இந்த உலகத்தின் “காற்றை” சுவாசிப்பது மரணத்துக்கேதுவானது!
“உங்கள் மீறுதல்களிலும் பாவங்களிலும் மரித்தவர்களாயிருந்தபோதிலும் கடவுள் உங்களை உயிர்ப்பித்தார். அவற்றில் நீங்கள் ஒருகாலத்தில் . . . காற்றின் அதிகார அதிபதிக்கேற்றபடியாக நடந்துகொண்டீர்கள்.”—எபேசியர் 2:1, 2, NW.
சுத்தமான காற்றை சுவாசிப்பது! காற்றோட்டம் இல்லாத ஓர் அறையிலிருந்ததற்குப் பின்பு அதில் என்னே புத்துணர்ச்சி! ஆனால் இன்று வெட்ட வெளியிலுங்கூட நச்சுக் கலப்பு ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. காற்று மண்டலத்திலே கலக்கும் நச்சுப்பொருட்கள் பல நாடுகளில் அச்சுறுத்துமளவை எட்டியிருக்கின்றன. நச்சுப் புகைகள் கதிரியக்க தூசி, நோய்க் கிருமிகள், மற்றும் சில தொற்று நோய்கள் காற்றுவழியாய் பரவுகின்றன. நம்முடைய அன்புள்ள சிருஷ்டிகரால் தாராளமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் உயிர்காக்கும் காற்று, மனிதனின் பேராசையாலும் கவனக்குறைவாலும் மரணத்தை விளைவிக்கும் ஒன்றாகிக் கொண்டிருக்கிறது.
2 காற்றில் நச்சுக்கலப்பு ஆபத்தானதுபோல, அதைவிட அதிக மரணத்துக்கேதுவான நச்சுக்கலந்த ஒரு “காற்று” இருக்கிறது. அது செர்னாபில் (ஐக்கிய சோவியத் சஷியலிச குடியரசு) அணுசக்தி உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட விபத்தால் நச்சுப்படுத்தப்பட்ட காற்று அல்ல, அல்லது கலிபோர்னியாவில் (அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்) லாஸ் ஆஞ்சலிஸின் பனிப்புகை கலந்த காற்றும் அல்ல. இல்லை, அவற்றைவிட அதிக ஆபத்தான “காற்றை” சுவாசிக்கும் ஆபத்தில் இருக்கிறோம். அதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் உடன் கிறிஸ்தவர்களிடம் குறிப்பிட்டான்: “உங்கள் மீறுதல்களிலும் பாவங்களிலும் மரித்தவர்களாயிருந்தபோதிலும் கடவுள் உங்களை உயிர்ப்பித்தார். அவற்றில் நீங்கள் ஒருகாலத்தில் இந்த உலகத்தின் காரிய ஒழுங்குமுறைக்கேற்றபடியாக, கீழ்ப்படியாமையின் பிள்ளைகளில் இப்பொழுது கிரியை செய்கிற ஆவியாகிய காற்றின் அதிகார அதிபதிக்கேற்றபடியாக நடந்துகொண்டீர்கள்.”—எபேசியர் 2:1, 2, NW.
3 இந்தக் “காற்று” தான் என்ன? இதற்கு “அதிகாரம்” அல்லது வல்லமை இருக்கிறது என்றும் இதன்மேல் ஓர் “அதிபதி” இருக்கிறான் என்றும் பவுல் காண்பிக்கிறான். இந்த அதிபதி யார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவன்தான் பிசாசாகிய சாத்தான். இவனை இயேசு கிறிஸ்து “இந்த உலகத்தின் அதிபதி” என்று அழைத்தார். (யோவான் 12:31) இதையுணர்ந்த சில பைபிள் ஞானிகள், பவுல் இந்த இடத்தில் யூத அல்லது புறமத நம்பிக்கை மூலங்களிலிருந்து கடன்வாங்கினான், காற்று பிசாசின் அதிகாரத்தின் கீழிருக்கும் பேய்களின் வாசஸ்தலமாக இருப்பதாய்ப் பேசினதாகவும் உணருகின்றனர். அநேக பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்தக் கருத்தைத் தருகின்றன. ஆனால் இந்தக் “காற்று” “பொல்லாத ஆவிகளின் சேனை” வாசம்பண்ணும் “வான மண்டலங்கள்” அல்ல.—எபேசியர் 6:11, 12.
