எங்கிருந்தோ வந்த அந்தப் பெரிய வெண்பறவை
ஜப்பானிலிருந்து விழித்தெழு! நிருபர்
அவ்வழகிய வெண்பறவைகளை ஒவ்வொன்றாக அடித்துக்கொல்ல, கையில் தடியுடன் அந்த மனிதர்கள் புறப்பட்டனர். ஆல்பட்ராஸ் பறவைகளே அவை. அந்த மனிதர்கள்: ஹானிமோன் டாமாவோகீயும் அவனது கூட்டுக் களவாணிகளும். அந்த இடம்: டோரீஷிமா எனப்படும் ஒரு தீவு; இது டோக்கியோவுக்குத் தெற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. அந்த வருடம்: 1887.
டாமாவோகீ இவ்வாறு செய்ய வருடக்கணக்காக திட்டமிட்டிருந்தான். மெத்தைகள் செய்யத் தேவைப்படும் மென்மையான இறகுகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிக மவுசு இருந்தது; அத்துடன், டோரீஷிமா தீவு வெகு தொலைவில் இருந்தது. அத்தீவில் ஆயிரக்கணக்கில் ஆல்பட்ராஸ் பறவைகள் மட்டுமே வசித்துவந்தன. அவை இனப்பெருக்கம் செய்வதற்காக தவறாமல் அங்கு வந்துசேர்ந்தன. அவற்றுள் குட்டைவால் ஆல்பட்ராஸ் மீதே டாமாவோகீக்கு ஒரு கண் இருந்தது. அதுவே வட அரைக்கோளத்தில் வசித்துவந்த கடல்பறவைகளிலேயே மிகப் பெரியது. சுமார் எட்டு கிலோ எடையும், விரித்த இறக்கையுடன் இரண்டரை மீட்டருக்கும் அதிகமான நீளமும் உள்ள மொழுமொழுவென்ற உடலை, எத்தனை இறகுகள் மூடியிருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! மேலும், இந்தப் பறவை எளிதில் வசப்படுத்தத் தக்கதாய் இருந்தது; பயமுறுத்தினாலும் பறக்கப் பிடிக்காமல் இருந்தது.
டாமாவோகீ அப் பறவைகளைக் கொன்று அவற்றின் இறகுகளைப் பிடுங்குவதற்காக கிட்டத்தட்ட 300 பணியாட்களை அந்தத் தீவுக்கு கூட்டிச்சென்றான். அவர்கள் ஒரு கிராமத்தையே ஏற்படுத்தி, செத்துப்போன பறவைகளைக் கடத்த ஒரு சிறிய இரயில் பாதையையும் அமைத்தனர். இந்த வேலை அவ்வளவு திறம்பட நடந்ததால், கிட்டத்தட்ட 50 லட்சம் பறவைகளைக் கொன்றதில் டாமாவோகீ விரைவில் பணக்காரனாகி விட்டான். இந்தப் படுநாசம் அத்தனை மோசமானதாய் இருந்ததால், அத்தீவில் 1902-ல் எரிமலை வெடித்து அந்தக் கிராமத்தையும் அதில் வசித்த அனைவரையும் காவுகொண்டபோது, சிலர் அதை “ஆல்பட்ராஸைக் கொன்றதனால் வந்த சாபம்” எனக் கருதினர். ஆனாலும், மிச்சமீதி இருந்த பறவைகளைத் தேடிக்கொண்டு, அடுத்த ஆண்டே ஆட்கள் அங்கு மறுபடியும் சென்றனர்.
கிட்டத்தட்ட 1,500 கிலோமீட்டருக்கு அப்பால் கிழக்கு சீனக் கடலில் தைவானுக்கும் ஒகினாவாவுக்கும் இடையில் அமைந்துள்ள பாறை மிகுந்த, ஆள் அரவமில்லாத தீவுத் தொகுதியில், டாட்சுஷீரோ கோகா என்ற மனிதன் நிறைய பணம் கொழிக்கும் அதே போன்ற தொழிலை நடத்தி வந்தான். டாமாவோகீயைப் போலவே, கோகாவும் இந்தப் பறவைகளின் எண்ணிக்கை திடீரென குறைவதைக் கண்டான். இறுதியில், 1900-ல் அவன் அந்தத் தீவை விட்டுச் சென்றான்: ஆனால் அதற்குள் சுமார் பத்து லட்சம் ஆல்பட்ராஸ் பறவைகளையாவது கொன்றிருந்திருப்பான்.
