நீங்கள் உலகத்தின் ஆவியை எதிர்த்துப் போராடுகிறீர்களா?
“நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், . . . தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.”—1 கொரிந்தியர் 2:12.
1, 2. இந்தியாவிலுள்ள போபாலில் விஷவாயு உட்பட்ட என்ன விபத்து நடந்தது, என்ன ஓர் அதிக சாவுக்கேதுவான “வாயு” உலகமெங்கும் சுவாசிக்கப்பட்டு வருகிறது?
இந்தியாவிலுள்ள போபாலில் 1984 டிசம்பரின் ஒரு குளிர்ந்த இரவில் அதிர்ச்சியடையச் செய்த ஒரு சம்பவம் நடந்தது. அந்த நகரில் ஓர் இரசாயனத் தொழிற்சாலை இருக்கிறது, அந்த டிசம்பர் இரவில், வாயு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்ட கலன்கள் ஒன்றில் ஓர் அடைப்பான் சரியாக வேலைசெய்யவில்லை. திடீரென்று டன்கள்கணக்கான மித்தைல் ஐஸோசயனேட் காற்றுக்குள் புகுந்தது. காற்றால் எடுத்துச்செல்லப்பட்டதாக, இந்தச் சாவுக்கேதுவான வாயு வீடுகளுக்குள்ளும், தூங்கிக்கொண்டிருந்த குடும்பங்களுக்குள்ளும் அடித்துச்செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் மரித்தனர், இன்னும் பலர் உடல் ஊனமுற்றனர். அந்தச் சமயம்வரை நடந்திராத மிக மோசமான தொழிற்சாலை விபத்தாக அது இருந்தது.
2 போபாலைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டவுடன் துயரத்தில் ஆழ்ந்தனர். அங்குக் கசிந்த அந்தச் சாவுக்கேதுவான வாயு, உலகமெங்குமுள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் சுவாசிக்கும் ஒரு “வாயு” ஆவிக்குரிய வகையில் கொல்கிறதைவிட மிகக் குறைவானவர்களையே கொன்றது. பைபிள் அதை “உலகத்தின் ஆவி” என்றழைக்கிறது. அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொன்னபோது, அந்த மரணம்விளைவிக்கும் காற்றுமண்டலத்தைக் கடவுளிடமிருந்து வரும் ஆவியிலிருந்து வேறுபடுத்திக் காண்பித்தார்: “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.”—1 கொரிந்தியர் 2:12.
3. “உலகத்தின் ஆவி” என்றால் என்ன?
3 உண்மையில் “உலகத்தின் ஆவி” என்றால் என்ன? தி நியூ தேயர்ஸ் கிரீக் இங்லிஷ் லெக்ஸிக்கன் ஆஃப் தி நியூ டெஸ்டமென்ட் பிரகாரம், “ஆவி” (கிரேக்கு, நியூமா) என்ற வார்த்தையின் பொதுவான அர்த்தம் “எந்த ஒரு நபரின் ஆத்துமாவையும் நிரப்பி, அதிகாரம்செலுத்தும் மனச்சாய்வு அல்லது செல்வாக்கு.” ஒரு நபர் நல்ல அல்லது கெட்ட ஆவியை அல்லது மனச்சாய்வைப் பெற்றிருக்கலாம். (சங்கீதம் 51:10; 2 தீமோத்தேயு 4:22) ஒரு மக்கள் தொகுதியும்கூட ஓர் ஆவியை அல்லது விஞ்சிநிற்கும் மனச்சாய்வை உடையவர்களாக இருக்கலாம். அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய நண்பனாகிய பிலேமோனுக்கு எழுதினார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக.” (பிலேமோன் 25) இதைப்போலவே—ஆனால் மிக அதிகமான அளவில்—பொதுவாக உலகம் ஒரு செல்வாக்குச் செலுத்தும் போக்கை உடையதாக இருக்கிறது. இதுவே பவுல் குறிப்பிட்ட “உலகத்தின் ஆவி”யாக இருக்கிறது. வின்ஸன்ட் என்பவரின் புதிய ஏற்பாட்டில் வார்த்தை ஆராய்வுகள் (Word Studies in the New Testament) பிரகாரம், “அந்தச் சொற்றொடர் திருத்த முடியாத உலகத்தைத் தூண்டும் தீங்கின் நியமத்தை அர்த்தப்படுத்துகிறது.” இந்த உலகத்தின் சிந்தனையை ஊடுருவி, மக்கள் செயல்படும் விதத்தைத் தீவிரமாகப் பாதிக்கும் பாவமிக்க போக்காக அது இருக்கிறது.
