உலகை கவனித்தல்
குடியேறிகள் மரணத்தையும் சந்திக்க தயார்
ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காகவும் மேம்பட்ட வாழ்க்கைக்காகவும் தென் ஆப்பிரிக்காவிற்குள் நுழையும் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் தங்களுடைய உயிரை பணயம் வைக்கிறார்கள். லிம்போபோ ஆற்றை நீந்திக்கடக்க முயலும் நூற்றுக்கணக்கான ஆட்களை முதலைகள் விழுங்குவதாகச் சொல்லப்படுகிறது. க்ரூகர் நேஷனல் பார்க்கின் குறுக்கே நடந்து கடக்க முயலும் அநேகரை யானைகள் மிதித்து கொல்கின்றன அல்லது அவர்கள் சிங்கங்களுக்கு இரையாகிவிடுகிறார்கள். மனிதர்களை தின்னப்பழகிய ஐந்து சிங்கங்களை பார்க் அதிகாரிகள் சமீபத்தில் சுட்டுக்கொன்றனர். ஜோஹன்ஸ்பர்க் செய்தித்தாளான த ஸ்டார் இவ்விதம் அறிவிக்கிறது: “இறந்த ஐந்து சிங்கங்களை போஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்ததில் அவற்றின் வயிற்றில் மனித உடலின் பாகங்கள் இருந்தன.” சட்டவிரோதமான குடியேறிகளில் எவ்வளவுபேர் இவ்விதம் கொல்லப்பட்டார்கள் என்பது தெரியாது. அந்தச் செய்தித்தாள் தொடர்ந்து இவ்விதம் குறிப்பிடுகிறது: “ரோந்து செல்பவர்கள் மனித காலடிகளை கவனித்திருக்கிறார்கள், ஆனால் அவை எந்த அத்தாட்சியும் இன்றி மறைந்துவிடுகின்றன. நன்றாக வளர்ந்த ஒரு ஆண் [சிங்கம்] ஒரு வேளை உணவின்போது 70 கிலோ எடையுள்ள மாம்சத்தை உண்ணக்கூடும். ஒரு சிங்கம் மனிதனைக் கொன்றபிறகு மனித உடலின் பாகங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது, ஏனென்றால் கழுதைப்புலிகளும் நரிகளும் வந்து மீதமிருப்பவற்றை தின்றுவிடுகின்றன.”
யுத்தத்தில் பிள்ளைகளின் பரிதாப நிலை
டெரி டெஸ் ஹொம்ஸ் அமைப்புகள், தேவையிலிருக்கும் பிள்ளைகளுக்கு உதவுகின்றன. ஜெர்மனியிலுள்ள இந்த அமைப்பின் தலைவி பட்ரா பொக்ஸ்லி இவ்விதம் குறிப்பிடுகிறார்: “கடந்த பத்தாண்டுகளில் சுமார் இருபது லட்சம் பிள்ளைகள் யுத்தங்களாலும், சில்லறைச் சண்டைகளாலும், தெருச்சண்டைகளாலும் தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.” மேலும் அறுபது லட்சம் குழந்தைகள் பயங்கரமாக காயமடைந்திருக்கின்றனர், ஒரு கோடி பிள்ளைகளுக்கு கவலைக்குரிய உணர்ச்சி பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என இதைப்பற்றி ஸுட்டொச்சி ட்சிடுன் விளக்குகிறது. பிள்ளைகளுக்கு, சமீபத்தில் யுத்தங்கள் இன்னொரு கேட்டையும் விளைவித்திருக்கின்றன என்று பொக்ஸ்லி புலம்புகிறார். சில நாடுகளில் பிள்ளைகள் கொலை செய்ய கட்டாய பயிற்சி அளிக்கப்படுகிறார்கள், வேறு சில நாடுகளில் “கண்ணி வெடிகளைத் தேடுவதற்காக” பயன்படுத்தப்படுகின்றனர்.
