மெக்சிக்கோ நகரம்—வளர்ந்துவரும் ஓர் இராட்சதனா?
மெக்சிக்கோவிலுள்ள விழித்தெழு! நிருபர்
“மெக்சிக்கோ நகரம் ஓர் இராட்சதன், அது வியப்பூட்டும் வண்ணம் இன்னமும் இயங்குகிறது,” என்றார் மெக்சிக்கோ நகர கட்டிட கலைஞர் டியோடோரோ கோன்ஸாலெஸ் டி லியோன். தேசிய புவியியல் (ஆங்கிலம்) புத்தகம் இதனை “ஓர் அச்சந்தரும் பேருருவம்” என்றழைத்தது. சுமார் 30 ஆண்டுளுக்கு முன்பாக வாழ்ந்த கார்மன் என்பவர் கருத்துபடி “இது எவ்வாறு மகிழ்ச்சியாயிருப்பது என்றும் வாழ்க்கையின் எளிமையான காரியங்களை அதாவது, என்சில்லாதாஸ், டாமெல்ஸ், டார்ட்டில்லாஸ் மற்றும் மோல் போன்ற அவர்களுக்கு பிரியமான உணவு வகைகளை எவ்வாறு அனுபவிப்பதென்றும் அறிந்த தாழ்மையுள்ள மக்களை கொண்ட ஓர் அமளியான நகரம்.”
மெக்சிக்கோ நகரம் சுமார் 1,50,00,000 மக்கட் தொகயை கொண்டது. தற்போது இது உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது, ஆனால், பல நூற்றாண்டுகளாக முன்னேறிவரும் தலைநகரமாக இருந்துவந்திருக்கிறது.a இது முதன்முதலாக சுமார் 1325-ல் டெனோக்டிட்லான் என ஸ்தாபிக்கப்பட்டு அஸ்டெக் பேரரசின் தலைநகரமாயிற்று. இந்த அஸ்டெக் மக்கள் டெக்ஸ்கோகோ ஏரிக்குள்ளாக ஒரு தீவினுள் குடியமர்ந்தப்போது இந்த நகரத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் நகரத்தை விஸ்தரிப்பதற்காக அவர்கள் அந்த ஏரியை மண்ணால் நிரப்பினார்கள், ஆனால் அது கால்வாய்களை கொண்ட ஒரு நகரமாக இருந்தமையால் எப்பொழுதுமே தண்ணீரால் சூழப்பட்டிருந்தது. 1519-ல் ஸ்பெய்ன் நாட்டவர் அங்கு குடிவந்தபோது அது பேரழகுள்ளதாகவும் நேர்த்தியானதாகவும் மற்றும் சுமார் 2,00,000 முதல் 3,00,000 குடிமக்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் நகரமாகவும் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள்.
மாறுபட்ட இயல்புடைய நகரம்
மெக்சிக்கோ நகரம் மற்ற பெரிய நகரங்களைப் போன்றே வறுமை குற்றச்செயல் போன்ற இருண்ட மறுபக்கத்தையும் கொண்டிருக்கிறது, ஆனால் மற்ற பல குறிப்புகளின் நோக்குநிலையில் அது அதிக கவர்ச்சியுள்ளது. அதன் இயல்புமீறிய வளர்ச்சி “தாறுமாறான” என்ற அடைப்பெயரை அதற்கு பெற்று தந்துவிட்டது, எனினும் அதற்கு நேர்மாறாக நகரத்தின் மத்தியில் உலகின் மிகப் பெரிய பூங்காக்களில் ஒன்று, சார்புல்டிபெக் பூங்கா என்றுள்ளது. அதன் நிலப்பரப்பு 1,600 ஏக்கர்கள். அது காடுகளையும் பல்வேறு ஏரிகளையும் உணவகங்களையும் பொருட்காட்சிச்சாலைகளையும் கொண்டிருக்கிறது; மற்றும் அங்கே பல்வேறு வகையான அறிவு வளர்ச்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஓர் ஏரியின் கரையோரங்களிலுள்ள இயற்கையான மேடையமைப்பில் வருடந்தோறும் வழங்கப்படக்கூடிய டிக்காய்கோவ்ஸ்கையின் “அன்னம் ஏரி” கூட்டு நடனம் ஓர் அழகிய பாரம்பரியம். வார இறுதி நாட்களில் நகரத்தை விட்டு வெளியே செல்லமுடியாத நிலையிலிருப்பவர்களுக்கு அந்தப் பூங்காவானது அவர்களுடைய ஓய்வுக்கும் பொழுபோக்கிற்குமான புகலிடமாக ஆகிவிடுகிறது.