பேராசை பெருநஷ்டம்
அவ்வாறாக, பறவைகளின் ஒட்டுமொத்த அழிவு, பெருநஷ்டத்தை ஏற்படுத்திய ஓர் அவலமாய் போனது. பல்வேறு வகை ஆல்பட்ராஸ்களில் மூன்று வகைகள் வட பசிபிக் பகுதியில் வசிக்கின்றன; முக்கியமாய் அவை தங்குமிடம் டாமாவோகீயும் கோகாவும் இருந்து கொள்ளையடித்த அந்தத் தீவுகளே. அவற்றில் ஒன்றான குட்டைவால் ஆல்பட்ராஸ் (Diomedea albatrus), இத்தீவைத் தவிர உலகின் வேறெந்தப் பகுதியிலும் இனப்பெருக்கம் செய்வதாகத் தெரியவில்லை.
ஒருகாலத்தில், நிலத்துக்கு அப்பால் வெகு தொலைவிலிருக்கும் நடுக்கடலில், கடற்பயணிகளை ஆல்பட்ராஸ் பிரமிக்கச் செய்தது. இது, புராணங்களிலும் கடல் சார்ந்த பாரம்பரியங்களிலும், பெருங்காற்றுகள், பனி, மூடுபனி ஆகியவற்றுக்கு முன்னோடியாக சித்தரிக்கப்படுகிறது. என்றாலும், இப் பெரிய வெண்பறவையின் அபூர்வமான நீண்ட இறக்கைகள், சில நாட்களுக்குள் பெருங்கடலைக் கடக்க மிக உயரத்தில் பறப்பதற்கு உதவினதும், பெரும்பாலும் காற்றில் மிதப்பதுபோல், கிட்டத்தட்ட இறக்கைகளை அசைக்காமலே பறந்ததும், வெறும் புராணக்கதையல்ல. இறக்கை அடிக்காமல் பறப்பதும், கடலிலேயே நீண்ட காலம் கழிப்பதுமாகிய அதன் திறமைக்கு ஈடிணை வேறெதுவுமில்லை.
ஆல்பட்ராஸ் வானில் வெகு கம்பீரமாய் உயரப் பறந்தாலும், தரையில் அதன் நடமாட்டம் ரொம்ப மெதுவாகவும், சங்கடம் மிக்கதாகவும் உள்ளது. அதன் நீண்ட இறக்கைகளும், அதைவிட பருத்த அதன் உடலும் சீக்கிரத்தில் மேலே எழும்பத் தடையாய் இருக்கின்றன. இத்துடன், மனிதருக்கு அஞ்சாத இப் பறவையின் பண்பும் எளிதில் பலியாக்குகிறது. அதன் காரணமாக, இதற்கு கூனி பேர்ட், மாலீமாக் போன்ற பெயர்களை ஆட்கள் சூட்டினர். a
ஆல்பட்ராஸ் பறவைகள் இறந்தால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்று தெரிந்துகொண்டதும், பேராசை பிடித்த பொறுப்பற்ற மக்கள் அவற்றை தயங்காமல் கொன்றனர். 1933 வாக்கில், டோரீஷிமாவில் 600-க்கும் குறைவான பறவைகளே இருந்ததாக ஒரு சுற்றாய்வு காட்டியது. செய்வதறியாமல் தவித்த ஜப்பானிய அரசு, அந்தத் தீவுக்கு எவரும் செல்லக்கூடாதென அறிவித்தது. ஆனால், பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள், அந்தத் தடை அமலுக்கு வருவதற்கு முன்பு, தங்களால் முடிந்தளவு அவற்றைக் கொன்றுவிட விரைந்தனர். 1935 வாக்கில், வெறும் 50 பறவைகள் மட்டுமே மீந்திருந்ததாக ஒரு நிபுணர் கூறினார். இறுதியில், அந்தக் குட்டைவால் ஆல்பட்ராஸ் இனம் முற்றிலும் மறைந்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மனித பேராசையால் எத்தனை பெருநஷ்டம்! ஆனால் விரைவில் ஒரு பெரிய ஆச்சரியம் நிகழ்ந்தது.