மிருகங்களில் “புது” முகங்கள்
யூ.எஸ்.நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் பின்வருமாறு சொல்கிறது: “சில பத்தாண்டுகளுக்கு முன்பாக உலகத்தில் உள்ள எல்லா பாலூட்டிகளும், அதாவது தோலில் முடிகளுடனும், வெப்ப ரத்தத்துடனும் உள்ள, பாலூட்டும் இயல்புடைய மிருகங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்பதாக நம்பப்பட்டது. அது உண்மையல்ல. மம்மல் ஸ்பீஷீஸ் ஆஃப் தி உவர்ல்ட் புத்தகத்தில் 1983 முதல் 1993 வரையான பதிப்புகளில் 459 புது பதிவுகள் சேர்த்துகொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் உயிரியல் வல்லுநர்கள் ஏராளமான எலி வகைகள், வௌவால்கள், மான்கள், மறிமான்வகைகள், காட்டெருது, குரங்கு வகைகள் ஆகியவற்றை கண்டுபிடித்திருக்கின்றனர்.” இப்பொழுது அறியப்பட்டிருக்கும் 4,600 பாலூட்டி வகைகள் 8,000 வரை அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது. சில “பாலூட்டியின ‘கண்டுபிடிப்புகள்’ அருங்காட்சியகங்களில் நடைபெறுகின்றன; பல ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டு பதப்படுத்தப்பட்ட மிருகங்களை கூர்ந்து கவனிக்கும்போது விஞ்ஞானிகள் அவற்றைக் கண்டுபிடிக்கின்றனர்.” கூடுதலாக, “அநேக புதிய உயிரினங்கள் ஏராளமான ஒட்டுண்ணிகளையும் விஞ்ஞானத்திற்குத் தெரியாத ஏராளமான சிற்றுண்ணிகளையும் சுமக்கின்றன.” அந்தக் கட்டுரை இவ்வாறு குறிப்பிடுகிறது: “புதிதாக விவரிக்கப்பட்ட பாலூட்டிகளில் மூன்றில் ஒன்றை இதுவரை விஞ்ஞானிகள் பார்த்ததே கிடையாது.” புதிதான கண்டுபிடிப்புகளில் அநேகம் வெப்பமண்டல காடுகளிலும் உலகின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் இருந்து கிடைத்தன. பாலூட்டி நிபுணர் ஜியார்ஜ் ஷலெர் இவ்விதம் சொல்கிறார்: “செவ்வாய் கிரகத்தில் ஒரே ஒரு பாக்டீரியா இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்று சொல்வதைக்கேட்டு ஜனங்களெல்லாம் இவ்வளவு கிளர்ச்சி அடைவதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் நம்முடைய கிரகத்தில் இன்னும் கண்டுபிடிப்பதற்கு ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றன.”
நாற்சந்தியில் மதம்
உலக சர்ச்சுகள் கவுன்சிலின் பொது செயலாளர் கொன்ரட் ரைஸிர் இவ்விதம் குறிப்பிடுகிறார்: “நாம் இந்த நூற்றாண்டின் முடிவையும் இந்த ஆயிர ஆண்டுகளின் முடிவையும் நெருங்கும்போது, இது வெறுமனே ஒரு அடையாளப்பூர்வமான நுழைவாயில் என்று நினைப்பதற்கு பதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரிய மாற்றம் ஏற்படபோகிறது என்ற எண்ணம் நிலவுகிறது. பிரச்சினை என்னவென்றால் இந்த மாற்றம் நம்மை எவ்விதம் பாதிக்கும் என்பது நமக்கு தெரியவில்லை. ஆகவே அந்த மாற்றத்துக்காக சுறுசுறுப்பாய் திட்டமிடுவதற்கு மாறாக ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டவர்களாக உணருவதால் அதை வெறுமனே சந்திக்க அல்லது பிரதிபலிக்க போகிறோம்.” டாக்டர் ரைஸிர், “மதங்களின் பன்மை” ஒரு பிரச்சினையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ENI புல்லட்டின், அவர் பின்வருமாறு குறிப்பிட்டதாகக் கூறுகின்றது: கிறிஸ்தவமண்டலம் “இன்றும்கூட பிரச்சினைகளுக்கு பெரும் காரணமாக இருக்கிறதே அன்றி தீர்வுக்கு அல்ல. நாம் இன்று வரையாக ஒருவரோடு ஒருவர் அயலகத்தாராக வாழ்வதற்கு வழிகளை கற்றுக்கொள்ளவில்லை; மற்றவர்களை, அதாவது நம் கருத்துக்களிலிருந்து வித்தியாசமான மத நம்பிக்கைகள் மற்றும் வணக்கமுறைகள் உடையவர்களை, வளம்பெறுவதற்கான ஊற்றுமூலமாக கருதுவதற்கு பதில் அபாயமாகவே கருதுகிறோம்.”
ஆயிரமாண்டு ஏற்கெனவே முடிந்துவிட்டதா?
