தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைத்திருங்கள்
மாநாடுகள்—நம் சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் சந்தோஷமான சமயங்கள்
எந்த தவறுமே செய்யாமல் ஏறக்குறைய ஓராண்டு கால சிறைவாசத்தை அனுபவித்த பின், பெரிதும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறபோதிலும் ஐம்பது வயதான ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு ஒரு ஹோட்டல் ரூம் பாய் போல உற்சாகத்தோடு செயல்படுகிறார். வந்திருக்கும் உடன் கிறிஸ்தவர்களின் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு அவர்களுடைய அறைகளுக்கு சுறுசுறுப்பாக அழைத்துச் செல்கிறார். அவரோடு சிறை தண்டனை அனுபவித்திருந்த இரண்டு பைபிள் மாணாக்கர்கள், அங்கு திரண்டு வந்திருந்தவர்களுக்காக செய்யப்பட்டிருக்கும் அறைவசதி ஏற்பாடுகளைப் பற்றி அவர்களிடம் தெரிவிக்கிறார்கள். நள்ளிரவுக்குப் பின்னும் இந்த வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரிடமும் உற்சாகம் பொங்குகிறது. அவர்கள் எதற்காக அங்கே வந்திருக்கிறார்கள்?
அது 1919-ம் ஆண்டு. பைபிள் மாணாக்கர்கள் (இப்போது யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுகிறவர்கள்) பயங்கரமான துன்புறுத்துதலின் கால கட்டத்திலிருந்து மீண்டு வருகிறார்கள். தங்களுடைய சகோதரத்துவத்தை மீண்டும் பலப்படுத்தி, புத்துணர்ச்சியூட்ட அ.ஐ.மா., ஒஹாயோ, சீடர் பாய்ன்டில் 1919-ம் ஆண்டு, செப்டம்பர் 1 முதல் 8 வரை ஒரு மாநாட்டை நடத்துகிறார்கள். மாநாட்டின் கடைசி நாளன்று, உற்சாகத்தில் திளைக்கும் 7,000 பேர் அடங்கிய கூட்டத்தாரை சகோதரர் ரதர்ஃபர்டு பின்வரும் இந்த வார்த்தைகளில் உற்சாகப்படுத்தும்போது அவர்கள் ஒவ்வொருவரும் கவனமாக காதுகொடுத்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்: “ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமானவருக்கு நீங்கள் தூதுவர்கள், நம்முடைய கர்த்தரின் மகிமையான ராஜ்யத்தைக் குறித்து . . . மக்களுக்கு அறிவிப்பவர்கள்.”
யெகோவாவின் மக்கள் மத்தியில், மாநாடுகள் முதன்முதலில் பூர்வ இஸ்ரவேலரின் நாட்களில் நடத்தப்பட்டன. (யாத்திராகமம் 23:14-17; லூக்கா 2:41-43) இந்தக் கூட்டங்கள் சந்தோஷமிக்க சமயங்கள்; கடவுளுடைய வார்த்தையில் மனதை ஒருமுகப்படுத்த கூடிவந்த அனைவருக்கும் அவை உதவி செய்தன. அதேவிதமாகவே இன்றும் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகள் ஆன்மீக காரியங்களை மையமாக வைத்து நடத்தப்படுகின்றன. நல்மனம் படைத்த பார்வையாளர்களுக்கு இந்தச் சந்தோஷம் ததும்பும் கூட்டங்கள், சாட்சிகள் கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் பலமான கட்டுகளால் இணைக்கப்பட்டிருப்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சியை அளிக்கின்றன.
மாநாட்டில் கலந்துகொள்ள முயற்சிகள்
மாநாடுகள் ஆன்மீக புத்துணர்ச்சியையும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து போதனைகளையும் பெறுவதற்கான சமயங்களாக இருப்பதை இன்றைய கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தப் பெரிய கூட்டங்களை, “கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க” உதவும் முக்கிய வழியாக அவர்கள் கருதுகிறார்கள். (கொலோசெயர் 4:12, திருத்திய மொழிபெயர்ப்பு) இதன் காரணமாகவே சாட்சிகள் இந்தக் கூட்டங்களை முழுமனதாக ஆதரிக்கிறார்கள், அவற்றில் கலந்துகொள்ள அதிக பிரயாசப்படுகிறார்கள்.
இந்த மாநாடுகளில் ஆஜராகி இருப்பதற்கே சிலருக்கு அதிக விசுவாசம் தேவைப்படுகிறது, மலைபோன்ற இடையூறுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக, ஆஸ்திரியாவிலுள்ள வயதான சாட்சியை பற்றி சிந்தித்துப் பாருங்கள். இவர்களுக்கு சர்க்கரை வியாதி, தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த நாட்டில் நடந்த மாவட்ட மாநாட்டில் எல்லா நாட்களும் கலந்துகொண்டார்கள். இந்தியாவிலுள்ள ஒரு பெரிய குடும்பத்தில் அனைவரும் சாட்சிகள். அவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். மாநாட்டுக்கு செல்லவே முடியாதென்ற நிலை. குடும்பத்தில் இருந்த ஒருவர் இந்த நிலையை சமாளிக்க உதவினார். அவர் சொன்னார்: “இந்த நிகழ்ச்சிநிரலை தவறவிட விரும்பாததால், நான் என் தங்க கம்மல்களை விற்றேன், அந்தப் பணத்தில் மாநாட்டுக்குப் போய் வந்தோம். அந்தத் தியாகம் வீண்போகவில்லை. நாங்கள் அனுபவித்த கூட்டுறவும் அனுபவங்களும் எங்கள் விசுவாசத்தை பலப்படுத்தின.”
