இளைஞர்களே—உலகத்தின் ஆவியைத் தவிருங்கள்
“நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், . . . தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.”—1 கொரிந்தியர் 2:12.
1, 2. (அ) உலக இளைஞர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய இளைஞர்களுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைக் காணலாம்? (ஆ) சாட்சிகளாக இருக்கும் பெரும்பான்மையான இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட வாழ்த்துதலைத் தெரிவிக்கலாம்?
“நம்முடைய இளைய தலைமுறை உற்சாகமிழந்திருக்கிறது, புறக்கணிக்கப்பட்டிருக்கிறது, கலகம் செய்கிறது.” த சன்-ஹெரால்ட் என்ற ஆஸ்திரேலிய செய்தித் தாள் வெளியிட்ட அறிக்கை இது. அது தொடர்ந்து சொன்னதாவது: “கடும் குற்றத்திற்காக இளைஞர்கள் நீதிமன்றத்தின் வாசலை மிதிப்பது [கடந்த ஆண்டைக் காட்டிலும்] 22 சதவீதம் அதிகமாகியிருப்பதாக பதிவுகள் காட்டுகின்றன . . . 1960-ன் மத்திபத்திலிருந்ததைக் காட்டிலும் சின்னஞ்சிறுசுகள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் மும்மடங்கு அதிகரித்திருக்கிறது . . . தலைமுறைகளுக்கு இடையில் ஏற்பட்ட பிளவு ஆழங்காண முடியா பள்ளம் என்பது உண்மை. போதைப் பொருள், மதுபானம் என இப்பள்ளத்தாக்கில் இளைஞர்கள் பெருவாரியாக விழுந்து அழிந்த வண்ணம் இருக்கின்றனர்.” எனினும், இது உலகின் ஏதோவொரு மூலையில் நடப்பதில்லை. உலகம் முழுவதுமுள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள், மனநல மருத்துவர்கள் என அனைவரும் இளைஞர்களின் நிலை குறித்து புலம்புகிறார்கள்.
2 இன்றைய உலக இளைஞர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் காணப்படும் தங்கமான இளைஞர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம், மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமாகும்! அவர்கள் பரிபூரணமானவர்கள் என்பதல்ல. “இள வயதின் இச்சைக”ளுக்கு எதிராக அவர்களும் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. (2 தீமோத்தேயு 2:22, பொ.மொ.) இருந்தாலும், ஒரு குழுவாக இந்த இளைஞர்கள், எது சரியோ அதை தைரியமாக ஆதரித்து, உலகப்பிரகாரமான அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்காமல் எதிர்த்து நிற்கிறார்கள். சாத்தானின் “தந்திரமான செயல்களுக்கு” எதிராக போராடி வெற்றி பெறுகிற இளைஞர்களே, உங்கள் ஒவ்வொருவரையும் மனதார பாராட்டுகிறோம்! (எபேசியர் 6:11, NW அடிக்குறிப்பு) அப்போஸ்தலனாகிய யோவானைப் போல நாமும், “வாலிபரே [கன்னிகைகளே], நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்” என இளைஞர்களை வாயார வாழ்த்துகிறோம்.—1 யோவான் 2:14.
3. “ஆவி” என்ற வார்த்தை எதை அர்த்தப்படுத்தலாம்?
