அஸ்தெக்குகளின்—அசரவைக்கும் எதிர்நீச்சல்
மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! நிருபர்
“பொருட்களை வாங்குவதும் விற்பதுமாக அந்தப் பிரமாண்டமான அங்காடியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. . . . கான்ஸ்டான்டிநோபல், இத்தாலி, ரோம் என்று உலகின் பல பகுதிகளை சுற்றிவிட்டு வந்த சில சிப்பாய்களும் அக்கூட்டத்தில் இருந்தனர். மக்கள் வெள்ளம் திரண்டு வந்த, எல்லா பொருட்களும் ஒருங்கே அமைந்த அங்காடியை அதுவரை அவர்கள் பார்த்ததேயில்லை என்று மூக்கில் விரல் வைத்தனர்.”
இப்படியாக 1519-ல் அஸ்தெக்குகளின் நகரமான தெனோசிட்டிலான் காட்சியளித்தது என்றார் அதை நேரில் பார்த்த பர்னால் டியாத் டெல் காஸ்டியோ என்ற சிப்பாய். அவர் ஸ்பானிய வெற்றிவீரரான ஹர்னான் கார்டெஸ் படையில் இருந்தவர்.
தெனோசிட்டிலானுக்கு ஸ்பானியர்கள் வந்தபோது, அங்கிருந்த மக்கள் தொகை 1,50,000 முதல் 2,00,000 வரை என்கிறது கீன் எஸ். ஸ்டார்ட் எழுதிய த மைடீ அஸ்டெக்ஸ் என்ற புத்தகம். அந்த ஊர் பட்டிக்காடாக இருக்கவில்லை. அந்தக் காலத்திலேயே எத்தனையோ சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பட்டணமாக செழித்தோங்கி நின்றது. பாலங்களும், கரைப்பாலங்களும் (causeways), வாய்க்கால்களும், தகதகவென மின்னிடும் கோயில்களும் நிறைந்திருந்தன. தலைநகரான தெனோசிட்டிலான் அஸ்தெக்கு பேரரசின் உயிர்நாடியாக விளங்கியது.
அமைதி நிறைந்த, ஒழுங்காக நிர்மாணிக்கப்பட்ட பட்டணம் அஸ்தெக்குகளுக்கு இருந்தது என்று சொன்னதும் பல வாசகர்களுக்கு வியப்பாக இருக்கும். ஏனென்றால் அஸ்தெக்குகள் இரத்த வெறிபிடித்தவர்கள் என்பதே பரவலான கருத்து. உண்மைதான், தங்கள் தெய்வங்களுக்கு மனித இருதயங்களை காணிக்கையாக அளித்தால்தான் வலிமையோடு வாழ முடியும் என்று அஸ்தெக்குகள் நம்பினார்கள். ஆனால் அஸ்தெக்குகள் சிந்திய மனித இரத்தத்தை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டால், அவர்களது கலாச்சாரத்திலும் வரலாற்றிலும் ஏராளமான விஷயங்கள் பொதிந்துகிடக்கின்றன. அஸ்தெக்குகள் வாழ்க்கை என்னும் கடலில் போட்ட எதிர்நீச்சலை அறிந்துகொண்டால், இன்றும் அந்த வம்சத்தினர் எதற்காக வாழ்க்கையில் கடுமையாக போராடுகிறார்கள் என்பது புரியும்.
அஸ்தெக்குகளின் எழுச்சி
மெசோ-அமெரிக்க நாகரிக வரலாற்றில் அஸ்தெக்குகள் கொஞ்சகாலம் மாத்திரம் இடம்பிடித்தனர். a ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து, பேரிங் ஜலசந்தியைக் கடந்து, அலாஸ்காவுக்குப் போய், பிறகு அங்கிருந்து மெல்ல மெல்ல தென் பகுதியில் குடியேறியவர்களே மெக்சிகோ பழங்குடியினர் என்பது நிறைய ஆராய்ச்சியாளர்களது கருத்து.—செப்டம்பர் 8, 1996, விழித்தெழு! பக்கங்கள் 4-5-ஐக் காண்க.