4 பவுல் எபேசு பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதினபோது, சாத்தானும் பேய்களும் பரலோகத்தில்தான் இருந்தனர். இருந்தாலும் அவர்கள் கடவுளுடைய தயவைப் பெறுவதற்குப் புறம்பேயிருந்தனர். அவர்கள் பூமியினிடமாக இன்னும் தள்ளப்படவில்லை. (வெளிப்படுத்துதல் 12:7-10) அதுமட்டுமின்றி, காற்று, ஆவி சிருஷ்டிகளைவிட மனிதருக்கே அதிக சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. இதற்கேற்ப, கடவுளுடைய கோபகலசங்களில் கடைசி கலசம் “காற்றில்” ஊற்றப்பட்டபோது மனித சமுதாயம் தானே அதன் பாதிப்புகளை உணரவேண்டியதாயிருந்தது.—வெளிப்படுத்துதல் 16:17-21.
5 எனவே கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் மக்கள் பிரதிபலிக்கும் பொதுவான ஆவியை அல்லது தன்னலம் மற்றும் கீழ்ப்படியாமையின் மனப்பான்மையை விளக்கிக்காட்ட பவுல் சொல்லர்த்தமான காற்றை அல்லது காற்று மண்டலத்தைப் பயன்படுத்துகிறான் என்று தெரிகிறது. இது “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளில் இப்பொழுது கிரியை செய்கிற ஆவி” மற்றும் “உலகத்தின் ஆவி” போன்றது. (எபேசியர் 2:2; 1 கொரிந்தியர் 2:12) சொல்லர்த்தமான காற்று சுவாசிப்பதற்குத் தயாராக எல்லா இடத்திலும் இருப்பது போலவே “உலகத்தின் ஆவி”யும் எல்லா சமயத்திலும் இருக்கிறது. பிறப்பு முதல் இறப்புவரை, அது தங்களுடைய ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொள்ள நாடுகின்ற மக்களில் செல்வாக்கு செலுத்தி அவர்கள் சிந்திக்கும் மற்றும் செயல்படும் விதத்தையே உருபடுத்துகிறது.
6 பாவமுள்ள கலகத்தனமான இந்த ஆவி அபூரண மனித சமுதாயத்தை ஆதிக்கம் செய்கிறது. இந்தக் “காற்று” சுவாசிக்கப்படுகையில், உடன் தோழர்களின் அழுத்தத்தாலும் காமத்து இன்பத்தினிடமாக வளரும் பசியின் காரணத்தாலும் இதன் அழிக்கும் சக்தி கூட்டப்படுகிறது. இப்படியாக இது மக்கள் மீது “அதிகாரம்” செலுத்தியிருக்கிறது. (ரோமர் 6:12-14) அனைத்து பொல்லாத காரியங்களுக்கும் மூலக் கர்த்தா பிசாசுதான். (யோவான் 8:44) எனவே அவன் தன்னுடைய கலகத்தனமான வழியைப் பின்பற்றும்படியாக மனிதர்மீது செல்வாக்குச் செலுத்துகிறான், இப்படியாக இந்தச் சமூக ஆவியை அல்லது “காற்றை” ஏவி, உருவாக்கி அடக்கியாளுகிறான். இந்தக் கொடிய வல்லமையின் அல்லது “அதிகாரத்தின்” “அதிபதியாக” மக்களின் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த அவன் இதைப் பயன்படுத்துகிறான். கடவுளை அறிந்துகொள்ளவும் அவருடைய பரிசுத்த ஆவிக்கு, “உயிர்ப்பிக்கிற ஆவிக்கு” கீழ்ப்பட்டிருக்கவும் நேரம் அல்லது எண்ணம் இல்லாதளவுக்கு மாம்ச இச்சைகளையும் திருப்தி செய்துகொள்வதிலும் உலகப்பிரகாரமான அக்கறைகளைத் தொடருவதிலும் மக்களை ஈடுபட்டிருக்கும்படியாக அதன் அடிப்படைக் கூறுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. (யோவான் 6:63) ஆவிக்குரிய பிரகாரமாய்ச் சொல்லப்போனால், அவர்கள் மரித்தவர்கள்.