4. உலகத்தின் ஆவியினுடைய ஊற்றுமூலம் யார், இந்த ஆவி மனிதர்கள்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது?
4 இந்த ஆவி விஷத்தன்மையுடையது. ஏன்? ஏனென்றால் அது “இந்த உலகத்தின் அதிபதி”யாகிய சாத்தானிடமிருந்து வருகிறது. “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற [காற்றின், NW] அதிகாரப் பிரபுவாகிய ஆவி” என்று உண்மையிலேயே அவன் அழைக்கப்படுகிறான். (யோவான் 12:31; எபேசியர் 2:2) இந்தக் ‘காற்றை’ அல்லது ‘கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆவி’யிலிருந்து தப்பிப்பது கடினம். அது மனித சமுதாயமெங்கும் வியாபித்திருக்கிறது. அதை நாம் உட்சுவாசித்தால், அதன் மனப்போக்குகளை, அதன் குறியிலக்குகளைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவோம். உலகத்தின் அந்த ஆவி ‘மாம்சத்தின் பிழைக்க’ அதாவது, நம் பாவமிக்க அபூரணத்தின்படி பிழைக்க உற்சாகப்படுத்துகிறது. அது சாவுக்கேதுவானது, ‘ஏனென்றால் மாம்சத்தின்படி பிழைத்தால் நீங்கள் சாவீர்கள்.’—ரோமர் 8:13.
இந்த உலகத்தின் ஆவியைத் தவிர்த்தல்
5. போபால் விபத்தின்போது ஒரு சாட்சி எவ்வாறு ஞானமாய் செயல்பட்டார்?
5 போபால் விபத்தின்போது, யெகோவாவின் சாட்சி ஒருவர் எச்சரிப்பு மணிகளின் சத்தத்துக்கும், விஷமிக்க வாயுவின் கசப்பான வாடைக்கும் விழித்தார். தாமதமின்றி அவர் தன்னுடைய குடும்பத்தினரை எழுப்பிவிட்டு, அவர்களைத் தெருவுக்கு ஓடிச்செல்லும்படி துரிதப்படுத்தினார். காற்றடிக்கும் திசையை அறிந்துகொள்வதற்காக ஒருசில நொடிகள் நிதானித்துவிட்டு, அவர் குழப்பம் மிகுந்த கூட்டத்தின்வழியாகப் போராடி தன் குடும்பத்தினரை நகரத்திற்கு வெளியே இருந்த ஒரு மலையின் உச்சிக்கு கூட்டிக்கொண்டுபோனார். அங்கு அவர்கள் பக்கத்திலிருந்த ஏரியிலிருந்து வீசிய புதிய, சுத்தமான காற்றினால் தங்களுடைய நுரையீரல்களை நிரப்பமுடிந்தது.
6. உலகத்தின் ஆவியிடமிருந்து தப்பிப்பிழைப்பதற்கு நாம் எங்கே போகலாம்?
6 இந்த உலகத்தின் விஷமிக்க ‘காற்றிலிருந்து’ தப்ப புகலிடம் ஏதேனும் உயரமான இடத்தில் இருக்கிறதா? இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. நம் நாளை முன்னோக்கி, ஏசாயா தீர்க்கதரிசி எழுதினார்: “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.” (ஏசாயா 2:2, 3) உண்மை வணக்கத்தின் உயர்வான இடம், உயர்த்தப்பட்ட “கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம்” மட்டுமே இந்தக் கோளில் மூச்சுத் திணறுதலிலிருந்தும், இந்த உலகத்தின் விஷமிக்க ஆவியிலிருந்தும் விடுபட்டிருக்கும் இடம். அங்குதான் யெகோவாவின் ஆவி, உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கிடையே தாராளமாகப் பொழிகிறது.
7. உலகத்தின் ஆவியிலிருந்து பலர் காப்பாற்றப்பட்டிருப்பது எப்படி?
