‘மொழி பிரித்தாலும், அன்பு இணைக்கிறது’
மீட்பு. விடுதலை. இரட்சிப்பு. பல நூற்றாண்டுகளாக, கவலைகளிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் விடுபடுவதற்கு மக்கள் ஏங்கியிருக்கிறார்கள். வாழ்க்கையின் பிரச்சினைகளை நாம் எவ்வாறு சமாளிக்கலாம்? என்றாவது மீட்பு கிடைக்குமா? கிடைக்குமென்றால், எப்படி?
யெகோவாவின் சாட்சிகள் “மீட்பு விரைவில்!” என்ற தலைப்பில் மே 2006 முதல் தொடர்ச்சியாக மூன்று நாள் மாவட்ட மாநாடுகளை பல இடங்களில் நடத்தினார்கள். அங்கு இந்தக் கேள்விகளே கலந்தாலோசிக்கப்பட்டன.
அவற்றுள் ஒன்பது இடங்களில் நடைபெற்ற மாநாடுகளுக்கு பல நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். செக் குடியரசின் தலைநகரான ப்ராக்; ஸ்லோவாக்யா நாட்டின் தலைநகரான பிராடிஸ்லாவா;போலந்திலுள்ள கார்ஷூஃப் மற்றும் போஜ்னன்;a ஜெர்மனியின் ஐந்து நகரங்களான டோர்ட்முண்ட், ப்ராங்ஃபர்ட், ஹேம்பர்க், லீப்ஜிக், மியூனிச் ஆகியவற்றில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2006-ல் இந்த மாநாடுகள் நடைபெற்றன. 3,13,000-ற்கும் அதிகமானோர் இந்த ஒன்பது மாநாடுகளில் கலந்துகொண்டனர்.
இந்த மாநாடுகளில் எப்படிப்பட்ட சூழல் நிலவியது? சாட்சிகளைக் கண்ட சிலர் என்ன சொன்னார்கள்? இந்த மாநாடுகளைப்பற்றி அவற்றில் கலந்துகொண்டவர்கள் எப்படி உணர்ந்தார்கள்?
தயாரிப்புகள்
இந்த மாநாடுகள் மறக்கமுடியாத ஆன்மீக நிகழ்ச்சிகளாக அமையும் என்று நம்பியதால் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களும், உள்ளூர் சாட்சிகளும் இந்த மாநாடுகளை ஆவலோடு எதிர்பார்த்தனர். மாநாட்டுக்கு வருபவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிப்பது மாபெரும் வேலையாய் இருந்தது. உதாரணத்திற்கு, கிழக்கத்திய ஐரோப்பாவிலிருந்து கார்ஷூஃப் மாநாட்டுக்கு வருகை தந்த 13,000 சகோதர சகோதரிகளை போலந்து நாட்டின் சாட்சிகள் தங்கள் வீடுகளில் மனமுவந்து தங்கவைத்தனர். அந்த மாநாட்டுக்காக அமெரிக்கா, ஆர்மீனியா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், எஸ்டோனியா, கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், பெலாரூஸ், மால்டோவா, ரஷ்யா, லாட்வியா, லிதுவேனியா, ஜார்ஜியா ஆகிய இடங்களிலிருந்து ஏராளமானோர் வருகை தந்தனர்.
தங்களுடைய இந்தப் பயணத்திற்காக பல மாதங்களுக்கு முன்னதாகவே அநேகர் தங்கள் தயாரிப்புகளை தொடங்க வேண்டியிருந்தது. ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கம்சட்கா என்ற ரஷ்ய தீபகற்பத்தில் வாழ்ந்து வரும் முழுநேர ஊழியரான டாட்யானா, இந்தப் பயணத்திற்காக ஒரு வருடத்திற்கு முன்னரே பணம் சேமித்து வைக்கத் தொடங்கினார். அவர் 10,500 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்தது. முதலில், விமானத்தில் ஐந்து மணி நேரம் பயணம் செய்தார்; பின்பு கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு ரயிலில் பயணம் செய்தார்; கடைசியில் கார்ஷூஃபை வந்தடைய 30 மணிநேரம் ஒரு பஸ்ஸில் பயணித்தார்.