7 கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு அவருடைய நீதியான தராதரங்களுக்குத் தங்களை இசைவுபடுத்திக் கொள்வதற்கு முன்பாக கிறிஸ்தவர்களுங்கூட நச்சுத்தன்மைவாய்ந்த இந்தக் “காற்றின்” “அதிகாரத்தின்” கீழ் அல்லது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனர். ஆம், “அவர்களுக்குள்ளே [உலகப் பிரகாரமான மக்களுக்குள்ளே] நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” ஆனால் கிறிஸ்தவர்களானபோது நாம் மரணத்துக்கேதுவான இந்த உலகத்தின் “காற்றை” சுவாசிப்பதை நிறுத்திவிட்டோம். நாம் ‘முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனைக் களைந்துபோட்டு, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சித்தத்திற்கேற்ப சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டோம்.’—எபேசியர் 2:3; 4:22-24.
8 இப்பொழுது இருக்கும் ஆபத்து என்னவெனில், இந்த உலகத்தின் நச்சுக்கலந்த காற்று மண்டலத்திலிருந்து தப்பி வெளியேறிய நாம் மீண்டும் அதற்குள் இழுக்கப்படக்கூடும். இப்பொழுது நாம் முடிவு காலத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம், புதிய உலகத்தின் வாயிலில் இருக்கிறாம். (தானியேல் 12:4) நிச்சயமாகவே இஸ்ரவேலர் சிக்கிய அதே கண்ணிகளில் நாமும் சிக்கி ஆசீர்வாதத்தை இழந்துவிட விரும்பமாட்டோம். எகிப்திலிருந்து அற்புதமாக விடுவிக்கப்பட்டு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லைக்கு வந்தபின்பு ஆயிரக்கணக்கானோர் “வனாந்தரத்திலே அழிக்கப்பட்டார்கள்.” ஏன்? ஏனென்றால் சிலர் விக்கிரகாரதனைக்காரரானார்கள், மற்றவர்கள் வேசித்தனத்தில் ஈடுபட்டார்கள், இன்னும் மற்றவர்கள் முறுமுறுப்பதன் மூலமும் குறைகூறுவதன் மூலமும் யெகோவாவைப் பரீட்சைப் பார்த்தார்கள். பின்வரும் வார்த்தைகளில் பவுல் ஒரு பலமான குறிப்பை அறிவுறுத்துகிறான்: “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது. உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டுமிருக்கிறது.”—1 கொரிந்தியர் 10:1-11.
9 தம்முடைய சீஷர்களைக் குறித்து இயேசு பின்வருமாறு ஜெபித்தார்: “நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல; நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீயவனிமித்தம் காக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.” (யோவான் 17:14, 15) யெகோவா நம்மை பாதுகாப்பார், ஆனால் நம்மைச் சுற்றி “வேலி”யடைப்பதில்லை. அல்லது இந்த உலகத்தின் “காற்றிலிருந்து” நமக்கு தற்காப்பையும் அளிப்பதில்லை. (யோபு 1:9, 10) எனவே சாத்தானுடைய உலகத்தில் இருப்பது, ஆனால் அதன் பாகமாக இல்லாதிருப்பதும், அதன் நச்சுக்கலந்த “காற்றினால்” சூழப்பட்டிருப்பது, ஆனால் அதை சுவாசியாமலிருப்பதுமே நமக்கிருக்கும் சவாலாகும். நாம் உலகப்பிரகாரமான பிரசுரங்களைப் படிக்கும்போதும், அல்லது பொழுது போக்கு இடங்களுக்குச் செல்லும்போதும் இந்த உலகத்தின் “காற்றை” சுவாசிக்கும் நிலைக்குள்ளாகிறோம். உலகப் பிரகாரமான ஆட்களோடு—வேலையில், பள்ளியில், மற்றும் சில இடங்களில்—தொடர்பு தவிர்க்கப்பட முடியாதிருக்கையில், இந்த உலகத்தின் மரணத்துக்கேதுவான காற்று மண்டலத்திற்குள் இழுத்துக்கொள்ளப்படாதபடிக்கு நாம் விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும்.—1 கொரிந்தியர் 15:33, 34.