நியு யார்க் அல்லது சிக்காகோவுடன் போட்டியிடுவது அரிதாக இருந்தபோதிலும் மெக்சிக்கோ நகரமானது ராஸ்காகிலோஸ் அல்லது வானளாவிய கட்டிடங்களைக் கொண்டிருக்கிறது. 1956-ல் கட்டி முடிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க கோபுரம், 44 அடுக்கு மாடி கட்டிடம், நில நடுக்கங்களை தாங்கி நிற்கும் விதத்தில் அமைக்கப்பட்ட வடிவமைப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். நிலநடுக்கஞ்சார்ந்த அசைவுகளிலிருந்து கட்டிடத்தை பாதுகாப்பதற்கு திட்டமிடப்பட்ட 361 நேரடி ஆதாரத்தூண்கள் மீது இது கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டிடத்தின் 40 மற்றும் 41-வது அடுக்கின் மீது அமைந்துள்ள உணவகத்திலிருந்து ஒருவர் அந்த நகரத்தை வியந்துபாராட்டலாம், விசேஷமாக இரவிலே அதன் மிகத் திரளான விளக்குகள் கருப்பு வெல்வெட் போன்ற பின்னணிக்கு எதிரே மின்னுகின்றன. அந்த நகரின் மிகப் பெரிய வானளாவிய கட்டிடமான மெக்சிக்கோவின் உலக வாணிக மையம் இன்னும் முற்றுப்பெறவில்லை. அது 54 அடுக்கு மாடிகளை கொண்டது, அது உலக வாணிக தொடர்பு அலுவலகங்களையும் அதோடு மற்ற பல வசதிகளையும் கொண்டதாயிருக்கும்.
மெக்சிக்கோ நகரமானது, அந்தளவுக்கு வளர்ந்து பரவிவிட்டதால் ஒரு காலத்தில் அதனுடைய நகருக்கு புறம்பேயிருந்த பெனிட்டோ ஜுய்ரெஸ் சர்வதேச விமான நிலையம் இப்பொழுது ஏறத்தாழ அதன் மையப் பகுதியிலிருக்கிறது. உலகின் அதிக போக்குவரத்து மிகுந்த விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் சுமார் பத்து லட்சம் மக்களை கையாளுகிறது.
மெக்சிக்கோ நகரில் அதன் வேறுபாடுகள் அதிக முனைப்பானது. மிகப் பெரிதும் மற்றும் சொகுசு மாளிகைகளும் ஒரு சிலருக்கேயுரிய விலையுயர்ந்த உணவகங்களும் கவர்ச்சியான கூட்டுரிமை இல்லங்களும் சிறப்பு அங்காடி மையங்களும், இருண்ட மங்கலான குடிசைகளில் காணப்படுகிற ஏழ்மையை தள்ளிப்போடுகிறது. எனினும் உலகில் உள்ள மற்ற பெரிய நகரங்களை போன்றிராமல் இரவின் பிந்திய நேரங்களிலும் தெருக்கள் மக்கள் நடமாட்டத்தால் நிரம்பியுள்ளது.
பெரிய நகரங்களில் பிரச்னைகள்
மெக்சிக்கோ நகரமானது எப்பொழுதும் விரிவடையும் ஒரு எண்காலி பூச்சிப் போன்று இப்பொழுது 1,000-க்கும் மேற்பட்ட சதுர கிலோமீட்டர்களை தன்வசமாக்கிக் கொண்டுள்ளது. மற்றும் கூட்டரசு அமைப்புமுறை சார்ந்த மாவட்டம் என்றழைக்கப்பட்ட அனைத்தையும், அதோடு மெக்சிக்கோ தனியரசு நாட்டின் ஒரு பகுதியையும் தன்னுடைமையாக்கிக் கொண்டுள்ளது. முன்னர் சுயேச்சையாக இருந்த அநேக கிராமங்களும் புறநகரங்களும் இப்பொழுது நகரின் எல்லைக்குள்ளாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
இயல்பாகவே, இத்தகைய சுற்றளவுகளைக்கொண்ட நகரம் மிகப் பெரிய பிரச்னைகளை எதிர்ப்படுகிறது. பிரதானமான ஒன்று ஜனத்தொகை பெருக்கமாகும். அத்துடன் இணைந்தது தூய்மைக்கேடு, குடியிருப்பு வீடுகள் இல்லாமை, வாழ்க்கையின் அத்தியாவசியமான பொருட்களின் பெரும் தட்டுப்பாடு பிரச்னைகள் அதோடுகூட தொடர்ந்து வளரும் குற்றச்செயல் விகிதம் ஆகியவை. நகரின் பிறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியில் தொடர்ச்சியான கல்வி திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மெக்சிக்கோவில் பெரிய குடும்பங்கள் பண்பாட்டு மரபாகவும், வீரியமுள்ள ஆண்களுக்கும் கருவளமுள்ள பெண்களுக்கும் சான்றுகளாகவும் கருதப்படுகிறது. கூடுதலாக, அநேக மக்கள் நாட்டுப்புற பகுதிகளிலிருந்து மேம்பட்ட வாழ்க்கைக்காக நகரத்துக்குள் பிரவேசிக்கின்றனர். 1985-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ஆயிரக்கணக்கானோரை நகரிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தியபோதிலும், ஜனத்தொகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. வேலையும் மேம்பட்ட பிழைப்புக்கு நம்பிக்கையுமுள்ள இடங்கள் எங்கோ, அங்கே மக்கள் குடியேறுகிறார்கள்.
