கறந்த பாலிலிருந்து பால் பவுடருக்கு
நியூஜிலாந்தில் இருந்து விழித்தெழு! நிருபர்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, கிட்டத்தட்ட எல்லா தேசத்திலும், பால் மனிதனுடைய முக்கிய உணவு. தாயிடம் இருந்து சிசுக்களுக்கு கிடைக்கும் போஷாக்கான உணவு பாலே. இருந்தாலும், மனிதன், வித்தியாசமான பல பாலூட்டிகளிடம் இருந்து இந்த மிகப் போஷக்கான உணவை பெறுகிறான். குறிப்பாக, பசுக்கள், ஒட்டகங்கள், வெள்ளாடுகள், தென் அமெரிக்க ஒட்டகங்கள், கலைமான்கள், செம்மறியாடுகள், ஆசிய எருமைகள் போன்ற விலங்குகளிடம் இருந்து பாலைப் பெறுகிறான். பாலோடு எந்தப் பொருளையும் கலக்காமல் அப்படியே குடிப்பதை மக்கள் விரும்புகின்றனர். அதோடு, வெண்ணெய், பாலாடைக்கட்டி, தயிர், ஐஸ்கிரீம் போன்ற பிரபலமான பால் பொருட்களையும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
பசும்பாலே சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. இது, 87 சதவீதம் தண்ணீராலும் 13 சதவீதம் திடப்பொருட்களாலும் ஆனது. கார்போஹைட்ரேடுகள், புரோட்டீன்கள், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருளாகிய கால்சியம் போன்றவையே இந்தத் திடப்பொருட்கள். உறுதியான எலும்புக்கு கால்சியம் மிக இன்றியமையாதது. அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்த பாலை பசுக்கள் தருவதில்லை. மேலே கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளின் பட்டியலில், கலைமானின் பாலே அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. அதில் சுமார் 37 சதவீதம் திடப்பொருட்கள் உள்ளன!
எப்படிக் கிடைத்தாலும்சரி, குளிர்ச்சாதனங்களில் வைக்காவிட்டால் பால் நீண்ட நேரம் தாங்காது. இந்தப் பிரச்சினையை தீர்க்கும் பிரபலமான தீர்வு, பால் பவுடரே. ஆனால், பாலை எப்படி பால் பவுடராக மாற்றுவீர்கள்? இதைத் தெரிந்துகொள்ள, நியூஜிலாந்தில் உள்ள வைகடோ மாகாணத்தில் இருக்கும் நவீன பால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு ஒரு சிற்றுலா செல்வோமா! உலகிலேயே மிகப் பெரிய தொழிற்சாலை இது. உலகம் முழுவதிலும் உள்ள உணவு தொழிற்சாலைக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க பால் பவுடரை இது உற்பத்தி செய்கிறது. நாளொன்றுக்கு 400 டன் பால் பவுடர்.
திரவ நிலையில் இருந்து பவுடருக்கு
நியூஜிலாந்தின் பல பால் பண்ணைகளில் இருந்து, ஒவ்வொரு நாளும் இந்தத் தொழிற்சாலைக்கு பளபளக்கும் ஸ்டீல் கலங்களை உடைய லாரிகள் கறந்த பாலை நிரப்பிக்கொண்டு சாரிசாரியாக அணிவகுத்து வருகின்றன. இங்குக் காற்றுப்புகாத, பெரிய சிலிண்டர்களில் அந்தப் பால் சேமித்து வைக்கப்படுகிறது. அவற்றிலிருந்து தரக்கட்டுப்பாட்டு செபரேட்டர்களுக்கு பால் செல்கிறது. இங்கு திரவப்பொருளாகவும் திடப்பொருளாகவும் தனித்தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. அதாவது, கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலும், கொழுப்புச் சத்து நிறைந்த பாலேடும் தனித்தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. பிறகு, இவற்றையே சரியான அளவில் மறுபடியும் கலந்து, தரம் மிக்க பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் பவுடராக மாற்றப்படுவதற்கு முன், இந்த செபரேட்டர்களில் இருந்து, மற்றொரு கலத்தில் தற்காலிகமாக சேமித்து வைக்கப்படுகிறது.
