உலகை கவனித்தல்
ஆரம்ப நிலையில் மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு
ஆபத்தை ஏற்படுத்தும் மார்பக புற்றுநோய், பிரேஸிலிய பெண்களின் மத்தியில் மிகப் பொதுவானதாய் இருக்கிறது; இது 12 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் பாதிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என பிரேஸிலிய ஆய்விதழான மெடிஸினா கோன்ஸெல்யோ ஃபெடரல் அறிக்கை செய்கிறது. இந்த ஆய்விதழ் 25 வயதுக்கு மேற்பட்ட எல்லா பெண்களுமே தவறாமல் மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ள உத்வேகப்படுத்துகிறது. 35-க்கும் 40-க்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்கள் முதல் முறையாக மாமோகிராபி படம் (mammogram) எடுத்துக்கொள்ளும்படியும், 40-க்கும் 50-க்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அதற்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு முறை மாமோகிராபி படங்கள் எடுக்கும்படியும் மெடிஸினா பரிந்துரைக்கிறது. செறிவுற்ற கொழுப்பு மிகுந்துள்ள உணவு வகைகளை உண்ணும் பெண்களும், பரம்பரை நோய் வரலாற்றை உடையவர்களும் அதிக ஆபத்தில் இருந்தாலும், மார்பக புற்றுநோய் நோயாளிகளில் 70 சதவீதத்தினருக்கு, அதிக அபாய அம்சங்கள் எதுவும் தென்படவில்லை. இந்த உண்மை, “ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முயலும் ஒரு பழக்கம் அவசியம் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது” என்று மெடிஸினா குறிப்பிடுகிறது.—விழித்தெழு! ஏப்ரல் 8, 1994-ஐக் காண்க.
மருந்துச்சீட்டு இல்லாத மருந்து-அடிமைகள்
மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து வாங்கி உட்கொள்ளும் பழக்கத்துக்கு அடிமையாவது, வட அயர்லாந்தில் அதிகரித்துவருவதாக தி ஐரிஷ் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. வட அயர்லாந்தில், பிற நாடுகளில் இருப்பதைப் போலவே, கோடைன் அல்லது அடிமைப்படுத்தும் போதை மருந்துகளை உள்ளடக்கிய வலி நிவாரணிகள், இருமல் மருந்துகள் போன்றவை மருந்துச்சீட்டு இல்லாமலே பெற்றுக்கொள்ளப்படலாம். தெரியாத்தனமாக அடிமையாகிவிடும் சிலர் தங்கள் அன்றாட வழக்கத்தைக் காத்துக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர்; ஏனெனில் அந்தப் பழக்கத்திலிருந்து மீளுவது சிரமமாக இருக்கலாம்; அத்துடன் தூக்கமின்மையையும் மனச்சோர்வையும் ஏற்படுத்துவதாயும் இருக்கலாம். அவ்வாறு அடிமையான ஒருவர், வாரத்துக்கு 70 பாட்டில் மருந்து வீதம் பணம் கட்டுவதற்கென, தன் சொத்து அனைத்தையும் விற்றுவிட்டார்; தன் வீட்டையும் விற்றுவிட்டார், 29,000 டாலர் கடனாளியும் ஆகிவிட்டார். மருந்துச்சீட்டு இல்லாமல் பெறப்படும் மருந்து துர்ப்பிரயோகிகளில் பெரும்பாலானோர், தாங்கள் அதைச் சார்ந்து வாழும் நிலையைக் கண்டுகொள்வதில்லை; அத்துடன் தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக் கொள்கின்றனர் என்ற கருத்தையும் அசட்டையாக மறுக்கின்றனர் என பெல்ஃபாஸ்ட் ரிஸர்ச் ஆன் கெமிக்கல் டிபென்டன்ஸி குரூப்பைச் சேர்ந்த ஃபிராங்க் மக்கோல்ட்ரிக் கூறுகிறார். “தாங்கள் சட்டவிரோதமான செயல் எதையும் செய்வதில்லை” என்றும் “அநேகருக்கு தாங்கள் துர்ப்பிரயோகிகள் என்ற நினைப்பே இல்லை” என்றும் மக்கோல்ட்ரிக் குறிப்பிடுகிறார்.
