நிலைத்திருப்பதற்கான பிரெஞ்சு பைபிளின்—போராட்டம்
பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
உலகில் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் பிரெஞ்சு மொழியைப் பேசுகின்றனர். நீங்கள் அவர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும்கூட, மதசம்பந்தமான சுதந்திரத்தோடு ஓரளவு அதற்கிருந்த தொடர்பின் காரணமாக, நிலைத்திருப்பதற்கான பிரெஞ்சு பைபிளின் போராட்டத்தைக் குறித்து வாசிப்பது உங்கள் சிந்தையை கவரும். நூற்றாண்டுகளாக, அநேக பிரெஞ்சு பைபிள்கள், எதிரிகளின் கையிலும் வஞ்சகர்களின் கையிலும் கொடிய முடிவை அடைந்துள்ளன. மிரட்டல்களால் வரும் விளைவு என்னவாய் இருந்தாலும் சரி என்று, மொழிபெயர்ப்பாளர்களும் அச்சடிப்பவர்களும் இப்போராட்டத்தில் வெற்றிபெறுவதற்காக தங்களுடைய உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தார்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டின்போது, பிரெஞ்சு மொழி உட்பட, அநேக உள்ளூர் மொழிகளில் பைபிளின் ஒருசில பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு கிடைத்தன. கத்தோலிக்க சர்ச்சால் திருச்சபை முரண் கோட்பாட்டாளர்களென கருதப்பட்ட பிரிவுகள் இவற்றை பயன்படுத்துவதை வரவேற்றன. ஆனால் 19-ம் நூற்றாண்டு வரையிலுமாக பைபிள் பிரெஞ்சு மொழியில் பரவலாக விநியோகிக்கப்பட தொடங்கவில்லை. நூற்றாண்டுக்கணக்கிலான இந்த நீண்ட இடைவெளி பிரெஞ்சு பைபிள் நிலைத்திருப்பதற்கு எதிர்ப்பட்ட பயங்கரமான கஷ்டங்களை காட்டுகிறது.
பிரெஞ்சு மொழியில் இருந்த முதல் புத்தகங்களில் ஒன்று பொ.ச. 900-ல் வெளியிடப்பட்ட பைபிள் அகராதி ஆகும். கத்தோலிக்க சர்ச் பயன்படுத்திய மொழியாகிய லத்தீனில் வாசகர்கள் பைபிளை புரிந்துகொள்வதற்காக அது தயாரிக்கப்பட்டது. ஆனால், அச்சமயத்தில் பல கிளைமொழிகளைப் பயன்படுத்திய பாமர மக்களால் லத்தீன் இனிமேலும் பொதுவாக பேசப்படவில்லை. இவ்விதமாக கடவுளுடைய வார்த்தை கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. மாறாக அது, லத்தீன் மொழியைப் படிக்கத் தெரிந்தவர்களான குருமார்களுக்கே உரிய தனியுடைமையானது.
பொ.ச. 842-ல், பிரெஞ்சு மொழியில் முதல் அதிகாரப்பூர்வ அரசு ஆவணம் வெளிவந்தது. பெரும்பான்மையான மக்கள் இனிமேலும் லத்தீன் மொழியை பேசிக் கொண்டில்லை என்பதை இது மெளனமாக அங்கீகரித்தது. பிரான்ஸில் பொ.ச. 880 வாக்கில் உள்ளூர் மொழியில் மதசம்பந்தமான கவிதைகள் வெளிவரத் தொடங்கின. இருந்தபோதிலும், பைபிள் மொழிபெயர்ப்புகள் அடுத்த இரண்டு நூற்றாண்டுகள்வரை வெளிவர ஆரம்பிக்கவில்லை. நார்மன்களின் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 12-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட பைபிளின் சில பகுதிகளே வெகு பழமையான மொழிபெயர்ப்புகளில் ஒன்றாய் இருந்தன.
