உலகத்தைக் கவனித்தல்
“அறியப்படாத கோளம்”
முன்பு அறியப்படாத குரங்கின் மூன்று இனங்கள், அமேசான் மழைக்காட்டில் இரண்டு வருடத்திற்குள் காணப்பட்டன. உலகமுழுவதிலும் சராசரியாக மூன்று புதிய பறவை இனங்கள் ஒவ்வொரு வருடமும் கண்டுபிடிக்கப்படுகின்றன. பனாமாவில் 19 மரங்களை ஆய்வு செய்ததில், சுமார் 1,200 வண்டு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் 80 சதவீதம் முன்பு அறியப்படாதவை. யுனெஸ்கோ ஸோர்ஸ்ஸஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது: “பெரும் எண்ணிக்கையான உயிர் வகைகள் நமக்கு அறியப்படாமலே உள்ளன.” உதாரணமாக, “மதிப்பீடு செய்யப்பட்ட 40 சதவீத தென் அமெரிக்க நன்னீர் மீன்கள் வகைப்படுத்தப்படாமலே உள்ளன. . . . பெருமளவில் ஆய்வுப்பயணம் செய்யப்படாத ஆழ்கடலில் எதைக் கண்டடைவோம்?” பாக்டீரியா, பூஞ்சை, நீண்டுருண்ட வடிவுடைய புழுக்கள், சிலந்திப்பேரினம், பூச்சிகள், செடிகள் போன்ற இன்னும் கண்டுபிடிக்கவிருக்கும் சிறிய உயிரினங்களை எண்ணிப்பார்த்தால் இந்தப் பிரச்சினை தீவிரமாகிறது. வெறும் “ஒரு கிராம் வெப்பமண்டல மண்ணில், உதாரணத்திற்கு, 9 கோடி பாக்டீரியாக்களும் நுண்ணுயிரிகளும் உள்ளன.” சிலரது கணக்கெடுப்பின்படி பூமியில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை, “அதிகளவான 20 கோடி,” என்று யுனெஸ்கோ ஸோர்ஸ்ஸஸ் கூறுகிறது. விரிவான ஆய்வு செய்தபோதிலும், இன்னமும் “அறியப்படாத கோளமாகவே” பூமி இருக்கிறது.
மதிப்பீடுகளில் கனடாவின் விரைவான மாற்றம்
“வியாபாரத்திலும் சமுதாயத்திலும் வசதியையும் ஒழுங்கையும் ஏற்படுத்திக்கொடுத்த சர்ச், அரசு, மோனோபோலிஸ், ஆலிகாபோலிஸ் ஆகியவற்றின் அதிகாரத்தை ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் அடங்கிய கனடா நாட்டவர்கள் ஒரு தலைமுறைக்குள் நிராகரித்துவிட்டனர்,” என்று தி டோரன்டோ ஸ்டார் அறிக்கை செய்கிறது. ஏன்? அவர்களுக்கு உடனடியான பொருள் சம்பந்தமான திருப்தி வேண்டும். இப்பொழுது, “அனைத்தையும் கொள்ளுதல்” என்னும் முயற்சி இருக்கிறது. “ஜுடியோ-கிறிஸ்தவ ஒழுக்கநெறி தொகுப்பு தனி மனித இனநலக்கோட்பாட்டைக் கொண்டு மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. கத்தோலிக்க மரபுக்கோட்பாடு, பொருள் இன்பமே சிறந்தநலம் என்னும் கோட்பாட்டைக் கொண்டும் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. திருப்தியை