அயல் நாட்டில் உங்களால் ஊழியம் செய்ய
முடியுமா?
“மிஷனரி ஊழியத்திற்குப் போவதைப் பற்றி நான் கனவுகாணாத நாளில்லை. திருமணத்திற்கு முன், ஊழியத்திற்கு அதிக தேவையிருந்த இடமாகிய அ.ஐ.மா., டெக்ஸஸ்-ல் ஊழியம் செய்தேன். திருமணத்திற்குப் பின் என் மனைவியும் என்னோடு ஊழியத்தில் சேர்ந்துகொண்டாள். எங்களுக்கு மகள் பிறந்தபோது ‘அவ்வளவுதான், இனி எங்க ஊழியம் செய்யப் போறேன், முழுக்குப் போட வேண்டியதுதான்’ என நினைத்தேன். ஆனால் தம்முடைய சித்தத்திற்கிசைவாய் இருந்தால் எந்த ஆசையையும் கைகூடும்படி செய்வார் யெகோவா.”—ஜிஸி, தற்சமயம் ஈக்வடாரில் தன் மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் சேவை செய்பவர்.
“கிலியட் மிஷனரி ஸ்கூல் டிரெய்னிங் இல்லாமலேயே இதுபோல வேறு நாட்டுக்குப் போய் ஊழியம் செய்வேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. என்னோடு பைபிள் படிக்கும் ஒருவர் பேச்சுக் கொடுப்பதை அல்லது ஊழியத்தில் ஈடுபடுவதைப் பார்த்த எனக்கு மெய்சிலிர்த்தது; இந்த பொன்னான வாய்ப்பை எனக்களித்த யெகோவாவுக்கு மனமார்ந்த நன்றி.”—இப்படிச் சொல்லும் மணமாகாத கேரன், எட்டு வருடங்களாக தென் அமெரிக்காவில் பயனியர் செய்தவர்.
“அமெரிக்காவில் 13 வருடங்களை முழுநேர ஊழியத்தில் கழித்த பிறகு நானும் என் மனைவியும் புதிதாக எதையாவது சாதிக்க வேண்டுமென விரும்பினோம். அதன் விளைவால், முன்பு ஒருபோதும் இல்லாதளவுக்கு இப்போது சந்தோஷமாக இருக்கிறோம்; உண்மையில் இது திருப்தியான வாழ்க்கை.”—அமேசான் பிராந்தியத்தில் தன் மனைவி லிண்டாவுடன் பயனியர் ஊழியம் செய்துவரும் டாம்.
கிலியட் உவாட்ச்டவர் பைபிள் பள்ளியில் மிஷனரி ஊழியத்திற்காக பயிற்சி பெற வாய்ப்பு கிட்டாத சிலரின் இதயப்பூர்வமான கருத்துக்களே மேற்குறிப்பிடப்பட்டவை. எனினும், அயல் நாடுகளில் ஊழியம் செய்கையில் பெறும் சந்தோஷத்தையும் சவால்களையும் அவர்கள் சந்தித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஊழியம் செய்யும் எண்ணம் எப்படி உதயமானது? அத்தகைய ஊழியத்தை நீங்கள் செய்ய முடியுமா?
சரியான மனநிலை தேவை
அயல் நாட்டு பிராந்தியத்தில் வெற்றிபெற சாதனை உணர்வு இருந்தால் மட்டுமே போதாது. விடாமுயற்சியோடு செயலாற்றியவர்கள் சரியான மனநிலையோடும் இருந்திருக்கின்றனர். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல் கடவுளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் தாங்கள் கடன்பட்டிருப்பதாக உணர்ந்திருக்கின்றனர். (ரோமர் 1:14) தங்கள் சொந்தப் பிராந்தியத்தில் பிரசங்கிப்பதன்மூலம் அவர்கள் கடவுள் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்க முடியும். (மத்தேயு 24:14) ஆனால், நற்செய்தியைக் கேட்க வாய்ப்பற்றவர்களுக்கும் உதவ கடன்பட்டிருப்பதாக உணர்ந்ததால், அப்படிப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அவர்கள் தூண்டப்பட்டார்கள்.
