எமது வாசகரிடமிருந்து
உங்கள் கோபத்தை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? “உங்கள் கோபத்தை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?” (ஜூன் 8, 1997) என்ற கட்டுரைக்காக நன்றி. நான் ஒரு பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள்; சிறுபெண்ணாக இருந்தபோது வீட்டில் ஏராளமான சண்டைகளைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டனர், அதன்பின் அவ்வப்போது எனக்கு கோபம் அதிகம் வரும். இந்தப் பிரச்சினையை மேற்கொள்ள உதவுமாறு யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்திருக்கிறேன். எனக்காகவே எழுதப்பட்டதைப் போன்ற ஒரு கட்டுரையைப் படிப்பது உண்மையில் ஆச்சரியமாக இருந்தது! அதில் கொடுக்கப்பட்டிருந்த வசனங்களை தொடர்ந்து சிந்திக்கிறேன்; உதாரணமாக, எபேசியர் 4:26 இவ்விதம் சொல்கிறது: “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.” என் கணவரும் நானும் இதனை வாழ்க்கையில் பொருத்தினோம். நான், யெகோவா தேவனாலும் இந்தக் கட்டுரையாலும் இந்தப் பிரச்சினையை மேற்கொண்டேன்.
ஏ. ஆர். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்கள் “பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்கள்” (ஜூன் 8, 1996) என்ற கட்டுரைக்காக, நான் யெகோவாவிற்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்தவேண்டும். என்னுடைய சகோதரிக்கு சமீபத்தில் மனநிலை உணர்ச்சிகள் பாதிக்கப்பட்டது. எந்த டாக்டராலும் அவளுடைய நோயை கண்டுபிடிக்க இயலவில்லை, அவளுக்கு என்ன நேரிட்டது என்பது எங்களுக்குப் புரியவில்லை. இதன் காரணமாக அவளை மருத்துவமனையில் சேர்க்கவேண்டியநிலை ஏற்பட்டது; அவளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் பீதிக்குள்ளாக்கும் தாக்கங்களால் துன்பப்படுவதாகவும் அங்கே சொன்னார்கள். யெகோவா எங்கள் மீது கரிசனையாக இருக்கிறார் என்று நாங்கள் உணர்வதற்கு ஏற்றார்போல் அந்தச் சரியான சந்தர்ப்பத்தில்தான் இந்தக் கட்டுரை வந்தது. அதைப் படிக்கும்போதே என் சகோதரி அழ ஆரம்பித்துவிட்டாள், ஏனென்றால் எப்படிப்பட்ட பிரச்சினையை அவள் எதிர்ப்படுவதை யெகோவா புரிந்துகொள்கிறார் என்று தெளிவாக அறிந்துகொண்டாள். அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட ஒரு சகோதரியின் வார்த்தையின்படி, நம் தேவனாகிய யெகோவா உண்மையான பலத்திற்கும் ஆறுதலுக்கும் ஊற்றுமூலம் என்பதை உணரும்போது அவர் எவ்வளவு அதிசயமானவர் என்பது தெளிவாகிறது.
ஏ. இ. டபிள்யூ., தென் ஆப்பிரிக்கா
“ஒரு குழந்தையின் காதுகளுக்குள்” இந்தக் கட்டுரை (ஜூன் 8, 1997) என் மனதைத் தொட்டது. வெளி ஊழியத்தில் நான் சிறுவர்களை அடிக்கடி சந்திப்பேன், அவர்களை கவனியாமல் அல்லது குறைவாக மதிப்பிடாமல் பரதீஸை குறித்து அவர்களிடம் பேசுவேன். இந்த அனுபவத்தை பிரசுரித்ததற்கு நன்றி, ஏனென்றால் இதேவிதமாக தொடர்ந்து செயல்பட என்னை அது உந்துவித்தது. யார் அந்த அடுத்த “குழந்தையின் காதுகளுக்குள்” அனுபவத்திற்கு காரணமாக இருப்பார்கள் என்பது யாருக்குத் தெரியும்?
எம். ஓ. யூ., நைஜீரியா
இந்தக் கட்டுரை என்மீது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது! நான் தொடர்ந்து வாசித்துவரும் போது, “பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுதல்” என்ற பகுதியில் சங்கீதம் 37:9-ல் பூமியை சுதந்தரிப்பதைப் பற்றி தன்னுடைய சொந்த பைபிளிலேயே வாசித்தவுடன் லவிஸ்க்கு ஏற்பட்ட ஆச்சரியத்தைப் பற்றி படித்தபோது என் கண்கள் குளமாகிவிட்டன! இப்படிப்பட்ட வாழ்க்கை சரிதைகளைத் தொடர்ந்து விழித்தெழு! பத்திரிகையில் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பி. சி., இங்கிலாந்து
எமது வாசகரிடமிருந்து நான் பெற்றுக்கொள்ளும் எல்லா பத்திரிகைகளையும் போற்றுகிறேன். ஜூன் 8, 1997, விழித்தெழு! பத்திரிகையில் சபைநீக்கம் குறித்து வாசகரிடத்திலிருந்து வந்த குறிப்புகளை படித்தபோது சந்தோஷப்பட்டேன். நான் சபை நீக்கம் செய்யப்பட்டேன், அதன்பின் அடுத்த ஆண்டு சபையில் திரும்ப சேர்த்துக்கொள்ளப்பட்டேன். அநேக ஆட்கள் இது கடுமையான நடவடிக்கை என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில் கடுமையானதல்ல. நான் பெற்ற அந்தச் சிட்சை கடினமான ஒன்றுதான், ஆனால் மட்டுக்குமீறிய ஒன்றல்ல. மூப்பர்கள் உதவத்தான் முயற்சி செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அந்த உதவியை ஏற்காததால்தான் சபைநீக்கம் செய்யப்பட்டேன். சபைநீக்கம் செய்யப்பட்டபிறகு யெகோவா இல்லாத வாழ்க்கை எவ்வளவு தனிமையானது என்பதை உணர்ந்தேன். என்னுடைய வாழ்க்கைப்பாணியை மாற்றி யெகோவாவிடம் திரும்பும்வரை, நிரப்பமுடியாத ஒரு வெறுமை என் வாழ்க்கையில் இருப்பதை உணர்ந்தேன். சபை நீக்கம் செய்யப்பட்டதானது, தாழ்மை அடைந்து யெகோவாவும் அவருடைய அமைப்பும் தேவை என்பதை உணரும்படி செய்தது.
ஏ. சி., கனடா
விழித்தெழு! அருமையான விழித்தெழு! பத்திரிகைக்கு சந்தாவை புதுப்பிக்க மறந்ததற்கு முதலாவது நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும். இது, ஒரு ஆவலைத் தூண்டக்கூடிய மற்றும் விழிப்பூட்டக்கூடிய தலைப்புகளை கொண்ட, தகவல் நிறைந்த, கற்பிக்கக்கூடிய, உண்மைகளை வெளியிடும் பத்திரிகை. நான் படிக்காமல் விட்ட எல்லா பழைய பிரதிகளும் எனக்கு வேண்டும். ஒன்றைக்கூட தவறவிட விரும்பவில்லை. அறியாமையை ஒழிப்பதற்காக பொறுமையுடன் நீங்கள் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிக்கு நன்றி.
என். எஸ்., இலங்கை