7 இந்த உலகத்தின் ஆவியை முன்பு சுவாசித்த பலர், போபாலிலிருந்த அந்தச் சாட்சி உணர்ந்ததுபோல ஒரு விடுதலையுணர்வை அனுபவித்திருக்கிறார்கள். இந்த உலகத்தின் காற்றை அல்லது ஆவியை சுவாசிக்கும் ‘கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை’ பற்றி பேசிய பிறகு, அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார்: “அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, . . . நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்.” (எபேசியர் 2:3-5) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் விஷப்படுத்தப்பட்ட காற்றையே சுவாசிப்பவர்கள், ஆவிக்குரிய விதத்தில் மரித்தவர்களாய் இருக்கிறார்கள். எனினும், யெகோவாவின் நிமித்தம் பல லட்சக்கணக்கானோர் இன்று ஆவிக்குரிய உயரமான இடத்திற்கு ஓடிப்போய், அந்தச் சாவுக்கேதுவான நிலையிலிருந்து தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள்.
‘உலகத்தின் ஆவியினுடைய’ வெளிப்பாடுகள்
8, 9. (அ) உலகத்தின் ஆவிக்கு எதிராக நாம் தொடர்ந்து ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் என்று எது காட்டுகிறது? (ஆ) சாத்தானுடைய ஆவி எப்படி நம்மைக் கெடுக்கலாம்?
8 சாத்தானுடைய மரணத்திற்கேதுவான காற்று இன்னும் நம்மைச் சுற்றி சுழல்கிறது. ஒருவேளை ஆவிக்குரியவிதத்தில் மூச்சுத்திணறடிக்கப்பட, நாம் மீண்டும் உலகத்திற்குள் ஒருபோதும் கீழ்நோக்கி இழுத்துச்செல்லப்படாதபடி ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். இது தொடர்ந்த விழிப்புநிலையை உட்படுத்துகிறது. (லூக்கா 21:36; 1 கொரிந்தியர் 16:13) உதாரணமாக, இந்த உண்மையைக் கவனியுங்கள். ஒழுக்கம் சம்பந்தமான யெகோவாவின் தராதரங்களை எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்திருக்கிறார்கள்; விபச்சாரம், வேசித்தனம், ஒத்தப்பாலினத்தவர்புணர்ச்சி போன்ற அப்படிப்பட்ட அசுத்தமான பழக்கங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை. ஆனாலும், ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 40,000 பேர் யெகோவாவின் அமைப்பிலிருந்து சபைநீக்கம் செய்யப்படுகிறார்கள். ஏன்? பலருடைய விஷயங்களில் மேற்குறிப்பிடப்பட்ட இந்த அசுத்தமான பழக்கங்களே காரணம். அது எப்படி நடக்கக்கூடும்?
9 ஏனென்றால் நாமெல்லாரும் அபூரணர்கள். மாம்சம் பலவீனமானது. நம் இருதயத்தில் மேலெழும்பும் தவறான மனச்சாய்வுகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவது தேவையாக இருக்கிறது. (பிரசங்கி 7:20; எரேமியா 17:9) எனினும், அந்தத் தவறான மனச்சாய்வுகள், உலகத்தின் ஆவியால் தூண்டப்படுகின்றன. இந்த உலகத்திலுள்ள பலர், ஒழுக்கக்கேட்டில் எந்தத் தவறையும் காண்பதில்லை. மேலும் எதுவானாலும் சரி என்ற போக்கு, சாத்தானுடைய காரிய ஒழுங்குமுறையின் மனச்சாய்வின் பாகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சிந்தனைகள் நம்மைப் பாதிக்கும்படி அனுமதித்தால், ஏன், உலகத்தைப்போல் நாம் சிந்திக்க ஆரம்பித்துவிடுவோம் என்பதற்கு ஒரு பலத்த சாத்தியம் இருக்கிறது. சீக்கிரத்தில், அப்படிப்பட்ட அசுத்தமான சிந்தனைகள் தவறான ஆசைகளை உண்டாக்கக்கூடும், அவை வினைமையான பாவத்தில் முடிவடையும். (யாக்கோபு 1:14, 15) யெகோவாவின் தூய வணக்கத்திற்குரிய மலையில் சுற்றித்திரிந்துவிட்டு சாத்தானுடைய உலகத்தின் அசுத்தப்படுத்தப்பட்ட கீழ்ப்பகுதிகளுக்கு வந்துவிட்டவர்களாக நாம் இருப்போம். அங்கு விருப்பப்பட்டு இருக்கிறவர்கள் யாரும் நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பதில்லை.—எபேசியர் 5:3-5, 7.