டீனேஜ் பெண்கள் செல்வாக்கு
ஜப்பானில், நுகர்வோரது பாணியை உருவாக்குபவர்கள் டீனேஜ் பெண்களே என த டெய்லி யோமியுரி என்ற செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. தங்களையொத்த வயதினருடன் பேச்சுத்தொடர்பு கொள்வதன் மூலமாக பாணிகள் விரைவில் பரவுகின்றன; இவ்வாறு 1,000-த்துக்கும் அதிகமானவர்களோடு அவர்கள் அறிமுகமாகலாம். பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் ஆகியவர்களின் மூலமாக மற்ற வயதினர்மீதும் அவர்கள் செல்வாக்கு செலுத்துகின்றனர். “டீனேஜ் பெண்களுக்கு, லட்சிய நுகர்வோருக்கு இருக்கவேண்டிய பின்வரும் அம்சங்கள் உள்ளன: பணம், புதியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம், அத்துடன் அதை அனுபவிக்கும் நேரங்காலம்.” ஜப்பானிய டீனேஜர்களில் சுமார் 68 சதவீதத்தினர், மாதத்துக்கு சராசரியாக 220 டாலர் உதவித்தொகை பெறுகின்றனர்; அநேகர் பாசம் வைத்திருக்கும் தாத்தாபாட்டிகளிடம் இருந்தும், பகுதி நேர வேலைகளிலிருந்தும்கூட பணம் பெறுகின்றனர். டீனேஜ் பெண்களின் கென்ஸை ஷிக்கோ அல்லது இப்போதைக்கு வாழும் மனநிலையையும், அவர்களுக்கென அர்த்தமுள்ள தனிப்பட்ட லட்சியங்கள் பொதுவாய் இல்லாமலிருப்பதையும் பற்றி சமூகவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய டீனேஜ் பெண்கள், “நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபடாமலே தங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ளும் சலிப்பால் துன்புறுகின்றனர்” என ஒரு சமீப ஆய்வு தெரிவித்தது.
உலகிலேயே வயது முதிர்ந்தவரின் மரணம்
கின்னஸ் புக் ஆஃப் உவர்ல்ட் ரெக்கார்ட்ஸ் தெரிவிப்பதன்படி, உலகிலேயே வயது முதிர்ந்தவரான ஸான் லுவீஸ் கால்மன் என்ற பெண்மணி, தனது 122-வது வயதில், ஆகஸ்ட் 4, 1997-ல் இறந்தார் என பிரெஞ்சு செய்தித்தாளான லா ஃபிகாரோ அறிக்கை செய்கிறது. தென்கிழக்குப் பிரான்ஸில் அரலஸில், பிப்ரவரி 21, 1875-ல்—மின் விளக்கு, ஃபோனோகிராஃப், ஆட்டோமொபைல் இவை யாவும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே—ஸான் பிறந்தார். 1896-ல் அவருக்குத் திருமணமாகி, ஒரு மகள் இருந்தார்; இவரைவிட கூடுதலாக 63 வருடம் ஸான் வாழ்ந்தார்; ஒரே பேரன்; அவரும் 1963-ல் இறந்தார். ஓவியர் வின்ஸென்ட் வேன் கோ என்பவரை 1888-ல் தான் ஒரு டீனேஜராய் இருந்தபோது சந்தித்ததை அவர் நினைவுகூர்ந்தார்; மேலும் 1904-ல் நோபல் பரிசு பெற்ற புலவர் ஃபிரேடேரிக் மிஸ்ட்ராலுக்கு சிநேகிதி இவர். நீண்ட ஆயுளின் ரகசியங்களைப் பற்றி ஸான் கூறிய வேடிக்கையான பல பதில்கள், சிரிப்பு, சுறுசுறுப்பு, “தீக்கோழி போன்ற வயிறு” ஆகியவற்றையும் உள்ளடக்கும்.
