யெகோவா—எங்கள் வழியை செம்மைப்படுத்தினார்
ஸ்விட்ஸர்லாந்து, ஸுக் மாகாணத்திலுள்ள க்காம் என்ற நகருக்கு அருகில் நான் 1924-ல் பிறந்தேன். பத்து பையன்களும் மூன்று பெண்களும் உட்பட எங்கள் பெற்றோருக்கு 13 பிள்ளைகள் இருந்தனர். நான்தான் மூத்தவன். மிகவும் இளம் பிராயத்திலேயே இரண்டு பையன்கள் இறந்துவிட்டனர். மீதமிருந்த நாங்கள் அனைவரும் மதப்பற்றுள்ள கத்தோலிக்கர்களாக ஒரு பண்ணையில் வளர்ந்து வந்தோம். அது பெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட சமயமாக இருந்தது.
அப்பா நேர்மையான, நல்ல குணமுள்ள மனிதராக இருந்தார்; ஆனால் அவ்வப்போது அவருக்கு கடுங்கோபம் ஏற்படுவதுண்டு. ஒரு சந்தர்ப்பத்தில், அம்மா தன் பொறாமையால் அப்பாவை நியாயமற்ற விதத்தில் நிந்தித்தபோது, அவர் அம்மாவை செமத்தியாக அடித்தார். அவருடைய உண்மைத்தன்மையைப் பற்றி சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லாதபோதிலும், அக்கம்பக்கத்திலுள்ள பெண்களிடம் அப்பா அளவளாவுவதை அம்மாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மத்தியிலிருந்த இந்தச் சூழ்நிலை எனக்கு அதிக வருத்தத்தைக் கொடுத்தது.
அம்மா மூடநம்பிக்கையில் ஊறிப்போயிருந்தார். மிகவும் சிறிய நிகழ்ச்சியையும்கூட “உத்தரிக்கும் ஸ்தலத்திலிருந்த ஏழை ஆத்துமாக்கள்” இடமிருந்து வந்த அடையாளம் என சொல்லிக்கொள்வார். அப்படிப்பட்ட ஏமாளித்தனத்தை நான் வெறுத்தேன். ஆனால் அவருடைய பொய்மத எண்ணங்களை ஆதரித்தப் பிரசுரங்களை கொடுப்பதன்மூலம் பாதிரியார்கள் அவருடைய மூடநம்பிக்கைகளை வளர்த்தனர்.
எனக்குக் கேள்விகள் இருந்தன
என் சிறுவயது முதற்கொண்டே கடவுளைப் பற்றியும் மனிதனுடைய விதியைப் பற்றியுமான கேள்விகள் என் மனதை ஆக்கிரமித்திருந்தன. நியாயமான முடிவுகளுக்கு வர நான் முயற்சித்தேன்; ஆனால் அத்தனை அநேக முரண்பாடுகள் இருந்தன! புனிதர்கள், அற்புதங்கள், இன்னும் இது போன்றவற்றைப் பற்றிய கத்தோலிக்க பிரசுரங்களை நான் வாசித்தேன். என்றபோதிலும், இவை என் அறிவுப்பசியை ஆற்றவில்லை. இருட்டில் தடவிக்கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன்.
எனக்கிருந்த கேள்விகளைப் பற்றி அதிகம் சிந்திக்கக்கூடாது என்று உள்ளூர் பாதிரி அறிவுரை கூறினார். எல்லாவற்றையுமே புரிந்துகொள்ள நினைப்பது பெருமையின் அடையாளம் என்றும் பெருமையுள்ளவர்களை கடவுள் எதிர்க்கிறார் என்றும் அவர் கூறினார். தங்கள் பாவங்களை அறிக்கையிடாமல் இறந்துவிட்டவர்களை கடவுள் நித்திய காலத்திற்கும் எரிநரகத்தில் வாதிப்பார் என்ற போதகமே எனக்கு அதிக வெறுப்பை ஏற்படுத்தியது. பூமியிலிருக்கும் பெரும்பாலான மனிதர்கள் நித்திய காலமாக வாதிக்கப்படுவதை இது அர்த்தப்படுத்துவதால், ‘கடவுளுடைய அன்போடு இது எப்படி ஒத்துப்போக முடியும்?’ என்று அடிக்கடி யோசித்ததுண்டு.
