இமை முடிகள் நிறைந்த பறவைக்கு அறிமுகமாகுங்கள்
தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்
“ஒருவேளை நீங்கள் எங்களை சந்தித்திருக்கவே மாட்டீர்கள். நாங்கள் பறவைகள்; எங்களை ஆப்பிரிக்க தரை ஹார்ன்பில்கள் என்று அநேகர் அழைக்கிறார்கள்.
“நாங்கள் பார்ப்பதற்கு மிகவும் கண்கவரும் நிறமிக்கவர்கள், மேலும் எங்களைப் பற்றிய சில ஆர்வமிக்க உண்மைகளை உங்களிடம் சொல்ல விரும்புகிறோம். எங்களுடைய பெயருக்கு ஏற்ப நாங்கள் அதிகப்படியான நேரத்தை தரையில்தான் கழிப்போம். உருவ அளவில் ஓரளவுக்கு வான்கோழிகளை ஒத்திருக்கிறோம், வான்கோழிகளைப் போல், எங்களால் அதிகம் பறக்க முடியாது.
“எங்களுடைய தனித்தன்மை வாய்ந்த வித்தியாசமான அசைவுகளுடன், ததக் பொதக் என்று நடை பயின்று ஆப்பிரிக்காவின் மத்திய, தென்கிழக்குப் பகுதிகளிலே நாங்கள் உலா வருகிறோம். ஒருவேளை நீங்கள் எங்களை சந்திக்க நேர்ந்தால், எங்களுடைய தொண்டைப் பை, கண் அருகே இருக்கும் நிறம், கண்களின் நீண்ட அழகிய இமைமுடிகளை வைத்து நிச்சயம் அடையாளம் கண்டுகொள்வீர்கள்!
“தரை ஹார்ன்பில் பறவைகளாகிய நாங்கள் குஞ்சு பொரிப்பதிலே அதிக தயக்கம் காட்டுவோம்—சராசரியாக ஆறு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஒரு சிறு பறவையை வளர்த்திடுவோம். இனப்பெருக்க காலத்தில், ஆண் பறவைகள் காய்ந்த இலைகளை மரப் பொந்துகளிலோ அல்லது பாறைகளின் குழிகளிலோ சேகரிக்கின்றன; அவ்விடங்களே எங்கள் கூடுகள். அதன் பின், பெண் பறவைகள் 40 நாட்களுக்கு கவனமாக அடை காக்கின்றன. சீக்கிரத்தில் ‘தாயாவதற்காக’ அடைகாக்கும் பறவைக்கு, எங்கள் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களோடு சேர்ந்து நாங்கள் இங்கும் அங்கும் ஓடி, புழுக்களையும், லார்வாக்களையும், சுவை மிகுந்த மற்ற உணவுகளையும் தொடர்ந்து அளிப்போம். குஞ்சு பொறித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, புதிய குஞ்சுகள், மற்ற குடும்ப அங்கத்தினரை சேர்ந்து கொள்ள கூட்டை விட்டு வெளியே வரும்போது நாங்கள் அனைவரும் சந்தோஷத்தால் குதூகலிப்போம்.
“நாங்கள் மெதுவாகவே பருவ வளர்ச்சியடைகிறோம்—முழுமையாக வளர்ந்து பருவமடைய குறைந்தது ஆறு வருடங்கள் ஆகும். எங்களில் ஒருவர் தனிக்குடித்தனம் ஆரம்பிக்க இதைவிட அதிக காலமெடுக்கலாம். ஆனால், நாங்கள் நீண்ட காலம் வாழ்வதால் (அநேகர் 30 ஆண்டுகள் வாழ்கிறோம்) எங்களுடைய அடுத்த சந்ததியை பிறப்பிக்க போதிய சமயம் இருக்கிறது.