இருமொழி பேசும் பிள்ளைகள்
ஒரு குழந்தை அதன் சொந்த மொழியைப் பேசக் கற்றுக்கொள்ளுகையில், பேச்சுக்கான கட்டளையைப் பிறப்பிக்கும் அதன் பெரும்பாலான திறன், மூளையில் புரோக்கா மண்டலம் என அழைக்கப்படும் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நியூ யார்க்கில் உள்ள மெமோரியல் ஸ்லோன்-கேட்டரிங் கேன்ஸர் சென்டர் ஆய்வாளர்கள், இருமொழி பேசும் ஆட்கள் இரண்டில் ஏதாவது ஒன்றைப் பேசும்போது மூளையின் எந்தப் பகுதி செயல்படுகிறது என்பதைக் கண்டறிய, செயல்பாட்டு காந்த ஒத்ததிர்வு வரைபட முறையைப் பயன்படுத்தினர். ஒருவர் சிறு குழந்தையாய் இருந்தபோதே, ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளுகையில், இரண்டு மொழிகளுக்கான கட்டளைகளுமே புரோக்கா மண்டலத்தின் ஒரே பகுதியில் சேமித்து வைக்கப்படுகின்றன என அவர்கள் கண்டறிந்தனர். என்றாலும், இரண்டாவது மொழி பருவவயதிலோ, அல்லது அதைக்காட்டிலும் பிந்தியோ கற்றுக்கொள்ளப்படுகையில், முதல் மொழிக்கான கட்டளை சேமிக்கப்படும் பகுதியுடன் சேர்ந்திருப்பதைவிட, அதையடுத்து சேமிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள் இவ்வாறு குறிப்புரைக்கிறது: “இது எதைப்போல் இருக்கிறதென்றால், முதல் மொழியைக் கற்பது புரோக்கா மண்டலத்தில் மொழிச்சுற்றுகளை வகுத்துக்கொள்வதைப் போலவும், அதனால் இரண்டாவது மொழி வேறொரு இடத்தில் சேமிக்கப்பட வேண்டியதைப் போலவும் இருக்கிறது.” இரண்டாவது மொழி ஒன்றை வாழ்க்கையில் பிந்தி கற்றுக்கொள்வது கடினமாய் இருப்பதற்கான காரணத்தை விளக்குவதற்கு இது உதவலாம் என ஆய்வாளர்கள் உணருகின்றனர்.
சீன குழந்தை வளர்ப்பு கவலைகள்
சீன சமூக அறிவியல் கல்வியின் வழிகாட்டுதலுக்கிசைய, பெற்றோர்-பிள்ளை உறவுகள் குறித்து சமீபத்தில் பெரியளவிலான ஓர் ஆய்வு நடத்தப்பட்டது என சைனா டுடே அறிக்கை செய்கிறது. இன்றைய பிள்ளைகளை வளர்ப்பது குறித்து தங்கள் பங்கில் அநேக பெற்றோர் கவலை தெரிவித்திருப்பதாக அந்த ஆய்வு வெளிக்காட்டியது. சைனா டுடே சொல்வதன்படி, “தங்கள் பிள்ளைகளுக்கு எதைக் கற்பிக்க வேண்டும்—நேர்மை, அடக்கம், பொறுத்துப்போதல், அக்கறை காட்டுதல் போன்ற பாரம்பரிய சீன ஒழுக்கநெறியையா அல்லது நவீன போட்டி மனப்பான்மைகளையா—என்பதைக் குறித்ததில் நிச்சயமில்லாமல் இருக்கின்றனர்.” கிட்டத்தட்ட பெற்றோரில் 60 சதவீதமானோர், பிள்ளைகளின்மீது டிவி ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளைப் பற்றி கவலைப்பட்டனர். ஒரு பிள்ளையின் வயதுக்கும் ஆளுமைக்கும் ஏற்றவாறு அவனோ அல்லது அவளோ பார்க்கும் புரோகிராம்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், பிள்ளையோடு சேர்ந்து புரோகிராம்களைப் பார்க்கவும் உரையாடவும் வேண்டும் என்றும், பிள்ளையின் பெரும்பான்மையான நேரத்தை டிவி எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும் செய்தி ஆய்வாளர் பு வே பெற்றோருக்கு ஆலோசனை கூறினார்.