கத்தோலிக்க பழக்கமாகிய பாவ அறிக்கையைப் பற்றியும் எனக்கு சந்தேகமிருந்தது. ஒழுக்கமற்ற எண்ணங்கள் மிகப்பெரிய பாவம் என்றும் அவற்றை ஒரு பாதிரியிடம் பாவ அறிக்கை செய்யவேண்டும் என்றும் கத்தோலிக்கப் பள்ளியில் கற்பிக்கப்பட்டபோது நான் மிகவும் பயந்துபோனேன். ‘எல்லாவற்றையும் நான் ஞாபகமாக அறிக்கையிட்டேனா? அல்லது என் பாவ அறிக்கை செல்லாததாகி, பாவங்கள் மன்னிக்கப்படாமல் போகும்படி எதையாவது மறந்துவிட்டேனா?’ என்று நான் நினைப்பேன். இப்படியாக, கடவுளுடைய இரக்கத்தையும் மன்னிப்பதற்கான அவருடைய விருப்பத்தையும் பற்றி என்னுடைய இருதயத்தில் சந்தேகங்கள் தோன்ற ஆரம்பித்தன.
என்னை மிகவும் சோர்வடையச் செய்த எண்ணங்களுக்கு எதிராக ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு போராட வேண்டியிருந்தது. கடவுள் மேல் வைத்த எல்லா நம்பிக்கைக்கும் ஒரு முழுக்குப்போட நினைத்தேன். ஆனால், ‘நான் பொறுமையாக இருந்தால், சரியான வழியை நிச்சயமாய் கண்டுபிடிப்பேன்’ என்றும் பின்னர் நினைத்தேன். காலப்போக்கில் கடவுள் இருக்கிறார் என்பதில் என்னுடைய நம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன்; ஆனால் என்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றிய சந்தேகத்தால் சூழப்பட்டேன்.
ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்பட்டு வந்ததன் விளைவாக, அப்போஸ்தலன் பேதுருவிடம், “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்” என்று இயேசு கிறிஸ்து சொன்னபோது ரோமன் கத்தோலிக்க சர்ச்சைத்தான் தன் மனதில் கொண்டிருந்தார் என்று நம்பினேன். (மத்தேயு 16:18) கடைசியில் சர்ச்சிலுள்ள நல்ல அம்சங்கள் வெற்றியடையும் என்று நம்ப ஆரம்பித்ததால், அந்த நோக்கத்தை மனதிற்கொண்டு சர்ச்சுடன் ஒத்துழைக்க விரும்பினேன்.
திருமணமும் குடும்பமும்
குடும்பத்தில் மூத்தவனாக இருந்ததால், என்னுடைய அடுத்த தம்பி பொறுப்பை ஏற்கும்வரை பண்ணையில் அப்பாவோடு சேர்ந்து வேலை செய்தேன். பிறகு, ஒரு கத்தோலிக்க வேளாண்மை கல்லூரிக்கு சென்றேன்; அங்கே முதுகலைப் பட்டத்தைப் பெற்றேன். அதற்குப் பிறகு ஒரு வாழ்க்கைத் துணையை தேட ஆரம்பித்தேன்.
