இளைஞர் கேட்கின்றனர்
கிறிஸ்தவ கூட்டங்கள் எனக்கு எவ்வாறு உதவி செய்யக்கூடும்?
“ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேற்றம் அடைவதற்கு சர்ச்சுகள் உங்களுக்கு உதவி செய்கின்றன என்று நான் நினைப்பது இல்லை. ஆவிக்குரியத் தன்மையுடையவராக இருக்க விரும்புகிறாரா அல்லது இல்லையா என்பது அந்தந்த நபரைப் பொறுத்துதான் இருக்கிறது.”—19 வயது கெவின்.
அநேக அம்சங்களில் கெவின் சொல்வது சரிதான். “அவர் ஆவிக்குரியத் தன்மையுடையவராக இருக்க விரும்புகிறாரா அல்லது இல்லையா” என்பதை உண்மையிலேயே தனிப்பட்ட நபர் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கிறதினால், ஆவிக்குரியத் தன்மையுடையவராக இருக்கவாவது நீங்கள் விரும்புவீர்கள். ஆவிக்குரிய நபர் என்றால் என்ன அல்லது அப்படிப்பட்ட நபராக நீங்கள் எவ்வாறு ஆகக்கூடும் என்பதைப் பற்றி நீங்கள் முழு நிச்சயமில்லாமல் இருக்கலாம்.
எளிய மொழியில் சொன்னால், தன் சிந்தனைகள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றை அதிஉன்னத கடவுளாகிய யெகோவாவின் வழிநடத்துதலுக்கு கீழ்ப்படுத்துபவர் தான் ஆவிக்குரிய நபர். அன்றாடக தீர்மானங்களை செய்யும்போதும், இலக்குகளை வைக்கும்போதும் அல்லது வாழ்க்கையில் முதன்மையான காரியங்களை திட்டமிடும்போதும் அவர் தன் சிருஷ்டிகரின் நோக்கத்தை சிந்தித்துப் பார்க்கிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஓர் ஆவிக்குரிய நபர் கடவுள் நாட்டமுடையவராக இருக்கிறார்.
பருவவயதினராக, “உலக கவலை” உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடை செய்கிறதாக நீங்கள் ஒருவேளை காண்பீர்கள். (மத்தேயு 13:22) ‘எல்லா நேரமும் கெட்டதையே செய்ய மனச்சாய்வுள்ளவர்களாய் இருக்கும்’ பள்ளி மாணவரோடு நாள் முழுவதும் நீங்கள் கூட்டுறவு கொள்ள வேண்டியிருப்பதும் கூட உங்களை உற்சாகமிழக்கச் செய்யும். (ஆதியாகமம் 6:5) சிலர் “ஏளனம் செய்து கெட்ட காரியங்களைப் பற்றி பேசுவார்கள்” இதன் மூலம் நல்லவைகளின் பேரில் உங்களுடைய மனதை ஒருமுகப்படுத்த கடினமாக ஆக்குவார்கள். (சங்கீதம் 73:8, NW) உங்களுடைய பெற்றோரோ அல்லது மற்ற குடும்ப அங்கத்தினர்களோ உங்களுடைய விசுவாசத்தை பகிர்ந்து கொள்ளுகிறதில்லை என்றால், அவர்கள் எவ்வித ஆவிக்குரிய உற்சாகத்தையும் அளிக்க முடியாது. இப்படிப்பட்ட எதிர்மறையான பாதிப்புகளை எதிர்த்து ஆவிக்குரிய பிரகாரமாய் வளருவதற்கு நீங்கள் என்ன செய்யக்கூடும்?
யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜராவது நீங்கள் செய்யக்கூடிய ஒரு காரியம் ஆகும். அங்கு நடைபெறும் கூட்டங்கள் சர்ச் வழிபாடு போன்றில்லாமல், “தேவபக்திக்கேதுவாக முயற்சி பண்ண” நாடுவதற்கு உங்களை உற்சாகப்படுத்துகின்றன. மேலும், ஆவிக்குரிய குழந்தைப்பருவத்திலிருந்து ஆவிக்குரிய முழுவளர்ச்சிப் பருவத்துக்கு நீங்கள் வளர்கையில் அது உங்களுக்கு உதவி செய்கிறது.—1 தீமோத்தேயு 4:7; எபேசியர் 4:13, 14.
நீங்கள் கற்றுக்கொள்ள உதவும் கூட்டங்கள்
பூமி முழுவதிலும் 66,000-க்கும் மேற்பட்ட சபைகளில் ‘புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் கேட்டு கற்றுக்கொள்ளும்படிக்கு ஜனத்தைக் கூட்டிச்சேர்க்க வேண்டும்’ என்ற பைபிளின் புத்திமதியை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகின்றனர். (உபாகமம் 31:12, 13) ஆகையால் உங்களைப் போன்ற அநேக இளைஞரை சாட்சிகளின் மத்தியில் நீங்கள் காண்பீர்கள்.
