எமது வாசகரிடமிருந்து
பிள்ளைகள் தனியே செல்கையில் “கூட்டைவிட்டு குஞ்சு பறக்கையில்” (ஜனவரி 22, 1998) என்ற தொடர் கட்டுரை ஆறுதலளிப்பதாய் இருந்தது. எங்களுடைய நான்கு பிள்ளைகளில் மூவர், மூன்று வருடங்களுக்கு முன்பு சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்து வீட்டை விட்டு சென்றனர். அவர்களைவிட்டு பிரியவேண்டிய காலம் வரும் என்ற எதிர்பார்ப்பில்தான் அவர்களை வளர்த்தேன். ஆனாலும் ஒரே சமயத்தில் மூன்று பேர் பிரிந்து செல்வார்கள் என்று கற்பனைக்கூட செய்யவில்லை! பெற்றோரின் உணர்ச்சிகளுக்கு உவாட்ச் டவர் சங்கம் காண்பிக்கும் அக்கறையை அதிகம் பாராட்டுகிறேன்.
எம். எஸ்., ஜப்பான்
தற்போது நானும் என் மனைவியும் வேறொரு மாநிலத்தில் விசேஷ பயனியர்களாக அல்லது முழுநேர ஊழியர்களாக சேவை செய்கிறோம். அதிக தொலைவில் இருந்தாலும் பெற்றோர்மீது அன்பும் கரிசனையும் வைத்திருக்கிறோம் என்பதை அவர்களுக்கு எவ்வாறு காண்பிக்கலாம் என நீங்கள் கொடுத்த ஆலோசனை அதிக உதவியாக இருந்தது.
எம். எம். எஸ்., பிரேஸில்
எனக்கு 11 வயசாகுது. வீட்டு வேலைகள் செய்றது பெரியவளாக வளருவதற்கு எனக்கு உதவியாக இருக்கும்னு நான் நெனச்சதே இல்லை. ஆனா, வித்தியாசமா சிந்திக்க இந்தக் கட்டுரைகள் எனக்கு உதவுச்சு. எங்களப் போன்ற இளவட்டங்கள் மீது நீங்க காண்பிக்கிற அக்கறைக்காக தேங்ஸ்.
டி. யூ., யுகோஸ்லாவியா
கொரில்லாக்கள் “மலை கொரில்லாக்களை சந்தித்தல்” (ஜனவரி 22, 1998) என்ற கட்டுரையை வாசித்து மகிழ்ந்தேன். ஒரு மனிதன் எந்த ஆபத்தும் இல்லாமல் கொரில்லாக்களுக்கு இவ்வளவு பக்கத்தில் செல்லமுடியும் என்று நினைத்துப் பார்த்ததே கிடையாது. சினிமாக்களில் அவற்றை எப்போதுமே பயங்கரமான மிருகங்களாகத்தான் காட்டுகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் அருமையான கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி.
ஆர். பி., வெனிசுவேலா
திக்குதல் “திக்குவாயோடு நான் எப்படி சமாளிக்கிறேன்” (ஜனவரி 22, 1998) என்ற கட்டுரைக்காக என் மனமார்ந்த நன்றி. நானும் அதேப் போன்ற பிரச்சினையை எதிர்ப்படுவதால் ஸ்வென் ஸீவர்ஸின் அனுபவம் அதிக உற்சாகம் அளித்தது. காலம் செல்லச்செல்ல இன்னும் சரளமாக பேசுவதற்கு தேவராஜ்ய ஊழியப் பள்ளி எனக்கு உதவியிருக்கிறது.
இ. இசெட். எஸ்., பிரேஸில்
உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றங்களில் ஒவ்வொரு வாரமும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்தப்படுகிறது.—ED.
அநேக பிரச்சினைகள் இருந்தபோதிலும் ஸ்வென் ஸீவர்ஸ் நம்பிக்கையான மனப்பான்மையைக் காண்பித்தது என்னைக் கவர்ந்தது. திக்குவாயினால் கஷ்டப்படும் ஒரு சகோதரர் எங்கள் சபையிலும் இருக்கிறார். இனிமேல் அவரோடு பேசும்போது அதிக மரியாதையோடும் பரிவோடும் பேசுவேன்.
கே. கே., ஜப்பான்
நானும் சிறுவனாக இருந்த சமயத்திலிருந்தே திக்குவாயனாக இருந்தேன். திக்குவாயுடைய ஒருவரைப் புரிந்துகொள்ள வேண்டுமே அல்லாமல் இரக்கப்பட வேண்டியதில்லை என்று நீங்கள் சொன்னது மிகவும் சரியானதே. இந்தக் கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி.
இ. சி., இத்தாலி
பெற்றோரின் எதிர்ப்பு ஜனவரி 22, 1998, பிரதி கையில் கிடைத்தவுடன் “இளைஞர் கேட்கின்றனர் . . . என் திருமணத்தை பெற்றோர் எதிர்த்தால் என்ன செய்வது?” என்ற கட்டுரையை வாசித்தேன். என் மகள் திருமணம் செய்து கொள்வதை நான் எதிர்த்தது தவறு என நினைத்திருந்தேன். ஆனால் நான் கவலைப்பட்ட எல்லா விஷயங்களைப் பற்றியும் அந்தக் கட்டுரை கூறியது. அதாவது, அவளுடைய இளம் வயது, அவளுடைய எதிர்கால துணைவரின் ஆள்தன்மை, அவிசுவாசியைத் திருமணம் செய்துகொள்வது, எய்ட்ஸ் வருவதற்கான சாத்தியம், சமூக வேறுபாடுகள் போன்றவை. இந்தக் கட்டுரை என் மகளின் இதயத்தை சென்றெட்ட வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.
என். பி., ஐக்கிய மாகாணங்கள்
எவ்வளவு அருமையான கட்டுரை! மிகவும் கடினமான ஒரு விஷயத்தை மிகவும் சாதுரியமாக கையாண்டிருந்தீர்கள். இந்த விஷயங்களில் வாசகர் திறந்த மனமுள்ளவராக இருப்பதற்கு உதவியாக அநேக விஷயங்களைச் சொல்லியிருந்தீர்கள்.
எஸ். சி., ஐக்கிய மாகாணங்கள்
எட்டு வருடங்களாக முழுநேர ஊழியனாக இருக்கிறேன். என் பெற்றோரும் கிறிஸ்தவர்களே. ஆனால் நான் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி அவர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உதவிகரமான இந்தத் தகவலுக்காக உங்களுக்கு நன்றி.
டி. சி. எஃப்., டான்ஜானியா