எமது வாசகரிடமிருந்து
தத்தெடுக்கப்பட்டவரின் தேடுதல் “சிலிர்ப்பூட்டிய சந்திப்பு” (பிப்ரவரி 22, 1997) என்ற அனுபவத்திற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தத்து கொடுக்கப்பட்ட அந்த மகன் தன்னை பெற்ற தாயை கண்டுபிடித்ததையும் பின்பு அவர்கள் தன்னுடைய ஆவிக்குரிய சகோதரி என்பதை அறிந்து கொண்டதையும் வாசித்தது உண்மையில் மனதை உருக்கியது!
எம். ஜி. டி., இத்தாலி
டேணா ஃபால்ட்ஸின் வாழ்க்கை சரிதையை நான் கண்ணீர்மல்க வாசித்தேன். என் அண்ணனை தத்தாகக் கொடுத்துவிட்டோம்; அவன் பெரியவனானபோது தன்னுடைய அம்மாவை சந்தித்தான். அது சந்தோஷமான சந்திப்பாக இருக்கவில்லை. இன்றும்கூட, எங்கள் குடும்பத்தின்மீதுள்ள கசப்பான உணர்வுகளை அவன் சமாளிக்க வேண்டியுள்ளது. அவனுக்கு பொறுமையையும் அன்பையும் காட்டவேண்டியதன் அவசியத்தை புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.
எம். டி. எல்., அர்ஜன்டினா
உள்ளூர் வியாபார நிறுவனத்தின் பாத்ரூமில் நான் உங்களுடைய பத்திரிகையை கண்டெடுத்தேன். நான் இதுவரை வாசித்தவற்றிலேயே மிகவும் உணர்ச்சிவசப்பட வைக்கும் விஷயம் அதில் அடங்கியிருந்தது! என்னிடம் அடிக்கடி இவ்விதமாக கேட்டிருக்கிறார்கள்: “கற்பழித்தலில் கர்ப்பமாகிவிட்டால் அப்போது என்ன செய்வீர்கள்? அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் கருக்கலைப்பை பரிந்துரைக்க மாட்டீர்களா?” இன்னும் பிறவாதவர்கள் தங்களுக்கு உயிர்ப்பிச்சையளிக்கும்படி கேட்கும் வெளிப்படையான மன்றாட்டுக்கு டேணா ஃபால்ட்ஸின் சிலிர்ப்பூட்டுகிற, நிஜவாழ்க்கை சரிதையைக்காட்டிலும் சொல்வதற்கு சிறந்த உதாரணம் வேறொன்று இல்லை.
எம். பி., ஐக்கிய மாகாணங்கள்
கூட்டு குற்றச்செயல் நான் ஒற்றர் பாதுகாப்பு ஆலோசகனாகவும் காவல்துறை-பொதுமக்கள் கூட்டு கமிட்டியின் அங்கத்தினனாகவும் இருக்கிறேன். ஒருவருடைய குடும்பத்தை குற்றச்செயலிலிருந்து எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்பதன் பேரிலான உங்களுடைய ஆலோசனைகள் நடைமுறைக்கு உகந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கக் கண்டேன். (மார்ச் 8, 1997 இதழின் “கூட்டு குற்றச்செயல்—உங்களை எப்படி பாதிக்கிறது”) கமிட்டியிலுள்ள மற்ற அங்கத்தினர்களுக்கும் ஏற்கெனவே அந்தப் பத்திரிகையை கொடுத்திருக்கிறேன். ஒரு நாள் இவ்வுலகம் குற்றச்செயலற்ற இடமாக இருக்கும் என்பதை அறிவதுதானே புத்துணர்ச்சியளிக்கிறது.
சி. இ. ஜெ. ஏ., நைஜீரியா
கடந்த 11 ஆண்டுகளாக கூட்டு குற்றச்செயலில் அங்கத்தினராக இருக்கும் ஒருவரோடு நான் பைபிளை படித்து வருவதால் அந்தக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்க விதத்தில் உதவியாக இருந்தன. கூட்டு குற்றச்செயல் அமைப்போடுள்ள உறவை துண்டித்துக்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்கள் தெளிவாக விளக்கப்பட்டிருந்தன. அவரும்கூட தன் உறவை துண்டித்துக்கொள்ள தன்னுடைய மனதில் தீர்மானித்திருந்தாரானால், யெகோவாவின் உதவியுடன் அவ்விதம் செய்யமுடியும்.