“நாங்கள் குடும்ப பாங்கானவர்கள், எட்டு பறவைகள் வரை ஒரு கூட்டமாக சேர்ந்து வாழ்க்கையை நடத்துவதை உங்களால் கவனிக்க முடியும். ஒவ்வொரு குடும்பமும் சுமார் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடைய ஆப்பிரிக்க ஸவானாக்கள், கானகம், புல்வெளி போன்ற பகுதிகளை சுற்றி வருகிறோம். தென் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், நாங்கள் இயற்கையாக வாழும் இடங்களில் 70 சதவீதத்தை மனித ஆக்கிரமிப்பினாலும் விவசாயத்தினாலும் இழந்திருக்கிறோம்.
“நாங்கள் சுற்றி வரும் பகுதிகளை பாதுகாக்க ஒழுங்காக ரோந்து வருவோம். எங்கள் உணவான—பாம்புகள், லார்வாக்கள், ஆமைகள், பூச்சிகள் ஆகியவற்றை—மற்ற குடும்பத்திலிருந்து வரும் ஹார்ன்பில்களோடுகூட பங்கு போட மாட்டோம். அன்னியர்களை விரட்டியடிக்க வேண்டும் என்ற வேகத்தில், நாங்கள் சில சமயம் முட்டாள்தனமாக நடந்துகொள்வோம். எப்படி என்று கேட்கிறீர்களா? கண்ணாடி ஜன்னல்களில் எங்கள் பிம்பத்தைப் பார்த்துவிட்டு அன்னியர் வந்து விட்டதாக நினைத்து, பலமாக ஜன்னலைத் தாக்குவோம். நீண்ட உறுதியான அலகினால் தாக்குவதால் கண்ணாடி நிச்சயமாய் நொறுங்கிவிடும். அநேக ஜன்னல்கள் உடைந்ததால், சிலர் தங்கள் ஜன்னல்களை கம்பி வலையினால் அடைத்து விட்டனர், அவர்களுக்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!
“விசனகரமாக, சில மரண அபாயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டி இருக்கிறது. சில மனிதர்கள், நாங்கள் இயற்கையாக வாழும் பகுதியை விட்டு எங்களை துரத்திவிடுகின்றனர். மற்றவர்கள் எங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர். விவசாயிகள் தங்களுக்கு தொல்லை தரும் நரிகளுக்காகவும், மற்ற மிருகங்களுக்காகவும் விஷமிட்ட உணவை கண்ணியாக வைக்கிறார்கள். அவை விஷமிட்ட உணவு என்பது எங்களுக்கு எப்படி தெரியும்? எங்களை பாதுகாப்பதற்கென சிலசமயங்களில் விவசாயிகள் விஷமிட்ட உணவை புதைத்து வைக்கிறார்கள். ஆனால் உணவுக்காக எங்களுடைய நீண்ட அலகால் குழிதோண்டுவது எங்களுடைய பழக்கம், ஆகவே விஷமிடப்பட்ட உணவைத் தோண்டி உண்பதன் மூலம் எங்களுடைய சவக்குழியை நாங்களே தோண்டிக் கொள்கிறோம்.
“இப்படிப்பட்ட ஆபத்துகளில் இருந்து எங்களை பாதுகாத்திட சிலர் அதிக முயற்சி எடுக்கிறார்கள். டோடோ பறவையைப் போல எங்கள் இனம் அழிந்து—மறைந்து போகாது என்பது எங்களுடைய நம்பிக்கை. ஆகவே நீங்கள் எங்கள் பகுதிக்கு எப்போதாவது வரும்போது எங்களுடைய ஆரவார சத்தமான டு-டு-டுடுடு டு-டு-டுடுடு-வைக் கேட்டால், எங்களைத் தேடிப்பாருங்கள். தரை ஹார்ன்பில்களுடைய பகுதிக்கு வந்திருக்கும் உங்களை நாங்கள் எங்களுடைய நீண்ட இமை முடிகளைக் கொண்டு கண் சிமிட்டி வரவேற்போம்.”