ஆல்மக் நாகரிகமே மெசோ-அமெரிக்காவில் செழித்தோங்கிய மிகப் பழமையான நாகரிகம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆல்மக் நாகரிகம் அநேகமாக பொ.ச.மு. 1200-ல் தோன்றி, 800 வருடங்கள் நிலைத்திருந்ததாக ஒருசில அதிகார வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், பொ.ச. 1200 வரை, அதாவது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்கள் கழித்தே அஸ்தெக்குகள் புகழ் பெற்றார்கள். அவர்களது கலாச்சாரம் வெறும் 300 வருடங்களே நிலைத்திருந்தது. அவர்களது மாபெரும் பேரரசு வெறும் நூறு வருடங்களுக்கு மாத்திரம் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அதற்குள் ஸ்பானியர்களின் வாளுக்கு இரையானது.
ஆனால், அஸ்தெக்கு பேரரசு கொடிகட்டி பறந்த காலத்தில், அதன் செழுமையை எதனுடனும் ஒப்பிட முடியாது. “அஸ்தெக்கு பேரரசு தெற்கே குவாதமாலா வரை பரவியிருந்தது” என்கிறது ஒரு பத்திரிகை. த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு விவரிக்கிறது: “அமெரிக்க நாடுகளில் வளர்ச்சியடைந்த நாகரிகங்களில் மிகவும் உயரிய நாகரிகம் என்று சொன்னால் அது அஸ்தெக்கு நாகரிகமே. அந்தக் காலத்திலிருந்த ஐரோப்பிய நகரங்களுக்கு நிகராக பெரிய பெரிய நகரங்களை அவர்கள் அமைத்திருந்தார்கள்.”
அஸ்தெக்குகள் தோன்றிய புராணம்
அஸ்தெக்குகள் புகழோடு வாழ்ந்தார்கள் என்பது தெரிந்த செய்தி. ஆனால் அவர்களது தோற்றத்தைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. அஸ்ட்லான் என்றால் “வெள்ளை நிலம்” என்று அர்த்தம். அந்த வார்த்தையிலிருந்தே அஸ்தெக்கு என்ற பெயர் வந்ததாக ஒரு புராணம் சொல்கிறது. ஆனால், புராணம் சொல்கிற அஸ்ட்லான் எங்கு இருந்தது, அல்லது அப்படி ஒரு இடம் இருந்ததா என்று யாருக்குமே தெரியவில்லை.
எது எப்படியோ, ஆகமொத்தம், அஸ்ட்லானிலிருந்து பிரிந்துசென்ற ஏழு தொகுதிகளில் கடைசி தொகுதியே அஸ்தெக்குகள் என்று புராணம் சொல்கிறது. அவர்களது கடவுள் விட்ஸிலோபோச்டிலி. அந்தக் கடவுள் கொடுத்த கட்டளையை கேட்டு, தங்களுக்காக ஒரு தாயகம் தேடி, நீண்டதொரு வீரப்பயணத்தை தொடங்கினார்கள். அவர்கள் தாயகத்தை தேடி அலைந்து அலைந்து பல பத்தாண்டுகள் உருண்டோடின. அதனால் அவர்கள் பட்ட பாடுகளும், இழந்த இழப்புகளும் கொஞ்சநஞ்சமில்லை. போர்தான் அவர்கள் வாழ்க்கை என்று ஆனது. அப்பாடா! அவர்கள் பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வந்தது. அவர்களது கடவுள் விட்ஸிலோபோச்டிலி ஓர் அடையாளத்தை கொடுத்ததாக மிகவும் புகழ்பெற்ற புராணம் ஒன்று சொல்கிறது. அந்த அடையாளம் என்னவென்றால் கள்ளிச்செடியில் கழுகு ஒன்று உட்கார்ந்திருக்கும். அதை தேடியே அவர்கள் அலைந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் தேடிவந்த அந்த அற்புத காட்சியை, டெக்ஸ்கோகோ ஏரியின் சதுப்புநிலத்தில், சின்ன தீவில் கண்டார்கள். எப்படியோ ஒருவழியாக அங்கே வந்து குடியமர்ந்தார்கள். நகரத்தை கட்டினார்கள். அந்நகரே பிறகு மகா தெனோசிட்டிலான் (அதாவது, “தண்ணீரிலிருந்து எழுகிற கல்” ) என்று பிரபலமானது. இந்நகரின் பெயர் தெனோக் என்ற அவர்களது முன்னோரின் பெயரை தழுவி வந்ததாக ஒருசில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். இன்று, தெனோசிட்டிலான் என்ற புகழ்பெற்ற மாநகர் மெக்சிகோ நகருக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கிறது.
