மலை கொரில்லாக்களை சந்தித்தல்
டான்ஜானியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
ருவாண்டா மற்றும் காங்கோ மக்கள் குடியரசின் எல்லையில் அமைந்துள்ள எரிமலைப் பகுதியில், அவற்றில் ஏறக்குறைய 320 மட்டுமே வாழ்கின்றன. உகாந்தாவிலுள்ள உட்புக முடியாத அடர்ந்த காட்டில் மேலும் 300 வாழ்கின்றன. அவையே மலை கொரில்லாக்கள்—உலகிலுள்ள பாலூட்டிகளுள் மிகவும் வேகமாக அழியும் நிலையில் இருப்பவை!
இந்த விலங்குகளுக்கு ஏற்படும் கதியைக் குறித்து பொதுமக்களின் விழிப்புணர்வைத் தூண்ட, அமெரிக்க விலங்கியல் நிபுணரான டையன் ஃபாசி அதிக முயற்சி செய்தார். மலை கொரில்லாக்களைப் பற்றி ஆராய்வதற்கு ஃபாசி 1960-களின் கடைசியில் ஆப்பிரிக்கா வந்தார். அந்தச் சமயத்தில் அவை சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு வந்ததால், அவற்றின் எண்ணிக்கை கிடுகிடுவென்று குறைந்தது. விருங்கா மலைகளில் ஒரு துறவியைப்போல அந்தத் தைரியமுள்ள விஞ்ஞானி வாழ்ந்து, அங்கு வசித்த கொரில்லாக்களுடன் சீக்கிரத்தில் நட்புறவை வளர்த்துக் கொண்டார். பத்திரிகையில் வந்த கட்டுரைகளிலும் மூடுபனியில் கொரில்லாக்கள் என்ற ஆங்கில புத்தகத்திலும் ஃபாசி தன்னுடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். காலப்போக்கில், மென்மயிருடைய தன் நண்பர்களைக் காப்பாற்ற திடதீர்மானம் உள்ளவராய் சட்டவிரோத வேட்டைக்காரர்களுடன் நேரடியாகவே போரிட ஆரம்பித்துவிட்டார். இருந்தபோதிலும், அவர் ஆரம்பித்த அறப்போருக்கு அவரே பலியானார்; 1985-ல் அடையாளம் தெரியாத ஒரு எதிரியால் கொல்லப்பட்டார்.
அமைதலுள்ள இந்த மிருகங்களை நேரில் பார்க்க விரும்பி, 1993-ல் என் மனைவியும் நானும் கொரில்லாக்கள் வாழுமிடத்திற்கு விஜயம்செய்ய முடிவு செய்தோம். எங்கள் சந்தோஷகரமான அனுபவத்தை மனத்திரையில் கொண்டுவந்து, உங்களிடம் பகிர்ந்துகொள்ள தயவுசெய்து எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்.
3,700 மீட்டர் உயரமுள்ள விசோகே எரிமலையின் அடிவாரத்திலிருந்து ருவாண்டாவிலுள்ள வல்கேனோஸ் தேசிய பூங்காவின் எல்லைக்குச் செல்ல ஒருமணி நேரம் மலையேற வேண்டும். அந்த இடத்திலிருந்து வழிகாட்டிகள் எங்களை அழைத்துச் செல்வதுடன் எங்கள் பயணம் ஆரம்பமாகிறது. இடையில், நாங்கள் மிகவும் களைத்துப் போயிருந்ததால் எங்களுக்கு ஓய்வு அவசியம் தேவைப்பட்டது. அச்சமயம், கொரில்லாக்கள் மத்தியில் இருக்கும்போது நாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அந்த வழிகாட்டிகள் விளக்குகிறார்கள். விசேஷித்த தொகுதியான இந்த மிருகங்களை பார்க்க, ஒருநாளில் எட்டுபேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக எங்களிடம் சொல்கிறார்கள். அவற்றிற்கு வியாதிகள் தொற்றும் வாய்ப்பைக் குறைப்பதோடுகூட அவற்றின் நடத்தைப் பாங்குகள் பாதிக்கப்படும் அபாயத்தையும் இது குறைக்கிறது.
