமாக அல்லது நோயாளியைப் பராமரிக்க உதவுவதன் மூலமாக பராமரிப்பவர்களுக்கு ஆதரவளியுங்கள்
[பக்கம் 12-ன் பெட்டி]
பராமரித்தல் பலனளிக்கும்
‘பலனளிக்குமா?’ என சிலர் யோசிக்கலாம். ‘எவ்வாறு?’ பராமரிப்பாளர்கள் விழித்தெழு!-விடம் சொன்னவற்றை தயவுசெய்து கவனியுங்கள்:
“ஒருவரது சொந்த நாட்டங்களையும் விருப்பங்களையும் விட்டுக்கொடுப்பது சந்தோஷத்தைக் குறைக்கும் என சொல்லமுடியாது. ‘பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் உண்டாகும்.’ (அப்போஸ்தலர் 20:35, NW) நீங்கள் நேசிக்கும் ஒருவரை பராமரிப்பது அதிக மன நிறைவைத் தரும்.”—ஜோன்.
“என் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் உண்மையிலேயே தேவையாயிருந்த சமயத்தில், அதுவும் அவர்களிடம் கைமாறு எதுவும் எதிர்ப்பார்க்காமல் என்னால் உதவியளிக்க முடிந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். அது எங்களை இன்னும் நெருங்கிவரச் செய்தது. நான் பெற்ற அனுபவத்தை எதிர்காலத்தில் அதே நிலைமையிலுள்ள எவருக்காவது உதவியளிப்பதற்காக பயன்படுத்த நான் விரும்புகிறேன்.”—யால்மார்.
“வியாதிப்பட்டிருந்த என் சிநேகிதி பிட்டிக்கு பல தடவை நான் சொன்ன விதமாக, கொடுத்ததைவிட எவ்வளவோ அதிகத்தை நான் பெற்றேன். ஒற்றுணர்வையும் பொறுமையையும் நான் கற்றுக்கொண்டேன். மிகக் கடினமான சூழ்நிலைகளில்கூட நம்பிக்கையான மனநிலையைக் காத்திட முடியுமென்பதை நான் கற்றுக்கொண்டேன்.”—எல்சா.
“நான் ஆவிக்குரிய விதத்தில் அதிக பலமுள்ளவளானேன். தினந்தோறும் யெகோவா தேவன்மீது சார்ந்திருப்பதும் அவர் எனது தேவைகளைக் கவனித்துக்கொள்ளும்படி அனுமதிப்பதும் என்னவென்பதை உண்மையிலேயே நான் இன்னும் முழுமையாக அறிந்துகொண்டேன்.”—ஜினி.