உணர்ச்சிகளை எவ்வாறு சமாளிப்பது
மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் அன்பானவர் ஒருவரை நீங்கள் தற்சமயம் பராமரித்து வருகிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் கொஞ்சம் குழப்பமான, பயமுறுத்தும் உணர்ச்சிகளை அனுபவித்துவரலாம். நீங்கள் என்ன செய்யலாம்? சில பராமரிப்பாளர்களை திணறடித்துவரும் உணர்ச்சிகளையும் அவற்றை சமாளிப்பதற்கு அவர்களுக்கு உதவியிருக்கும் நடைமுறை ஆலோசனைகளையும் கவனியுங்கள்.
தர்மசங்கடம். வியாதிப்பட்டிருக்கும் ஒரு நபரது நடத்தை மற்றவர்களின் முன் எப்போதாவது தர்மசங்கடமான நிலையில் உங்களை வைக்கலாம். ஆனால் உங்கள் அன்பானவரது வியாதியைப் பற்றி நண்பர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் விளக்குவது, அவர்கள் புரிந்துகொள்ளுதலோடு நடந்துகொள்ளவும் ‘இரக்கத்தையும்’ பொறுமையையும் காண்பிக்கவும்கூட அவர்களை தூண்டும். (1 பேதுரு 3:8) முடிந்தால், உங்களுக்கு இருப்பதைப் போன்ற நிலைமையிலிருக்கும் மற்ற குடும்பத்தினரிடம் பேசுங்கள். அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கையில் நீங்கள் அந்தளவுக்கு தர்மசங்கடமாக உணரமாட்டீர்கள். தனக்கு எது உதவியதென்பதை சூ விளக்குகிறார்: “என் அப்பாவின்மேல் நான் அந்தளவுக்கு இரக்கப்பட்டதால் அது தர்மசங்கடமான எந்த உணர்ச்சிகளையும் மூடிமறைத்தது. அவரது நகைச்சுவை உணர்வும் உதவியது.” ஆம், நோயாளியும் பராமரிப்பவரும் நகைச்சுவை உணர்வோடு இருப்பது, எரிச்சலைத் தணிக்க ஒரு சிறந்த வழியாகும்.—பிரசங்கி 3:4-ஐ ஒப்பிடுக.
பயம். வியாதியைப் பற்றி எதுவும் அறியாமலிருப்பது மிகவும் அச்சமூட்டுவதாய் இருக்கலாம். முடிந்தால், வியாதி அதிகமாகும்போது எவற்றை எதிர்பார்க்கலாம் என்பதன்பேரில் மருத்துவ ஆலோசனை பெறுங்கள். அந்தச் சூழ்நிலைகளில் எவ்வாறு பராமரிப்பு அளிக்கலாம் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். எல்சாவிற்கு, நோயாளியின் நிலைமை மோசமாக மோசமாக எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதைக் குறித்து மற்ற பராமரிப்பாளர்களோடும் பராமரிப்பு இல்லத்திலுள்ள நர்ஸுகளோடும் பேசியது, பயத்தை சமாளிக்க உதவிய மிக முக்கிய காரியங்களில் ஒன்றாய் இருந்தது. ஜினி இவ்வாறு ஆலோசனை அளிக்கிறார்: “உங்களது பயங்களை எதிர்ப்பட்டு அவற்றை கட்டுப்படுத்துங்கள். என்ன நடக்குமோவென பயப்படுவது, பெரும்பாலும் உண்மையில் சம்பவிப்பதைவிட படு மோசமானது.” பயங்கள் எதனால் உண்டானாலும்சரி, அவை “எழும்பும்போதே அவற்றைப் பற்றி பேசிவிட வேண்டும்,” என டாக்டர் எர்னஸ்ட் ரோசன்பாம் பரிந்துரைக்கிறார்.—நீதிமொழிகள் 15:22-ஐ ஒப்பிடுக.
துயரம். துயரத்தைச் சமாளிப்பது, முக்கியமாக பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில் சமாளிப்பது சுலபமில்லை. தோழமையின் இழப்பைக் குறித்து நீங்கள் ஒருவேளை துயரப்படலாம்; அதுவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் உங்கள் அன்பானவர் இனியும் பேச முடியாமல், தெளிவாக புரிந்துகொள்ள முடியாமல் அல்லது உங்களை அடையாளங்கண்டுகொள்ள முடியாமலிருக்கும்போது நீங்கள் துயரப்படலாம். அப்படிப்பட்ட உணர்ச்சிகளை மற்றவர்கள் உடனடியாக புரிந்துகொள்ள மாட்டார்கள். பொறுமையோடும் அனுதாபத்தோடும் செவிகொடுத்துக் கேட்டு உங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு நண்பரிடம் துயரத்தைப் பற்றி பேசுவது, தேவைப்படும் அதிக நிம்மதியை அளிக்கலாம்.—நீதிமொழிகள் 17:17.