எ. எம்., ஐக்கிய மாகாணங்கள்
பூக்கள் எனக்கு பத்து வயது; “மலர்கள் நம்மீது அக்கறையுள்ள ஒருவரைப் பற்றி பறைசாற்றுகின்றன” (மார்ச் 8, 1997) என்ற கட்டுரைக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பூக்கள் அதிக நேரம் வாடாமலிருக்க, அவற்றை எப்படி பராமரிக்கவேண்டும் என்பதை அது எனக்கு கற்றுக்கொடுத்தது.
எல். சி., இத்தாலி
மலர்கள்மீது எனக்குள்ள கொள்ளை ஆசையால் அவற்றை எப்படி பாதுகாப்பது என்பதைக் குறித்து நான் அநேக ஆண்டுகளாக தெரிந்துகொள்ள ஆசையாயிருந்தேன். இருந்தபோதிலும், அவை எப்பொழுதும் மிகச் சீக்கிரமாக வாடிவிடும். விழித்தெழு!-வில் உள்ள ஆலோசனைகள் எனக்கு உண்மையில் உதவி செய்திருக்கின்றன. நீங்கள் செய்துவருகிற வேலைக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஜெ. பி., மெக்ஸிகோ
நட்சத்திரத்தின் பிறப்பு “ஒரு கழுகுக் ‘கூட்டில்’ நட்சத்திரத்தின் பிறப்பு” (மார்ச் 8, 1997) என்ற கட்டுரை யெகோவா தேவனின் அழகிய, சீர்குலையாத சிருஷ்டிப்பைக் குறித்து ஒரு கணம் ஆழமாக சிந்திக்க எனக்கு உதவியது. அது என்னை நெகிழச் செய்தது.
ஜெ. ஏ., ஆஸ்திரேலியா
தத்தெடுத்தல் “ஓர் உள்ளக் குமுறல்” (மார்ச் 8, 1997) என்ற கட்டுரையிலிருந்ததைப் போல என்னுடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. நான் 19 வயதில் மணமாகாத தாயானேன். என் அம்மா அதிக கோபமும் அவமானமும் அடைந்தார்கள்; அந்தக் குழந்தைக்கு இந்த வீட்டில் இடமில்லையென்றும் சொல்லிவிட்டார்கள். என் குழந்தையின் நலனை மனதில்கொண்டு அவனை மற்றொருவருக்கு தத்து கொடுப்பதே நல்லது என தீர்மானித்தேன். கிறிஸ்தவளானதற்குப் பிறகு, அவனை சந்திக்கவேண்டுமென்று 15 ஆண்டுகளாக ஜெபம் செய்தேன். கடைசியாக என்னுடைய ஜெபம் கொஞ்ச நாட்களுக்கு முன்பு பதிலளிக்கப்பட்டது; நான் அவனை சந்தித்து அவனுடன் நற்செய்தியை பகிர்ந்துகொண்டேன். அவனை தத்துக்கொடுக்க வற்புறுத்திய என்னுடைய இக்கட்டான சூழ்நிலைமைகளை அவன் நன்றாக புரிந்துகொண்டான். இத்தகைய சூழ்நிலையிலுள்ள பெண்களுக்கு என்னுடைய அறிவுரையானது தொடர்ந்து யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள் என்பதே. ஒருவேளை, உங்கள் குழந்தையோடு நீங்கள் மீண்டும் இணையும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கலாம். அப்படியில்லையென்றாலும்கூட, நீங்கள் கடவுள்மீது முழு நம்பிக்கை வைத்தீர்களென்றால் அவர் உங்கள் மனதுக்கும் இருதயத்துக்கும் சமாதானத்தை தரமுடியும்.
ஜி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்