3 எனினும் பொல்லாங்கனுக்கு எதிரான உங்கள் போராட்டத்தில் தொடர்ந்து வெற்றிபெற “உலகத்தின் ஆவி” என பைபிள் அழைப்பதை நீங்கள் விடாப்பிடியாக எதிர்க்க வேண்டும். (1 கொரிந்தியர் 2:12) ஒரு கிரேக்க டிக்ஷனரியின்படி “ஆவி” என்பது “எந்தவொரு நபருக்குள்ளும் இருக்கிற, கட்டுப்படுத்துகிற மனநிலையை அல்லது செல்வாக்கை” குறிக்கிறது. உதாரணமாக, யாராவது கோபமாக இருப்பதைக் கவனிக்கையில் அவர் மோசமான “ஆவி”யில் இருப்பதாக கிரேக்கில் சொல்வதுண்டு. உங்கள் “ஆவி,” மனப்பான்மை அல்லது மனச்சாய்வு, நீங்கள் செய்யும் தெரிவுகளில் செல்வாக்கு செலுத்துகிறது; உங்கள் செயல்களிலும் பேச்சிலும் அது தலைகாட்டுகிறது. தனிப்பட்டவர்களாகவும் குழுக்களாகவும் இந்த “ஆவியை” வெளிக்காட்டலாம். கிறிஸ்தவர்களடங்கிய ஒரு குழுவிற்கு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக.” (பிலேமோன் 25) அப்படியானால், இந்த உலகம் வெளிக்காட்டும் ஆவி எது? “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் [பிசாசாகிய சாத்தானுக்குள்] கிடக்கிற”தென்பதால் இந்த உலகத்தின் ஆவி நல்ல ஆவியாக இருக்காது அல்லவா?—1 யோவான் 5:19.
உலகத்தின் ஆவியை அடையாளம் கண்டுகொள்ளுதல்
4, 5. (அ) கிறிஸ்தவர்களாவதற்கு முன்பு எந்த ஆவி எபேசு சபையிலிருந்தவர்களில் செல்வாக்கு செலுத்தியது? (ஆ) ‘ஆகாயத்து அதிகாரப் பிரபு’ யார், அந்த ‘ஆகாயம்’ எது?
4 “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்” என பவுல் எழுதினார்.—எபேசியர் 2:1-3.
5 கிறிஸ்தவ வாழ்க்கைமுறையை கற்றறிவதற்கு முன்பாக எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் “ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய” பிசாசாகிய சாத்தானை, அறியாமையால் பின்பற்றுபவர்களாய் இருந்தார்கள். அந்த ‘ஆகாயம்’ சாத்தானும் அவனுடைய பேய்களும் வசிக்கும் ஏதோ ஓர் இடமல்ல. இந்த வார்த்தைகளை பவுல் எழுதுகையில், பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திற்கு போக்கும்வரத்துமாய் இருந்தனர். (ஒப்பிடுக: யோபு 1:6; வெளிப்படுத்துதல் 12:7-12.) இந்த ‘ஆகாயம்’ என்ற வார்த்தை சாத்தானின் உலகை ஆட்டிப்படைக்கும் ஆவியை அல்லது மனச்சாய்வை அர்த்தப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 16:17-21-ஐ ஒப்பிடுக.) ஆகாயம் எங்கும் வியாபித்திருப்பது போல இந்த மனநிலையும் எங்கும் நிறைந்திருக்கிறது.
6. ‘ஆகாயத்து அதிகாரம்’ என்பது என்ன, இன்று அநேக இளைஞர்களை எவ்வாறு அது பாதிக்கிறது?
6 ஆனால் ‘ஆகாயத்து அதிகாரம்’ என்பது என்ன? இது மக்களின்மீது அந்த ‘ஆகாயம்’ செலுத்தும் ஆழமான செல்வாக்கைக் குறிக்கலாம். “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில்” இந்த ஆவி “கிரியை” செய்வதாக பவுல் சொன்னார். எனவே இந்த உலகத்தின் ஆவி கீழ்ப்படியாமையையும் கலகத்தனத்தையும் பிறப்பிக்கிறது; அதன் அதிகாரம் வெளிப்படும் ஒருவழி சகாக்களின் அழுத்தம். “நீங்கள் ஸ்கூலில் இருக்கும்போது கொஞ்சம் கலகத்தனமாக நடந்துகொள்ள சொல்லி எல்லாரும் எப்போதும் உங்களைத் தூண்டிக்கொண்டே இருப்பார்கள். கலகத்தனத்தில் இறங்கிவிட்டாலே போதும் நண்பர்கள் மத்தியில் ராணிபோல இருக்கலாம்” என்கிறாள் சாட்சியாய் இருக்கும் இளம் பெண்.
