ஏர்கண்டிஷனிங் உங்களுக்குத் தேவையா?
இது ஒரு மிக வெப்பமான, புழுக்கமான நாள். வேலையிலிருந்து வீட்டுக்கு நீங்கள் கஷ்டப்பட்டு நடந்து செல்லும்போது சூரியன் உங்கள் மீது இரக்கமின்றி அடிக்கிறது. ஆனால் உங்கள் வீட்டு முன்கதவை நீங்கள் திறக்கும்போது குளிர்ச்சியான, புத்துணர்ச்சியளிக்கும் காற்றலை உங்களை வரவேற்கிறது. ஆ-ஹா-ஹா, ஏர்கண்டிஷனிங்! அது எப்பேர்ப்பட்ட மாற்றத்தை உண்டுபண்ணுகிறது!
ஆனால் அது ஒரு பனிக்கால, குளிர்மிக்க நாளாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் வீட்டின் கதவை திறக்கும் போது, குளிரைத் தணிக்கும் அனலான காற்று உங்களை வரவேற்கிறது. நன்றியுணர்ச்சியோடு ‘ஆ-ஹா-ஹா, ஏர்கண்டிஷனிங்’ என்று நீங்கள் உங்களுக்கே சொல்லிக்கொள்வீர்களா?
ஒருவேளை அப்படி சொல்வதில்லை. ஆனால், அது ஒரு பொருத்தமான பிரதிபலிப்பாக இருக்கும். “ஏர்கண்டிஷனிங் வானிலை வெப்பமாக இருக்கும்போது காற்றை குளிர்ச்சியாக்குகிறது. வானிலை குளிர்ச்சியாக இருக்கும் போது அது காற்றை வெப்பமாக்குகிறது.” என்று உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா விளக்குகிறது.
“ஏர்கண்டிஷனிங்” என்ற பதம் பொதுவாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சூழலில் காற்றை குளிராக்குவது என்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. வீடு, அலுவலகக் கட்டிடம், அரங்கம், திரை அரங்கம், மோட்டார் வண்டி, பேருந்து, இரயில் வண்டி அல்லது வேறு ஏதாவது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் போன்ற எந்த இடமாக இருந்தாலும் அது உபயோகிக்கப்படுகிறது. என்றபோதிலும், காற்றின் தட்பவெப்பத்தைக் காட்டிலும் அதிகமானதை ஏர்கண்டிஷனிங் செய்கிறது; காற்றின் அசைவு, தூய்மை, ஈரம் ஆகியவற்றையும் கூட அது கட்டுப்படுத்துகிறது.
அசெளகரியத்தை உண்டாக்குதல்
ஆனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு சூழலில் எது அளவுக்கு மீறிய வெப்பத்தையும் ஈரத்தையும் உண்டாக்குகிறது? வெப்பத்தின் முக்கியமான ஊற்றுமூலம் சூரியனாகத் தான் இருக்கிறது என்பது உண்மைதான். என்றபோதிலும், நீங்களும், வீட்டில், அலுவலகத்தில், மோட்டார் வண்டியில், அல்லது மற்ற அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் உங்களோடுகூட இருக்கும் மற்றவர்களும்கூட இதற்கு காரணமாய் இருக்கின்றனர். இது ஏனென்றால் மனிதர்களாகிய நாம் வெப்பமும், ஈரமும் உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக இருக்கிறோம். அதிக கடுமையாக வேலை செய்யும் போது, அதிக வெப்பத்தையும் ஈரத்தையும் நாம் உண்டாக்குகிறோம். நாம் அமைதலாக அமர்ந்திருக்கும் போதும்கூட நம்முடைய உடல்கள் ஓரளவு வெப்பத்தையும் ஈரத்தையும் வெளியேற்றுகின்றன.