அறிஞர்கள் குறிப்பிடுகிறதாவது: “பல ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரமாண்டு ஆரம்பமாகிவிட்டது. நாமெல்லாம் அதை அறியாமல் தவறவிட்டோம்” என்று நியூஸ்வீக் பத்திரிகை தெரிவிக்கிறது. காரணமென்ன? நம்முடைய காலண்டர், கிறிஸ்து பிறந்ததாக ஊகிக்கப்படும், “சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தின் பிரிவில் சார்ந்திருக்கிறது.” ஆனால் இயேசு, “கிறிஸ்து பிறப்பதற்கு” பல ஆண்டுகளுக்கு முன்பே பிறந்துவிட்டார் என்று நவீன அறிஞர்கள் கருதுகின்றனர் என்று அந்தப் பதிவு குறிப்பிடுகிறது. நியூஸ்வீக் குறிப்பின்படி அது “நாம் ஏற்கெனவே மூன்றாவது ஆயிரமாண்டுகளில் பிரவேசித்துவிட்டோம்” என்பதை அர்த்தப்படுத்துகிறது. இந்தப் பிழைக்கான காரணம் யார் என்றால் குட்டை டையொனைசியஸ்; இவர்தான் பொ.ச. 525-ல் முதலாம் போப் ஜான் என்பவரால் மதத்திற்காக ஒரு பொதுவான காலண்டரை உருவாக்குமாறு பணிக்கப்பட்டார். டையொனைசியஸ், இயேசுவின் பிறப்பை ஒரு முக்கியமான நாளாக வைக்க விரும்பினார், ஆனால் அதை கணக்கிடுவதில் தவறு செய்துவிட்டார். நியூஸ்வீக் குறிப்பிடுகிறதாவது: “வரலாற்றாசிரியர்களால் இயேசு எப்பொழுது பிறந்தார் என்பதை குறிப்பாக சொல்லவே முடியாது. கிறிஸ்மஸ் பண்டிகையின் நாள்கூட சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதே. சர்ச் டிச. 25-ஆம் தேதியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் புறமதத்தினரின் குளிர்கால கதிர்த்திருப்ப பண்டிகைக்கு இசைவாகவும், மதத்தின் அடிப்படையில் அந்தப் பண்டிகையை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காகவும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.” பைபிள் காலக்கணிப்புமுறை சுட்டிக்காட்டுவது என்னவென்றால் இயேசு பிறந்த ஆண்டு பொ.ச.மு. 2.
பூனைகளுக்கும் சம உரிமை
நியூ யார்க் மாவட்டத்தில் பல பத்தாண்டுகளாக, ஒரு மாட்டின்மீதோ, குதிரையின்மீதோ, நாயின்மீதோ காரை ஏற்றிவிட்டு, மிருகத்தின் சொந்தக்காரரை தேடி அவரிடம் சொல்லாமலோ அருகில் இருக்கும் போலீஸிடம் தெரிவிக்காமலோ சென்றால் அது குற்றமாகும். பூனைகள் இதில் சேர்க்கப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ இதைக்குறித்து ஒரு புதிய மசோதா இயற்றப்பட்டு எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இது “குப்புறகிடக்கும் பூனை” மசோதா என்று அறியப்படுகிறது; இந்தச் சட்டத்தின்படி ஒரு விபத்தில் பூனையை காயப்படுத்திவிட்டு குறைந்தபட்சம் போலீஸுக்குக்கூட அடிபட்ட விபரத்தை தெரிவிக்காமல் போனால் அது குற்றமாகும். விபத்தை அறிவிக்கவில்லையென்றால் பூனையை “அடித்து காயப்படுத்திவிட்டு ஓடிய” குற்றத்திற்காக 100 டாலர் அபராதம் விதிக்கப்படும். “பூனைப்பிரியர்களுக்கு, இது ஒரே ஒரு மிருகத்தைமட்டும் ஒதுக்கிவைக்கும் இயல்பிற்கு முடிவு கட்டிய பிரகாசிக்கும் ஏற்பாடு” என்பதாக த நியூ யார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.
