திக்குவதன் பயத்தைப் புரிந்துகொள்ளுதல்
சரளமாக பேசும் ஒரு பேச்சாளருக்கும் திக்கிவிடுவோமோ என்று பயப்படும் ஒரு பேச்சாளருக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் சொல்லமுடியுமா? ‘நிச்சயமாக முடியும்’ என்று நீங்கள் பதிலளிக்கலாம். ஆனால் ஹஹஹக்கேல் (திதிதிக்குதல்) என்ற தன்னுடைய ஆப்பிரிக்கான்ஸ் புத்தகத்தில் பேட்டர் லோ எழுதுகிறதை கவனியுங்கள்: “ ‘வெளிப்படையாக’ திக்கும் ஒவ்வொருவருக்கும், முடிந்தளவு மற்றவர்களால் கவனிக்கப்படாமல் இருக்கவும் அநேக வழிகளில் தங்கள் திக்குவாயை மறைக்கவும் விரும்பும் பத்து பேராவது இருப்பார்கள்.” தங்கள் திக்குவாயை மறைப்பதா? அது எப்படி முடியும்?
கடந்த காலத்தில் தங்களுக்குக் கஷ்டத்தை ஏற்படுத்திய வார்த்தைகளை முன்கூட்டியே யோசிப்பதன் மூலம் சில திக்குவாயர்களால் தங்கள் திக்குவாயை மறைக்க முடிகிறது. அதற்குப் பிறகு, அந்த வார்த்தையை சொல்வதற்குப் பதிலாக, வாக்கியத்தை மாற்றியமைக்கிறார்கள் அல்லது அதேபோன்ற அர்த்தத்தையுடைய வேறு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒரு கணவன் திருமணமான 19 வருடங்களாகத் தன்னுடைய திக்குவாயை மறைத்தார். அவருடைய மனைவிக்கு அந்த உண்மை தெரிய வந்தபோது, “ஃபோன் செய்யவும் ஹோட்டல்களில் ஆர்டர் செய்யவும் அவர் என்னிடமே சொல்லுவதும் கூட்டங்களில் . . . பேசாமல் இருப்பதும் இதனால்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பேச்சு சிகிச்சை வல்லுநரிடம் கேட்டாள்.
தென் ஆப்பிரிக்காவிலுள்ள சந்தோஷமான தம்பதியினராகிய கெரார்ட் மற்றும் மரீயாவைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். a பைபிள் படிப்பு கூட்டங்களில் தான் பதில்சொல்லத் தயங்குவதற்கு காரணம் திக்குவாயைப் பற்றிய பயம்தான் என்று மரீயா தன் கணவனுக்கு அநேகமுறை விளக்க முயன்றிருக்கிறாள். “என்ன முட்டாள்தனம், நீ ஒன்னும் திக்குவாய் இல்லை” என்று அவர் பிடிவாதமாக மறுத்துக் கூறுவார். தன் மனைவி பொதுவாகவே வாயாடியாய் இருப்பதால் கெரார்ட் அவ்வாறு தீர்மானித்தார். பேசுவதற்கான சில சூழ்நிலைகளில் மாத்திரமே திக்குவாயைப் பற்றி அவள் பயப்பட்டாள். திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்து கெரார்ட் இதைப் பற்றி முதல் முறையாக அறிந்துகொண்டவராய் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “நான் அறியாமையிலும் முன்யோசனை இல்லாமலும் இருந்தேன்.” இப்போது அவளைக் குற்றம் காண்பதற்குப் பதிலாக, சபையாரின் ஒரு பெரிய கூட்டத்திற்கு முன் பேசுவதற்கு அவள் தைரியத்தைத் திரட்டும் சமயங்களுக்காக அவளைப் பாராட்டுகிறார்.