அரங்குகளையும் அதன் சுற்றுப்புறங்களையும் வணக்கத்திற்கேற்ற தகுதியான இடமாக மாற்ற, மாநாட்டுக்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் மனமுவந்து வேலை செய்தனர். (உபாகமம் 23:14) ஒரேவொரு உதாரணத்தைக் கவனியுங்கள். லீப்ஜிக்கில் உள்ளூர் சாட்சிகள் மாநாட்டு அரங்கத்தை நேர்த்தியான விதத்தில் சுத்தம் செய்தார்கள், மாநாடு முடிந்தப் பின்னரும் அவ்வாறு செய்வதாகச் சொன்னார்கள். அதனால், வாடகை ஒப்பந்தத்தில் உட்பட்டிருந்த சுத்தம் செய்வதற்குச் செலுத்தப்பட வேண்டிய கணிசமான தொகையை அந்த அரங்கத்தின் மேலதிகாரிகள் ரத்து செய்துவிட்டார்கள்.
அழைப்பிதழ்கள்
உலகமுழுவதிலுமுள்ள சபைகள் “மீட்பு விரைவில்!” மாநாடுகளுக்காக அழைப்பிதழ்களை விநியோகித்து விரிவான பிரச்சாரம் செய்தன. இந்த விசேஷித்த மாநாடுகளில் கலந்துகொள்ளவிருந்தவர்கள் இந்த விநியோகிப்பில் அதிக ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். அவர்கள் மாநாடு துவங்கிய முந்தின நாள் மாலை வரை பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய இந்த வைராக்கியத்தால் ஏதாவது நல்ல பலன் விளைந்ததா?
போலந்து நாட்டைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சியான பாக்டான், ஒரு வயதான நபரைச் சந்தித்தார். அவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆர்வம் தெரிவித்தார், ஆனால் கார்ஷூஃபுக்குச் செல்ல 120 கிலோமீட்டர் பயணம் செய்ய தான் பெற்றுவந்த ஓய்வூதியம் போதாது என்று வருத்தப்பட்டார். மாநாட்டுக்குச் செல்வதற்காக உள்ளூர் சபை வாடகைக்கு எடுத்திருந்த பஸ்ஸில் ஒரு சீட் காலியாக இருந்தது தற்செயலாகத் தெரிய வந்தது. பாக்டான் சொல்கிறார்: “காலை 5:30-க்கு பஸ் புறப்படும் இடத்திற்கு வந்தால், எங்களோடு இலவசமாகவே பயணம் செய்யலாம் என்று அந்த வயதானவரிடம் சொன்னோம்.” அந்த நபர் அழைப்பை ஏற்றுக்கொண்டு மாநாட்டில் கலந்துகொண்டார். பிற்பாடு அவர் சகோதரர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, நான் இன்னும் நல்லவனாக இருக்க தீர்மானித்திருக்கிறேன்.”
ப்ராக் நகரத்தில், பிரிட்டனிலிருந்து மாநாட்டுக்காக வந்திருந்தவர்கள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அதே ஹோட்டலில் சாட்சியல்லாத வேறொருவரும் தங்கியிருந்தார். ஒரு நாள் மாலை அங்கிருந்தவர்களிடம் போய் தானும் அன்று மாநாட்டில் கலந்துகொண்டதாகச் சொன்னார். அவர் கலந்துகொள்வதற்கு எது தூண்டியது? அந்நகரத்தின் சாலைகளில் பத்து வெவ்வேறு பிரஸ்தாபிகளிடமிருந்து அழைப்பிதழ்களைப் பெற்ற அவர், மாநாட்டுக்குப் போகாமல் எப்படி இருக்க முடியும்? அந்த மாநாட்டுக்குச் சென்ற அவர் மிகவும் கவரப்பட்டார், இன்னும் அதிகத்தைக் கற்றுக்கொள்ளவும் விரும்பினார்.—1 தீமோத்தேயு 2:3, 4.