போராட்டம் தீவிரமாக துவங்குகிறது
பிரான்ஸிலுள்ள மக்கள் படிக்க முடிந்த விதத்தில் பரிசுத்த வேதாகமத்தை கிடைக்கச் செய்வதற்கு முதன்முதலாக விடாமுயற்சி செய்தவர், மத்திய பிரான்ஸிலுள்ள லையன்ஸைச் சேர்ந்த 12-ம் நூற்றாண்டு வியாபாரியான பீட்டர் வால்டோ என்பவரே. வால்டோ தென்கிழக்கு பிரான்ஸில் பேசப்பட்டுவந்த கிளைமொழியான ப்ராவென்காலில் பைபிளின் சில பகுதிகள் மொழிபெயர்க்கப்பட ஏற்பாடு செய்தார். 1179-ல், மூன்றாம் லேட்டரன் பேரவையில், மூன்றாம் போப் அலெக்சாண்டரிடம் தன்னுடைய மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஓரளவு பைபிள் பதிப்புகளை சமர்ப்பித்தார்.
சிறிது காலம் கழித்து வால்டோவையும் அவரைப் பின்பற்றியவர்களையும் திருச்சபை முரண் கோட்பாட்டாளர்கள் என்று சர்ச் கண்டனம் செய்தது; அவர் செய்வித்திருந்த மொழிபெயர்ப்புகளையும் மடத்துறவிகள் எரித்துப்போட்டனர். அதுமுதற்கொண்டு, கடவுளுடைய வார்த்தை பொதுமக்களின் கைகளில் கிடைக்கப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியையும் சர்ச் எதிர்த்தது.
பிரான்ஸுக்கு கிழக்கே மெட்ஸ் நகரத்தில் பைபிள்களை எரிப்பதன்மூலம் சர்ச் அதன் உபாயதந்திரத்தை 1211-ல் வெட்டவெளிச்சமாக்கிற்று. 1229-ல் டெளலோஸ் பேரவை, எந்தவொரு உள்ளூர் மொழியிலும் பாமர மக்கள் பைபிளை வைத்திருப்பதை வெளிப்படையாகவே தடைசெய்தது. இதைத் தொடர்ந்து 1234-ல் ஸ்பெய்னில் நடந்த டரகோனா பேரவையில், குருவர்க்கத்தினர் உட்பட எவருமே, எந்தவொரு லத்தீன் வழிமொழியிலும் (லத்தீனிலிருந்து தோன்றிய மொழி) பைபிள்களை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இத்தகைய கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும், முழுமையாக பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பைபிளானது 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்தது. பெயர் அறியப்படாத ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த பைபிளின் விநியோகம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்தச் சமயத்தில் பைபிள் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் கிடைப்பதாக இருக்கவில்லை. கைப்பட எழுதி எழுதியே நகல்கள் எடுக்கப்பட்டன. விலை உயர்வாகவும் எண்ணிக்கை குறைவாகவும் இருந்ததால் இந்த பைபிளை பெரும்பாலும் உயர்குடியினரும் குருவர்க்கத்தினரும் மட்டுமே சொந்தம் கொண்டாட முடிந்தது.
