உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 12/22 பக். 4-9
  • வெற்றியும் அவலமும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெற்றியும் அவலமும்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடைசியாக, ஒரு நிவாரணி!
  • சாவுக்கேதுவான தலைதூக்குதல்
  • ஏன் இந்த சாவுக்கேதுவான வருகை?
  • ஹெச்ஐவியும் காசநோயும்—இரட்டிப்பான தொல்லை
  • பல மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற்றுள்ள டிபி
  • தடுப்பும் நிவாரணமும்
  • காசநோயை எதிர்க்க புதிய கவசம்
    விழித்தெழு!—1999
  • கொலைக் கூட்டாளிகள்
    விழித்தெழு!—1998
  • போரையே விஞ்சிடும் அவல மரணங்கள்
    விழித்தெழு!—1997
  • காச நோய் திரும்பவும் தாக்குகிறது!
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 12/22 பக். 4-9

வெற்றியும் அவலமும்

“கடந்த 30 ஆண்டுகளாக காசநோயின் சரித்திரம் வெற்றியும் அவலமும் நிறைந்த ஒன்றாக இருந்திருக்கிறது. அந்நோயை கட்டுப்படுத்தி, கடைசியில் முற்றிலுமாக ஒழித்துவிடுவதற்கான ஏதுக்களை அளித்தது விஞ்ஞானிகளின் வெற்றியாகவும், அவர்களுடைய கண்டுபிடிப்புகளை விரிவான அளவு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த தவறியது அவலமாகவும் இருக்கிறது.”—ஜெ. ஆர். பிக்னல், 1982.

காசநோய் (டிபி) நீண்ட காலமாக மனித உயிர்களை குடித்திருக்கிறது. ஐரோப்பியர்கள் தென் அமெரிக்காவிற்கு கடற்பயணம் செய்வதற்கு நீண்ட காலங்களுக்கு முன்பாகவே அது பெருவிலுள்ள இன்கா மக்களை அல்லல்படுத்தியிருக்கிறது. எகிப்தில், பாரோ மன்னர்களின் ஆட்சி கொடிகட்டிப் பறந்த நாட்களிலேயே அது அந்நாட்டவரை தாக்கியது. பூர்வ பாபிலோன், கிரீஸ், சீனா ஆகிய தேசங்களிலிருந்த புகழ்பெற்றவர்களையும் எளிய மக்களையும் டிபி வலிமையாகத் தாக்கியதென பழங்கால பதிவுகள் காட்டுகின்றன.

18-ம் நூற்றாண்டிலிருந்து 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையாக, மேற்கத்திய உலகில் காசநோய்தானே இறப்புக்கான முக்கிய காரணியாக இருந்தது. முடிவாக, 1882-ல் ஜெர்மானிய மருத்துவர் ராபர்ட் காக் இந்நோய் ஏற்படக் காரணமான நீளநுண்ணுயிரியை (bacilli), தான் கண்டுபிடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, வில்ஹெம் ராண்ட்ஜன் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்; உயிருள்ள ஆட்களின் நுரையீரலில் டிபி நைவுகளின் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை ஸ்கேன் செய்து கண்டறிவதை அது சாத்தியமாக்கிற்று. அடுத்து, 1921-ல் பிரெஞ்சு விஞ்ஞானிகள் காசநோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கினர். இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் நினைவாக பிஸிஜி (பசில்லஸ் கால்மெட் கேரன்) என்று பெயரிடப்பட்ட இம்மருந்து காசநோய்க்கு எதிராக செயல்படும் ஒரே தடுப்பு மருந்தாக இருக்கிறது. இருந்தபோதிலும், டிபி தொடர்ந்து பெருமளவு உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருந்தது.

கடைசியாக, ஒரு நிவாரணி!

