‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய’ முடியுமா?
1. பவுலும் அவரது தோழர்களும் ஏன் மக்கெதோனியாவுக்குப் போனார்கள்?
1 கி.பி. 49 வாக்கில், அப்போஸ்தலன் பவுல் தனது இரண்டாவது மிஷனரி பயணத்தைத் துவங்குவதற்காக சிரியா-அந்தியோகியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார். எபேசு நகரத்திலும் ஆசியா மைனரிலிருந்த மற்ற நகரங்களிலும் இருந்தவர்களைச் சந்திப்பதற்காகவே அவர் புறப்பட்டுச் சென்றார். ஆனால், ‘மக்கெதோனியாவுக்கு வரும்படி’ ஒரு தரிசனத்தில் அவருக்கு அழைப்புக் கிடைத்தது. அவரும் அவரது தோழர்களும் அந்த அழைப்பைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்; அந்தப் பகுதியில் முதல் சபையை உருவாக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள். (அப். 16:9, 10; 17:1, 2, 4) இன்று... உலகெங்குமுள்ள சில பகுதிகளில் அறுவடைக்கு வேலையாட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். (மத். 9:37, 38) உங்களால் உதவி செய்ய முடியுமா?
2. வேறொரு இடத்திற்கு மாறிச் செல்வதைப் பற்றி சிலர் ஏன் யோசிப்பதில்லை?
2 பவுலைப் போல மிஷனரியாக வேண்டுமென்ற ஆசை உங்களுக்கும் இருக்கலாம்; ஆனால், வேறொரு இடத்திற்கு மாறிப் போவதைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க மாட்டீர்கள். உதாரணமாக, கிலியட் பயிற்சியிலோ வேறு ஏதாவது விசேஷ பயிற்சியிலோ உங்களால் கலந்துகொள்ள முடியாதிருக்கலாம். ஒருவேளை, உங்களுடைய வயதின் காரணமாகவோ, நீங்கள் மணமாகாத சகோதரியாக இருப்பதாலோ, உங்களுக்கு மைனர் பிள்ளைகள் இருப்பதாலோ அதில் கலந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். அல்லது, இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதை நினைத்து நீங்கள் பயப்படலாம். அல்லது, பொருளாதார காரணங்களுக்காக நீங்கள் குடிமாறி வந்தவராக இருப்பதால், அங்கிருந்து வேறொரு இடத்திற்கு மாறிச் செல்ல தயங்கலாம். என்றாலும், ஜெபம் செய்துவிட்டு இதைப் பற்றி யோசித்துப் பார்த்தால், தேவை அதிகமுள்ள இடத்திற்கு மாறிச் செல்ல இதெல்லாம் ஒரு தடையே இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
3. விசேஷப் பயிற்சி பெறாவிட்டாலும் வேறொரு இடத்தில் வெற்றிகரமாக ஊழியம் செய்ய முடியுமா?
3 விசேஷப் பயிற்சி வேண்டுமா? பவுலுக்கும் அவரது தோழர்களுக்கும் மிஷனரி சேவையில் வெற்றி கிடைக்கக் காரணம் என்ன? யெகோவா மீதும் அவரது சக்தியின் மீதும் அவர்கள் சார்ந்திருந்ததே. (2 கொ. 3:1-5) எனவே, உங்களுடைய சூழ்நிலையின் காரணமாக உங்களால் விசேஷப் பயிற்சி பெற முடியாவிட்டாலும், வேறொரு இடத்தில் வெற்றிகரமாக ஊழியம் செய்ய முடியும். தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும் ஊழியக் கூட்டத்திலும் தொடர்ந்து உங்களுக்குப் பயிற்சி கிடைக்கிறது. ஏதாவதொரு விசேஷப் பள்ளியில் கலந்துகொள்ள நீங்கள் இலக்கு வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், வேறொரு இடத்திற்கு மாறிச் சென்று சேவை செய்தால் அருமையான அனுபவங்களைப் பெறுவீர்கள். விசேஷப் பயிற்சிக்காக நீங்கள் பிற்பாடு அழைக்கப்பட்டாலும் இந்த அனுபவம் உங்களுக்குக் கைகொடுக்கும்.