உலக ஆவியின் வெளிக்காட்டுதல்கள்
7-9. (அ) இன்று இளைஞர் தங்கள் மத்தியில் உலக ஆவியை வெளிக்காட்டும் சில வழிகளைக் குறிப்பிடவும். (ஆ) நீங்கள் இருக்குமிடத்தில் இதுபோன்ற காரியங்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?
7 இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் காணப்படும் உலக ஆவியின் சில வெளிக்காட்டுதல்கள் யாவை? நேர்மையற்ற தன்மையும் கலகத்தனமும். கல்லூரி இளைஞர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர், மேல்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே திருட்டுத்தனத்தில் ஈடுபட்டிருந்ததாக ஒரு பத்திரிகையில் வெளிவந்த அறிக்கை காட்டுகிறது. மரியாதையற்ற, நக்கலான, அசிங்கமான பேச்சுகள் சர்வசாதாரணமானவை. சிலசமயங்களில் யோபுவும் அப்போஸ்தலனாகிய பவுலும் நக்கலான பேச்சுகள் என சிலர் கருதுபவற்றை நியாயமான கோபத்தில் வெளிப்படுத்தினார்கள் என்பது உண்மை. (யோபு 12:2, NW; 2 கொரிந்தியர் 12:13) ஆனால் இளைஞரின் வாயில் தவழும் நக்கலான பேச்சுக்கள் பெரும்பாலும் வார்த்தைகளால் கொடுமைப்படுத்துவதற்கு சமம்.
8 உலக ஆவியின் மற்றொரு வெளிக்காட்டு மிதமிஞ்சிய பொழுதுபோக்கு. வாலிபர்களுக்கான நைட்கிளப்புகள், ரேவ்ஸ், a இதுபோன்ற மற்ற வெறித்தனமான பார்ட்டிகள் ஆகியவை இளைஞர் மத்தியில் வெகு பிரபலமானவை. அடக்க ஒடுக்கமற்ற உடையும் பரட்டைத் தலையும் தான் இன்றைய பேஷன். தொளதொளவென்ற ‘ஹிப்-ஹாப்’ பாணி டிரஸ் முதல் உடம்பில் துளையிட்டுக் கொள்வது போன்ற மிதமீறிய பேஷன் வரை எல்லாமே உலகின் கலகத்தன ஆவியை வெளிப்படுத்தும் இன்றைய இளைஞர்களைப் படம்படித்துக் காட்டுபவை. (ரோமர் 6:16-ஐ ஒப்பிடுக.) பொருளுடைமைகளுக்கான ஆசையும் அந்த ஆவியின் வெளிக்காட்டுதான். “வியாபாரச் சந்தையின் விற்பனையாளர்களோ எப்பக்கம் திரும்பினாலும் பல உத்திகளாலும் பல கண்கவர் பொருட்களாலும் இளசுகளைக் குறிவைத்து தாக்குகிறார்கள்” என்கிறது ஒரு கல்வி சம்பந்தப்பட்ட வெளியீடு. அமெரிக்காவிலுள்ள மேல்நிலைப் பள்ளி இளைஞர்கள் பள்ளிப் பருவத்தைக் கடப்பதற்குள் 3,60,000 டிவி விளம்பரங்களைப் பார்த்திருப்பார்கள். ஏதேதோ பொருட்களை வாங்கச் சொல்லி உங்கள் சகதோழர்களின் வற்புறுத்துதல் வேறு இருக்கலாம். “ ‘உன் ஸ்வெட்டர், ஓவர்கோட், ஜீன்ஸ் எந்த பிராண்ட்?’ அப்படின்னு கேட்டு ஒவ்வொருத்தரும் துளைத்து எடுத்துவிடுவார்கள்” என புலம்புகிறாள் 14 வயது இளநங்கை.