மரணத்திற்குப் பின்னான வாழ்க்கைக்காக ஒத்திப்போட சிலர் மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒருவரின் வயோதிபத்தைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை,” என்று ஸ்டார் மேலும் கூறுகிறது. கடவுள் மனித சக்திக்கு அப்பார்ப்பட்ட ஒருவர் என்பது இனிமேலும் நோக்கப்படுவதில்லை. ஆகவே, அங்கு பயமோ குற்றவுணர்வோ இல்லை. பொருள் சார்ந்த உலகின் பலன்களைப் பெருக்குவதில் அனைத்து முயற்சிகளும் ஒருமுகப்படுத்தப்படுவதால், ஆவிக்குரிய நலன்கள் பாதிக்கப்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் முன்காட்சி
வாகனங்கள், பெரிய எண்ணிக்கையான போக்குவரத்து சாதனங்கள், மின்னியல் இசை, ஃபேக்ஸ் மிஷின்கள் போன்ற நவீன நாளைய முன்னேற்றங்களைப் பற்றி கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யாராவது கற்பனை செய்திருப்பார்களா? 1863-ல் பிரெஞ்சு நாவலாசிரியர் ஜூலஸ் வர்ன், தன்னுடைய இலக்கியப்படைப்பான அரவுண்டு தி உவர்ல்டு இன் எய்ட்டி டேய்ஸ், 20,000 லீக்ஸ் அன்டர் தி சீ ஆகியவற்றிக்குப் புகழ்பெற்றவர். அவற்றில் அந்த முன்னேற்றங்களைப்பற்றி முன்னுரைத்துள்ளார். முன்பு பிரசுரிக்கப்படாத பாரிஸ் இன் தி 20-த் சென்சுரி என்ற நாவலில் இன்னும் அதிகத்தை முன்னுரைத்துள்ளார். வர்னின் படைப்புகளைப் பிரசுரிப்போர், மிகவும் தொடர்பு அற்றதாகவும், நம்பமுடியாததாகவும் உள்ளன என்று அதை நிராகரித்தனர். இருந்தபோதிலும், இருபதாம் நூற்றாண்டில் நம்முடைய வாழ்க்கை முறை, முன்னேற்றுவிக்கப்பட்ட ஆயுதங்கள், மின்சார நாற்காலி, தூய்மைக்கேடு, போக்குவரத்து நெரிசல் முதலியவற்றையும் சேர்த்து, எவ்வளவு துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளன என்பது சமீப ஆராய்ச்சியிலிருந்து அறியவருகிறது. பாரம்பரிய சாதனைகளிலும், பண்பாட்டிலும் ஆர்வம் இழந்த விரைந்து செல்லும் மக்கள் தொகையும், வணிகவியலுக்கும் தொழில் நுட்பத்திற்கும் அடிமையான ஒரு சமுதாயத்தையும் வர்ன் முன்காட்சியாகக் கண்டார். பாரிஸ் இன்டர்நேஷனல் ஹெரால்டு ட்ரிப்யூன் குறிப்பிட்டது: “வர்ன் நவீன நாளைய தொழில்நுட்ப அருஞ்செயல்களைமட்டும் முன்னறிவிக்கவில்லை, ஆனால் பயமுறுத்தும் விளைவுகளையும்கூட உணரக்கூடியவராய் இருந்தார்.”