பைபிளை பாதுகாக்கும் பணி தொடங்குகிறது
சுமார் 1450-ல் யோஹான்னஸ் குட்டன்பர்க் கண்டுபிடித்த, அச்சு இயந்திரத்தாலும், அச்சுக்கோர்த்து அச்சடிப்பு முறையாலும், ஐரோப்பாவில் அச்சடிப்பு முறையில் ஏற்பட்ட புரட்சி பிரான்ஸிலும் பலமாக செல்வாக்கு செலுத்தியது. மூன்று பிரான்ஸ் நாட்டு நகரங்களான பாரிஸ், லயான்ஸ், ரீம்ஸ் ஆகியவை அச்சிடுவதற்கான முக்கிய மையங்களாயின; இவை பைபிளை பாதுகாப்பதில் பலத்த ஆதரவை அளித்தன. a
போராட்டத்தின் இந்தக் கட்டம்வரையாக, பிரெஞ்சு பைபிள் மொழிபெயர்ப்புகள் லத்தீன் வல்கேட்டை அடிப்படையாக கொண்டிருந்தன. லத்தீன் மூலப்பிரதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மீண்டும் மீண்டுமாக பிரதியெடுக்கப்பட்டதால் அது எண்ணற்ற பிழைகளுடன் கலப்படமாகிவிட்டிருந்தது; ஆனால் சர்ச் தொடர்ந்து வல்கேட்டையே ஒரே பிடியாக பிடித்துக்கொண்டிருந்தது. இருந்தபோதிலும் பிரெஞ்சு கத்தோலிக்கரான ஸாக் லஃபெவ்ரா டேட்டாப்லா பைபிள் பொதுமக்களுக்கு கிடைக்கும்படி செய்யவேண்டுமென தீர்மானித்தார். 1530-ல் அவர் வல்கேட்டை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார்; சமீபத்தில் கிடைக்கப்பெற்ற எபிரெய, கிரேக்க கையெழுத்துப் பிரதிகளை ஒப்பிடுவதன்மூலம் அவற்றிலுள்ள சில பிழைகளை திருத்தினார். சர்ச், அந்த மூலப்பிரதியில் புகுத்தியிருந்த குழப்பமூட்டும் கோட்பாட்டு விளக்கங்களையும்கூட அவர் நீக்கினார்.
லஃபெவ்ராவின் மொழிபெயர்ப்பு வெகு சீக்கிரத்தில் தாக்குதலுக்கு உள்ளானது. மொழிபெயர்ப்பின் சில பகுதிகள் பிரான்ஸுக்கு வெளியே அச்சடிக்கப்பட வேண்டியதாயிற்று. இவை சர்ச்சால் தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டன. சில காலங்களுக்கு லஃபெவ்ரா, பிரான்ஸுக்கு கிழக்கேயிருந்த, அப்போது பேரரசைச் சார்ந்த நகரமாயிருந்த ஸ்ட்ராஸ்பர்க்கில் தஞ்சம் புகவேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும், அவருடைய மொழிபெயர்ப்பு நிலைத்திருந்தது.
மூல மொழியிலுள்ள வாக்கியங்களின் அடிப்படையில் அமைந்த பிரெஞ்சு மொழியின் முதல் பைபிள் மொழிபெயர்ப்பு 1535-ல் பிரசுரிக்கப்பட்டது. சீர்திருத்தவாதியான ஜான் கால்வினின் உறவினரான பியர் ராபர் ஆலிவேட்டான் என்ற பிரெஞ்சு புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவரே அதன் மொழிபெயர்ப்பாளர். சர்ச் எதிர்த்ததன் காரணமாக, அதை பிரான்ஸில் அச்சிட முடியவில்லை; எனவே இந்த மொழிபெயர்ப்பு ஸ்விட்ஸர்லாந்திலுள்ள நியூஸாடெல் என்ற ஒரு புதிய புராட்டஸ்டண்ட் சமுதாயத்தில் அச்சிடப்பட்டது. ஆலிவேட்டானின் பிரெஞ்சு பைபிள் மொழிபெயர்ப்பு அதை பின்தொடர்ந்து வந்த அநேக திருத்திய பிரதிகளுக்கும் மற்ற மொழிகளில் பைபிளை மொழிபெயர்ப்பதற்கும் அடிப்படையாக அமைந்தது.
ஆபத்தான போராட்டம்
பிரான்ஸில், 1546-ல், ஏட்யன் டாலேயைப் போன்ற சில நெஞ்சுரமிக்க அச்சடிப்பாளர்கள் பைபிளை அச்சிட்டதற்காக கழுமரத்தில் எரிக்கப்பட்டனர். 1546-ல் டிரென்ட் பேரவை, வல்கேட்டின் “நம்பகத்தன்மையை” அதனுடைய பிழைகளின் மத்தியிலும் மீண்டும் உறுதிப்படுத்தியது; அது முதற்கொண்டு உள்ளூர் மொழிபெயர்ப்புகளுக்கு எதிராக சர்ச் அதிக உறுதியான நிலைநிற்கை எடுத்தது. 1612-ல் ஸ்பானிய கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை, உள்ளூர் மொழி பைபிள்களை அழிப்பதற்கு தீவிரமான முயற்சியில் ஈடுபட்டது.