4. வேறொரு இடத்திற்குச் சென்று ஊழியம் செய்ய முடியாது என வயதானவர்கள் ஏன் நினைக்க வேண்டியதில்லை?
4 வயதானவரா? ஆன்மீக முதிர்ச்சியோடு... ஓரளவு நல்ல ஆரோக்கியத்தோடு... இருக்கிற வயதானவர்கள் தேவை அதிகமுள்ள இடங்களில் ஒரு வரமாக இருக்க முடியும். நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவரா? அப்படிப்பட்ட சிலர், கணிசமான பென்ஷன் தொகை வாங்குகிறார்கள்; என்றாலும், தாங்கள் வசிக்கிற இடத்தைவிட தரமான மருத்துவச் சிகிச்சைகளும் மற்றவைகளும் குறைந்த செலவில் கிடைக்கிற இடத்திற்கு மாறிச் சென்று வெற்றிகரமாகச் சேவை செய்திருக்கிறார்கள்.
5. தேவை அதிகமுள்ள இடத்திற்கு மாறிச் சென்ற வயதான சகோதரரின் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
5 ஓர் அனுபவத்தைப் பார்ப்போம்: ஆங்கிலம் பேசுகிற ஒரு நாட்டில் ஒரு சகோதரர் மூப்பராகவும் பயனியராகவும் இருந்தார்; வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் தென் கிழக்கு ஆசியாவிலிருந்த ஒரு பிரபல சுற்றுலா தலத்திற்கு மாறிச் சென்றார். அங்கிருந்த ஆங்கில மொழி பேசுகிற ஒரு தொகுதிக்கு உதவினார்; அவரும் அங்கிருந்த 9 பிரஸ்தாபிகளும், அங்கு வசித்த 30,000 வெளிநாட்டவருக்கு பிரசங்கித்து வந்தார்கள். இரண்டே வருடங்களில், 50 பேர் கூட்டங்களுக்கு வரத்தொடங்கினார்கள். அந்தச் சகோதரர் எழுதினார்: “நான் இங்கே மாறி வந்ததால் என் வாழ்க்கையில் இதுவரை அனுபவிக்காத நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறேன்; அதையெல்லாம் விவரிக்க வார்த்தைகளே இல்லை.”
6. தேவை அதிகமுள்ள இடத்திற்கு மாறிச் சென்ற மணமாகாத சகோதரியின் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
6 மணமாகாத சகோதரியா? தேவை அதிகமுள்ள இடங்களில் நற்செய்தியைப் பிரசங்கிக்க பெண்களை மகத்தான விதத்தில் கடவுள் பயன்படுத்தியிருக்கிறார். (சங். 68:11) ஓர் இளம் சகோதரி வேறொரு நாட்டிற்குச் சென்று ஊழியத்தில் அதிகமாய் ஈடுபட இலக்கு வைத்தாள்; ஆனால், அந்த இடத்தில் அவளுக்குப் பாதுகாப்பு இருக்குமா என அவரது பெற்றோர் கவலைப்பட்டார்கள். எனவே, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அதிக பிரச்சினை இல்லாத ஒரு நாட்டைத் தேர்ந்தெடுத்தாள். அதைக் குறித்து கிளை அலுவலகத்திற்கு எழுதினாள்; கிளை அலுவலகம் அவளுக்குப் பயனுள்ள தகவல்களைக் கொடுத்தது. அந்த நாட்டில் அவள் செலவிட்ட ஆறு ஆண்டுகளும் அளவில்லா ஆசீர்வாதங்களைப் பெற்றாள். “எங்கள் நாட்டில் நிறைய பைபிள் படிப்புகள் நடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால், தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்ததால் நிறைய பைபிள் படிப்புகளை நடத்த முடிந்தது. கற்பிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளவும் உதவியது” என்று அவள் சொல்கிறாள்.
7. வேறொரு இடத்திற்கு மாறிச் சென்ற ஒரு குடும்பத்தின் அனுபவத்தைக் குறிப்பிடுங்கள்.
