எமது வாசகரிடமிருந்து
தற்செயலாகவா வடிவமைக்கப்பட்டதாலா? “நாம் எப்படித் தோன்றினோம்? தற்செயலாகவா வடிவமைக்கப்பட்டதாலா?” (மே 8, 1997) என்ற தொடர்கட்டுரையை இப்போதுதான் வாசித்து முடித்தேன். அது என் ஆர்வத்தைத் தூண்டியதற்குப் பல காரணங்கள்: (1) பரிணாமம் போன்ற, புரிந்துகொள்ள கஷ்டமாயும் சிக்கலாயும் உள்ள விஷயத்தை விளக்குவதற்கு நீங்கள் பயன்படுத்தியுள்ள எளிய முறை, மற்றும் நாம் தோன்றின விதத்தைப் பற்றிய பைபிள் நோக்குநிலையின் சார்பாக வாதாடியதில் நீங்கள் காட்டிய உறுதி. (2) மெச்சப்படத்தகுந்த உங்கள் குறிக்கோளை அடைவதற்காக நீங்கள் பயன்படுத்தியிருக்கும் விளக்கப் படங்கள். தகவல் தொடர்பு பற்றி கற்பிக்கப்படும் ஒரு பெரிய கல்லூரியில் நான் ஓர் ஆய்வு மாணவன். நீங்கள் பிரசுரிப்பதற்கு முன்பு, எப்பொழுதும் கவனமான ஆராய்ச்சி செய்கிறீர்கள் என்பதை இப்படிப்பட்ட கட்டுரைகள் நிரூபிக்கின்றன. இதுவே, என்னோடு சேர்ந்த இதழாளர்கள், பதிப்பாசிரியர்கள், ஆய்வாளர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் தவறாமல் விழித்தெழு!-வை வாசித்து மகிழ்வதற்கான காரணம் என்பதில் சந்தேகமில்லை.
டி. எஸ். டி., காமரூன்
ஏன் இந்தத் தீராத வியாதி? “இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு ஏன் இந்தத் தீராத வியாதி?” (ஏப்ரல் 22, 1997) என்ற கட்டுரையில் ஜேஸன் தெரிவித்துள்ள எல்லா உணர்வுகளும் எனக்கும் இருக்கின்றன. அந்தக் கட்டுரையை வாசிக்கும் ஒவ்வொரு தடவையும், என் நிலைமையைப் புரிந்துகொள்பவரும், உற்சாகம் அளிப்பவரும், அக்கறை காட்டுபவருமான எவரோ ஒருவரோடு நான் மனம்விட்டுப் பேசுவதுபோலவே உணருகிறேன். என் மனபாரத்தைக் குறைத்திருப்பதற்காக உங்களுக்கு மிக்க நன்றி. யெகோவா அக்கறையுள்ளவர் என்றும், அவருடைய வேளை வரும்போது எல்லா நோய்களையும் நீக்கிவிடுவார் என்றும் எனக்குத் தெரியும்.
ஓ. ஏ., கானா
இந்தக் கட்டுரை வெளியானதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எனக்கு வலிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. எனக்கு இப்போதுதான் 18 வயது தொடங்கியது; சுதந்திரப் பறவையாய் உணர்ந்துவந்தேன்; ஆனால் ஒரு நோயாளி ஆகிவிட்டது, சமீபத்தில் கிடைத்த சுதந்திரம் அனைத்தையும் குறைத்துவிட்டது. முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டிய பல விஷயங்களும், வேளாவேளைக்கு மறக்காமல் போடுவதற்கென எக்கச்சக்கமான மாத்திரைகளும் உள்ளன. ஏற்கெனவே இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்திருக்கும் என் பெற்றோருக்கும் இது பெரும் தொல்லையாகிவிட்டது. இந்தக் கட்டுரை அந்தளவுக்கு என் உள்ளத்தை உண்மையிலேயே தொட்டதால் என்னைக் கண்ணீர்சிந்த வைத்தது. நான் அடக்கிக்கொண்டு வந்திருக்கும் அதே எண்ணங்களைப் பற்றியே அது அளவளாவியது. ஆகவே மீண்டும் ஓரளவு நார்மலாக உணர்ந்தேன். மற்றவர்களுக்கும் இதைப்போன்ற பிரச்சினைகளும் கவலைகளும் இருக்கின்றன என்பதை என்னால் காண முடிந்தது. நான் பலமாய் இருக்க எனக்குத் தேவைப்படும் தகவலை, தம்முடைய அமைப்பின் மூலமாக யெகோவா அச்சிட்டுள்ளார்.