என்னுடைய தங்கைகளில் ஒருத்தி மூலம் மரீயா எனக்கு அறிமுகமானாள். நித்திய ஜீவனுக்காக சேர்ந்து உழைக்கக்கூடிய ஒரு கணவனைப் பெற அவள் ஜெபம் செய்திருந்தாள் என்பதை அறிந்தேன். எங்கள் திருமண அறிவிப்பில் நாங்கள் இவ்வாறு எழுதினோம்: “அன்பால் இணைக்கப்பட்டவர்களாக நாங்கள் சந்தோஷத்தைத் தேடுகிறோம்; எங்கள் கண்களை கடவுள்மீது ஊன்ற வைக்கிறோம். ஜீவவழியே எங்கள் பாதை, நித்திய மகிழ்ச்சியே எங்கள் இலக்கு.” ஷூரிக் அருகிலுள்ள ஃபார் கான்வென்டில் ஜூன் 26, 1958-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
மரீயாவும் நானும் ஒரேமாதிரியான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். ஏழு பிள்ளைகளில் மூத்தவளாக, ஆழ்ந்த மதப்பற்றுள்ள குடும்பத்திலிருந்து வந்தவள் அவள். பண்ணை வேலை, பள்ளிவேலை, சர்ச்சுக்குப் போவது போன்றவற்றில் அவர்கள் எல்லாரும் சுறுசுறுப்பாக இருந்ததால், விளையாடுவதற்கு சொற்ப நேரமே இருந்தது. எங்கள் குடும்ப வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் அவ்வளவு சுலபமானவையாக இருக்கவில்லை. மத விஷயங்களில் எனக்கு அநேக சந்தேகங்கள் இருந்ததால், தான் சரியான ஆளைத்தான் திருமணம் செய்திருக்கிறாளா என்று மரீயா சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டாள். சர்ச் போதகங்களை அல்லது யுத்தங்கள், சிலுவைப் போர்கள், ஒடுக்குமுறை விசாரணை போன்றவற்றை ஆதரிக்கும் அதன் செயல்களை சந்தேகிக்க அவள் மறுத்தாள். என்றபோதிலும், நாங்கள் இருவரும் கடவுளில் எங்கள் நம்பிக்கையை வைத்து, முடிந்தவரைக்கும் அவருடைய சித்தத்தை செய்ய முயன்றால் அவர் எங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதில் உறுதியாய் இருந்தோம்.
1959-ல், கிழக்கு ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஹாம்புர்குக்கு அருகிலிருக்கும் ஒரு பண்ணையை நாங்கள் குத்தகைக்கு எடுத்தோம். 31 வருடங்களுக்கு இதுவே எங்கள் வீடாக இருந்தது. எங்கள் முதல் மகனான யோஸெஃப் மார்ச் 6, 1960-ல் பிறந்தான். அவனுக்குப் பிறகு, ஆறு தம்பிகளும் ராயேல் என்ற ஒரு தங்கையும் பிறந்தார்கள். ஆழமாக பதிந்த நியமங்களுக்கு உண்மையுள்ளவளாக, மரீயா தன்னை ஒரு நியாயமான, பட்சபாதமில்லாத தாயாக நிரூபித்திருக்கிறாள். குடும்பத்திற்கு அவள் உண்மையில் ஓர் ஆசீர்வாதமே.
பைபிள் சத்தியத்தைத் தேடுதல்
சிறுக சிறுக எங்கள் மத அறியாமை அதிகரித்து, சகிக்க முடியாததானது. 1960-களின் முடிவில், கத்தோலிக்க மக்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த சொற்பொழிவுகளைக் கேட்க சென்றோம்; ஆனால் இன்னும் அதிக குழப்பம் அடைந்தவர்களாகவே நாங்கள் வீடு திரும்பினோம். பேச்சாளர்கள், எந்த வேதப்பூர்வ அத்தாட்சியும் இல்லாமல், தங்கள் சொந்த கருத்துக்களையே விளக்கினார்கள். 1970-களின் ஆரம்பத்தில், “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். . . . கேளுங்கள், அப்பொழுது . . . பெற்றுக்கொள்வீர்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன்.—யோவான் 16:23, 24.