துன்புறுத்துதல் சில சமயங்களில் புத்திக்கூர்மையான புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிநடத்தியது. “ஸிக்னன்” அல்லது “பன் கொண்டை” பைபிள்களும் தயாரிக்கப்பட்டன: இவை ஒரு பெண்ணின் கொண்டைக்குள் ஒளித்து வைக்குமளவுக்கு சிறியவையாக இருந்தன. மேலும், 1754-ல் எபிரெய, கிரேக்க வேதாகமங்களின் சாராம்சங்கள் வெறுமனே ஐந்து சென்டிமீட்டர் நீளமும் மூன்று சென்டிமீட்டர் அகலமுமுள்ள ஒரு புத்தகத்தில் அச்சிடப்பட்டன.
எதிர்த்தாக்குதல்கள்
இருப்பினும், காலப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. பைபிள், நூற்றாண்டுகளாக கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டபிறகு, அதன் சார்பாக எதிர்த்தாக்குதல்கள் செய்யப்பட்டன. பிரெஞ்சு புரட்சியைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட புதிய கருத்துக்களும், வணக்க சுதந்திரமும் சர்ச் எதிர்ப்பிற்கான மூலத்தையே தாக்கின. இவ்விதமாக, 1803-ல் புராட்டஸ்டண்ட் புதிய ஏற்பாடு பைபிள் ஒன்று, 125 ஆண்டுகளில் முதல் தடவையாக, பிரான்ஸில் அச்சடிக்கப்பட்டது!
பைபிள் சங்கங்களின் உதவியும் கிடைத்தது. “கூடியமட்டும் தாங்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் இந்தத் தெய்வீக பொக்கிஷத்தை பிரெஞ்சு மக்கள் பெற்றுக்கொள்வதற்காக” இங்கிலாந்திலுள்ள லண்டனில், 1792-ல் பிரெஞ்சு பைபிள் சங்கம் அமைக்கப்பட்டது. மற்ற பைபிள் சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் சேர்ந்துகொண்டன. பிரெஞ்சு மொழியில் பைபிளைத் தயாரித்து வெளியிடவேண்டுமென்ற அவர்களுடைய இலட்சியம் நிறைவேறியது.
போராட்டத்தின் இறுதிக்கட்டம்
கத்தோலிக்க சர்ச் தன்னுடைய உபாயத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை; ஆனால் அது தோல்வியைத் தழுவும் போராட்டத்தையே நடத்திக்கொண்டிருந்தது. 19-ம் நூற்றாண்டு முழுவதிலுமாக, உள்ளூர் மொழி பைபிள்களுக்கெதிராக கடுமையான ஆணைகளை போப்புகள் வரிசையாக பிறப்பித்தார்கள். கடைசியாக, 1897-ம் வருடத்திலும்கூட, பதிமூன்றாம் போப் லியோ இவ்வாறு மீண்டும் உறுதிசெய்தார்: “கத்தோலிக்கரல்லாத எந்த எழுத்தாளராலும் மொழிபெயர்க்கப்பட்ட பரிசுத்த வேதாகமத்தின் எல்லா மொழிபெயர்ப்புகளும், அது எதுவாயினும், எந்தப் பொதுவான மொழியிலிருந்தாலும், அவை தடைவிதிக்கப்பட்டிருக்கின்றன; குறிப்பாக ரோமிலுள்ள போப்பால் அநேக சந்தர்ப்பங்களில் கண்டனம் செய்யப்பட்ட பைபிள் சங்கங்களினால் பிரசுரிக்கப்பட்டவை தடை செய்யப்பட்டிருக்கின்றன.”
