தேவை அதிகமுள்ள இடங்களில் சேவைசெய்ய உங்களால் முடியுமா?
“ஐக்கிய மாகாணங்களில் நாங்கள் வசதியாக வாழ்ந்து வந்தோம்; ஆனால், அங்கிருந்த சுகபோக வாழ்க்கைப்பாணி எங்களையும் எங்களுடைய இரண்டு மகன்களையும் தொற்றிவிடுமோ எனப் பயந்தோம். நானும் என் மனைவியும் முன்பு மிஷனரிகளாக இருந்தோம்; அந்த எளிமையான, சந்தோஷமான வாழ்க்கையை மீண்டும் ருசித்து மகிழ விரும்பினோம்.”
அந்த ஆசையால் 1991-ல் ரால்ஃப்பும் அவரது மனைவி பாமும், தேவை அதிகமுள்ள இடங்களில் சேவைசெய்ய விரும்புவதாகப் பல கிளை அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதத் தீர்மானித்தார்கள். மெக்சிகோவில் ஆங்கில மொழி பேசுவோர் அதிகமிருக்கிற பிராந்தியத்தில் பிரஸ்தாபிகள் உடனடியாகத் தேவைப்படுவதாக அந்நாட்டுக் கிளை அலுவலகத்திலிருந்து அவர்களுக்குக் கடிதம் வந்தது. அந்தப் பிராந்தியம் உண்மையிலேயே ‘அறுவடைக்குத் தயாராக இருக்கிறது’ எனக் கிளை அலுவலகம் குறிப்பிட்டிருந்தது. (யோவா. 4:35) ரால்ப்ஃபும் அவருடைய மனைவியும் 8, 12 வயதுகளில் இருந்த அவர்களுடைய இரண்டு மகன்களும், உடனடியாக அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு மெக்சிகோவுக்குக் குடிமாறிச் செல்வதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தார்கள்.
பரந்துவிரிந்த பிராந்தியம்
ரால்ஃப் சொல்கிறார்: “நாங்கள் ஐக்கிய மாகாணங்களிலிருந்து கிளம்புவதற்கு முன்பு அங்கிருந்த சில சகோதரர்களும் சகோதரிகளும் எங்களிடம், ‘வெளிநாட்டுக்குப் போவதெல்லாம் ரொம்பவே ஆபத்தானது!,’ ‘உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?,’ ‘ஆங்கில மொழி பிராந்தியத்திற்கு ஏன் போக வேண்டும், அங்குள்ளவர்கள்தான் ஆர்வம்காட்ட மாட்டார்களே!’ என்றெல்லாம் அக்கறையோடு சொன்னார்கள். இருந்தாலும், நாங்கள் மனதை மாற்றிக்கொள்ளவே இல்லை. ஏனென்றால், நாங்கள் தீர யோசித்துதான் அந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தோம். அதற்காகப் பல வருடங்கள் திட்டமிட்டிருந்தோம். பெரிய கடன்கள் வாங்காதபடி பார்த்துக்கொண்டோம், பணத்தைச் சேமித்து வைத்தோம், என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி பலமுறை குடும்பமாகப் பேசினோம்.”
முதலில், ரால்ஃப்பும் அவருடைய குடும்பத்தாரும் மெக்சிகோ கிளை அலுவலகத்திற்குப் போனார்கள். அங்கிருந்த சகோதரர்கள் முழு நாட்டின் வரைபடத்தையும் அவர்களுக்குக் காட்டி, “இதுதான் உங்கள் பிராந்தியம்!” என்று சொன்னார்கள். அந்தக் குடும்பத்தார் அயல் நாட்டினர் அதிகமிருந்த சான் மிகல் தே ஆயன்டே என்ற ஊரில் குடியேறினார்கள்; அது மெக்சிகோ நகருக்கு வடமேற்கில் சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவர்கள் சென்று மூன்று வருடங்களுக்குப் பிறகு, 19 பிரஸ்தாபிகளைக் கொண்ட ஓர் ஆங்கில சபை அந்த ஊரில் உருவானது. அதுதான் மெக்சிகோ நாட்டின் முதல் ஆங்கில சபையாக இருந்தது; ஆனால், செய்வதற்கு இன்னும் ஏராளம் இருந்தது.
ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் பேர் மெக்சிகோவில் வசிக்கிறார்கள். அதுபோக, மெக்சிகோ நாட்டவரில் ஆங்கிலம் தெரிந்த டாக்டர், வக்கீல் போன்றவர்களும் மாணவர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். ரால்ஃப் சொல்கிறார்: “நிறைய வேலையாட்கள் வேண்டுமென நாங்கள் ஜெபம் செய்தோம். குடிமாறி வரும் எண்ணத்தோடு ‘உளவு பார்க்க’ இங்கு வருகிற சகோதர சகோதரிகள் தங்குவதற்காக எங்கள் வீட்டில் எப்போதுமே ஒரு படுக்கை அறையை ஒதுக்கியிருந்தோம்.”—எண். 13:2, பொ.மொ.
ஊழியத்தை அதிகரிக்க வாழ்க்கையை எளிமையாக்கினார்கள்
சீக்கிரத்திலேயே, ஊழியத்தில் அதிகமாக ஈடுபட விரும்பிய இன்னும் நிறையச் சகோதர சகோதரிகள் அங்கு வந்தார்கள். ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பில், கேத்தி தம்பதியரும் அவர்களில் அடங்குவர். அவர்கள் பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படுகிற இடங்களில் ஏற்கெனவே 25 வருடங்கள் சேவை செய்திருந்தார்கள். அவர்கள் ஸ்பானிய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்தார்கள்; ஆனால், சாபாலா ஏரிக்கரையில் அமைந்திருந்த ஆகிகிக் என்ற ஊருக்குக் குடிமாறிய பிறகு தங்களுடைய மனதை மாற்றிக்கொண்டார்கள்; ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஓய்வுபெற்றோருக்கு அந்த ஊர் நிம்மதியின் புகலிடமாக விளங்குகிறது. பில் சொல்கிறார்: “ஆகிகிக் ஊரில், சத்தியத்தைத் தெரிந்துகொள்ள விரும்பும் ஆங்கில மொழியினரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நாங்கள் மும்முரமாக இறங்கினோம்.” அந்த ஊருக்குச் சென்று இரண்டு வருடங்களில் பில்லும் கேத்தியும் ஓர் ஆங்கில சபை உருவாவதைக் காணும் பாக்கியத்தைப் பெற்றார்கள்; அது மெக்சிகோ நாட்டின் இரண்டாவது ஆங்கில சபையாக இருந்தது.
கனடாவைச் சேர்ந்த கென், ஜோயன் தம்பதியர் தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கிக்கொண்டு ஊழியத்தில் அதிக நேரம் செலவிட விரும்பினார்கள். ஆகவே, அவர்களும் மெக்சிகோவுக்குக் குடிமாறினார்கள். “நாள் கணக்கில் வெந்நீரோ, மின்வசதியோ, தொலைபேசி இணைப்போ இல்லாத இடத்தில் வாழப் பழகுவதற்குக் கொஞ்சம் காலம் எடுத்தது” என்கிறார் கென். ஆனாலும், ஊழியத்தில் அவர்கள் அளவிலா ஆனந்தத்தை அடைந்தார்கள். சீக்கிரத்திலேயே கென் உதவி ஊழியராக நியமிக்கப்பட்டார், இரண்டு வருடங்களுக்குப் பிறகு மூப்பராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில், அவர்களுடைய மகள் பிரிட்டனிக்கு, ஒருசில இளைஞர்களைக் கொண்ட சிறிய ஆங்கில சபையில் இருப்பது கஷ்டமாக இருந்தது. என்றாலும், அவள் ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட ஆரம்பித்த பிறகு அந்த நாடு முழுவதிலும் அவளுக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.
ஐக்கிய மாகாணங்களிலுள்ள டெக்ஸஸைச் சேர்ந்த பேட்ரிக், ராக்சன் தம்பதியர், மிஷனரிகளுக்குரிய ஆங்கில மொழி பிராந்தியம் ஒன்று அருகிலேயே இருந்ததை அறிந்து சந்தோஷப்பட்டார்கள். “வடகிழக்கு மெக்சிகோவில் உள்ள மான்டெர்ரி என்ற ஊரைப் பார்க்க போயிருந்தபோது, அங்குள்ளவர்களுக்கு உதவும்படி யெகோவா எங்களிடம் சொன்னதுபோல் உணர்ந்தோம்” என்கிறார் பேட்ரிக். அவர்கள் ஐந்தே நாட்களில் டெக்ஸஸிலிருந்த தங்களுடைய வீட்டை விற்றுவிட்டு அந்த ஊருக்கு வந்தார்கள். மெக்சிகோவில் பிழைப்பு நடத்துவது எளிதாய் இருக்கவில்லை; ஆனாலும், 17 சாட்சிகள் இருந்த ஒரு சிறிய தொகுதி இரண்டே வருடங்களில் 40 பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரு சபையாக வளர்ந்ததைக் காணும் சந்தோஷத்தை அவர்கள் பெற்றார்கள்.