10. சாத்தானுடைய காற்றின் ஒரு வெளிப்பாடு என்ன, கிறிஸ்தவர்கள் ஏன் இதைத் தவிர்க்கவேண்டும்?
10 நம்மைச் சுற்றி உலகத்தின் ஆவி இருப்பது தெளிவாய் இருக்கிறது. உதாரணமாக, பலர் பொறுப்பற்ற, கசப்புணர்ச்சியுடைய மனப்பான்மையுடன் வாழ்க்கையை நோக்குகின்றனர். ஊழல்நிறைந்த அல்லது மடத்தனமான அரசியல்வாதிகளாலும் ஒழுக்கங்கெட்ட, பேராசைமிக்க மதத் தலைவர்களாலும் பொதுவான நம்பிக்கையிலிருந்து விலகி, வினைமையான காரியங்களைக் குறித்தும் மதிப்பில்லாமல் அவர்கள் பேசுகின்றனர். இந்தப் போக்கை கிறிஸ்தவர்கள் எதிர்க்கின்றனர். ஒருவேளை நாம் நல்ல நகைச்சுவையாய் பேசும் சுபாவம் உடையவர்களாக இருந்தாலும், அவமரியாதை செய்யும் ஏளன ஆவியைச் சபைக்குள் கொண்டுவருவதைத் தவிர்ப்போம். ஒரு கிறிஸ்தவனுடைய பேச்சு யெகோவாவுக்குப் பயத்தையும், இருதய சுத்தத்தையும் பிரதிபலிக்கிறது. (யாக்கோபு 3:10, 11; ஒப்பிடுக: நீதிமொழிகள் 6:14.) நாம் இளைஞரோ முதிர்வயதினரோ, நம் பேச்சு “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று [நாம்] அறியும்படிக்கு . . . எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”—கொலோசெயர் 4:6.
11. (அ) உலகத்தின் ஆவியுடைய இரண்டாவது அம்சம் எது? (ஆ) இந்த அம்சத்தைப் பிரதிபலிப்பவர்களைவிட வித்தியாசமாக ஏன் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்?
11 இந்த உலகத்தின் ஆவியைப் பிரதிபலிக்கும் மற்றொரு பொதுவான மனச்சாய்வு பகை. இன, கலாச்சார, தேசிய, மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளின் அடிப்படையிலான பகைமைகளாலும் சண்டைகளாலும் உலகம் பிரிக்கப்பட்டிருக்கிறது. கடவுளுடைய ஆவி செயலில் இருக்கிற இடங்களில் காரியங்கள் எவ்வளவு மேம்பட்டிருக்கின்றன! அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.”—ரோமர் 12:17-21.
12. பொருளாசையைக் கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்கவேண்டும்?
12 இந்த உலகத்தின் ஆவி பொருளாசையையும் தூண்டுகிறது. வர்த்தக உலகினால் தூண்டப்பட்டு, பலர் புத்தம்புது இயந்திரங்கள், அதிநவீன பாணி, அதிநவீன கார் போன்றவற்றால் மனதை நிரப்பியிருக்கிறார்கள். அவர்கள் ‘கண்களின் இச்சைகளால்’ அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். (1 யோவான் 2:16) வாழ்க்கையில் தங்களுடைய வெற்றியை அவர்களுடைய வீட்டின் அல்லது அவர்களுடைய வங்கி கணக்கின் அளவைக்கொண்டு பலர் மதிப்பிடுகிறார்கள். யெகோவாவின் தூய வணக்கமாகிய உயர்த்தப்பட்ட மலையில் சுத்தமான ஆவிக்குரிய காற்றை சுவாசிக்கும் கிறிஸ்தவர்கள், இந்த மனப்போக்கை எதிர்க்கின்றனர். பொருள்சம்பந்தமான காரியங்களைத் திட்டமிட்டு தேடியலைவது அழிவுக்கேதுவானது என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:9, 10) இயேசு தம்முடைய சீஷர்களுக்கு நினைப்பூட்டினார்: “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.”—லூக்கா 12:15.