“காட்டுக்குள்ள போனபிறகு நாம சத்தமா பேசக்கூடாது” என ஒரு வழிகாட்டி எங்களுக்கு நினைப்பூட்டுகிறார். “அப்பதான் காட்டுல இருக்கிற மற்ற மிருகங்களையும் பறவைகளையும் பார்க்க முடியும்; ஏன்னா, இங்க மலை கொரில்லாக்கள் மட்டுமல்ல, தங்கநிற குரங்குகள், ட்டைகர் மான்கள், புஸ்பக் மான்கள், ஆப்பிரிக்க யானைகள், காட்டெருமைகள் எல்லாமே இருக்கு.”
அரிப்பெடுக்கும் பூனைக்காஞ்சொறிகளும், கொட்டும் எறும்புகளும் அப்பூங்காவில் இருக்கின்றன என்றும் மூடுபனியும் சேறும் நிறைந்த காட்டுப் பகுதியில் நாங்கள் நடக்க வேண்டியிருக்கும் என்றும் வழிகாட்டிகள் சொல்லும்போது என் மனைவியும் நானும் ஒருத்தரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். ஏனென்றால் நாங்கள் அதற்குத் தயாராக வரவில்லை! ஆனால் சிநேகப்பான்மையான அந்த வழிகாட்டிகள், மழைக்கான உடைகளும் பூட்ஸ்களும் எங்களுக்குக் கொடுக்கின்றனர்.
மனித வியாதிகளால் கொரில்லாக்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடும்; ஆகவே அவற்றைப் பாதுகாப்பதற்காக, உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது தனக்கு தொற்றுவியாதி இருப்பதை அறிந்தவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று எங்களுடைய வழிகாட்டி விளக்குகிறார். “கொரில்லாக்கள் கிட்டத்தில இருக்கும்போது தும்மலோ இருமலோ வந்துச்சுன்னா, தயவுசெய்து வேறபக்கமா திரும்பி, உங்க வாயையும் மூக்கையும் மூடிக்கிறது நல்லது” என்று ஒரு வழிகாட்டி கூறுகிறார். “மூடுபனி நிறைந்த அதுங்களோட வீட்டுல நாம விருந்தாளிங்கதான், இத மறந்துடாதீங்க!”
அவற்றை தொடுமளவு அருகில்!
ஏறும் வழி இன்னுமதிக செங்குத்தாகிறது. 3,000 மீட்டர் உயரத்தை அடைகிறோம். காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மூச்சுவிடுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது; பாதைகளும் குறுகலாக இருக்கின்றன. ஆனால், பாசிகளும், சூரல்களும் (ferns), ஆர்கிட்டு மலர்களும் நிறைந்த, கிடைநிலையாக பரவியிருக்கும் கிளைகளையுடைய ஹஜீனியா மரத்தின் அழகை எங்களால் அனுபவிக்க முடிகிறது. அந்த மரம், அக்காட்டிற்கு பரதீஸைப்போன்ற அழகை கூட்டுகிறது.
புத்தம்புதிய உணவைத் தேடி கொரில்லாக்கள் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கிறபோதிலும், முந்தின நாள் அவற்றைக் கண்ட இடத்தை அந்த வழிகாட்டிகள் தேட ஆரம்பிக்கின்றனர். “அதோ பாருங்க!” என்று யாரோ ஒருவர் ஆச்சரியத்தோடு கூறுகிறார். மிருதுவான அந்தச் செடிகள் மத்தியில் வெள்ளிமுதுகு கொரில்லாவின் மெத்தென்ற படுக்கை அல்லது இருப்பிடம் இருக்கிறது.