9 பைபிள் காலங்கள் முதற்கொண்டு, அசுத்தமான நடத்தையைத் தூண்டுவதற்கு சாத்தான் பயன்படுத்தி வந்த கருவி மோசமான இசை. (ஒப்பிடுக: யாத்திராகமம் 32:17-19; சங்கீதம் 69:12; ஏசாயா 23:16.) ஆகவேதான், பாலியல் போதையூட்டும் வார்த்தைகளும், ஆபாசமும், காதைப் பிளக்கும் வெறித்தன பீட்டுகளும் கொண்ட இசைக்கு வரவேற்பு அதிகம் போலும்! இந்த உலக ஆவி வெளிக்காட்டப்படும் மற்றொரு வழி பாலுறவு ஒழுக்கக்கேடு. (1 கொரிந்தியர் 6:9-11) “தங்களில் ஒருவராய் நண்பர்கள் தன்னை ஏற்றுக்கொள்வதற்கான தேவைகளுள் ஒன்றாக பாலியல் அநேக டீன் ஏஜர்களுக்கு ஆகியிருக்கிறது . . . மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பாலுறவில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்” என அறிக்கை செய்கிறது த நியூ யார்க் டைம்ஸ். 8 முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் “பாலியலில் ஈடுபடுவது அதிகமாகி வருகிறது” என்பதற்கு த உவால் ஸ்டீர்ட் ஜர்னலில் வெளிவந்த கட்டுரை ஆதாரமளிக்கிறது. “6-வது b படிப்பவர்களிடையே சிலர் கர்ப்பமாய் இருப்பதை நாங்கள் கவனிக்க ஆரம்பித்திருக்கிறோம்” என சமீபத்தில் ஓய்வுபெற்ற பள்ளி ஆலோசகர் ஒருவர் சொல்கிறார்.
உலக ஆவியைத் தவிர்த்தல்
10. கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் எப்படி இந்த உலக ஆவியின் பிடிக்குள் சிக்கியிருக்கின்றனர்?
10 சில கிறிஸ்தவ இளைஞர்கள் இந்த உலக ஆவியின் பிடிக்குள் சிக்கியிருப்பது வருந்தத்தக்கது. “என் பெற்றோருக்கு முன்பாகவும் உடன் கிறிஸ்தவர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவளாக நடந்துகொண்டேன். ஆனால் உண்மையில் நான் இரட்டை வேடம் போட்டுவந்தேன்” என ஒத்துக்கொள்கிறாள் ஒரு ஜப்பானிய பெண். “பார்ட்டிகள், ராக் இசை, கெட்ட சகவாசம் என கொஞ்ச நாட்களுக்கு இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். இது தவறென்று எனக்குத் தெரிந்திருந்தும், எல்லாம் போகப் போக சரியாகிவிடும் என்று கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால் சரியாகவே இல்லை, மோசமடையத்தான் செய்தது” என சொல்கிறாள் கென்யாவைச் சேர்ந்த பருவ மங்கை. “முதலில் வெறும் தவறான சிநேகிதத்தில்தான் எல்லாம் ஆரம்பமானது. பின் புகைக்க தொடங்கினேன். என் பெற்றோரை புண்படுத்த நினைத்தேன், ஆனால் புண்பட்டுப் போனதோ நான்தான்” என்கிறாள் ஜெர்மனியைச் சேர்ந்த மற்றொரு இளம் பெண்.
11. பயந்துபோன பத்து வேவுகாரர்கள் தவறான அறிக்கையைக் கொண்டு வந்தபோதிலும் காலேப்பால் எப்படி அவர்களோடு இணங்கிப்போகாமல் இருக்க முடிந்தது?
