“1990 சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டுக்குவருகைத்தாருங்கள்
1 1990-ம் ஆண்டு மாவட்ட மாநாடுகள் “சுத்தமான பாஷை” என்ற பொருளைக் கொண்டிருக்கும். அதற்கு ஆஜராகும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். இந்தியாவில் 26 மாநாடுகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அவைகள் செப்டம்பர் 27-ல் துவங்கி ஜனவரி 6, 1991 வரையாக நீடிக்கும். நகரங்கள், மொழிகள், தேதிகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பட்டியல் மார்ச் 1, 1990 தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டது.
2 செப்பனியா 3:9-ல் யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தை சொல்வதாவது: “அப்பொழுது ஜனங்களெல்லாரும் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.” இந்த ஆண்டு மாநாடு அந்தச் சுத்தமான பாஷையை அடையாளங்காட்டுவது மட்டுமல்லாமல் அதைக் கற்றுக்கொள்வதும் அதைத் தடங்கலின்றி தெளிவாக பேசுவதும் ஏன் அவ்வளவு முக்கியமானது, மேலும் அதைப் பயன்படுத்துவதற்கான நம்முடைய திறமை எப்படி உலகளாவிய சகோதரத்துவத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்துகிறது என்பதையும்கூட மதித்துணருவதற்கு நமக்கு உதவிசெய்யும்.
3 சீக்கிரமாக வந்து சேரவும்: யெகோவாவின் அமைப்பு அவருடைய ஆவிக்குரிய பந்தியில் வந்து போஜனம் பண்ணும்படி நம்மை அழைக்கிறது. சரியான நேரத்துக்கு வருவது மரியாதையையும் போற்றுதலையும் காண்பிப்பதற்கான அறிகுறிகளாகும். உண்மையில் இது நாம் ஒவ்வொரு நாளும் சீக்கிரமாக வந்து சேருவதையும் நிகழ்ச்சிநிரல் ஆரம்பிக்கும் முன்னே இருக்கைகளில் வந்து அமர்ந்துவிடுவதையும் குறிக்கிறது. கவனிக்கப்பட வேண்டிய சில காரியங்களுக்காக அதாவது வாகனத்தை நிறுத்துவது நம்முடைய குடும்பத்தாருக்குப் பொருத்தமான இருக்கைகளைக் கண்டுபிடிப்பது ஆகியவற்றிற்காக போதிய நேரத்தை அனுமதிப்பதை இது கேட்கிறது.—1 கொரி. 14:40.
4 கடந்த ஆண்டு போலந்து மாநாடுகளுக்கு வருகைத் தந்தவர்கள் தங்களுடைய சகோதரர்களின் தேவபக்தி, அன்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் மனங்கவரப்பட்டார்கள். மாநாடு கொண்டுவரவிருந்த ஆவிக்குரிய ஏற்பாடுகளுக்கான ஆழமான போற்றுதல் வெளிப்படையாகக் காணப்பட்டது. ஒவ்வொரு நாளும் சகோதரர்கள் மாநாடு நிகழும் இடத்துக்குக் காலையில் சீக்கிரமாக வந்து அமர்ந்து ஆரம்ப பாட்டுக்கும் ஜெபத்துக்கும் ஆயத்தமாக இருந்தனர். அவர்கள் முடிவு பாட்டு, ஜெபம் வரையில் தங்கியிருந்து, நிகழ்ச்சிநிரலுக்குப் பிற்பாடு தங்களுடைய சகோதரருடன் தோழமைக் கொள்வதற்காக தாமதித்து கொண்டிருந்தார்கள்.
5 சகோதரர்களின் சீரொழுங்கு நல்ல முன்மாதிரியாக இருந்தது. அவர்கள் கேட்டு கற்றுக்கொள்ள வந்திருந்தனர். போஸ்னன் மற்றும் கோர்ஸோ ஆகிய திறந்தவெளி அரங்குகளில் மழைபொழிவு இருந்தபோதிலும் நிகழ்ச்சிநிரலிலிருந்து அவர்களுடைய கவனம் திசைமாறவில்லை. சிறு பிள்ளைகள் உட்பட வந்திருந்த இளைஞர்கள் நல்ல கட்டுப்பாடும் அமைதியும் உள்ளவர்களாக நிகழ்ச்சிக்கு நன்கு செவிசாய்த்தார்கள். குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் யெகோவாவின் பந்திக்கு ஆழ்ந்த மரியாதையை வெளிக்காட்டுவதில் நல்ல முன்மாதிரியாக இருந்தார்கள். அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் எப்படி நன்மையடையலாம்?
6 மற்றவர்களுடைய சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவது வேதப்பூர்வமானது. (2 தெச. 3:7) நம்முடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகள் வேறுபட்டபோதிலும் நம்முடைய மாநாடுகளிலிருந்து நாமும்கூட மிகுதியானவற்றை அடைய விரும்புகிறோம். மாநாட்டு மன்றத்துக்கு தாமதமாக புறப்படுவதன் காரணமாக ஏற்படும் பரபரப்பு மனஅமைதியின்மை ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக சில குடும்பங்கள் படுக்கைக்குச் செல்ல நியாயமான ஒரு நேரத்தை ஒதுக்கிவிடுவதை பயனுள்ளதாக காண்கின்றனர். அட்டவணையை உறுதியாய் கடைப்பிடிப்பதன் மூலம் பெரும்பாலும் அவர்கள் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற்று அடுத்த நாள் சீக்கிரமாக புறப்படுவதற்கு ஆயத்தமாக இருக்கக்கூடும். இது நிகழ்ச்சிநிரல் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது வந்து சேருவதைத் தவிர்க்கிறது. ஏனெனில் இது ஏற்கெனவே அமர்ந்து இருப்பவர்களுடைய கவனத்தைக் குலைக்கக்கூடும் மற்றும் தொல்லைத்தருவதாயுமிருக்கக்கூடும். இவ்விஷயத்தில் நம்முடைய முன்யோசனையானது யெகோவா தேவனுக்குப் பயபக்தியையும் மரியாதையையும் மற்றும் நம்முடைய சகோதரர்களுக்கு அன்பையும் கரிசனையையும் வெளிக்காட்டுவதாக இருக்கக்கூடும்.
