உலகத்தின் சிந்தையை அல்ல, கடவுளுடைய சக்தியைப் பெறுங்கள்
“நாம் இந்த உலகத்தின் சிந்தையைப் பெறவில்லை, கடவுளுடைய சக்தியையே பெற்றிருக்கிறோம்; அதனால்தான், அவர் தயவுடன் வெளிப்படுத்தியிருக்கிற விஷயங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.”—1 கொ. 2:12.
1, 2. (அ) உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட போரில் ஈடுபட்டிருக்கிறார்கள்? (ஆ) என்ன கேள்விகளுக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்?
உண்மைக் கிறிஸ்தவர்களான நாம் ஒரு போரில் ஈடுபட்டிருக்கிறோம்! நம்முடைய எதிரி பலமிக்கவன், வஞ்சகன், போரில் கைதேர்ந்தவன். அவனிடம் திறம்பட்ட ஓர் ஆயுதம் இருக்கிறது; அதைப் பயன்படுத்தி மனிதர்களில் பெரும்பாலோரை வீழ்த்தியிருக்கிறான். ஆனால், அவனை எதிர்க்க நமக்குச் சக்தியில்லை என்றோ எதிர்த்தால் தோல்விதான் மிஞ்சும் என்றோ நினைக்க வேண்டியதில்லை. (ஏசா. 41:10) தகர்க்கமுடியாத ஓர் ஆயுதம் நம்மிடமும் இருக்கிறது; அதன் உதவியால் எந்தவொரு தாக்குதலையும் எதிர்த்து நிற்க முடியும்.
2 நாம் நிஜமான போரில் அல்ல, ஆன்மீகப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். நம்முடைய எதிரி பிசாசாகிய சாத்தான்; அவன் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் “இந்த உலகத்தின் சிந்தை.” (1 கொ. 2:12) அவனுடைய தாக்குதலை எதிர்த்து நிற்க நாம் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் கடவுளுடைய சக்தி. இந்தப் போரில் அவனை ஜெயித்து ஆன்மீக ரீதியில் திடகாத்திரமாய் இருக்க நாம் கடவுளுடைய சக்திக்காகக் கேட்க வேண்டும், அது பிறப்பிக்கிற குணங்களை வாழ்க்கையில் வெளிக்காட்ட வேண்டும். (கலா. 5:22, 23) அப்படியென்றால், இந்த உலகத்தின் சிந்தை என்பது என்ன, அது எப்படி உலகத்தை இந்தளவுக்குக் கட்டுப்படுத்த ஆரம்பித்தது? இந்தச் சிந்தை நம்மீது செல்வாக்கு செலுத்துகிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொள்வதில்... இந்த உலகத்தின் சிந்தையை எதிர்ப்பதில்... இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
உலகத்தின் சிந்தை—ஏன் இந்தளவுக்குப் பரவியிருக்கிறது?
3. இந்த உலகத்தின் சிந்தை என்றால் என்ன?
3 “இந்த உலகத்தை ஆளுகிற” சாத்தானே உலகச் சிந்தைக்கு மூலக்காரணன்; இந்தச் சிந்தை கடவுளுடைய சக்திக்கு எதிராகச் செயல்படுகிறது. (யோவா. 12:31; 14:30; 1 யோ. 5:19) இது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் மனப்பான்மை, மக்களைச் செயல்படத் தூண்டும் மனப்பான்மை. இது கடவுளுடைய சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் எதிராக மக்களைச் செயல்படத் தூண்டுகிறது.
4, 5. சாத்தான் தூண்டுவிக்கிற சிந்தை எப்படி இந்தளவுக்குப் பரவியது?
4 சாத்தான் தூண்டுவிக்கிற இந்தச் சிந்தை எப்படி இந்தளவுக்குப் பரவியது? முதலாவது, ஏதேன் தோட்டத்தில் சாத்தான் ஏவாளை ஏமாற்றினான். கடவுளைவிட்டு விலகினால் நன்றாக வாழ முடியுமென அவளை நம்ப வைத்தான். (ஆதி. 3:13) அவன் எப்பேர்ப்பட்ட பொய்யன்! (யோவா. 8:44) பிறகு, அவளைப் பயன்படுத்தியே ஆதாமையும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகச் செய்தான். அப்படி அவன் கீழ்ப்படியாமல் போனதால் மனிதர்கள் எல்லாரும் பாவத்திற்குள் தள்ளப்பட்டார்கள்; இப்படித்தான், கீழ்ப்படியாமை எனும் சாத்தானுடைய சிந்தையை மனிதர்கள் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.—எபேசியர் 2:1-3-ஐ வாசியுங்கள்.