11 இருப்பின் இந்த உலக ஆவியை எதிர்ப்பதும், சொல்லப்போனால் முற்றிலும் தவிர்ப்பதும் சாத்தியமானதே. பூர்வத்தில் வாழ்ந்த காலேப்பின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பத்து வேவுகாரர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பற்றிய தவறான அறிக்கையை கொண்டுவந்த போதிலும் அவரும் யோசுவாவும் இந்தக் கோழைகளோடு இணங்கிப் போக மறுத்துவிட்டனர். “நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்லதேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்” என அவர்கள் தைரியமாக சொன்னார்கள். (எண்ணாகமம் 14:7, 8) எல்லா அழுத்தங்களையும் எதிர்த்துநிற்க காலேபுக்கு எது உதவியது? ‘வேறே ஆவியை உடையவராயிருக்கிறதாக’ காலேபைக் குறித்து யெகோவா சொன்னார்.—எண்ணாகமம் 14:24.
“வேறே ஆவி”யை வெளிக்காட்டுதல்
12. ஒருவர் தன் பேச்சில் “வேறே ஆவி”யைக் காட்டுவது ஏன் முக்கியம்?
12 உலக ஆவியைத் தவிர்த்து “வேறே ஆவி”யை அல்லது மனநிலையைக் காட்டுவதற்கு இன்று தைரியமும் பலமும் தேவைப்படுகிறது. இதைச் செய்வதற்கான ஒருவழி நக்கலான பேச்சையும், மரியாதையற்ற பேச்சையும் தவிர்ப்பது. நக்கல் என்பது ஆங்கிலத்தில் “sarcasm” என அழைக்கப்படுகிறது. இவ்வார்த்தை கிரேக்க வினைச் சொல்லிலிருந்து பிறந்தது. அதற்குரிய சொற்பொருள் “மாம்சத்தை நாய்கள் போல கடித்துக் குதறுதல்” என்பது. (கலாத்தியர் 5:15-ஐ ஒப்பிடுக.) எலும்பிலிருக்கும் மாம்சத்தை நாய் பற்களால் கடித்துக் குதறுவது போன்று நக்கலாக பேசி கிண்டல் செய்வது மற்றவர்களுடைய கண்ணியத்தையே நார் நாராக கிழித்தெரிகிறது. ஆனால் கொலோசெயர் 3:8 “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்” என உங்களுக்கு புத்திமதி சொல்கிறது. “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்” என நீதிமொழிகள் 10:19 குறிப்பிடுகிறது. யாரேனும் ஒருவர் உங்களை தரக்குறைவாக பேசினால், ‘மறு கன்னத்தை’ காட்டுமளவுக்கு சுயகட்டுப்பாடோடு இருங்கள்; ஒருவேளை பழித்துப் பேசியவரிடம் தனித்துச் சென்று அமைதியாகவும் சமாதானமாகவும் பேசலாம்.—மத்தேயு 5:39; நீதிமொழிகள் 15:1.
13. பொருளுடைமைகள் விஷயத்தில் சமநிலையான நோக்கை இளைஞர்கள் எப்படி காட்டலாம்?
13 “வேறே ஆவி”யைக் காட்டுவதற்கான மற்றொரு வழி பொருளுடைமைகளின் விஷயத்தில் சமநிலையான நோக்கைக் காத்துக்கொள்வதாகும். நல்ல நல்ல பொருட்கள் நமக்குத் தேவை என நினைப்பது உண்மையில் இயற்கையானதே. இயேசு கிறிஸ்துகூட குறைந்தது ஒரு தரமான உடையாவது வைத்திருந்தது நன்கு தெரிந்ததே. (யோவான் 19:23, 24) எனினும் பொருள்களுக்கான ஆசை வெறியாக மாறி, உங்கள் பெற்றோரின் வசதிக்கு ஒத்துவராதவற்றை வாங்கித் தரச் சொல்லி எப்போதும் நச்சரிக்கிறீர்கள் என்றால் அல்லது மற்ற இளைஞர்களைப் போலவே உடுத்த விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் உலக ஆவி உங்களைத் தன் பிடிக்குள் பெருமளவு கட்டுப்படுத்துகிறது. “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்” என பைபிள் சொல்கிறது. உலகத்தின் இந்த பொருளாசை எனும் ஆவி உங்களில் தொற்றிக்கொள்ளாதிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்! போதுமென்ற மனதோடு இருக்க பழகுங்கள்.—1 யோவான் 2:16; 1 தீமோத்தேயு 6:8-10.