“அவன் பெயர் யுமுகோமே” என்று அந்த வழிகாட்டி விளக்குகிறார். “ஆண் கொரில்லாவுக்கு ஏறக்குறைய 14 வயசாகும்போது, அதோட முதுகு வெள்ளியைப்போல வெள்ளை நிறமா மாறுது. அதுக்குப்பிறகு அதுதான் அந்தக் கும்பலின் தலைவன். வெள்ளிமுதுகு மட்டுமே எல்லா பெண் கொரில்லாக்களோடும் இணைசேரும். இணைசேர முயலும் இளம் கொரில்லாக்கள் உடனே ஒதுக்கப்படும்! இருந்தாலும், வெள்ளிமுதுகை ஒரு எதிரி கொன்னுட்டா அதோட எல்லாக் குட்டிகளையும்கூட அது கொன்னுடும். பிறகு, அந்தப் புதிய தலைவன் அதிகாரத்துக்கு வந்து, கும்பல்ல இருக்கிற பெண் கொரில்லாக்களோட சேர்ந்து குட்டிகளை பிறப்பிப்பான்.”
வழிகாட்டிகளைப் பின்தொடர்ந்து ஓர் அழகான மூங்கில் காட்டிற்குள் நாங்கள் நுழைகையில், “ஒரு கொரில்லா எத்தனை வயசு வரைக்கும் வாழும்?” என்று எங்களுடன் வந்தவர்களுள் ஒருவர் கேட்கிறார்.
“ஏறக்குறைய 40 வயசு வரைக்கும்” எனத் தாழ்ந்த குரலில் பதில் வருகிறது.
உறுமல் சத்தத்தைக் கேட்டு யாரோ ஒருவர், “உஷ், உஷ்! அது என்ன? ஒரு கொரில்லாவா?” என கிசுகிசுக்கிறார். இல்லை, ஒரு கொரில்லாவை சத்தம்போட வைப்பதற்காக வழிகாட்டிகளில் ஒருவர் கொரில்லாவைப்போல உறுமுகிறார். நாங்க ரொம்ப பக்கத்துல வந்துட்டோமோ!
உண்மையில், நாங்கள் இருந்த இடத்திலிருந்து ஐந்தே மீட்டர் தூரத்தில் ஏறக்குறைய 30 இருக்கின்றன! தரையிலே உட்காரும்படியும் அமைதியாக இருக்கும்படியும் சொல்கிறார்கள். “அதுங்க பக்கமா கையை நீட்டாதீங்க. நீங்க எதையோ வீசுறீங்கன்னு அதுங்க நெனச்சுக்கும். தயவுசெய்து கூச்சல் போடாதீங்க. போட்டோ எடுக்கணும்னா மெதுவாகவும் கவனமாகவும் போங்க; ஃபிளாஷ் லைட் போடாதீங்க” என ஒரு வழிகாட்டி கெஞ்சிக் கேட்கிறார்.
அவற்றை தொடுமளவு அருகில் இருக்கிறோம்! ஆனால் யாரும் ஆர்வத்தில் தொடப்போவதற்கு முன்பு, “அதுங்கள தொடாதீங்க!” என ஒரு வழிகாட்டி கிசுகிசுக்கிறார். அவர் சொல்லி முடிப்பதற்குள், எங்களை சோதிப்பதற்காக இரண்டு குட்டி கொரில்லாக்கள் எங்களிடம் நெருங்கி வருகின்றன. அந்த வழிகாட்டி, ஒரு சிறிய கிளையால் அவற்றிற்கு ஒரு அடி கொடுக்கிறார்; சிறு பிள்ளைகளைப்போல சண்டை போட்டுக்கொண்டே அந்த ஆர்வமுள்ள குட்டிகள் இறக்கத்தில் உருளுகின்றன. அவற்றின் விளையாட்டு அதிக முரட்டுத்தனமாக மாறும்போது “அம்மா” தலையிடுகிறாள்.
வெள்ளிமுதுகு கொஞ்ச தூரத்திலிருந்து எங்களைப் பார்த்து கொண்டிருக்கிறது. திடீரென்று, எங்களிடமாக நகர்ந்துவந்து நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் உட்கார்ந்து கொள்கிறது. அதன் உருவம் மிகப்பெரியது, ஏறக்குறைய 200 கிலோ இருக்கலாம்! எங்களைப் பார்க்கக்கூட நேரம் இல்லாததுபோல் சாப்பிடுவதில் ரொம்ப மும்முரமாக இருக்கிறது; ஆனாலும் எங்கள்மேல் ஒரு கண் வைத்திருக்கிறது. உண்மையில், சாப்பிடுவதுதான் கொரில்லாவின் முக்கியமான வேலை! ஒரு வெள்ளிமுதுகு, ஒருநாளில் ஏறக்குறைய 30 கிலோகிராம் வரை உணவு சாப்பிடலாம். காலையிலிருந்து மாலைவரை உணவு தேடுவதிலேயே அந்தக் கும்பலின் ஒவ்வொரு மிருகமும் மும்முரமாக இருக்கிறது. கண்டுபிடித்த ‘விருப்பமான பொருட்களுக்காக’ அவை சில சமயங்களில் சண்டை போட்டுக் கொள்வதைக்கூட ஒருவர் பார்க்கலாம்.