அஸ்தெக்குகள் கட்டடக்கலையிலும், கலைப்பொருட்கள் செய்வதிலும் சூரர்கள். ஏரியின் படுகையில் குப்பை கூளமெல்லாம் போட்டு, மேடாக்கி, அதையே அடித்தளமாக மாற்றி, நகரத்தை விரிவாக்கினார்கள். இவ்வாறு மேடாக்கி கட்டிய கரைப்பாலங்கள் தீவையும், நிலப்பகுதிகளையும் இணைத்தன. நிறைய வாய்க்கால்களை வெட்டினார்கள்.
இக்காலக்கட்டத்தில் இந்தக் கட்டடக் கலைஞர்கள் அஸ்தெக்குகள் என்று பரவலாக அறியப்படவில்லை. அஸ்ட்லானை விட்டு புறப்பட்டபோது, விட்ஸிலோபோச்டிலி கடவுள் அவர்களுக்கு மெக்சிகாஸ் என்ற புதிய பெயரை கொடுத்து, அவர்களை சுற்றி இருக்கும் தேசமும், குடிமக்களும் விரைவில் அப்பெயர் தாங்கி நிற்பர் என்று சொன்னதாக புராணம் சொல்கிறது.
ஆனால், அந்த இடத்தில் மெக்சிகாஸ் அல்லது அஸ்தெக்குகள் மாத்திரம் இருக்கவில்லை. அவர்களை சுற்றிலும் பகைவர்களும் இருந்தார்கள். எனவே அண்டை நாட்டினரோடு நட்புறவு கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. அஸ்தெக்குகளின் நட்பு கரத்தை வேண்டாம் என்று தள்ளிவிட்ட எல்லாரும் அடுத்தக் கட்டமாக அவர்களை போர்முனையில்தான் சந்தித்தார்கள். அஸ்தெக்குகளுக்கு போர் வாழ்க்கையே கச்சிதமாக பொருந்தியது. ஏனென்றால் மனித உயிரை பலி கேட்டும் பல தேவ, தேவியர்களில் (தெய்வங்களில்) அவர்களது சூரியக் கடவுள் விட்ஸிலோபோச்டிலியும் ஒன்று. இரத்தம் சொட்ட சொட்ட துடிக்கிற மனித இருதயங்களையும், நர பலிகளையும் அது அடிக்கடி கேட்டது. இத்தகைய உயிர் பலிக்கு போர் கைதிகளே பூஜைப் பொருளானார்கள். இவ்வாறு அஸ்தெக்குகள் போர் கைதிகளை பூஜைக்கு பயன்படுத்துகிற செய்தி பரவப்பரவ, பயத்தால் பகைவர்களின் இதயம் துடிக்க மறந்தது.
இப்படியாக, அஸ்தெக்கு பேரரசு தெனோசிட்டிலானிலிருந்து விரிவடைய ஆரம்பித்து, சீக்கிரத்திலேயே இன்றைய மத்திய அமெரிக்காவின் சில பகுதிகள் வரை பரவியது. அதனால் புதிய மத நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் அஸ்தெக்கு கலாச்சாரத்திற்குள் நுழைந்தன. அதே நேரத்தில், இவர்களிடம் தோல்வியடைந்த அரசர்கள் கொண்டுவந்து கொட்டிய செல்வங்களால், அதாவது கப்பங்களால் அஸ்தெக்குகளின் கஜானாக்கள் நிரம்பி வழிந்தன. அஸ்தெக்கு இசை, இலக்கியம், கலை செழித்தோங்கியது. நேஷனல் ஜியோகரஃபிக் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “பிரமிக்க வைக்கும் கலை அழகோடு மிளிர்ந்த அஸ்தெக்கு சிற்பங்களைப் பார்க்கும்போது, வரலாற்றிலேயே தலைசிறந்த கலைஞர்கள் என்ற பட்டத்தை அவர்கள் தட்டிச்செல்கிறார்கள்.” அஸ்தெக்கு நாகரிகம் செல்வ செழுப்பின் உச்சத்தில் இருந்தபோது ஸ்பானியர்கள் வந்தார்கள்.