7 நான்கு–நாள் மாநாடு: “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாடு நான்கு நாட்களுக்கு நீடிக்கும். இது வியாழன் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று மாலை சுமார் 5.10 மணிக்கு முடிவடையும். ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 4.00 மணிக்கு முடிவடையும். வெள்ளி முதல் ஞாயிறு வரையில் நிகழ்ச்சிநிரலானது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும். ஒவ்வொரு நாளும் சுத்தமான பாஷையைப் பேசுவது சம்பந்தப்பட்ட இன்றியமையாத தகவல்களைக் கொண்டிருக்கும். சொற்பொழிவுகளும், நடிப்புகளும், அனுபவங்களும், தொடர்பேச்சுகளும், இரண்டு பைபிள் நாடகங்களும் இருக்கும்.
8 ஒரு நிகழ்ச்சிநிரலையும்கூட தவறவிடக்கூடாது என்ற தீர்மானத்தைச் செய்துகொள்ளுங்கள். இது உங்களுடைய அட்டவணையில் சில தனிப்பட்ட தியாகங்களையும் சரிமாற்றங்களையும் தேவைப்படுத்தலாம். ஒருசிலர் தங்களுடைய எஜமானரிடம் விசேஷித்த ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டிய அவசியத்தை காணக்கூடும். எல்லா நிகழ்ச்சி நிரலுக்கும் ஆஜராவதற்காக வேண்டி ஒரு சிலர் பணவருவாய் சம்பந்தப்பட்ட நன்மைகளையும்கூட விட்டுக்கொடுக்கின்றனர். என்றபோதிலும் கடந்த ஆண்டு போலந்தில் மாநாடுகளுக்கு ஆஜராவதற்காகவேண்டி நம்முடைய சகோதரர்களில் அநேகர் எதைத் தியாகம் செய்திருக்கிறார்கள் எதை அனுபவிக்க வேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள். உங்களுடைய மாநாட்டில் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுக்கும் ஆஜராயிருக்கும்படிக்கு இது உங்களை எல்லாவிதங்களிலும் தூண்டவில்லையா? இந்தக் காரியத்தை ஊக்கமான ஜெபத்தின் ஒரு பொருளாக வைத்து ஆஜராவதற்காக இருதயப்பூர்வமாக முயற்சி எடுக்கக்கூடியவர்களை யெகோவா நிச்சயமாகவே ஆசீர்வதிப்பார்.—எபி. 10:24, 25.
9 கடந்த ஆண்டு மாவட்ட மாநாட்டுக்கு ஆஜரானபின்பு மத்திய மேற்கிலிருந்து வந்த ஒரு குடும்பம் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை கவனியுங்கள். அவர்கள் சொன்னதாவது: “அது போதனைகள் அடங்கிய மிக நேர்த்தியான நிகழ்ச்சிநிரல். நாங்கள் அனைவரும் அதைப் பாராட்டினோம். எங்களுடைய இருதயத்தை தொட்ட முக்கியமான ஒரு புதிய அம்சமானது புதிய பிரசுரங்களை நீங்கள் வெளியிட்ட அந்த முறையாகும். நானும் என்னுடைய மனைவியும் நாங்கள் கூட்டுறவுக் கொண்டிருந்த பல ஆண்டுகளினூடே எந்த ஒரு மாநாட்டிலும் இதுவரை இருந்ததைக் காட்டிலும் மெய்யாகவே காண்பதற்கும் மிக அதிகமாக கொடுப்பதற்கும் உந்துவிக்கப்பட்டோம். இதில் நாங்கள் மட்டும் தனித்தவர்களாக இருக்கவில்லை. வழக்கத்துக்கும் அதிகமாக செய்யும்படி எங்களை உந்துவித்த அந்தப் புதிய ஏற்பாடு சம்பந்தப்பட்ட ஒரு காரியமும் இருந்தது. என்றபோதிலும் யெகோவா நமக்காக செய்திருக்கும் எல்லாவற்றிற்காகவும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறவற்றிற்காகவும் போதுமானவற்றை நம்மில் எவராலும் கொடுக்கமுடியாது.”
10 கவனமாய்ச் செவிகொடுங்கள்: சங்கீதம் 50:7-ல் யெகோவா சொல்லுவதாவது: “என் ஜனமே, கேள் நான் பேசுவேன்.” ஆகையால் நிகழ்ச்சிநிரலின்போது மேடையிலிருந்து அளிக்கப்படும் தகவல்களுக்கு சம்பந்தமில்லாத காட்சிகளாலும் சப்தங்களாலும் திசைத் திரும்பிவிடாதீர்கள். சுத்தமான பாஷையைத் தெளிவாகப் பேசவேண்டும் என்ற நமது ஆவல் ஏசாயா 55:2-லுள்ள யெகோவாவின் வேண்டுகோளுக்கு முழுவதுமாக இணங்க நம்மை உந்துவிக்க வேண்டும். “எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்.”
11 இந்த மாநாட்டில் வழங்கப்படவிருக்கும் எல்லாத் தகவல்களும் நம்முடைய ஆவிக்குரிய தேக ஆரோக்கியத்திற்கேயாகும். நாம் யெகோவாவுக்குச் செய்யும் சேவையில் அதிக உறுதியுள்ளவர்களாக நிலைத்து நிற்பதற்கும் நம்முடைய சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருப்பதற்குமுரிய நமது தீர்மானத்தை அது பலப்படுத்தும். இந்த மாநாடு காலத்துக்கேற்ற தேவைகளை நமது கவனத்துக்குக் கொண்டுவந்து யெகோவாவின் அமைப்போடு அடியெடுத்து வைக்க உதவி செய்யும். கவனம் செலுத்த தவறுவது நாம் பின்தங்கிவிடுவதில் விளைவடையும். அதிலிருந்து முழுமையாகப் பயனடைய வேண்டுமென்றால் நிகழ்ச்சிநிரலில் நாம் முழுவதுமாக ஆழ்ந்துவிட வேண்டும். அதன்பின்பு நாம் எதைக் கற்றுக்கொள்கிறோமோ அதை அப்பியாசிக்க வேண்டும்.—யாக். 1:25.