10 நம்முடைய நிலையை, “புகைபிடிக்கலாம்” “புகைபிடிக்கக்கூடாது” என்ற இரு பகுதிகளையுடைய ஓர் உணவு விடுதியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் நிலைமைக்கு ஒப்பிடலாம். யெகோவாவின் ஆவிக்குரிய பரதீஸில் இருக்கும் கிறிஸ்தவர்களாக சரியாகவே நாம் “புகைபிடிக்கக்கூடாது” என்ற பகுதியிலிருக்கிறோம், இந்த உலகத்தின் ஆவிக்கு விலகியிருக்கிறோம். நாம் வேண்டுமென்றே “புகைபிடிக்கலாம்” பகுதியில் உட்காரமாட்டோம் என்பது நிச்சயம். அப்படிச் செய்தால் அது முட்டாள்தனமாகும். ஆனால் உணவு விடுதியின் “புகைபிடிக்கக்கூடாது” என்ற பகுதியில் நாம் உட்கார்ந்திருக்கும்போது பொதுவாக என்ன ஏற்படுகிறது? ஏன், புகை கலந்த அசுத்தமான காற்று மெல்ல நம் பக்கமாக வீசிட, அதை நாம் சுவாசிக்க நேரிடுகிறது! இது ஏற்படுகையில், நச்சுக்கலந்த காற்று நமக்குக் கவர்ச்சியாக இருக்கிறதா? மாறாக நாம் அந்த அறையிலிருந்து சீக்கிரமாக வெளியறிவிடுகிறோமல்லவா?
11 ஆனால் இந்த உலகத்தின் காற்று சற்று உங்கள் பக்கமாக வீசும்போது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்த அசுத்தமான செல்வாக்கிலிருந்து வெளியேற நீங்கள் உடனடியான நடவடிக்கை எடுக்கிறீர்களா? அங்கு இருந்துகொண்டு அதை சுவாசிப்பீர்களானால், உங்களுடைய சிந்தனை பாதிக்கப்படும் என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள். மேலும், நேரம் அல்லது காலம் செல்லச் செல்ல, அந்த வாசனை உங்களுக்கு அவ்வளவு வெறுக்கத்தக்கதாய் இருப்பதில்லை, ஆனால் கவர்ச்சியாக, தயக்குவிப்பதாக, மாம்சத்திற்குப் பிரியமாக இருக்கிறது. கட்டுப்படுத்துவதற்காக நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் சில இரகசிய ஆசையை அது வளர்த்துவிடக்கூடும்.
12 சொல்லர்த்தமான காற்றை அசுத்தப்படுத்தும் கார்பன் மோனாக்ஸைட் போன்ற வாயுக்கள் வாசனையின்றி, சுவையின்றி இருப்பதுபோல இந்த உலகத்தின் மரணத்துக்கேதுவான “காற்றின்” சில நச்சுப்பொருட்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவையாய் இருக்கின்றன. எனவே, ஆபத்து என்னவென்றால் அந்த ‘நச்சுப் புகை’ நம்மை மேற்கொள்ளும்வரை நாம் அதைக் கண்டுபிடிக்க இயலாதிருக்கக்கூடும். இப்படியாக, இந்த உலகத்தின் கட்டுப்பாடற்ற மனப்பான்மைகள் அல்லது கடவுளுடைய நீதியின் தராதரங்களுக்குக் கீழ்ப்படியாமையின் மூலம் மரண பாதையில் நாம் வழிநடத்தப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும். “உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டும் போகாதபடிக்கு . . . நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்.”—எபிரெயர் 3:13; ரோமர் 12:12.
இந்த உலகத்தின் “காற்றில்” என்ன உட்பட்டிருக்கிறது?