படையெடுப்பு
நவம்பர் 1519-ல் மெக்சிகா பேரரசர் இரண்டாம் மொன்ட்சுமா, ஸ்பானியர்களையும் அவர்களது தலைவன் ஹர்னான் கார்டெஸையும் இன்முகத்தோடு வரவேற்றார். அவர் கார்டெஸை அஸ்தெக்கு தெய்வம் க்யூட்சால்கொட்லின் அவதாரம் என்று நினைத்துவிட்டார். மூடநம்பிக்கை நிறைந்த அஸ்தெக்குகள் அளித்த தடபுடலான வரவேற்பைக் கண்டு ஸ்பானியர்களுக்கு ஒரே கொண்டாட்டம். அப்பாவி அஸ்தெக்குகள், தெனோசிட்டிலானின் தங்க பொக்கிஷங்களை எல்லாம் ஸ்பானியர்களுக்கு காட்டியதால் வந்தது தலைவலி. உடனே அவற்றை எப்படியும் அடைந்திட சதிவலைப் பின்னினான் கார்டெஸ். எப்படியெல்லாமோ அதட்டி, மிரட்டி மொன்ட்சுமாவை அவருடைய சொந்த நகரிலேயே சிறை வைத்தான். மொன்ட்சுமா ஒரு மறுப்பும் சொல்லாமல், அவராகவே சரணடைந்ததாக சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ, மாபெரும் பேரரசின் தலைநகரை கார்டெஸ் கத்தியின்றி ரத்தமின்றி சுலபமாக பிடித்துவிட்டான்.
கத்தியின்றி கிடைத்த வெற்றியால் பிறகு இரத்த ஆறே ஓடியது. கார்டெஸ் தனக்கு ஏதோ அவசர வேலையென்று, தன்னுடைய இடத்தில் பாத்ரோ டி அல்வராடோ என்பவரை அமர்த்திவிட்டு அக்கரைக்குப் போனார். ஆனால் அல்வராடோ சரியான அவசரப்புத்திக்காரன். கார்டெஸ் இல்லாத நேரத்தில் மக்கள் எங்கே தன்னை தாக்கிவிடப்போகிறார்கள் என்று பயந்து, அவன் முந்திக்கொண்டான். அஸ்தெக்குகள் பண்டிகை கொண்டிக்கொண்டிருந்த சமயமாகப் பார்த்து, நிறையப் பேரை படுகொலை செய்தான். கார்டெஸ் திரும்பி வந்துபார்த்தால் ஊரெங்கும் ஒரே அமளி. அப்போது நடந்த போரில் மொன்ட்சுமா கொல்லப்பட்டார். அநேகமாக அவரை ஸ்பானியர்கள் கொன்றிருக்கலாம். ஆனால், கார்டெஸ், மொன்ட்சுமாவை மக்கள் முன் நிறுத்தி, சண்டையை நிறுத்தும்படி சொல்ல சொன்னதாகவும், அவ்வாறு அவர் சொன்னபோது, கொதிப்படைந்த மக்கள் மொன்ட்சுமாவை கல்லெறிந்து கொன்றுவிட்டதாகவும் ஸ்பானியர்கள் தரப்பில் கூறுகிறார்கள். ஆகமொத்தம், கார்டெஸும், அவனது அடி வாங்கிய படையும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினார்கள்.