எங்கிருந்தோ மீண்டும் வருதல்
ஜனவரி 1951-ன் ஒரு மாலைப்பொழுதில், டோரீஷிமா தீவிலுள்ள பாறைகளின் மேல் ஏறிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென்று கிளுக்கிளுக் என்ற சத்தம் வந்த திசையில் பார்த்த மாத்திரத்தில் ஒரு கணம் திகைத்துவிட்டார். ஆல்பட்ராஸ் பறவையொன்றை நேருக்கு நேர் கண்டார்! அந்தக் குட்டைவால் ஆல்பட்ராஸ் எப்படியோ தப்பிப்பிழைத்து, டோரீஷிமாவில் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்திருந்தது. ஆனால் இப்போதோ, மனிதர் செல்ல முடியாத சரிவான நிலப்பகுதிகளில் இவை வசித்துவந்தன. அவை, மனிதரைக் கண்டால் பயப்படும் ஓர் எச்சரிக்கை உணர்வையும்கூட தங்களுக்குள் வளர்த்திருந்தன. இயற்கைப் பிரியர்கள் எவ்வளவாய் மகிழ்ந்திருப்பர்!
ஜப்பானிய அரசு விரைந்து செயல்பட ஆரம்பித்தது. அப்பறவை தங்குவதற்கு ஏற்றவாறு அந்த நிலப்பகுதியை உறுதிப்படுத்த பாம்பஸ் புல்லை பயிரிட்டது; மனிதர் டோரீஷிமாவுக்குச் செல்வதற்குத் தடையும் விதித்தது. ஆல்பட்ராஸ் பறவை ஒரு தேசிய பொக்கிஷம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது; சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்டது.
1976 முதல், ஜப்பானின் டோஹோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹீரோஷீ ஹாஸெகாவா, இந்தப் பறவைகளைப் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார். அவற்றைக் கணக்கிடுவதற்காக தற்போது ஆண்டுக்கு மூன்று முறை அந்தத் தீவுக்குச் சென்றுவருகிறார். இந்தப் பறவைகளின் கால்களில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நிற வளையத்தைக் கட்டுவதால், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குட்டைவால் ஆல்பட்ராஸ் பறவைகள் தாங்கள் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கம் செய்வதற்காக திரும்பி வருகின்றன என்று கண்டறிந்திருப்பதாக விழித்தெழு! நிருபர்களிடம் அவர் சொன்னார். அவை ஆறு வயதில் முதலாவதாக இனப்பெருக்கம் செய்கின்றன; அப்போது ஒவ்வொரு முறையும் ஒரு முட்டையை மாத்திரம் இடுகின்றன. ஆகவே, அவற்றின் வாழ்நாள் காலம் சராசரியாக 20 வயது என வைத்துக்கொண்டாலும், அவற்றின் எண்ணிக்கை பெருகுவதற்கு வெகுகாலம் எடுக்கும். 1996/97-ன் குளிர்காலத்தின்போது டோரீஷிமாவில் இடப்பட்ட 176 முட்டைகளில், 90 முட்டைகள் மட்டுமே குஞ்சு பொரித்தன.
மீதமுள்ள நேரத்தை ஆல்பட்ராஸ் பறவைகள் எப்படி கழிக்கின்றன? இதைப் பற்றி அதிகம் தெரியவில்லை என ஹாஸெகாவா கூறுகிறார். அவை நிச்சயமாகவே நிலத்தையும் மக்களையும் தவிர்க்கின்றன. ஆல்பட்ராஸ் பறவைகள் கப்பல்களை பின்தொடர்ந்து அவற்றில் இறங்குகின்றனவா? அது வெறும் கட்டுக்கதைதான்; அதை நிரூபிக்க முடியவில்லை என ஹாஸெகாவா கூறுகிறார். “ஜப்பானிய ஆல்பட்ராஸ் பறவைகள் கப்பல்களுக்கு வருவதில்லை” என்பதை நிச்சயமாய் சொல்ல முடியும் என அவர் சொல்கிறார். ஆனால், உலகின் மற்ற பகுதிகளில், “அவற்றுக்கு தீனி போட்டால் குறுகிய நேரத்திற்கு அவை கப்பல்களுக்கு வரலாம்” என்றும் அவர் கூறுகிறார். பெரும்பாலான சமயங்களில், வெகு உயர பறப்பது, பரந்த சமுத்திரத்தில் வட்டமிடுவது ஆகியவற்றின் மூலம் வானில் சாகசம் புரிகின்றன. அவற்றுக்குக் களைப்பு ஏற்படுகையில், கடலின்மீது பறந்துகொண்டே உறங்குகின்றன. கணவாய் மீன், பறக்கும் மீன், நண்டு, இறால் ஆகியவற்றை உண்ணுகின்றன. ஹாஸெகாவா வளையமிட்டுள்ள பறவைகள் பேரிங் கடலிலும் அலாஸ்கா வளைகுடாவிலும் தவறாமல் கண்டுபிடிக்கப்படுகின்றன. 1985-ல் கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் குட்டைவால் ஆல்பட்ராஸின் காட்சி—ஒரு நூற்றாண்டு முழுவதும் இல்லாமல் முதன்முறையாக காணப்பட்டது—பறவைப் பிரியர்களைப் பரவசமூட்டியது.