மருத்துவர்கள் காசநோயாளிகளை சானடோரியங்களுக்கு அனுப்பினர். இந்த மருத்துவ இல்லங்கள் பெரும்பாலும் மலைகளில் அமைந்திருந்தன. இங்கு நோயாளிகளால் ஓய்வெடுக்கவும் தூய்மையான காற்றை சுவாசிக்கவும் முடிந்தது. பிறகு, 1944-ல் ஐக்கிய மாகாணங்களிலிருந்த மருத்துவர்கள் காசநோய்க்கு எதிராக ஆற்றலுடன் செயலாற்றிய ஸ்ட்ரெப்டோமைசின் என்ற நுண்ணுயிர் கொல்லியை முதலில் கண்டுபிடித்தனர். மற்ற டிபி எதிர் மருந்துகளும் சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. கடைசியில் ஒரு வழியாக, காசநோயாளிகள் தங்கள் வீடுகளிலிருந்தே குணமடைய முடிந்தது.

இந்நோயின் தொற்று விகிதம் குறைந்தபோது, எதிர்காலம் ஒளிமயமாக காட்சியளித்தது. சானடோரியங்கள் மூடப்பட்டன; டிபி ஆராய்ச்சிக்காக வசூலிக்கப்பட்ட நிதிகளும் நிறுத்தப்பட்டன. நோய்த்தடுப்பு திட்டங்கள் கைவிடப்பட்டன; விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் புதிய மருத்துவ சவால்களை எதிர்நோக்கினர்.

வளரும் நாடுகளில் டிபி தொடர்ந்து பெருமளவு ஆட்களின் உயிர்களை குடித்தபோதிலும், இதெல்லாம் போகப்போக சரியாகிவிடும். டிபி முடிந்துபோன பிரச்சினை என்று மக்கள் நினைத்தனர்; ஆனால் அவர்களுடைய வியூகம் தவறாயிருந்தது.

சாவுக்கேதுவான தலைதூக்குதல்

1980-களின் மத்திபத்தில், டிபி கொடூரமாகவும் சாவுக்கேதுவான விதத்திலும் தலைதூக்க ஆரம்பித்திருந்தது. பிறகு, ஏப்ரல் 1993-ல் உலக சுகாதார அமைப்பு (WHO) “உலகளாவிய அவசரநிலையை” அறிவித்தது; கூடுதலாக “இந்நோய் பரவுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிடில், அடுத்த பத்தாண்டுகளில் அது மூன்று கோடிக்கும் அதிகமான ஆட்களின் உயிர்களை பறித்துவிடும்” என்றும் அது அறிவித்தது. WHO-வின் சரித்திரத்தில் இத்தகையதொரு அறிவிப்பு செய்யப்பட்டது இதுவே முதல் தடவை.

அன்றிருந்து இன்று வரையாக, எந்த “உடனடி நடவடிக்கையாலும்” இந்நோய் பரவுவதை தடுக்க முடியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், நிலைமை படுமோசமாகிவிட்டது. சரித்திரத்திலேயே வேறு எந்த ஆண்டைக் காட்டிலும் 1995-ல் காசநோயால் பெருமளவு ஆட்கள் இறந்திருக்கிறார்கள் என்று சமீபத்தில் WHO அறிக்கை செய்தது. அடுத்த 50 ஆண்டுகளில் 50 கோடி வரையான மக்கள் காசநோயால் சுகவீனமடையக்கூடும் என்றும் WHO எச்சரித்தது. பெரும்பாலும் சுகப்படுத்த முடியாததாய் உள்ள, பல்வேறு மருந்துகளை எதிர்க்கும் திறனுள்ள காசநோய்க்கு மக்கள் பலியாவது அதிகரித்து வருகிறது.

ஏன் இந்த சாவுக்கேதுவான வருகை?

கடந்த 20 ஆண்டுகளில், உலகின் அநேக பகுதிகளில் டிபி தடுப்பு திட்டங்கள் தரம் குறைந்தோ மறைந்தோ போனது இதற்கு ஒரு காரணமாகும். இதனால் நோய் தொற்றப்பட்டிருக்கும் நபர்களை கண்டுபிடித்துச் சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, அதிகமான இறப்புகளும் நோய் பரவுதலும் ஏற்பட்டிருக்கிறது.