நொந்துபோய், அடி வாங்கி வந்த கார்டெஸ் தன் படையை மறுபடியும் ஒன்றுத்திரட்டினான். அஸ்தெக்குகளை வெறுத்த அக்கம் பக்கத்து பழங்குடிகளும், விடுதலையை நாடிய குடிகளும் ஸ்பானியர்களுடன் கைக்கோர்த்து கொண்டன. கார்டெஸ் மறுபடியும் தெனோசிட்டிலானுக்கு திரும்பினான். இரத்த ஆறு ஓடிய இந்தப் போரில், சிறைப் பிடிக்கப்பட்ட ஸ்பானிய போர்வீரர்களை அஸ்தெக்குகள் நரபலியிட்டதாக சொல்லப்படுகிறது. இச்செயலால் கார்டெஸுக்கும், அவனது படைக்கும் கோபம் தலைக்கு ஏறியது. எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டார்கள். அதேசமயத்தில், கப்பம் கட்டிவந்த குடிகள் எல்லாம், “முன்பு தங்களுக்கு மெக்சிகாஸ் [அஸ்தெக்குகள்] இழைத்த கொடூரங்களுக்காகவும், தங்கள் செல்வங்கள் பறிபோனதற்காகவும்” கொடூரமாகப் பழிவாங்கும் செயலில் இறங்கிவிட்டன என்று அஸ்தெக்கு எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார்.
1521-ம் வருடம், ஆகஸ்ட் திங்கள் 13-ம் தேதி மாபெரும் தெனோசிட்டிலான் விழுந்தது. மெக்சிகாஸை ஸ்பானியர்களும், அவர்களது நேச நாடுகளும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. நேஷனல் ஜியோகரஃபிக் பத்திரிகை இவ்வாறு கூறியது: “ஸ்பானியர்களது தங்க வேட்டையால், மெசோ-அமெரிக்காவின் பெரும் நகரங்களும் வழிப்பாட்டு ஸ்தலங்களும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வரலாற்றிலிருந்து அழிந்து மண்மேடுகளாயின. மக்களை அடிமையாக்கி, கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர். அஸ்தெக்கு பேரரசும், அதன் தொன்மையான நாகரிகமும் மறைந்தன.”
படையெடுப்பு வெறும் ஆட்சியில் மாத்திரம் மாற்றத்தை கொண்டுவரவில்லை. ஸ்பானியர்கள் புதிய மதத்தை, அதாவது கத்தோலிக்க மதத்தை கத்தி முனையில் மெக்சிகாஸ் மக்களிடம் திணித்தார்கள். கத்தோலிக்க மதம், அஸ்தெக்குகளின் இரத்த வெறிபிடித்த, உருவ வழிபாட்டையும் எல்லா வகையான பொய் மத பழக்கவழக்கங்களையும் முற்றிலும் நீக்குவதற்கு பதிலாக அஸ்தெக்கு மதத்தோடு அதுவும் இணைந்துகொண்டது. டெபெயாக் மலையில் வணங்கப்பட்டு வந்த டொனான்ட்ஸின் என்ற பெண் தெய்வத்திற்கு பதில் குவாடலூப்பின் கன்னி மேரியை வைத்துவிட்டார்கள். முன்பு டொனான்ட்ஸினை வழிபட்ட அதே இடத்தில் குவாடலூப்புக்கு ஆலயம் எழுப்பியிருக்கிறார்கள். (இந்த ஆலயம் எழுந்துள்ள இடத்தில் கன்னி மரியாள் தரிசனம் அளித்ததாக சொல்கிறார்கள்.) இப்போது கன்னி மரியாளுக்காக திருவிழா எடுக்கும்போது முன்னாள் மத நடன தாளங்களுக்கு ஏற்ப பக்தர்கள் ஆடுகிறார்கள். போதாகுறைக்கு ஆலயத்திற்கு முன்பு ஆடுவதுதான் இன்னும் கொடுமை!
எதிர்நீச்சல் போட்டு கரைசேர்ந்தார்களா?