அதிக பலனை அள்ளித் தரும் பகுதியில் ஊழியம் செய்ய வேண்டுமென்ற மனநிலையும் உள்ளது; அது சரியானதும்கூட. ஒரு குளத்தில் அதிக மீன்களைப் பிடிக்கும் மீனவனைக் கண்டால் அதற்கருகில் மீன்பிடிக்க யாருக்குத்தான் ஆசையிருக்காது? அதைப் போலவே, வெகு அதிக அதிகரிப்பிருக்கும் நாடுகளிலிருந்து வரும் சந்தோஷத்தில் துள்ள வைக்கும் அறிக்கைகள் ‘மிகுதியான மீன்கள்’ உள்ள பகுதிகளுக்குச் செல்ல அநேகரைத் தூண்டியிருக்கின்றன.—லூக்கா 5:4-10.
செலவை கணக்குப் பார்த்தல்
அநேக தேசங்கள், மத சம்பந்தமான காரணங்களுக்காக அயல் நாட்டில் குடியேறுவோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில்லை. ஆகவே, அயல் நாட்டில் ஊழியம் செய்ய விரும்புவோர் பொதுவாகவே பண சம்பந்தமான விஷயத்தில் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது? தேவையான பணத்தைப் பெற அநேகர் தங்கள் வீடுகளை விற்றிருக்கின்றனர் அல்லது வாடகைக்கு விட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் தாங்கள் செய்துவந்த வியாபாரத்திற்கு முழுக்குப்போட்டிருக்கின்றனர். ஊழியம் செய்ய வேண்டுமென்ற தங்கள் ஆசை ஈடேற சிலர் பணத்தைச் சேமித்திருக்கின்றனர். இன்னும் சிலர் ஓரிரு ஆண்டுகள் அயல் நாட்டில் ஊழியம் செய்துவிட்டு தாயகம் திரும்புவது, பின்னர் வேலை செய்து பணம் சம்பாதித்துக்கொண்டு மீண்டும் அயல் நாடு செல்வது என்ற அடிப்படையில் அயல் நாடுகளில் ஊழியம் செய்கின்றனர்.
வளர்ந்து வரும் நாடுகளுக்கே உரித்தான சாதகமான விஷயம் என்னவென்றால், அங்கு வாழ்க்கையை ஓட்ட ஆகும் செலவு பொதுவாகவே வளர்ச்சியடைந்த நாடுகளைவிட வெகு குறைவு. இது அளவான ஓய்வூதியத்தோடு வளமாக வாழ சிலருக்கு உதவியிருக்கிறது. ஒருவருடைய செலவினம், அவர் தெரிவுசெய்யும் வாழ்க்கை தரத்தையே பெருமளவு சார்ந்திருக்கிறது என்பது உண்மை. வளர்ந்து வரும் நாடுகளிலும்கூட சகல சௌகரியங்களும் நிறைந்த வீடுகள் கிடைக்கலாம், ஆனால் வாடகை அதற்கேற்ப எக்கச்சக்கமாய் இருக்கும்.
ஓர் இடத்திற்கு மாறிச் செல்வதற்கு முன் எல்லா செலவுகளையும் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்ததே. எனினும், பொருளாதார செலவுகளை மட்டும் கணக்குப் போட்டுப் பார்த்தால் போதாது. தென் அமெரிக்காவில் சேவை செய்த சிலருடைய அனுபவங்களைக் கேட்பது மனதுக்கு இதமளிக்கும்.