அநேக திக்குவாயர்களை “பயம்” கவ்விக்கொள்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. “அது சில சமயங்களில் ஓயாமல் வருகிறது. அவருடைய மிக பலவீனமான தருணத்தில், அதாவது மற்றவர்களோடு பேச வேண்டிய மிக அவசியமான தருணத்திலும், அன்றாட காரியமானாலும்சரி முக்கியமான காரியமானாலும்சரி, அவர்களோடு பேசுவதற்கு அவர் முயற்சிக்கும் சமயத்திலும், புண்படுத்தப்படவோ கேலி செய்யப்படவோ திக்குவாயுடையவர் எதிர்பார்க்கலாம் . . . மிகவும் நன்றாக சமாளிப்பவர்களும்கூட பயத்தின் காரணமாகவே தாங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அது தங்களை முழுமையாக விட்டு நீங்குவதில்லை என்றும் ஒப்புக்கொள்கின்றனர்” என திக்குவாயுடைய டேவிட் காம்டன் என்பவர் திக்குதல் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் விளக்குகிறார்.
பயத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள்
பள்ளி வகுப்பறையில், தொழில் ரீதியான கூட்டத்தில் அல்லது மத கூட்டத்தில் சபையாருக்கு முன் கேள்விக்கு பதிலளிக்கும்படி திக்குவாயுடைய ஒருவர் கேட்கப்பட்டால், கவலையும் பயமும் ஏற்பட்டு அதன் காரணமாக மிக அதிகமான திக்குதலில் விளைவடையலாம். ஒரு வானொலிப் பேட்டியில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த திக்குவாயுடைய 15 வயது பெண்ணான ரோசான்னிடம் இவ்வாறு கேட்கப்பட்டது: “அமைதியாக இருப்பது அதிக சுலபம் என்று நீ நினைக்கும் சமயங்கள் இருக்கா?” “ஆமா, நிறைய சமயங்கள் இருக்கு; உதாரணமா கிளாஸ்ல இருக்கும்போது, நல்ல மார்க்ஸ் பெற்றுத்தரக்கூடிய ஒரு சரியான பதில் எனக்கு தெரிஞ்சிருந்தாலும், உண்மையிலேயே அத சொல்றது ரொம்ப கஷ்டம்னு எனக்குத் தெரியும்.”
மேலே சொல்லப்பட்ட வானொலி நிகழ்ச்சியில் சீமோன் என்ற பெயருள்ள ஒரு வணிகரும் பேட்டி காணப்பட்டார். ரோசானைப்போல சீமோனும் பேச்சு சிகிச்சையின் மூலம் முன்னேற்றம் கண்டிருக்கிறார். என்றபோதிலும் சில சமயங்களில் அவர் மிகவும் அதிகமாக திக்குகிறார். இது அவருக்குச் செவி கொடுப்பவர்களின் மனப்பான்மையால் அதிகரிக்கப்படலாம். “அதிகமாக பேச வேண்டிய தேவை இருக்கும் ஒரு முக்கிய அலுவலகக் கூட்டத்தில் பேச நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் மிகவும் அதிகமாக பொறுமையிழந்து விடுகிறார்கள்” என்று அவர் விளக்குகிறார்.