இந்த “இராட்சதன்” சுவாசிக்கக்கூடுமா?
மெக்சிக்கோ நகரில் காற்று மாசுப்படுதல் கடந்த பத்தாண்டுகளின்போது மிகக் கடுமையானதாக ஆகிவிட்டது. 1960-களில் நகரத்தின் ஒரு பகுதி “மாசுமறுவற்ற நிலப்பகுதி” என்றழைக்கப்பட்டது. இப்பொழுது மெக்சிக்கோ நகரின் எந்த ஒரு பகுதியும் மாசுமறுவற்ற ஒன்றல்ல. செய்தி மூலங்களில் எச்சரிக்கைகள் ஒலிக்கப்படுகின்றன. “மெக்சிக்கோ பள்ளத்தாக்கில் காற்று மாசுப்படுதல் ஆபத்தான எல்லைகளை எட்டிவிட்டது” என்று ஒரு விஞ்ஞான இதழ் குறிப்பிட்டது. டைம் பத்திரிகையின்படி: “30 லட்சம் கார்களும் மற்றும் 7,000 டீசல் பேருந்துகளும் அவற்றில் பல பழையதும் பழுதுபார்க்கமுடியாததுமான வாகனங்கள் காற்றினுள் தூய்மைக்கேட்டை வெளியேற்றுகின்றன. 50 சதவிகிதத்துக்கும் அதிகமான எல்லா மெக்சிக்கன் வாணிக முயற்சியையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய சுமார் 1,30,000-க்கும் மேற்பட்ட அருகிலுள்ள தொழிற்சாலைகளும் அவ்வாறே செய்கின்றன. தினந்தோறும் ஏற்படும் மொத்த இரசாயன காற்று மாசுப்படுத்தல் 11,000 டன்கள் அளவாயிருக்கிறது. வெறும் சுவாசித்தல்தானே நாளொன்றுக்கு இரண்டு பாக்கட் சிகரெட்டுகள் புகைப்பதற்கு சரிசமமாய் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.”
நிலைமை படுமோசமடைகிறது. அக்டோபர் 12, 1989-ன் எல் யுனிவர்சல் செய்தித்தாள் உயிரின வாழ்க்கைச் சூழல் சோதனை நடத்தும் தன்னாட்சியுரியை நிறுவனத்தின் இயக்குநர் பின்வருமாறு சொன்னதாக குறிப்பிட்டது: “மெக்சிக்கோ நகரத்து தூய்மைக்கேடு விகிதம் அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. ஏனெனில் தலைநகருக்குரிய எல்லைப் பகுதியிலிருக்கும் ஒவ்வொரு நபரும் தினமும் சராசரியாக 580 கிராம் தீங்கிழைக்கும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்கின்றனர்.” ஒவ்வொரு ஆண்டும் நாற்பது லட்சம் டன்களுக்கும் மேலான மாசுப்பொருட்கள் நகரில் வெளியேற்றப்படுகின்றன.
சமீபத்தில், தூய்மைக்கேட்டை முறியடிக்க சில தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான கார்கள் ஒவ்வொரு நாளும் நகரில் ஓட்டப்படுவதை தடைச் செய்யும் திட்டம் வரையப்பட்டது ஏனெனில் ஓர் அரசாங்க அறிக்கையின்படி, “பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்கள் 9,778.3 டன்கள் அளவான மாசுப்பொருட்களை அனுதினமும் உண்டாக்குகின்றன,” அவற்றில் 7,430 டன்கள் தனியாருக்கு சொந்தமான மோட்டார் வாகனங்களால் ஏற்படுகின்றன. தாங்கள் வேலைக்கு அல்லது வேறு எங்காவது செல்லும்போது ஒன்றுகூடி ஒரே வாகனத்தில் சேர்ந்து செல்வதன் மூலம் தாங்களே மனமுவந்து தங்கள் கார்களின் உபயோகங்களை குறைத்துக்கொள்ளும்படி ஏற்கெனவே அழைப்புவிடப்பட்டிருக்கிறது, ஆனால் இது வெற்றிபெறவில்லை. நகர அரசு என்ன செய்தது?