மெகா சவால்
“ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொள்வதற்குள் படாதபாடு பட்டுவிட்டேன். எனக்குப் பாஷை தெரியாததால் உதவி ஊழியராக சேவிக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும் என நினைத்தேன். இரண்டே மாதம் கழித்து புத்தகப் படிப்பு நடத்தும்படி என்னிடம் சொல்லப்பட்ட போது எதிர்பாராத ‘அதிர்ச்சியால்’ உறைந்துபோனேன்! நாணிக்கோணிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ வந்தன. முக்கியமாக சரியாக உச்சரிக்க தெரியாமல் சகோதரர்களின் பெயர்களை ‘கொலை’ செய்தது மறக்க முடியாதது. ஒருநாள் சகோதரர் சான்சோவை ‘சகோதரர் ச்சான்சோ (பன்றி)’ என அழைத்தேன்; சகோதரி சாலாமேயாவை ‘மாலாசேயா (கெட்டவள்)’ என தவறுதலாக அழைத்தேன். சொல்லப்போனால், அங்குள்ள சகோதரர்களும் சகோதரிகளும் பொறுமையின் சிகரங்களாய் இருந்ததால் தப்பித்தேன்” என நினைவுபடுத்திச் சொல்கிறார் பின்லாந்தைச் சேர்ந்த மார்கூ. தன்னுடைய மனைவி செலீனாவுடன் மார்கூ எட்டு வருடங்கள் வட்டார ஊழியராக அந்நாட்டில் சேவை செய்தார்.
முன்பு குறிப்பிடப்பட்ட ஜிஸியின் மனைவி கிறிஸ் சொல்வதாவது: “நாங்கள் அங்கு போய் சேர்ந்து மூன்று மாதங்களுக்குப் பின் முதன்முறையாக வந்த வட்டார ஊழியரின் சந்திப்பு என் ஞாபகத்திற்கு வருகிறது. எங்களுடைய இதயங்களைத் தொடும் விதத்தில் ஏதோ அருமையான உதாரணங்களை உபயோகித்து எங்கள் வட்டார ஊழியர் பேச்சுக் கொடுத்தார் என என்னால் சொல்ல முடியும், ஆனால் அவர் என்ன சொன்னார் என்பதை என்னால் துளியும் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஹாலிலேயே நான் அழ ஆரம்பித்துவிட்டேன். அப்போது கண்களில் கண்ணீர் மட்டும் துளிர்க்கவில்லை, தேம்பித்தேம்பி அழவும் ஆரம்பித்தேன். கூட்டம் முடிந்தவுடன் என் நிலைமையை வட்டார ஊழியரிடம் விளக்க முயன்றேன். அவர் கனிவானவர், மற்றவர்கள் எல்லாரும் என்னிடம் சொல்லி வந்ததையே அவரும் சொன்னார்: ‘டென் பாஸியென்ஸ்யா, எர்மானா’ (‘பொறுமையாய் இருங்க சகோதரி’ ). இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்து நாங்கள் மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது, அப்போது நாங்கள் பேசினோம், அதுவும் 45 நிமிடத்திற்கு; சந்தோஷமான விஷயம் என்னவென்றால் நாங்கள் ஒருவரோடொருவர் உரையாட முடிந்ததுதான்.”
“கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். மொழியைக் கற்றுக்கொள்ள எந்தளவுக்கு முயற்சி எடுக்கிறோமோ அந்தளவுக்கு மற்றவர்களோடு பேசும் திறமையிலும் நாம் முன்னேற்றம் செய்ய முடியும்” என்கிறார் இன்னொரு சகோதரர்.
அத்தகைய முயற்சி ஏராளமான நன்மைகளைக் குவிக்கும் என்பதை எல்லாரும் ஒத்துக்கொள்கின்றனர். ஒருவர் புதிய மொழியைக் கற்றுக்கொள்ள முயலுகையில் மனத்தாழ்மை, பொறுமை, விடாமுயற்சி போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க வாய்ப்பென்னும் பெரிய கதவு திறந்திருக்கிறது. உதாரணமாக, ஸ்பானிய மொழியைக் கற்றுக்கொள்வது, உலகம் முழுவதும் அம்மொழி பேசும் 40 கோடிக்கும் அதிகமானோரோடு பேச வாய்ப்பளிக்கிறது. தங்கள் தாய் நாடு திரும்ப நேர்ந்த அநேகர் தாங்கள் கற்ற மொழி திறமையைப் பயன்படுத்தி ஸ்பானிய மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர்களுக்கு இன்னமும் உதவ முடிகிறது.