13. இந்த உலகத்தின் ஆவியுடைய கூடுதலான வெளிப்பாடுகள் சில யாவை?
13 இந்த உலகத்தின் ஆரோக்கியமற்ற ‘காற்றின்’ மற்ற வெளிப்பாடுகளும் இருக்கின்றன. ஒன்று, கலகத்தன ஆவி. (2 தீமோத்தேயு 3:1-3) மக்கள் பலர் இனிமேலும் அதிகாரங்களோடு இசைந்துபோவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உலகப்பிரகாரமான வேலையில், யாரேனும் ஒருவர் பார்த்துக்கொண்டில்லையென்றால் வேலைபார்க்காமல் இருக்கும் பரவலான பழக்கத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? சட்டத்தை மீறின—ஒருவேளை அவர்களுடைய வரிகளைக் கொடுப்பதில் ஏமாற்றின அல்லது வேலைசெய்கிற இடத்திலிருந்து திருடின—எத்தனை பேரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் பள்ளிக்குப் போகிறவராக இருந்தால், கல்விசம்பந்தமாக வெற்றியடைவோரை உங்கள் பள்ளித்தோழர்கள் வெறுப்புடன் நடத்துவதால் நீங்கள் உங்களால் முடிந்தளவிற்குச் செய்வதிலிருந்து எப்போதாவது உற்சாகமிழந்திருக்கிறீர்களா? இவையெல்லாம் கிறிஸ்தவர்கள் வெறுக்கவேண்டிய உலக ஆவியினுடைய வெளிப்பாடுகளாகும்.
இந்த உலகத்தின் ஆவியை எதிர்ப்பது எவ்வாறு
14. கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவரல்லாதவர்களிடமிருந்து என்ன வழிகளில் வித்தியாசமாய் இருக்கின்றனர்?
14 எனினும், உண்மையில் நாம் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே அந்த உலகத்தின் ஆவியை எவ்வாறு எதிர்ப்பது? நாம் உடல்ரீதியாக எங்கிருந்தாலும்சரி, நாம் ஆவிக்குரியரீதியில் உலகத்தின் பாகமானவர்களல்ல என்பதை நினைவில் வைக்கவேண்டும். (யோவான் 17:15, 16) நம் இலக்குகள் இந்த உலகத்தின் இலக்குகள் அல்ல. காரியங்களைக் குறித்த நம்முடைய நோக்குநிலை வேறுபட்டதாய் இருக்கிறது. நாம் ஆவிக்குரிய மக்கள், “மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்தஆவி போதிக்கிற வார்த்தைகளாலே,” பேசி, சிந்தித்து, “ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.”—1 கொரிந்தியர் 2:13.
15. உலகத்தின் ஆவியை நாம் எதிர்ப்பது எப்படி?
15 விஷமிக்க வாயுவால் தூய்மைக்கேடாக்கப்பட்ட ஒரு பகுதியில் இருப்பதாக ஒருவர் தன்னைக் கண்டால் அவர் என்ன செய்யலாம்? அவர், சுத்தமான காற்றை அனுப்பும் கலத்தோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு நச்சுவாயுத்தடுப்பு முகமூடியை அணிந்துகொள்ளலாம் அல்லது அவர் தன்னைத்தானே உடல்ரீதியில் அந்த இடத்தைவிட்டு அகன்றுபோகச் செய்யலாம். சாத்தானுடைய காற்றைத் தவிர்ப்பதற்கான வழி இந்த முறைகளை உட்படுத்துகிறது. முடிந்தவரை, நம் சிந்தனையைப் பாதிக்கும்படி செய்யும் உலகத்தின் ஆவி எதிலிருந்தும் நம்மை உடல்ரீதியில் அகற்றுவதற்கு நாம் முயற்சிசெய்கிறோம். இவ்வாறு, நாம் தவறான கூட்டுறவைத் தவிர்க்கிறோம், வன்முறை, ஒழுக்கக்கேடு, ஆவிக்கொள்கை, கலகத்தனம், அல்லது மாம்சத்திற்குரிய மற்ற எந்தக் கிரியையும் ஆதரிக்கும் எந்தவிதமான பொழுதுபோக்கையும் தவிர்க்கிறோம். (கலாத்தியர் 5:19-21) எனினும், நாம் உலகத்தில் வாழ்ந்துவருவதால், இப்படிப்பட்ட காரியங்கள் பாதிப்பதை நாம் முற்றிலுமாக தவிர்க்கமுடியாது. எனவே, ஆவிக்குரிய புத்தம்புதிய காற்றைக் கொடுக்கும் கலத்துடன் நம்மை இணைத்துக்கொண்டால், நாம் ஞானமாய் செயல்படுகிறவர்களாய் இருப்போம். நாம் நம்முடைய ஆவிக்குரிய நுரையீரல்களை, அதாவது, கூட்டத்திற்கு ஒழுங்காக ஆஜராயிருத்தல், தனிப்பட்ட படிப்பு, கிறிஸ்தவ நடவடிக்கை மற்றும் கூட்டுறவு, ஜெபம் போன்றவற்றால் நிரப்புகிறோம். அவ்வாறு செய்வதன்மூலம், சாத்தானின் காற்று எதுவும் நம்முடைய ஆவிக்குரிய நுரையீரல்களுக்குள் நுழைய முயன்றால், கடவுளுடைய ஆவி அதை ஏற்க மறுப்பதற்கு நமக்குப் பலம்தருகிறது.—சங்கீதம் 17:1-3; நீதிமொழிகள் 9:9; 13:20; 19:20; 22:17.