சுறாவின் படுமோசமான பகைவன்?
பொதுவாக, சுறாமீன்களைக் கண்டாலே மனிதருக்கு பயம். ஆனால், மனிதரைக் கண்டு சுறாமீன்கள் பயப்படுவதற்கு அதைவிட முக்கிய காரணம் இருப்பதாகத் தோன்றும். சுறாமீன்கள் தாக்குவதன் விளைவாக, “வெறும் டஜன்கணக்கில்தான்” மனிதர் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றனர்; அதே சமயத்தில், மீனவர்களால் வருடத்திற்கு 10,00,00,000 சுறாமீன்கள் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என பிரெஞ்சு செய்தித்தாள் லா மாண்ட் அறிக்கை செய்கிறது. இந்த உண்மை அநேக கடல் உயிரியலாளர்களை கவலைக்குள்ளாக்குகிறது; இவ்வாறு தொடர்ந்து அழிக்கப்பட்டால் சமுத்திரங்களின் இயற்கை சமநிலை பாதிக்கப்படுமோ என அவர்கள் பயப்படுகின்றனர். கடல் உயிரிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் சுறாமீன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுறாமீன்கள் வெகு தாமதமாய் பாலின முதிர்ச்சி அடைவதாலும், நீண்ட கருக்காலத்துக்குப் பின்னர் ஒருசில குட்டிகளையே ஈனுவதாலும், அளவுக்குமிஞ்சி மீன்பிடிப்பது சுறாமீன்களில் சில இனங்கள் அற்றுப்போய்விடுமளவுக்கு அச்சுறுத்துகிறது. கடல் நிபுணர்களை முக்கியமாய் கவலைக்குள்ளாக்கும் ஒரு பழக்கம், “துடுப்பு நீக்கம்” ஆகும்; அதாவது, உணவுக்காக சுறாமீனின் துடுப்புகளை வெட்டிவிட்டு, மாளும்படி அவற்றை மீண்டும் கடலுக்குள் எறிந்துவிடுவது.
வான்வழி பத்துதல்
ஆஸ்திரேலிய பண்ணையாளர்கள் சிலர், தங்களது மிகப் பெரிய ஆட்டுமாட்டு மந்தைகளை அவற்றின் தொழுவங்களுக்குப் பத்திக்கொண்டு வருவதற்கென, அல்ட்ராலைட்டுகள் எனப்படும் மெதுவாய் பறக்கும் ஆகாயவிமானங்களை இப்போது பயன்படுத்திவருகின்றனர் என ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனின் செய்தித்தாளான த சன்டே மெய்ல் அறிக்கை செய்கிறது. ஒவ்வொரு தடவையும் தன் ஆடுகளை பத்திக்கொண்டு வந்தபோது கூலியாட்கள் பலருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு வார சம்பளப் பணத்தை அல்ட்ராலைட் தனக்கு மிச்சப்படுத்தியது என க்வீன்ஸ்லாந்து பண்ணையாளர் ஒருவர் சொல்கிறார். “குதிரையின் இடத்தை மோட்டார் வாகனம் பிடித்துக்கொண்டது; இப்போதோ, மோட்டார் வாகனத்தின் இடத்தை இந்த அல்ட்ராலைட் பிடித்துவருகிறது” என்று அவர் சொன்னார். குறைந்த எடை விமானங்களில், நாய்கள் குரைப்பது போன்ற சத்தம் பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பப்படும் சக்திவாய்ந்த டேப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதைக் கேட்டமாத்திரத்தில், “பயந்துபோன ஆடுமாடுகள் வெகு அருகிலுள்ள தொழுவங்களுக்கு நாலுகால் பாய்ச்சலில் ஓடிவந்து சேருகின்றன” என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.