வீட்டு ஞாபகத்தை சமாளிப்பதெப்படி?
“1989-ல் முதன்முதல் ஈக்குவடாருக்கு வந்தபோது அடிக்கடி வீட்டு ஞாபகம் வந்து என்னை வாட்டியெடுத்தது. சபையிலுள்ள சகோதர சகோதரிகளைப் பெருமளவு சார்ந்திருக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்களே என் குடும்பத்தார் போலானார்கள்” என தன் கணவன் காரீயுடன் அமேசான் பிராந்தியத்தில் சேவை செய்த டெபோரா சொல்கிறார்.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கேரன் சொல்வதாவது: “ஒவ்வொரு நாளும் தவறாமல் ஊழியத்திற்குச் செல்வதன் மூலம் வீட்டு ஞாபகம் வராமல் பார்த்துக்கொள்ள போராடினேன். அது எப்போது பார்த்தாலும் வீட்டைப் பற்றிய கற்பனையில் மூழ்கிவிடாமல் இருக்க உதவியது. நான் அயல் நாட்டில் ஊழியம் செய்வதால் ஊரிலிருக்கும் என் பெற்றோருக்குப் பெருமை என்பதையும் நினைத்துக் கொள்வேன். ‘என்னை விடவும் யெகோவா உன்னை நல்லா பாத்துக்குவாரு’ என அம்மா அடிக்கடி சொல்லி உற்சாகப்படுத்திய வார்த்தைகள் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.”
மாகிகோ என்ற ஜப்பானைச் சேர்ந்த பெண் நகைச்சுவை உணர்வோடு இவ்வாறு சொல்கிறாள்: “நாள் முழுவதும் ஊழியத்தில் கழித்தபின் நான் அதிக டயர்ட் ஆகிவிடுகிறேன். வீட்டுக்கு வந்தவுடன் வீட்டு ஞாபகம் வாட்ட ஆரம்பிக்கும், அப்படியே அசந்து தூங்கிவிடுவேன். அதனால் அதிக நேரம் அந்த ஏக்கம் நீடிப்பதில்லை.”
குழந்தைகளால் முடியுமா?
குழந்தைகள் இருந்தால் படிப்பு போன்ற அவர்களுடைய தேவைகளுக்குக் கவனம் செலுத்துவது அவசியம். இந்த விஷயத்தில் சிலர் வீட்டிலிருந்தே படிப்பதை தெரிவு செய்திருக்கின்றனர், இன்னும் சிலர் தங்கள் பிள்ளைகளை உள்ளூர் பள்ளிகளில் சேர்த்திருக்கின்றனர்.
ஏல் என்பவர் தன் மனைவி, இரண்டு பிள்ளைகள், தன் தாய் ஆகியோரோடு தென் அமெரிக்காவில் குடிபுகுந்தார். “பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பது அவர்கள் மொழியை வெகு சீக்கிரம் கற்றுக்கொள்ள உதவியது என்பது நாங்கள் கண்டறிந்த உண்மை. மூன்று மாதத்திற்குள் அவர்கள் சரளமாக பேச ஆரம்பித்துவிட்டனர்” என சொல்கிறார். மறுபட்சத்தில், மைக், காரீ தம்பதியினரின் வாலிப பிள்ளைகள் இருவரும் அங்கீகாரம் பெற்ற அஞ்சல்வழி கல்வி பயின்றனர். “அத்தகைய படிப்பில் எங்கள் பிள்ளைகளைத் தாங்களே படித்துக் கொள்ளும்படி தனித்துவிட முடியாதென நாங்கள் கண்டறிந்தோம். நாங்களும் அதில் பங்குகொண்டு, கொடுக்கப்பட்ட படிப்புத் திட்டத்தை எங்கள் மகன்கள் முழுமையாக படிக்கிறார்களா என பார்க்க முடிந்தது” என அந்தப் பெற்றோர் சொல்கின்றனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட், ஜனிடா தம்பதியினர் தங்கள் இரு மகன்களைப் பற்றி கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்: “மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை எங்கள் பிள்ளைகள் தாங்களாகவே காண வேண்டுமென விரும்பினோம். தாங்கள் வளர்ந்துவந்த விதத்தின்படிதான் எல்லாருமே வாழ்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வது எளிது. ஆனால், உண்மையில் சொற்பப் பேரே பின்பற்றும் வாழ்க்கைமுறையாக எங்களுடையது இருந்தது. எந்த நாடானாலும், எந்த கலாச்சாரமானாலும், தேவராஜ்ய நியதி ஒன்றுதான், உலகம் முழுவதும் ஒரே போல் செயல்படுகிறது என்பதையும் பிள்ளைகள் கண்ணாரக் கண்டனர்.”
