அவர்களுடைய விசுவாசம் மலைகளை பெயர்க்கிறது
பியுஎன்னஸ் ஏர்ஸ்-ன் தினசரி செய்தித்தாளான குரோனிகா (Cronica) மேலே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பைக் கொண்டு ரிவர் ப்ளேட், வெலஸ் சார்ஸ்பீல்ட் என்ற உதைபந்தாட்ட அரங்கங்களில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டை பற்றி அறிக்கை செய்தது. இருபதுக்கும் மேலான தேசங்களிலிருந்து ஏறக்குறைய 6,000 வெளிநாட்டு பிரதிநிதிகள் “சுத்தமான பாஷை” மாநாட்டுக்கு வந்திருந்தனர். தங்கள் பத்தாயிரக்கணக்கான அர்ஜன்டினா சகோதரர்களோடு சேர்ந்துகொள்வதற்கு அர்ஜன்டினா வரை பயணம் செய்ய பலமான விசுவாசம்தான் அவர்களை உந்துவித்தது. அநேக உள்ளூர் சபைகளின் கொரியா சாட்சிகளும் இந்த மொத்த எண்ணிக்கையில் இருந்தனர். பிரிட்டன், கானடா, சில்லி, ஜப்பான், ஸ்பெய்ன், ஐக்கிய மாகாணங்கள் (அலாஸ்கா உட்பட) இன்னும் மற்ற அநேக தேசங்களிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்தனர். எது அவர்களை உந்துவித்தது? அர்ஜன்டினாவில் நடத்தப்பட்ட இரண்டாவது சர்வதேச மாநாட்டுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற அவர்களுடைய விருப்பம்.
புதிய பெத்தேல் பிரதிஷ்டை
ஆனால் மாநாட்டு சமயத்துக்கு முன் பெரிய விசுவாச செயல்கள் நடைபெற்றிருந்தன. யெகோவாவின் சாட்சிகளின் சங்கத்தின் புதிய அர்ஜன்டினா கிளைக்காரியாலயம், ஆளும் குழுவைச் சேர்ந்த விஜயம் செய்யும் பேச்சாளராகிய தியாடர் ஜாரஸ் என்பவரால் அக்டோபர் மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 259 சர்வதேச வாலன்டியர் வேலையாட்களும் 690 அர்ஜன்டினா வேலையாட்களும் சேர்ந்து புதிய குடியிருப்பு வளாகத்தை கட்டினார்கள். பெத்தேல் அல்லது “கடவுளின் வீடு” பியுஎன்னஸ் ஏர்ஸ்-ல் மரங்கள் அடங்கி இருக்கும் பகுதியில் அமைந்திருக்கிறது. அது 129 தங்கும் அறைகளும் 300 பேருக்கு சாப்பாட்டு அறையும் உடையதாய் இருக்கிறது. அர்ஜன்டினாவில் 84,000-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இருக்கின்றனர். கூடுதலான அதிகரிப்புக்கு வாய்ப்பு இருப்பதால், இப்புதிய கிளைக்காரியாலய கட்டிடம் விரைவில் முற்றிலும் நிரம்பிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
“சுத்தமான பாஷையோடு யெகோவாவின் சாட்சிகள்”
சர்வதேச மாநாட்டின் “சுத்தமான பாஷை” என்ற பொருள் செய்தியாளர்கள் உட்பட அநேகரின் ஆர்வத்தைத் தூண்டியது. குரோனிகா (Cronica) என்ற செய்தித்தாள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை சிறப்பித்துக் காட்டியது. “சுத்தமான பாஷை” என்ற சொற்களின் பொருள் விளக்கத்தை ஒரு பேச்சாளர் எடுத்துக் கூறியதை மேற்கோள் காட்டியது: “கடவுளைப் பற்றியும், பூமிக்கும் மனிதனுக்குமான அவருடைய நோக்கத்தை பற்றியும் பைபிளில் அடங்கியிருக்கும் சத்தியத்தின் சரியான புரிந்துகொள்ளுதல் . . . யாராவது ஒருவர் சுத்தமான பாஷையை பேச கற்றுக்கொள்ளும்போது, அவருடைய சிந்திக்கும் முறை, அவருடைய பேச்சு, அவருடைய நடத்தை ஆகியவை ஒரே மெய்க் கடவுளாக கடவுளை அறிந்துகொள்வதைச் சுற்றி அமைகின்றன.”