13 இந்த உலகத்தின் பலமான செல்வாக்கினால், நாம் உணருவதற்கு முன்பாகவே, என்ன மனப்பான்மைகளைக் கொள்ளக்கூடும்? ஒன்று, ஒழுக்கங்கெட்ட காரியங்களோடு விளையாட இருக்கும் மனப்போக்குக் காமம் மற்றும் ஒழுக்கத்தின் பேரில் இந்த உலகத்தின் கருத்துக்கள் நம்மைச் சூழ இருக்கின்றன. “வேசித்தனத்தில் ஈடுபடுவதும், விவாகத்திற்குப் புறம்பாக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுதலும், ஓரினப்புணர்ச்சியில் தொடர்ந்து ஈடுபடுவதும் சரிதான். வெறுமென நாங்கள் பொதுவான, இயல்பான காரியத்தைத்தான் செய்கிறோம்,” என்று பலர் சொல்லுகின்றனர். இந்தக் “காற்று” அல்லது உலக ஆவி யெகோவாவின் மக்களைப் பாதித்திருக்கிறதா? எதிர்பாராத காரியம், 1986 ஊழிய ஆண்டில் 37,426 பேர் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட்டனர், இவர்களில் பெரும்பாலோர் பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கங்கெட்ட நடத்தையைத் தொடர்ந்ததற்காக சபை நீக்கம் செய்யப்பட்டனர். இது உண்மையான மனந்திரும்புதலைக் காண்பித்ததால் ஒழுக்கக்கேடான நடத்தைக்கு சபை நீக்கம் செய்யப்படாமல் கடிந்துகொள்ளப்பட்ட அதிகமான எண்ணிக்கையினரை உட்படுத்தவில்லை.—நீதிமொழிகள் 28:13.
14 பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேட்டிற்கு ஆளாகிவிடும் ஆட்களின் விஷயத்தில் நடப்பது என்ன? உண்மைகள் அறியவரும்போது, அவர்கள் இந்த உலகத்தின் மரணத்துக்கேதுவான “காற்றை” மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்பது அநேகருடைய விஷயத்தில் காணப்பட்டிருக்கிறது. உலகப்பிரகாரமான எண்ணங்கள் தங்களுடைய தராதரங்களைக் குறைத்துக்கொள்ள அனுமதித்திருக்கின்றனர். உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு, பார்க்கப் பிடிக்காமல் திரையரங்கிலிருந்து வெளியேறிய திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கலாம். அதைவிட மோசமான காரியம், கிறிஸ்தவர்களுக்குத் தகுதியற்றது என்று தெளிவாகத் தெரியும் திரைப்படங்களை வீட்டிலேயே வீடியோக்களில் காணக்கூடும். இப்படியாக ஒழுக்கங்கெட்ட காரியங்களுடன் விளையாடுவது வேத வசனங்களின் புத்திமதிக்கு நேரெதிரானது: “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே [வெட்கக்கேடான நடத்தையும், NW] புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்.”—எபேசியர் 5:3, 4.
15 உண்மைதான், வேசித்தனத்தில் ஈடுபடும்படியான நேரடியான சிபாரிசை நீங்கள் மறுக்கக்கூடும். ஆனால் வேலையிலோ அல்லது பள்ளியிலோ உங்களோடு ஒருவர் விளையாட்டுக்காதலில் ஈடுபட முயலும்போது, உடலளவில் உங்களோடு அளவுக்கு மிஞ்சி பழகும்போது, அல்லது காதல் சந்திப்புகளைக் கொண்டிருக்க உங்களை அழைக்கும்போது நீங்கள் எப்படிச் செயல்படுகிறீர்கள்? இந்த உலகத்தின் “காற்று” சற்று உங்கள் பக்கமாக வீச ஆரம்பித்துவிட்டிருக்கிறது. அதை அனுபவிப்பதற்கு, அதை ஊக்குவிப்பதற்கு நீங்கள் உங்களை அனுமதிக்கிறீர்களா? மூப்பர்களிடமிருந்து பெறும் அறிக்கைகளின்படி, தவறிழைத்தல் பெரும்பாலும் சாதாரண வழிகளில் துவங்குகிறது: “ஒரு கிறிஸ்தவ பெண்ணிடம் ஓர் உலகப்பிரகாரமான மனிதன் இப்படியாக சொல்லக்கூடும்: “இன்று நீ பார்ப்பதற்கு எவ்வளவு நன்றாயிருக்கிறாய்!” அந்த வார்த்தைகள் காதுக்கு இனிமையாக இருக்கக்கூடும், விசேஷமாக அவள் ஓரளவுக்குத் தனிமையாக இருந்தால், அதைவிட வினைமையானது, தவறான விதத்தில் தொடப்படும்போது சிலர் ஞானமாக பிரதிபலிக்கவில்லை. எதிர்ப்புத் தெரிவிப்பதாக வெளிப்படையாகத் தோன்றக்கூடும், ஆனால் அந்த உலகப்பிரகாரமான ஆள் தன்னுடைய செயல்களில் தொடருவதற்கு அரைமனதுடன் ஊக்குவிப்பவளாயிருக்கக்கூடும். ஒழுக்கங்கெட்ட காரியத்திற்கு வழிநடத்தும் அப்படிப்பட்ட செயல்கள் பலமான நச்சுத்தன்மை வாய்ந்த காற்று தன் பக்கமாக வீசுவதுபோல் ஒரு கிறிஸ்தவ பெண்ணின் விஷயத்தில் தொடருமானால் என்ன? அவனுடைய கவனம் தனக்குத் தேவை இல்லை என்றும் அதைத் தான் ஏற்றுக்கொள்வதில்லை என்றும் உறுதியாக சொல்லிவிட வேண்டும். இந்தக் “காற்றை” அவள் தொடர்ந்து சுவாசிப்பவளாயிருந்தால், அவளுடைய எதிர்ப்பு சக்தியும் முறிந்துவிடும். அவள் ஒழுக்கக்கேடான செயலுக்குள் வழிநடத்தப்படக்கூடும். இல்லாவிடில் விவேகமற்ற விவாகத்திற்குள் வழிநடத்தப்படக்கூடும்.—நீதிமொழிகள் 5:3-14; 1 கொரிந்தியர் 7:39.
