உலகை கவனித்தல்
மெக்ஸிகோவில் குடிவெறி
மெக்ஸிகோ சமூகப் பாதுகாப்பு நிலையத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகள், 1991-ல் மெக்ஸிகோவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிவெறியர்கள் இருந்தார்களென சுட்டிக் காட்டின. ஆனால் 1997-ம் ஆண்டுக்குள்ளாக, அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கலாம் என்று மெக்ஸிகோ நகரின் செய்தித்தாளான எல் யுனிவர்சல் அறிக்கை செய்கிறது. மெக்ஸிகோவிலுள்ள 80 லட்சம் குடிவெறியர்களில் 30 லட்சம் பேர் மெக்ஸிகோ நகரில் இருக்கிறார்கள் என்ற ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸின் கூற்றை அது மேற்கோள் காட்டுகிறது. எல் யுனிவர்சல்-ன்படி, மெக்ஸிகோவில் நடக்கும் பெரும்பாலான குற்றச் செயல்கள் சாராய போதையில் இருக்கும்போது செய்யப்படுகின்றன. மதுபான துர்ப்பிரயோகம், வேலைக்கு மட்டம் போடுவதிலும் பள்ளி பாடங்களை படிப்பதில் தரம் குறைவதிலும் விளைவடைகிறது. “குடும்பத்தில் ஏற்படும் வன்முறையில் ஐம்பது சதவீதமும் வேலையில் ஏற்படும் விபத்துகளில் ஐந்து சதவீதமும் மதுபானத்தோடு நெருங்க சம்பந்தப்பட்டிருக்கின்றன” என்று கெட்ட பழக்கத்துக்கு அடிமையாவதற்கு எதிரான தேசிய கவுன்சிலின் பிரதிநிதி ஹோசே மான்வெல் காஸ்டிரெஹான் சொல்கிறார்.
விமானப் பயணிகளுக்கு துணுக்குகள்
நீண்ட தூர விமானப் பயணம் உடல் மற்றும் மன ரீதியில் அழுத்தத்தை உண்டாக்குகிறது; லண்டனின் செய்தித்தாளான த டைம்ஸ் நிவாரணத்திற்கான சில ஆலோசனைகளை அளிக்கிறது. “மதுபானத்தை தவிர்த்து, ஏராளமான குளிர் பானங்களை குடிப்பது, எளிய உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவது, இரம்மியமான இடத்தில் இருப்பதைப் போல கற்பனை செய்வது” போன்றவை இவற்றுள் அடக்கம். நீண்ட நேரத்திற்கு ஒரே நிலையில் அமர்ந்திருப்பதால் பாதங்கள் வீங்கலாம்; உடை இறுக்கமாகிவிட்டதைப் போலவும் உணரலாம். எனவே, “உடைகளை தளர்த்துவது, ஷுக்களை கழற்றி வைப்பது, நடை பாதையில், கழிவறை வரைக்குமாக அடிக்கடி எழுந்து நடப்பதற்கு வசதியாக பாதையின் ஓரத்தில் உள்ள இருக்கைக்காக கேட்பது ஆகியவற்றை டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள்” என்று த டைம்ஸ் குறிப்பிடுகிறது. பயணத்தின்போது கை, கால்களை, அடிக்கடி நீட்டி நெளிப்பது இரத்த ஓட்டத்தில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். விமானப் பயணத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை (jet lag) எதிர்த்து போராட, “அனுபவம் வாய்ந்த பயணிகள் சில சமயங்களில் பயணத்திற்கு முன்னரே தங்களுடைய அன்றாட அலுவல்களை மாற்றியமைக்கிறார்கள். கிழக்கு திசையில் பயணிக்க இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு சீக்கிரமாக எழுந்து விடுகிறார்கள்; மேற்கு திசையில் பயணிக்க இருப்பவர்கள் படுக்கைக்கு நேரம் கழித்து செல்கிறார்கள்.”
