வரவிருக்கும் சீதோஷ்ணநிலை
காற்று மண்டலத்தை மாசுபடுத்துதல் என்பது மனித நடவடிக்கையால் உருவான ஒரு பிரச்சினையே; இதைப்போல் சுற்றுப்புறத்தை சீரழிக்கும் அநேக பிரச்சினைகள் இருக்கின்றன. காடுகளை அழித்தல், விலங்கினங்களின் அழிவு, ஆறுகள், ஏரிகள், சமுத்திரங்கள் ஆகியவற்றை மாசுபடுத்துதல் போன்றவை இவற்றில் அடங்கும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லா பிரச்சினைகளும் மிக கவனமாக ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை சரிசெய்வதற்கு ஆலோசனைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் உட்பட்டிருக்கும் பிரச்சினைகள் உலகளாவிய விதத்தில் பாதிப்பதால் தீர்வுகளையும் உலகளாவிய விதத்தில்தான் நிறைவேற்ற இயலும். பிரச்சினைகள் யாவை என்பதையும் அவற்றை சரிசெய்ய என்ன செய்யப்பட வேண்டும் என்பதையும் குறித்து பரந்த அளவில் கருத்து ஒற்றுமை நிலவுகிறது. ஒவ்வொரு வருடமும் நடவடிக்கை எடுப்பதற்கு கூக்குரல் சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு வருடமும் சிறிதளவான நடவடிக்கையே எடுக்கப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை இயற்றுபவர்கள் பிரச்சினைகளைக் குறித்து புலம்புகிறார்கள்; இதைக்குறித்து ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிறார்கள்; அதோடு இதையும் சேர்த்து சொல்கிறார்கள்: “நாங்கள் அதைச் செய்ய முடியாது, இப்பொழுது எதையுமே செய்ய முடியாது.”
நியூ யார்க் நகரத்தில், 1970-ஆம் ஆண்டு, முதல் பூமி நாளின்போது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்கள் ஒரு பெரிய சின்னத்தை எடுத்து சென்றனர். அந்தச் சின்னம் பூமி, “உதவி! உதவி!” என்று கதறுவதாக அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கதறுதலுக்கு யாராவது செவிசாய்த்தார்களா? தேவனுடைய வார்த்தை இதற்கான பதிலை இவ்விதம் அளிக்கிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்து போம்.” (சங்கீதம் 146:3, 4) இதைத் தொடர்ந்து சங்கீதக்காரன் சிருஷ்டிகரிடம் கவனத்தை திருப்புகிறார்; ஏனென்றால் வல்லமையும், ஞானமும், மனித குலம் எதிர்ப்படும் மிகச் சிக்கலான எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. நாம் இவ்விதம் வாசிக்கிறோம்: “வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவற்றில் இருக்கும் எல்லாவற்றையும் படைத்த, தன் தேவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைக்கிறவன் . . . சந்தோஷமுள்ளவன்.”—சங்கீதம் 146:5, 6, NW.
சிருஷ்டிகரின் மகத்தான நோக்கம்
பூமி சிருஷ்டிகரிடமிருந்து வந்த ஒரு பரிசு. அதை அவர் வடிவமைத்து சிருஷ்டித்தார்; பூமியின் சீதோஷ்ணநிலை மகிழ்வூட்டும் முறையில் இருப்பதற்கு அவர் பல சிக்கலான அதிசயத்தக்க நுட்ப இயக்கங்களை அமைத்திருக்கிறார். (சங்கீதம் 115:15, 16) பைபிள் இவ்விதம் அறிவிக்கிறது: “அவரே [கடவுளே] பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.”—எரேமியா 10:12, 13.
மனித குலத்திடம் சிருஷ்டிகருக்கு இருக்கும் அன்பை விவரிப்பதற்காக, அப்போஸ்தலனாகிய பவுல் பூர்வ லீஸ்திராவில் இருந்தோரிடம் இவ்விதம் சொன்னார்: “அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் [கடவுள்] தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை.”—அப்போஸ்தலர் 14:17.
இந்தக் கிரகத்தின் எதிர்காலம் மனிதர்கள் எடுக்கும் முயற்சிகளிலோ அல்லது ஒப்பந்தங்களிலோ சார்ந்தில்லை. சீதோஷ்ணநிலையை கட்டுப்படுத்துவதற்கு வல்லமை உடையவர் தம்முடைய பூர்வ ஜனங்களிடம் இவ்வாறு கூறினார்: “நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.” (லேவியராகமம் 26:4) இப்படிப்பட்ட நிலைமைகளை வெகு சீக்கிரத்தில் ஜனங்கள் உலக முழுவதும் அனுபவிப்பார்கள். அழிவுண்டாக்கும் புயல், பேரலைகள், வெள்ளம், பஞ்சம், அல்லது வேறு எவ்விதமான இயற்கை சீற்றத்தினால் வரும் ஆபத்திற்கும் கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் இனியும் பயப்படவேண்டியதில்லை.
அதன் பின், அலைகள், காற்று, வானிலை என்றாலே மகிழ்ச்சிதான். அப்பொழுதும் ஜனங்கள் வானிலையைக் குறித்து பேசுவார்கள், ஆனால் அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். தேவன் ஏற்பாடு செய்திருக்கும் எதிர்காலத்தில் வாழ்க்கை அவ்வளவு நேர்த்தியாக இருக்கப்போவதால் வானிலையை சரிசெய்ய வேண்டிய அவசியமே இருக்காது.