பத்து லட்சத்துக்கும் மேலான ஜனங்களையுடைய பரந்து கிடக்கும் தலைநகரான பியுஎன்னஸ் ஏர்ஸ் பட்டணம், அதன் மத்தியில் மாநாடு நடத்தப்படுவதை பற்றி நன்கு அறியும்படி செய்திருந்தது. ஆறு-நாளைய காலப் பகுதியின் போது, வானொலி மற்றும் டிவியில் ஒழுங்கான இடைவெளியில் 40-விநாடிகள் சுருக்கமான அறிவிப்பு செய்யப்பட்டது. சட்டப்படி, இச்சம்பவத்துக்கு இலவசமான விளம்பரம் கொடுக்கப்பட்டது. சனிக்கிழமை நிகழ்ச்சிநிரலில் புதிய சாட்சிகள் முழுக்காட்டப்பட்ட போது அது செய்தியாளர்களை கவர்ந்திழுத்தது. இரண்டு அரங்குகளின் ஒவ்வொரு முனையிலும் 3 நீர்த்தொட்டிகள் பார்வையாளர்கள் காணும்படி அமைத்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் பிற்பகல் நிகழ்ச்சிநிரலுக்கு முன்பு முழுக்காட்டுதலை முடிப்பதற்கு 12 நீர்த்தொட்டிகள் கூட போதவில்லை. ஆகையால், ரிவர் ப்ளேட் அரங்கில் இருந்த நீர்த்தொட்டிகள் பார்க்க முடியாதபடி மற்றொரு இடத்தில் கொண்டு அமைத்து வைக்கப்பட்டன. ரிவர் ப்ளேட்-ல் 1,363 பேரும், வெலஸ் சார்ஸ்பீல்ட்-ல் 748 பேரும் முழுக்காட்டப்பட்டனர், மொத்தமாக 2,111 பேர் முழுக்காட்டப்பட்டனர்! குரோனிகா (Cronica) செய்தித்தாள் தலைப்பு இவ்வாறு வாசித்தது: “ரிவர், வெலஸ் என்ற இடங்களில் விசுவாசத்தின் மற்றொரு மகத்தான வெளிக்காட்டு—சாட்சிகள் முழுக்காட்டுதல் பெற்றனர்.” இரண்டு மாநாடுகளுக்கும் ஆஜரானவர்களின் மொத்த எண்ணிக்கை 67,000-க்கும் மேற்பட்டதாயிருந்தது.
சர்வதேச பங்கெடுப்பு
பல வண்ண சபையார் நடுவே சென்று பார்த்தால், இனம், கலாச்சாரம் ஆகியவை சார்ந்த சரீரப்பிரகாரமான வித்தியாசங்கள் தெளிவாக காணப்பட்டன. இங்கு ஓர் அர்ஜன்டினா சகோதரி விசேஷ மரக் கோப்பை ஒன்றிலிருந்து உலோக பாம்பேயா அல்லது குழாய் வழியாய் யேர்பா மாடே-ஐ, அதாவது, தேயிலை பானத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்பெய்ன் தேசத்திலிருந்து வந்த 800 பேர்களில் இருந்த சகோதரிகள் அத்தேசத்தின் அழகான ஆடைகளை அணிந்திருந்தனர். ஜப்பானிலிருந்து வந்த 900 பேர்களில் சில பெண்கள் பாரம்பரிய கிமோனோக்களை அணிந்திருந்தனர். மெக்சிக்கோவிலிருந்து வந்த பிரதிநிதி ஒருவர் கறுப்பு நிற உடுப்பும், அகல்விளிம்பு மெக்சிக்கோ தொப்பியும் அணிந்திருந்தார். இப்படிப்பட்ட வெளிப்புற வித்தியாசங்கள் இருந்தபோதிலும், அவர்களுடைய ஆவிக்குரிய ஒற்றுமை எல்லாரும் காண்பதற்கு தெளிவாக இருந்தது. மாநாட்டின் முடிவிலே அநேகர் நினைவுப் பொருள்களை ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டனர்—மாநாட்டு அட்டைகள், பேனாக்கள், போஸ்ட் கார்டுகள்—இந்த அழகிய சம்பவத்தின் நினைவுகூருதலாக சேவிக்கும் எதையும் அவர்கள் கொடுத்தனர்.