திக்குவாயுடைய ஒருவருக்கு இருக்கும் பயத்தை, கூச்ச சுபாவமுடையவர் அந்நியர்களிடம் பேசுவதற்கு பயப்படும் பயத்தோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. கடந்த இரண்டு வருடங்களாக யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வந்துகொண்டிருக்கும் லிசாவைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நண்பர்களோடு சாதாரண விஷயங்களைப் பற்றி பேசும்போது அவர் ஓரளவு சரளமாகவே பேசுகிறார். அந்நியர்களை சந்திக்க முன்முயற்சி எடுக்கவேண்டிய பிரசங்க வேலையிலும் அவர் ஆர்வத்துடன் பங்குகொள்கிறார். ஆனால், அநேக திக்குவாயர்களுக்கு பொதுவாக இருக்கும் ஒரு பயம் அவருக்கும் இருக்கிறது—ஒரு பெரிய சபை முன்பாக பேசுவது. “எங்களுடைய கூட்டங்களில் நான் கையை உயர்த்தி, பதில் சொல்வதே அரிது. அப்படியே சொன்னாலும், அது மிஞ்சிபோனால் ஒரு வார்த்தையாக அல்லது ஒரு சிறிய வாக்கியமாக இருக்கும். அது மிகக்குறைவாக இருந்தாலும் அதுவே என்னுடைய மிகச் சிறந்தது. நான் எப்போதும் முன்னதாகவே தயாரிப்பதால், பதில்கள் என் மனதிலும் வாயிலும் இருக்கின்றன. ஆனால் என் நாக்கு ஒத்துழைக்க மறுக்கும்” என்று லிசா விளக்குகிறார்.
சில திக்குவாயர்களுக்கு சப்தமாக வாசிப்பது ஒரு மோசமான அனுபவமாக இருக்கும். பொதுவாக அவர்கள் தவிர்த்துவிடும் வார்த்தைகளை உச்சரிக்கும்படி இது அவர்களை கட்டாயப்படுத்துகிறது. “எங்கள் கூட்டங்கள் ஒன்றில், கலந்தாலோசிக்கப்படும் வேதவாக்கியங்களை ஒவ்வொருவராக வாசிக்கும்படி சில சமயங்களில் சொல்லப்படுவோம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், வசனத்தை வாசிக்க முடியுமா முடியாதா என்று தெரியாமல், என்னுடைய முறைக்காக நடுக்கத்துடன் காத்திருந்து, அமைதியிழந்து உட்கார்ந்திருப்பேன். சில சமயங்களில் நான் வாசிப்பேன், ஆனால் ஏதாவது ஒரு வார்த்தையை உச்சரிக்க முடியாது. அப்போது அந்த வார்த்தையை விட்டுவிட்டு தொடர்ந்து வாசிப்பேன்” என்று லிசா தொடர்ந்து சொல்கிறார்.
தெளிவாகவே, திக்குவாயுடைய ஒருவரை சப்தமாக வாசிக்க உற்சாகப்படுத்துவதற்கு முன் கவனமான சிந்தனை தேவை. அப்படிப்பட்ட “உற்சாகம்” அவரை மோசமாக உணரச் செய்யலாம். அதற்கு மாறாக, தங்களால் செய்யமுடிந்த மிகச் சிறந்ததை செய்வதற்காக அப்படிப்பட்டவர்களை போற்ற வேண்டும்.
உதவிசெய்ய முயலும்போது
திக்குதல் மிகவும் சிக்கலான ஒரு கோளாறு. ஒருவருக்கு பலனளிக்கும் சிகிச்சைமுறை மற்றொருவருக்கு பலனளிக்காமல் இருக்கலாம். உண்மையில், “குணமடைந்த” ஒரு காலப்பகுதிக்குப் பிறகு அநேக திக்குவாயர்களுக்கு மறுபடியும் திக்குதல் ஏற்படுகிறது. மற்றெந்த பேச்சுக் கோளாறையும்விட திக்குதலைப் பற்றி அதிகமான ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், வல்லுநர்களால் ஒரு குறிப்பிட்ட காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. உண்மையில், திக்குதலில் அநேக காரணிகள் உட்பட்டிருக்கலாம் என்று பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கின்றனர். திக்குவாயுடைய ஒருவரின் சிறுபிராயத்தில் மூளை அணுக்கள் ஒழுங்கற்ற விதத்தில் அமைக்கப்படுவதே காரணம் என்பது சமீபகால ஆராய்ச்சிகள் அடிப்படையிலான ஒரு கருத்து. திக்குதல்—அதன் இயல்பு மற்றும் சிகிச்சைக்கு ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறை என்ற தங்களுடைய ஆங்கில பாடபுத்தகத்தில் டாக்டர்களான தியாடோர் ஜெ. பீட்டர்ஸ் மற்றும் பாரி கிட்டார் கூறுகிறபடி, “திக்குதலைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலில் இருக்கும் மிகப்பெரிய இடைவெளிகளை அதிகமான ஆராய்ச்சிகள் நிரப்பும்போது” அதற்கான காரணங்களைப் பற்றிய தற்போதைய கருத்துகள் “செல்லாதவையாகிவிடும்.”