பயணம் செய்யும் டோக்கியோ காகங்கள்
ஜப்பான், டோக்கியோவிலுள்ள காகங்களுக்கு ஒவ்வொரு நாளும் புறநகரிலிருந்து நகரத்துக்கு பயணம் செய்யும் பழக்கம் இருப்பதாக த டெய்லி யொமியூரி குறிப்பிடுகிறது. டோக்கியோவின் பூங்காக்களிலும் கோயில் மைதானங்களிலும் உள்ள காக்கைக் கூட்டத்தின் எண்ணிக்கை சில வருடங்களுக்கு முன்பு அந்தளவுக்கு பெருகியதால், இக்காகங்கள் வேறெங்காவது கூடுகளைக் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டது; அது முதற்கொண்டு இவை இவ்வாறு பயணம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன என்று பறவை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அச்சமயத்தில்தான் இவை புறநகர் பகுதியிலுள்ள வாழ்க்கை சௌகரியங்களை கண்டுபிடித்தன. இருப்பினும், நகரத்தின் கவர்ச்சியான உணவு, குப்பைக்கூளங்கள், எறியப்பட்ட மிச்சமீதங்கள் ஆகியவற்றை இவை இழக்க நேரிட்டது. “கூலியாட்கள் செய்வதைப் போன்ற போக்குவரத்து மாதிரியை உருவாக்குவதன் மூலம் அவை இந்தப் பிரச்சினையை மேற்கொண்டன. அவை உணவைத் தேடி காலையிலேயே நகர்ப்புறங்களுக்கு பறந்து வருகின்றன; மாலையில் புறநகர்ப் பகுதிக்கு திரும்பிவிடுகின்றன” என்று த டெய்லி யொமியூரி கூறுகிறது.
இயற்கை வளம் அச்சுறுத்தப்படுகிறது
◆ தாவரங்களும் விலங்கினங்களும் ஏராளமாக இருக்கும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இப்போது 650 வகை தாவரங்களும் 70 வகை விலங்கினங்களும் மறைந்து வருவதாக பட்டியலிடப்பட்டுள்ளன. வங்காள தேசத்தின் எல்லையிலுள்ள மேகாலயா மாநிலத்தின் வலுவற்ற சூழலியல் அமைப்பு, “உடனடி கவனம்” தேவைப்படும் 18 இடங்களில் ஒன்றாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளது; அங்கு உயிரின வகையினம் அபாயத்தில் உள்ளது. மற்ற காரணங்களோடுகூட, தி ஏஷியன் ஏஜ் குறிப்பிடுகிறபடி, மனிதர்களின் அட்டூழியமும், திருட்டுத்தனமாக வேட்டையாடுதலும் சூழலியல் அமைப்பை பாதித்திருக்கிறது. வடகிழக்கிலுள்ள ஏழு இந்திய மாநிலங்களின் உயிரின வகையினம் நாட்டின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் சூழலியல் முறையில் எளிதில் சிதைவுற்று, எளிதில் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாய் கருதப்படுகிறது.
◆ இத்தாலியில் அழியக்கூடிய அச்சுறுத்தலில் உள்ள தாவர வகைகளும் அவற்றின் உட்பிரிவுகளும் அதிகரித்து வருகின்றன. 1992-ல் 458 வகைகளே மறைந்து வருவதாக கருதப்பட்டது, ஆனால் 1997-ம் ஆண்டிற்குள்ளாக, அவ்வெண்ணிக்கை 1,011-ஆக அதிகரித்துள்ளது. “இத்தாலிய தாவரங்களின் பட்டியலில் உள்ள பல்வேறு வகைப்பட்ட தாவரங்களில், சுமார் ஏழில் ஒன்று, ஏதோ ஒரு விதத்தில் மறைந்து வருகிறது; கடந்த சில ஆண்டுகளில் 29 வகைகள் வரையிலுமாக பூண்டோடு அழிந்திருக்கின்றன” என்று கோரியரே டேல்லா சேரா விளக்குகிறது. 120-க்கும் அதிகமான தாவர வகைகள், “அடுத்த சில ஆண்டுகளில் பூண்டோடு அழியும் பயங்கர அபாயத்தில்” இருக்கின்றன, அதோடு சமீப எதிர்காலத்தில் கிட்டத்தட்ட 150 வகைகள் முற்றிலும் இல்லாமல் போகும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கலாம். “இத்தகைய எண்ணிக்கைகள் அபாயகட்டத்தை அறிவிக்கின்றன” என்று காமரினோ பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் பிராங்கோ பெட்ராட்டி கருத்து தெரிவிக்கிறார். ஒருவகை தாவரம் அது இயற்கையாக செழித்து வளரும் ஒரேவொரு இடமும்கூட கால்பந்தாட்டக்களமாக மாற்றப்பட்டபோது பூண்டோடு அழிந்து போனது.