அருமையான ஆன்மீக நிகழ்ச்சி
பல்வேறு பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என்பதுபற்றி அந்த நிகழ்ச்சியில் சிந்திக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் அல்லது சகித்துக்கொள்ளலாம் என்பதற்கு நேரடியான வேதப்பூர்வ அறிவுரைகள் கொடுக்கப்பட்டன.
வயோதிபத்தால், சுகவீனத்தால், அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்ததால் அல்லது மற்ற தனிப்பட்ட பிரச்சினைகளால் அவதியுற்ற தனி நபர்கள், வாழ்க்கையைப் பற்றிய சரியான நோக்குநிலையைக் கொண்டிருக்க பைபிளிலிருந்து உற்சாகத்தைப் பெற்றனர். (சங்கீதம் 72:12-14) திருமணமான தம்பதியரும் பெற்றோரும், சந்தோஷமான மணவாழ்வை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும் பிள்ளைகளை நல்ல விதமாக வளர்ப்பதற்கும் கொடுக்கப்பட்ட பைபிள் அறிவுரைகளுக்கு கவனம் செலுத்தினார்கள். (பிரசங்கி 4:12; எபேசியர் 5:22, 25; கொலோசெயர் 3:21) பள்ளியில் சகாக்களின் அழுத்தத்திற்கு ஆளானாலும், தங்கள் குடும்பத்திலும் சபையிலும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஞானமான அறிவுரையைப் பெறும் இளம் கிறிஸ்தவர்கள், தங்கள் நண்பர்களிடமிருந்து வரும் அழுத்தங்களை சமாளிப்பதற்கும், ‘பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடுவதற்கும்’ நடைமுறையான அறிவுரைகளைப் பெற்றார்கள்.—2 தீமோத்தேயு 2:22.
உண்மையில் உலகளாவிய ஒரு சகோதரத்துவம்
யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய கூட்டங்களில் எப்போதுமே நடைமுறையான வேதப்பூர்வ அறிவுரைகளைப் பெற்று வருகிறார்கள். (2 தீமோத்தேயு 3:16) என்றாலும், பல தேசங்களிலிருந்து வருகை தந்திருந்த மக்களால், இந்த மாநாடுகள் விசேஷித்தவையாக இருந்தன. இந்த விசேஷித்த மாநாடுகள் அனைத்திலுமே ஒரே ஆன்மீக நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் பேச்சுகளைக் கொடுத்தார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து வந்த அறிக்கைகள் கேட்போரின் ஆர்வத்தை மேன்மேலும் அதிகரித்தன. ஆஜராகியிருந்த அனைவருமே பயன்பெறுவதற்காக இந்தப் பேச்சுகளும் அறிக்கைகளும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
மற்ற நாடுகளிலிருந்து வந்திருந்த தங்கள் சகோதர சகோதரிகளைக் காண மாநாட்டுக்கு வருகை தந்திருந்தவர்கள் அனைவருமே ஆவலோடு காத்திருந்தனர். வந்திருந்தவர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “மொழி ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை. மாறாக அது நிகழ்ச்சியை மேலும் மகிழ்ச்சிகரமானதாகவே ஆக்கியது. வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே விசுவாசத்தினால் ஒன்றுபட்டிருந்தார்கள்.” மியூனிச்சில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “மொழி அவர்களை பிரித்தாலும், அன்பு அவர்களை இணைக்கிறது.” எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும், கூடி வந்திருந்த அனைவருமே நண்பர்கள் மத்தியில் இருந்ததாக உணர்ந்தார்கள். ஆம், ஆன்மீகச் சகோதர சகோதரிகள் மத்தியில் அவர்கள் இருந்தார்கள்.—சகரியா 8:23.