5 சாத்தான் எக்கச்சக்கமான தேவதூதர்களையும்கூட ஏமாற்றினான்; அவர்கள் பிசாசுகளாக மாறிவிட்டார்கள். (வெளி. 12:3, 4) நோவாவின் காலத்தில் பெருவெள்ளம் வருவதற்கு முன்பே அவர்கள் இப்படிக் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள். பரலோகத்தில் கடவுள் கொடுத்திருந்த ஸ்தானத்தை விட்டுவிட்டு பூமிக்குச் சென்று இயல்புக்கு மாறான ஆசைகளைத் திருப்தி செய்து மனம்போல் வாழ்ந்தால் நன்றாக இருக்க முடியுமென அந்தத் தூதர்கள் நம்பினார்கள். (யூ. 6) இப்போது ஆவி உருவில் இருக்கிற அந்தப் பேய்களின் உதவியோடு அவன் ‘உலகம் முழுவதையும் மோசம்போக்குகிறான்.’ (வெளி. 12:9) என்றாலும், இன்று பெரும்பாலோர் பேய்களின் செல்வாக்கை அறியாதவர்களாகவே இருப்பது வருத்தமான விஷயம்.—2 கொ. 4:4.
உலகத்தின் சிந்தை உங்கள்மீது செல்வாக்கு செலுத்துகிறதா?
6. எப்போது மட்டுமே இந்த உலகத்தின் சிந்தை நம்மீது செல்வாக்கு செலுத்தும்?
6 சாத்தானுடைய செல்வாக்கை அநேகர் அறியாதிருக்கிறார்கள்; ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் அவனுடைய தந்திரங்களை அறிந்திருக்கிறார்கள். (2 கொ. 2:11) சொல்லப்போனால், நாம் இடங்கொடுத்தால் மட்டுமே இந்த உலகத்தின் சிந்தை நம்மீது செல்வாக்கு செலுத்தும். நம்மீது செல்வாக்கு செலுத்துவது கடவுளுடைய சக்தியா, இந்த உலகத்தின் சிந்தையா என்பதை அறிந்துகொள்ள நான்கு கேள்விகளை ஆராய்வோம்.
7. கடவுளிடமிருந்து நம்மை விலக்க சாத்தான் முயற்சி செய்யும் ஒரு வழி என்ன?
7 நான் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு என்னைப் பற்றி என்ன சொல்கிறது? (யாக்கோபு 3:14-18-ஐ வாசியுங்கள்.) வன்முறையில் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு கடவுளிடமிருந்து நம்மை விலக்க சாத்தான் முயற்சி செய்கிறான். வன்முறையில் பிரியப்படுகிற யாரையுமே யெகோவாவுக்குப் பிடிக்காது என்பதைப் பிசாசு அறிந்திருக்கிறான். (சங். 11:5) எனவே, புத்தகங்கள், திரைப்படங்கள், இசை, எலெக்ட்ரானிக் கேம்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி நம்முடைய ஆர்வத் தீயை மூட்டிவிடுகிறான்; சில எலெக்ட்ரானிக் கேம்ஸ் படுமோசமான ஒழுக்கக்கேட்டையும் வன்முறையையும் தூண்டிவிடுகின்றன. நாம் நன்மையானவற்றை நேசிக்கிற அதேசமயத்தில் சாத்தான் தூண்டுவிக்கிற தீமையானவற்றையும் நேசித்தால் அவனுக்குச் சந்தோஷம்தான்.—சங். 97:10.
8, 9. பொழுதுபோக்குச் சம்பந்தமாக என்ன கேள்விகளை நம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
8 ஆனால், கடவுளுடைய சக்தியைப் பெறுவோர், ஒழுக்க விஷயத்தில் சுத்தமானவர்களாக, சமாதானம் பண்ணுகிறவர்களாக, இரக்கம் நிறைந்தவர்களாக இருக்க அந்தச் சக்தி தூண்டுகிறது. எனவே, ‘நான் தேர்ந்தெடுக்கிற பொழுதுபோக்கு நல்ல குணங்களைக் காட்ட ஊக்குவிக்கிறதா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் ‘வெளிவேஷமற்றது.’ கடவுளுடைய சக்தியைப் பெற்றிருப்பவர்கள் ஒழுக்கச் சுத்தத்தையும் சமாதானத்தையும் பற்றி மற்றவர்களிடம் பேசிவிட்டு, கொடூரமான வன்முறையையும் ஒழுக்கக்கேட்டையும் சித்தரிக்கும் காட்சிகளை வீட்டில் தனியாக இருந்து கண்டுகளிக்க மாட்டார்கள்.