நெரிசல் மிகுந்த நகரங்களில், குறிப்பாக, வளரும் நாடுகளின் மாநகரங்களில் வாழும் ஏழையான மற்றும் ஊட்டச்சத்துக்குறைவான மக்களின் அதிகரித்துவரும் எண்ணிக்கையே டிபி மீண்டும் தலைதூக்குவதற்கு மற்றொரு காரணமாகும். டிபி ஏழைகளுக்கு மட்டுமே வருவதில்லை, அது யாரை வேண்டுமானாலும் பீடிக்கலாம்; இருப்பினும் சுகாதாரமற்ற நெரிசல் மிகுந்த வாழ்க்கைச்சூழலால் இத்தொற்றுநோய் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவுகிறது. மக்களின் நோய்த்தடுப்பு ஆற்றல், நோயை எதிர்க்க முடியாதளவு பலவீனமடைவதற்கான வாய்ப்பையும் இவை அதிகரிக்கின்றன.

ஹெச்ஐவியும் காசநோயும்—இரட்டிப்பான தொல்லை

எய்ட்ஸ் வைரஸான ஹெச்ஐவி-யுடன், டிபி சாவுக்கேதுவான கூட்டுறவை வளர்த்திருப்பதே மிகப்பெரிய பிரச்சினையாயிருக்கிறது. 1995-ல் எய்ட்ஸுடன் தொடர்புடைய காரணங்களால் மரித்தவர்கள் என கணக்கிடப்பட்ட பத்து லட்சம் ஆட்களில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் காசநோயால் மரித்திருந்தனர். இது ஏனென்றால் காசநோயை எதிர்க்கும் நம் உடலின் ஆற்றலை ஹெச்ஐவி பலவீனப்படுத்துகிறது.

பெரும்பான்மையான மக்களிடத்தில் டிபி சுகவீனத்தை ஏற்படுத்துமளவுக்கு ஒருபோதும் வளர்ச்சியடைவது கிடையாது. ஏன்? ஏனென்றால், டிபி நீளநுண்ணுயிரிகள் மேக்ரோஃபேஜஸ் என்ற செல்களினுள்ளே சிறைப்பட்டிருக்கின்றன. அங்கே, அவை அந்நபரின் நோய்த்தடுப்பு ஆற்றலால், குறிப்பாக டி லிம்போசைட், (T lymphocytes) அல்லது டி செல்களால் (T cells) அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

டிபி நீளநுண்ணுயிரிகள் இறுக்கமான மூடிகளையுடைய கூடைகளில் அடைக்கப்பட்ட நாகங்களைப் போல இருக்கின்றன. மேக்ரோஃபேஜஸே அக்கூடைகள், டி செல்களே அவற்றின் மூடிகள். இருந்தபோதிலும், எய்ட்ஸ் வைரஸ் தாக்கும்போது, அக்கூடைகளின் மூடிகள் உதைத்தெறியப்படுகின்றன. இவ்விதம் ஏற்படும்போது, நீளநுண்ணுயிரிகள் தப்பித்து, உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் தடையின்றி சேதப்படுத்துகின்றன.

எனவே, ஆரோக்கியமான நோய்த்தடுப்பு ஆற்றலை உடைய மக்களைக் காட்டிலும், எய்ட்ஸ் நோயாளிகளை தீவிரமான டிபி தாக்குவதற்கு அதிக சாத்தியமிருக்கிறது. “ஹெச்ஐவி-யை உடைய மக்கள் மிகப்பெரிய அளவில் சுலபமாக பாதிக்கப்படுகிற நிலையில் உள்ளனர். லண்டனிலிருந்த ஒரு கிளினிக்கில் இரண்டு ஹெச்ஐவி நோயாளிகள் வராந்தாவில் அமர்ந்திருந்தபோது, காசநோயாளி ஒருவரை சுமந்துசென்ற ஸ்ட்ரெச்சர் அவர்களைக் கடந்து சென்ற பிறகு, அந்நோயால் அவர்களும் பீடிக்கப்பட்டார்கள்” என்று ஸ்காட்லாந்திலுள்ள ஒரு டிபி நிபுணர் சொன்னார்.