ஊழியத்தில் அதிகம் ஈடுபடுவதற்காக வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்ட இன்னொரு தம்பதியர் ஜெஃப் மற்றும் டெப் ஆவர். அவர்கள் ஐக்கிய மாகாணங்களிலிருந்த தங்களுடைய பெரிய வீட்டை விற்றுவிட்டு மெக்சிகோவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்த கான்கூன் என்ற நகரிலுள்ள ஒரு சிறிய அபார்ட்மென்டில் குடியேறினார்கள். முன்பெல்லாம், அவர்கள் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த ஏ/சி மன்றங்களில் மாநாடுகளுக்காகக் கூடிவந்தார்கள். ஆனால் இங்கு குடிமாறிய பிறகு, திறந்தவெளி அரங்கங்களில் நடக்கிற ஆங்கில மாநாடுகளுக்குச் செல்ல குறைந்தது எட்டு மணிநேரம் பயணிக்க வேண்டியிருந்தது. என்றாலும், கான்கூனில் சுமார் 50 பிரஸ்தாபிகள் உள்ள ஒரு சபை உருவானதைக் காணும் ஆத்ம திருப்தியை அவர்கள் பெற்றார்கள்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் சிலரும்கூட ஆங்கில மொழி பிராந்தியத்தில் ஊழியம் செய்ய உதவினார்கள். உதாரணமாக, சான் மிகல் தே ஆயன்டே என்ற இடத்தில் முதன்முதலாக ஆங்கில சபை உருவாகியிருந்ததையும் மெக்சிகோ முழுவதும் அந்தச் சபையின் பிராந்தியமாய் இருந்ததையும் ரூபன் குடும்பத்தார் அறிந்தபோது அவர்கள் உடனடியாக உதவத் தீர்மானித்தார்கள். அதற்காக, அவர்கள் ஆங்கிலத்தைக் கற்க வேண்டியிருந்தது, வித்தியாசமான கலாச்சாரத்தோடு ஒத்துப்போக வேண்டியிருந்தது, ஒவ்வொரு வாரமும் கூட்டங்களுக்காக 800 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தது. ரூபன் சொல்கிறார்: “மெக்சிகோவில் அநேக வெளிநாட்டவருக்குச் சாட்சிகொடுக்கும் சந்தோஷத்தைப் பெற்றோம். அவர்கள் வருடக்கணக்காக இங்கு வாழ்ந்து வந்திருந்தாலும் முதன்முறையாகத் தங்களுடைய தாய்மொழியில் நற்செய்தியைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் கண்ணீர் மல்க தங்களுடைய நன்றியைத் தெரிவித்தார்கள்.” ரூபன் குடும்பத்தார், சான் மிகல் தே ஆயன்டேயில் இருந்த சபைக்கு உதவிய பிறகு மத்திய மெக்சிகோவிலுள்ள குவானாஹ்வாட்டோ ஊரில் பயனியர்களாக சேவை செய்தார்கள்; அங்கு, 30-க்கும் அதிகமான பிரஸ்தாபிகளைக் கொண்ட ஆங்கில சபையை உருவாக்க அவர்கள் உதவினார்கள். இன்று, அவர்கள் குவானாஹ்வாட்டோவுக்கு அருகிலுள்ள இராப்வாட்டோ என்ற ஊரில் ஆங்கில மொழி தொகுதியினருடன் சேர்ந்து சேவை செய்கிறார்கள்.
