போரையே விஞ்சிடும் அவல மரணங்கள்
இருபத்து மூன்று வயது மெர்லினின் எடை குறைந்து, அவள் அதிக அசதியாக உணர்ந்தபோது, தான் கர்ப்பமாயிருப்பதால்தான் அவ்வாறிருக்கிறது என நினைத்தாள். அவளுக்கு இருமலும்கூட தொடர்ச்சியாக இருந்தது; அதை அவளுடைய டாக்டரிடம் தெரிவித்தாள். அவரோ மேல்மூச்சு மண்டலத்தின் தொற்றுநோயால் தான் அது ஏற்படுகிறது என்று சொல்லி நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை (antibiotics) எழுதிக் கொடுத்தார். பின்பு, இரவில் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தபோது, மெர்லின் நிஜமாகவே கவலைப்பட தொடங்கினாள். அவள் மீண்டும் தன்னுடைய டாக்டரிடம் சென்றாள்; அவர் மார்பு எக்ஸ்ரே எடுப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
எக்ஸ்ரேயில் தெரிந்த நிலைகாட்டும் நிழற்படம் (telltale shadow) உடனடி சிகிச்சையைத் தேவைப்படுத்தியது; ஆனால் மெர்லினை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. மெர்லின் இவ்வாறு சொன்னாள்: “டாக்டர் என் அம்மாக்கிட்ட போன் பண்ணி எனக்கு நிஜமாகவே உடம்பு சரியில்லைனு சொன்னாரு. அம்மா என்னைத் தேடிட்டு வந்து, உடனே [டாக்டரை] போய் பார்க்கச் சொன்னாங்க. அவர் என்னை வேற ஆஸ்பத்திரிக்கு அனுப்பினாரு. அங்க எனக்கு இன்னொரு எக்ஸ்ரே எடுத்துட்டு, அட்மிட் பண்ணிட்டாங்க.”
மெர்லின் தனக்கு காசநோய் (TB [டிபி]) இருக்கிறதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்தாள். தான் இறந்துவிடுவோமோ என அவள் நினைத்தாள்: ஆனால் டிபி எதிர்ப்பு மருந்துகளினால் சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவள் சீக்கிரத்தில் குணமடைந்தாள்.
தனக்கு டிபி இருப்பதைக் குறித்து மெர்லின் ஆச்சரியமடைந்தது புரிந்துகொள்ளத்தக்கதே. சிறிதுகாலத்துக்கு முன்பு வரையாக, அநேக சுகாதார வல்லுநர்களும்கூட தொழில் வளர்ச்சி மிக்க நாடுகளில் டிபி ஒழிக்கப்பட்டுவிட்டதாக நம்பினார்கள். லண்டனிலுள்ள சிகிச்சை மையத்தின் கிளினிக்கல் அஸிஸ்டென்ட் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “ரொம்ப நாளைக்கு முன்னாடியே இதுவும் ஒழிஞ்சுபோச்சுனு நான் நினைச்சிட்டிருந்தேன். ஆனா அது இன்னும் இருக்குன்னும், நகரத்துக்குள்ளேயும் தீவிரமா பரவியிருக்குன்னும் இங்க வேலை செய்ய ஆரம்பிச்சதுக்கப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது.”
எங்கெல்லாம் டிபி ஒழிக்கப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது; எங்கு அது ஒழிக்கப்படாமல் இருந்ததோ, அங்கு அது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. ஒழிக்கப்படுவதற்கு மாறாக, டிபி, போரோடும் பஞ்சத்தோடும் போட்டி போட்டுக்கொண்டு உயிர்களை கொல்லுகிறது. இதை சற்று கவனியுங்கள்:
◼ நவீன மருத்துவத்தின் வியப்பூட்டும் முன்னேற்றங்களின் மத்தியிலும், கடந்த நூறு ஆண்டுகளாக டிபி சுமார் 20 கோடி மக்களை சவக்குழிக்கு அனுப்பியிருக்கிறது.
◼ 200 கோடி மக்கள் என்ற கணக்கில், அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரை, டிபி நீளநுண்ணுயிரி (TB bacillus) என்ற ஒருவகை பாக்டீரியா ஏற்கெனவே பீடித்திருக்கிறது. கூடுதலாக, ஒவ்வொரு நொடியும் ஒரு புதிய நபர் காச நோயாளிகளின் வரிசையில் சேருகிறார்!
◼ 1995-ல் டிபி முற்றியிருந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 2.2 கோடியாக இருந்தது. கிட்டத்தட்ட 30 லட்சம் ஆட்கள் இறந்தனர்; அவர்களில் பெரும்பான்மையர் வளரும் நாடுகளில் உள்ளவர்கள்.
காசநோயை ஒழிப்பதற்கு ஆற்றல்மிகுந்த மருந்துகள் கிடைக்கிறபோதிலும், இந்நோய் ஏன் தொடர்ந்து மனிதவர்க்கத்தை சூறையாடுகிறது? அது என்றாவது ஒழிக்கப்படுமா? அதற்கெதிராக உங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஏதேனும் வழியுண்டா? பின்வரும் கட்டுரைகள் இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும்.
[படத்திற்கான நன்றி]
New Jersey Medical School—National Tuberculosis Center