ஜப்பானின் குற்றச்செயலின் திடீர் எழுச்சி
சமீபகாலம் வரை ஓரளவுக்குக் குற்றச்செயலற்றதாக இருந்த ஜப்பான், குற்றச்செயலின் திடீர் எழுச்சியை அனுபவிக்கிறது. அதற்கு போலீஸ், பின்வாங்குதல், துப்பாக்கி கடத்தல் அதிகரிப்பு, திட்டமிட்ட குற்றச்செயலின் ஒடுக்கும் அதிகாரம் ஆகியவற்றைக் குறைகூறுகிறது. போலீஸ் அதிகாரி டாகாஜி கூனீமாட்ஸ்யூவின் கூற்றின்படி, துப்பாக்கியோடு தொடர்புடைய குற்றச்செயல்கள், பதிவை ஏற்படுத்தக்கூடிய அளவை எட்டிவிட்டிருக்கின்றன, இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் ஜப்பானில், “போலீஸ் ஒழுங்கமைப்பின் அஸ்திபாரமே ஆட்டம் கண்டுவிடும்.” மைனிச்சீ டெய்லி நியூஸின் பிரகாரம் “சாதாரண மக்களால்” இழைக்கப்படும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன, அதற்கு ஒரு காரணம், “நெரிசல் நிறைந்த நகரவாழ்க்கையின் நீங்காத அழுத்தமே,” ஆகும். நகரவாசிகள் வாழ்வோரைப் பாதுகாக்க, சமூகவியல் பேராசிரியர் சுசூம்யூ ஓடா பின்வரும் ஆலோசனைகளைக் கொடுத்தார்: அடிப்படையான மரியாதைக்குரிய பண்புகளான, சுகநலன்களை விசாரிப்பதை அங்கீகரித்தல், சரியான சந்தர்ப்பத்தில், “என்னை மன்னியுங்கள்” என்று கூறுதல், “விரோதத்தின் அறிகுறிகளை அகற்றிவிட” புன்னகைச் செய்தல். கனிவோடு மறுத்துவிடும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள். கதவுகளில் பாதுகாப்பு சங்கிலியைப் பயன்படுத்த பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். போலீசாரை உங்கள் நண்பர்கள் என கருதுங்கள். “குற்றச்செயலிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் விதங்களில் ஒன்று என்று பயிற்றுவிக்கப்படும் தற்பாதுகாப்பு கலையைப் போற்றாதீர்கள், அது ஒருவரை மிகமோசமாக காயப்படுத்தக்கூடும்.”
இரத்தமேற்றுதலின் ஆபத்துக்கள்
“கனடாவின் இரத்த விநியோகத்தை, இப்போதிலிருந்து ஆயிர வருடங்களுக்குத் துல்லியமாக ஆய்வு செய்தாலும், இரத்தமேற்றுதலின் ஆபத்துக்கள் அப்போதும் இருக்கும்,” என்று தி டோரன்டோ ஸ்டார் அறிக்கை செய்தது. செ. மைக்கேல் மருத்துவமனையின் டாக்டர் வில்லியம் நோபல் அவர்கள், கனடாவின் இரத்த விநியோகத்தின் பாதுகாப்பைப் பரிசோதிக்க அமர்த்தப்பட்ட குழுவிடம் அறிக்கையை சமர்ப்பித்தபோது இவ்வாறு கூறினார்: “அவை (ஆபத்துக்கள்) இருக்கின்றன மற்றும் அவை எப்போதும் இருக்கப்போகின்றன.” “தானமாகப் பெற்ற இரத்தத்தில் ஒவ்வாமையின் அறிகுறிகளிலிருந்து எய்ட்ஸ் தொற்றுதல் வரை அனைத்தும்,” இரத்தமேற்றுதலில் அடங்கியுள்ள ஆபத்துக்கள் என்று ஸ்டார் சொல்கிறது. இன்று அதிக அதிகமான நோயாளிகள், இரத்தத்திலிருந்து எய்ட்ஸ் தொற்றுமோ என்று கவலைப்படுகிறார்கள் என்பதாக இரத்தமேற்றுதலை செயல்படுத்தும் வல்லுநர்கள் அறிக்கை செய்கிறார்கள். “‘நான் இரத்தத்தை ஏற்ற வேண்டுமா வேண்டாமா?’ என்று பேசாமல் ஒரு நாளைக்கூட கழித்ததில்லை,” என்று டாக்டர் நோபல் சொல்கிறார்.