12 நிகழ்ச்சிநிரலுக்கு மேம்பட்ட கவனம் செலுத்துவதற்கும், வழங்கப்படும் தகவலை நினைவில் வைப்பதற்கும் நாம் செய்யக்கூடிய காரியம் ஏதாகிலும் இருக்கிறதா? ஆம் இருக்கிறது. அநேக மாநாட்டு வருகையாளர்கள் நிகழ்ச்சிநிரலின் போது குறிப்பு எடுக்கும் பழக்கத்தை வளர்த்திருக்கின்றனர். ஒரு மாநாட்டுக்கு ஆஜராகையில் நாம் வழக்கமாக எடுத்துச் செல்லும் உபகரணங்களாகிய பைபிள், பாட்டு புத்தகம் ஆகியவற்றுடன் குறிப்பெடுப்பதற்கு பொருத்தமான புத்தகம், பேனா ஆகியவையும் இருக்க வேண்டும். இந்தக் குறிப்பெடுக்கும் செயலை ஐயுறவு மனப்பான்மையோடு நோக்கியிருப்பீர்களானால் “சுத்தமான பாஷை” மாநாட்டில் ஏன் நீங்கள் இதை முயற்சிசெய்து பார்க்கக்கூடாது? என்ன சொல்லப்படுகிறதோ அதிலிருந்து உங்கள் கவனம் சிதறாமல் காத்து வைக்கப்படுவதற்கும் உங்கள் மனம் அலைபாய்வதைத் தடுப்பதற்கும் இது ஒரு சிறந்த வழியாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
13 குறிப்புகள் மிகப்பெரியதாகவும் அதிக விரிவாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு முக்கிய குறிப்புக்கு ஓரிரண்டு சொற்றொடர்கள் போதுமானது. ஊழியக்கூட்டத்தின்போது மாநாட்டு நிகழ்ச்சிநிரலின் அர்த்தமுள்ள விமர்சனத்தை நடத்துவதற்கு நேர்த்தியாக எழுதப்பட்ட குறிப்புகளை கொண்டிருப்பது பயனுள்ளதாக இருப்பதை மூப்பர்கள் கண்டிருக்கின்றனர். அதோடுகூட தங்களுடைய போதனை மற்றும் மேய்க்கும் வேலைகளில் மாநாட்டில் அளிக்கப்பட்ட அநேக குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ள விரும்பக்கூடும்.
14 பாட்டும் ஜெபமும்: நாம் யெகோவாவை அவருடைய துதிப்பாடல்கள் மூலமாக கனப்படுத்துகிறோம். அது நம்முடைய வணக்கத்தின் ஒரு பாகமாக இருக்கிறது. அவருடைய ஜனங்கள் ஊக்கமான ஜெபத்தில் அவரை அணுகும்போதும்கூட யெகோவா அதிகமாக பிரியப்படுகிறார். (நீதி. 15:8b) பாட்டு மற்றும் ஜெபம் ஆகிய இரண்டின் மூலமாகவும் ஆயிரக்கணக்கான சகோதரர் சகோதரிகளுடன் யெகோவாவைத் துதிப்பதில் ஐக்கியப்பட்டிருப்பதற்கு மாவட்ட மாநாடுகள் தனித்தன்மை வாய்ந்த வாய்ப்பை நமக்கு அளித்திருக்கின்றன. என்றபோதிலும் ஒரு சிலர் நமது வணக்கத்தின் இந்த மிக முக்கியமான அம்சத்துக்கு மரியாதைக் குறைவைக் காண்பித்திருக்கின்றனர். எப்படி? ஆரம்ப பாட்டு மற்றும் ஜெபம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அல்லது அதற்கு பிற்பாடு அவசியமில்லாமல் காலத்தாமதமாக வருவதன் மூலமே. அல்லது நிகழ்ச்சிநிரலின் முடிவில் ஒருசிலர் ஜெபத்திற்கு முன்பாக பாடல் பாடப்படும் சமயத்தில் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து செல்கின்றனர். ஏன்? எப்பொழுதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கலாம். என்றபோதிலும் சீக்கிரமாகப் போய் தங்கள் வாகனத்தை எடுக்க வேண்டும், பஸ் நிலையத்துக்குப் போகவேண்டும் அல்லது சாப்பிட வேண்டும் என்பதற்காக பாடலிலும் ஜெபத்திலும் கலந்துகொள்ளும் சிலாக்கியத்தை ஒரு சிலர் விட்டுவிடுகையில் யெகோவாவின் பந்திக்கு போதிய மரியாதையும் மதித்துணர்வும் காண்பிக்கப்படுகிறதா?—மத். 6:33.
15 நமது தனிப்பட்ட வசதிகளை நாடித்தேடும் போக்கில் நானே முதல் என்ற இந்த உலக மனப்பான்மையும் பேராசை, சுயநலம் போன்ற தேவபக்தியற்ற மனச்சாய்வுகளும் நமது ஆவிக்குரிய முன்னேற்றத்தைத் தடைசெய்வதற்கு நாம் அனுமதியாதிருப்போமாக. கடந்த ஆண்டு போலந்து மாநாடுகளில் நமது சகோதரர்கள் பரிசுத்தக் காரியங்களுக்காகக் கொண்டிருந்த அதேப் போற்றுதல் ஆவியை நாமும் காண்பிப்போமாக. நமது வணக்கத்தின் மிக உன்னத அம்சமாகிய ஜெபத்திற்கும் யெகோவாவை துதிக்கும் பாடலிற்கும் பொருத்தமான மரியாதையைக் காண்பிப்பதன் மூலம் அவர்களோடு ஒருமனப்பட்டு நடப்போமாக.—சங். 69:30.
16 நமது கிறிஸ்தவ நன்நடத்தை: மாநாடுகளில் நமது கிறிஸ்தவ நன்நடத்தையும் வெளித்தோற்றமும் யெகோவாவின் சாட்சிகளாக நற்பெயரை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. இதற்கு காரணம் யெகோவாவுக்குச் செலுத்தும் வணக்கத்தில் நாம் பொறுப்புணர்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் மாநாட்டுக்கு ஆஜராவதை நாம் வெறும் உல்லாசப் பயணத் தோழமைக் கூட்டமாகக் கருதுவதில்லை. இப்படிப்பட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஒன்றுகூடிவருகையில் நாம் கிறிஸ்தவ கண்ணியத்தையும் ஆவிக்குரிய மனச்சிந்தையையும் காத்துக்கொள்ள வேண்டும். எல்லாச் சமயங்களிலும் ஊழியக்காரராக நாம் நம்மை நடத்திக் கொள்ள வேண்டும்.—1 கொரி. 10:31-33.