இவ்விதமாகவே கொள்ளைநோயான காசநோயை எய்ட்ஸ் உரமூட்டி வளர்க்கிறது. ஒரு கணக்கெடுப்பின்படி, 2000-ம் ஆண்டுக்குள், எய்ட்ஸ் கொள்ளைநோய் உள்ள 14 லட்சம் ஆட்களை டிபி தொற்றிக்கொள்ளும். எய்ட்ஸ் இல்லாவிடில் இதற்கு வாய்ப்பில்லை. டிபி அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமானது எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நோயால் அதிக சுலபமாக பீடிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், எய்ட்ஸ் இல்லாதவர்களுக்கும்கூட இதைக் கடத்துகின்றனர்.

பல மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற்றுள்ள டிபி

மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற்றுள்ள டிபி கிருமிகள் தோன்றுவதே காசநோய்க்கு எதிரான போராட்டத்தை அதிக கடினமானதாக்கும் கடைசி காரணியாகும். இந்த வீரியமிக்க நோய்கிருமிகள் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பிருந்த சகாப்தத்தைப் போலவே, மீண்டும் இந்நோயை குணப்படுத்த முடியாததாக ஆக்குமென அச்சுறுத்துகின்றன.

எதிர்பார்ப்புக்கு முரணாக, பலனற்ற டிபி எதிர் மருந்துகளே பல மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற்றுள்ள காசநோய்க்கு பிரதான காரணமாக இருக்கிறது. காசநோய்க்கு எதிரான பலனுள்ள சிகிச்சைமுறை குறைந்தது ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது; அது நோயாளி நேரம் தவறாமல் நான்கு வகை மருந்துகளையும் உட்கொள்வதைத் தேவைப்படுத்துகிறது. நோயாளி நாளொன்றுக்கு ஒரு டஜன் மாத்திரை வரைக்கும்கூட விழுங்கவேண்டியிருக்கலாம். நோயாளி மருந்துகளை தவறாமல் உட்கொள்ளாவிட்டாலோ, முழு சிகிச்சையையும் பெறாவிட்டாலோ, கொல்வதற்கு கடினமான அல்லது கொல்லவே முடியாத டிபி நோய்கிருமிகள் உருவாகக்கூடும். சில நோய்கிருமிகள் பரவலாக பயன்படுத்தப்படும் ஏழுக்கும் அதிகமான காசநோய் மருந்துகளுக்கும்கூட எதிர்ப்புத் திறன் பெறுகின்றன.

பல மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற்றுள்ள காசநோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது கடினமானது மட்டுமல்ல, செலவுமிக்கதும்கூட. இத்தகையதொரு காசநோயாளிக்கு சிகிச்சையளிக்க ஆகும் செலவு சாதாரண காசநோயாளிக்கு ஆகும் செலவைக் காட்டிலும் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகமாக இருக்கலாம். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், இத்தகைய நிலையிலுள்ள ஒரு நபருக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏற்படும் மருத்துவ செலவு 2,50,000 டாலரையும் விஞ்சக்கூடும்!

உலகமுழுவதும் சுமார் 10 கோடி மக்கள், மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற்ற டிபி நோய்கிருமிகளால் தொற்றப்படக்கூடுமென்றும், அவற்றில் சில அறியப்பட்ட எந்த டிபி எதிர் மருந்தாலும் குணப்படுத்த முடியாதவையாக இருக்கலாமென்றும் WHO கணக்கிட்டுள்ளது. இத்தகைய கொடிய நோய்கிருமிகள் மற்ற சாதாரண கிருமிகளைப் போன்றே பரவும்.

தடுப்பும் நிவாரணமும்

இத்தகைய உலகளாவிய அவசரநிலையை எதிர்ப்பதற்கு என்ன செய்யப்பட்டு வருகிறது? நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மிகச்சிறந்த வழியானது தொற்றுள்ள நோயாளியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவதே. இது நோய்வாய்ப்பட்டவருக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், இந்நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கிறது.

காசநோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேலானோரை அது கொல்கிறது. எனினும், சரியாக சிகிச்சையளிக்கப்பட்டால், பல்வேறு மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற்ற நோய்கிருமியால் அது தொற்றப்படாதபோது, பெரும்பாலும் காசநோயுடைய ஒவ்வொரு நோயாளியும் குணப்படுத்தப்பட முடியும்.

நாம் பார்த்தபடி, பலனுள்ள சிகிச்சைமுறை என்பது, நோயாளி, மருத்துவர் பரிந்துரை செய்கிற காலப்பகுதி முழுவதுக்கும் மருந்தை வேளை தவறாமல் உட்கொள்வதைத் தேவைப்படுத்துகிறது. ஆனால், பெரும்பாலும் அவர்கள் அவ்விதம் செய்வதில்லை. ஏன்? சாதாரணமாக, சிகிச்சை தொடங்கப்பட்டு சில வாரங்கள் கழித்து இருமல், காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் மறைகின்றன. எனவே, அநேக நோயாளிகள் தாங்கள் சுகமடைந்துவிட்டதாக முடிவுசெய்துகொண்டு, மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திவிடுகின்றனர்.

இந்தப் பிரச்சினையை மேற்கொள்வதற்காக, “நேரடியாக அளிக்கப்படும் சிகிச்சை, மருந்தை குறுகிய காலத்திற்கு தவறாமல் உட்கொள்ளும் முறை” என்பதைக் குறிக்கும் டாட்ஸ் (DOTS) என்ற ஒரு திட்டத்தை WHO முன்னேற்றுவிக்கிறது. அதன் பெயர் சுட்டிக்காட்டுகிறபடியே, சுகாதார பணியாளர்கள் சிகிச்சை காலத்தில் குறைந்தபட்சம் முதல் இரண்டு மாதங்களுக்கு, நோயாளிகள் மருந்தை ஒவ்வொரு வேளையும் உட்கொள்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக கவனிக்கிறார்கள். எனினும், இவ்வாறு செய்வது எப்போதுமே எளிதாக இருப்பதில்லை; ஏனென்றால், காசநோயால் அல்லல்படும் அநேகர் சமுதாயத்தின் விளிம்பில் வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை பெரும்பாலும் குழப்பமும் பிரச்சினைகளும் நிறைந்திருப்பதால்—சிலருக்கு வீடுகூட இல்லை—அவர்கள் மருந்தை தவறாமல் உட்கொள்கிறார்களா என்பதை தொடர்ந்து கவனிப்பது சக்திக்கு அப்பாற்பட்ட சவாலாக இருக்கிறது.

மனித இனத்தை சூறையாடும் இக்கொள்ளைநோயை மேற்கொள்வதற்கு கடைசியாக ஏதேனும் வாய்ப்புள்ளதா?

[பக்கம் 5-ன் பெட்டி]

டிபி விவரப் பட்டியல்

விவரிப்பு: டிபி என்பது சாதாரணமாக நுரையீரலைத் தாக்கி, அதைப் படிப்படியாக அரிக்கும் ஒரு நோயாகும்; ஆனால் அது உடலின் மற்ற பகுதிகளுக்கும், குறிப்பாக, மூளை, சிறுநீரகங்கள், எலும்புகள் ஆகியவற்றிற்கும்கூட பரவலாம்.

அறிகுறிகள்: நுரையீரல் காசநோயால் இருமல், எடை இழப்பு, பசியின்மை, இரவில் கடுமையாக வியர்த்தல், பலவீனம், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலிகள் ஆகியவை ஏற்படலாம்.

எவ்விதம் கண்டறியப்படுகிறது: ட்யூபர்குலின் தோல் ஆய்வு ஒரு நபரிடம் நீளநுண்ணுயிரி இருக்கிறதா என்பதைக் காட்டலாம். மார்பு எக்ஸ்ரே நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டக்கூடும்; அது தீவிரமான டிபி தொற்றப்பட்டிருப்பதைக் குறிக்கலாம். நோயாளியின் சளியை சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்வது டிபி நீளநுண்ணுயிரியை கண்டறிவதற்கு மிகவும் நம்பத்தக்க வழியாகும்.