கரடியின் உறுப்புகள்
“கனடாவிலிருந்து கருப்பு கரடியின் உறுப்புகளை சட்டவிரோதமாக வியாபாரம் செய்வதினால் வரும் இலாபம் சர்வதேச போதைப்பொருட்கள் வியாபாரத்தில் வரும் இலாபத்தைக்காட்டிலும் மிக அதிகம்,” என்பதாக தி டோரன்டோ ஸ்டார் அறிவிக்கிறது. பணக்கார ஆசிய நாடுகளான சீனா, தென் கொரியா, ஜப்பான், தைவான், ஹாங்காங் ஆகியவற்றின் பாரம்பரிய மருத்துவர்களால், கருப்பு கரடியின் பித்தநீர் பைகளுக்கும் பாதங்களுக்கும் வழக்கத்துக்கும் மாறான கிராக்கி உள்ளது. “கலிபோர்னியாவின் சட்டத்தை அமல்படுத்தும் ஒரு அதிகாரி, ஆசியாவில் கரடியின் பித்தநீரின் ‘இறுதி விற்பனைவிலை’ (நுகர்வோர் இறுதியாகக் கொடுக்கும் விலை) ஒரு கிலோகிராமுக்கு $10 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துவிடுகிறது என்பதாக மதிப்பிடுகிறார், அதற்கிடையே பித்தநீர் மாடுகள் அல்லது பன்றியின் பித்தநீரோடு, ‘மாறி விடும்’ (கலப்படம் செய்யப்படும்)” என்று மேலும் கூறுகிறது ஸ்டார். “ஒப்பிட்டு பார்க்கையில், மெட்ரோ டோரன்டோவில் ஒரு கிலோகிராம் கோகெய்னின் மதிப்பு $1,00,000 என்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.” உலக வனவிலங்கு நிதி/கனடாவின் ஆபத்துக்குள்ளாகியுள்ள உயிரனங்களின் வல்லுநர் காரோல் சான் லொர்ரான் சொல்கிறார்: “இது மிகப் பெரியளவிலான வியாபாரம்.” கரடியின் உறுப்புகளின் கிராக்கி தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்லக்கூடிய பயமிருக்கிறது. ஆசியாவில் கரடிகள் ஏற்கெனவே பெருமளவில் அழிந்துவிட்டன.
பிரேஸிலின் ஆபத்துக்குள்ளாகிய உயிரினங்கள்
“எந்த ஒரு நாட்டைக்காட்டிலும் பிரேஸிலில் வெப்பமண்டல காடுகள் மூன்றுமடங்கு அதிகமாக உள்ளன, உயிரினங்களின் பல்வேறு வகைகளைக் கொண்டிருப்பதில் உலகத்தில் முதன்மையானது, அது இன்னும் விலங்குகளில் வெவ்வேறு வகையான பாலூட்டிகளையும் 460 உயிரினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது,” என்று, ஓ எஸ்டாடோ ட எஸ். பாவ்லூ செய்தித்தாள் சொல்கிறது. “ஆனால் ஆபத்துக்குள்ளாகி இருக்கும் 310 உயிரினங்களுக்கும் பிரேஸில் முதன்மையானதாக உள்ளது, அவற்றுள் 58 பாலூட்டிகள் ஆகும்.” எந்தப் பாலூட்டியும் முற்றிலும் அழிந்துவிடவில்லை என்றாலும், “பிரேஸிலில் மட்டுமே இருக்கும் டார்மாரின் சிங்கம்” போன்ற “12 சதவீத பிரேஸிலின் பாலூட்டிகள் ஆபத்துக்குள்ளாகி இருக்கின்றன.” ஆபத்துக்குள்ளாகியிருக்கும் உயிரினங்களில் சில “கட்டுப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வசிக்கின்றன, வசிக்கும் இடத்தில் ஏதேனும் தலையிடுதல் இருந்தால், அவை இல்லாமல் அழிந்துபோக வழிவகுக்கக்கூடும்.” அந்தச் செய்தித்தாளின்படி, எந்தவொரு விலங்கினமும், 50 வருடங்களுக்கு அதைச் சேர்ந்த எந்தவொரு விலங்கும் காட்டில் காணப்படாமல்போனால், அது அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
கோளத்தில் மக்கள் தொகை
UNFPA (ஐ.நா. மக்கள் தொகை செயல்பாட்டு நிதி அமைப்பு) பதிவின்படி, இந்தக் கோளத்தில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை 1994-ன் மத்திபத்தில் 566 கோடியை எட்டியது. தற்போதைய நிலவரத்தின்பேரில் மதிப்பிடுகையில் அது 1998-ல் 600 கோடிக்கும் 2025-ல் 850 கோடிக்கும், 2050-ல் 1000 கோடிக்கும் உயரும். கிட்டத்தட்ட இந்த அனைத்து அதிகரிப்பும் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிகழும். ஆப்பிரிக்காவில் வருட மக்கள் தொகை வளர்ச்சியின் வீதம் 2.9 சதவீதம் கொண்ட, உலகிலேயே மிக வேகமாக வளர்ச்சியை உடைய பிரதேசமாக இருக்கும். ஐரோப்பா மிகவும் குறைவான 0.3 சதவீதத்தைக் கொண்டிருக்கும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், இப்போதிலிருந்து ஐந்தே வருடங்களுள், உலகத்தின் பாதி மக்கள் தொகை நகர்ப்புறங்களில் வாழ்வார்கள் என்று UNFPA மேலும் கூறுகிறது. இன்று உள்ள 125 நகரங்களுடன் ஒப்பிடுகையில் அப்போது வளரும் நாடுகளிலுள்ள 300 நகரங்கள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்டிருக்கும்.