14. (அ) ஏசாயாவின் நாட்களில் கடவுளுடைய மக்கள் எப்படி பொழுதுபோக்கு சம்பந்தமானவற்றில் சமநிலையற்ற போக்கை வெளிக்காட்டினர்? (ஆ) நைட்கிளப்புகளிலும் வெறித்தனமான பார்ட்டிகளிலும் சில கிறிஸ்தவ இளைஞர்கள் என்ன விதமான ஆபத்துக்களை எதிர்ப்பட்டிருக்கின்றனர்?
14 பொழுதுபோக்கையும் அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டியது அவசியம். ‘சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டே இருக்கிறவர்களுக்கு ஐயோ! அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை’ என தீர்க்கதரிசியாகிய ஏசாயா அறிவித்தார். (ஏசாயா 5:11, 12) இத்தகைய வெறித்தனமான பார்ட்டிகளில் சில கிறிஸ்தவ இளைஞர்கள் கலந்துகொள்வது கவலைக்குரியது. இளைஞர்களுக்கான நைட்கிளப்புகளில் என்ன நடக்கிறது என கிறிஸ்தவ இளைஞர்களின் ஒரு தொகுதியிடம் கேட்ட போது “எப்போது பார்த்தாலும் ஒரே சண்டை மயம். அவர்கள் மத்தியில் நானும் மாட்டிக்கொண்டிருப்பேன்” என்றாள் ஓர் இளம் சகோதரி. “புகை, குடி, அப்படி இப்படின்னு எல்லாமே அங்கு இருக்கும்” என்றும் சொல்கிறான் இன்னொரு இளம் சகோதரன். “எல்லாப் பசங்களும் குடித்து வெறிப்பார்கள். கிறுக்குத்தனமாக நடந்துகொள்வார்கள்! போதைப் பொருட்களுக்குப் பஞ்சமில்லை. வெளியில் சொல்லமுடியாத கெட்ட காரியங்கள் எக்கச்சக்கமாக நடக்கின்றன. நீங்கள் அங்கு போய் இது ஒன்றும் உங்களைப் பாதிக்காது என்று நினைத்தீர்களென்றால் ஏமாறப்போவது நீங்கள்தான்” என வெளிப்படையாக சொன்னான் ஓர் இளம் சகோதரன். நல்ல காரணத்துடனேயே களியாட்டங்களை அல்லது “வெறித்தனமான கேளிக்கை விருந்துகளை” “மாம்சத்தின் கிரியைகள்” என்ற வரிசையில் பைபிள் பட்டியலிடுகிறது.—கலாத்தியர் 5:19-21; பையிங்டன்; ரோமர் 13:13.
15. பொழுதுபோக்கு சம்பந்தமாக பைபிளின் சமநிலையான கருத்து என்ன?
15 ஆபத்துண்டாக்கும் பொழுதுபோக்கைத் தவிர்ப்பது சந்தோஷமற்ற வாழ்க்கைக்குள் உங்களைத் தள்ளிவிடாது. உங்கள் இளமையை அனுபவித்து மகிழும்படி விரும்பும் “சந்தோஷமுள்ள தேவனை” நாம் வணங்குகிறோம். (1 தீமோத்தேயு 1:11, NW; பிரசங்கி 11:9) ஆனால், “சிற்றின்பப்பிரியன் [“பொழுதுபோக்குப் பிரியன்,” லாம்சா] தரித்திரனாவான்” என பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 21:17) ஆம், உங்கள் வாழ்க்கையில் பொழுதுபோக்கிற்கு முதலிடம் கொடுத்தீர்கள் என்றால் ஆவிக்குரிய காரியத்தில் தரித்திரராவீர்கள். எனவே உங்கள் பொழுதுபோக்கைத் தெரிவு செய்வதில் பைபிள் நியமங்களைப் பின்பற்றுங்கள். நீங்கள் அனுபவித்து மகிழ்வதற்கு எத்தனையோ நல்ல காரியங்கள் இருக்கின்றன; அவை உங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும், உற்சாகமிழக்கச் செய்யாது. c—பிரசங்கி 11:10.