யார் பரிசோதிக்கப்பட வேண்டும்: டிபி அறிகுறிகளை உடையவரும் காசநோயாளியுடன் நெருக்கமாக, தடைகாப்பின்றி நீண்ட நேரம் செலவழிப்பவரும், குறிப்பாக போதியளவு காற்று வசதியற்ற அறைகளில் ஒன்றாக இருப்பவர்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

தடுப்பு மருந்து: பிஸிஜி என்று அறியப்பட்ட ஒரேவொரு தடுப்பு மருந்தே இருக்கிறது. அது பிள்ளைகளுக்கு வரும் தீவிர காசநோயை தடுக்கிறது; ஆனால் வளரிளமை பருவத்தினருக்கும் வயது வந்தவர்களுக்கும் அது பலனளிப்பதில்லை. சுமார் 15 வயதுக்குட்பட்டவர்களை இத்தடுப்பு மருந்து, நோய்க்கு எதிராக சிறந்த விதத்தில் பாதுகாக்கிறது. பிஸிஜி நோய்த் தொற்றப்படாதவர்களை மட்டுமே பாதுகாக்கிறது; ஏற்கெனவே நோய்த் தொற்றப்பட்டவர்களுக்கு அதனால் எந்தப் பிரயோஜனமுமில்லை.

[பக்கம் 6-ன் பெட்டி]

காசநோயும் நாகரிக பாணியும்

வினோதமாக தோன்றினாலும்கூட, 19-ம் நூற்றாண்டில், காசநோயைக் கொண்டு காதலுக்கு இலக்கணம் வகுத்தனர்; ஏனெனில் காசநோயின் அறிகுறிகள் உணர்ச்சிகளையும், கலைதிறன்மிக்க மனச்சாய்வுகளையும் மேம்படுத்துவதாக மக்கள் நம்பினர்.

பிரெஞ்சு நாடக எழுத்தாளரும், நாவலாசிரியருமான அலெக்ஸான்டிரா டியூமாஸ் 1820-களின் ஆரம்ப காலப்பகுதியைக் குறித்து தன்னுடைய சுயசரிதையில் (பிரெஞ்சு) இவ்வாறு எழுதினார்: “நெஞ்சு வலியால் அவதியுறுவது அனைத்துமே நாகரிக பாணியாக இருந்தது; எல்லாருக்கும் எலும்புருக்கி நோய் இருந்தது, அதிலும் குறிப்பாக புலவர்களுக்கு இருந்தது. முப்பது வயதுக்கு முன்பாகவே மரிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பாணியாக இருந்தது.”

ஆங்கில புலவர் லார்ட் பைரன் இவ்வாறு சொன்னதாக ஒரு அறிக்கை கூறியது: “எனக்கு எலும்புருக்கி நோய் [TB] வந்து சாக ஆசைப்படறேன் . . . அப்பத்தான் பெண்களெல்லாம் என்னை பார்த்து ‘பைரன பாரு பாவம், சாகிறதுலகூட அவன் எவ்வளவு நல்லாயிருக்கான்னு!’ சொல்வாங்க.”

காசநோயால் மரித்தவரென்று அறியப்பட்ட அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி டேவிட் தோரூ இவ்விதமாக எழுதினார்: “உருக்கியும் நோயும் பெரும்பாலும் அழகாக இருக்கின்றன, . . . எலும்புருக்கியால் வெளுத்துப்போய் பிரகாசிப்பதைப் போன்று.”