சந்திக்க முடியாதவர்களைச் சந்திக்கிறார்கள்
வெளிநாட்டவர் போக, மெக்சிகோ நாட்டவர் பலரும் ஆங்கிலம் பேசுகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் நற்செய்தியைச் சொல்வது மிகவும் கஷ்டம்; அவர்கள் பெரும்பாலும் பங்களாக்களில் வசிப்பதால், சாட்சிகள் கதவைத் தட்டும்போது அவர்களுடைய வேலைக்காரர்கள்தான் வருவார்கள். அப்படியே வீட்டுக்காரர்கள் வந்தாலும், செவிகொடுத்துக் கேட்க மாட்டார்கள்; ஏனென்றால், யெகோவாவின் சாட்சிகளை உள்ளூரில் உள்ள ஒரு சிறிய மதப் பிரிவினராக அவர்கள் நினைக்கிறார்கள். இருந்தாலும், அயல்நாட்டு யெகோவாவின் சாட்சிகள் அவர்களைச் சந்திக்கும்போது சிலர் கேட்கிறார்கள்.
மத்திய மெக்சிகோவிலுள்ள காரேடாரோ நகரைச் சேர்ந்த குளோரியாவின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் சொல்கிறார்: “ஸ்பானிய மொழி பேசும் சாட்சிகள் இதற்குமுன் என்னைச் சந்தித்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் சொன்னதை நான் கேட்கவே இல்லை. என்றாலும், என் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பிரச்சினைகள் வந்தபோது நான் மனமொடிந்துபோய், பிரச்சினைகளிலிருந்து வெளிவர உதவும்படி கடவுளிடம் கெஞ்சினேன். அதன் பிறகு சீக்கிரத்திலேயே, ஆங்கிலம் பேசும் ஒரு பெண்மணி என் வீட்டிற்கு வந்தார். ஆங்கிலம் பேசுவோர் யாரேனும் வீட்டில் இருக்கிறார்களா என்று அவர் கேட்டார். அவர் வெளிநாட்டவராக இருந்ததால், அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில், எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொன்னேன். அவர் செய்தியைச் சொல்ல ஆரம்பித்ததும், ‘இந்த அமெரிக்க பெண்ணுக்கு இங்கு என்ன வேலை?’ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு உதவும்படி கடவுளிடம் ஜெபித்திருந்தேன். ஆகவே, இந்த வெளிநாட்டவர் என்னுடைய வீட்டிற்கு வந்தது நான் செய்த ஜெபத்திற்குப் பதில்தானோ என்று யோசித்தேன்.” குளோரியா பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்; குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் சீக்கிரத்தில் நல்ல முன்னேற்றங்களைச் செய்து ஞானஸ்நானம் பெற்றார். இன்று, குளோரியா ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிறார்; அவருடைய கணவரும் மகனும்கூட யெகோவாவைச் சேவிக்கிறார்கள்.
ஊழியத்தில் அதிகம் ஈடுபடுவோருக்குக் கைமேல் பலன்
தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்யும்போது சவால்கள் வருவது உண்மைதான்; என்றாலும், அதனால் கிடைக்கும் பலன்கள் மிகுதியானவை. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரால்ஃப் சொல்கிறார்: “பிரிட்டன், சீனா, ஜமைகா, சுவீடன் ஆகிய நாட்டவருக்கும், கானாவைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களுக்கும்கூட நாங்கள் பைபிள் படிப்புகளை நடத்தினோம். அவர்களில் சிலர் இப்போது முழுநேர சேவை செய்கிறார்கள். கடந்த பல வருடங்களில், ஏழு ஆங்கில சபைகள் உருவானதை நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம். எங்களுடைய இரண்டு மகன்களும் எங்களோடு சேர்ந்து பயனியர் சேவையை ஆரம்பித்தார்கள், இப்போது அவர்கள் ஐக்கிய மாகாணங்களிலுள்ள பெத்தேலில் சேவை செய்கிறார்கள்.”
தற்போது, மெக்சிகோவில் 88 ஆங்கில சபைகளும் எண்ணற்ற சிறு தொகுதிகளும் உள்ளன. இத்தகைய அமோக வளர்ச்சிக்குக் காரணம்? மெக்சிகோவிலுள்ள ஆங்கில மொழியினர் அநேகர் யெகோவாவின் சாட்சிகளை அதற்குமுன் சந்தித்ததே இல்லை. உற்றார் உறவினரை விட்டுவிட்டு தொலைதூரம் வந்திருக்கும் இன்னும் சிலர், அவர்களிடமிருந்து எதிர்ப்பு வர வாய்ப்பில்லாததால் சத்தியத்தைக் காதுகொடுத்துக் கேட்டார்கள். மற்றவர்களோ பணியிலிருந்து ஓய்வுபெற்றிருந்ததாலும் ஆன்மீகக் காரியங்களுக்காக நேரம் ஒதுக்க முடிந்ததாலும் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார்கள். அதுமட்டுமல்ல, ஆங்கில சபைகளிலுள்ள மூன்றில் ஒரு பங்கினர் பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள்; இது சபையாரின் பக்திவைராக்கியத்துக்கும் அதிகரிப்புக்கும் பெருமளவு பங்களிக்கிறது.
