“நான் அவருடைய கண்கள், அவர் என்னுடைய கால்கள்”
ஜோஸ் லூயி எஸ்கோபார் என்பவரும் ஆர்டிமியோ ட்யூரன் என்பவரும் மெக்சிக்கோவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கிறிஸ்தவ சபையில் மூப்பர்களாக சேவித்து வருகின்றனர். ஜோஸ் லூயி என்பவர் கண் தெரியாதவர். ஆர்டிமியோ என்பவர் நடக்க முடியாதவர்.
ஜோஸ் லூயி 16 வயதாயிருக்கும் போது, குத்துச் சண்டை செய்வதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஒரு நாள் ஒரு சண்டையில், குத்துச் சண்டை செய்வதை வாழ்க்கைத் தொழிலாக கொண்டிருந்த ஒருவருக்கு பதிலாளாக இவர் அழைக்கப்பட்டார். நான்காவது சுற்றுக்குள், இருவரும் ஒருவரையொருவர் அவ்வளவு மோசமாக அடித்துக் கொண்டதால் சண்டை நிறுத்தப்பட்டது. ஜோஸ் லூயிக்கு வெற்றி அளிக்கப்பட்டாலும், அவருக்கு கிடைத்த அடியின் காரணமாக அவர் கண் பார்வை இழந்துவிட்டார்.
ஜோஸ் லூயி அநேக மருத்துவர்களிடம் சென்றார். ஆவியுலகத் தொடர்பு கொள்பவர்களிடமும் கூட அவர் சென்றார். ஆனால் எவருமே அவருக்கு உதவி செய்ய முடியவில்லை. அவர் மனச்சோர்வு அடைந்ததால், தற்கொலை செய்துகொள்ள அநேக முறைகள் முயற்சி செய்தார். பின்னர் யெகோவாவின் சாட்சிகளோடு அவர் தொடர்பு கொண்டார். பைபிள் சத்தியங்களை கற்றறிந்தார். இறுதியில் தன் வாழ்க்கையை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். ஆகஸ்ட் 1974-ல் அவர் முழுக்காட்டப்பட்டார்.
மறுபட்சத்தில், ஆர்டிமியோ என்பவர் 1981-ல் ஒரு மோசமான மோட்டார் விபத்துக்கு ஆளானார். சட்டத்துக்கு விரோதமாக அவர் ஐக்கிய மாகாணங்களில் வாழ்ந்து, வேலை செய்து கொண்டிருந்த போது இது நடந்தது. வித்தியாசமான மதத் தொகுதிகளிலிருந்து பிரதிநிதிகள் அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்தனர். அவருடைய கெட்ட வாழ்க்கை முறையின் காரணமாக கடவுள் அவரை தண்டித்திருக்கிறார் என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள். ஆர்டிமியோவும் கூட பின்னர் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொண்டார். அவர் பைபிளை படித்தார். அவருடைய வாழ்க்கையில் தேவையான மாற்றங்களை செய்தார். மே 1984-ல் முழுக்காட்டப்பட்டார்.
இப்போது இவ்விருவரும் ஒரே கிறிஸ்தவ சபையில் கூட்டாளிகளாக இருக்கின்றனர். வீட்டுக்கு-வீடு ஊழியத்தில் அவர்கள் இருவருமாக சேர்ந்து ஒழுங்காக செல்கின்றனர். அக்கறை காண்பிக்கும் நபர்களிடம் ஒன்றாக சேர்ந்து மறுசந்திப்புகள் செய்கின்றனர். சபை அங்கத்தினர்களை ஆவிக்குரிய பிரகாரமாக பலப்படுத்துவதற்கு இருவருமாக சேர்ந்து சந்திக்கின்றனர். ஜோஸ் லூயி சக்கர நாற்காலியை தள்ளிச் செல்கிறார். ஆர்டிமியோ எங்கு செல்வது என்று அவருக்கு வழி காட்டுகிறார். ஆர்டிமியோ அவர்களை ஒரு தொகுதி என்று சொல்கிறார்: “நான் அவருடைய கண்கள், அவர் என்னுடைய கால்கள்.” (g91 6⁄22)