கடவுளுடைய வார்த்தையிலுள்ள மேற்கண்ட வாக்குறுதி பின்வருமாறு தொடர்ந்து ஜெபம் செய்ய என்னை வழிநடத்தியது: “பிதாவே, கத்தோலிக்க சர்ச்சுதான் உண்மையான மதம் என்றால் தயவுசெய்து சந்தேகத்திற்கு இடமில்லாதபடி எனக்குத் தெளிவுபடுத்தும். ஆனால் அது பொய்யாக இருந்தால் அதையும்கூட அதே விதமாக காண்பியும்; அதை நான் எல்லாரிடமும் அறிவிப்பேன்.” “கேட்டுக்கொண்டே இருங்கள்” என்று மலைப் பிரசங்கத்தில் இயேசு சொன்ன அறிவுரையைப் பின்பற்றும் வண்ணம், மறுபடியும் மறுபடியுமாக மன்றாடினேன்.—மத்தேயு 7:7, 8, NW.
முக்கியமாக, 1960-களில் கத்தோலிக்க போதகங்களில் செய்யப்பட்ட மாற்றங்களான “புனிதர்கள்” வணக்கம், வெள்ளிக்கிழமைகளில் இறைச்சி சாப்பிடுதல், இன்னும் பலவற்றைப் பற்றி மரீயாவுடனான என் சம்பாஷணைகள், கடைசியில் அவளுக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தின. 1970-ன் வசந்தகாலத்தில் திருப்பலி பூசைக்கு சென்றிருந்தபோது ஒருசமயம், “கடவுளே, நித்திய ஜீவனுக்கான வழியை எங்களுக்குக் காண்பியும். சரியான வழி எது என்று இதற்குமேலும் எங்களுக்குத் தெரியவில்லை. அது எதுவானாலும் அதற்கு அடிபணிகிறேன்; ஆனால் எங்கள் முழுக் குடும்பத்திற்கும் சரியான வழியை காண்பித்தருளும்” என்று ஜெபம் செய்தாள். எங்கள் ஜெபங்கள் கேட்கப்பட்டன என்று நாங்கள் உணரும்வரை, அவளுடைய ஜெபத்தைப் பற்றி எனக்கோ என்னுடைய ஜெபத்தைப் பற்றி அவளுக்கோ தெரியாது.
பைபிள் சத்தியத்தைக் கண்டடைதல்
1970-ன் ஆரம்பத்தில், ஒரு ஞாயிறு காலை சர்ச்சிலிருந்து நாங்கள் வீடு திரும்பிய பிறகு, யாரோ கதவை தட்டினார்கள். தன் பத்து வயது பையனுடன் வந்த ஒரு மனிதர் தன்னை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஒரு பைபிள் கலந்தாலோசிப்பிற்கு நான் ஒப்புக்கொண்டேன். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நான் கேள்விப்பட்டவற்றிலிருந்து, அவர்கள் காரியங்களை முழுமையாக அறிந்திருக்கவில்லை என நம்பினபடியால், அவர்களுடைய நம்பிக்கை தவறென வெகு சுலபமாக நிரூபித்துவிட முடியும் என்று நினைத்தேன்.
எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் எங்கள் சம்பாஷணை இரண்டு மணிநேரம் நீடித்தது; அடுத்த ஞாயிறும் அவ்வாறே கழிந்தது. மூன்றாவது வாரமும் கலந்தாலோசிப்புக்கு நான் ஆவலோடு காத்திருந்தேன், ஆனால் அந்த சாட்சி வரவில்லை. ஒரு பிரயோஜனமும் இல்லையென அவர் நினைத்திருப்பார் என்று மரீயா கூறினாள். இரண்டு வாரங்கள் கழித்து அவர் மறுபடியும் வந்தபோது மகிழ்ச்சியடைந்தேன். உடனடியாக, “35 வருடங்களாக நான் நரகத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். அன்பாகவே இருக்கும் கடவுள், இப்படியொரு கொடூரமான விதத்தில் மக்களை வதைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்று கூறினேன்.