“1969-ல் எங்கள் குடும்பம் இங்கிலாந்தைவிட்டு குடிபெயர்ந்த போது எனக்கு நான்கே வயது. நான் கனவு கண்டபடி நாங்கள் மண் குடிசையில் கீற்றுக் கொட்டகையில் வாழவில்லை என்பது ஏக்கமளித்தாலும் ஓர் இளைஞன் வளர்க்கப்பட வேண்டிய நல்லமுறையில் நான் வளர்க்கப்பட்டேன் என்பதை உணர்ந்தேன். இதுபோன்ற நிலைமைக்கு வாய்ப்பற்றுப்போன மற்ற சிறுவர்களை நினைத்து வருந்தியிருக்கிறேன்! மிஷனரிகளோடும் விசேஷித்த பயனியர்களோடும் அனுபவித்த கூட்டுறவால் நான் ஒன்பது வயதில் துணைப் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன்” என நினைவுபடுத்திச் சொல்கிறார் கென். இப்போது அவர் ஒரு பயணக் கண்காணி.
“ஈக்வடார்தான் இப்போது என் தாயகம். இங்கு வரவேண்டும் என என் பெற்றோர் எடுத்த தீர்மானத்தால் அதிக சந்தோஷமனுபவிப்பவள் நான்தான்” என ஒப்புக்கொள்கிறாள் ஜிஸியின் மகளான காப்ரீலா.
மறுபட்சத்தில், அநேக காரணங்களின் நிமித்தம் மாறுபடும் சூழ்நிலைக்கு ஒத்துப்போக முடியாமல் போன பிள்ளைகளும் இருக்கின்றனர்; இதுவே அவர்களுடைய குடும்பத்தார் மீண்டும் தங்கள் தாயகம் திரும்புவதற்குக் காரணமானது. எனவேதான் அயல் நாடுகளில் நிரந்தரமாக தங்குவதற்கு முன் அதற்கு விஜயம் செய்து வருவது நல்லது. இவ்வாறு நேரில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கலாம்.
மாற்றம் தரும் மகிழ்ச்சிகள்
அயல்நாடுகளுக்குச் சென்று ஊழியம் செய்வதென்பது அநேக சவால்களையும் தியாகங்களையும் உட்படுத்துகிறது. அப்படி சென்றவர்களுக்கு அது உண்மையிலேயே பயனுள்ளதாக இருந்திருக்கிறதா? அதை அவர்களே சொல்லட்டும்.
ஜிஸி: “அம்பேட்டே நகரில் வசித்த 10 வருடங்களில், 2 சபைகள் இருந்த இடத்தில் 11 சபைகள் உருவானதைப் பார்த்தோம். அதில் ஐந்து சபைகளை வித்திட்டு வளர்க்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம். இரண்டு ராஜ்ய மன்றங்களைக் கட்டும் பணியில் நாங்கள் பங்குகொண்டோம். சராசரியாக வருடத்திற்கு இரண்டு பேரை முழுக்காட்டுதலுக்கு வழிநடத்த உதவியதிலும் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கு ஒரே ஒரு வருத்தம் மாத்திரம் இருக்கிறது; அது, ஏன்தான் இன்னும் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பே இங்கு வராமல் போனோமோ என்பதே.”
