‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய’ முடியுமா?
அப்போஸ்தலன் பவுல் ஆசிய மாகாணத்தின் துறைமுக நகரான துரோவாவில் இருந்தபோது அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒருவன், “மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று அவரிடம் கெஞ்சினான். பவுலுக்கு அந்தத் தரிசனம் கிடைத்தவுடன், ‘மக்கெதோனியர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க கடவுள் தங்களை அழைத்திருக்கிறார்’ என்று அவரும் அவருடைய பயணத் தோழர்களும் முடிவு செய்து அங்கு சென்றார்கள். பலன்? மக்கெதோனியாவின் முக்கிய நகரான பிலிப்பியில் வசித்த லீதியாளும் அவளுடைய வீட்டாரும் கிறிஸ்தவர்களானார்கள். பின்பு, மக்கெதோனியாவிலிருந்த வேறு சிலரும் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார்கள்.—அப். 16:9-15.
இன்று யெகோவாவின் சாட்சிகள் பவுலைப் போலவே பக்திவைராக்கியத்தைக் காட்டுகிறார்கள். ஊழியத்திற்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிற இடங்களில் சேவை செய்வதற்காக அநேகர் தங்களுடைய சொந்தச் செலவில் மனப்பூர்வமாக அங்கு சென்றிருக்கிறார்கள். உதாரணமாக, லீசா என்ற சகோதரி ஊழியத்திற்கு அதிக முக்கியத்துவம் தர விரும்பினாள். அதனால் கனடாவிலிருந்து கென்யாவுக்கு மாறிச் சென்றாள். கனடாவைச் சேர்ந்த டிரெவர், எமிலி தம்பதியரும் ஊழியத்தில் அதிகமாக ஈடுபடும் லட்சியத்தோடு மலாவிக்குப் போனார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த பால், மேகி தம்பதியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது, அதை யெகோவாவின் சேவையில் மும்முரமாய் ஈடுபடுவதற்குப் பொன்னான வாய்ப்பாகக் கருதி கிழக்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்றார்கள். உங்களுக்கும் இப்படிப்பட்ட சுய தியாக மனப்பான்மை இருக்கிறதா? இதுபோல் மாறிச் செல்ல உங்களால் முடியுமா? அப்படி மாறிச் சென்று நல்ல பலன்களைப் பெற விரும்புகிறீர்களா? இவ்விஷயத்தில், பைபிளிலுள்ள என்ன நியமங்களும் நடைமுறையான ஆலோசனைகளும் உங்களுக்கு உதவும்?
உங்களையே சோதித்துப் பாருங்கள்
உங்களுடைய உள்நோக்கத்தைச் சோதித்துப் பார்ப்பதே நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம். “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்” என்பது தலைசிறந்த கட்டளை என்று இயேசு சொன்னார். எனவே, கடவுள் மீதுள்ள அன்பினாலும், சீடராக்கும் வேலையைச் செய்துமுடிக்க வேண்டுமென்ற ஆசையினாலுமே அயல்நாட்டில் நாம் சேவை செய்ய வேண்டும். “‘உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்பது இரண்டாம் கட்டளை” என்றும் இயேசு சொன்னார். மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென நாம் உள்ளப்பூர்வமாக ஆசைப்பட்டால்தான் சக மனிதர்மீது அன்பு காட்ட முடியும். (மத். 22:36-39; 28:19, 20) அயல்நாட்டில் சேவை செய்வதற்குக் கடின உழைப்பும், சுய தியாக மனப்பான்மையும் தேவை. ஏதோ சுற்றுலா செல்வதுபோல் இதை நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. வேறு இடத்திற்கு மாறிச் செல்ல அன்பே உங்களைத் தூண்ட வேண்டும். தற்போது நமிபியாவில் சேவை செய்கிற நெதர்லாந்தைச் சேர்ந்த ரெம்கோ, சூஸன்னா தம்பதியர் ரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொல்கிறார்கள்: “நாங்கள் இங்கு இருப்பதற்குக் காரணம் அன்புதான்.”
நமிபியாவில் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்யும் விலி இவ்வாறு சொல்கிறார்: “தங்களை உள்ளூர் சகோதரர்கள் கவனித்துக்கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு வராதவர்கள்தான் அயல்நாட்டு ஊழியத்தில் நிலைத்திருக்கிறார்கள். உள்ளூர் சகோதரர்களுடன் சேர்ந்து சேவை செய்ய வேண்டும், ஊழியத்தில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் வருகிறார்கள்.”