16 எனவே இந்த உலகத்தின் மரணத்துக்கேதுவான “காற்றை” சுவாசிக்க மறுத்திடுவதில் வேகமாக செயல்படுங்கள். அதனுடைய இச்சிக்கத்தக்க வாசனைக்குக் கட்டுப்பட்டு யெகோவாவின் பெயருக்கும் அவருடைய அமைப்புக்கும் கெட்ட பெயரைக் கொண்டு வருவதற்குப் பதிலாக உங்களுடைய தேவபக்திக்கடுத்த மனப்பான்மையாலும் நடத்தையாலும் கடவுளுக்குச் சுகந்த வாசனையாக இருங்கள். இதைப் பவுல் இப்படியாகச் சொன்னான்: “இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும் நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரண வாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனையாகவும் இருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 2:15, 16) கிறிஸ்தவ வழிக்குப் பலர் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டால் என்ன? (1 பேதுரு 4:1-5) பிளவுபட்ட குடும்பங்கள், விவாகத்திற்குப் புறம்பே பிறந்த பிள்ளைகள், ஏய்ட்ஸ் போன்ற பாலுறவு மூலம் பரவும் நோய்கள், மற்றும் எண்ணிக்கையிலடங்கா உணர்ச்சி சம்பந்தமானதும் உடல் சம்பந்தமானதுமான கேடுகள் போன்ற கெட்ட கனிகளை அறுவடை செய்திடும் அதன் வழியில் உலகம் தொடர்ந்து செல்லட்டும். நீங்கள் பல உபாதைகளிலிருந்து காக்கப்படுவது மட்டுமல்லாமல் கடவுளுடைய தயவையும் உடையவர்களாயிருப்பீர்கள். மேலும், உங்களுடைய நல்ல நடத்தையாலும் நீங்கள் பிரசங்கிக்கும் ராஜ்ய செய்தியாலும் சிலராயினும் கவர்ச்சிக்கப்பட்டு, இப்படியாக “ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனை”யால் ஈர்க்கப்படுகின்றனர்.
உலக நவநாகரீகப் பாணிகளின் “காற்று”
17 இந்த உலக “காற்றின்” மற்றொரு அம்சம் உடை மற்றும் சிகை அலங்காரப் பாணிகள் சம்பந்தப்பட்டது. இந்த உலகத்திலுள்ள பலர் காமக் கவர்ச்சி கொண்ட விதத்தில் உடை உடுத்துகிறார்கள். இளமைப் பருவத்தை எட்டுவதற்கு முன்னாகவே தங்களைப் பெரியவர்களாகக் காண்பிக்கும் வகையில், பாலுறுப்புக்களை மேன்மைபடுத்திக் காண்பிக்கும் வகையில் உடுத்துகின்றனர். எங்கும் பரவியிருக்கும் இந்தக் “காற்றால்” அல்லது மனப்பான்மையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் கிளர்ச்சிக்காக, கேலிக்காக, எதிர் பாலினரின் இச்சையைத் தவறான விதத்தில் தூண்டுவதற்காக உடை உடுத்துகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் நெருப்போடு விளையாடுகிறீர்கள். இந்தக் “காற்றை” சுவாசிப்பது உங்கள் அடக்கத்தின் ஆவியை, கற்புள்ளவர்களாக இருப்பதற்கான உங்கள் ஆசையை நெறித்திடும். (மீகா 6:8) உலக ஆவியை உடையவர்கள் உங்களிடமாக இழுக்கப்படுவார்கள். உங்களுடைய செயல்களிலிருந்து, நீங்கள் அவர்களுடைய ஒழுக்கக்கேட்டில் சேர்ந்துகொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்ற செய்தியை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட “காற்று” கடவுளுடைய பார்வையில் கெட்டதைச் செய்வதற்கு உங்களைக் கவர்ந்திழுக்க அனுமதிப்பதன் மூலம் ஏன் இந்தத் திசையில் செல்ல ஆரம்பிக்க வேண்டும்?