கோபமும் ஏமாற்றமும். சிலசமயங்களில் மோசமாக நடந்துகொள்பவரான தீராத வியாதியுள்ள நபரை பராமரிக்கையில் இந்த உணர்ச்சிகள் எழும்புவது இயல்பே. (எபேசியர் 4:26-ஐ ஒப்பிடுக.) மனச்சோர்வுண்டாக்கும் நடத்தைக்கு காரணம் அந்த வியாதியே, அந்த நோயாளி அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். லூஸி இவ்வாறு நினைவுகூருகிறார்: “எனக்கு உண்மையிலேயே கோபம் வரும்போது, அழுதுவிடுவேன். அதன்பின் நோயாளியின் நிலைமையையும் வியாதியையும் ஞாபகப்படுத்திப் பார்க்க நான் முயலுவேன். நோயாளிக்கு என் உதவி தேவைப்பட்டதென்பதை நான் அறிந்திருந்தேன். தொடர்ந்து உதவியளிக்க அது எனக்கு உதவியது.” அப்படிப்பட்ட விவேகம் ஒருவேளை உங்களது ‘கோபத்தை அடக்கலாம்.’—நீதிமொழிகள் 14:29; 19:11.
குற்றவுணர்வு. பராமரிப்பவர்கள் குற்றவுணர்ச்சியை அனுபவிப்பது இயல்பானது. எனினும், நீங்கள் ஒரு முக்கியமான ஆனால் மிகக் கடினமான வேலையை செய்கிறீர்களென்பதில் சந்தேகம் வேண்டாம். பேச்சிலோ நடத்தையிலோ நீங்கள் எப்போதுமே பரிபூரணமாய் இருக்கமாட்டீர்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். பைபிள் இவ்வாறு நமக்கு நினைப்பூட்டுகிறது: “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.” (யாக்கோபு 3:2; ரோமர் 3:23) இப்போது நம்பிக்கையோடு நடவடிக்கையெடுப்பதைத் தடுக்கும் குற்றவுணர்வுகள் உங்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு நீங்கள் அனுமதிக்காதீர்கள். நீங்கள் சொன்ன அல்லது செய்த ஏதோவொன்றைக் குறித்து நீங்கள் கவலையாயிருந்தால், “மன்னித்துவிடுங்கள்” என சொல்வது உங்களுக்கும் நீங்கள் பராமரித்துவரும் நோயாளிக்கும் எவ்வளவோ ஆறுதலாய் இருக்கும் என்பதை ஒருவேளை உணருவீர்கள். நோய்வாய்ப்பட்ட ஓர் உறவினரை பராமரித்த ஒரு ஆள் இவ்வாறு ஆலோசனை அளித்தார்: “அந்தச் சூழ்நிலையில் உங்களால் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள்.”
மனச்சோர்வு. தீராத நோயை சமாளிக்கும் குடும்பங்களில் மனச்சோர்வு பொதுவாக காணப்படுகிறது என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. (1 தெசலோனிக்கேயர் 5:14-ஐ ஒப்பிடுக.) மனச்சோர்வுற்ற ஒரு பராமரிப்பாளர் தனக்கு எது உதவியதென்பதை விளக்குகிறார்: “பராமரிப்பதற்காக அநேகர் நமக்கு நன்றி சொல்வார்கள். நீங்கள் மிகவும் களைப்புற்றிருக்கையில் அல்லது மனச்சோர்வடைந்திருக்கையில் உற்சாகமூட்டும் சில வார்த்தைகள் நீங்கள் தொடர்ந்து அந்தப் பணியைச் செய்ய உங்களை உந்துவிக்கும்.” பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” (நீதிமொழிகள் 12:25) உங்களுக்கு உற்சாகம் தேவைப்படுவதை மற்றவர்கள் எப்போதுமே உணர மாட்டார்கள். ஆகவே, சிலசமயங்களில், உற்சாகமூட்டும் ‘நல்வார்த்தைகளை’ மற்றவர்களிடமிருந்து பெற முதலில் நீங்கள் உங்கள் இருதயத்திலிருக்கிற ‘கவலையை’ வெளிப்படையாக சொல்ல வேண்டியிருக்கலாம். எனினும், மனச்சோர்வு தொடர்ந்து நீடித்தால் அல்லது இன்னுமதிகமானால், ஒரு டாக்டரை சென்று பார்ப்பது நல்லது.