17 என்றபோதிலும் மாநாட்டுக்கு வருகைத்தரும் ஒருசிலர் தங்களுடைய மனநிலையிலும் உடையிலும் பேச்சுகளிலும் மற்றும் நடத்தையிலும் பொறுப்புணர்ச்சியற்ற முறையில் நடந்துகொள்கின்றனர். இப்படிப்பட்ட காரியங்கள் உள்ளூர் சபைகளிலோ மாநாடுகளிலோ கவனிக்கப்படும்போது என்ன செய்யப்படலாம்? ஆவிக்குரிய தகுதியுடைய ஆட்கள் சீர்ப்பொருந்தப்பண்ணும் பொருட்டு அன்பார்ந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். (கலா. 6:1; எபே. 4:11, 12) சுத்தமான பாஷையைப் பேசுதல் நல்ல நற்பெயரையும் நடத்தையின் உயர்ந்த தராதரத்தையும் உறுதியாய்க் காத்துக்கொள்ள நம்மைத் தூண்ட வேண்டும்.
18 மாநாடுகள் ஒன்றிலே பார்வையாளர் ஒருவர் காணிக்கைப் பெட்டியில் பின்வரும் அறிக்கையை விட்டுச் சென்றிருந்தார்: “உங்களுடைய நிகழ்ச்சிநிரலை நான் மிகுதியாக அனுபவித்து மகிழ்ந்தேன். உங்களுடைய சகோதரர்கள் ஒருவரோடு நான் இப்பொழுது பைபிளைப் படிப்பேன். உங்களுடைய மாநாடுகளில் இதுவே என்னுடைய முதல் வருகை. சனிக்கிழமையன்று மாத்திரமே வருவதற்கு நான் திட்டமிட்டிருந்தேன். ஏனெனில் ஞாயிற்று கிழமை நான் என்னுடைய சர்ச்சுக்கு போகும் நாள். ஆனால் நான் அவ்வளவு அதிகமாகக் கவரப்பட்டதன் காரணமாக நான் இன்றைக்கும் இங்கே வந்தேன். என்னுடைய முழு குடும்பத்தாரையும் என்னுடன் அழைத்துவந்தேன். ஆனால் பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும் போது பெரியவர்கள் அதிக சப்தமாகப் பேசிக்கொண்டிருந்தது எனக்கு ஏமாற்றத்தை தந்தது.”
19 சில மாநாடுகளில் ஒருசில பருவ வயதினர் மன்றத்தின் உயர்வான இடங்களிலும் அல்லது ஒதுக்குப்புறமான இடங்களிலும் அமர்ந்துகொண்டு குறிப்புத் தாள்களைக் கடத்துவது, கிசுகிசுப்பது, பொதுவாக நிகழ்ச்சிநிரலுக்கு கவனம் செலுத்தாமலிருப்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. இவ்வகையான நடத்தைப் போக்கு அவர்களுக்கு இன்னமும் பெற்றோரின் மேற்பார்வை தேவைப்படுகிறது என்பதையும் அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து உட்கார வேண்டும் என்பதையும் காட்டுகிறது. பொறுப்புள்ள பெற்றோர் இந்தக் காரியங்களுக்குக் கவனத்தைச் செலுத்துவார்கள். தங்களுடைய பிள்ளைகளுக்குத் தேவைப்படும் வழிநடத்தலைக் கொடுப்பார்கள். (எபேசி. 6:4) நிகழ்ச்சிநிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அது செவிகொடுப்பதற்கான நேரம், பேசிக்கொண்டிருப்பதற்கு அல்ல என்பதை சகோதரர்களும் சகோதரிகளும் இளைஞரும் மதித்துணர வேண்டும்.—உபா. 31:12.
20 நற்பண்பும் கரிசனையும் காண்பிக்கப்பட வேண்டிய மற்றொரு இடம் நாம் தங்குவதற்காக இடவசதி பெற்றிருக்கும் இடமாகும். நியாயமான விலையில் நல்ல தங்கும் விடுதிகள் நமக்குக் கிடைக்கின்றன. நாம் போற்றுதலை காண்பிக்க வேண்டும். தங்கும் விடுதிகளிலுள்ள பணியாட்களிடம் நற்பண்புள்ளவர்களாகவும் கரிசனையுள்ளவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சி வற்புறுத்திக் கேட்போராயிருக்கக்கூடாது. (கலா. 6:10) தங்கும் விடுதிகளில் சீரான நடத்தையைக் குறித்து நல்ல அறிவுரைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அநேகர் அதற்கு நல்ல பிரதிபலிப்பைக் காண்பித்திருக்கின்றனர். விடுதிப் பணியாளர்களிடம் முழுமையாக ஒத்துழைப்பதற்கு ஊக்கமாகப் பிரயாசப்படுகின்றனர்.
21 கடந்த ஆண்டு மாவட்ட மாநாட்டுக்கு ஆஜரானப் பின்பு தன்னுடைய விடுதி அறையை சுத்தம் செய்த ஒரு பணிப்பெண்ணிடமிருந்து ஒரு சகோதரிக்கு கடிதம் வந்தது. அது சொன்னதாவது: “நீங்கள் உங்களுடைய சிறு புத்தகத்தை மற்றும் சிறு அன்பளிப்பை எனக்காக விட்டுச்சென்றமைக்கு நான் உங்களுக்கு நன்றிச் சொல்ல விரும்புகிறேன். . . . உங்களுக்கு என் நன்றி, இப்பொழுது நான் பைபிள் படிப்பைக் கொண்டிருக்கிறேன். நம்முடைய தகப்பனாகிய யெகோவாவையும் அவருடைய ஒரே நேசக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் போற்றுதற்கு கற்றுவருகிறேன். . . . எங்களுடைய விடுதியில் தங்கியிருந்தபோது மகிழ்ச்சியாயிருந்தீர்கள் என்பதைக் குறித்து நான் சந்தோஷப்படுகிறேன். அடுத்த மாநாட்டில் உங்களைப் பார்க்கும் நம்பிக்கையோடிருக்கிறேன்.” அந்தப் பணிப்பெண் தன்னுடைய கடிதத்தில் “சிறு புத்தகம்” “சிறு அன்பளிப்பு” என்ற வார்த்தைகள் கீழே கோடிட்டிருந்தாள்.
