அமரான்த்—அஸ்டெக்கியரின் உணவு
மெக்ஸிகோவிலிருந்து விழித்தெழு! நிருபர்
கண்கவர் மெக்ஸிகன் உணவு அங்காடிகளில், அலக்ரீயா என்றழைக்கப்படும் சத்துள்ள மிட்டாய் சர்வசாதாரணமாகக் கிடைக்கும்; இதன் ஸ்பானிய பெயரை மொழிபெயர்த்தால் அதன் அர்த்தம் “மகிழ்ச்சி” அல்லது “சந்தோஷம்” என்பது. இது அடர் சிவப்பு நிற மலர்களையுடைய அமரான்த் என்ற வெப்பமண்டலப்பகுதியிலுள்ள செடியின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மிட்டாயில், சில சமயங்களில் வால்நட், பைன்நட், திராட்சை, பதப்படுத்தாத தேன் போன்ற பொருட்களையும் சேர்த்து தயாரிக்கின்றனர். அமரான்த் விதைகளை சீரியலாக அல்லது மாவாக அரைத்து, ரொட்டிகள், கேக்குகள் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.
டார்ட்டிலாஸ், டாமேல்ஸ் என்றழைக்கப்படும் கேக்குகள், மட்டன் பப்ஸ்களை அமரான்த் மாவில் அஸ்டெக் ஜனங்கள் தயாரித்தனர். கூடுதலாக அவர்களுடைய மதச் சடங்குகளில் அமரான்த் முக்கிய பங்கு வகித்தது. மெக்ஸிகோவின் த நியூஸ் இவ்விதம் சொன்னது: “அவர்களுடைய மதச் சடங்கு ஒன்றில் அஸ்டெக் ஜனங்கள், தாங்கள் ஏற்கெனவே சிறைபிடித்த எதிரிகளில் ஒருவரை [கொன்று] அவருடைய ரத்தத்தில் அமரான்த் ரொட்டியை தோய்த்து உண்பர்.” அஸ்டெக் ஜனங்களின் இன்னொரு பாரம்பரிய வழக்கம், மாவாக அரைத்த அமரான்த் விதைகளை சோளம், தேன் ஆகியவற்றோடு சேர்த்து, இந்தக் கலவையால் சிறிய விக்கிரகங்களை அல்லது தெய்வங்களைச் செய்வதாகும். கத்தோலிக்கர்கள் தங்களுடைய பூசையில் நற்கருணை ரொட்டியை உண்பதுபோல், அவர்கள் இந்த விக்கிரகங்களை பின்னர் உண்டனர்.
இந்த இரண்டு பழக்கங்களுமே ஸ்பானிய வெற்றி வீரர் எர்மன் கார்டெஸ்ஸுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின; எனவே அமரான்த் செடியை வளர்ப்பதற்கும் அதை உண்பதற்கும் தடை விதித்தார். இந்தச் சட்டத்தை மீறி யாராவது செயல்பட்டால் அவர் கொல்லப்பட்டார் அல்லது அவருடைய கை வெட்டப்பட்டது. ஆகவே, அந்தக் காலத்தில் மெக்ஸிகோவின் முக்கியமான பயிர்வகைகளில் ஒன்று கிட்டத்தட்ட மறைந்தே போனது.
ஆகிலும் அமரான்த் தப்பிப்பிழைத்து, எப்படியோ மத்திய அமெரிக்காவிலிருந்து இமயமலைக்கு இடம் பெயர்ந்தது. இது சென்ற நூற்றாண்டில், சீனா, இந்தியா, பாகிஸ்தான், திபெத் ஆகிய இடங்களில் வாழும் மலைவாழ் மக்களின் முக்கியமான உணவுப் பொருளானது.
தற்சமயம் மெக்ஸிகோவில் ஆராய்ச்சியாளர்கள் அந்த விதையின் புரதத்தைப் பிரித்தெடுத்து அதிலிருந்து அமரான்த் பால் தயாரிக்க முயற்சி செய்துவருக்கின்றனர்; இந்தப் பானம் ஊட்டச்சத்தில் பசுவின் பாலை ஒத்திருக்கும். இதைப் பயன்படுத்தி, முட்டைகள், பால், மீன், இறைச்சி ஆகியவற்றை வாங்க இயலாதவர்களுடைய உணவினை வலுவூட்டுவதே அவர்களுடைய இலக்கு.
அமரான்த் செடிக்கு இப்படியொரு கொந்தளிப்பான சரித்திரம் இருந்தாலும், அநேக பயன்களுடைய, ஊட்டச்சத்து நிறைந்த அமரான்த் உணவினை இன்றும் அநேகர் ரசித்து உண்கிறார்கள்.