திக்குவாயோடு நான் எப்படி சமாளிக்கிறேன்
ஸ்வென் ஸீவர்ஸ் கூறியபடி
நான் சிறு குழந்தையாக இருந்த சமயத்திலிருந்தே திக்கித் திக்கிப் பேசினேன். கடந்த காலத்தை சிந்திக்கையில், என் பெற்றோர் இந்தப் பிரச்சினையை அணுகிய விதத்தைப் போற்றுகிறேன். திக்கும்போது என் பேச்சை திருத்துவதற்கு மாறாக, என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதில் கவனம் செலுத்தவே எப்போதும் அவர்கள் முயன்றனர். தங்கள் குழந்தை திக்குகிறதை பெற்றோர் அடிக்கடி சுட்டிக்காட்டும்போது திக்குவது மேலும் அதிகரிக்கலாம் என பேச்சு சிகிச்சை வல்லுநர்கள் கூறுகின்றனர். a
எனக்கு மூன்று வயதாக இருக்கையில், அம்மா யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானார். பருவ வயதில் அவருடைய முன்மாதிரியை பின்பற்ற முடிவு செய்தேன்; பைபிளை முழுமையாக ஆராய்வதற்கு எனக்கு உதவி கிடைத்தது. ஜூலை 24, 1982-ல், ஜெர்மனியிலுள்ள நாய்மன்ஸ்டரில் நடந்த ஒரு மாநாட்டில் கடவுளின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியனாக முழுக்காட்டுதல் எடுத்தேன். பிறகு தென் ஆப்பிரிக்காவிற்கு இடமாறிச் சென்று, மெய் கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குகொள்ளும்படி கட்டளையிடப்பட்டிருக்கும் பொது பிரசங்க ஊழியத்தை அங்கும் தொடர்ந்து செய்தேன். (மத்தேயு 28:19, 20) ஒரு திக்குவாயனாக எப்படி சமாளிக்கிறேன் என நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்.
நம்பிக்கையான மனநிலையின் பலன்கள்
நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்வது சில சமயங்களில் கடினமென்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்; ஆனால் நம்பிக்கையாக இருப்பது உண்மையில் அதிக உதவியாக இருந்திருப்பதை கண்டிருக்கிறேன். உண்மை என்னவென்றால், எப்பொழுதுமே என்னால் ஏதாவதொரு விதத்தில் பேச்சுத்தொடர்பு கொள்ள முடிகிறது. பேச முடியவில்லை என்றால், செய்திகளை எழுதுவதன் மூலம் அல்லது மற்றவர்களுக்கு பைபிள் பிரசுரங்களை வெறுமனே காட்டுவதன் மூலம் என்னால் தொடர்புகொள்ள முடிகிறது. உரையாடலை ஆரம்பிக்கும் பிரச்சினையை மேற்கொள்ள, நம்பிக்கையான அணுகுமுறை எனக்கு உதவுகிறது. என் அறிமுகம் மிகவும் எளிமையாக இருக்கும்படி முயற்சி செய்கிறேன். உரையாடலின் ஆரம்பத்தில், முடிந்தவரை வீட்டுக்காரரையே அதிகமாக பேச அனுமதிக்கிறேன். ஜனங்கள் பேச விரும்புகின்றனர், ஆகையால் அவர்களுடைய மனதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். பிறகு, பைபிளின் செய்தியை முக்கியப்படுத்தி, அவர்களுக்கு அக்கறையாக இருக்கும் காரியங்களைப் பற்றியே பேசி உரையாடலைத் தொடர்கிறேன். அவர்கள் பேசுவதையே கவனிப்பது, எனக்கிருக்கும் பிரச்சினையை மறக்க உதவுவதால் குறைவாகவே திக்குகிறேன்.