திக்குதலைப் பற்றி மனிதர்கள் அவ்வளவு குறைவாக அறிந்திருப்பதால், இந்தக் கோளாறால் அவதிப்படுபவர்களுக்கு இருக்கும் அநேக சிகிச்சை முறைகளில் ஒன்றை சிபாரிசு செய்யும்போது கவனம் தேவை. “மிக மோசமான திக்குவாயர்களில் பெரும்பாலானோர் ஓரளவே குணமடைவார்கள். நிதானமாக பேச அல்லது பயப்படாமல் திக்கிப்பேச மேலும் அதனால் அதிகம் கவலைப்படாமல் இருக்க அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். . . . நமக்குப் புரியாத காரணங்களால், சில திக்குவாயர்கள் சிகிச்சைக்குப் பிறகு எந்தக் குறிப்பிடத்தக்க விதத்திலும் முன்னேற்றம் அடைவதில்லை” என்று மேற்சொன்ன பாடபுத்தகம் கூடுதலாக கூறுகிறது. b
சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால், சில பேச்சு சிகிச்சை வல்லுநர்கள் திக்குவாயுடைய அந்த நபர் கஷ்டப்பட்டு முயற்சி செய்யவில்லை என்று குறைகூறியிருக்கின்றனர். “தோல்விக்கான ஒரே வாய்ப்பு திக்குவாயுடையவரின் அரைகுறையான மனப்பான்மையில்தான் சார்ந்திருக்கிறது” என்று ஒரு வல்லுநர் உறுதியாக கூறினார். அப்படிப்பட்ட உரிமைபாராட்டல்களைப் பற்றி நூலாசிரியர் டேவிட் காம்டன், “இப்படிப்பட்ட குறிப்பு, திக்குவாயர்களை எவ்வளவாக கோபமடையச் செய்யும் என்பதை விளக்க எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. முதலாவதாக, அது தெளிவாகவே உண்மையற்றது. எந்தவொரு தனி சிகிச்சைமுறையும் எல்லா திக்குவாயர்களுக்கும் பலனளிக்காது; மேலும் ஒரு குறிப்பிட்ட திக்குவாயனை குணப்படுத்திய சிகிச்சைகூட தவறே இல்லாததாக இருக்காது. இரண்டாவதாக, திக்குவாயர்கள் தோல்வியுடன் வாழ்வதால் . . . அனாவசியமாக [அவர்களுடைய தோல்வியை] நியாயமற்ற விதத்தில் அதிகரிக்கும் எதுவும் குற்றமே” என்று கூறினார்.
அவர்கள் சுமையை இலகுவாக்குதல்
தங்களுக்காக பரிதாபப்படுவதை திக்குவாயர்கள் பொதுவாக விரும்புவதில்லை. என்றாலும், அவர்கள் சுமையை இலகுவாக்க அதிகம் செய்யப்படலாம். அவர்கள் திக்கும்போது நீங்கள் சங்கடப்பட்டு திரும்பிக்கொள்ளாதீர்கள். அவர்கள் வாயைப் பார்ப்பதற்குப் பதிலாக அவர்கள் கண்ணைப் பாருங்கள். தங்களுக்கு செவிகொடுப்பவர்களின் சரீர மொழிகளுக்குப் பொதுவாக அவர்கள் அதிக உணர்வுடையவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் சகஜமாயிருப்பதாக தோன்றினால், அது அவர்கள் பயங்களைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும். “மற்ற எவருக்கும் செவிகொடுப்பதைப்போலவே அவருக்கு செவிகொடுக்கவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று காட்டுங்கள்” என பேச்சு சிகிச்சை வல்லுநர் ஒருவர் கூறினார்.