22 பெருந்திரளான சகோதரர்கள் கடவுளுடைய பெயருக்குக் கனத்தைக் கொண்டுவந்தபோதிலும் ஒரு சில குடும்பத்தினர் குற்றங்கண்டுபிடிக்கப்படுவதற்கு இடமளித்திருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பிள்ளைகள் உட்பட நான்கு அல்லது ஐந்து ஆட்களுக்கு மட்டுமே அனுமதியுள்ள அறைகளை வாடகைக்குப் பேசியப் பின்பு ஒரு சிலர் பத்துப்பேரை உள்ளே கொண்டுவந்திருக்கின்றனர். அது நேர்மையற்ற செயல். அவர்களுக்கு இடவசதி செய்து கொடுப்பதற்காக கட்டிலிலுள்ள மெத்தைகளை எடுத்து தரையில் போட்டு அந்த மெத்தையில் சிலரை தூங்கும்படி செய்து மற்றவர்கள் நேரடியாக மெத்தையில்லாத கட்டிலில் படுத்திருக்கின்றனர். பிறகு அதிகப்படியான போர்வைகளை நிர்வாகத்தினரிடம் கேட்டு வாங்கியிருக்கின்றனர்.
23 தங்களுடைய அறைகளை யெகோவாவின் சாட்கிகளுக்குக் கொடுக்கத் தயங்கும் விடுதிகளும்கூட இருக்கின்றன. ஏனெனில் ஒரு சிலர் உணவு சமைக்கக்கூடாது என்ற தடையுத்தரவுகளை மீறிவிட்டிருக்கின்றனர். மற்றொரு புகார் என்னவெனில் சகோதரர்கள் விடுதிகளை விட்டு வெளியேறும்போது அறைகளை அலங்கோலமான நிலையில் விட்டுச்சென்றிருக்கின்றனர். நம்முடைய சுத்தமும் மற்றவர் பேரிலுள்ள கரிசனையும் நம்முடைய ஆடை மற்றும் நடத்தை ஆகியவற்றில் மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய உடைமைகளை நாம் கையாளும் முறைகளிலும்கூட வெளிக்காட்டப்பட வேண்டும். வாடகைக்கு எடுக்கப்படும் அறையை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் விட்டுவராமலிருப்பதற்கு ஏதாவது ஒரு காரணமிருக்கமுடியுமா? அத்தகைய கரிசனையற்ற நடத்தை நமது நற்பெயரைக் கெடுத்துவிடுகிறது. வரவிருக்கும் மாவட்ட மாநாடுகளின்போது “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக” நம்மை நடத்திக் கொள்ள நாம் அனைவரும் பிரயாசப்படுவோமாக.—தீத்து 2:9.
24 பெற்றோருக்காக: சிறு பிள்ளைகளும் இளைஞரும் “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராகும்படி அழைக்கப்படுகின்றனர். அவர்களும்கூட சுத்தமான பாஷையை தெளிவாகப் பேச வேண்டும். எல்லாக் கிறிஸ்தவ கூட்டங்களிலும் கூர்ந்து கவனம் செலுத்தவும் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கருத்தூன்றி அக்கறைக் காட்டவும் கற்றிருக்கும் இளைஞர்களைப் பார்ப்பது எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது! (சங். 148:12, 13) ஆனால் பெற்றோரின் மேற்பார்வையிலும் முன்மாதிரியிலும் அதிகம் சார்ந்திருக்கிறது. அநேக இளைஞர்கள் குறிப்பு எடுப்பதற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பெடுப்பது எப்படி என்று நீங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்திராவிட்டால் மாநாட்டிற்கு முன்னதாக இன்னும் மீந்திருக்கும் நேரத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது? மிகச் சிறிய பிள்ளைகளும்கூட வேதவாக்கியங்களையும் அதோடு தொடர்புடைய பேச்சாளர் எடுத்துரைக்கும் முக்கிய வார்த்தைகளையும் எழுதுவதற்கு உற்சாகமளிக்கப்படக்கூடும். சில பெற்றோர் தங்கியிருக்கும் இடத்திற்கு திரும்பியப் பிறகு அல்லது வீட்டிற்குப் பிரயாணம் செய்துகொண்டிருக்கையில், அந்த நாளின் நிகழ்ச்சிநிரலினுடைய முக்கிய குறிப்புகளை விமர்சனம் செய்ய ஏற்பாடு செய்கின்றனர்.
25 மெய்தான், பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகளின் இயல்பான மனச்சாய்வு விளையாடுவது என்பதை ஒத்துக்கொள்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் அனுபவத்தில் குறைவுபடுகின்றனர். மேலும் அவர்கள் முதிர்ச்சியற்றவர்கள். ஆகையால் கூட்டங்களில் எப்பொழுது செவிகொடுத்து கேட்க வேண்டும், தங்களை எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இது பெற்றோரின் நல்ல மேற்பார்வையைத் தேவைப்படுத்துகிறது. சில பெற்றோர் இவ்விஷயத்தில் கடமையில் தவறிவிட்டிருக்கின்றனர். சில சமயங்களில் ஜெபத்தின்போது பெற்றோர் யெகோவாவுக்குச் சரியான மரியாதையைக் காட்டுகிறவர்களாயிருக்கலாம். ஆனால் அவர்கள் பிள்ளைகள் விளையாடிக்கொண்டு பிறரது கவனத்தைச் சிதறச் செய்யலாம். தங்கள் பிள்ளைகள் ஜெபத்தின் போது என்ன செய்துகொண்டிருக்கின்றனர் என்பதை பெற்றோர் அறிந்திருக்க வேண்டும். அதோடு நிகழ்ச்சிநிரலின்போது அவர்கள் இருக்கைகளை விட்டுச் செல்கையில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? மாநாட்டு நிகழ்ச்சிநிரலின்போது அல்லது அதற்குப் பிறகு பிள்ளைகள் மேற்பார்வையின்றி விடப்படுகின்றனரா?—நீதி. 29:15.