“பருமன் என்ற கொள்ளை நோய்”
“உலகமுழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான ஆட்களுடைய உடல் நலத்தை பருமன் என்ற கொள்ளை நோய் பயமுறுத்துகிறது” என்று த ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் அறிவித்து, உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை மேற்கோளாகக் காட்டுகிறது. “25 நாடுகளிலிருந்து வந்த ஊட்டச்சத்து மற்றும் உடல்நல நிபுணர்கள் குறிப்பிட்டது என்னவென்றால், மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் 25% வயதுவந்தவர்கள் குண்டாக இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்தியதரைக் கடல் நாடுகளில் உள்ள பெண்கள் மற்றும் அமெரிக்காவிலுள்ள கருப்பு பெண்கள் மத்தியில் 40% வரை உயர்ந்திருக்கிறது. மேலனீஷியா, மைக்ரோனீஷியா, பாலினீஷியா போன்ற இடங்களில் மிக அதிகமானோர் குண்டாக இருக்கிறார்கள்; அங்கே சில இடங்களில் 70% எட்டுகிறது.” நிபுணர்கள் என்ன எச்சரிக்கிறார்கள் என்றால் ஜனங்கள் கொழுப்பு சத்து குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ளவும், அதிக உடல் உழைப்பை உட்படுத்தும் வாழ்க்கைப்பாணிக்கு மாறவும் இல்லையென்றால் ஏராளமான நாடுகளில் இருதய நோய், சுவாசக் கோளாறுகள், ஸ்ட்ரோக், பித்தநீர்ப்பையில் நோய், புற்று நோய், பரம்பரை சர்க்கரை வியாதி, தசை எலும்பு கோளாறுகள் ஆகியவை சமாளிக்க முடியாத எண்ணிக்கையான ஆட்களுக்கு ஏற்படும். “நிபுணர்கள் குறிப்பிட்டதாவது, ‘நம்முடைய நாட்களில் ஜனங்களால் மிக அதிகமாக கவனிக்காமல் விடப்பட்ட கோளாறு குண்டாக இருப்பதே, [அது] உடல்நலத்தை பாதிக்கும் அளவு, புகைபிடிப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுவதைவிட அதிகமாக இருக்கலாம் என்று ஒப்பிடப்படுகிறது.’”
வழி தவறிய வணக்கமா?
ஜூன் 1, 1997-அன்று மெக்ஸிகோ சிட்டியில் ஒரு சுரங்கவழி இருப்புப்பாதை ஸ்டேஷன் சுவரில் ஒரு வடிவம் உருவானது; இது காற்றிலிருக்கும் ஈரப்பதத்தினால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பல பக்திமிக்க கத்தோலிக்க தொகுதியினருக்கு இது வர்ஜின் குஆடலூப்பின் தெய்வீக தோற்றம்; மெக்ஸிகோவில் கன்னி மரியாளை அவ்விதமே அழைக்கின்றனர். எல் யூனிவர்சல் செய்தித்தாள் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “இருப்புப்பாதை ஸ்டேஷன் சுவரில் உருவான கன்னியின் தோற்றத்தை கத்தோலிக்க சர்ச் ஒரு அதிகாரப்பூர்வமான அற்புதம் என்று நினைக்கவில்லை, அதற்கு மாறாக ஸ்டேஷனில் தண்ணீரை வடிகட்டுவதால் ஏற்படும் இயற்கையான வடிவம் என்றே கருதுகின்றது.” ஆனாலும் அநேக ஜனங்கள் அதற்கு முன்பாக நின்று வணங்கி செல்கிறார்கள், “ஒரு மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர்” இந்த உருவத்தை தரிசித்து செல்கிறார்கள். இந்த உருவத்திற்காக ஒரு சுவர் மாடம் கட்டப்பட்டது; அதற்கு ஒரு கத்தோலிக்க பாதிரியார் திறப்புவிழாவும் நடத்திவிட்டார்.
போதை என்றாலே லாபம்தான்
உலகமுழுவதும் போதை மருந்துகளுக்கு அடிமையானவரின் எண்ணிக்கை சுமார் 34 கோடி என்பதாக ஐக்கிய நாடுகளின் சங்கம் தெரிவிக்கிறது. ஸொர்னில் டா டர்டி பின்வருமாறு அறிவிக்கின்றது: “தூக்க மருந்துகள் மற்றும் அமைதிப்படுத்தும் மருந்துகளை சார்ந்துள்ளநிலை முதலிடத்தை வகிக்கிறது; 22.75 கோடி ஜனங்கள், அதாவது உலகின் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 4 சதவீதத்தினர் இதற்கு அடிமைகள். இதற்கு அடுத்தநிலைக்கு வருவது கஞ்சா பழக்கம், இதற்கு 14.1 கோடி பேர் அடிமையாகியிருக்கிறார்கள்; இது உலக ஜனத்தொகையில் 2.5 சதவீதமாகும்.” கடத்தப்படும் போதை மருந்துகளில் 5 முதல் 10 சதவீதத்தை மட்டுமே போலீஸாரால் கைப்பற்ற முடிகிறது. போதை மருந்துகளை விற்பதன் மூலம் ஒரு வருடத்திற்கு 40,000 கோடி டாலர் பணம் கிடைக்கிறது. சில இடங்களில் சட்டவிரோதமாக போதை மருந்து விற்பவர்கள் 300 சதவீதம்வரை லாபம் பெறுகிறார்கள்; “எந்த வியாபாரத்திலும் பெற முடியாத பெரும் லாபம்” என்பதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.