7 பிள்ளைகளை நினைத்து தயக்கமா? நீங்கள் பிள்ளைகளை உடைய பெற்றோரா? அதனால், வேறொரு இடத்திற்கு மாறிச் செல்ல நீங்கள் தயங்குகிறீர்களா? இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: இரண்டு பிள்ளைகளை (எட்டு வயது பையன், பத்து வயது பெண்) உடைய ஒரு பெற்றோர் வேறொரு இடத்திற்கு மாறிச் சென்றார்கள். அந்தத் தாய் சொல்கிறார்: “இங்கே எங்கள் பிள்ளைகள் விசேஷ பயனியர்களுடனும் மிஷனரிகளுடனும் நெருங்கிப் பழகுகிறார்கள்; இதுபோன்ற ஒரு சூழலில் பிள்ளைகள் வளர்வதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வதால் நாங்கள் குடும்பமாக கடவுளோடு நெருங்கியிருக்கிறோம்.”
8. இன்னொரு பாஷையைக் கற்றுக்கொள்ளாமலேயே வேறொரு இடத்தில் சேவை செய்ய முடியுமா? விளக்குங்கள்.
8 பாஷையை நினைத்துப் பயப்படுகிறீர்களா? இன்னொரு பாஷையை கற்றுக்கொள்வதுதான் உங்கள் பிரச்சினையா? தேவை அதிகமுள்ள சில இடங்களில் ஒருவேளை உங்கள் மொழியைப் பேசுகிற மக்கள் இருக்கலாம். ஆங்கில மொழி பேசுகிற ஒரு தம்பதி, ஸ்பானிய மொழி பேசப்படுகிற ஓர் இடத்திற்கு மாறிச் செல்லத் தீர்மானித்தார்கள்; அந்த இடத்தில் ஆங்கில மொழி பேசும் மக்கள் அதிகளவில் குடியேறி இருந்தார்கள். அங்கு தேவை அதிகமுள்ள பல ஆங்கில மொழி சபைகளைப் பற்றிய தகவலை கிளை அலுவலகம் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. அதில் ஒரு சபையை அவர்கள் தேர்ந்தெடுத்து, இரண்டு முறை அங்கே போய் பார்த்துவிட்டு வந்தார்கள். பின்னர், மாதாந்திர செலவுகளைக் குறைத்துக்கொண்டு ஒரு வருடம் பணத்தைச் சேமித்தார்கள். அந்த இடத்திற்கு அவர்கள் குடிமாறத் தயாரானபோது, அங்கிருந்த சகோதரர்கள் அவர்களுடைய வசதிக்குத் தகுந்த ஒரு வீட்டைப் பார்த்துக் கொடுத்தார்கள்.
9, 10. தங்களுடைய சொந்த ஊரிலிருந்து குடிமாறியவர்கள் எதைப் பற்றி யோசிக்கலாம், ஏன்?
9 குடிபெயர்ந்தவரா? சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு நீங்கள் வேறொரு நாட்டிற்குக் குடிபெயர்ந்தவரா? அல்லது உங்கள் நாட்டிலேயே வேறொரு இடத்திற்கு குடிமாறினவரா? உங்களுடைய சொந்த ஊரில் அல்லது கிராமத்தில் ‘அறுவடைக்கு’ வேலையாட்கள் அதிகம் தேவைப்படலாம். அங்கே உதவி செய்வதற்காக உங்களால் திரும்பிச் செல்ல முடியுமா? வேறொரு இடத்திலிருந்து வருகிற ஒருவரைவிட உங்களுக்கு அங்கே வேலை, வீடு போன்றவை எளிதாகக் கிடைக்கலாம். மொழிப் பிரச்சினையும் இருக்காது. அதோடு, வேறொரு நாட்டிலிருந்து வந்தவர் பிரசங்கிப்பதைக் காட்டிலும் சொந்த ஊர்க்காரர் பிரசங்கிக்கும்போது மக்கள் செவிகொடுத்துக் கேட்கலாம்.