26 சில சமயங்களில் பெற்றோர் அறையில் இருக்கும்போது, சாப்பாட்டிற்கு வெளியே சென்றிருக்கையில் அல்லது மற்ற காரியங்களை கவனித்துக் கொண்டிருக்கையில், அந்தத் தங்கும் விடுதி முகப்பு கூடங்களிலும் அந்த விடுதி கட்டிடத்தின் உள்ளேயும் சுற்றுப்புறத்திலும் பிள்ளைகள் மேற்பார்வையின்றி விடப்பட்டிருக்கின்றனர். இது சரியான காரியமல்ல. ஒரு சில பிள்ளைகள் கட்டுப்பாடில்லாத, கட்டுக்கு அடங்காத முறையில் நடந்துகொண்டிருக்கின்றனர். தயவான முறையில் அவர்களைச் சரிசெய்ய முயன்ற வயதான சகோதர சகோதரிகளிடம் மரியாதைக் குறைவாகவும் நடந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட கட்டுக்கடங்காத செயலும் கிறிஸ்தவத்துக்குப் பொருந்தாத இந்த நடத்தையும் வீட்டில் சிட்சைக் குறைவுபடுவதாலும் சுயேச்சையான போக்கு அனுமதிக்கப்படுவதாலும் ஏற்படும் விளைவுகளாகும். இது நிச்சயமாகவே சரி செய்யப்பட வேண்டும். எல்லாக் கிறிஸ்தவ பெற்றோரும் எல்லாச் சமயங்களிலும் தங்கள் பிள்ளைகளுக்கு நெருக்கமான மேற்பார்வையைச் செலுத்த வேண்டும். “யெகோவாவின் சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் அவர்களை வளர்ப்பதில்” அப்படிச் செய்ய வேண்டும்.—எபேசி. 6:4.
27 உங்களது முழு ஒத்துழைப்பும் விரும்பப்படுகிறது: மாநாட்டுக்கு ஆஜராகும் அனைவருக்கும் போதுமான இருக்கைகள், புத்தகங்கள், உணவு மற்றும் பிற வசதிகள் கிடைக்கப் பெறும்படி போதிய திட்டமும் உழைப்பும் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஏற்பாடுகளை திறம்படச் செய்வதை நிச்சயப்படுத்துவதற்காக ஒருசில சபைகள் ஒரு குறிப்பிட்ட மாநாட்டுக்குத் திட்டமான விதத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றன. இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிக முக்கியமாயிருக்கிறது. ஒருசிலருக்கு வேறொரு பகுதியில் ஒரு மாநாட்டில் ஆஜராவதைத் தேவைப்படுத்தும் சூழ்நிலைகள் இருப்பது மெய்தான். என்றபோதிலும் பெரும்பாலானோருக்கு தங்களுக்கென்று நியமிக்கப்பட்ட இடத்தில் மாநாட்டில் ஆஜராயிருப்பது கூடிய காரியமாகும்.—1 கொரி. 13:5; பிலி. 2:4.
28 இருக்கைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் உங்களது முழுமையான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது யாதெனில், மிக நெருங்கிய குடும்ப அங்கத்தினருக்காக அல்லது உங்களோடு பிரயாணம் செய்பவருக்காக மட்டுமே இருக்கைகள் பாதுகாக்கப்படலாம். தயவுசெய்து மற்றவர்களுக்காக இருக்கைகளை ஒதுக்கீடு செய்யாதீர்கள். சில சமயங்களில் அதிகப்படியான இருக்கைகள் குறிப்பாக யாருக்கு என்றில்லாமல் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இது அட்டென்டென்ட்டுகளுக்கும் இருக்கைகளுக்காகத் தேடிக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் தவறான எண்ணம் கொடுப்பதாக இருக்கும், அன்பற்றதாகவும் இருக்கும். பைபிள் புத்திமதிக்கு இசைய சகோதர சிநேகத்தை வெளிக்காட்டுவதில் பிரயாசப்பட்டு இருக்கைகளைப் பாதுகாப்பதில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளோடு நாம் முழுமையாக ஒத்துழைப்போமாக.—2 பேதுரு1:5–8.
29 மாநாடு நடக்கும் இடத்திற்கு சொந்த பொருட்களைக் கொண்டுவருவதில் நல்ல புத்தியைப் பயன்படுத்தும்படி ஆலோசனை கொடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் சிலர் பெரிய குளிர்ச்சாதனங்கள் அல்லது தங்கள் இருக்கைகளுக்கடியில் வைக்கமுடியாத அளவு பெரிய பொருட்களைக் கொண்டுவந்திருக்கின்றனர். இவை இருக்கைகளின் வரிசைகளுக்கிடையில் அல்லது இருக்கைகளின் மீது வைக்கப்பட்டன. இது சிலருக்கு இருக்கை கிடைக்கப் பெறாமல் செய்வதிலும், சில சமயங்களில் நெருப்பு மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறியதிலும் விளைவடைந்தது. அத்தகைய விஷயங்களில் நாம் கரிசனை காட்டுபவர்களாய் இருக்க வேண்டும்.
30 மாநாடு நடக்கும் இடத்தில் வீடியோ காமிராக்களும் ஆடியோ பதிவு செய்யும் கருவிகளும் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. என்றபோதிலும் அத்தகைய கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமலும் கவனத்தைச் சிதறப்பண்ணாமலும் இருக்க கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அத்தகைய கருவிகள் இருக்கைகளின் வரிசைகளுக்கு இடையிலோ அல்லது வெளியே செல்லும் வழியிலோ வைக்கப்படக்கூடாது. இத்தகைய கருவிகள் ஒலிபெருக்கி அமைப்பு அல்லது மின்இணைப்புக்கள் இவற்றோடு இணைக்கப்படக்கூடாது. அதிசக்தி வாய்ந்த ஒளிக் கருவிகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது. கவனச் சிதைவுக்குக் காரணமாயிருப்பவர்கள் அல்லது மேற்கூறப்பட்ட வழிநடத்தலைப் புறக்கணிப்பவர்கள் அவை தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகையில் தயக்கமின்றி காரியத்தைச் சீர்செய்ய வேண்டும். இவ்வழிநடத்துதலைக்கு மீறுதல் இருப்பின், இதற்குப் பொறுப்புள்ள அட்டென்டென்ட்களும் மற்றவர்களும் அதைச் சரி செய்யக் கவனமாயிருப்பர். மேலும் அவர்கள் அத்தகைய கருவிகளைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து முழு ஒத்துழைப்பையும் பெறவேண்டும்.