ராட்சத சூரியகாந்தி செடியின் உட்பகுதிதான் அவற்றிற்கு மிகவும் பிடித்த உணவு. காட்டு செலரி, சில செடிகளின் வேர்கள், மூங்கில் தளிர்கள் போன்றவற்றையும் அவை விரும்பி சாப்பிடுகின்றன. சில சமயங்களில், முட்செடிகள், பூனைக்காஞ்சொறிகள், கேலியம் போன்றவற்றின் பச்சை இலைகளையும், பல வேர்கள் மற்றும் கொடிகளையும் மூங்கில் தளிர்களில் சேர்த்து “பச்சடிகூட” தயாரிக்கின்றன. “பூனைக்காஞ்சொறிகளை பறித்து, சுத்தம் செய்யும்போது கொரில்லாக்களுக்கு மட்டும் ஏன் அரிக்கிறதில்ல?” என்று ஒருவர் கேட்கிறார். “அதுங்க உள்ளங்கையில கெட்டியான தோல் இருக்கு” என ஒரு வழிகாட்டி விளக்குகிறார்.
இந்த அமைதலான சூழ்நிலையை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்; திடீரென்று அந்தப் பெரிய ஆண் கொரில்லா தன் பின்னங்கால்களில் எழுந்துநின்று, தன் கைகளால் தன் மார்பில் அடித்துக்கொண்டு, உடம்பை சிலிர்க்க வைக்கும் பயங்கரமான சத்தம் போடுகிறது! வழிகாட்டிகளில் ஒருவரை நோக்கி வேகமாக ஓடி, அவருக்கு மிகவும் அருகில் வந்து திடீரென்று நின்றுவிடுகிறது. அந்த வழிகாட்டியை பயங்கரமாக முறைத்து பார்க்கிறது! ஆனால் எங்கள் வழிகாட்டி பயந்துவிடவில்லை. மாறாக, தரையில் உட்கார்ந்து, உறுமிக்கொண்டே, மெதுவாக பின்னோக்கி நகருகிறார். தன் பலத்தையும் வல்லமையையும் எங்களுக்குக் காட்ட வேண்டுமென்று வெள்ளிமுதுகு விரும்பியது போலிருந்தது. உண்மையில், அவன் விரும்பியதை சாதித்துவிட்டான்!
திரும்புவதற்கு தயாராகும்படி வழிகாட்டிகள் எங்களுக்கு சைகை காட்டுகின்றனர். இந்த அதிசயமான, அமைதலான மிருகங்களுடன், “மூடுபனியில்” விருந்தாளிகளாக நாங்கள் ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்கும் சற்று அதிகமான நேரத்தை செலவு செய்திருந்தோம். கொஞ்ச நேரமாக இருந்தாலும், அந்தச் சந்திப்பு எங்களால் மறக்கமுடியாத அனுபவங்களில் ஒன்று. மனிதனும் மிருகமும் தங்கள் மத்தியில் நிரந்தர சமாதானத்துடன் வாழப்போகும், வரவிருக்கும் புதிய உலகத்தைப் பற்றிய பைபிளின் வாக்குறுதிதான் அப்போது எங்கள் நினைவுக்கு வந்தது!—ஏசாயா 11:6-9.
[பக்கம் 18-ன் வரைப்படம்]
மலை கொரில்லாவின் பரப்பெல்லை
காங்கோ மக்கள் குடியரசு
கிவு ஏரி
உகாந்தா
ருவாண்டா
ஆப்பிரிக்கா
பெரிதாக்கப்பட்ட இடம்
[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.