9 தமக்கு மட்டுமே முழு பக்தியையும் செலுத்த வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். ஆனால், தன்னை ஒரேவொரு முறை வணங்கினால் போதுமென சாத்தான் நினைக்கிறான்; அதைத்தானே அவன் இயேசுவிடமும் எதிர்பார்த்தான்! (லூக். 4:7, 8) அதனால் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘கடவுளுக்கு மட்டுமே முழு பக்தியையும் செலுத்துகிறேன் என்பதை நான் தேர்ந்தெடுக்கிற பொழுதுபோக்குக் காட்டுகிறதா? அந்தப் பொழுதுபோக்கு உலகத்தின் சிந்தையை எதிர்த்து நிற்க எனக்கு உதவுகிறதா அல்லது அதை இன்னும் கஷ்டமாக்குகிறதா? இனி பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது நான் எப்படிக் கவனமாக இருக்கலாம்?’
10, 11. (அ) உலகத்தின் சிந்தை பொருள் சம்பந்தமாக எத்தகைய மனப்பான்மையை முடுக்கிவிடுகிறது? (ஆ) கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தை எத்தகைய குணத்தைக் காட்டும்படி ஊக்குவிக்கிறது?
10 பொருள்களைச் சேர்ப்பதில் என்னுடைய மனப்பான்மை எப்படியிருக்கிறது? (லூக்கா 18:24-30-ஐ வாசியுங்கள்.) இந்த உலகத்தின் சிந்தை, பேராசையையும் பொருளாசையையும் ‘கண்களின் இச்சையையும்’ முடுக்கிவிடுகிறது. (1 யோ. 2:16) இது பணக்காரராக வேண்டுமென்ற ஆசையை அநேகருடைய மனதில் வளரச் செய்திருக்கிறது. (1 தீ. 6:9, 10) பொருள்களை வாங்கிக் குவித்தால் கவலையே இல்லாமல் நிம்மதியாக வாழலாம் என்று நம்மை நம்ப வைக்க முயலுகிறது. (நீதி. 18:11) ஆனால், நாம் கடவுள்மீது அன்பு காட்டுவதற்குப் பதிலாக பணத்தின்மீது அன்பு காட்டினால் சாத்தானுக்கு வெற்றிதான். ஆகவே, ‘சொத்துசுகங்களையும் சுகபோகங்களையும் நாடுவதிலேயே நான் குறியாக இருக்கிறேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.
11 ஆனால், பண விஷயத்தில் சமநிலையான கண்ணோட்டத்துடன் இருக்கும்படியும், நம் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குக் கஷ்டப்பட்டு உழைக்கும்படியும் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தை ஊக்குவிக்கிறது. (1 தீ. 5:8) யெகோவாவுடைய சக்தி அவரைப் போலவே தாராள குணத்தைக் காட்ட நம்மைத் தூண்டுகிறது. அப்படிப்பட்ட குணத்தைக் காட்டும்போது நாம் பெற்றுக்கொள்பவர்களாக அல்ல, ஆனால் கொடுப்பவர்களாக இருப்போம். நாம் பொருள்களைவிட மக்களை உயர்வாய் மதிக்கிறோம்; முடிந்தபோதெல்லாம் நம்மிடம் உள்ளதை மற்றவர்களுடன் சந்தோஷமாய்ப் பகிர்ந்துகொள்கிறோம். (நீதி. 3:27, 28) கடவுளுக்குச் சேவை செய்வதை விட்டுவிட்டு பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கவே மாட்டோம்.
12, 13. உலகத்தின் சிந்தைக்கு நேர்மாறாக கடவுளுடைய சக்தி எப்படி நன்மை செய்ய நம்மைத் தூண்டுவிக்கலாம்?