கிறிஸ்தவ கூட்டங்களில் பதில் சொல்வதற்கும் நம்பிக்கையான மனநிலை உதவியிருக்கிறது. பைபிள் கலந்தாலோசிப்புகளில் அதிகமாக பங்குகொள்ளும்போதுதான், கேட்பவர்களும் நடத்துபவரும் என்னுடைய பேச்சிற்குப் பழக்கப்பட்டவர்களாகி, என்ன சொல்லுகிறேன் என்பதில் கவனம் செலுத்துகின்றனரே தவிர எப்படி சொல்லுகிறேன் என்பதிலல்ல.
வெற்றியின் சந்தோஷத்தை அனுபவிக்க தொடர்ந்து முயற்சிசெய்ய வேண்டியிருக்கிறது. சுயபச்சாதாபத்திற்கு ஆளாகி தனிமை விரும்பியாக ஆகிவிடுவதிலிருந்து இது என்னை பாதுகாக்கிறது. சுயபச்சாதாபத்தை எதிர்ப்பது தொடரும் ஒரு போராட்டமாகும். குதிரைமீது சவாரி செய்யும் ஒருவர் தூக்கியெறியப்பட்டால், அவர் தன்னம்பிக்கையை இழந்துவிடாதிருப்பதற்கு, மீண்டும் அதன்மீது ஏறுவது அவசியம் என சொல்லப்படுகிறது. ஆகவே, குறிப்பு சொல்லுகையில் பேசமுடியால் முற்றிலும் நிறுத்திவிட வேண்டிய நிலை ஏற்பட்டால், கிடைக்கும் அடுத்த சந்தர்ப்பத்தில் குறிப்பு சொல்லுவேன். வேறு வார்த்தைகளில் சொன்னால், மறுபடியும் குதிரைமீது ஏற முயலுவேன்.
மற்றவர்கள் எவ்வாறு உதவலாம்
தொலைபேசியில் பேச அல்லது அந்நியர்களிடம் ஏதாவது கேட்க வேண்டியிருக்கும் சமயங்களில் குறிப்பறிந்து உதவுவதை நிச்சயமாகவே போற்றுகிறேன். ஆனால் உதவி செய்வதற்கான தங்கள் விருப்பத்தில் சிலர் மிதமிஞ்சி போகிறவர்களாய், தீர்மானம் செய்யமுடியாத சிறு குழந்தையைப்போல என்னை நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்.
என் அன்பு மனைவி ட்ரேசீயின் உதவியையும் நான் அதிகமாக போற்றுகிறேன். அவள் என் ‘வாயாக’ செயல்படுவதற்கு முன் அந்தச் சூழ்நிலையைப் பற்றி விவரமாக கலந்துபேசிவிடுவதால், என்ன செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன் என்பதை அவள் அறிந்துகொள்கிறாள். (ஒப்பிடுக: யாத்திராகமம் 4:10, 14, 15.) இவ்விதத்தில், கணவன் என்ற முறையில் எனக்கு மரியாதை காட்டுகிறாள்; என் வாழ்க்கை இன்னமும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறாள்.
மற்றொரு மிகப்பெரிய உதவியாக இருந்திருப்பது தேவராஜ்ய ஊழியப் பள்ளியாகும். இந்த வாராந்திரக் கூட்டத்தில், மற்றவர்களுக்கு முன்பாக பைபிள் வாசிப்பதிலும் பைபிள் தலைப்புகளில் சுருக்கமான பேச்சுகள் கொடுப்பதிலும் மாணாக்கர்கள் பங்கு கொள்வார்கள். அடிக்கடி சபையார் முன்பாக ஓரளவு நல்லவிதமாக பேசவும் வாசிக்கவும் முடிவது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்பள்ளியில் நான் சேராமல் இருந்திருந்தால், இந்தத் திறமையைப் பற்றி எனக்கு தெரியவே வந்திருக்காது.
தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் எனக்கு நியமிப்புகள் இருந்தபோது, நான் அதை எப்படி பேசினேன் என்பதில் அல்லாமல், என்ன பேசினேன் என்பதில் கற்பிப்பவர் கவனம் செலுத்தியது எனக்கு அதிக உற்சாகமளித்தது. தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் b புத்தகத்திலிருந்து அதிக பயனடைந்திருக்கிறேன்; நன்றாக பேசக்கூடியவர்களைவிட திக்குபவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் சில பண்புகள் அதில் இருக்கிறபோதிலும்கூட பயனடைந்திருக்கிறேன். உதாரணமாக, அதிகமாக திக்குவதால், குறிக்கப்பட்ட நேரத்திற்குள் என்னால் பேச்சை முடிக்க முடியாது. ஆனாலும், என்னால் உழைக்க முடிந்த குறிப்புகளுக்கு கற்பிப்பவர் கவனம் செலுத்துவது எனக்கு அதிக உற்சாகமளிக்கிறது.
கூடுதலான சேவை சிலாக்கியங்கள்
கடந்த காலத்தில், எங்கள் கூட்டங்களில் படிக்கும் ஒரு கிறிஸ்தவ பிரசுரத்திலிருந்து சபையார் முன்பாக வாசிக்கும் சிலாக்கியம் எனக்கு இருந்தது. தகுதிவாய்ந்த எந்த ஊழியரும் வரவில்லையென்றால் படிப்பை நடத்தும் சிலாக்கியமும் எனக்கிருந்தது; இப்போதோ நானே தவறாமல் படிப்பை நடத்துகிறேன். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தாலும், அப்படிப்பட்ட நியமிப்புகளை கையாளுவதில் கடவுளுடைய உதவியை அனுபவித்திருக்கிறேன்.
என்றபோதிலும், பல வருடங்களாக, சபை மேடையிலிருந்து வாசிக்க அல்லது பேச எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவுதான். இது நியாயந்தானே. ஏனென்றால், சில சமயங்களில் சபையார் புரிந்துகொள்ளும் விதமாக பேசுவதற்கு எனக்கு அதிக நேரம் தேவைப்படுவதுண்டு. ஆகவே மற்ற நியமிப்புகளை கையாளுவதில் என் முழு பலத்தையும் உபயோகித்தேன். முதலில், சபைக்கு வரும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை கவனித்துக்கொள்வதில் உதவியாளாக சேவித்தேன். உதவி ஊழியனாக நியமிக்கப்பட்ட பிறகு, பைபிள்கள், புத்தகங்கள், மற்ற பிரசுரங்கள் போன்றவற்றின் விநியோகிப்பை கவனித்துக்கொண்டேன். பிறகு, எங்களுடைய பொது சாட்சி கொடுத்தலில் உபயோகிக்கப்படும் பிராந்திய அட்டைகளை கவனிப்பதற்கு நியமிக்கப்பட்டேன். இந்த நியமிப்புகளில் கவனம் செலுத்தி, ஊக்கத்துடன் வேலைசெய்தது எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது.
கடந்த எட்டு வருடங்களாக, ட்ரேசீயுடன் முழுநேர சுவிசேஷகனாகவும் சேவைசெய்து வந்திருக்கிறேன். இந்த விதத்திலும்கூட யெகோவா என்னை நிச்சயமாகவே அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார். சில சமயங்களில், திக்கிப்பேசும் என் பலவீனத்தை யெகோவா தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாரோ என்றும்கூட நினைத்திருக்கிறேன். ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் ஆவதற்கு ஐந்து பேருக்கு உதவிசெய்யும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது; அவர்களில் இருவர் திக்குவாயர்கள்.
சபை மூப்பராக சேவிக்கும்படி நியமிக்கப்பட்ட அந்த நாளின் சந்தோஷத்தை என்னால் மறக்கவே முடியாது. மேடையிலிருந்து போதிக்கும் திறமை எனக்கு குறைவாக இருந்தபோதிலும், தனிப்பட்ட விதமாக மற்றவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். சபையில் இக்கட்டான பிரச்சினைகளை எதிர்ப்படுகிறவர்களுக்கு உதவிசெய்யும் நோக்கத்துடன் வேதப்பூர்வ ஆராய்ச்சி செய்யும் என்னுடைய திறமையை திக்குதல் தடைசெய்வதில்லை.