இப்பொழுது “காரில்லாமல் ஒரு நாள்” என்ற ஒரு திட்டத்தின் மூலம் எல்லா தனியார் வாகனங்களும் வாரம் ஒரு நாள் சுற்றுமுறையின் மூலம் அவர்களுடைய பதிவேடு அட்டையின் கடைசி எண்ணிக்கையின் பேரில் அல்லது அதனுடைய நிறத்தின் பேரில் சார்ந்து தடைச்செய்யப்படுகிறது. அப்படியானால் நகரில் உள்ள முப்பது லட்சம் தனியார் கார்களில் 20 சதவிகிதம் தினமும் உபயோகத்திலிருப்பதில்லை. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் வெப்பஞ்சார்ந்த எதிர்மாற்றத்தின் விளைவுகளை தடுப்பதற்கான முயற்சியில் வெறும் குளிர்காலத்துக்கு மட்டுமே பொருந்தினது, ஆனால் இப்பொழுதோ அதிகாரிகள் அதை நிரந்தரமாக கடைப்பிடிக்க முயற்சி செய்கிறார்கள். இதற்கு கீழ்ப்படியாதவர்கள் மீது கடும் அபராதமும் அதோடு கைப்பற்றப்பட்ட கார்களை திரும்ப மீட்பதற்கு கடினமான வழிமுறைகளையும் கொண்டிருக்கிறது. இத்தகைய கடுமையான சட்டவிதிமுறைகள் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதற்கு பெரும்பாலான ஓட்டுநர்களை சம்மதிக்கச் செய்திருக்கிறது.
எடுக்கப்படும் மற்றொரு நடவடிக்கை கல்லெண்ணையில் ஈயத்தின் அளவைக் குறைத்து அதன் தரத்தை மேம்படுத்துவதாகும். அதோடு இப்பொழுது எல்லா வாகனங்களும் தூய்மைக்கேடு வெளியேற்றத்துக்காக, அவ்வப்போது பரிசோதிக்கப்படுவதை தேவைப்படுத்துகின்றன. கூடுதலாக, தொழிற்சாலைகள் தூய்மைக்கேடு எதிர்ப்பு அமைப்புமுறைகளை கொண்டிருக்க வேண்டுமென புதிய சட்டங்கள் கோருகின்றன. இந்தத் தேவைக்கு சில தொழிற்சாலைகள் இணங்காததன் காரணமாக மூடப்பட்டுவிட்டன. இந்த நடவடிக்கைகள் தூய்மைக்கேட்டு பிரச்னையை சிறிது தளர்த்தியிருக்கிறது என்றாலும் அது இன்னமும் தீர்க்கப்படவில்லை. உலகத்தின் மற்ற இடங்களைப் போன்றே மெக்சிக்கோவுக்கும் அதன் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு தேவைப்படுகிறது.
சீக்கிரத்திலே, ஒரு நாள், கடவுளுடைய பரலோக அரசாங்கத்தினுடைய ஆட்சியின் கீழ் மனிதவர்க்கமானது தன்னுடைய வளங்களை ஞானமாக பயன்படுத்தும், அப்போது எல்லா மானிடரும் ஜன நெருக்கடியான நகரங்களை அல்ல, ஆனால் சந்தோஷமான வாழ்க்கைக்கு தேவைப்படக்கூடிய எல்லாவற்றோடும் திறந்த வெளியிடங்களையும் அனுபவித்து களிப்பர். உபசரிக்கும் மனப்பாங்குடைய மெக்சிக்கோ மக்களின் வீறழகு வாய்ந்த பன்னிற மணி ஒட்டு கலை உட்பட அந்த நகரின் அநேக நற்காரியங்களை அனுபவித்துக் களிக்கும் ஒருவர் இதற்கிடையில் மெக்சிக்கோ நகரத்திலுள்ள ஜன நெருக்கடிகளையும் அசெளகரியங்களையும் சகித்துக்கொள்வதை தவிர வேறு தெரிவு ஏதுமில்லை.—வெளிப்படுத்துதல் 11:18; 21:1-4. (g91 1/8)
[அடிக்குறிப்புகள்]
a 1990-ன் தேசிய ஜனத்தொகை எண்ணிக்கை முன்பு எடுக்கப்பட்ட ஜனத்தொகை எண்ணிக்கைகளை விட அதிகமாயிருக்கிறது.
[பக்கம் 21-ன் படங்கள்]
மெக்சிக்கோ நகரில் வானளாவிய கட்டிடங்களும் போக்குவரத்தும்