தரமான உறவுகளே திறவுகோல்
“வளரிளம் பருவத்தினர் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதோ நடத்தையில் பிரச்சினைகளைக் கொண்டிருப்பதோ அவர்கள் எத்தகைய குடும்பத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக்காட்டிலும் எத்தகைய உறவைக் கொண்டிருக்கிறர்கள் என்பதையே காட்டுகிறது,” என்பதாக தி டோரன்டோ ஸ்டார் குறிப்பிடுகிறது. “குடும்ப உறவுகளின் தன்மை குடும்பத்தின் அமைப்பைக்காட்டிலும் வலிமையான செல்வாக்குச் செலுத்துகிறது,” என்பதை ஒன்டாரியோவில் அடிக்ஷன் ரீசர்ச் ஃபவுன்டேஷனைச் சேர்ந்த 2,057 இளைஞர்களிடத்தில் நடத்திய ஆய்வு காட்டியது என்று விஞ்ஞானி எட் அடால்ஃப் கூறினார். நல்ல குடும்ப உறவு நிலவிய குடும்பத்திலிருந்து வந்த வளரிளம் பருவத்தினர், தத்தெடுத்தப் பெற்றோர் அல்லது மாற்றாம் பெற்றோர் அல்லது ஒற்றை தாய்மார்கள் என கொண்டிருந்தபோதிலும், நல்ல குடும்ப உறவு நிலவாத குடும்பத்திலிருந்து வந்தவர்களைக் காட்டிலும் சிறந்து விளங்கினர். “தங்களுடைய பிரச்சினைகளை தங்கள் பெற்றோரோடு ஒழுங்காக பேசியவர்களிடையே குற்றம் இழைக்கும் வீதங்கள் மிகவும் குறைவு,” என்று ஸ்டார் கூறினது. “பெற்றோரில் ஒருவரிடத்திலாவது தங்களுடைய பிரச்சினையை எப்போதுமே பேசாதவர்கள் மத்தியில், மிதமிஞ்சி குடித்தல், போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல், குற்றம் இழைத்தல் போன்ற தவறுகளின் வீதங்கள் மிக உயர்வான அளவில் இருந்தன.” வளரிளம் பருவத்தினர் எவ்வளவு நேரத்தைத் தங்கள் குடும்பங்களோடு செலவிடுகிறார்கள், உறவுகளின் தரம், தங்கள் பிள்ளைகள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி பெற்றோர்கள் அறிந்திருத்தல் போன்றவை பிரச்சினைகளைக் குறைப்பதற்கான முக்கிய காரணிகளாகும். “பிள்ளைகளிடத்தில் கொஞ்ச நேரத்தைச் செலவிடுவதும் அவர்களுக்காக நேரத்தை கொண்டிருப்பதற்கு காரியங்களைச் சரிப்படுத்துவது மிகவும் முக்கியம்,” என்று அடால்ஃப் கூறினார்.