லிண்டா: “நற்செய்தியிடமும் எங்கள் முயற்சிகளிடமும் ஜனங்களுக்கிருந்த ஈடுபாடு எங்களை மேன்மேலும் உற்சாகப்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு சிறுபட்டணத்தில் அல்ஃபோன்ஸோ என்ற பைபிள் மாணாக்கர் ஒருவர் வசித்துவந்தார். அவ்விடத்தில் பொதுப் பேச்சுகளை நடத்தினால் எத்தனை பிரயோஜனமாக இருக்கும் என யோசிக்க ஆரம்பித்தார். அந்த கிராமத்தில் எண்ணிவைத்தாற்போல் ஒருசில வீடுகளே மரத்தால் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் புதிதாக கட்டப்பட்ட அவருடைய வீடும் ஒன்று; அதில் அவர் சமீபத்தில்தான் குடிபுகுந்திருந்தார். ஊரிலுள்ள வீடுகளிலேயே தன் வீடுதான் யெகோவாவுக்கு உகந்தது என தீர்மானித்த அவர் பழையபடி தன் புல்வேயப்பட்ட குடிசைக்குத் திரும்பினார்; அதன் மூலம் தன் வீட்டை ராஜ்ய மன்றமாக உபயோகிக்க சகோதரர்களுக்குக் கொடுத்துவிட்டார்.”
ஜிம்: “ஊழியத்தில் நாங்கள் ஜனங்களுடன் பேசுவதற்காக செலவிடும் நேரம் அமெரிக்காவில் செலவிடப்படுவதைவிட பத்து மடங்கு அதிகம். அதோடுகூட இங்கு வாழ்க்கைப்பாட்டுக்காக எல்லாரும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடாமல் ஆற அமர செயல்படுகின்றனர். இங்கு பைபிள் படிப்புக்கும் ஊழியத்திற்கும் செலவிட அதிக நேரம் இருப்பதில் சந்தேகமேயில்லை.”
சாண்ட்ரா: “பைபிள் சத்தியம் ஆட்களை எப்படி நல்லவிதமாக மாற்றுகிறது என்பதைக் காண்பது அதிக சந்தோஷத்தைத் தருகிறது. பலசரக்குக் கடை வைத்திருந்த அமாடா என்ற பெயருடைய 69 வயது பெண்மணிக்குப் பைபிள் படிப்பு நடத்தி வந்தேன். அவர் எப்போதும் பத்து மடங்கு பாலில் இரண்டு மடங்கு தண்ணீரைக் கலப்பார். அதோடு மட்டுமா, இந்தத் தண்ணீர் கலந்த பாலையும் அளவைக் குறைத்து தன் வாடிக்கையாளர்களுக்கு விற்றுவந்தார். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் 13-ம் அதிகாரத்தில் “நேர்மை மகிழ்ச்சியை விளைவிக்கிறது” என்ற உபதலைப்பின் கீழுள்ளதை படித்த பிறகு தன் தவறை உணர்ந்த அமாடா அவ்வாறு செய்வதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு அவர் முழுக்காட்டுதல் எடுப்பதைக் காண்கையில் அப்பப்பா எந்தளவுக்கு மகிழ்ந்துபோனேன்.”
கேரன்: “இங்கு இருக்கையில் யெகோவாவைச் சார்ந்திருப்பதைப் போல ஒருபோதும் நான் இருந்ததில்லை அல்லது அவர் என்னை உபயோகித்ததைப் போல் ஒருபோதும் உபயோகித்ததில்லை எனலாம். யெகோவாவுடனான என் நட்பு நாளுக்கு நாள் ஆழமாக வேர்விட்டு வளருகிறது, உறுதியடையவும் செய்கிறது.”