அஸ்தெக்கு பேரரசு மறைந்து ரொம்ப காலம் ஆனாலும், அதன் தாக்கம் இன்றும் உள்ளது. நாகுதல் என்ற அஸ்தெக்கு மொழியிலிருந்து “சாக்லேட்,” “டுமாட்டோ,” “சில்லி” போன்ற வார்த்தைகளை ஆங்கில மொழி தத்தெடுத்தது. மேலும், மெக்சிகோவின் மக்கள் தொகையில், படையெடுத்து வந்த ஸ்பானியர்களின் வம்சத்தினரும், பல்வேறு இனத்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.
சில பழங்குடியினர் மொழி, பழக்கவழக்கங்கள் போன்ற தங்கள் முன்னோர்களது கலாச்சாரங்களை கட்டிக்காக்கப் பாடுபடுவதால், அந்தப் பழம் பெரும் பண்பாடு இன்றும் மெக்சிகோவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. மெக்சிகோ குடியரசில் 62 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர் உள்ளனர். 68 கிளை மொழிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இன்ஸ்டிட்யூடோ டி எஸ்டாடிஸ்டிகா ஜியாகரஃபியா இன்ஃபார்மேட்டிகா (தேசிய புவியியல் மற்றும் கணக்கியல் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் கழகம்) சமீபத்தில் எடுத்த சுற்றாவின்படி, 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஏதாகிலும் ஒரு பண்டைய மொழியைப் பேசுகிறார்கள். 9.2 கோடி மக்கள் தொகையில் இவர்களது எண்ணிக்கை சுமார் 7 சதவிகிதம். நேஷனல் ஜியோகரஃபிக் பத்திரிகை இவ்வாறு கூறியது: “அந்நியர்களின் குடியேற்றம், சர்வாதிகாரம், புரட்சி என்று எத்தனையோ இன்னல்களை எதிர்ப்பட்டு, ஒடுக்கப்பட்டாலும் தங்கள் மொழிகளையும், பாரம்பரியங்களையும் காத்துக்கொண்டார்கள். சுயநாடு கிடைக்கும் என்ற தளராத நம்பிக்கையோடு இருந்தார்கள்.”
பெருமையோடு வாழ்ந்த அஸ்தெக்குகளின் வாரிசுகள் பலர் இன்று வறுமையில் வாடுகிறார்கள். வயிற்றுப்பாட்டுக்காக சிறு வயல்களில் மாடாய் உழைத்து ஓடாய் தேய்கிறார்கள். கல்விவசதி அவ்வளவாக இல்லாத புறநகர் பகுதிகளில் நிறையப் பேர் வசிக்கிறார்கள். எனவேதான் பெருவாரியான ஆதி மெக்சிகன் மக்களால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை. இவர்களது இந்த அவலநிலையும், மெக்சிகோ, மத்திய அமெரிக்கா முழுவதிலும் வாழும் பழங்குடி மக்களின் நிலையும் ஒன்று. இவர்களுக்காக உரிமைக்குரல் எழுப்பப்படுகிறது. குவாதமாலாவை சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற ரிகோபர்டா மென்ச்சூ எழுச்சிக்கொள்ள செய்யும் அழைப்பைவிடுக்கிறார்: “இனத்தொகுதிகள், [அமெரிக்க] இந்தியர்கள், அமெரிக்க கலப்பினத்தவர்கள், மொழி தொகுதிகள், ஆண்கள், பெண்கள், அறிவாளிகள், பேதைகள் என்ற எல்லா முட்டுக்கட்டைகளையும் நாம் தகர்த்தெறிவோமாக!”