நன்றியுணர்வின் வெளிக்காட்டு
போலந்து நாட்டில் மாநாடுகள் நடைபெற்றபோது இருந்த வானிலை, கூடிவந்திருந்தவர்களின் மனப்பான்மையையும் பொறுமையையும் வெகுவாகச் சோதித்தது. மழை ஒரு பக்கம் நிற்காமல் பெய்துகொண்டிருக்க, மறுபக்கம் பயங்கர குளிர் வாட்டி எடுத்தது. வெப்பநிலை 14 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. “நான் இதுநாள்வரையில் கலந்துகொண்ட மாநாடுகளில் இந்த மாநாட்டில்தான் மோசமான வானிலையும் மிக குறைவான வெப்பநிலையும் இருந்தன. நிகழ்ச்சியில் அதிகமான பகுதிகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சர்வதேச மணம், அருமையான மனப்பான்மை, நல்ல உபசரிப்பு இவையெல்லாமே, எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை விஞ்சிவிட்டன. இந்த மாநாட்டை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது!” என்று அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு சகோதரர் குறிப்பிட்டார்.
போலிஷ் மொழி பேசிய மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வேறொன்றும் காத்திருந்தது. வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகம் போலிஷ் மொழியில் வெளியிடப்பட்டது. பனியையும் மழையையும் சகித்திருந்தவர்களுக்கு உண்மையிலேயே மிகச்சிறந்த பரிசு கிட்டியது. “மீட்பு விரைவில்!” மாநாடுகள் அனைத்திலும் யெகோவாவின் நாளை மனதில் வைத்து வாழுங்கள் (ஆங்கிலம்) என்ற புதிய புத்தகத்தின் வெளியீடும் மாநாட்டின் மகிழ்ச்சியை அதிகரித்தது.
வந்திருந்தவர்களில் அநேகர் வேறு பல காரணங்களுக்காகவும் இம்மாநாட்டை நினைவில் வைத்திருப்பார்கள். வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் திரும்பிச் செல்கையில், அவர்களுக்குத் துணையாக பஸ்ஸில் செல்ல முன்வந்த செக் நாட்டு சகோதரி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “எங்களிடமிருந்து பிரியாவிடைப் பெற்றுக்கொண்டபோது, ஒரு சகோதரி என்னை தனியே அழைத்துச் சென்று என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு ‘நீங்கள் என்னை நன்றாக கவனித்தீர்கள்! எங்களுடைய இருக்கைகளுக்கே தேடி வந்து எங்களுக்கு உணவு அளித்தீர்கள், குடிப்பதற்கு தண்ணீரும் கொடுத்தீர்கள். உங்களுடைய சுயதியாகமுள்ள அன்பிற்காக கோடி நன்றி’ என்று சொன்னார்.” வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்களுக்கான மதிய உணவு ஏற்பாட்டைப்பற்றி அவர் குறிப்பிட்டுக்கொண்டு இருந்தார். அதைப்பற்றி ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “இந்த வேலையில் எங்களுக்கு முன் அனுபவம் இருந்ததில்லை. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 6,500 மதிய உணவுப் பொட்டலங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. இதைச் செய்வதற்காக பிள்ளைகள் உட்பட அநேகர் மனமுவந்து உதவியது எங்களை நெகிழ வைத்தது.”
உக்ரைன் நாட்டிலிருந்து கார்ஷூஃபுக்கு மாநாட்டிற்காகச் சென்ற ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “எங்களுடைய சக விசுவாசிகளின் அன்பு, அக்கறை, தாராளகுணம் எங்கள் மனதை பெரிதும் ஈர்த்தன. எங்களுடைய நன்றியைத் தெரிவிப்பதற்கு வார்த்தைகள் போதாது.” பின்லாந்தைச் சேர்ந்த எட்டு வயது ஆனிகா, போலந்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தாள்: “நான் கற்பனை செய்துப் பார்க்க முடியாதளவுக்கு மாநாடு மிக நன்றாக இருந்தது. யெகோவாவின் அமைப்பின் பாகமாக இருப்பது அருமையான ஒரு சிலாக்கியம். ஏனென்றால், அப்போது ஒருவருக்கு உலகமுழுவதும் நண்பர்கள் இருப்பார்கள்!”—சங்கீதம் 133:1.
