எமது வாசகரிடமிருந்து
அமேசான் மழைக்காடு “அமேசான் மழைக்காடு—கட்டுக்கதைகளும் உண்மைகளும்” (மார்ச் 22, 1997) என்ற தொடர் கட்டுரைகளால் மிகவும் கவரப்பட்டேன். நான், ஐ.மா. வனத்துறையின் தாவர வாழ்க்கைச்சூழல் நிபுணராக இருப்பதால் சுற்றுச்சூழலைப் பற்றிய அதிகமான பிரசுரங்களை வாசிக்க வேண்டியிருக்கிறது. இருந்தபோதிலும், இந்தப் பொருளைப் பற்றி இதுவரை நான் வாசித்தவற்றில் உங்கள் கட்டுரையே மிகவும் சிறந்தது என நினைக்கிறேன். அக்கட்டுரை நன்றாக ஆராய்ச்சி செய்யப்பட்டதாகவும், போதிப்பதாகவும், காலத்திற்கேற்றதாகவும் இருந்தது; வாசிப்பதற்கும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. உயிரினங்களில் காணப்படும் வகையினம், காடுகளைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வது, பிரித்தெடுப்பது, சூழலியல் அமைப்பு போன்ற கருத்துகள், சர்வதேச அளவில் விநியோகிக்கப்படும் ஒரு பத்திரிகையில் தோன்றுவதை காண்பது சந்தோஷமாக இருந்தது. காரியங்கள் முன்னேற்றம் அடைவதற்கு இது நிச்சயம் உதவும்.
டி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு 12 வயதாகிறது; அந்தக் கட்டுரைகளுக்காக உங்களுக்கு இருதயப்பூர்வமான நன்றி சொல்ல விரும்புகிறேன். அந்தப் பத்திரிகை வந்த அன்று சாயங்காலமே அதை வாசிக்க தூண்டப்பட்டேன்! பள்ளியில் புவியியல் பாடத்தில் இந்த விஷயத்தைப் பற்றி நாங்கள் படித்துக்கொண்டிருப்பதால், எங்கள் புவியியல் ஆசிரியைக்கு ஒரு பிரதியை அடுத்த நாளே கொடுத்தேன். வகுப்பிலிருந்த மற்ற மாணவர்களுக்கும் அது ஆர்வமூட்டியதால், அவர்களுக்கு கூடுதலான பத்திரிகைகளை கொடுக்கமுடியும் என நினைக்கிறேன்.
டி. ஈ., ஜெர்மனி
கட்டுரைகள் உண்மையில் கவர்ந்திழுப்பவையாக இருந்தன. குறிப்பிடப்பட்ட பூச்சிகளின் இனங்கள் அவ்வளவு அதிகமாக இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும், காட்டின் தரையிலிருக்கும் இலைகளின்கீழ் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்கின்றன. அங்கு வாழும் அனைத்துக்கும் உணவு கிடைக்கும்படி யெகோவா பார்த்துக்கொள்கிறார். “பூமியைக் கெடுத்தவர்களை” அவர் ஏன் ‘கெடுப்பார்’ என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.—வெளிப்படுத்துதல் 11:18.
டி. கே. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்
சத்தாய்ப்பதில் என்ன தவறு? “இளைஞர் கேட்கின்றனர் . . . சத்தாய்ப்பதில் என்ன தவறு?” (மார்ச் 22, 1997) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. மிகப் பலவீனமானவனைத்தான் பள்ளியில் அனைவரும் இழிவுபடுத்துகிறார்கள்; அதையே செய்ய நானும் தூண்டப்பட்டேன். ஆனால், தன்னை மற்றவருடைய நிலையில் வைத்துப் பார்க்கும்படி இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட அறிவுரை, சத்தாய்ப்பதை கட்டுப்படுத்திக்கொள்ள எனக்கு அதிகளவில் உதவியது. மறுபடியும் உங்களுக்கு நன்றி.
எம். என்., பிரான்ஸ்
எனக்கு 17 வயதாகிறது; அந்தக் கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. அது என் ஜெபங்களுக்கான பதிலாக இருந்து, என்னை அதிகளவில் உற்சாகப்படுத்தியது. சத்தாய்ப்பதை யெகோவா வெறுக்கிறார் என்பதை அறிவது, என் நடத்தையில் தேவையான மாற்றத்தை செய்ய அதிகமாக உதவியிருக்கிறது. பொன்விதியும் இயேசுவின் முன்மாதிரியும் என் மனதில் பதிந்து, சரியான விதத்தில் செயல்பட எனக்கு உதவியிருக்கின்றன.
வி. டி., இத்தாலி
சமீபத்தில், வெய்டிங் ரூம் ஒன்றில் இருந்தபோது, ஒரு விழித்தெழு!-வை பார்த்தேன். அதில் நன்றாக எழுதப்பட்டிருந்த இந்தக் கட்டுரையை கவனித்தேன். சத்தாய்ப்பதால் ஏற்படும் நீண்டகால பாதிப்பை நான் நிச்சயமாக அறிந்திருக்கிறேன். என் அண்ணன், [அவன் தங்கையான என்னிடம்] பேச்சிலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சரீரப்பிரகாரமாகவும் துர்ப்பிரயோகம் செய்பவனாய் இருந்தான். அவன் நடத்தையை எதிர்த்தால், அவன் என்னை ஏளனப்படுத்தி, கேலிசெய்து, அது வெறும் விளையாட்டுக்குத்தான் என்று உரிமைபாராட்டுவான். நகைச்சுவை உணர்வு எனக்கு இல்லாதலால், என்னிடம்தான் பிரச்சினை இருக்கிறது என்று கூறுவான்! எனக்கு 13 வயதும் அவனுக்கு 15 வயதுமாய் இருந்தபோது, பாலுறவுத் தொல்லை கொடுத்து என்னை பயமுறுத்த ஆரம்பித்தான். என்னைவிட மூத்தவனும், பெரியவனும், அதிக பலமுள்ளவனுமாக அவன் இருந்ததால், எப்போதும் அவனைப் பற்றிய பயத்திலேயே வாழ்ந்தேன்! என் பெற்றோர் எனக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. வாழ்க்கையின் அதிமுக்கிய பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துவதற்காக விழுத்தெழு!-விற்கு நன்றி. அதற்கு அதிக தைரியம் தேவை என்பதை அறிவேன். இந்தக் கட்டுரை மூலம் அநேகருடைய இருதயங்களை தொட்டிருப்பீர்கள் என்று உணருகிறேன்.
பி. எஸ். எம்., ஐக்கிய மாகாணங்கள்
தோட்டவேலை செய்யும் எறும்புகள் “கைதேர்ந்த தோட்டக்காரன்” (மார்ச் 22, 1997) என்ற கட்டுரையை வாசித்துமுடித்த பிறகு, ஒரு கண்காட்சிக்கு சென்றபோது, நீங்கள் விவரித்த அதே நிகழ்ச்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மேற்கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றில், இலைகள் நகர்ந்து கொண்டிருப்பதைப்போல காட்சியளித்தது. உண்மையில் எறும்புகள் அந்த இலைகளை எடுத்துச் சென்று, அருகில் ஒரு பூசண தோட்டத்தை வளப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. நீங்கள் விவரித்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. உண்மையில் அது பிரமிப்பு ஏற்படுத்தும் ஒரு காட்சியாக இருந்து, என் இரண்டு சிறு மகள்களையும் என்னையும் நம் அன்புள்ள பரலோக தகப்பனாகிய யெகோவாவிடம் நெருங்கி வர உதவியது.
பி. எஃப்., ஸ்காட்லாந்து