இருந்தபோதிலும், பைபிள் சங்கங்களினால் பிரசுரிக்கப்பட்ட புராட்டஸ்டண்ட் பைபிள்கள் குறைந்த விலையில் கிடைத்ததால் கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்க கல்விமான்களை பிரெஞ்சு மொழி பைபிளை மொழிபெயர்க்க அனுமதித்தது. முதலில் ஏழு தொகுதிகளாகவும் (1894-லிருந்து 1904-வரை) பின்பு ஒரே தொகுதியாகவும் (1904-ல்) வெளியிடப்பட்ட அகஸ்டின் கிராம்பனின் மொழிபெயர்ப்பே மூல வாக்கியங்களின் அடிப்படையிலிருந்த முதல் பிரெஞ்சு கத்தோலிக்க பைபிள் மொழிபெயர்ப்பாகும். இதில், ஆராய்ச்சி செய்யப்பட்ட ஏராளமான அடிக்குறிப்புகளுள்ளதும், பிரெஞ்சு மொழியில் கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதன் எழுத்து வடிவத்தை கிராம்பன் விரிவாக பயன்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கவையாகும்.
1943-ல் போப்பிடமிருந்து வந்த டிவினோ அப்லான்டே ஸ்பிரிடூ என்ற சுற்றுக்கடிதத்தில், மாறுபட்ட கருத்தில், உள்ளூர் மொழிகளில் பைபிளை மொழிபெயர்ப்பதற்கான சட்டங்களை வாடிகன் கடைசியாக ஏற்படுத்தியது. அது முதற்கொண்டு பிரபலமான ஜெரூசலம் பைபிள் உட்பட அநேக கத்தோலிக்க மொழிபெயர்ப்புகள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன; இது முதலில் பிரெஞ்சு மொழியில் பிரசுரிக்கப்பட்டு பின்பு ஆங்கிலம் உட்பட மற்ற அநேக மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
உலக முழுவதிலுமுள்ள பிரெஞ்சு மொழி பேசும் மக்களுக்கு உதவிசெய்திருக்கும் ஒரு பைபிளானது பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பின் பிரெஞ்சு பதிப்பாகும். அதனுடைய முழுமையான வடிவில் முதலில் 1974-ல் பிரசுரிக்கப்பட்டு, பின்பு 1995-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது. இதுவரையாக அநேக மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் புதிய உலக மொழிபெயர்ப்பு, யெகோவா என்ற அவருடைய பெயரை எபிரெய வேதாகமத்திலும், கிரேக்க வேதாகமத்தின் பொருத்தமான இடங்களிலும் மீண்டும் இடம்பெறச் செய்வதன் மூலமாக பைபிளின் நூலாசிரியருக்கு புகழ் சேர்க்கிறது. இன்று வரையில், 50 லட்சத்துக்கும் அதிகமான பிரெஞ்சு பதிப்புகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கிடமின்றி, பிரெஞ்சு மொழியில் நிலைத்திருப்பதற்கான தன்னுடைய போராட்டத்தில் பைபிள் வெற்றி பெற்றுள்ளது.
[அடிக்குறிப்பு]
a ஸ்பானிய கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை 1552-ல் வெளிநாட்டு பைபிள்களை ஒன்றுதிரட்டுமாறு கட்டளையிட்டபோது, பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களில் சுமார் 90 சதவீதமானவை பிரான்ஸில் அச்சிடப்பட்டவையாக இருக்குமளவுக்கு அங்கு அச்சடிப்பு வெற்றிகரமாயிருந்தது!
[பக்கம் 16-ன் படம்]
லஃபெவ்ரா டேட்டாப்லாவின் 1530-ம் ஆண்டைய பைபிள்
[பக்கம் 16-ன் படம்]
ஆலிவேட்டானின் 1535-ம் ஆண்டைய பைபிள்
[பக்கம் 17-ன் படம்]
‘13-ம் நூற்றாண்டு பைபிளின்’ ஓர் அரிய பிரதி
[பக்கம் 17-ன் படம்]
பைபிள்கள்: Bibliothèque Nationale de France