18 அடக்கமாக இருப்பதற்கு, நாம் கவர்ச்சியற்ற விதத்தில் உடுத்தவேண்டிய அல்லது சிகை அலங்காரம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பான்மையினர் உடை உடுத்தும் விதத்தையும், சிகை அலங்கரிக்கும் விதத்தையும் கவனியுங்கள். இந்த உலகத்தின் வரம்புகடந்த பாணிகளை அவர்கள் தவிர்க்கின்றனர், ஆனால் சர்வலோக பேரரசராகிய யெகோவாவைத் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் ஊழியர்கள் என்பதை மனதில் கொண்டவர்களாய் நல்ல தோற்றமுடைய விதத்தில் உடுத்திக்கொள்கிறார்கள். அவர்களுடைய அடக்கமான பாணிகளைக் குறித்து இந்த உலகம் குறைகூறட்டும். இந்த உலகத்தின் மனப்பான்மைகள் தங்களுடைய கிறிஸ்தவ தராதரங்களைக் குறைத்துக்கொள்ளும்படி அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனிமேல் நடவாமலிருங்கள் . . . அவர்கள் [ஒழுக்க] உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.” (எபேசியர் 4:17-19) முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவன் புறஜாதிகளைப் போல் நடவாமல் அடக்கமாக உடுத்திக்கொள்வான்.—1 தீமோத்தேயு 2:9, 10.
19 இதுவரை நாம் இந்த உலக “காற்றின்” இரண்டு அம்சங்களை மட்டும் சிந்தித்தோம். ஆனால் இந்தக் “காற்று” ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு மிகவும் கெட்டது என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அடுத்த கட்டுரையில், தாங்கள் அதற்கு அடிபணிந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் பிசாசும் அவனுடைய ஒழுங்குமுறையும் கிறிஸ்தவர்களை நோக்கி தொடர்ந்து வீசிவரும் மரணத்துக்கேதுவான இந்தக் “காற்றின்” மற்ற அம்சங்களைக் கவனிப்போம். இப்படிப்பட்ட “காற்றை” சுவாசிப்பதைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியம், ஏனென்றால் இந்த உலக ஆவியை உள்ளிழுப்பது மரண ஆவியை சுவாசிப்பதாகும்! (w87 9/15)
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ இந்த உலகத்தின் “காற்று” என்பது என்ன? அது யாருடைய அதிகாரத்திலிருக்கிறது?
◻ இந்த உலகத்தின் “காற்று” மக்கள் மீது என்ன “அதிகாரத்தைக்” கொண்டிருக்கிறது?
◻ கிறிஸ்தவர்கள் “புகைபிடிக்கக்கூடாது” என்ற பகுதியிலிருக்கிறார்கள் என்று ஏன் சொல்லலாம்?
◻ ஒழுக்கங்கெட்ட காரியங்களுடன் விளையாடுவது சம்பந்தமாக இந்த உலக “காற்று” யெகோவாவின் மக்களை எவ்விதம் பாதிக்கக்கூடும்?
◻ உடை மற்றும் சிகையலங்காரம் சம்பந்தமாக இந்த உலக “காற்றின்” செல்வாக்கைத் தவிர்க்க அடக்கம் நமக்கு எவ்விதத்தில் உதவக்கூடும்?
[கேள்விகள்]
1. காற்று நச்சுப்படுத்தப்பட்டிருப்பது எப்படி மனிதருக்கு மரணத்துக்கேதுவானதாயிருக்கிறது?