திக்குவாயுடைய ஒருவனை தங்கள் மாணவர்கள் மத்தியில் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், அவனுடைய பயங்களை நீக்குவதற்கு அதிகத்தை செய்யலாம். டி யுனி என்ற தென் ஆப்பிரிக்காவின் கல்விசார்ந்த பத்திரிகையில் ஆசிரியர்களுக்கு பின்வரும் ஆலோசனை கொடுக்கப்பட்டிருந்தது: “கேட்பவர் சரளத்தை எதிர்பார்க்கவில்லை என்று அறியும்போது பெரும்பாலான திக்குவாயர்கள் குறைவாகவே திக்குகிறார்கள்.”
மேலே சொல்லப்பட்ட பத்திரிகையின்படி, மாணவனுடைய உணர்ச்சிகளை ஆசிரியர் தெரிந்துகொள்வதும் முக்கியமானது. சங்கடத்தினால் அப்படிப்பட்ட மாணவர்களை தவிர்ப்பதற்குப் பதிலாக, அவர்களோடு பேசவும் அந்தப் பிரச்சினையைப் பற்றிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்படி அவர்களை உற்சாகப்படுத்தவும் வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறாக பேசுவதற்கான எந்தச் சூழ்நிலைகள் அந்த மாணவனுக்கு அதிக பயத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆசிரியர் அறிந்துகொள்ள முடியும். “அவன் சரளமாய் பேசுவது 80 சதவீதம் உங்கள் பேரிலேயே சார்ந்திருக்கிறது” என்று அந்தப் பத்திரிகை அறிவிக்கிறது. பிரச்சினை இருந்தபோதிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என அறியும்போது அவன் சரளமாக பேசுவது அதிகரிக்கும். அந்தப் பத்திரிகை மேலுமாக விளக்குகிறது: “சாவகாசமான, படிப்பை ஊக்குவிக்கும் ஒரு சூழல் வகுப்பறையில் நிலவினால், அது திக்குவாயுடையவனுக்கு மாத்திரமல்ல முழு வகுப்பிற்குமே பிரயோஜனமளிக்கும்.”
நிச்சயமாகவே, பெரியவர்களை உட்படுத்தும் போதனா சூழ்நிலைகளுக்கும் இதே ஆலோசனைகள் நல்லவிதமாக பொறுத்தப்படலாம்.
நம்முடைய சிருஷ்டிகர் புரிந்துகொள்கிறார்
நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் மனித அபூரணத்தை முழுமையாக புரிந்துகொள்கிறார். இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் செல்ல மோசேயை அவர் தம்முடைய பேச்சாளனாக நியமித்தார். பேச்சுத்தொடர்பு கொள்வதை கடினமாக்கிய ஒரு பேச்சுக் கோளாறு அவருக்கு இருந்தது என்பதை முழுமையாய் அறிந்தவராகவே இதைச் செய்தார். மாறாக, மோசேயின் சகோதரனாகிய ஆரோன் சரளமாக பேசக்கூடியவன் என்பதையும் கடவுள் அறிந்திருந்தார். “அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்” என கடவுள் சொன்னார். (யாத்திராகமம் 4:14) என்றபோதிலும் மோசேயிடம், உண்மைப்பற்றுறுதி, தயவு, விசுவாசம், சாந்தகுணம் போன்ற அதிமுக்கியமான மற்ற குணங்கள் இருந்தன. (எண்ணாகமம் 12:3; எபிரெயர் 11:24, 25) மோசே மறுத்தபோதிலும், தம்முடைய ஜனங்களின் தலைவராக மோசேயை தெரிவுசெய்ததை கடவுள் மாற்றவில்லை. அதேசமயத்தில், ஆரோனை மோசேயின் பேச்சாளனாக நியமிப்பதன் மூலம், மோசேயின் பயங்களை அவர் கருத்தில் எடுத்துக்கொண்டார்.—யாத்திராகமம் 4:10-17.