உங்களுக்கும் ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன
உலகெங்குமுள்ள அதிகமதிகமான மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழியில் நற்செய்தியைச் சொல்லும்போது அவர்கள் செவிகொடுத்துக் கேட்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இளையோர், முதியோர், மணமானவர், மணமாகாதவர் என எண்ணற்ற சகோதர சகோதரிகள், ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான தேவை அதிகமுள்ள இடங்களுக்குச் செல்ல மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்; ஆன்மீகச் சிந்தையுள்ள இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளின் முன்மாதிரி நமக்கு உற்சாகமூட்டுகிறது. அவர்கள் பல கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டியிருப்பது உண்மைதான்; ஆனால், பைபிள் சத்தியங்களை ஏற்றுக்கொள்கிற நல்மனமுள்ள மக்களை அவர்கள் கண்டுபிடிக்கையில் அந்தக் கஷ்டங்களை மறந்து சந்தோஷத்தில் திளைக்கிறார்கள். உங்களுடைய நாட்டிலோ வெளிநாட்டிலோ தேவை அதிகமுள்ள இடங்களுக்குச் சென்று சேவைசெய்ய உங்களால் முடியுமா?a (லூக். 14:28-30; 1 கொ. 16:9) அப்படியானால், அபரிமிதமான ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.
[அடிக்குறிப்பு]
a தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 111-112-ஐப் பாருங்கள்.
[பக்கம் 21-ன் பெட்டி]
ஓய்வுபெற்ற சாட்சிகளின் சந்தோஷம் மற்றவர்களை ஈர்த்தது
பெரில் என்ற பெண் பிரிட்டனிலிருந்து கனடாவுக்குக் குடிபுகுந்தவர். அங்கே, பல பன்னாட்டு கம்பெனிகளில் மானேஜராகப் பணியாற்றினார். அதோடு, குதிரை சவாரி வீராங்கனையாக ஆனார். 1980-ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கனடா நாட்டுப் பிரதிநிதியாகக்கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓய்வுபெற்ற பிறகு, மெக்சிகோவிலுள்ள சாபாலாவில் குடியேறினார்; பெரிலும் அவருடைய கணவரும் அடிக்கடி அங்குள்ள ஓட்டல்களில் உணவருந்தச் செல்வார்கள். ஓய்வுபெற்ற ஆங்கில மொழியினர் சந்தோஷமாக இருப்பதை அவர் பார்த்தார்; எனவே, அவர்களிடம் சென்று மெக்சிகோவில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதாகக் கேட்டார். அவர் சந்தித்த ஆட்கள் பெரும்பாலும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள். கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும்போது சந்தோஷமும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமும் கிடைக்கிறதென்றால் அவரைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ளக் கூடாது என்று பெரிலும் அவருடைய கணவரும் யோசித்தார்கள். பல மாதங்கள் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் சென்ற பிறகு பெரில் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார்; பிறகு அவர் ஒரு சாட்சி ஆனார். பிற்பாடு, அநேக ஆண்டுகள் அவர் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்தார்.
[பக்கம் 22-ன் பெட்டி]
“அவர்கள் எங்களோடிருப்பது ஓர் ஆசீர்வாதம்”
நற்செய்தியை அறிவிப்போர் அதிகம் தேவைப்படுகிற இடங்களுக்குக் குடிமாறிச் செல்வோரை அங்குள்ள சகோதரர்கள் இருகரம் நீட்டி வரவேற்கிறார்கள். கரீபியனிலுள்ள ஒரு கிளை அலுவலகம் இவ்வாறு எழுதியது: “இங்கு சேவை செய்கிற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சகோதர சகோதரிகள் இங்கிருந்து போய்விட்டால் சபைகளின் உறுதி ஆட்டம்கண்டுவிடும். அவர்கள் எங்களோடிருப்பது ஓர் ஆசீர்வாதம்.”