ஆகையால் நாம் செளகரியமாக இருப்பதற்கு நாம் வெளியேற்றும் வெப்பமும், ஈரமும், நாம் வெளியேற்றும் வேகத்திலேயே நீக்கப்படவும் வேண்டும். அது அதிவேகமாக நீக்கப்பட்டால், நாம் அதிகமாக குளிர்ந்து விடுவோம். அது அதிக மெதுவாக வெளியேற்றப்பட்டால், நாம் அதிக வெப்பமாக ஆகிவிடுவோம். ஒரு பெரிய அறையில் அமைதலாக அமர்ந்திருக்கும் நூறு நபர்கள் உண்டாக்கும் வெப்பத்தையும், ஈரத்தையும் நீக்குவதற்கு மட்டும் தொழில்நுட்ப பதங்களில் சொன்னால், ஒரு மணிநேரத்துக்கு ஏறக்குறைய மூன்று டன்கள் அல்லது 36,000 பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுகள் குளிர்ச்சியாக்குவதை தேவைப்படுத்துகிறது.
எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீக்குச்சி வெளியேற்றும் வெப்பத்துக்கு ஒரு பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் சமமாக இருக்கிறது. (ஒப்பீடாக, 252 கலோரிகள் ஒரு பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு சமமாக இருக்கும் வெப்பத்தை குறிக்கிறது.) ஆக, ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் நபர் வெளியேற்றும் வெப்பம், 360 எரியும் தீக்குச்சிகள் வெளியேற்றும் வெப்பத்துக்கு சமமாக இருக்கிறது! அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு தொகுதி ஜனங்கள் உண்டாக்கும் பெரும் வெப்பத்தோடுகூட விளக்குகள், இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற மின் ஆற்றல் சாதனங்கள் உண்டாக்கும் வெப்பத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆகையால் ஏர்கண்டிஷனிங்கின் அனுகூலம் சுலபமாக புரிகிறது.
ஆதரவாகவும் எதிர்த்தும்
அதிக திருப்தியான உட்புற சூழலை உருவாக்குவது மட்டுமல்லாமல், ஏர்கண்டிஷனிங் உங்களுடைய ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கக்கூடியதாயும் இருக்கும். விசேஷமாக, இச்சாதனத்தை சரியாக உபயோகித்து பாதுகாத்து வந்தால் அவ்வாறு இருக்கும். அது வேனற்கட்டிகளை நீக்கிவிடும். அது மகரந்தத்தை வடிகட்டிவிடுவதால், சளிக்காய்ச்சலால் அவதியுறுபவர்களுக்கு வேதனை தணிப்பதாய் இருக்கலாம். கடுமையான தட்பவெப்ப நிலைகளை மிதமாக ஆக்குவது விசேஷமாக வயதானவர்களின் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கக்கூடும். பழைய காற்றுக்கு பதிலாக புதிய காற்றை வைப்பது, அழுக்கையும் தூசியையும் நீக்குவது போன்றவற்றையும் ஏர்கண்டிஷனிங் செய்கிறது.
என்றபோதிலும், குளிர்பதன அமைவை உபயோகிக்கும் ஏர்கண்டிஷனிங் உடல்நல பிரச்னைகளை உண்டுபண்ணக்கூடும். வெளியில் உள்ள நாற்பது டிகிரி செல்ஷியஸ்-க்கும் மேலாக இருக்கும் வெப்பநிலைக்கும், ஏர்கண்டிஷனிங் உருவாக்கும் 26 டிகிரி செல்ஷியஸ்-க்கும் குறைவான உட்புற வெப்பநிலைக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசத்தின் காரணமாக அநேகர் நோய் அடைந்திருக்கின்றனர். உண்மையில், இக் காரணத்துக்காக சிலர் நவீன ஏர்கண்டிஷனர்களை உபயோகிப்பதற்கு பதிலாக சீலிங் (Ceiling) மின்விசிறிகளை உபயோகித்து அதிலிருந்து பயனடைந்திருக்கின்றனர்.