உலக முழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் ஒரே கல்வி திட்டத்தில் பங்குகொள்கின்றனர். இதில் ஐந்து வாராந்தர கூட்டங்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கூட்டமும் ஏறக்குறைய ஒரு மணிநேரம் நீண்டதாய் இருக்கிறது. ஐந்து கூட்டங்கள் பின்வருமாறு:
பொதுக் கூட்டம் - ஒரு பைபிள் பொருளை சிறப்பித்துக் காட்டும் பைபிள் பேச்சு.
காவற்கோபுர படிப்பு—காவற்கோபுரம், யெகோவாவின் சாட்சிகளுடைய முக்கியமான கல்வி சம்பந்தப்பட்ட பத்திரிகையை உபயோகித்து பைபிள் போதனைகளின் கருத்தாழமான படிப்பு.
தேவராஜ்ய ஊழியப் பள்ளி—கிறிஸ்தவ ஊழியத்துக்கான பேச்சு திறமைகளை கற்பிக்கிறது.
ஊழியக் கூட்டம்—வீட்டுக்கு வீடு மற்றும் பைபிள் படிப்பு ஊழியத்துக்கான பலன்தரும் கற்பிக்கும் முறைகளைப் பற்றிய கலந்தாலோசிப்புகளையும் நடிப்புகளையும் சிறப்பித்துக் காட்டுகிறது.
சபை புத்தகப் படிப்பு—ஒரு பைபிள் படிப்பு உதவியை உபயோகித்து சிறிய தொகுதிகளால் செய்யப்படும் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு—சாதாரணமாக இது தனிப்பட்ட வீடுகளில் நடத்தப்படுகிறது.
இப்படிப்பட்ட கூட்டங்களில் நடைபெறும் கல்வி திட்டங்கள் “தேவனுடைய ஆழங்களையும்” கூட நீங்கள் கற்றறிந்துகொள்ள உதவி செய்யும். (1 கொரிந்தியர் 2:10; நீதிமொழிகள் 2:5) என்றபோதிலும், ஆஜராவதினால் மற்ற நன்மைகளும் இருக்கின்றன.
“இரும்பை இரும்பு கருக்கிடுவது போல”
“கடவுளை சேவிப்பவர்களின் மத்தியில் ஒரு கிறிஸ்தவராக இருப்பது எளிது” என்று 15-வயது மிஷல் சொல்கிறாள். “ஆனால் நீங்கள் பள்ளியில் இருக்கும்போது, அது மிகவும் கடினமாயிருக்கிறது. ஏனென்றால் உங்களுடைய பள்ளி தோழர்கள் வித்தியாசமான தராதரங்களையும் இலக்குகளையும் கொண்டிருக்கின்றனர்.” ஆகையால், கூட்டங்களுக்கு ஆஜராவதன் ஒரு நன்மை என்னவென்றால், உடன் விசுவாசிகளோடு கூட்டுறவுகொள்வதற்கு இருக்கும் வாய்ப்பு.
ஞானவானாகிய சாலொமோன் ராஜா இவ்வாறு சொன்னார்: “இரும்பை இரும்பு கருக்கிடுவது போல மனுஷனும் தன் சிநேகிதனுடைய கூரறிவைக் கருக்கிடுகிறான்.” (நீதிமொழிகள் 27:17, தி நியு இங்கிலிஷ் பைபிள்) அவ்வப்போது நம்முடைய ஆவிக்குரிய “கூரறிவு”, அதாவது நம்முடைய ஆவிக்குரிய அறிவையும் உட்பார்வையையும் கூர்மையாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சொல்லர்த்தமான ஒரு கத்தியை கூராக்குவதற்கு திறமையும், சரியான கருவிகளும் தேவைப்படுவது போல, “ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்”கக்கூடிய திறமையுள்ள சரியான ஆட்களோடு நீங்கள் கூட்டுறவு கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.—ரோமர் 1:10.