10 அல்பேனியாவைச் சேர்ந்த ஒருவர் இத்தாலிக்கு அகதியாகச் சென்றார்; ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொண்டார். அல்பேனியாவிலுள்ள தன் குடும்பத்துக்கு பணம் அனுப்பினார். சத்தியம் கற்றுக்கொண்ட பிறகு, அல்பேனியாவில் தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதற்காக மாறிச் சென்ற இத்தாலிய விசேஷ பயனியர்களுக்கு அல்பேனியா மொழியைக் கற்றுக்கொடுத்தார். பிற்பாடு அவர் எழுதுகிறார்: “நான் விட்டுவந்த நாட்டுக்கு அவர்கள் போகிறார்கள். அவர்களுக்கு பாஷை தெரியாது. ஆனாலும் அங்கு செல்ல ஆவலாய் இருந்தார்கள். நானோ அல்பேனிய மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் பற்றி அறிந்தவன். அப்படியென்றால், இங்கே இத்தாலியில் உட்கார்ந்துகொண்டு நான் என்ன செய்கிறேன்?” எனவே, நற்செய்தியை அறிவிப்பதற்காக அல்பேனியாவுக்குத் திரும்பிச் செல்ல அவர் தீர்மானித்தார். “இத்தாலியில் என்னுடைய வேலையையும் சம்பாத்தியத்தையும் விட்டு வந்ததற்காக நான் வருத்தப்படுகிறேனா? அதைப் பற்றி நினைப்பதே இல்லை! அல்பேனியாவில் நான் உண்மையான வேலையைக் கண்டுபிடித்தேன். என்னைப் பொறுத்தவரை, நம்மிடமுள்ள எல்லாவற்றையும் பயன்படுத்தி யெகோவாவுக்குச் சேவை செய்வதே, முக்கியமானதும் முடிவில்லா மகிழ்ச்சியைத் தருவதுமான வேலையாகும்!” என்கிறார்.
11, 12. தேவை அதிகமுள்ள இடத்திற்கு மாறிச் செல்ல விரும்புகிறவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
11 என்னென்ன செய்ய வேண்டும்? மக்கெதோனியாவுக்குப் போவதற்கு முன்பு, பவுலும் அவரது தோழர்களும் மேற்குப் பக்கமாகப் பயணிக்கத் தீர்மானித்தார்கள்; ஆனால், ‘கடவுளுடைய சக்தி அவர்களைத் தடுத்ததால்’ அவர்கள் திரும்பி வடக்குப் பக்கமாகப் பயணித்தார்கள். (அப். 16:6) அவர்கள் பித்தினியாவை நெருங்கியபோது, இயேசுவுக்கு அருளப்பட்ட கடவுளுடைய சக்தி அவர்களைத் தடுத்தது. (அப். 16:7) இன்றும், இயேசுவின் மூலமாக பிரசங்க வேலையை யெகோவா கண்காணித்து வருகிறார். (மத். 28:20) எனவே, தேவை அதிகமுள்ள இடத்திற்கு மாறிச் செல்வதைப் பற்றி நீங்கள் யோசித்து வந்தால், கடவுளுடைய வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்யுங்கள்.—லூக். 14:28-30; யாக். 1:5; “உண்மையிலேயே தேவை இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள...” என்ற பெட்டியைப் பாருங்கள்.