மறுபட்சத்தில், அலுவலக வேலையாட்கள் அதிகமாக வேலை செய்வதற்கு ஏர்கண்டிஷனிங் உதவியளிப்பதாக சொல்லப்படுகிறது. கட்டிடத்துக்குள் இருக்கும் அரங்கத்தில் மாநாடுகளுக்கு ஆஜராகும் பிரதிநிதிகள் அதிக கவனமாக கேட்பதற்கும் கூட அது உதவி செய்கிறது. இப்படிப்பட்ட வசதிகள் வெப்பமாகவும், புழுக்கமாகவும் இருந்தால் விழிப்புடன் இருப்பது ஒரு போராட்டமாக இருக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
அநேக தொழிற்சாலைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கும் கூட ஏர்கண்டிஷனிங் மிகவும் இன்றியமையாததாய் இருக்கிறது. விசேஷமாக உணவு தொழிற்சாலையில் ஏர்கண்டிஷனிங் ஓர் உடைமையாக இருக்கிறது. உணவு வகைகளை கெட்டுப் போகச் செய்யும் நுண்மங்களின் வளர்ச்சியை தடை செய்வதன் மூலம், வருடம் முழுவதுமாக அவைகளை பதப்படுத்தி வைப்பதற்கு ஏர்கண்டிஷனிங் உதவுகிறது. பேக்கரிகளில் இருக்கும் மாவில் பூஞ்சக்காளான் பிடிக்காமல் அது பாதுகாக்கிறது. பாலடைக்கட்டிகள் செய்வதற்கு அது பயன்படுகிறது. ஒரு சமயம் ராக்ஃபோர்ட் பாலடைக்கட்டிகள், ஃபிரான்சில் இருக்கும் குளிர்ந்த, ஈரமான காற்று நிறைந்திருக்கும் சில குகைகளில் மட்டும் தான் செய்ய முடிந்தது. ஆனால் குகைகளில் இருக்கும் அதே சூழலை உருவாக்கும் ஏர்கண்டிஷனிங் உதவியோடு அதே போன்ற பாலடைக்கட்டிகள் வேறு இடங்களிலும் செய்யப்படலாம்.
என்றபோதிலும், நவீன கால ஏர்கண்டிஷனிங் அநேகர் மரித்துப் போவதிலும், வியாதியடைவதிலும் கூட விளைவடைந்திருக்கிறது. உதாரணமாக, 1976-ல் அமெரிக்க படையணிப் பிரிவின் மாநாடு ஒன்றின்போது, படைவீரர்களின் நோய் என்று பின்னர் அழைக்கப்பட்ட நோயை 182 படைவீரர்கள் பற்றிக்கொண்டனர். 29 பேர் மரித்தனர். இந்த நோய் பரவியதைக் குறித்து தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு குறிப்பிட்டது: “மத்திப ஏர்கண்டிஷனிங் அமைவுகளில் இருக்கும் மாசுபடுத்தப்பட்ட நீர் லீஜெனெல்லா நியுமோஃபிலியா-வை (Legionella pneumophilia) சிறு துளிகளாக சுற்றியிருக்கும் சூழலுக்குள் பரவச் செய்யக்கூடும் என்பதாக சந்தேகிக்கப்படுகிறது.” சரியாக பராமரிக்கப்படாத மத்திப ஏர்கண்டிஷனிங் அமைவுகள் காற்று மாசுபடுத்தப்படுவதற்கு காரணமாய் இருந்திருக்கின்றன. அதுவும் கூட மற்ற நோய்கள் உண்டாகும்படி செய்திருக்கின்றன.
ஒரு தேவையை பூர்த்தி செய்தல்
ஏர்கண்டிஷனுக்கான மெய்யான தேவையை அநேக ஜனங்கள் உணருகின்றனர். கடந்த காலங்களில் ஈரமான புல் பாய்கள் ஜன்னல்கள் அல்லது கதவுகள் மீது கோடை காலத்தில் தொங்கவிடப்பட்டன. அவை ஈரத்தை ஆவியாய் மாற்றியபோது உள்ளே வரும் காற்று குளிர்ச்சியாக்கப்பட்டது. சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, முதல் இயந்திர விசிறி உருவாக்கப்பட்டது. காற்றை சுற்றிச் செலுத்துவதன் மூலம் அது வெப்பத்தை தணியச் செய்தது. கோடை காலத்தின்போது குளிர்ச்சியாக இருப்பதற்கு ஒரு நல்ல மின்விசிறி கொடுக்கும் காற்றோட்டம் தான் தங்களுக்கு தேவை என்பதை இன்றும் கூட அநேகர் கண்டிருக்கின்றனர்.