எதிர்காலம் என்ன?
நல்லவேளையாக, குட்டைவால் ஆல்பட்ராஸ் பறவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த மே மாதத்தில், “குஞ்சுகளையும் சேர்த்து 900-க்கும் அதிகம்” இருப்பதாக ஹாஸெகாவா கணக்கிட்டார். அவர் மேலும் கூறினதாவது: “ஆண்டு 2000 வாக்கில், டோரீஷிமாவில் மட்டுமே 1,000-க்கும் மேற்பட்ட பறவைகள் இருக்க வேண்டும்; அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் 100-க்கு மேற்பட்ட குஞ்சுகள் பொரிக்க வேண்டும்.” 88 ஆண்டுகளுக்குப் பின்பு, 1988-ல், கிழக்கு சீனக் கடலில் அவை மீண்டும் இனப்பெருக்கம் செய்வதைக் காண்பது சிலிர்ப்பூட்டுகிறது. இந்தப் பறவைகள், தகராறுக்கு உட்பட்ட பகுதியிலிருக்கும், பாறை நிறைந்த தீவுகளைத் தெரிவு செய்துள்ளன; தற்போதைக்கு இந்த இடம் மனித தலையீட்டிலிருந்து அவற்றுக்கு பாதுகாப்பு அளிப்பதாய் இருக்க வேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு இழைக்கப்பட்ட தவறுகள், படிப்படியாக சரிசெய்யப்பட்டுள்ளன. அல்லது, சரிசெய்யப்பட்டுள்ளனவா? ஆய்வாளர்கள் இந்தப் பறவைகளுக்கு வளையம் கட்டுவதற்காக இவற்றைப் பிடிக்கையில், இவை பயந்து வாந்தி எடுப்பதைக் காண்கின்றனர். அப்போது, இவை தீனி பொறுக்கும் இடமான சமுத்திரத்தில் மக்கள் பொறுப்பற்று வீசி எறியும் பொருட்களான பிளாஸ்டிக் துண்டுகள், தூக்கி எறியப்படும் சிகரெட் லைட்டர்கள், பிற கழிவுப்பொருட்கள் ஆகியவை அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருகின்றன.
மனித முட்டாள்தனத்தால் இந்தப் பறவைகள் மீண்டும் மரண வாசலில் அடியெடுத்து வைக்குமா?
[அடிக்குறிப்புகள்]
a “‘கூனி’ என்ற சொல் ஆரம்பத்தில் ‘கோனி’ என பழமையான ஆங்கில வார்த்தையில் அழைக்கப்பட்டது; அது முட்டாள் என்பதைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது . . . ‘மாலீமாக்’ என்றோ ‘மாலீஹாக்’ என்றோ அழைக்கப்படும், அல்லது வெறுமனே ‘மாலீ’ என அழைக்கப்படும் வார்த்தை, ‘ஸ்டுப்பிட் கல்’ என்ற ஆங்கில பெயரான முட்டாள் கடற்பறவை என அர்த்தமுடைய ‘மாலமாக்’ என்ற டச்சு வார்த்தையிலிருந்து வருகிறது.” (ஆலிவர் எல். ஆஸ்டின், இளையவரால் எழுதப்பட்ட பேர்ட்ஸ் ஆஃப் த உவர்ல்ட்) ஜப்பானிய மொழியில், “முட்டாள் பறவை” என அர்த்தமுடைய ஆஹாடாரீ என்ற சொல், “பெரிய வெண்பறவை” என்ற அர்த்தமுடைய பழைய பெயரின் இடத்தை ஏற்றது.
[பக்கம் 16-ன் படம்]
உலகிலுள்ள வானில் மிதக்கும் பறவைகளிலேயே திறம்பட்டவை என்ற பெயரைப் பெற, நீண்ட மெல்லிய இறக்கைகள் ஆல்பட்ராஸ் பறவைகளுக்கு உதவுகின்றன
[பக்கம் 16, 17-ன் படம்]
குட்டைவால் ஆல்பட்ராஸ் பறவைகளின் வீடான டோரீஷிமா
[பக்கம் 17-ன் படம்]
டோரீஷிமாவில் குட்டைவால் ஆல்பட்ராஸ் பறவைகள் மீண்டும் தலைதூக்குதல்