◆ அர்ஜன்டினா நாட்டைச் சேர்ந்த 2,500 விலங்கினங்களில் 500 வகைகள் ஆபத்தில் இருப்பதாக போனஸ் அயர்ஸின் செய்தித்தாளான கிளாரின் அறிக்கை செய்கிறது. வனவிலங்கு நிறுவனத்தின் பாதுகாப்புத் துறை ஒருங்கிணைப்பாளர் கிளாடியோ பெர்டோனாட்டியின் பிரகாரம், “உயிரின வகையினத்தை பாதுகாப்பது மக்களின் தற்கால, எதிர்கால நலனை உறுதிப்படுத்தும் அம்சமாக இருக்கிறபோதிலும், அநேக விலங்குகள் அழிந்துபோகும் அபாயத்தில் இருக்கின்றன.” அர்ஜன்டினாவில், அர்மடில்லோ, ஜாகுவார், விகுனா, திமிங்கலம், நிலவாழ் ஆமை போன்ற விலங்குகளின் வேறுபட்ட வகைகள் அழிந்துவிடும் அச்சுறுத்தலில் உள்ளன. “அவற்றை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள [நிலையிலும்] சுமார் 1,00,000 ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படுகின்றன” என்று பெரிய போனஸ் அயர்ஸிலிருந்து வரும் அறிக்கை குறிப்பிடுகிறது. “இந்த வள ஆதாரங்களை பாதுகாப்பதில் முதன்மையான ஆர்வத்தை உடையவனாய் இருக்கவேண்டிய மனிதனே, இத்தனையநேக வகைகளை அழிவின் விளிம்பிற்கு கொண்டுசென்ற பெரும் அச்சுறுத்தலுக்கு பொறுப்பு வகிக்கிறான்” என்று பெர்டோனாட்டி குறிப்பிடுகிறார்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை முதலில் பார்த்தவர் மரியாளா?
இயேசுவின் “தாய்க்கு [மரியாளுக்கு] உயிர்த்தெழுந்த இயேசுநாதர் முதலில் காட்சியளித்தாரென சிந்திப்பது நியாயமாக இருக்கிறது” என்று போப் இரண்டாம் ஜான் பால் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். (லோசெர்வெடோர் லோமனோ) இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டபோது, அவருடைய தாய் மரியாள், அங்கே இருந்ததாக, நான்கு சுவிசேஷ பதிவுகளில் ஒன்றில்கூட சொல்லப்பட்டில்லை. இருந்தபோதிலும், போப் இவ்வாறும் சொன்னார்: “முதல் சீஷர்களின் கூட்டத்தில் இருந்த ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி, (அப்போஸ்தலர் 1:14-ஐ ஒப்பிடுக.) தன்னுடைய தெய்வீக மகன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு பார்த்த நபர்களுக்குள் இல்லாதிருப்பது எப்படி?” இயேசுவும் அவருடைய தாயும் எப்போதாவது சந்தித்ததைப் பற்றிய பதிவு சுவிசேஷங்களில் இல்லாமல் போனதைக் குறித்து விளக்க போப் பல்வேறு வாதங்களைப் பயன்படுத்தினார். இப்படிப்பட்ட நிகழ்ச்சி எதையாவது குறிப்பிடும்படி சுவிசேஷ எழுத்தாளர்களை பரிசுத்த ஆவி ஏவவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது. இதே காரணத்தினால்தான் அப்போஸ்தலர்களின் கடிதங்களிலும் மரியாள் குறிப்பிடப்படவில்லை.—2 தீமோத்தேயு 3:16.
தெற்கில் கோடைகால அபாயம்
தென் அரைக்கோளத்தில், ஜனவரி வெப்பம் மிகுந்த மாதங்களில் ஒன்றாகும். கோடை காலத்தில் வெப்பத் தாக்கத்திற்கு (heatstroke) எதிராக பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்று FDA கன்ஸ்யூமர் பத்திரிகை விளக்குகிறது. வெப்பத் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மரணங்களை ஏற்படுத்துகிற போதிலும், அதை முழுமையாக தடுக்கமுடியும் என நாளமில்லாச்சுரப்பி மருத்துவர் டாக்டர் எலிசபெத் கெலர் குறிப்பிடுகிறார். வெப்பத் தாக்கம் வெயிலில் அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படலாம்; ஆனால், ஏர்கன்டிஷன் வசதியில்லாத இடங்களில் வாழும் வயதானவர்களையும், நீரிழிவுநோய், இருதய நோய் போன்ற வெளியே தெரியாத உடல்நலக் கோளாறுகளை உடையவர்களையும்கூட இது தாக்கலாம். வெப்பநிலை அதிகரிக்கும்போது, தண்ணீரை அதிகமாக குடிக்கும்படி, அதாவது உடற்பயிற்சி செய்கிறவர்கள், ஒரு மணிநேரத்திற்கு ஒரு லிட்டர் என்ற கணக்கில் குடிக்கும்படி FDA கன்ஸ்யூமர் பரிந்துரைக்கிறது. வெயிலில் செல்லும்போது, வெயில் காப்பு பொருளையும், அகலமான விளிம்புடைய தொப்பியையும், லூசான உடைகளையும் அணியுங்கள். உங்களிடம் ஏர்கன்டிஷன் வசதியில்லாவிட்டாலும், வெப்பத் தாக்கத்தின் அபாயமிருந்தாலும், “குளிர்ந்த நீரில் குளியுங்கள், உடலில் அடிக்கடி தண்ணீரைத் தெளித்து கொள்ளுங்கள், மேலும் ஃபேன் முன்பு அமர்ந்து கொள்ளுங்கள். மயக்கமாக உணர்ந்தீர்களென்றால், உடனடி மருத்துவ சிகிச்சை பெறுங்கள்.” “யாராவது அதிக வெப்பமாக உணருகிறார்கள் என்றால், அந்நபரைக் காப்பாற்ற உங்களுக்கு ஒருசில நிமிடங்களே உள்ளது” என்று டாக்டர் கெலர் எச்சரிக்கிறார்.