உங்கள் உள்நோக்கத்தைச் சோதித்துப் பார்த்த பின்பு, ‘அயல்நாட்டில் சேவை செய்ய எனக்கு என்ன அனுபவம் இருக்கிறது? ஊழியத்தை நான் திறம்படச் செய்கிறேனா? எனக்கு என்னென்ன மொழிகள் தெரியும்? புதிய மொழியைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தாருடன் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள். உங்கள் சபை மூப்பர்களின் அபிப்பிராயங்களைக் கேளுங்கள். கண்டிப்பாக இதைப் பற்றி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். இப்படி நேர்மையாகச் சுய பரிசோதனை செய்வது, அயல்நாட்டில் ஊழியம் செய்வதற்கான திறமையும் உறுதியும் உங்களுக்கு நிஜமாகவே இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.—“உங்களையே சோதித்துப் பார்க்க. . . ” என்ற பெட்டியைக் காண்க.
எங்கே?
மக்கெதோனியாவுக்கு வரும்படி பவுல் தரிசனத்தில் அழைக்கப்பட்டார். யெகோவா இன்று தரிசனத்தின் மூலம் நம்மை அழைப்பதில்லை. என்றாலும், இந்தப் பத்திரிகையின் வாயிலாகவும் நம்முடைய மற்ற பிரசுரங்கள் வாயிலாகவும் தேவை அதிகமுள்ள இடங்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளலாம். முதல் கட்டமாக, அந்த இடங்களைப் பட்டியலிடுங்கள். ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளவோ அயல்நாட்டில் நிரந்தரமாகத் தங்கவோ உங்களால் முடியாதென்றால், எந்த நாட்டின் முக்கிய மொழி உங்களுக்குத் தெரிந்திருக்கிறதோ அந்த நாட்டுக்குப் போவதைப் பற்றிச் சிந்தியுங்கள். பின்பு, விசா, போக்குவரத்து, பாதுகாப்பு, விலைவாசி, சீதோஷ்ணம் போன்ற விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். இப்படி ஏற்கெனவே மாறிச் சென்றிருப்பவர்களிடம் இதைக் குறித்துப் பேசிப்பார்ப்பது பிரயோஜனமாக இருக்கும். நல்ல தீர்மானம் எடுப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். பவுலும் அவருடைய தோழர்களும், ‘ஆசிய மாகாணத்தில் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்காதபடி கடவுளுடைய சக்தியினால் தடுக்கப்பட்டார்கள்’; பித்தினியாவுக்குப் போக அவர்கள் முயன்றபோதும்கூட, ‘இயேசுவுக்கு அருளப்பட்ட கடவுளுடைய சக்தி அவர்களைப் போக விடவில்லை’ என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் சேவை எங்கு நிஜமாகவே தேவை என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கும் கொஞ்சக் காலம் எடுக்கலாம்.—அப். 16:6-10.
எந்தெந்த நாடுகளில் உங்களால் சேவை செய்ய முடியும் என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்துவிட்டதென வைத்துக்கொள்ளுங்கள். அந்த நாடுகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதுங்கள். நீங்கள் இதுவரை செய்திருக்கும் சேவைகளைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்; அதோடு, அந்த நாட்டிலுள்ள விலைவாசி, வீட்டுவசதி, மருத்துவ வசதி, வேலை வாய்ப்புகள் போன்றவை சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அதையும் கேட்டு எழுதுங்கள். பின்பு, உங்கள் சபை ஊழியக் குழுவிடம் அந்தக் கடிதத்தை அல்லது கடிதங்களைக் கொடுங்கள். தங்களுடைய சிபாரிசுக் கடிதத்தையும் சேர்த்து அந்தந்த நாட்டுக் கிளை அலுவலகங்களுக்கு அவர்கள் அனுப்பிவிடுவார்கள். உங்களால் எங்கு சிறப்பாகச் சேவை செய்ய முடியும் என்பதைத் தீர்மானிக்க அந்த அலுவலகங்களிலிருந்து வரும் பதில் கடிதங்கள் உங்களுக்கு உதவும்.