பார்வையாளர்களின் குறிப்புகள்
மாநாட்டிற்கு முன்பாகவே வந்திருந்தவர்கள் இடங்களைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் பவேரியன் நாட்டுப்புறப் பகுதியில் இருந்த ராஜ்ய மன்றங்களைக் கண்டு களித்தனர். அங்கு உள்ளூர் சாட்சிகள் அவர்களை வரவேற்றனர். சுற்றிப்பார்க்க வந்த சாட்சிகளின் ஒரு குழுவுக்கு வழிகாட்டியாகச் சென்ற சாட்சியல்லாத ஒருவர் சகோதர சிநேகத்தைக் கண்டு கவரப்பட்டார். ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “பஸ்ஸில் எங்களுடைய ஹோட்டலுக்குத் திரும்புகையில், சுற்றுலா சென்ற மற்றவர்களைப்போல் அல்லாமல் நாங்கள் வித்தியாசமானவர்களாய் இருந்தோம் என அந்த வழிகாட்டி சொன்னார். நாங்கள் நேர்த்தியாக உடை அணிந்திருந்தோம். ஒவ்வொரு குழுவையும் வழிநடத்தினவர்களுக்கு அனைவரும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். யாரும் ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளவில்லை, எந்தவித குழப்பமும் இருக்கவில்லை. முன்பின் தெரியாதவர்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம் நண்பர்களாக முடியும் என அவர் வியந்துப்போனார்.”
ப்ராக் நகரத்தில் நடந்த மாநாட்டில் தகவல் இலாகாவில் பணிபுரிந்த ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “ஞாயிறு காலையில், அந்த மாநாட்டிற்கு நியமிக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரி எங்களை வந்து சந்தித்தார். எங்கும் சமாதானம் நிலவியதை அவர் கவனித்தார். அவருக்கு அங்கே ஒரு வேலையும் இல்லை என்று சொன்னார். அந்த அரங்கத்தின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு நடந்த நிகழ்ச்சியைப்பற்றி அவரிடம் கேட்டிருக்கின்றனர். அவர் யெகோவாவின் சாட்சிகள் கூட்டம் நடத்துகிறார்கள் என்று கூறியபோது அவர்கள் ஏளனம் செய்தனர். அதற்கு அந்த அதிகாரி அவர்களிடம், ‘யெகோவாவின் சாட்சிகளுடைய நடத்தையில் பாதியையாவது மக்கள் கடைப்பிடித்தால், போலீஸின் அவசியமே இருக்காது’ என்று கூறினாராம்.”
ஏற்கெனவே அநேகர் மீட்கப்பட்டுவிட்டனர்!