16 இந்த உலகத்தின் பாகமாக இருப்போரிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வித்தியாசப்பட்டவராக இருக்கும் நபராக ஒரு கிறிஸ்தவனைக் கடவுளுடைய ஆவி மாற்றுகிறது. (ரோமர் 12:1, 2) பவுல் சொன்னார்: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” (கலாத்தியர் 5:22, 23) கடவுளுடைய ஆவி, காரியங்களின் ஓர் ஆழமானப் புரிந்துகொள்ளுதலையும் ஒரு கிறிஸ்தவனுக்குக் கொடுக்கிறது. பவுல் சொன்னார்: “தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.” (1 கொரிந்தியர் 2:11) பொதுவான அர்த்தத்தில், ‘தேவனுக்குரியவைகள்’ என்பது கிரய பலி, இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யம், நித்திய ஜீவ நம்பிக்கை, இந்தப் பொல்லாத உலகத்தை உடனடியாக நீக்குதல் போன்ற சத்தியங்களை உட்படுத்துகின்றன. கடவுளுடைய ஆவியின் உதவியுடன், கிறிஸ்தவர்கள் இவற்றை சத்தியம் என்பதாக அறிந்து, ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இது வாழ்க்கையைப் பற்றிய அவர்களுடைய நோக்குநிலையை உலக மக்களுடைய நோக்குநிலையிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. அவர்கள், வரப்போகிற நித்திய காலமாக யெகோவாவைச் சேவிக்கும் எதிர்பார்ப்புடன் அவரை இப்பொழுது சேவிப்பதில் தங்களுடைய சந்தோஷத்தைக் காண திருப்தியுடனிருக்கிறார்கள்.
17. உலகத்தின் ஆவியை எதிர்ப்பதில் யார் ஓர் உன்னதமான முன்மாதிரியை வைத்தார், எப்படி?
17 இந்த உலக ஆவியை எதிர்ப்பவர்களுக்கு ஓர் உன்னதமான முன்மாதிரியாக மாடலாக இயேசு இருந்தார். இயேசுவின் முழுக்காட்டுதல் பெற்றவுடன், சாத்தான் மூன்று சோதனைகளைத் தருவதன்மூலம் யெகோவாவைச் சேவிப்பதிலிருந்து அவரைத் திசைதிருப்புவதற்கு முயற்சிசெய்தான். (மத்தேயு 4:1-11) கடைசியான சோதனை, சாத்தானுக்கு வெறுமனே ஒரு வணக்க செயல் செய்வதன்மூலம் முழு உலகத்தின் ஆட்சிப்பொறுப்பைப் பெறும் வாய்ப்பை இயேசுவுக்கு அளிப்பதை உட்படுத்தியது. இயேசு ஒருவேளை இவ்வாறு வாதாடியிருக்க முடிந்திருக்கும்: ‘சரி, நான் அந்த வணக்க செயலைச் செய்கிறேன், நான் உலகத்தின் ஆட்சிப்பொறுப்பைப் பெற்றபின்பு, மனந்திரும்பி, யெகோவாவுக்கு மறுபடியும் வணக்கத்தைச் செலுத்துவேன். நாசரேத்தில் ஒரு தச்சனாக இப்போது மனித குலத்திற்குப் பிரயோஜனமாக இருப்பதைவிட உலக அதிபதியாக இருந்து அதிகத்தைச் செய்யும் நிலையிலிருப்பேன்.’ இயேசு அப்படி நியாயம்பேசவில்லை. யெகோவா அவருக்கு உலக ஆட்சியைத் தரும்படி காத்திருக்க விருப்பமுள்ளவராய் இருந்தார். (சங்கீதம் 2:8) அந்தச் சமயத்திலும், அவருடைய வாழ்க்கையில் மற்ற எல்லா சமயங்களிலும் அவர் சாத்தானுடைய விஷமிக்க காற்றின் செல்வாக்கை எதிர்த்தார். இவ்வாறு ஆவிக்குரிய வகையில் தூய்மைக்கேடாக்கப்பட்ட இந்த உலகத்தை அவர் ஜெயித்தார்.—யோவான் 16:33.