விலி மேலும் சொல்கிறார்: “முதலில் ஒரு நாட்டுக்குப் போய், தாங்கள் எங்கே வசித்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை அறிந்துகொள்பவர்கள் பொதுவாக நல்ல பலன்களைப் பெற்றிருக்கிறார்கள். இப்படிப் போய்ப் பார்த்த ஒரு தம்பதியர், ஒதுக்குப்புறமான பகுதியில் குடியிருந்தால் ரொம்பவே சிரமமாக இருக்கும் என நினைத்தார்கள். எனவே, தங்களுக்கு ஓரளவு வசதிப்பட்ட ஒரு சிறிய ஊரில் குடியேறினார்கள்.”
புதிய சவால்களைச் சமாளித்தல்
நன்கு பழக்கப்பட்ட இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாறிச் செல்கையில் நீங்கள் சில சவால்களைச் சந்திப்பீர்கள் என்பது உண்மையே. லீசா சொல்கிறாள்: “தனிமைதான் தாங்க முடியாத கொடுமை.” ஆனால், அதை எப்படிச் சமாளித்தாள்? அங்கிருந்த சபையினரோடு நெருங்கிப் பழகினாள். ஒவ்வொருவருடைய பெயரையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முயற்சி செய்தாள். இதற்காக, கூட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வந்தாள், முடிந்த பிறகு வெகுநேரம் இருந்து எல்லாரிடமும் பேசிவிட்டுச் சென்றாள். மற்றவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்தாள், அவர்களைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து உபசரித்தாள், புதுப்புது நண்பர்களைச் சம்பாதித்தாள். “ஊழியத்திற்காக நான் செய்த தியாகங்களை நினைத்து எனக்குக் கொஞ்சம்கூட வருத்தம் இல்லை. யெகோவா என்னை நிறையவே ஆசீர்வதித்திருக்கிறார்” என்று அவள் சொல்கிறாள்.
பால், மேகி தம்பதியர் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய பிறகு, 30 வருடங்களாகக் குடியிருந்த வீட்டை விட்டுவிட்டு வேறொரு நாட்டிற்கு மாறிச் சென்றார்கள். பால் இப்படிச் சொல்கிறார்: “உடமைகளையெல்லாம் விட்டுச் செல்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. குடும்பத்தாரை விட்டுப் பிரிவது நாங்கள் எதிர்பார்த்ததைவிட ரொம்பவே கஷ்டமாக இருந்தது. விமானத்தில் இருந்தபோது, எங்களால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அந்த நாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பின்பு, ‘நம்மால் முடியாது, திரும்பிப் போய்விடலாம்’ என்ற நினைப்பு அடிக்கடி வந்தது. ஆனால், நாங்கள் யெகோவாவையே சார்ந்திருந்தோம். புதுப்புது நண்பர்கள் கிடைத்தபோது எங்களால் ஊழியத்தைத் தொடர முடிந்தது.”
கனடாவைச் சேர்ந்த கிரெக், கிறிஸ்டல் தம்பதியருக்கு நமிபியா நாட்டின் ஆட்சிமொழியான ஆங்கிலம் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் அந்த நாட்டிற்கு மாறிச் சென்றார்கள். பிற்பாடு, உள்ளூர் மொழியைக் கற்றுக்கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நினைத்தார்கள். “சில சமயங்களில், நாங்கள் சோர்ந்துபோனது உண்மைதான். ஆனால், அந்த மொழியைக் கற்றுக்கொண்ட பிறகே அவர்களுடைய கலாச்சாரம் எங்களுக்குப் பிடிபட்டது. அங்கிருந்த சகோதர சகோதரிகளுடன் நெருங்கிப் பழகியது புதிய சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ள உதவியது” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
இடம்மாறிச் செல்பவர்கள் இப்படி மனத்தாழ்மையோடு, மனமுவந்து செயல்படுவது உள்ளூர் சகோதர சகோதரிகள்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஊழியம் செய்வதற்காக அயர்லாந்துக்கு மாறி வந்தவர்களைப் பற்றி அங்கு வளர்ந்த ஜென்னி ஆசையாக நினைத்துப் பார்க்கிறாள். “அவர்கள் உபசரிக்கும் குணமுள்ளவர்களாக இருந்தார்கள்; மற்றவர்களுக்குச் சேவை செய்யவே வந்தார்கள், மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்காக அல்ல. அவர்களிடமிருந்த பக்திவைராக்கியமும் சந்தோஷமும் என்னையும் தொற்றிக்கொண்டது.” ஜென்னி இப்போது தன் கணவருடன் சேர்ந்து காம்பியாவில் மிஷனரியாகச் சேவை செய்கிறாள்.