வித்தியாசமான வயது, இனங்கள், தேசத்தவர்கள் ஆகியவற்றைச் சார்ந்த இப்படிப்பட்ட ஆட்களை நீங்கள் ராஜ்ய மன்றத்தில் காண்பீர்கள். இயல்பாகவே நீங்கள் ஒருவேளை உங்களுடைய சகாக்களிடமாக ஈர்க்கப்படலாம். என்றாலும், அநேக வருடங்களாக யெகோவாவை உண்மையுடன் சேவித்து வருபவர்களிடம் குறிப்பாக கவனம் செலுத்துங்கள். (லேவியராகமம் 19:32) வாழ்க்கையில் அவர்களுடைய அனுபவமும், பைபிளைப் பற்றிய அவர்களுடைய ஆழமான அறிவும் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்ளலாம்? ‘நீங்கள் எவ்வாறு சத்தியத்துக்கு வந்தீர்கள்?’ அல்லது ‘நீங்கள் இளைஞராக இருந்தபோது வெளி ஊழியம் எப்படி இருந்தது?’ போன்ற கேள்விகளை நீங்கள் அவர்களிடம் கேட்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் உங்களுக்காக சில ஆவிக்குரிய வரங்களை நன்றாய் உருவாக்கக்கூடும்!
சபையில் இருக்கும் மற்றவர்களை நீங்கள் அணுகும்போது, 12-வயது கிரெய்க் உணர்ந்தது போன்று நீங்களும் முதலில் உணரலாம். அவன் சொல்கிறான்: “வயதானவர்களிடம் பேசுவதற்கு முன்பெல்லாம் நான் பயப்படுவேன். நான் தவறாக ஏதாவது சொல்லி விட்டால், எனக்கு அறிவுரை கொடுக்கப்படும் என்று நான் எண்ணினேன்.” அவனுடைய உணர்ச்சிகள் ஆதாரமற்றது என்பதை கிரெய்க் இப்போது அறிந்திருக்கிறான். “இப்போது நான் அவர்களிடம் பேசும்போது செளகரியமாக உணருகிறேன்” என்று அவன் விளக்குகிறான். சபையில் உள்ள ஆவிக்குரிய விதத்தில் முதிர்ச்சியடைந்தவர்களோடு கூட்டுறவுகொள்ள ஏன் அதேபோன்ற முயற்சி எடுக்கக்கூடாது? அவ்வாறு செய்யும்போது, முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களை கவனித்து பின்பற்றுவதற்கான பெருமதிப்புடைய வாய்ப்பை அது உங்களுக்கு அளிக்கும்.—2 தெசலோனிக்கேயர் 3:9.
“கல்விமானின் நாவு”
முன்னேற்றம் செய்யப்பட வேண்டிய மற்றொரு அம்சம் உங்களுடைய கற்பிக்கும் திறமைகளை உட்படுத்துகிறது. உதாரணமாக, பைபிள் சத்தியங்களை தெளிவாக உங்களால் அறிவிக்க முடிகிறதா? சபையாரின் கவனத்தை உங்களால் கவர முடிகிறதா? உங்களுடைய வாசிப்பில் உண்மையான அர்த்தத்தை எவ்வாறு போடுவது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? தீர்க்கதரிசியாகிய ஏசாயா சொன்னார்: “கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்.” (ஏசாயா 50:4) பயிற்சியோடு, நீங்களும் கூட கல்விமானின் நாவை பெற்றுக்கொள்ளக்கூடும். இந்த விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட கூட்டம் உங்களுக்கு பயனளிக்கக் கூடும்: தேவராஜ்ய ஊழியப் பள்ளி. அந்தப் பள்ளியில் நீங்கள் சேர்ந்துவிட்டீர்களா?
மற்றவர்களிடம் பேசுவதில் கிறிஸ்தவர்களை போதிப்பதற்கு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வயது வரம்பு இல்லை. முழுக்காட்டுதலும் ஒரு தேவையாக இல்லை. உங்களுக்கு வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். சபையோடு சுறுசுறுப்பாக கூட்டுறவுகொள்ள வேண்டும். கிறிஸ்தவ நியமங்களுக்கு இசைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இந்த ஊழியப் பள்ளி எவ்வாறு வேலை செய்கிறது?
பள்ளியில் சேர்ந்த பின்பு, ஒரு குறிப்பிட்ட வேதப்பூர்வமான பொருளின் பேரில் சுருக்கமான பேச்சு கொடுக்க நீங்கள் நியமிக்கப்படுவீர்கள். கடினமாக பிரயாசப்பட்டு உங்களுடைய பேச்சை தயாரியுங்கள். உதாரணமாக, காவற்கோபுர பிரசுரங்கள் இன்டெக்ஸ்கள்-ஐ உபயோகிப்பதன் மூலமும், வேதாகமத்தின் பேரில் உட்பார்வை என்ற பைபிள் என்ஸைக்ளோபீடியாவை ஆராய்ச்சி செய்வதன் மூலமும் உங்களுடைய தலைப்புப் பொருளின் பேரில் கூடுதலான தகவலை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.a இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவி தேவை என்றால், உங்களுடைய பெற்றோரையோ அல்லது ஓர் அனுபவமிக்க கிறிஸ்தவரையோ உங்களுக்கு உதவி செய்யும்படி கேட்கலாம். நீங்கள் செய்யும் ஆராய்ச்சி உங்களுடைய பேச்சுக்கு அதிகத்தைக் கூட்டும். உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியையும் விரைவுபடுத்தும்.—நீதிமொழிகள் 2:1-5.