“நற்செய்தியை அறிவிக்கிற பெண்களின் கூட்டம் மிகுதி” எனக் கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. (சங். 68:11, NW) எனவே, வெளிநாடுகளில் சேவை செய்வோரில் அநேகர் திருமணமாகாத சகோதரிகள் என்பது ஆச்சரியத்தை அளிப்பதில்லை. பல தியாகங்களைச் செய்கிற இந்தச் சகோதரிகளின் உதவியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு கிளை அலுவலகம் இவ்வாறு சொல்கிறது: “இங்குள்ள பெரும்பாலான சபைகளில் சகோதரிகளின் எண்ணிக்கைதான் அதிகம்; சில இடங்களில் அது 70 சதவீதத்தையும் தாண்டிவிடுகிறது. அவர்களில் அதிகமானோர் புதிதாகச் சத்தியத்திற்கு வந்தவர்கள்; என்றாலும், மற்ற நாடுகளிலிருந்து வந்திருக்கும் மணமாகாத சகோதரிகள் இந்தப் புதியவர்களுக்குப் பயிற்சி அளித்துப் பேருதவி புரிகிறார்கள். இந்த வெளிநாட்டுச் சகோதரிகள் எங்களுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்!”
வெளிநாடுகளில் சேவை செய்வதைப் பற்றி இந்தச் சகோதரிகள் என்ன நினைக்கிறார்கள்? ஏறக்குறைய 35 வயதுள்ள ஆன்ஜலிக்கா வெளிநாட்டில் பல வருடங்கள் பயனியராகச் சேவைசெய்த மணமாகாத சகோதரி. அவர் சொல்கிறார்: “சவால்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. ஒரு பகுதியில் ஊழியம் செய்தபோது சேறும் சகதியுமான வீதிகளில் தினமும் நடப்பது எனக்கு ரொம்ப சிரமமாக இருந்தது; அதோடு, மக்கள் படும் கஷ்டங்களைப் பார்ப்பதும் மனதிற்கு வேதனையாக இருந்தது. ஆனால், ஊழியத்தில் மக்களுக்கு உதவுவதில் எனக்குத் திருப்தி கிடைத்தது. அதுமட்டுமல்ல, நான் அங்கு வந்து உதவியதற்காக அங்கிருந்த சகோதரிகள் அடிக்கடி பல விதங்களில் நன்றி காட்டியது என் மனதைத் தொட்டது. பயனியர் சேவை செய்வதற்காக வெகு தொலைவிலிருந்து நான் வந்திருப்பதைப் பார்த்த ஒரு சகோதரி, தானும் முழுநேர சேவைசெய்யத் தூண்டப்பட்டிருப்பதாக என்னிடம் கூறினார்.”
50 வயதைத் தாண்டிய சூ என்ற சகோதரி இவ்வாறு கூறுகிறார்: “சவால்கள் நிச்சயம் இருக்கும், ஆனால், அதைவிட பல மடங்கு ஆசீர்வாதங்களும் இருக்கும். ஊழியத்தில் ஈடுபடுவது மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது! ஊழியத்தில் அதிக நேரம் இளம் சகோதரிகளோடு சேர்ந்து ஈடுபடுவதால், கஷ்டங்களைச் சமாளிப்பது பற்றி பைபிளிலிருந்தும் நமது பிரசுரங்களிலிருந்தும் கற்றவற்றை அவர்களிடம் சொல்வேன். பிரச்சினைகளைச் சமாளித்து, அதே சமயத்தில் திருமணமாகாத ஒரு பயனியராக பல வருடங்கள் நான் சேவை செய்துவருவதை அவர்கள் பார்க்கும்போது, தங்களாலும் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறப்பதாக அவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வார்கள். இந்தச் சகோதரிகளுக்கு உதவுவது மனதுக்கு நிறைவைத் தருகிறது!”
[பக்கம் 20-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மெக்சிகோ
குவானாஹ்வாட்டோ
இராப்வாட்டோ
சாபாலா
ஆகிகிக்
சாபாலா ஏரி
மான்டெர்ரி
சான் மிகல் தே ஆயன்டே
காரேடாரோ
மெக்சிகோ நகரம்
கான்கூன்
[பக்கம் 23-ன் படம்]
முதன்முறையாக நற்செய்தியைக் கேட்கும் வெளிநாட்டினருக்குச் சாட்சி கொடுப்பதில் சிலர் சந்தோஷம் காண்கிறார்கள்