16. கிறிஸ்தவ இளைஞர்கள் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை எப்படிக் காட்டலாம்?
16 உடையிலும் தலைவாரும் விதத்திலும் அடக்கத்தை வெளிப்படுத்தி, உலகத்தின் பாணியைத் தவிர்ப்பதும் உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டும். (ரோமர் 12:2; 1 தீமோத்தேயு 2:9, 10) அப்படியே இசையை கவனமாக தேர்ந்தெடுப்பதும் உங்களை வேறுபடுத்திக் காட்டும். (பிலிப்பியர் 4:8, 9) “என் பக்கத்திலேயே அண்டவிடக்கூடாத இசையை என்னிடம் வைத்திருக்கிறேன், காரணம், அது எனக்கு மதுரகீதம் போல் இருக்கிறது!” என ஓர் இளம் கிறிஸ்தவ பெண் ஒத்துக்கொள்கிறாள். “இசையை நான் நேசிப்பதால் அதுவே எனக்கு இடறுகுழியாகிறது. அதில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை நான் கண்டுபிடிக்கும்போது அல்லது அது சரியல்ல என்று என் பெற்றோர் சுட்டிக்காட்டும் போது மனதை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இருதயத்திற்கு வேலிகட்ட வேண்டியிருக்கிறது; ஏனெனில் எனக்குத்தான் இசை என்றால் கொள்ளை ஆசை ஆயிற்றே” என இன்னொரு இளைஞன் வெளிப்படையாக சொன்னான். இளைஞர்களே சாத்தானுடைய ‘தந்திரங்களைக் குறித்து அறியாதவர்களாக’ இருந்துவிடாதீர்கள்! (2 கொரிந்தியர் 2:11, NW) யெகோவாவிடமிருந்து இளம் கிறிஸ்தவர்களைப் பிரிக்கும் முயற்சியில் சாத்தான் இசையைப் பயன்படுத்துகிறான்! ராப், ஹெவி மெட்டல், மாற்று ராக் இசை போன்றவற்றை கலந்தாலோசிக்கும் கட்டுரைகள் உவாட்ச் டவர் வெளியீடுகளில் பிரசுரமாகியுள்ளன. d எனினும், தினந்தினம் உருவாகிக்கொண்டிருக்கும் புதுப்புது இசைகளைக் குறித்து உவாட்ச் டவர் வெளியீடுகள் ஒருவேளை குறிப்பு சொல்லாமலிருக்கலாம். எனவே நீங்கள் உங்கள் “நல்யோசனை”யையும் “புத்தி”யையும் உபயோகித்து இசையைத் தேர்ந்தெடுங்கள்.—நீதிமொழிகள் 2:11.
17. (அ) போர்னியா என்பது என்ன, எத்தகைய செயல்களையும் அது உட்படுத்துகிறது? (ஆ) ஒழுக்க சம்பந்தமான காரியத்தில் கடவுளுடைய சித்தம் என்ன?