பிஸி கனடியர்கள்
கனடா நாட்டவர்கள் அதிக நேரம் வேலைசெய்கிறார்கள்; ஆகவே பலர் அதனால் கஷ்டப்படுகிறார்கள் என த குளோப் அண்ட் மெய்ல் செய்தித்தாள் கூறுகிறது. சிறு பிள்ளைகளின் பெற்றோர் உட்பட, ஆண்களும் பெண்களும் பொருளாதார கவலைகளின் தொல்லையால் இன்னும் கடினமாகவும் நீண்ட நேரமும் உழைக்கும் நிலையில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 20,00,000 கனடியர்கள் சராசரியாக, வாரத்திற்கு ஒன்பது மணிநேரத்துக்கும் கூடுதலாக ஓவர்டைம் செய்கின்றனர்; 7,00,000 பேர்கள் ஸைட்-பிசினஸ் (moonlighting) செய்கின்றனர்; அதாவது குறைந்தபட்சம் ஒரு வேலையையாவது கூடுதலாக செய்கின்றனர். அவர்களுடைய கவலையின் அளவோ, வானுயரத்துக்கு அதிகரித்துவிட்டது; பிரத்தியேகமாய், ஒயிட்-காலர் பணியாட்களிடையே அவ்விதம் அதிகரித்துவிட்டதாக ஆய்வாளர்கள் சிலர் சொல்கின்றனர். பெற்றோரை கொஞ்ச நேரம் மட்டுமே பார்க்கும் பிள்ளைகளின் போக்கில் இது ஏற்படுத்தும் பாதிப்பைக் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒன்டாரியோ குவெல்ப் பல்கலைக்கழகத்து குடும்ப ஆய்வுத் துறை ஆய்வாளரான டாக்டர் காரி டேலி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தங்களது வாழ்க்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உண்மையிலேயே சுழலுவதைப் போன்ற மங்கிய உணர்வு மக்களுக்கு இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க அவர்களுக்கு வழிதெரியவில்லை.”
வேலையில்லா திண்டாட்ட பாதிப்பு
வேலையில்லா திண்டாட்டத்தினால் ஏற்படும் உணர்ச்சி மற்றும் சமூக அடிப்படையிலான பாதிப்புகள் ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதிக்கலாம் என ஜெர்மன் செய்தித்தாளான ஸூயெடோய்ச்ச ட்ஸைடுங்கில் குறிப்பிடப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. இப்படிப்பட்ட பாதிப்பால், உடலின் நோய் எதிர் அமைப்பு பலவீனமடைவதாக சொல்லப்படுகிறது. உயர் ரத்த அழுத்தமும், இதய நோய்களும் வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்படுவதைக் காட்டிலும் வேலையில்லாதோருக்கு அதிகமாய் ஏற்படும் சாத்தியம் உள்ளது. “வெகுகாலமாய் வேலையில்லாத சூழ்நிலையைச் சமாளித்து வருபவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, வேலையில் இருப்பவர்களைக் காட்டிலும் மோசமானதும், பின்விளைவுகளோ, மிகுதியானவையுமாய் இருக்கிறது” என ஜெர்மனியின் ஹனோவார் பல்கலைக்கழகப் பேராசிரியர் டோமாஸ் கீஸல்பாக் குறிப்பிடுகிறார். “வேலையில்லாதோரில் கிட்டத்தட்ட எல்லாருமே, ஏதாவது ஒருவித மனச்சோர்வு சம்பந்தப்பட்ட சீர்குலைவுகளால் துன்புறுகின்றனர்.” ஐரோப்பிய யூனியனில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை, குத்துமதிப்பாக, டென்மார்க், பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் அனைத்தின் ஜனத்தொகைக்குச் சமமாய் இருப்பதாக சொல்லப்படுகிறது.