12 என்னுடைய சுபாவத்தில் எது மேலோங்கியிருக்கிறது—கடவுளுடைய சக்தியா, உலகத்தின் சிந்தையா? (கொலோசெயர் 3:8-10, 13-ஐ வாசியுங்கள்.) இந்த உலகத்தின் சிந்தை பாவ இயல்புக்குரிய செயல்களை ஊட்டி வளர்க்கிறது. (கலா. 5:19-21) பிரச்சினைகள் தலைதூக்கும்போதுதான் நம்மிடம் கடவுளுடைய சக்தி இருக்கிறதா அல்லது இந்த உலகத்தின் சிந்தை இருக்கிறதா என்பது தெரிய வருகிறது; உதாரணமாக, கிறிஸ்தவ சகோதரனோ சகோதரியோ நம்மை அசட்டை செய்யும்போது, புண்படுத்தும்போது அல்லது நமக்கு எதிராகப் பாவம் செய்யும்போது அது தெரிய வருகிறது. அதோடு, வீட்டில் தனிமையில் இருக்கும்போது அது பளிச்செனத் தெரிய வருகிறது. இதற்குச் சுயபரிசோதனை செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும். ஆகவே, ‘கடந்த ஆறு மாதங்களில் என்னுடைய சுபாவம் கிறிஸ்துவின் சுபாவத்தைப் போல் பெருமளவு மாறியிருக்கிறதா அல்லது என்னுடைய பேச்சும் நடத்தையும் பழையபடி மோசமாகிவிட்டதா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
13 “பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு . . . புதிய சுபாவத்தை” அணிந்துகொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிறது. அது அன்பையும் கருணையையும் அதிகமதிகமாகக் காட்ட நமக்கு உதவும். மற்றவர்கள்மீது நியாயமாகவே ஏதாவது மனக்குறை இருந்தால்கூட தாராளமாக மன்னிப்போம். அநியாயமாகத் தோன்றும் காரியங்களைப் பார்க்கும்போது, “மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும்” வெளிப்படுத்த மாட்டோம். மாறாக, ‘கரிசனை காட்ட’ முயற்சி செய்வோம்.—எபே. 4:31, 32.
14. இன்று உலகிலுள்ள அநேகர் கடவுளுடைய வார்த்தையை எப்படிக் கருதுகிறார்கள்?
14 பைபிளின் ஒழுக்க நெறிகளை நான் மதிக்கிறேனா? அவற்றை நேசிக்கிறேனா? (நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.) உலகத்தின் சிந்தை கடவுளுடைய வார்த்தைக்கு எதிராகச் செயல்படுகிறது. இந்தச் சிந்தை உள்ளவர்கள், தங்களுக்குச் சரிப்பட்டு வராத பைபிள் பகுதிகளை ஓரங்கட்டிவிட்டு, மனிதரின் பாரம்பரியங்களையும் தத்துவங்களையும் பின்பற்றுகிறார்கள். (2 தீ. 4:3, 4) சிலர் மொத்தத்தில் பைபிளையே மதிப்பதில்லை. இவர்கள் தங்களையே ஞானிகளாகக் கருதிக்கொண்டு, பைபிளின் பயனையும் நம்பகத்தன்மையையும் சந்தேகிக்கிறார்கள். மணத்துணைக்குத் துரோகம் செய்வது, ஒரே பாலினத்தவரை மணப்பது, விவாகரத்து செய்வது சம்பந்தமான பைபிள் நெறிகளின் வலிமையைக் குறைக்கிறார்கள். “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும்” கற்பிக்கிறார்கள். (ஏசா. 5:20) இந்தச் சிந்தை நம்மையும் தொற்றியிருக்கிறதா? பிரச்சினைகளை எதிர்ப்படும்போது அவற்றைச் சமாளிக்க நாம் மனித ஞானத்தையும் நம்முடைய சொந்த கருத்துகளையுமே சார்ந்திருக்கிறோமா? அல்லது பைபிளின் அறிவுரையைப் பின்பற்ற முயற்சி செய்கிறோமா?
15. நம்முடைய சொந்த ஞானத்தின்மீது சார்ந்திருப்பதற்குப் பதிலாக நாம் என்ன செய்ய வேண்டும்?