ஈரம் குறைவாக இருக்கும் பாலைவனம் போன்ற இடங்களில் மலிவான குளிர்ச்சி செய்யும் முறையை அநேகர் அனுபவிக்கின்றனர். அப்படிப்பட்ட ஓர் அமைவில், ஈரமான நார் பாய் மூலம் வெளிப்புற காற்று உறிஞ்சப்படுகிறது. அவ்வாறு அந்தக் காற்று கட்டிடத்துக்குள் நுழைவதற்கு முன்பே குளிர்ச்சியாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட குளிர்ச்சி செய்யும் முறையில், குளிர்ச்சியாக்கப்பட்ட காற்று உள்ளே கொண்டு வரப்படும் அதே வேகத்தில் உட்புற காற்று வெளியேற அனுமதிக்க வேண்டும். அநேக ஜன்னல்களை சிறிது திறந்து வைப்பது போதுமானதாய் இருக்கும். என்றபோதிலும், இந்த ஏர்கண்டிஷனிங் முறை திருப்தியற்றதாக நிரூபித்திருக்கிறது. ஏனென்றால் காற்றில் இருக்கும் ஈரம் அசெளகரியமான அளவுக்கு உயர்த்தப்படுகிறது.
காற்றை குளிரால் உறைவிக்கிற முறை ஒன்று சமீப காலங்களில் உருவாக்கப்பட்டபோது ஒரு தேவை பூர்த்திசெய்யப்பட்டது. உண்மையில், நவீன கால ஏர்கண்டிஷனர் இயங்குமுறையின் நியமம், உணவை குளிர்ச்சியாக வைப்பதற்கு உபயோகப்படுத்தும் வீட்டு குளிர்சாதனப் பெட்டிக்கு ஒத்ததாக இருக்கிறது. ஆக, ஏர்கண்டிஷண்ட் கட்டிடம்—உங்களுடைய வீடு அல்லது அலுவலகம்—ஒரு பெரிய குளிர்சாதனப் பெட்டியாக ஆகிறது.
உட்புற காற்றின் தட்பவெப்ப நிலையை குறைப்பதற்கு, அனலான காற்று குளிர் செய்யப்பட்டு சுற்றிச் செலுத்தப்படுகிறது. இதை செய்வதற்கு விரைவில் ஆவியாகும் உறைவிக்கிற பொருள், ஒரு திரவம் கம்பிச் சுருள்களுக்குள்ளே சுற்றிச் செலுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட கம்பிச் சுருள்களின் மீது விசிறியின் மூலம் அனலான காற்றை அடிக்கும்போது, உறைவிக்கும் பொருள் ஆவியாக மாறி வெப்பத்தை உறிஞ்சிக் கொள்கிறது. இவ்வாறு காற்றை குளிர்ச்சியாக்குகிறது. இப்படி கட்டுப்பாடு செய்யப்பட்ட காற்று பின்னர் குளிர வைக்கப்படும் இடத்துக்கு திரும்பி அனுப்பப்படுகிறது. காற்று குளிர்ச்சியாக்கப்படும்போது சிறிது ஈரமும் நீக்கப்படுகிறது. குளிர்மிக்க கம்பிச் சுருள்களின் மீது அது உறைந்து, வடிந்து போகிறது.
இதற்கிடையே உறைவிக்கும் பொருள் ஆவியாக மாறுகிறது. ஏனென்றால் அது வெப்பத்தை உறிஞ்சிக் கொள்கிறது. பின்னர் அது அழுத்தும் கருவிக்குள் (கம்பிரஸர்) செல்கிறது. அங்கே அது அழுத்தக் கட்டுப்பாடு செய்யப்படுகிறது. பின்பு அது உறைவிக்கும் கம்பிச் சுருள்களுக்குள் வலிந்து புகுத்தப்படுகிறது. அங்கே அது தன் வெப்பத்தை வெளியேற்றுகிறது. திரவ நிலைக்கு திரும்புகிறது. கட்டிடத்திலிருந்து வெப்பம் வெளியேற்றப்படுகிறது. உறைவிக்கும் பொருள் ஆவியாக மாற்றும் சுருள்களின் வழியே மறுபடியும் சுற்றிச் செல்கிறது. குளிர வைக்கும் வழிமுறையை தொடர்ந்து செய்வதற்கு அது அவ்வாறு செய்கிறது.