பாலை இளஞ்சூடாக்கி அதிலுள்ள நுண்மங்களை அழிக்கும் முறையாகிய பாஸ்டர் முறைக்குப் பிறகு, காற்றுப் புகாத கலத்தில் கொதிக்க வைக்கப்படுகிறது. ஏன் காற்றுப் புகாத கலத்தில்? இயல்பான வெப்பநிலைக்கும் குறைவான சூட்டிலேயே பால் கொதிக்க வைக்கப்படுகிறது. இது, அதிக சூட்டால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கிறது. நீரெல்லாம் சுண்டிய பிறகு, 48 சதவீதம் திடப் பொருள் கிடைக்கிறது. இப்போது இந்தத் திடப் பொருள் இறுதி கட்டத்திற்கு—உலர வைக்கும் கட்டத்திற்கு தயார்!
திட நிலையில் இருக்கும் இந்த பால் உலர வைக்கப்படுவதற்காக, பல அடுக்குகளை உடைய ஸ்டீல் டிரையர்களுக்கு (உலர்த்திகள்) குழாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது. இங்கே, சூடான காற்று நிறைந்த டிரையருக்குள் பால் திவலைகளாக தெளிக்கப்படுகிறது. இதனால் பாலின் ஈரப்பதம் இப்போது 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இது பவுடராகிறது. இதற்கும் அடுத்த கட்டத்தில், ஈரப்பதம் 3 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதன் பிறகு, பவுடர் மெல்ல குளிர வைக்கப்படுகிறது. இப்போது, பேக் பண்ணி, மற்ற இடங்களுக்கு அனுப்ப பால் பவுடர் ரெடி! வெகு கவனமாக செய்யப்படும் இந்த முறையில், பாலின் சத்தும் நறுமணமும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது.
கறந்த பால் எளிதாக கிடைக்கும் இடத்தில் ஒருவேளை நீங்கள் வசிக்கலாம். ஆனால், அநேகர் கறந்த பால் கிடைக்காத இடங்களில் வாழ்கின்றனர். இந்த இடங்களில் பால் அப்படியே கிடைத்தாலும் யானைவிலை குதிரைவிலை விற்கிறது. இப்படிப்பட்டவர்களின் பிரச்சினைக்கு ஒரு விடிவு பால் பவுடரே! தண்ணீரில் ஒரே ஒரு ஸ்பூன் பால் பவுடரை கலந்தால் போதும், பால் ரெடி! கறந்த பால் போல் சுவையாக இல்லையென்றாலும், இது போஷாக்கான உணவே.
[பக்கம் 14-ன் பெட்டி/படம்]
பாஸ்டர் முறை, ஹோமோஜெனைஸேஷன் முறை என்றால் என்ன?
குறிப்பிட்ட நேரத்திற்கு, பாலை சூடாக்கி, பிறகு வேகமாக குளிர வைக்கும் முறைக்குத்தான் பாஸ்டரைஸேஷன் என்று பெயர். லூயீ பாஸ்டர் என்னும் ஃபிரெஞ்சு விஞ்ஞானியின் பெயரால், இந்த செயல்முறை பாஸ்டரைஸேஷன் என்று அழைக்கப்பட்டது. கேடு விளைவிக்கும் கிருமிகளைக் கொன்று, நீண்ட நாட்கள் பாலை கெடாமல் வைப்பதற்கு இந்த முறை உதவுகிறது. இருந்தாலும், எல்லாக் கிருமிகளும் இம்முறையில் கொல்லப்படுவதில்லை. அதனால், பால் கெடாமல் ஓரளவு நீண்ட நாட்கள் இருக்கும். சரியான விதத்தில் குளிர்விக்கும்போது, உயர்தரம் மிக்க, சுத்தமான பாலை 14 நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்கலாம்.
பாலில் இருக்கும் கொழுப்பு அல்லது வெண்ணெய் சின்ன சின்ன உருண்டைகளாகவும் பாலேடாகவும் மிதந்து கொண்டிராமல் மாற்றுவதே ஹோமோஜெனைஸேஷன். இந்த உருண்டைகளை, இன்னும் சிறியவையாக உடைத்து, பாலோடு ஒன்றரக்கலந்து, பாலின் அடர்த்தியையும் ஊட்டச்சத்தையும் அதிகரிக்க ஹோமோஜெனைஸர்கள் உதவுகின்றன.
[படத்திற்கான நன்றி]
நன்றி: ஐ.மா. தேசிய மருத்துவ லைப்ரரி
[பக்கம் 15-ன் படம்]
பல அடுக்குகளையுடைய இந்த டிரையரில் ஒரே மணிநேரத்தில் 9 டன் பால் பவுடர் ரெடி