கடந்த ஐந்து வருடங்களாக, அதிகமதிகமான பேச்சுகள் கொடுப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறேன். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சுகள் கொடுப்பதோடுகூட மற்ற கூட்டங்களில் சுருக்கமான அறிவிப்புகளை என்னால் கையாள முடிந்திருக்கிறது. சரளமாக பேசுவதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்தேன். ஆனால் பிறகு, மறுபடியும் மிகமோசமாக திக்க ஆரம்பித்துவிட்டேன். கவலையுற்றவனாய், ‘எனக்கு இனிமேலும் எந்த நியமிப்பும் கிடைக்காது’ என்று நினைத்தேன்; ஆனால் அடுத்த அட்டவணையில் என் பெயர் இருந்ததைப் பார்த்தபோது எனக்கு ஒரே ஆச்சரியம்! எங்கள் சபையின் நடத்தும் கண்காணி, தொடர்ந்து பேசமுடியாத அளவுக்கு திக்கும்போது நான் அவரைப் பார்த்தால்போதும் அவர் மேடைக்கு வந்து பேச்சைத் தொடர்ந்து கொடுப்பதாக என்னிடம் கூறினார். அன்புள்ள இந்த உதவியை ஓரிரண்டு முறை பயன்படுத்திக்கொண்டேன்; ஆனால் சமீப மாதங்களில் அவ்வாறு செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. என் பேச்சு முன்னேறுகையில், பொதுப் பேச்சு உட்பட மற்ற நீண்ட பகுதிகளும் எனக்குக் கொடுக்கப்பட்டன. சமீபத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாடு ஒன்றில், இரண்டு நடிப்புகளில் பங்குகொள்ளும்படி என்னிடம் சொல்லப்பட்டபோதுதான் நான் செய்திருந்த முன்னேற்றத்தை முழுமையாக உணர்ந்தேன்.
உண்மையில், என் பேச்சு ஏன் முன்னேற்றமடைந்தது என்பதை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும், வருங்காலத்தில் ஒருவேளை அது மறுபடியும் மோசமடையலாம். உண்மையில், நான் மேடையிலிருந்து பேசுவதில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாக தோன்றினாலும் தனிப்பட்ட விதமாக ஆட்களுடன் பேசும்போது மறுபடியும் மிகமோசமாக திக்கியிருக்கிறேன். ஆகவே, திக்குவாயை மேற்கொள்வதைப் பொருத்தவரையில், இது ஒரு தொடர்கதையே. எனக்கு மறுபடியும் திக்குதல் ஏற்படும்போது, என்னுடைய குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு, “தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நட[க்க]” வேண்டிய தேவையை எனக்கு நானே நினைவுபடுத்திக்கொள்ள முயலுவேன்.—மீகா 6:8.
எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், வரவிருக்கும் கடவுளுடைய புதிய உலகில் திக்குதல் முழுமையாக இல்லாமல் போகும் என்று அறிந்தவனாய், தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பேன். “தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்” என்று பைபிள் கூறுகிறது. சொல்லர்த்தமாகவும் ஆவிக்குரிய விதத்திலும் இது உண்மையாக இருக்கும் என நிச்சயமாக இருக்கிறேன்; அதுமட்டுமல்ல, “ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”—ஏசாயா 32:4; 35:6.
[அடிக்குறிப்புகள்]
a நவம்பர் 22, 1997 தேதியிட்ட பிரதியில் “திக்குவதன் பயத்தைப் புரிந்துகொள்ளுதல்” என்ற கட்டுரையைக் காண்க.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 15-ன் படம்]
என் மனைவி ட்ரேசீயுடன்