உறை குளிரூட்டுவதன் மூலம் காற்றை கட்டுப்பாடு செய்யும் வழிமுறை சமீபத்தில் தொடங்கப்பட்ட முறையாகும். மனித செளகரியத்துக்காகவே செய்யப்பட்ட ஏர்கண்டிஷனிங் அமைவு ஒன்று முதல் முதலாக ஒரு திரைப்பட அரங்கில் 1922-ல் உபயோகப்படுத்தப்பட்டது. இரயில்களுக்கான முதல் ஏர்கண்டிஷனிங் அமைவு 1931-ல் பொருத்தப்பட்டது. மோட்டார் வண்டிகளில் 1939-ல் முதலில் பொருத்தப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு பேருந்துகளில் ஏர்கண்டிஷனிங் அமைவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1930-களின்போது வீடுகளும், அடுக்ககங்களும் ஏர்கண்டிஷனிங்கை உபயோகிக்க ஆரம்பித்தன.
ஏர்கண்டிஷனுக்கான தேவையை ஜனங்கள் உணருவது தெளிவாகவே வித்தியாசப்படுகிறது. என்றபோதிலும், 22 டிகிரி செல்ஷியஸிலிருந்து 26 டிகிரி செல்ஷியஸ் வரை உள்ள தட்பவெப்ப நிலையோடு 40 சதவீதத்திலிருந்து 60 சதவீதம் வரையான ஈரப்பதத்தை பெரும்பாலான ஆட்கள் செளகரியமானதாக உணருகின்றனர். வானிலை குளிராக இருக்கும்போது, தட்பவெப்ப நிலை 22 டிகிரி செல்ஷியஸிலிருந்து 24 டிகிரி செல்ஷியஸ் வரை இருந்தால் பெரும்பாலான ஆட்கள் செளகரியமாக இருப்பர்.
மறுபட்சத்தில், வெளியே வெப்பமாக இருக்கும்போது உட்புற தட்பவெப்ப நிலையை 24 டிகிரி செல்ஷியஸிலிருந்து 27 டிகிரி செல்ஷியஸ் வரை ஏர்கண்டிஷனிங்கை வைத்தால் பெரும்பாலான ஆட்கள் செளகரியமாக இருப்பர். ஆனால் வெளியே இருக்கும் தட்பவெப்ப நிலை மிக உயர்வாக இருந்தால், மேலும் ஒருவர் அடிக்கடி உள்ளேயும் வெளியேயும் சென்றுகொண்டிருந்தால், அவருடைய ஆரோக்கியத்துக்காக உட்புற தட்பவெப்ப நிலையை பொதுவாக இருப்பதை விட அதிகமாக வைப்பது ஞானமானதாய் இருக்கும்.
அது உங்களுக்குத் தேவையா?
ஆகையால், உங்களுடைய சூழ்நிலைமைகளைப் பொறுத்து ஏர்கண்டிஷனிங் அதிக செளகரியமான சுற்றுப்புறங்களை உங்களுக்கு அளிக்கலாம். உலகில் உள்ள சில இடங்களில் அது தேவைப்படுவதுமில்லை அல்லது விரும்பப்படுவதுமில்லை என்பது உண்மைதான். அல்லது ஓர் ஏர்கண்டிஷனர் வாங்குவது பண வகையில் உங்களுக்கு சமாளிக்க முடியாததாய் இருக்கலாம்.
என்றபோதிலும், ஏர்கண்டிஷனிங்கிலிருந்து நீங்கள் பெறக்கூடிய பயன்கள், அதை வாங்குவதற்கு நீங்கள் செலவழிப்பது தகுதியானது என்று நீங்கள் தீர்மானிக்க செய்யக்கூடும். ஏர்கண்டிஷனிங் அமைவு சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அளவெடுக்கப்பட்டு, நிறுவப்பட்டு, இயக்குவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தால், குறைந்த செலவோடு நீண்ட காலம் அது உங்களுக்கு உதவும். உண்மையிலேயே அது உங்களுடைய செளகரியத்தை அதிகரிக்கும். (g91 6⁄22)