யெகோவாவின் ஆசீர்வாதமே “ஐசுவரியத்தைத் தரும்”
மக்கெதோனியாவில் பவுல் ஊழியம் செய்தபோது அவருக்குக் கைமேல் பலன் கிடைத்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, பிலிப்பியிலிருந்த சகோதரர்களுக்கு அவர் இப்படி எழுதினார்: “உங்களை நினைக்கும்போதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.”—பிலி. 1:3.
டிரெவருக்கும் எமிலிக்கும்கூட பவுலைப் போலவே ஊழியத்தில் பலன் கிடைத்தது; இவர்கள் இருவரும் மலாவியில் சேவை செய்த பிறகு, கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டார்கள். “நாங்கள் எடுத்த தீர்மானம் சரிதானா என்ற எண்ணம் அவ்வப்போது வந்தது; என்றாலும், அந்தத் தீர்மானத்தை நினைத்துச் சந்தோஷப்பட்டோம். எங்கள் இருவருக்கிடையே இருந்த பந்தமும் பலமானது, யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் உணர்ந்தோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள். கிரெக், கிரிஸ்டல் தம்பதியரும் இவ்வாறு சொல்கிறார்கள்: “வேறெந்த வேலையிலும் நாங்கள் இந்தளவு சந்தோஷமாக இருந்திருக்க மாட்டோம்.”
எல்லாராலும் அயல்நாட்டு ஊழியத்தில் ஈடுபட முடியாது என்பது உண்மைதான். தங்களுடைய நாட்டிலேயே தேவை அதிகமுள்ள வேறொரு இடத்திற்கு மாறிச் செல்லும்போது சிலர் நிறையப் பலன்களைப் பெறலாம். இல்லையென்றால், தாங்கள் வசிக்கும் ஊரிலேயே தேவை அதிகமுள்ள வேறொரு சபைக்கு மாறிச் செல்வதைச் சிலர் லட்சியமாக வைக்கலாம். எதுவானாலும்சரி, முழுமூச்சோடு யெகோவாவுக்குச் சேவை செய்வதே முக்கியம். (கொலோ. 3:23) இப்படிச் செய்தால், ‘யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’ என்ற வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் உண்மையாகும்.—நீதி. 10:22.
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
உங்களையே சோதித்துப் பார்க்க. . .
அயல்நாட்டுக்குச் சென்று உங்களால் ஊழியம் செய்ய முடியுமா என்பதைச் சோதித்துப் பார்க்க, பின்வரும் கேள்விகளைச் சிந்தித்துப் பாருங்கள்; அதைக் குறித்து ஜெபம் செய்யுங்கள், நேர்மையாகச் சீர்தூக்கிப் பாருங்கள். இதற்கு, காவற்கோபுரத்தின் முந்தைய இதழ்களிலுள்ள சில தகவல்கள் உங்களுக்கு உதவும்.
• நான் ஆன்மீகச் சிந்தையுள்ளவனா(ளா)?—“மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் படிகள்” (அக்டோபர் 15, 1997, பக்கம் 6)
• நான் திறம்பட ஊழியம் செய்கிறேனா?—“பயனியர் ஊழியத்தில் வெற்றி பெறுவது எப்படி?” (ஆங்கில காவற்கோபுரம், மே 15, 1989, பக்கம் 21)
• குடும்பத்தாரையும் நண்பர்களையும் விட்டு என்னால் பிரிந்திருக்க முடியுமா?—“கடவுளுடைய சேவையில் வீட்டு ஞாபகத்தை சமாளிப்பது” (மே 15, 1994, பக்கம் 28)
• ஒரு புதிய மொழியை என்னால் கற்றுக்கொள்ள முடியுமா?—“வேற்றுமொழி சபையோடு சேவை செய்தல்” (மார்ச் 15, 2006, பக்கம் 17)
• இதற்கு ஆகும் செலவை என்னால் சமாளிக்க முடியுமா?—“அயல் நாட்டில் உங்களால் ஊழியம் செய்ய முடியுமா?” (அக்டோபர் 15, 1999, பக்கம் 23)
[பக்கம் 6-ன் படம்]
மனத்தாழ்மையோடு, மனமுவந்து செயல்படுவது உள்ளூர் சகோதர சகோதரிகள்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது
[பக்கம் 7-ன் படம்]
மற்றவர்களுக்குச் சேவை செய்ய வருகிறவர்களே உண்மையில் பலன் காண்கிறார்கள்