பலவித கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் இருக்கிறது. அது கிறிஸ்தவர்களை சமாதானத்தோடும் ஒற்றுமையோடும் இருக்க உதவி செய்கிறது. (ரோமர் 14:19; எபேசியர் 4:22-24; பிலிப்பியர் 4:7) “மீட்பு விரைவில்!” விசேஷித்த மாநாடுகள் இதை நிரூபித்தன. இந்த உலகத்தை உலுக்கி வரும் அநேக வாதைகளிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் ஏற்கெனவே மீட்கப்பட்டிருக்கிறார்கள். சமுதாயத்தின் பல அவலங்களில் குறிப்பாக சகிப்பின்மை, மூர்க்க குணம், இனவெறி போன்றவை அவர்களிடம் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டிருக்கின்றன. இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாத ஓர் உலகத்தை அவர்கள் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
பல்வேறு நாடுகளிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் வந்த சாட்சிகள் மத்தியில் இதுபோன்ற ஒற்றுமை நிலவியதை இந்த மாநாடுகளில் கலந்துகொண்டவர்கள் கண்கூடாகப் பார்த்தார்கள். இந்த மாநாடுகள் முடிவு பெற்றபோது இது தெள்ளத்தெளிவாகியது. அனைவரும் உற்சாகத்தோடு கைதட்டினார்கள், புதிய நண்பர்களை கட்டித் தழுவினார்கள், அவர்களோடு கடைசியாக ஃபோட்டோக்களையும் எடுத்துக்கொண்டார்கள். (1 கொரிந்தியர் 1:10; 1 பேதுரு 2:17) மாநாட்டில் கலந்துகொண்டவர்கள், எல்லா துன்பங்களிலிருந்தும் கவலைகளிலிருந்தும் விரைவில் மீட்பு கிடைக்கும் என்ற உறுதியுடனும் சந்தோஷத்துடனும் தங்கள் வீடுகளுக்கும் சபைகளுக்கும் திரும்பினார்கள். அதோடு, அவர்கள் “ஜீவவசனத்தை” இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளவும் தீர்மானமாய் இருந்தார்கள்.—பிலிப்பியர் 2:14, 15.
[அடிக்குறிப்பு]
a இந்த நிகழ்ச்சிகளின் சர்வதேச பகுதிகளுக்காக போலந்திலுள்ள மற்ற ஆறு மாநாட்டு வளாகங்களும், ஸ்லோவாக்யாவிலுள்ள ஒன்றும் மின்னணுவியல் தொடர்பால் இணைக்கப்பட்டிருந்தன.
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
இருபத்தாறு மொழிகளையும் இணைத்த ஒரே மொழி
ஒன்பது மாநாடுகளிலும், நிகழ்ச்சிகள் உள்ளூர் மொழியிலேயே நடத்தப்பட்டன. ஜெர்மனியில் நடந்த மாநாடுகளில் பேச்சுகள் ஜெர்மன் மொழியிலும், 18 வேறு மொழிகளிலும் கொடுக்கப்பட்டன. டோர்ட்முண்டில் அவை அரபிக், ஃபார்ஸி, போர்ச்சுகீஸ், ரஷ்யன், ஸ்பானிஷ்; ப்ராங்ஃபர்டில் ஆங்கிலம், செர்பியன்/குரோஷியன், பிரெஞ்சு; ஹேம்பர்கில் டச், டேனிஷ், தமிழ், ஸ்வீடிஷ்; லீப்ஜிகில் சைனீஸ், துருக்கிஷ், போலிஷ்; ம்யூனிச்சில் இத்தாலியன், கிரேக்கு, ஜெர்மன் சைகை மொழி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டன. ப்ராக் நகரத்தில் நடந்த மாநாட்டில் அனைத்து பேச்சுகளும் ஆங்கிலம், செக், ரஷ்யன் மொழிகளில் கொடுக்கப்பட்டன. பிராடிஸ்லாவாவில் நிகழ்ச்சிகள் ஆங்கிலம், செக், ஸ்லோவாக், ஸ்லோவாக் சைகை மொழி ஆகிய மொழிகளில் இருந்தன. கார்ஷூஃபில் உக்ரேனியன், போலிஷ், ரஷ்யன், போலிஷ் சைகை மொழியிலும், போஜ்னனில் ஃபின்னிஷ், போலிஷ் மொழிகளிலும் இருந்தன.
மொத்தத்தில் இருபத்தாறு மொழிகள்! உண்மையில், மாநாடுகளில் கலந்துகொண்டவர்கள் மொழியினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், அன்பினால் இணைக்கப்பட்டிருந்தார்கள்.
[பக்கம் 9-ன் படம்]
குரோஷியாவிலிருந்து ப்ராங்ஃபர்ட்டில் நடந்த மாநாட்டுக்கு வந்திருந்தோர் ‘புதிய உலக மொழிபெயர்ப்பை’ தங்களுடைய மொழியில் பெற்றுக்கொள்வதில் பூரிப்படைந்தார்கள்