15 பைபிள்மீது மதிப்பு மரியாதையை வளர்த்துக்கொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிறது. சங்கீதக்காரனைப் போலவே நாமும் கடவுளுடைய வார்த்தையை நம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாகக் கருதுகிறோம். (சங். 119:105) எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்க நம்முடைய சொந்த ஞானத்தின்மீது சார்ந்திராமல், கடவுளுடைய வார்த்தையை முழுமையாகச் சார்ந்திருக்கிறோம். பைபிளை மதிப்பதோடுகூட அதை நேசிக்கவும் நாம் கற்றுக்கொள்கிறோம்.—சங். 119:97.
இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
16. ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
16 கடவுளுடைய சக்தியைப் பெற நாம் ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்ள வேண்டும். (1 கொ. 2:16) “கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையை” பெற, அவர் கற்பித்த விதத்தையும் அவர் நடந்துகொண்ட விதத்தையும் தெரிந்துகொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். (ரோ. 15:5; 1 பே. 2:21) அதற்கு உதவும் சில வழிகளைச் சிந்திப்போம்.
17, 18. (அ) ஜெபம் செய்வதைப் பற்றி இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) நாம் ஏன் ‘கேட்டுக்கொண்டே இருக்க’ வேண்டும்?
17 கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள். சோதனைகளைச் சந்திக்கவிருந்த சமயத்தில் கடவுளுடைய சக்திக்காக இயேசு ஜெபம் செய்தார். (லூக். 22:40, 41) நாமும் கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்ய வேண்டும். விசுவாசத்தோடு கேட்கிற எல்லாருக்கும் யெகோவா அதைத் தாராளமாகத் தருகிறார். (லூக். 11:13) இயேசு இவ்வாறு சொன்னார்: “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும். கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான், தேடுகிற ஒவ்வொருவனும் கண்டடைகிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும்.”—மத். 7:7, 8.
18 யெகோவாவுடைய சக்திக்காகவும் அவருடைய உதவிக்காகவும் ஒருசில தடவை கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள். நாம் அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும், நீண்ட நேரம் ஜெபிக்கவும் வேண்டும். சில சமயங்களில் தம்மிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்குப் பதிலளிப்பதற்கு முன்பாக அவர்கள் எந்தளவு ஊக்கத்தோடு கேட்கிறார்கள், எந்தளவு விசுவாசத்தோடு கேட்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த யெகோவா அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார்.a
19. இயேசு எப்போதும் என்ன செய்தார், நாம் ஏன் அவரைப் பின்பற்ற வேண்டும்?
19 யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படியுங்கள். இயேசு தம்முடைய தகப்பனுக்குப் பிரியமானவற்றையே எப்போதும் செய்தார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்பதில் இயேசுவின் கருத்து அவருடைய தகப்பனுடைய கருத்திலிருந்து வேறுபட்டிருந்தது. என்றாலும் தம்முடைய தகப்பனிடம், “என் சித்தத்தின்படி அல்ல, உங்களுடைய சித்தத்தின்படியே நடக்கட்டும்” என்று நம்பிக்கையுடன் சொன்னார். (லூக். 22:42) எனவே, ‘எனக்குக் கஷ்டமாக இருந்தால்கூட நான் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். வாழ்வைப் பெற நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிவது மிக முக்கியம். அவர் நம் படைப்பாளர், நம் உயிரின் ஊற்றுமூலர், நம்மை பராமரிப்பவர்; எனவே, அவருக்கு முழுமையாய்க் கீழ்ப்படிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம். (சங். 95:6, 7) கீழ்ப்படிதலுக்கு இணை வேறேதுமில்லை. கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்க அது மிக முக்கியம்.
20. வாழ்க்கையில் இயேசு எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார், நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?
20 பைபிளை நன்கு அறிந்திருங்கள். சாத்தான் நேரடியாக இயேசுவின் விசுவாசத்தை சோதித்தபோது, அவனை எதிர்க்க அவர் வேதவசனங்களை மேற்கோள் காட்டினார். (லூக். 4:1-13) தம்மை எதிர்த்த மதத் தலைவர்களிடம் அவர் கடவுளுடைய வார்த்தையை ஆதாரங்காட்டிப் பேசினார். (மத். 15:3-6) கடவுளுடைய சட்டத்தை அறிந்து அதை நிறைவேற்றுவதற்கே இயேசு வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்தார். (மத். 5:17) நாமும் விசுவாசத்தைப் பலப்படுத்தும் கடவுளுடைய வார்த்தையால் நம் மனதை நிரப்ப வேண்டும். (பிலி. 4:8, 9) தனிப்பட்ட படிப்புக்கும் குடும்பப் படிப்புக்கும் நேரம் கிடைப்பது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும், நேரம் கிடைக்கிறதா என்று பார்க்காமல் அதற்காக நேரத்தை ஒதுக்குவது முக்கியம்.—எபே. 5:15-17.