18. உலகத்தின் ஆவியை நாம் எதிர்ப்பது கடவுளுக்கு எவ்வாறு புகழைக் கொண்டுவருகிறது?
18 நாம் இயேசுவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றவேண்டும் என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (1 பேதுரு 2:21) இதைவிட சிறந்த எந்த மாதிரியை நாம் பெற்றிருக்க முடியும்? இந்தக் கடைசி நாள்களில், உலகத்தின் ஆவியால் தூண்டப்பட்டு, மனிதர்கள் சீர்கேட்டிற்குள் ஆழமாழமாக மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். யெகோவாவின் வணக்கத்திற்குரிய உயர்த்தப்பட்ட இடம், இப்படிப்பட்ட ஓர் உலகத்தின் மத்தியில் தூயதாகவும் சுத்தமாகவும் நிற்பது என்னே ஓர் அதிசயமான காரியம்! (மீகா 4:1, 2) நிச்சயமாகவே, கடவுளுடைய ஆவியின் வல்லமை, கடவுளுடைய வணக்க இடத்திற்கு லட்சக்கணக்கானோர் ஓடிப்போய், இந்த உலகத்தின் எங்கும் பரவுகிற ஆவியை எதிர்த்து, யெகோவாவுக்கு மகிமையையும் துதியையும் கொண்டுவருகிறதில் காணப்படுகிறது! (1 பேதுரு 2:11, 12) யெகோவாவின் அபிஷேகம்செய்யப்பட்ட ராஜா இந்தப் பொல்லாத உலகத்தை நீக்கிப்போட்டு, பிசாசாகிய சாத்தானையும் அவனுடைய பேய்களையும் அபிஸ்ஸில் போடும்வரை, அந்த உயர்வான இடத்தில் தொடர்ந்து இருப்பதற்கு நாம் அனைவரும் தீர்மானத்தோடிருப்போமாக. (வெளிப்படுத்துதல் 19:19–20:3) அப்போது, இந்த உலகத்தின் ஆவி ஒருபோதும் இருக்கப்போவதில்லை. என்னே ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட சமயமாக அது இருக்கும்!
நீங்கள் விளக்கமுடியுமா?
◻ உலகத்தின் ஆவி என்றால் என்ன?
◻ இந்த உலகத்தின் ஆவி தனிப்பட்டவர்கள்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது?
◻ உலகத்தினுடைய ஆவியின் சில வெளிப்பாடுகள் யாவை, அவற்றை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
◻ நாம் கடவுளுடைய ஆவியைக் கொண்டிருக்கிறோம் என்று எப்படிக் காட்டலாம்?
◻ உலகத்தின் ஆவியை எதிர்ப்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் வருகின்றன?
16. கடவுளுடைய ஆவியைக் கொண்டிருக்கிறோம் என்று நாம் எப்படிச் சான்றளிக்கிறோம்?
[பக்கம் 16, 17-ன் படம்]
உலகத்தின் ஆவி சாத்தானிடமிருந்து வருகிறது
உலகத்தின் ஆவியைத் தவிர்த்திட, யெகோவாவினுடைய வணக்கத்தின் உயரமான இடத்திற்கு ஓடுங்கள்