கைத்தடி ஒப்பனை கலை
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
“கைத்தடி ஒப்பனை என்னுடைய ஓய்வுநேர விருப்பவேலை என்று சொல்லுகையில், பிரிட்டிஷ் தீவுகளிலுள்ள அநேகர் இதன் அர்த்தம் என்ன என்று தெரியாமல் விழிப்பதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று கைத்தடி ஒப்பனை கலையில் வல்லவர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
கைத்தடி, இடையர்களின் தடி ஆகியவற்றை பற்றி அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்ட சாதாரண உபகரணங்கள், கைத்தடி ஒப்பனை மூலம் மிக அழகான கலை சின்னங்களாகின்றன. இந்தக் கவர்ச்சியூட்டும் கலைத்தொழிலை செய்ய அதிக திறமை தேவை என்பதை அநேக நூற்றாண்டுகளாக இடையர்களும் பண்ணை வேலையாட்களும் உணர்ந்திருக்கின்றனர். ஆனால் கைத்தடி ஒப்பனையில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கின்றன?
சரியான மரக்கிளையை தேர்ந்தெடுத்தல்
முதல் படியாக சரியான மரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான அளவுடைய எந்த மரத்தை வேண்டுமென்றாலும்—பிளாக்ஹார்ன், ஆப்பிள், பேரி போன்ற மரவகைகளை—உபயோகிக்கலாம். ஹால்லி மரம் அதன் கிளை துவக்கத்தில் ஏற்படும் பெரிய, அழகிய கணுக்களுக்காக தெரிவு செய்யப்படுகிறது. அநேக கைத்தடி ஒப்பனையாளர்கள் ஹேசல் மரக்கிளையை உபயோகிக்க விரும்புகிறார்கள். சில சமயங்களில் ஒரு மரத்தின் கிளையிலோ வேருக்கு அருகிலோ சரிந்து வளரும் கிளையை தேர்ந்தெடுத்து, முழு தடியையும் செய்ய பயன்படுத்தலாம். இவ்விதம் ஒரு முழு தடியையும், அதாவது தடியின் தலைப்பாகம் மற்றும் உடல் பாகம் ஆகியவற்றை ஒரு கிளையிலிருந்தே உருவாக்கலாம்.
எப்பொழுது கிளையை வெட்டலாம்? மரம் செயலற்று இருக்கும்போதும் சாறு வடியாமல் இருக்கும்போதும் வெட்டலாம்; ஆனால் அநேக கைத்தடி ஒப்பனையாளர்களின்படி, மிக சரியான நேரம், மற்றவர்கள் பார்வையில் படுவதற்கு முன்பாக உடனடியாக வெட்டுவதே! எப்படியிருந்தாலும் சரியான தடியை வெட்டி எடுத்தப் பிறகு, அது பிளந்துவிடாமல் இருக்க கைத்தடி ஒப்பனையாளர் அதன் வெட்டப்பட்ட இடங்களில் கிரீஸ் அல்லது பெயின்ட் தடவ வேண்டும். அந்த மரக்கிளை இரண்டு வருடங்களோ அதற்கும் மேலான காலமோ பதப்படுத்தப்படவேண்டும். அதற்கு பின்பே கைத்தடி ஒப்பனையாளர் அதை செதுக்க ஆரம்பிக்க முடியும்.