21. கடவுளுடைய வார்த்தையை நன்கு அறிந்துகொள்ளவும் அதைப் பின்பற்றவும் என்ன ஏற்பாட்டை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்?
21 ஒவ்வொரு வாரமும் குடும்ப வழிபாட்டுக்காக ஒரு மாலை வேளையை ஒதுக்க “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” ஏற்பாடு செய்திருக்கிறது; இது, தனிப்பட்ட படிப்புக்கும் குடும்பப் படிப்புக்கும் நேரத்தை அளிக்கிறது. (மத். 24:45) இந்த ஏற்பாட்டை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா? கிறிஸ்துவின் சிந்தையைப் பெறுவதற்கு, சில தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து அதன் சம்பந்தமாக இயேசு என்ன கற்பித்தார் என்பதைக் கிரமமாக உங்கள் படிப்பு நேரத்தில் சிந்திக்கிறீர்களா? நீங்கள் சிந்திக்க விரும்பும் விஷயங்கள் சம்பந்தமாகக் கூடுதல் தகவலைத் தெரிந்துகொள்ள உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ்ஸைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, 2008 முதல் 2010 வரை இந்தப் பத்திரிகையின் பொதுமக்களுக்கான இதழில் “இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்” என்ற தலைப்பில் ஏழு கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இந்தக் கட்டுரைகளை உங்களுடைய படிப்பில் பயன்படுத்த நீங்கள் விரும்பலாம். 2006 முதல் ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் “எப்படி பதில் அளிப்பீர்கள்?” என்ற கட்டுரை வெளிவந்தது. கடவுளுடைய வார்த்தையை நன்கு ஆழமாக அறிந்துகொள்வதற்கு வசதியாக இதில் கேள்விகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது உங்களுடைய குடும்ப வழிபாட்டில் இதுபோன்ற கட்டுரைகளை நீங்கள் பயன்படுத்தலாம், அல்லவா?
நம்மால் உலகத்தை ஜெயிக்க முடியும்
22, 23. உலகத்தை ஜெயிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
22 கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுவதற்கு, உலகத்தின் சிந்தையை நாம் எதிர்த்து நிற்க வேண்டும். ஆனால் அது எளிதல்ல. அதற்காகக் கடினமாய்ப் போராட வேண்டியிருக்கலாம். (யூ. 3) என்றாலும், வெற்றி நிச்சயம்! இயேசு தம்முடைய சீடர்களிடம், “இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனால் தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்” என்று சொன்னார்.—யோவா. 16:33.
23 உலகத்தின் சிந்தையை எதிர்த்து நிற்பதோடு, கடவுளுடைய சக்தியைப் பெறுவதற்குத் தேவையான அனைத்தையும் செய்யும்போது நம்மாலும் உலகத்தை ஜெயிக்க முடியும். ஆம், “கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?” (ரோ. 8:31) கடவுளுடைய சக்தியைப் பெற்று, பைபிள் தருகிற அதன் வழிநடத்துதலைப் பின்பற்றும்போது திருப்தியை, சமாதானத்தை, சந்தோஷத்தைக் காண்போம்; அதோடு, சீக்கிரத்தில் வரவிருக்கும் புதிய பூமியில் முடிவில்லா வாழ்வையும் பெறுவோம்.
[அடிக்குறிப்பு]
a கூடுதல் தகவலுக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 170-173-ஐப் பாருங்கள்.
நினைவிருக்கிறதா?
• உலகத்தின் சிந்தை ஏன் இந்தளவுக்குப் பரவியிருக்கிறது?
• எந்த நான்கு கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
• கடவுளுடைய சக்தியைப் பெறுவது சம்பந்தமாக என்ன மூன்று விஷயங்களை நாம் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 8-ன் படம்]
சில தூதர்கள் எப்படிப் பேய்களாக மாறினார்கள்?
[பக்கம் 10-ன் படம்]
சாத்தான் இந்த உலகத்தின் சிந்தையைப் பயன்படுத்தி மக்களைக் கட்டுப்படுத்துகிறான்; நாமோ அதன் பிடியிலிருந்து விடுபட முடியும்