மாநாட்டு ஆவி விமான நிலையங்களுக்குள்ளும் நிரம்பி வழிந்தது. இது விசேஷமாக மியாமி, ஃப்ளாரிடா, அ.ஐ.மா.-ல் தெளிவாக இருந்தது. இங்கு பயணத்தை தொடருவதற்காக விமானத்துக்கு காத்துக்கொண்டிருந்தபோது, அநேக தொகுதிகள் ஒன்றோடொன்று சந்திக்க நேர்ந்தது. பியுஎன்னஸ் ஏர்ஸ்-லிருந்து திரும்பி வந்த போது, ஐக்கிய மாகாணங்களிலிருந்து ஒரு பெரிய தொகுதி ஜப்பானிலிருந்து வந்த தொகுதியை எதிர்ப்பட்டது. அவர்கள் மெக்சிக்கோவுக்கு செல்லும் வழியில் இருந்தனர். விரைவில் எல்லா அமெரிக்க பயணிகளும் தங்கள் ஆர்வமுள்ள ஜப்பானிய கூட்டாளிகளோடு சம்பாஷிப்பதற்கு நிறுத்தி வைக்கப்பட்டனர். நடந்து கொண்டிருந்தவைகளைப் பார்த்து கிளர்ச்சியடைந்தவர்களாய், அந்த இடத்தில் இருந்த பொதுமக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அது அவர்களுடைய ஆவலைத் தூண்டியது. சாட்சிகள் தங்களுடைய “சுத்தமான பாஷையின்” ஆவியை பகிர்ந்து கொண்டிருந்தனர்!
மாநாட்டு நிகழ்ச்சிநிரலும், சர்வதேச கூட்டுறவும் அத்தனை மேலோங்கி இருந்ததால், ஞாயிற்றுக்கிழமை மாநாடு முடிந்தபோது அரங்குகளை விட்டு செல்ல எவருக்குமே விருப்பமில்லை. வித்தியாசமான தேசிய தொகுதிகள் ராஜ்ய பாட்டுகளை பக்க இசை இல்லாமலேயே தங்கள் வித்தியாசமான மொழிகளில் தாமாகவே பாடத் தொடங்கினர். தங்கள் கைக்குட்டைகளை ஒருவருக்கொருவர் ஆட்டி அசைத்தனர். சந்தோஷமான மாநாட்டு பிரதிநிதிகள் இறுதியில் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கு முன் இது ஏறக்குறைய ஒரு மணிநேரம் நடந்தது. எளிதில் ஆச்சரியமடையாத அர்ஜன்டினா செய்தித்தாள் புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “இது அர்ஜன்டினாவில் இதற்கு முன்பு ஒருபோதும் நடந்ததில்லை . . . இப்படிப்பட்ட உணர்ச்சிகளும், அனலான அன்பும்!” (g91 7⁄8)
[பக்கம் 15-ன் படங்கள்]
பியுஎன்னஸ் ஏர்ஸ்-ல் டிசம்பர் 6-9, 1990 நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் இரண்டு “சுத்தமான பாஷை” மாநாடுகளுக்கு 67,000-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்
[பக்கம் 16-ன் படங்கள்]
புதிய அர்ஜன்டினா கிளைக்காரியாலய வளாகம் 84,000-க்கும் மேற்பட்ட சாட்சிகளை சேவிப்பதற்கு தயாராயிருக்கிறது