12 மூப்பர்களிடமும் மற்ற முதிர்ந்த கிறிஸ்தவர்களிடமும் ஆலோசனை கேளுங்கள்; வேறொரு இடத்திற்குக் குடிமாறிச் சென்றால் உங்களால் சிறப்பாக ஊழியம் செய்ய முடியுமா என்று வெளிப்படையாகச் சொல்லச் சொல்லுங்கள். (நீதி. 11:14; 15:22) தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதைக் குறித்து அமைப்பு வெளியிட்டிருக்கிற கட்டுரைகளைப் படியுங்கள். நீங்கள் செல்ல நினைத்திருக்கிற இடத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரியுங்கள். நீங்கள் மாறிச்செல்ல நினைக்கும் இடத்தைச் போய் பார்க்க முடியுமா? அங்கே, சில நாட்கள் தங்கியிருக்க முடியுமா? இதெல்லாம் செய்த பிறகு, வேறொரு இடத்திற்கு மாறிச் செல்வதென தீர்மானித்தீர்கள் என்றால், கூடுதல் தகவல் கேட்டு கிளை அலுவலகத்திற்கு எழுதலாம். என்றாலும், அந்தக் கடிதத்தை நீங்கள் நேரடியாக கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்குப் பதிலாக உங்கள் சபையிலுள்ள மூப்பர்களிடம் கொடுங்கள். தங்களுடைய குறிப்புகளையும் சேர்த்து அதை அனுப்புவார்கள்.—யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 111-112-ஐப் பாருங்கள்.
13. கிளை அலுவலகம் உங்களுக்கு என்ன உதவி அளிக்கும், ஆனால், எவற்றை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்?
13 நீங்கள் சரியான தீர்மானம் எடுக்க பயனுள்ள தகவல்களைத் தந்து கிளை அலுவலகம் உங்களுக்கு உதவும். ஆனால், சட்ட ஆவணங்களையோ படிவங்களையோ தராது. அதோடு நீங்கள் குடியிருப்பதற்கான வீட்டையும் பார்த்துக் கொடுக்காது. மாறிச் செல்வதற்கு முன்பு இதுபோன்ற காரியங்களை எல்லாம் நீங்களாகவே கவனித்துக்கொள்ள வேண்டும். மாறிச் செல்ல விரும்புகிறவர்கள் சட்ட ரீதியாகச் செய்ய வேண்டிய காரியங்களையும் பொருளாதார தேவைகளையும் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.—கலா. 6:5.
14. நம் வேலை தடைசெய்யப்பட்டிருக்கிற நாட்டுக்குச் சுற்றுலா செல்கிறவர்கள் அல்லது குடிமாறிச் செல்கிறவர்கள் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
14 தடைசெய்யப்பட்டிருக்கிற நாடுகள்? சில நாடுகளில், சகோதர சகோதரிகள் ஆன்மீக விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக ஈடுபட வேண்டியிருக்கிறது. (மத். 10:16) அங்கு சுற்றுலா செல்கிற அல்லது அங்கு மாறிச் செல்கிற பிரஸ்தாபிகள் தெரியாத்தனமாக அஜாக்கிரதையாகச் செயல்பட்டுவிடலாம்; அதனால் உள்ளூர் சகோதரர்களும் பிரச்சினையில் அகப்பட்டுவிடலாம். அத்தகைய ஒரு நாட்டுக்கு மாறிச் செல்ல நீங்கள் விரும்பினால், அப்படிச் செய்வதற்கு முன்பு உங்கள் சபையிலுள்ள மூப்பர் குழுவின் மூலமாக உங்கள் நாட்டு கிளை அலுவலகத்திற்கு இதைக் குறித்து எழுதுங்கள்.
15. வேறொரு இடத்திற்கு போக முடியாதவர்கள் உள்ளூரிலேயே எப்படி ஊழியத்தில் அதிகமாக ஈடுபடலாம்?
15 மாறிச் செல்ல முடியாவிட்டால்? வேறொரு இடத்திற்கு மாறிச் செல்ல முடியாவிட்டால், மனந்தளர்ந்து விடாதீர்கள். “ஊழியம் செய்வதற்கான வாய்ப்பு என்ற பெரிய கதவு” உங்களுக்குத் திறந்து வைக்கப்பட்டிருப்பதால் வேறொரு வாய்ப்பு கிடைக்கலாம். (1 கொ. 16:8, 9) உங்கள் வீட்டிலிருந்து போய் வருகிற தூரத்தில் எங்கு தேவை இருக்கிறது என்று வட்டாரக் கண்காணியிடம் கேளுங்கள். ஒருவேளை அருகிலுள்ள வேறொரு சபைக்கோ தொகுதிக்கோ நீங்கள் உதவலாம். அல்லது உங்களுடைய சபை பிராந்தியத்தில் அதிகமாக ஊழியம் செய்யலாம். உங்கள் சூழ்நிலை எப்படியிருந்தாலும் சரி, நீங்கள் முழு மூச்சோடு சேவை செய்ய வேண்டுமென்பதுதான் முக்கியம்.—கொலோ. 3:23.