2. நாம் சுவாசிக்கக்கூடிய நச்சுக்கலந்த காற்றைவிட மாசு கலந்த எந்தக் “காற்று” அதிக ஆபத்தானது?
3, 4. (எ) “காற்றின் அதிகார அதிபதி” யார்? (பி) எபேசியர் 2:1, 2-ன் “காற்று” ஏன் பேய்களின் வாசஸ்தலமல்ல?
5. இங்கு சிந்திக்கப்படும் “காற்று” என்ன? அது மக்கள் மீது என்ன பாதிப்பையுடையதாய் இருக்கிறது?
6. (எ) இந்த உலக “காற்றின்” அழிக்கும் சக்தி எப்படிக் கூட்டப்படுகிறது? அது எப்படி “அதிகாரம்” செலுத்துகிறது? (பி) இந்தக் “காற்றை” சுவாசிப்பது பிசாசின் கலகத்தனமான போக்கைப் பின்பற்றும்படி ஒருவர எப்படி ஏவக்கூடும்?
7. (எ) கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் எவ்வாறு “கோபாக்கினையின் பிள்ளைகளாய்” இருந்தார்கள்? (பி) நாம் கிறிஸ்தவர்களாக ஆனபோது என்ன மாற்றம் ஏற்பட்டது?
8. இன்று நம்முடைய நிலைமை எப்படி வனாந்தரத்திலிருந்த இஸ்ரவேல் தேசத்தாருக்கு ஒப்பாயிருக்கிறது?
9. (எ) இந்த உலகத்திலிருந்துகொண்டே நாம் அதன் பாகமாயில்லாதிருப்பது எப்படி? (பி) இந்த உலகத்தின் மரணத்துக்கேதுவான காற்று மண்டலத்திற்குள் இழுத்துக்கொள்ளப்படாதபடி இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
10, 11. (எ) நாம் யெகோவாவின் ஆவிக்குரிய பரதீஸிலிருப்பதை எந்த விதத்தில் “புகை பிடிக்கக்கூடாது” என்ற பகுதியிலிருப்பதற்கு ஒப்பிடலாம்? (பி) இந்த உலக “காற்று” இலேசாக நம் பக்கமாய் வீசுவதைக் கண்டால் நாம் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
12. அவ்வளவு எளிதில் கணிக்கப்படமுடியாத இந்த உலக “காற்றின்” அம்சங்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க என்ன தேவைப்படுகிறது?
13. (எ) நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய இந்த உலக “காற்றின்” ஒரு வகை என்ன? (பி) இந்தக் “காற்று” யெகோவாவின் மக்களில் சிலரை பாதித்திருக்கிறது என்பது எப்படித் தெரிகிறது?
14. ஒழுக்க சம்பந்தமாக சில கிறிஸ்தவர்கள் ஏன் வழிவிலகிச் சென்றுவிடுகின்றனர்? எந்த வேதப்பூர்வமான ஆலோசனையை ஏற்க மறுத்தனர்?
15. பாலுறவு சம்பந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபடுவதற்கான சோதனை எப்படித் தற்செயலான முறையில் ஆரம்பிக்கக்கூடும்?
16. “கிறிஸ்துவின் நற்கந்தமாய்” இருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது?
17. உடை மற்றும் சிகை அலங்காரப் பாணிகள் எப்படி ஒருவர் இந்த உலகத்தின் ஆவியின் செல்வாக்குக்குள் வந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தக்கூடும்?
18. நாம் யெகோவாவைப் பிரதிநிதித்துவஞ் செய்கிறோம் என்பதை எல்லா சமயத்திலும் நினைவிற்கொள்வது எவ்விதத்தில் நமக்கு உடை மற்றும் சிகை அலங்காரப் பாணிகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவியாயிருக்கும்?
19. இந்த உலக “காற்றின்” இரண்டு முக்கிய அம்சங்களைச் சிந்தித்திருப்பதால், அதை சுவாசிப்பதிலிருக்கும் ஆபத்து குறித்து என்ன காரியம் தெளிவாகத் தெரிகிறது?
[பக்கம் 10-ன் படம்]
இந்த உலகத்தின் மரணத்துக்கேதுவான “காற்றை சுவாசிக்க நீங்கள் மறுக்கிறீர்களா?
[பக்கம் 13-ன் படம்]
இந்த உலக “காற்று” சற்று உங்கள் பக்கமாக வீசும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?