31 உணவு வழங்கீடுகள்: உணவு வழங்கீடு ஏற்பாடுகளை சங்கம் சீர்ப்படுத்தி எளிதாக்குகிறது. ஒவ்வொருவருடைய நன்மைக்காக வேலையை எளிதாகவும் இன்னுமதிகவேகமாக செய்வதற்கு வசதியாகவும் ஆக்குகிறது. இது என்னே ஒரு சிறந்த ஏற்பாடு! கடவுளுடைய அமைப்பின் பங்கில் இப்பேர்ப்பட்ட தாராள குணம் நடைமுறையான வழிகளில் நமது போற்றுதலை நன்றியுடனே வெளிகாட்டுவதற்கு நம்மை சந்தேகமில்லாமல் உந்துவிக்கும்.—நீதி. 11:25.
32 நிச்சயமாகவே, தயாரிக்கப்பட்டுள்ள மகிழ்வூட்டும் ஆவிக்குரிய நிகழ்ச்சிநிரலிலிருந்து பயனடைவதற்காக வேண்டி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வசதிகளில் ஒன்றுகூடி வருவதற்கான இந்த வாய்ப்பு கிடைப்பதற்காக யெகோவாவின் ஜனங்கள் போற்றுதலை தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட கூட்டங்களில் கொடுக்கப்படும் அநேக சேவைகளுக்காகவும் வசதிகளுக்காகவும்கூட நாம் போற்றுதலை தெரிவிக்கிறோம். அதிக கவனத்தோடும் மற்றும் சங்கத்தின் போதிய பணச்செலவுகளைக் கொண்டும் போதிய இருக்கைகள், அதிக விலையுயர்ந்த ஒலிப்பெருக்கி சாதனங்கள், திறம்பட்ட உணவு வழங்கீடு ஏற்பாடுகள் மற்றும் இன்னும் அநேக எண்ணிறந்த ஏற்பாடுகளும் சேவைகளும் நடைபெறுகின்றன. இவை நாம் மாநாட்டிற்கு ஆஜராவதை மகிழ்ச்சியுள்ளதாகவும் ஆவிக்குரிய புத்துயிரூட்டுவதாகவும் ஆக்குகின்றன.
33 சங்கத்தின் உலகளாவிய வேலைக்கு ஆதரவாக கொடுக்கப்படும் உங்களுடைய மனமுவந்த காணிக்கைகளால் இந்தச் செலவுகள் தீர்க்கப்படுகின்றன. உங்களுடைய வசதிக்காக தெளிவாக குறிக்கப்பட்ட காணிக்கைப் பெட்டிகள் மாநாடு மன்றம் முழுவதிலும் வைக்கப்படுகின்றன. எல்லா நன்கொடைகளும் வெகுவாகப் போற்றப்படுகின்றன. ராஜ்ய அக்கறைக்காக இந்த ஒரு முறையில் காண்பிக்கப்படும் உங்களுடைய தாராளமான, ஒற்றுமைப்பட்ட ஆதரவுக்காக முன்னதாகவே உங்களுக்கு நன்றிகூற சங்கம் விரும்புகிறது. இங்கே சொல்லப்பட்டுள்ள காரியங்களின் சம்பந்தமாக தங்களுடைய தனிப்பட்ட உத்தரவாதத்தை உணருவதற்கும் சூழ்நிலைமைகள் அனுமதிக்கும் அளவுக்குப் பங்கு கொள்வதன் மூலம் முழுமையாக ஒத்துழைப்பதற்கும் எல்லாரும் உந்துவிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்பிக்கையோடிருக்கிறோம்.—லூக்கா 6:38.
34 “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டுக்கு வருகைத் தாருங்கள்: “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராவதன் மூலமும் நிகழ்ச்சிநிரலுக்குக் கூர்ந்த கவனம் செலுத்துவதன் மூலமும் யெகோவா ஏன் நமக்கு இந்தச் சுத்தமான பாஷையைக் கொடுத்திருக்கிறார் என்பதையும் நம்முடைய சகோதரர்களோடு ஒற்றுமையாக இருப்பதில் குறுக்கிடக்கூடிய எந்த ஒரு சுயநலமான மனப்போக்கிற்கு எதிராகவும் ஏன் நாம் எப்பொழுதுமே நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் இன்னும் அதிக முழுமையாக நீங்கள் மதித்துணருவீர்கள். ஆரம்ப பாட்டுக்கு அங்கிருக்கவும் ஞாயிறு பிற்பகல் முடிவு ஜெபம் வரையிலுமாக எல்லா நிகழ்ச்சிநிரலுக்கு ஆஜராகவும் இப்பொழுதே திட்டமிடுங்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி]
மாவட்ட மாநாடு நினைப்பூட்டுதல்கள்
அறைவசதி: மாநாட்டின் மூலம் அளிக்கப்பட்டுள்ள தங்கும் வசதியைப் பயன்படுத்துவதில் உங்கள் ஒத்துழைப்பு மிகவும் போற்றப்படுகிறது. உங்கள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால், நீங்கள் தங்கும் விடுதிக்கு நேரடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்கவோ அல்லது எழுதவோ வேண்டும். எவ்வளவு முன்னதாக அதைச் செய்யக்கூடுமோ அவ்வளவு விரைவாகச் செய்வதன் மூலம் நீங்கள் அந்த அறை பிறருக்குக் கிடைக்கும்படிச் செய்யக்கூடும்.
முழுக்காட்டுதல்: முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் சனிக்கிழமை காலையில் நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பே அவர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கும்படி முயற்சி செய்ய வேண்டும். முழுக்காட்டுதல் பெற திட்டமிடும் ஒவ்வொருவரும் அடக்கமான குளியல் ஆடையும் ஒரு துவாலையும் கொண்டுவர வேண்டும். பேச்சாளரின் முழுக்காட்டுதல் பேச்சும் ஜெபமும் முடிந்தபின்பு அக்கூட்டத்தின் அக்கிராசினர் முழுக்காட்டுதல் பெறும் அங்கத்தினர்களுக்குச் சுருக்கமான ஆலோசனைகளைக் கொடுப்பார். பிறகு பாட்டு பாடும்படி அறிவிப்பார். கடைசி அடியின் ஆரம்பத்துடன் அட்டென்டென்ட்டுகள் முழுக்காட்டப்பட இருப்பவர்களை முழுக்காட்டுதல் நடைபெறும் இடத்திற்கு அல்லது அவ்விடத்திற்கு அவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வழிநடத்துவார்கள். மற்றவர்கள் பாட்டுப் பாடுவதை முடிக்கின்றனர். முழுக்காட்டுதல் ஒருவரது ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக, மிக நெருங்கிய மற்றும் தனிப்பட்ட விஷயமாக யெகோவாவுக்கும் தனிப்பட்ட ஒருவருக்கும் இடையே இருப்பதால், கூட்டாளி முழுக்காட்டுதல் என்றழைக்கப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு அல்லது கைகளைப் பிடித்துக்கொண்டு எடுக்கப்படும் ஓர் ஏற்பாடு கிடையாது.