17 கடைசியாக, ஒழுக்க சம்பந்தமாகவும் நீங்கள் சுத்தமாய் இருக்க வேண்டும். “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என பைபிள் திட்டவட்டமாக குறிப்பிடுகிறது. (1 கொரிந்தியர் 6:18) வேசித்தனம் என்பதற்கான கிரேக்க வார்த்தை போர்னியா என்பது. இது திருமண பந்தத்திற்கு வெளியே நடப்பிக்கும் முறைகேடான எல்லா பாலியல் காரியங்களையும் உட்படுத்துகிறது. இது வாய் மூலமாக பாலுறவு கொள்வதையும் பாலுறுப்புகளை கிளர்ச்சிக்காக வேண்டுமென்றே கைகளால் துர்ப்பிரயோகிப்பதையும் உட்படுத்துகிறது. இத்தகைய காரியங்களில் எண்ணற்ற கிறிஸ்தவ இளைஞர்கள் ஈடுபட்டிருந்திருக்கின்றனர்; உண்மையில் தாங்கள் வேசித்தனத்தில் ஈடுபடவில்லை என அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். எனினும் கடவுளுடைய வார்த்தை இப்படி தெளிவாகக் குறிப்பிடுகிறது: “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, . . . உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்[திருக்க வேண்டும்].”—1 தெசலோனிக்கேயர் 4:3, 5.
18. (அ) உலக ஆவியால் கறைபடாதபடி ஓர் இளைஞன் தன்னை எப்படிக் காத்துக்கொள்ள முடியும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எது கலந்தாலோசிக்கப்படும்?
18 யெகோவாவின் உதவியோடு நீங்கள் உலக ஆவியால் கறைபடாதபடி உங்களைக் காத்துக்கொள்ள முடியும்! (1 பேதுரு 5:10) இருந்தபோதிலும் சாத்தான் நம்மை மரணத்தில் வீழ்த்தும் தன் வலையை அடிக்கடி நாசுக்காக விரிக்கிறான்; ஆபத்து மறைந்திருப்பதை புரிந்துகொள்ள உண்மையிலேயே விவேகம் வேண்டும். தங்கள் பகுத்தறியும் தன்மையை வளர்த்துக்கொள்ள இளைஞர்களுக்கு உதவும் விதத்தில் எமது அடுத்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
[அடிக்குறிப்புகள்]
a ரேவ்ஸ் என்பது விடிய விடிய நடக்கும் டான்ஸ் பார்ட்டிகள். கூடுதல் தகவலுக்கு டிசம்பர் 22, 1997 விழித்தெழு! இதழில் வெளிவந்த “இளைஞர் கேட்கின்றனர் . . . ரேவ்ஸ் வெறும் தீங்கற்ற விளையாட்டா?” என்பதைக் காண்க.
b சுமார் 11 வயது சிறுமியர்.
c கூடுதல் தகவல்களுக்கு, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 296-303-ஐக் காண்க.
d காவற்கோபுரம், ஏப்ரல் 15, 1993 தேதியிட்ட பிரதியைக் காண்க.
மறுபார்வைக்குக் கேள்விகள்
◻ ‘உலகத்தின் ஆவி’ எது, மக்களின் மீது அது எப்படி ‘அதிகாரம்’ செலுத்துகிறது?
◻ இன்றைய இளைஞர் மத்தியில் காணப்படும் உலக ஆவியினுடைய சில வெளிக்காட்டுகள் யாவை?
◻ பேச்சிலும் பொழுதுபோக்கிலும் கிறிஸ்தவ இளைஞர்கள் எப்படி “வேறே ஆவி”யைக் காட்டலாம்?
◻ ஒழுக்க சம்பந்தமானவற்றிலும் இசையிலும் கிறிஸ்தவ இளைஞர்கள் எப்படி “வேறே ஆவி”யைக் காட்டலாம்?
[பக்கம் 9-ன் படம்]
தங்கள் நடத்தையின் மூலம் தாங்கள் உலகத்தின் ஆவியினுடைய ‘அதிகாரத்தின்’ கீழ் இருப்பதாக அநேக இளைஞர்கள் காட்டுகின்றனர்
[பக்கம் 10-ன் படம்]
நீங்கள் இசையைக் கவனமாக தேர்ந்தெடுங்கள்
[பக்கம் 11-ன் படம்]
உலக ஆவியை எதிர்ப்பதற்கு தைரியம் தேவை