டி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
இந்தக் கட்டுரையை வாசித்தபோது, என்னுடைய நோய், எவரையும்விட என் பெற்றோருக்கு மிகுந்த துன்பம் தருவதாக உணர்ந்தேன். எனக்கு வந்திருப்பது பரம்பரை நோய் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்; இதுவே அவர்களை மனம் தளர்ந்துபோகும்படி செய்கிறது. அவர்கள் மனம் தளர்ந்துபோவதை பார்க்கும்போது, அவர்களுக்காக ரொம்ப வருந்துகிறேன்.
ஒய். எச்., ஜப்பான்
நான் சின்ன பிள்ளையாய் இருந்தபோது, எனக்கு நல்ல உடல்நலம் இருந்தது. என்றாலும், என் பருவவயதில் எனக்கு எப்பவும் ஏதாவது ஒரு நோய் இருந்துக்கிட்டே இருந்துச்சு. நான் முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தேன்; மோசமான என் உடல்நிலை காரணமாக, ஆரம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு என் இலக்கை அடைய முடியவில்லை. நான் யெகோவாவுக்கு விரோதமாக ஏதோ தப்பு செய்துவிட்டதாகவும், அதனால்தான் நோய் என்ற ரூபத்தில் தண்டனை அடைந்து வருவதாகவும் (தவறாக) நினைத்துக்கொண்டு, ரொம்ப மனம்தளர்ந்துவிட்டேன். சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சரிசெய்துகொள்ள எனக்கு இந்தக் கட்டுரை உதவி அளித்திருப்பதோடு, உற்சாகமும் அளித்திருக்கிறது.
சி. கே., கானா
எனது ஒன்பது வயது மகளுக்கு, கற்பதில் குறைபாடு இருப்பதோடு சிறுபிள்ளை வாதமும் இருக்கிறது. அவளுக்கு புத்திக்கூர்மை அதிகம்; அதனால் அவளுடைய குறைபாடுகள் சாதாரண நடவடிக்கையை மட்டுப்படுத்துகின்றன என்று அவளுக்குத் தெரிகிறது. பொதுவாக, மகிழ்ச்சியும் சந்தோஷமுமான மனப்பாங்கு அவளுக்கு இருந்தாலும், அவ்வப்பொழுது இது அவளை கொஞ்சம் மனந்தளரச் செய்கிறது. அவள் மற்ற பிள்ளைகளைப் போலவே இருக்கப்போகும் எதிர்கால பரதீஸைப் பற்றி அவள் அப்பாவிடம் இரவுநேரங்களில் உரையாடிவருவதோடுகூட, இந்தக் கட்டுரை அவளுக்கு ரொம்ப உற்சாகமளித்தது.
ஒய். பி., ஐக்கிய மாகாணங்கள்
சுமார் பத்து வருடங்களாக, ஓர் ‘உள் வியாதி’ என்னைப் பாடாய் படுத்துகிறது; அது என் உடலின் ஜீரண அமைப்பைப் பாதிக்கிறது. அதன் காரணமாக, முழுநேர ஊழியத்தை விட்டுவிட வேண்டியதாயிற்று. இந்தக் கட்டுரையை வாசித்தபோது, என் போராட்டத்தை எவரோ ஒருவர் புரிந்துகொள்வதைப்போல் முதல் முறையாக உணருகிறேன். நான் மட்டும் தனியே கஷ்டப்படவில்லை என்பதை அறிவது நிம்மதி அளிக்கிறது. என் மேல் இருந்த பெரிய பாரம் இறக்கிவிடப்பட்டதைப்போல் இது இருக்கிறது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. உற்சாகமளிக்கும், காலத்துக்கேற்ற இப்படிப்பட்ட கட்டுரைகள் இந்தப் பழைய ஒழுங்குமுறையில் எப்படியோ காலந்தள்ள எங்களுக்கு உதவுகிறது.
எல். சி., கனடா