அஸ்தெக்குகளின் அன்றைய அவல நிலையும் இன்றைய அவலநிலையும் நம் இருதயத்தை வேதனையால் கனக்கச்செய்கிறது. ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்ற உண்மைக்கு இவர்களது நிலைமை மற்றொரு உதாரணம். (பிரசங்கி 8:9) உலகிலுள்ள கோடானுகோடி ஏழை மக்களின், சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் வரவேண்டுமென்றால் வெறுமனே உணர்ச்சியைத் தட்டி எழுப்புகிற பேச்சும், அரசியல்வாதிகளின் சொக்கவைக்கும் பேச்சும் போதாது. அதனால்தான் நாகுதல் மொழியைப் பேசும் எண்ணற்ற மக்கள், உலகளவில் புதியதோர் ஆட்சி அல்லது “ராஜ்யம்” வருகிறது என்று பைபிள் தரும் நம்பிக்கையை ஆரத்தழுவிக் கொண்டுள்ளனர்.—தானியேல் 2:44; “நாகுதல் பேசும் மக்களுக்கு நான் சந்தோஷமாக சத்தியத்தை சொல்லித்தருகிறேன்” என்ற தலைப்பில் இதே பக்கத்திலுள்ள கட்டத்தைக் காண்க.
கத்தோலிக்க மதமும், அஸ்தெக்குகளின் புராண மதமும் கலந்த ‘கூட்டு’ மதத்தையே நாகுதல் பேசும் மக்கள் பின்பற்றுகிறார்கள். இம்மதம் தங்கள் கலாச்சாரத்தின் பாகம் என்று நினைத்து, பாதுகாக்க முற்படுகிறார்கள் போலும். அதனால்தான் பழங்குடி மக்களுக்கு பைபிளை சொல்லித்தருவதை சிலர் எதிர்க்கிறார்கள். ஆனால் பைபிள் செய்தியை உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களோ மூடநம்பிக்கைகளிலிருந்தும், மதங்களின் பொய்புரட்டுகளிலிருந்தும் நீங்கலாகி உள்ளனர். (யோவான் 8:32) வரவிருக்கும் அழிவிலிருந்து எப்படி உண்மையில் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஆயிரக்கணக்கான அஸ்தெக்கு வாரிசுகளுக்கு பைபிள் அளிக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a “மெசோ-அமெரிக்கா” என்பது, “மத்திய மெக்சிகோவிலிருந்து தெற்கிலும் கிழக்கிலும் விரிவடைந்து, குவாதமாலா, பெலிஸ், ஹோண்டுராஸ், நிகாரகுவா ஆகியவற்றின் பகுதிகளையும் உள்ளடக்கிய” நிலப்பரப்பை குறிக்கிறது. (தி அமெரிக்கன் ஹெரிட்டேஜ் டிக்ஷ்னரி) மெசோ-அமெரிக்க நாகரிகம் என்பது, “மெக்சிகோவிலும், மத்திய அமெரிக்காவிலும் பின்னிப்பிணைந்து உருவாகிய பழம்பெரும் பண்பாட்டை” குறிக்கிறது. “16-ம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் வந்து, நாட்டை கைப்பற்றுவதற்கு முன்பே இந்நாகரிகம் செழித்தோங்கியிருந்தது.”—என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா.
[பக்கம் 20-ன் படம்/பெட்டி]
“நாகுதல் பேசும் மக்களுக்கு நான் சந்தோஷமாக சத்தியத்தை சொல்லித்தருகிறேன்”
நான் பிறந்தது மெக்சிகோவிலுள்ள சான்டா மாரியா டெக்வான்நுல்கோ என்ற சின்ன ஊரில். இது மெக்சிகோ நகரிலிருந்து வெறும் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு மலைப்பிரதேசம். அழகும் பசுமையும் கொஞ்சிக்குலாவும் இந்த இடத்தில் மக்கள் மலர்களை பயிரிட்டு பிழைப்பு நடத்துகிறார்கள். அறுவடை சமயத்தில் எங்குப் பார்த்தாலும் வண்ண வண்ண பூக்களின் மாநாடுகள் நடக்கும். அதை பார்க்க கண் கோடி வேண்டும். சான்டா மாரியாவில் முன்பெல்லாம் எல்லாரும் நாகுதல் என்ற அந்தக் காலத்து மெக்சிகோ மொழியை பேசுவார்கள். எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது, அடையாளத்திற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் நாகுதல் மொழியில் ஒரு பெயர் இருக்கும். என் வீட்டின் பெயர் ஆச்சிசாக்பா, அதன் அர்த்தம், “நீர் சலசலத்து ஓடுகிற இடம்.” என் வீட்டு விலாசத்தை விளக்குவதற்காக, அக்கம் பக்கத்து வீட்டுப்பெயர்களை எல்லாம் சொல்வேன். இன்றும்கூட நிறைய வீடுகளுக்கு பெயர் இருக்கிறது. 1969-ல் நான் ஸ்பானிய மொழியைக் கற்றேன். அப்போது எனக்கு 17 வயதிருக்கும். நாகுதல் மொழி இனிய மொழி. ஆனால் இந்த மொழியை வயதான கிராம மக்கள் மாத்திரம் பேசுகிறார்கள். இன்றைய இளம் தலைமுறைக்கு இம்மொழி தெரியவில்லை.