பயனியர் அடையாள அட்டை: எல்லா ஒழுங்கான மற்றும் விசேஷித்த பயனியர்களும் பிரயாண கண்காணிகளும் தங்களுடைய உவாட்ச்டவர் அடையாளம் மற்றும் நியமிப்பு அட்டையை (S-202) மாநாட்டிற்கு கொண்டுவர வேண்டும். தாங்கள் ஆஜராயிருக்கும் மாவட்ட மாநாட்டின் போது குறைந்தபட்சம் ஆறுமாதங்களாக பயனியர் செய்துவந்திருப்பவர்கள் ஒரே ஒரு மாநாட்டில் மட்டுமே தங்களுடைய உவாட்ச்டவர் அடையாள அட்டையைக் காட்டி ரூ60/- மதிப்புள்ள உணவு டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். ஆகவே அட்டையை பணம்போல கவனமாக கையாளுங்கள். மாநாட்டில் அவற்றிற்குப் பதிலாக வேறு கொடுக்கப்படமாட்டாது. புத்தக இலாக்காவில் பயனியர் விலையில் புத்தகங்கள், அவர்களது உவாட்ச்டவர் அடையாள அட்டையைக் காண்பித்த பிறகு மட்டுமே பயனியர்களுக்கு கிடைக்கப்பெறும். பெத்தேல் சேவை செய்பவர்கள் தங்களுடைய பெத்தேல் அடையாள அட்டையைக் காட்டுவதன் மூலம் அவற்றைப் பெறலாம்.
வாலண்டியர் சேவை: ஒரு மாவட்ட மாநாடு சுமுகமான செயல்படுவதற்கு வாலண்டியர் உதவி தேவைப்படுகிறது. மாநாடு நாட்களில் ஒரு குறிப்பிட்ட சமயம் மட்டுமே நீங்கள் வேலை செய்யக்கூடுமென்றாலும் உங்கள் சேவை போற்றப்படும். நீங்கள் உதவிசெய்யக்கூடுமானால், நீங்கள் மாநாட்டை அடைந்தவுடன் தயவுசெய்து வாலண்டியர் சேவை இலாக்காவில் அறிக்கை செய்யுங்கள். 16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளும்கூட மாநாட்டின் வெற்றியில் பங்குகொண்டு உதவலாம். ஆனால் அவர்கள் பெற்றோருடனோ அல்லது மற்ற பொறுப்புள்ள வயதுவந்த ஒருவருடனோ சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
லெப்பெல் அட்டைகள்: தயவுசெய்து மாநாட்டின் போதும் மாநாடு நடக்குமிடத்திற்கு வரும்போதும் விட்டுச்செல்லும் போதும் விசேஷ லெப்பெல் அட்டையை அணியுங்கள். இது பிரயாணம் செய்கையில் எப்போதுமே ஒரு நல்ல சாட்சி கொடுத்தலை நமக்குக் கூடியதாக்குகிறது. லெப்பெல் அட்டைகள் மாநாடுகளில் கிடைக்காததால் உங்கள் சபையின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும். லெப்பெல் அட்டைகளை ஒவ்வொரு சபைக்கும் சங்கம் அனுப்புகிறது. ஆனால் அதற்குரிய பிளாஸ்டிக் உறைகளை சபை ஆர்டர் செய்ய வேண்டும். உறையின் விலை ரூ.1.00. லெப்பெல் அட்டை விலை 20 காசு.
எச்சரிக்கை: நீங்கள் எங்கு நிறுத்தினாலும் உங்கள் வாகனத்தை எல்லாச் சமயங்களிலும் பூட்டி வைக்கவேண்டும். மேலும் ஒருபோதும் பார்க்கக்கூடிய விதத்தில் பொருட்களை உள்ளே விட்டுவராதீர்கள். உங்கள் உடைமைகளைக் கூடுமானால் பெட்டிக்குள் பூட்டி வையுங்கள். மேலும் மிகுந்த கூட்டத்தால் கவரப்படும் திருடர்களுக்கும், பிக்பாக்கெட் செய்பவர்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். இது மதிப்புள்ள பொருட்களை மாநாட்டின்போது இருக்கைகள் மீது கவனியாமல் விட்டுச் செல்லக்கூடாது என்பதையும் குறிக்கும். தயவு செய்து கவனமாயிருங்கள்.
சில தங்கும் விடுதிகள் ஆபாசமான மற்றும் ஒழுக்கயீனமுள்ள தொலைக்காட்சித் திரைப்படங்களை காண எளிதான வாய்ப்பளிப்பதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இது இத்தகைய இடங்களில் தங்கியிருக்கும் பிள்ளைகள் மேற்பார்வையில்லாமல் டி.வி. பார்ப்பதைத் தவிர்ப்பதன் அவசியத்தை அறிவுறுத்துகிறது.
[பக்கம் 6-ன் பெட்டி]
நீங்கள் பாடி பழகிக்கொள்வதற்காக மாநாட்டுபாடல்களின் எண்கள்
காலை மாலை
வியாழன் 148 (74)a
78 (104)
217 (119)
வெள்ளி 160 (88) 69 (9)
191 (18) 164 (73)
211 (68) 111 (91)
சனி 91 (31) 33 (13)
144 (78) 200 (108)
202 (82) 79 (59)
ஞாயிறு 155 (23) 42 (85)
61 (90) 161 (87)
31 (11) 45 (110)
a அடைப்பு குறியில் காட்டப்பட்டிருக்கும் பாட்டு எண்கள் 1966 பாட்டு புத்தகம் பயன்படுத்தப்படக்கூடிய கேரளாவிற்கு மட்டுமே. மற்ற பாட்டுகள் 1984 பாட்டு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.