“நீங்கள் சொல்வது சரியே. நரகம் வாதிப்பதற்கான ஒரு இடமென்று பைபிள் சொல்லவில்லை” என்று அந்த சாட்சி கூறினார். கத்தோலிக்க பைபிளில் அடிக்கடி “நரகம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைக்கான எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளான “ஷியோல்” மற்றும் “ஹேடீஸ்,” என்பவை வெறுமனே பொது பிரேதக்குழியைத்தான் குறிக்கின்றன என்று எனக்குக் காண்பித்தார். (ஆதியாகமம் 37:35; யோபு 14:13; அப்போஸ்தலர் 2:31) மேலுமாக, மனித ஆத்துமா சாகும் என்பதையும் பாவத்திற்கான தண்டனை வாதனை அல்ல மரணமே என்பதையும் நிரூபிக்கும் வசனங்களை அவர் வாசித்துக் காண்பித்தார். (எசேக்கியேல் 18:4; ரோமர் 6:23) என் வாழ்நாள் காலம் முழுவதும் மதப் பொய்களால் குருடாக்கப்பட்டிருந்ததை அப்போது என்னால் தெளிவாகக் காண முடிந்தது. சர்ச்சின் மற்ற போதகங்களும் பொய்தானோ என்று இப்போது சிந்திக்க ஆரம்பித்தேன்.
இனிமேலும் நான் ஏமாற விரும்பவில்லை; ஆகவே கத்தோலிக்க பைபிள் அகராதி ஒன்றையும் போப்புகளின் சரித்திரம் பற்றிய ஐந்து-தொகுதி புத்தகங்களையும் வாங்கினேன். இந்தப் பிரசுரங்கள் அச்சடிப்பு உரிமம் (imprimatur) பெற்றிருந்தன; அதாவது, இவற்றை அச்சடிப்பதற்கு ரோமன் கத்தோலிக்க பிஷப் அதிகாரக் குழு ஒப்புதல் அளித்திருந்தது. போப்புகளின் சரித்திரத்தை வாசிப்பது, அவர்களில் சிலர் உலகத்தின் மிகமோசமான குற்றவாளிகளுள் ஒருவராக இருந்ததை உணரச் செய்தது! மேலும், திரித்துவம், நரக அக்கினி, உத்தரிக்கும் ஸ்தலம், சர்ச்சின் இன்னும் பல போதகங்கள் பைபிளில் சார்ந்தில்லை என்பதை பைபிள் அகராதியை சோதித்துப் பார்ப்பதன்மூலம் கற்றுக்கொண்டேன்.
சாட்சிகளுடன் பைபிளை படிப்பதற்கு இப்போது நான் தயாராக இருந்தேன். ஆரம்பத்தில், மரியாதைக்காக மரீயாவும் பைபிள் படிப்பில் உட்கார்ந்தாள்; ஆனால் சீக்கிரத்தில் அவள் கற்பதை ஏற்றுக்கொண்டாள். நான்கு மாதங்கள் கழித்து நான் கத்தோலிக்க சர்ச்சிலிருந்து விலகிக்கொண்டு, எங்கள் பிள்ளைகள் இனிமேலும் மத வகுப்புகளுக்கு வரமாட்டார்கள் என்பதை பாதிரியிடம் தெரிவித்து விட்டேன். அடுத்த ஞாயிறு, அந்தப் பாதிரி தன் சர்ச்சிலுள்ளவர்களிடம் யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்கும்படி எச்சரித்தார். பைபிளை உபயோகித்து என் நம்பிக்கைகளை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கும்படி கேட்டேன்; ஆனால் அப்படிப்பட்ட ஒரு கலந்தாலோசிப்பிற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
அதற்குப் பிறகு நாங்கள் வேகமாக முன்னேறினோம். கடைசியாக நானும் என் மனைவியும், டிசம்பர் 13, 1970-ல் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் யெகோவாவுக்கு எங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினோம். ஒரு வருடம் கழித்து, கிறிஸ்தவ நடுநிலைமை காரணமாக நான் இரண்டு மாதங்கள் சிறைக்குக்கூட செல்லவேண்டியிருந்தது. (ஏசாயா 2:4) அந்தக் குறுகிய காலத்திற்கும்கூட, எட்டு பிள்ளைகளுடன் என் மனைவியை விட்டுப் பிரிந்திருப்பது எனக்குக் கடினமாக இருந்தது. கடைசிப் பிள்ளைக்கு 4 மாதமும் முதல் பிள்ளைக்கு 12 வயதும்தான் ஆகியிருந்தது. அதோடுகூட, கவனித்துக் கொள்வதற்கு எங்களுக்கு ஒரு பண்ணையும் ஆடுமாடுகளும் இருந்தன. ஆனால் யெகோவாவுடைய உதவியுடன், நான் இல்லாமலேயே அவர்களால் நல்லவிதமாக சமாளிக்க முடிந்தது.
ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைத்தல்
வியாதியாய் இருந்தாலொழிய எங்கள் குடும்பத்திலுள்ள எவரும் ஒரு சபைக் கூட்டத்தையும் தவறவிட்டதில்லை. பெரிய மாநாடுகளில் ஒன்றையும் தவறவிடாதபடிக்கு எங்கள் வேலையை அதற்கேற்ப ஒழுங்குபடுத்திக் கொண்டோம். சீக்கிரத்திலேயே, எங்கள் பிள்ளைகள், கிறிஸ்தவக் கூட்டங்களில் எதைப் பார்த்தார்களோ அதையே மேல் மாடியில் தங்கள் விளையாட்டில் நடித்துப் பார்த்தனர். உதாரணமாக, மாணாக்கர் பேச்சை அவர்கள் ஒருவருக்கொருவர் நியமித்து, நடிப்புகளை செய்து பார்ப்பார்கள். சந்தோஷகரமாக, எங்களுடைய ஆவிக்குரிய போதகத்திற்கு அவர்கள் எல்லாரும் நல்லவிதமாக பிரதிபலித்தார்கள். மூத்த பிள்ளையிலிருந்து இளைய பிள்ளைவரை, எட்டு பேரும் வரிசையாக உட்கார்ந்து கவனமாக கேட்டுக்கொண்டிருக்கையில், ஒரு வட்டார மாநாட்டில் நானும் என் மனைவியும் பேட்டி காணப்பட்டதை என்னால் சந்தோஷமாக நினைவுகூர முடிகிறது.
பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்ப்பதே எங்களுடைய முக்கிய அக்கறையாக இருந்தது. (எபேசியர் 6:4) எங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை விற்றுவிட முடிவுசெய்தோம்; வைராக்கியமுள்ள உடன் கிறிஸ்தவர்களின் அனுபவங்களிலிருந்தும் உற்சாகத்திலிருந்தும் எங்கள் பிள்ளைகள் பயனடையும்படி அவர்களை எங்கள் வீட்டிற்கு அடிக்கடி அழைப்போம். யோசனையற்ற பேச்சையும் மற்றவர்களைக் குறைகாண்பதையும் தவிர்க்க நாங்கள் கவனமாய் இருந்தோம். யாராவது ஒருவர் தவறு செய்துவிட்டால், அதை பேசித் தீர்த்து, பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடினோம். ஒரு சூழ்நிலையை நியாயமாகவும் சரியாகவும் சீர்தூக்கிப்பார்க்க எங்கள் பிள்ளைகளுக்கு உதவ முயற்சி செய்தோம். மற்ற இளைஞர்களோடு ஒப்பிடுவதை நாங்கள் கவனமாக தவிர்த்தோம். தங்கள் செயல்களுக்கான பின்விளைவுகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க அல்லது செல்லம் கொடுக்க பெற்றோர் முயலாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்தோம்.—நீதிமொழிகள் 29:21.
என்றபோதிலும், எங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் பிரச்சினைகளும் இருந்தன. உதாரணமாக, ஒருசமயம் பணம் கொடுக்காமல் ஒரு கடையிலிருந்து மிட்டாய் எடுக்கும்படி பிள்ளைகளின் பள்ளித்தோழர்கள் அவர்களைத் தூண்டினார்கள். நடந்ததை நாங்கள் அறிந்தபோது, எங்கள் பிள்ளைகளை அந்தக் கடைக்கு திரும்ப அனுப்பி, அதற்குரிய பணம் கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்கும்படி செய்தோம். அது அவர்களுக்கு அதிக சங்கடமாக இருந்தது, ஆனால் நேர்மையில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டார்கள்.