காசநோயின் மீதான இந்த மோகத்தைக் குறித்து குறிப்பு சொல்லுவதாக, த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் இவ்வாறு குறிப்பிட்டது: “நோய்மீது இயல்புக்கு மாறான இத்தகைய பாசம், பாணிகளின்மீதான தனிப்பட்டவர்களின் விருப்பத்திலும் ஊடுருவிப் பரவியது. பெண்கள் வெளுத்த, மெலிந்த தோற்றத்திற்காக ஏங்கினர்; வெண்மையாக காணப்பட அழகு சாதனங்களைப் பயன்படுத்தினர்; மெல்லிய, மஸ்லின் துணியாலான உடைகளையே அதிகம் விரும்பினர்—இன்றைய மெலிந்த மாடல்களைப் போல் காட்டிக் கொள்ள விரும்பினர்.”

[பக்கம் 7-ன் பெட்டி]

டிபி அவ்வளவு எளிதாக தொற்றிக்கொள்ளுமா?

WHO-ன் உலகளாவிய காசநோய்த் திட்டத்தின் இயக்குநரான டாக்டர் அராட்டா கோச்சி இவ்வாறு எச்சரிக்கிறார்: “டிபி நுண்ணுயிரியிடமிருந்து ஓடியொழிவதற்கு இடமே இல்லை. இருமும்போதோ, தும்மும்போதோ காற்றில் கலந்துவிடுகிற ஒரு டிபி நோய்கிருமியை, சுவாசிக்கும்போது உள்ளிழுப்பதன்மூலம் எவர் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடியும். இந்தக் கிருமிகள் மணிக்கணக்காக, ஏன் வருடக்கணக்காகவும்கூட காற்றில் மிதந்துகொண்டு இருக்கமுடியும். நாம் அனைவருமே ஆபத்தில் இருக்கிறோம்.”

இருந்தபோதிலும், ஒரு நபர் காசநோயால் வியாதிப்படுவதற்கு முன்பாக, இரண்டு காரியங்கள் ஏற்பட வேண்டும். முதலாவதாக, அவனையோ, அவளையோ காசநோய்க் கிருமி தொற்றவேண்டும். இரண்டாவதாக, தொற்றப்பட்ட கிருமி நோயாக வளர்ச்சியடைய வேண்டும்.

சாதாரண சளியைக் காட்டிலும் டிபி அதிக குறைவாக தொற்றக்கூடியது. எளிதில் தொற்றும்தன்மையுள்ள காசநோயை உடைய நபருடன் கொஞ்ச நேரம் சேர்ந்து இருந்தாலே மற்றவருக்கும் அந்நோய் தொற்றிக்கொள்ளும் சாத்தியம் இருந்தாலும், டிபி, நெரிசல்மிக்க சூழ்நிலையில் வாழும் குடும்ப அங்கத்தினர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டு பரவுவதைப் போன்று, நோயாளியுடன் அதிக நேரம் செலவழிப்பவருக்கு தொற்றிக் கொள்ள அதிக சாத்தியம் உள்ளது.

சுவாசிக்கும்போது நீளநுண்ணுயிரியை பெற்று, அக்கிருமியால் பாதிக்கப்பட்டு, நோயால் பீடிக்கப்பட்ட நபரின் மார்பில் அது பெருகுகிறது. இருந்தபோதிலும், பத்தில் ஒன்பது பேருக்கு, நோய்த்தடுப்பு ஆற்றல் நோய் பரவாமல் தடுக்கிறது; அதனால் கிருமியால் பாதிக்கப்பட்ட நபர் வியாதிப்படுவதில்லை. ஆயினும், சில சமயங்களில் ஹெச்ஐவி, நீரிழிவுநோய், கீமோதெரபி புற்றுநோய் சிகிச்சைமுறைகள் அல்லது மற்ற காரணங்களால் நோய்த்தடுப்பு ஆற்றல் கடுமையாக பலவீனமடைந்திருக்கும்போது, செயலற்ற நுண்ணுயிரியும்கூட செயல்படத் தொடங்கலாம்.

[பக்கம் 7-ன் படம்]

எய்ட்ஸ் வைரஸினால் விடுவிக்கப்படும் டிபி நீளநுண்ணுயிரிகள் கூடைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட நாகங்கள் போன்றவை

[படத்திற்கான நன்றி]

New Jersey Medical School—National Tuberculosis Center

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்