உதவியற்ற உணர்வு. சோர்வூட்டும் வியாதியை எதிர்ப்படுகையில் நீங்கள் ஒருவேளை உதவியற்று உணரலாம். உங்களது உண்மையான நிலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களது குறைபாடுகளை ஒப்புக்கொள்ளுங்கள்—நோயாளியின் உடல்நிலையை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் பரிவிரக்கத்தோடு அவர்களை நீங்கள் பராமரிக்கலாம். உங்களிடமோ நீங்கள் பராமரிக்கும் நோயாளியிடமோ உங்களுக்கு ஆதரவளிப்பவர்களிடமோ பரிபூரணத்தை எதிர்பார்க்காதீர்கள். சமநிலையோடு செயல்படுவது, உதவியற்ற உணர்வுகளை குறைப்பது மாத்திரமில்லாமல் வேலைச் சுமையையும் இலகுவாக்குகிறது. அன்பான ஒருவரை பராமரித்த அநேகர் ஞானமாக இவ்வாறு ஆலோசனை அளிக்கின்றனர்: அந்தந்த தினத்திற்குரியதை மாத்திரம் சமாளிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.—மத்தேயு 6:34.
[பக்கம் 8-ன் படம்]
“உங்களது பயங்களை எதிர்ப்பட்டு அவற்றை கட்டுப்படுத்துங்கள். என்ன நடக்குமோவென பயப்படுவது பெரும்பாலும் உண்மையில் சம்பவிப்பதைவிட படு மோசமானது”
உங்களது பயங்களைப் போக்க, அந்த வியாதியைப் பற்றி உங்களால் முடிந்தளவுக்கு தெரிந்துகொள்ளுங்கள்
[பக்கம் 9-ன் படம்]
புரிந்துகொள்ளும் ஒரு நண்பரிடம் பேசுவது அதிக நிம்மதி அளிக்கலாம்
[பக்கம் 7-ன் பெட்டி]
பராமரிப்போரிடமிருந்து உற்சாகமளிக்கும் வார்த்தைகள்
“உங்களைப் பற்றியே தவறாக எண்ணிக்கொண்டு சோர்வடையாதீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவை இயல்பானவையே. உங்களது உணர்ச்சிகளை நீங்கள் உள்ளுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதைப் பற்றி எவரிடமாவது மனம்விட்டு பேசுங்கள்; உங்களால் முடிந்தால் எங்காவது சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள், அப்போது நீங்கள் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.”—லூஸி; ஒரு க்ளினிக்கில் வேலைபார்க்கும் இவர் அநேக பராமரிப்பாளர்களையும் நோயாளிகளையும்கூட கவனித்துக்கொள்கிறார்.
“மனப்பூர்வமாய் உதவியளிக்க விரும்பும் குடும்ப அங்கத்தினர்களோ நண்பர்களோ இருந்தால், அவர்களுடைய உதவியை நாடுங்கள். மற்றவர்களோடு சுமையை பகிர்ந்துகொள்வது முக்கியம்.”—சூ; ஹாட்ஜ்கின்ஸ் என்ற நோயால் தனது அப்பா இறப்பதற்கு முன் அவரைக் கவனித்துக்கொண்டவர்.
“நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.”—மரியா; புற்றுநோயால் இறந்த நேசமான தோழியைப் பராமரிக்க உதவியவர்.
“ஆவிக்குரிய விதத்தில் திடமாக இருங்கள். யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள், இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:17; யாக்கோபு 4:8) அவர் தமது ஆவியின் மூலமாயும் வார்த்தையின் மூலமாயும் பூமிக்குரிய ஊழியக்காரர்கள் மூலமாயும் வாக்குறுதிகளின் மூலமாயும் உதவியையும் ஆறுதலையும் அளிக்கிறார். முடிந்தளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்க முயலுங்கள். உதாரணத்திற்கு, மருந்துகள் அளிப்பதற்கு அட்டவணை உண்டாக்குவதும் உதவியாளர்களின் பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதும் உதவும்.”—யால்மார்; மரணப் படுக்கையிலிருந்த தனது மைத்துனனை பராமரித்தவர்.
“நோயாளியின் வியாதியினுடைய இயல்பைப் பற்றி உங்களால் முடிந்தவரை கற்றறிந்துகொள்ளுங்கள். அது, நோயாளியிடமிருந்தும் உங்களிடமிருந்தும் எதை எதிர்பார்க்கலாம் என்பதை தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும், மேலும் நோயாளியை எவ்வாறு பராமரிப்பது என்பதை அறிந்துகொள்ளவும் உதவும்.”—ஜோன்; அவரது கணவர் ஆல்சீமர்ஸ் மனநோயால் பாதிக்கப்பட்டவர்.
“உங்களுக்கு முந்தியே மற்றவர்கள் இதைச் சமாளித்திருக்கிறார்கள் என்பதையும், என்ன நடந்தாலும் அதைச் சமாளிப்பதற்கு யெகோவா உங்களுக்கு உதவுவார் என்பதையும் நம்புங்கள்.”—ஜினி; கணவர் இறப்பதற்கு முன் அவரைப் பராமரித்தவர்.