பிரசங்க வேலையில் எங்களோடு சேர்ந்துகொள்ளும்படி பிள்ளைகளை வெறுமனே கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நாங்கள் முன்மாதிரி வைத்தோம். பண்ணையில் செய்வதற்கிருந்த வேலையைவிட கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்ததை எங்கள் பிள்ளைகள் கவனித்தார்கள். எங்களுடைய எட்டுப் பிள்ளைகளையும் யெகோவாவுடைய வழியில் வளர்ப்பதற்கான எங்கள் முயற்சிகள் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்பட்டன.
ஒரு கிறிஸ்தவ மூப்பராக இருக்கும் எங்கள் மூத்த மகனான யோஸெஃப், யெகோவாவின் சாட்சிகளுடைய ஸ்விட்ஸர்லாந்து கிளைக் காரியாலயத்தில் தன் மனைவியுடன் பல வருடங்கள் சேவைசெய்தார். தோமஸ் ஒரு மூப்பர்; அவரும் அவர் மனைவியும் பயனியர்களாகவும்—முழுநேர ஊழியர்கள் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர்—சேவிக்கின்றனர். முன்னணி சைக்கிள் வீரனாக இருந்ததை விட்டுவிட்ட தானியல் ஒரு மூப்பராகவும் அவரும் அவர் மனைவியும் மற்றொரு சபையில் பயனியர்களாகவும் இருக்கின்றனர். பெனோவும் அவர் மனைவியும் மத்திய ஸ்விட்ஸர்லாந்தில் சுறுசுறுப்புள்ள ஊழியர்களாக இருக்கின்றனர். எங்கள் ஐந்தாவது பையனான கிறிஸ்ட்யன், நாங்கள் செல்லும் சபையில் ஒரு மூப்பராக இருக்கிறார். அவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஃபிரான்ட்ஸ், பெர்ன்னிலுள்ள ஒரு சபையில் பயனியராகவும் மூப்பராகவும் இருக்கிறார்; முன்பு ஸ்விட்ஸர்லாந்து கிளைக் காரியாலயத்தில் சேவைசெய்த உர்ஸ் திருமணமாகி, பயனியராக சேவிக்கிறார். எங்கள் ஒரே மகளான ராயேலும் அவர் கணவனும் பல வருடங்களாக பயனியர்களாய் இருக்கின்றனர்.
என் பிள்ளைகளுடைய முன்மாதிரியைப் பின்பற்றி, ஜூன் 1990-ல் உலகப்பிரகாரமான வேலையிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு நானும் பயனியரானேன். என் வாழ்க்கையையும் என் குடும்பத்தினரின் வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்க்கையில், யெகோவா எங்கள் வழியை செம்மைப்படுத்தி, “இடங்கொள்ளாமற்போகுமட்டும்” ஆசீர்வாதங்களை பொழிந்திருக்கிறார் என்று நான் நிச்சயமாக சொல்லமுடியும்.—மல்கியா 3:10.
என் அருமையான மனைவிக்குப் பிடித்த பைபிள் வசனம்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22) எனக்குப் பிடித்த வசனமானது: “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.” (சங்கீதம் 37:4) இந்த அருமையான விவரிப்புகளின் உண்மையை நாங்கள் இருவருமே அனுபவித்திருக்கிறோம். எங்கள் பிள்ளைகளோடும் அவர்கள் குடும்பங்களோடும் சேர்ந்து, நம் கடவுளாகிய யெகோவாவை நித்திய காலத்திற்கும் மகிமைப்படுத்துவதே எங்கள் இலக்காகும்.—யோஸெஃப் ஹெக்லீ சொன்னபடி.