வேலையில் “உளைச்சல்”
“தலைவலி, களைப்பு, பாதிக்கப்பட்ட நினைவாற்றல், பார்வைக் கோளாறு, தூக்கக் கலக்கம், மூச்சுக் கோளாறுகள், மூக்கடைப்பு செவிட்டுத்தன்மை, டின்னிடஸ் [மற்றும்] தோல் வியாதிகள்” ஆகிய இவை அனைத்தும் நோயுண்டாக்கும் கட்டிட நோய்குறி தொகுப்பு (sick building syndrome) அல்லது SBS-ஆல் ஏற்படலாம் என்று ஜான் மூர்ஸ் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளரான ஜேக் ராஸ்டிரன் சொல்கிறார். 1986-ல் உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட SBS, “வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற சலிப்பான விஷயத்தை ஏதோவொரு வகையில் உளைச்சலாக மாற்றலாம்” என்று அவர் குறிப்பிடுகிறார். இறுக்கமாக மூடப்பட்ட ஜன்னல்களுடன் ஓரிடத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஏர்கன்டிஷன் வசதியுள்ள கட்டிடங்களால், போட்டோக்காப்பி மெஷினிலிருந்தும் பிரிண்டர்களிலிருந்தும் வெளிவரும் விஷ வாயுக்கள், துகள்கள் போன்ற காற்றிலுள்ள மாசுப் பொருட்களை ஒன்றுதிரட்ட முடியும் என்று லண்டனின் தி இன்டிபென்டன்ட் அறிக்கை செய்கிறது. SBS-ஐ தவிர்ப்பதற்கு, ஏர்கன்டிஷன் கருவிகளை அடிக்கடி, முழுமையாக சுத்தம் செய்யவேண்டும். “ஜன்னல்கள் திறந்த நிலையிலுள்ள சிறிய அலுவலகங்களை சிறிய தொகுதியான மக்கள் பகிர்ந்து கொள்ளும்போது வேலைத்தரம் முன்னேறுகிறது” என்று ராஸ்டிரன் குறிப்பிடுகிறார்.
குளிர்கால எச்சரிப்பு
குளிர்கால பனியிலும், காற்றிலும் அதிக நேரம் வெளியே இருப்பவர்களுக்கு குறை வெப்பத்திற்கான (hypothermia) அதாவது உடல் வெப்பம் கவலைக்கிடமாக குறையும் அபாயம் உள்ளது என்று த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “உடல், அது வெப்பத்தை உற்பத்தி செய்கிற அளவைக் காட்டிலும் அதை அதிகமாக இழக்கும்போது” இது ஏற்படுகிறது என அதன் அறிக்கை குறிப்பிடுகிறது. கூடுதலாக, “குறை வெப்பம் ஏற்படுவதற்கு தட்பவெப்ப நிலை பூஜ்யத்துக்கும் குறைவாக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்றும் கூறுகிறது. வயதானவர்களின் வளர்சிதை வினைமாற்றம் பெரும்பாலும் வெப்ப இழப்பை ஈடுசெய்ய முடியாதளவுக்கு குறைவாக உள்ளது. பிள்ளைகளும்கூட, இவர்களுடன் மிகப் பெரிய அபாயத்தில் இருக்கிறார்கள். ஒரு நபர் “குளிராகவும், ஈரமாகவும், களைப்பாகவும், பசியாகவும், நடுங்கிக்கொண்டும், தொனதொனத்துக்கொண்டும் [மற்றும்] வெளியே செல்வதை அனுபவிக்காமலும் இருந்தால்” அவருக்கு குறை வெப்பமேற்படும் அபாயம் இருக்கலாம் என்று வில்டர்னஸ் ஃபஸ்ட் எய்ட் ஹேண்ட் புக் குறிப்பிடுகிறது. அத்தகைய நபரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று, உலர்ந்த உடைகள், உணவு, நீர் ஆகாரம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். ஆனால் மதுபானத்தையோ, கேஃபினையோ கொடுக்கக்கூடாது. அவர் குணமடைவதற்கான எந்த அறிகுறியும் தெரியாவிட்டால், மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும்.