பாப்புவா நியூ கினீயில் இன்னும் முழுக்காட்டுதல் பெறாத ஆர்வமுள்ள சிலர் அந்நாட்டின் தலைநகரில் நடந்த மாவட்ட மாநாட்டுக்குச் செல்ல தீர்மானித்தார்கள். பொது மக்களை ஏற்றி செல்லும் ஒரு வாகனத்தை சொந்தமாக வைத்திருந்த ஒருவரிடம், மாநாட்டுக்கு தங்களை அழைத்துச் செல்ல எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர் சொன்ன தொகையைக் கொடுக்க இவர்களுக்கு வசதியில்லை, ஆகவே அவருடைய வீட்டில் வேலை செய்ய ஒப்புக்கொண்டனர். அவருடைய சமையலறையை புதுப்பித்து கொடுத்தனர். இப்படியாக மாவட்ட மாநாட்டுக்கு அவர்களால் போக முடிந்தது, நிகழ்ச்சிகள் அனைத்தையும் அனுபவித்து பயனடைந்தார்கள்.
மாநாட்டுக்குச் செல்ல தீர்மானமாய் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல. 1978-ல், பிரான்ஸிலுள்ள லில்லில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ள ஓர் இளைஞன் ஆறு நாட்கள் சைக்கிளில் 1,200 கிலோமீட்டர் பயணம் செய்தான். 1997-ல் கோடை காலத்தில், மங்கோலியாவிலுள்ள இரண்டு சாட்சிகள், ரஷ்யாவில் இர்குட்ஸ்க்கில் நடந்த கிறிஸ்தவ மாநாட்டுக்குச் செல்ல 1,200 கிலோமீட்டர் பயணம் செய்தனர்.
உண்மையான சகோதரத்துவம் செயலில்
மாநாடுகளில் சாட்சிகள் மத்தியில் நிலவும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நேர்மையான பார்வையாளர்கள் கண்ணாரக் காண்கிறார்கள். மாநாடுகளுக்கு வருகிறவர்கள் எந்த பேதமுமின்றி பழகுவதையும் முதல் தடவையாக சந்திப்பவர்கள்கூட ஒருவருக்கொருவர் உண்மையான பரிவு காட்டுவதையும் பார்க்கும் அநேகர் அப்படியே அசந்து போய்விடுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின்போது, வெளிநாடுகளிலிருந்து மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு ஒரு வாரம் டூர் கைடாக இருந்தவர் அவர்களுடைய கூட்டுறவை வெகுவாக அனுபவித்ததால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவர்களுடன் தங்க விரும்பினார். அவர்களுடைய அன்பும் ஒற்றுமையும் இவரை மிகவும் கவர்ந்தன, அவர்களில் பலர் முன்பின் தெரியாதவர்களாக இருந்தபோதிலும் அவர்கள் ஒருவரையொருவர் அனுசரித்துப் போனது இவருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அவர்களைவிட்டு பிரிய வேண்டிய கட்டம் வந்தபோது, “சகோதர சகோதரிகளே” என்று அவர்களை சப்தமாக அழைத்து அவர்களுக்கு நன்றிகூற ஆரம்பித்தார், ஆனால் பேசி முடிக்க முடியாமல், உணர்ச்சிகள் தொண்டையை அடைக்க அவர் அழ ஆரம்பித்துவிட்டார்.
1997-ல், இலங்கையில் முதன்முறையாக ஒரு பெரிய ஆடிட்டோரியத்தில் மாவட்ட மாநாடு மூன்று மொழிகளில் நடத்தப்பட்டது. ஒரே சமயத்தில் நிகழ்ச்சிநிரல் முழுவதும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளில் நடத்தப்பட்டன. இனக் கலவரங்கள் அதிகரித்துவரும் இன்றைய உலகில், மூன்று மொழி பேசுபவர்களும் ஒன்றுகூடி வந்ததை மக்கள் கவனியாமல் இல்லை. போலீஸ்காரர் ஒருவர் ஒரு சகோதரரிடம், “இந்த மாநாட்டை யார் நடத்துகிறார்கள், சிங்களர்களா, தமிழர்களா அல்லது ஆங்கில மொழி பேசுபவர்களா?” என கேட்டார். “எந்த தனி தொகுதியினரும் இல்லை. நாங்கள் எல்லாரும் சேர்ந்து நடத்துகிறோம்” என்று சகோதரர் பதிலளித்தார். அந்த போலீஸ்காரரால் நம்பவே முடியவில்லை. மும்மொழி தொகுதிகளிலுள்ளவர்களும் ஒன்றாக சேர்ந்து பாட்டு பாடி, கடைசி ஜெபத்துக்கு “ஆமென்” சொன்னது ஆடிட்டோரியம் எங்கும் எதிரொலித்தபோது தங்களை அறியாமலே மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பினார்கள். வந்திருந்தவர்களில் ஆனந்தக் கண்ணீர் வடிக்காதவர்களே இல்லை. ஆம், உண்மையிலேயே மாநாடுகள் நம்முடைய சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் சந்தோஷமான சமயங்கள்.—சங்கீதம் 133:1.a
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 66-77, 254-82-ஐக் காண்க, இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.