என் கிராமத்தில் நான் மாத்திரம் யெகோவாவின் சாட்சிகளோடு படித்தேன். திடீரென்று, என்னையும் என் பிள்ளைகளையும் ஊரைவிட்டே வெளியேறும்படி கிராம மக்கள் எல்லாரும் சொன்னார்கள். கத்தோலிக்க சர்ச்சுக்கு வழக்கமாக கொடுக்கிற காணிக்கையைக் கொடுக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள். அதற்கு நான் பணியவில்லை. உறவினர்கள் எல்லாரும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு, என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள். என் கிராமத்தில் எனக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்தாலும், டிசம்பர், 1988-ல் முழுக்காட்டுதல் எடுத்துவிட்டேன். என் மூன்று மகள்களும் கடவுளுக்கு முழுநேர சுவிசேஷ ஊழியம் செய்கிறார்கள். என் மகன் முழுக்காட்டுதல் எடுத்துவிட்டான். இதற்கெல்லாம் யெகோவாவுக்கு நன்றி சொல்லிமாளாது. சான்டா மாரியாவில் சந்தோஷமாக நற்செய்தியை பிரசங்கிக்கிறேன். வயதானவர்களுக்கு நாகுதல் மொழியில் பிரசங்கிக்கிறேன். எல்லா இன மக்களிடத்திலும் கருணை காட்டுகிற, அன்பைப் பொழிகிற யெகோவா தேவனை தொடர்ந்து சேவிக்க உறுதிபூண்டிருக்கிறேன்.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 17-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அமெரிக்காவிலும் உலகிலும் தோன்றிய சில முக்கிய பண்பாடுகளின், நடந்த நிகழ்ச்சிகளின் ஒப்பீடு காலவரிசை
பொ.ச.மு. 1200 முதல் பொ.ச. 1550 வரை
ஸ்பானிய ஒடுக்கு விசாரணை மன்றம்
1500
ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம்
அஸ்தெக்கு
“கிறிஸ்தவ” சிலுவைப்போர்கள்
தால்டெக்
1000
பைசாண்டியம்
500 பொ.ச.
டெயொடிவெகான்
ஆதி கிறிஸ்தவம்
ரோமானிய
ஜாபோடெக்
கிரேக்க
எகிப்திய
பொ.ச.மு. 500
மாயா
ஆல்மக் அசீரிய
1000
[பக்கம் 18-ன் படம்/வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அஸ்தெக்கு பேரரசின் எல்லை
மெக்சிகோ
தெனோசிட்டிலான்
குவாதமாலா
[படம்]
இன்று, தெனோசிட்டிலான் என்ற புகழ்பெற்ற மாநகர் மெக்சிகோ நகருக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கிறது
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 15-ன் படம்]
அஸ்தெக்குகளின் காலண்டர்
[பக்கம் 19-ன் படம்]
அஸ்தெக்குகள் சூரியனுக்கு எழுப்பிய டெயொடிவெகான் பிரம்மீடை வழிபட்டார்கள்
[பக்கம் 15-ன் படங்களுக்கான நன்றி]
சுவரோவியம் பக்கங்கள் 15-16: “Mexico Through the Centuries,” original work by Diego Rivera. National Palace, Mexico City, Mexico
[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]
கழுகும் கலையும் பக்கம் 18: “Mexico Through the Centuries,” original work by Diego Rivera. National Palace, Mexico City, Mexico