அதன் தலைப்பகுதியை செதுக்குதல்
ஒரு மரக்கிளைக்கு இயற்கையான கைப்பிடி அல்லது தலைப்பாகம் இல்லையென்றால், ஒப்பனையாளர் ஒரு மாட்டின் கொம்பு, வெள்ளாட்டின் கொம்பு அல்லது செம்மறியாட்டின் கொம்பு ஆகியவற்றிலிருந்து ஒன்றை உருவாக்குகிறார். கைத்தடியின் நடுபாகத்தைப்போன்றே இந்தக் கொம்பும் ஒரு வருடத்திற்கு பதப்படுத்தப்படவேண்டும். அதன்பின் பற்றுக் குறடால் தடி ஒப்பனையாளர் அந்தக் கொம்பை தான் விரும்பிய வடிவத்திற்கு உருவமைக்கிறார். ஆண்டாண்டு காலமாக இடையர்கள் கொம்பை வளைக்க பட்டறை நெருப்பு, சுடுதண்ணீர், நிலக்கரியின் தணல், எரியும் மெழுகின் வெப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன்பின் அந்த இடையனுடைய கற்பனை மற்றும் திறமைக்கு தக்கவாறு அது எந்தவிதமான உருவமாகவும் மாற்றப்படலாம். உதாரணமாக அவர் அதன் கைப்பிடியை ஒரு கூலி பறவை வடிவமாக, டிரவுட் மீனின் வடிவமாக, ஃபீஸன்ட் பறவையின் தலையைப்போல், அல்லது ஒரு சிறிய மிருகத்தைப்போல் செதுக்க இயலும்.
அந்தக் கொம்பு செதுக்கப்படும்போது ஒப்பனையாளர் ஒவ்வொரு நுணுக்கமான காரியத்திற்கும் மிக அதிகமான கவனத்தைச் செலுத்துகிறார். உதாரணத்திற்கு அவர் ஒரு டிரவுட் மீன் உருவத்தை வடிவமைப்பதாக வைத்துக்கொள்வோம், அதனுடைய வால் மற்றும் துடுப்புப் பகுதிகள் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் செதுக்கப்படுகின்றன; ஒரு வட்டமான ஆணிபோன்ற அமைப்பால் ஒவ்வொரு தனி செதிலும் செதுக்கப்படுகிறது. அதன் கண்கள் எருமை மாட்டின் கொம்பிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அதன் உடலில் பெயின்டிற்கு பதில் இங்க் உபயோகித்து வண்ணம் தீட்டப்படுகிறது. பலமுறை இவ்விதம் வண்ணம் தீட்டப்படுகின்றது; அவ்விதம் வழவழப்பான பகுதியில் வண்ணம் தீட்டுவது மிகவும் கடினம். வண்ணம் அழிந்துவிடாமல் இருக்க கடைசியாக ஒரு முறை வார்னிஷ் பூசப்படுகின்றது.
கலைச்சின்னம் உருவாகுதல்
இந்தக் கொம்பினை கைத்தடியின் தண்டோடு பொருத்துவதற்கு ஒரு இரும்பு போல்ட், ஆணி அல்லது ஒரு மர ஆணி ஆகியவற்றில் எதையாவது உபயோகிக்கலாம். அதன்பின் அந்த ஒப்பனையாளர் தான் செய்து முடித்த கலைச்சின்னத்தை ஸ்டீல்வுல்லால் நன்றாக தேய்க்கிறார். அதன்பின் அதன் தண்டு பகுதிக்கு மெருகேற்றி வார்னிஷ் பூசுகிறார். ஒரு அனுபவம் வாய்ந்த தடி ஒப்பனையாளர் இவ்விதம் எழுதுகிறார்: “ஒரு மீன் உருவத்தை செய்ய, அதன் துடுப்புகளை செதுக்க, அதன் உடலில் செதில்களை உருவாக்க, அதற்கு வண்ணம் பூச, அந்த வேலையை நிறைவு செய்ய, அதாவது, போட்டியில் கலந்து வெற்றிபெறும் அளவிற்கு செய்வதற்கு எனக்கு சுமார் 100 மணிநேரம் தேவையாக இருக்கிறது.”
கைத்தடி ஒப்பனை என்பது நிச்சயமாகவே கடினமான வேலை. ஆனால் அதை செய்து முடிக்கும்போது ஒரு உண்மையான கலைச்சின்னம் உருவாகிறது; சில, போட்டிகளிலும் கலந்துகொள்கின்றன. இது எப்படியிருந்தாலும் கைத்தடி ஒப்பனையாளர் தன்னுடைய திறமையை, கடந்துபோன அமைதியான காலங்களின் நினைவாகவும், நவீன வாழ்க்கையின் அழுத்தங்கள் மற்றும் துயரங்களுக்கு ஒரு மாற்று மருந்தாகவும் கருதுகிறார்.