புரிந்துகொள்ளுதலைக் காட்டுவதன் மூலம் நாம் கடவுளை பின்பற்றலாம். திக்குவாயர்களை மரியாதையுடன் நடத்துங்கள்; பேச்சுக் கோளாறு ஒரு ஆளுடைய உண்மையான மதிப்பை மறைத்துவிட அனுமதிக்காதீர்கள். ஒரு சிறு பெண்ணையும் திக்கிப்பேசும் அவளுடைய அப்பாவையும் பற்றிய அனுபவம் இதை விளக்குகிறது. அதிக சரளமாக வாசிப்பதற்கான ஒரு வழியை அந்தத் தந்தை கற்றிருந்தார். ஒருநாள் இரவு தன் ஆறு வயது மகளுக்கு கதை வாசிக்கும்போது அதை உபயோகித்து, தான் சரளமாக வாசித்ததைப் பற்றி அதிக பெருமையடைந்தார்.
அவளுடைய தந்தை முடித்த பிறகு “நல்லா பேசுங்க, டாடி” என்று அவள் கூறினாள்.
“ரொம்ப நல்லாதான் நான் பேசறேன்” என்று சற்று கோபத்துடன் அவர் பதிலளித்தார்.
“இல்ல, நீங்க எப்பவும் பேசுற மாதிரி பேசுங்க” என்று அவள் வற்புறுத்தினாள்.
ஆம், தன் தகப்பனுக்கு பேச்சு குறைபாடு இருந்தபோதிலும், அவர் எப்படிப்பட்டவராக இருந்தாரோ அதற்காகவே இந்தச் சிறு பெண் அவரை நேசித்தாள். ஆகவே திக்கிப்பேசும் ஒருவரை நீங்கள் அடுத்த முறை எதிர்ப்பட்டால், அவரிடம் மதிப்புமிக்க எண்ணங்களும் விரும்பத்தக்க குணங்களும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிச்சயமாகவே அவருக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன. பொறுமையுள்ளவர்களாக, அவரிடம் புரிந்துகொள்ளுதலைக் காட்டுங்கள்.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையிலுள்ள சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b பெரியவர்களைவிட குழந்தைகள் சிறந்த விதத்தில் முன்னேற்றம் அடைவதாக கணிக்கப்படுகிறது. இளம் பிள்ளைகளில் திக்குதல் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் அனுபவமிக்க பேச்சு சிகிச்சை வல்லுநரான ஆன் இர்வின் இவ்வாறு விளக்குகிறார்: “நான்கு பிள்ளைகளில் மூவர் வளரும்போது இயல்பாகவே திக்குவதை நிறுத்திவிடுகின்றனர். இயல்பாகவே அதை நிறுத்திவிடாத அந்த இருபத்தைந்து சதவீதத்தினரில் உங்கள் பிள்ளையும் ஒன்றாக இருக்குமானால், தடுப்பு சிகிச்சை மூலம் அவன் அதை மேற்கொள்வதற்கு மிகவும் அதிகமான சாத்தியங்கள் இருக்கின்றன.”
[பக்கம் 25-ன் படம்]
பொது இடத்தில் சத்தமாய் பேசுவதற்கு ஒரு திக்குவாயர் பயப்படலாம்
[பக்கம் 26-ன் படம்]
ஒரு திக்குவாயர் உங்களுடன் பேச கஷ்டப்பட்டால் பொறுமையாக இருங்கள்
[பக்கம் 27-ன் படம்]
திக்குவாயர்கள் பொதுவாக தொலைபேசியை உபயோகிக்க பயப்படுவர்