உங்கள் வசதி எப்படி?
இத்தனை வருடங்களில் ஆயிரக்கணக்கான சாட்சிகள் அயல் நாடுகளில் சேவை செய்ய சென்றிருக்கின்றனர். சிலர் ஓரிரு வருடங்கள் இருந்திருக்கின்றனர்; இன்னும் சிலர் நிரந்தரமாகவே அங்கு தங்கிவிட்டிருக்கின்றனர். அயல் நாடுகளில் ராஜ்ய பிரசங்கிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற தங்கள் குறிக்கோளில் அனுபவம், ஆவிக்குரிய முதிர்ச்சி, பொருளாதார வசதிகள் என அநேகத்தை உடன் கொண்டு செல்கின்றனர். வேலைவாய்ப்பு குறைவாக உள்ள பகுதிகளில் வாழும் ராஜ்ய பிரஸ்தாபிகள் முழுநேர ஊழியம் செய்ய இயலாதவர்களாக இருக்கின்றனர். அந்த இடங்களுக்கு இவர்கள் சென்று ஊழியம் செய்ய முடிந்திருக்கிறது. வாகன வசதியற்ற தொலைதூரப் பிராந்தியங்களில் பிரசங்கிக்க அநேகர் வாகனத்தை வாங்கியிருக்கின்றனர். இன்னும் சிலர், விரல்விட்டு எண்ணும் அளவுக்கு சில மூப்பர்களே இருக்கும் பெரிய சபைகளில் தூண்களைப் போல் சேவிப்பதற்கு நகரவாசத்தை தெரிந்தெடுத்திருக்கின்றனர். எனினும், விதிவிலக்கின்றி, தாங்கள் செய்த தியாகத்தைக் காட்டிலும் வெகு அதிகமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அடைந்ததாக எல்லாரும் உறுதியாகச் சொல்கின்றனர்.
அயல் நாடுகளுக்குச் சென்று ஊழியம் செய்யும் பாக்கியத்தைப் பெற உங்களுக்கு விருப்பமா? உங்கள் சூழ்நிலைகள் அனுமதித்தால், அப்படி மாறிச் செல்வதில் உட்பட்டிருக்கும் லாபநஷ்டங்களை நீங்கள் ஏன் அலசியாராயக்கூடாது? முதலில் செய்ய வேண்டியதும் முக்கியமானதும் இதுவே: எங்கு சென்று சேவை செய்ய விரும்புகிறீர்களோ அங்குள்ள கிளை அலுவலகத்திற்கு அதைக் குறித்து எழுதி விசாரியுங்கள். உங்களுக்குக் கிடைக்கும் திட்டவட்டமான தகவல் அதை எந்தளவுக்கு வெற்றிகரமானதாய் ஆக்கலாம் என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவும். அதோடு, ஆங்கில காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1988-ல் வெளிவந்த ‘நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்படு’ என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில் அநேக நடைமுறையான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். சரியான திட்டமிடுதலோடும் யெகோவாவின் ஆசீர்வாதத்தோடும் நீங்களும்கூட அயல் நாட்டுப் பிராந்தியத்தில் சேவை செய்வதால் கிடைக்கும் சந்தோஷத்தை ருசிக்கலாம்.
[பக்கம் 24-ன் படம்]
தொலைதூர பிராயணத்தில் ஷ்வார் இந்திய சமுதாயத்தினரைக் காண செல்லும் டாமும் லிண்டாவும்
[பக்கம் 25-ன் படம்]
அநேகர் சேவை செய்யும் ஈக்வடாரின் தலைநகரான க்விடோ
[பக்கம் 25-ன் படம்]
ஆண்டீஸ் மலைத்தொடரில் பிரசங்கிக்கும் மாகிகோ
[பக்கம் 26-ன் படம்]
கடந்த ஐந்து வருடங்களாக ஈக்குவடாரில் சேவை செய்துவரும் ஹில்பிக் குடும்பத்தார்