சபைக்கு முன் நீங்கள் ஒரு பேச்சைக் கொடுக்கும்போது, பள்ளியை நடத்தும் தகுதி வாய்ந்த ஊழியர் கவனமாக செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார். உங்களுடைய பேச்சுக்குப் பிறகு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி வழிகாட்டி (ஆங்கிலம்) புத்தகத்தில் உள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டு அவர் உற்சாகமும், பொருத்தமான ஆலோசனையும் கொடுப்பார். இப்புத்தகம் பொதுப் பேச்சு கொடுப்பவர்களுக்கு உதவி செய்வதற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனையை கவனமாக செவிகொடுத்து கேளுங்கள். உங்களை குறைகூறுவதற்கோ அல்லது சங்கோஜப்படுத்துவதற்கோ அது கொடுக்கப்படுவதில்லை. உங்களுக்கு உதவி செய்வதற்கென்று ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன. நீங்கள் “வாசிக்கிறதிலே தொடர்ந்து நிலைத்திருந்தால்” (NW) உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி “யாவருக்கும் விளங்கும்.”—1 தீமோத்தேயு 4:13-15.
‘உங்களுடைய உதடுகளைக் கொண்டு யெகோவாவை துதியுங்கள்’
கிறிஸ்தவ கூட்டங்களில் ஆவிக்குரிய பிரகாரமாய் வளருவதற்கு மற்றொரு வழி, சபையார் பங்கெடுக்கும் பகுதிகளின்போது மனமுவந்து பதில்களை சொல்வதாகும். முன்கூட்டி தயாரிப்பது அத்தியாவசியமானது.b கூட்டத்துக்கு நீங்கள் தயார் செய்திருந்தும் குறிப்புகள் சொல்வது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். அப்படியானால், உதவிக்காக யெகோவாவை கேளுங்கள். “ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்” என்று தாவீது ராஜா ஜெபித்தார்.—சங்கீதம் 51:15.
ஒருவரையொருவர் கட்டியெழுப்புவதற்கு ஒரு பதில் நீண்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நினைவில் வையுங்கள். “நீண்ட பதிலை சொல்வதை விட, வெறும் ஒரு வாக்கிய பதிலை கொடுக்கலாம்” என்று 12-வயது ரேச்சல் சொல்கிறாள். கூட்டங்களில் பேசுவது முதலில் கடினமாகத் தோன்றலாம். உதவிக்காக நீங்கள் கேட்கலாம். ஆனால் காலப்போக்கில் ரேச்சல் உணர்ந்த விதமாகவே நீங்களும் உணர்வீர்கள். “நீங்களாகவே ஒரு குறிப்பு சொன்னால், அது உண்மையிலேயே உங்களுடையதாக இருக்கிறது. அதைக் குறித்து நீங்கள் பெருமைப்படுகிறீர்கள்” என்று அவர் விளக்குகிறாள். மேலும், உங்களுடைய முயற்சிகளின் விளைவாக நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் வளர்ச்சி அடைவீர்கள்.
தன்னலமே கருதுகின்ற இன்றைய உலகில் ஆவிக்குரிய மனநிலை உள்ளவர்களாக இருப்பது எளிது அல்ல. ஆனால் நீங்கள் ஒழுங்காக கூட்டங்களுக்கு ஆஜராகி, முழுமையாக தயாரித்து, பங்கெடுத்து, முதிர்ச்சி வாய்ந்தவர்களோடு கூட்டுறவு கொள்வதற்கு முயற்சி செய்தால், நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் வளருவதற்கு கிறிஸ்தவ கூட்டங்கள் உண்மையிலேயே உதவி செய்யும். (g91 7⁄8)
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் சங்கம் பிரசுரித்தது.
b கூட்டங்களுக்கு தயார்செய்து, பங்கெடுப்பதைக் குறித்து கூடுதலான தகவலைப் பெற ஆங்கில விழித்தெழு!, ஜூன் 22, 1988, 11-13 பக்கங்களைப் பார்க்கவும்.
[பக்கம் 21-ன் படங்கள்]
கடவுளுடைய வார்த்தையின் தகுதிவாய்ந்த போதகர்களாக ஆவதற்கு தேவராஜ்ய ஊழியப் பள்ளி ஆயிரக்கணக்கான இளைஞரை பயிற்றுவித்திருக்கிறது