16. தேவை அதிகமுள்ள இடத்திற்குப் போக விரும்புகிறவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
16 தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யும் இலக்கு வைத்திருக்கிற ஆன்மீக முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரை உங்களுக்குத் தெரியுமா? அவருக்கு/அவளுக்கு ஆதரவு கொடுங்கள், ஊக்கம் கொடுங்கள்! சிரியா-அந்தியோகியா நகரிலிருந்து பவுல் புறப்பட்டுச் சென்றார் என்று நாம் பார்த்தோம். அந்தச் சமயத்தில் அந்நகரம் ரோம பேரரசின் (ரோம், அலெக்ஸாண்டிரியா நகரங்களுக்கு அடுத்ததாக) மூன்றாவது பெரிய நகரமாக இருந்தது. அது பெரிய பிராந்தியமாக இருந்ததால், அந்தச் சபைக்கு பவுலின் உதவி அதிகமாகத் தேவைப்பட்டிருக்கும்; அவர் போவது பெரிய இழப்பாகவும் இருந்திருக்கும். இருந்தாலும், அங்கிருந்த சகோதரர்கள், போக வேண்டாம் என்று பவுலைத் தடுத்ததாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. தங்களுடைய பிராந்தியத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல், ‘வயல் இந்த உலகம்’ என்பதை அவர்கள் மனதில் வைத்துச் செயல்பட்டதாகத் தெரிகிறது.—மத். 13:38.
17. ‘மக்கெதோனியாவுக்கு வந்து’ உதவ நமக்கு என்னென்ன காரணங்கள் உள்ளன?
17 மக்கெதோனியாவுக்கு வரும்படியான அழைப்பை ஏற்றுக்கொண்டதால் பவுலும் அவரது தோழர்களும் பெருமளவு ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ஆம், மக்கெதோனிய நகரமாகிய பிலிப்பியில் இருந்தபோது, அவர்கள் லீதியாளைச் சந்தித்தார்கள். “பவுல் சொன்ன விஷயங்களை ஏற்றுக்கொள்ளும்படி யெகோவா அவளுடைய இருதயத்தை முழுமையாகத் திறந்தார்.” (அப். 16:14) லீதியாளும் அவரது குடும்பம் முழுவதும் ஞானஸ்நானம் பெற்றபோது பவுலும் அவருடைய மிஷனரி தோழர்களும் அடைந்த சந்தோஷத்தை உங்களால் உணர முடிகிறதா? பல நாடுகளில், லீதியாளைப் போன்ற நல்மனமுள்ள ஆட்களுக்கு நற்செய்தி இன்னும் சென்றெட்டவில்லை. நீங்கள் ‘மக்கெதோனியாவுக்கு வந்து’ உதவினால், நல்மனமுள்ளவர்களைக் கண்டுபிடித்து உதவி செய்வீர்கள்; அதனால் பெரும் சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள்.
[பக்கம் 5-ன் பெட்டி]
உண்மையிலேயே தேவை இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள...
• உங்கள் சபை மூப்பர்களையும் வட்டாரக் கண்காணியையும் கேளுங்கள்.
• அந்த இடத்திற்கு ஏற்கெனவே சென்று வந்தவர்களிடம் அல்லது முன்பு அங்கு வசித்து வந்தவர்களிடம் பேசிப் பாருங்கள்.
• உங்கள் தாய்மொழி பேசுகிற மக்களுக்குப் பிரசங்கிக்க நீங்கள் விரும்பினால், நீங்கள் போக விரும்பும் இடத்தில் எத்தனை பேர் உங்கள் பாஷை பேசுகிறார்கள் என்பதை இன்டர்நெட்... புத்தகங்கள்... வாயிலாக அலசிப்பாருங்கள்.