பைபிளின் கருத்து
கிறிஸ்தவ ஊழியர்களுக்கு மணமாகாத நிலை அவசியமா?
அடிப்படையில், மணமாகாத நிலை என்பது, திருமணமாகாமல் இருப்பதைக் குறிக்கிறது. என்றாலும், த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுவதன்படி, இந்தச் சொல், “மதத் தலைவர், மதத்தில் முக்கியப் பணியாளர், அல்லது பக்தர் ஆகிய பணிகளுடன் தொடர்புடைய ஏதாவது ஒரு பொறுப்பை வகிக்கும் நபர், மணமாகாமல் இருக்கும் நிலையைக் குறிப்பிட பொதுவாய் பயன்படுத்தப்படுகிறது.” “மணமாகாத நிலை” என்ற சொல், “பரிசுத்த நேர்த்திக்கடன் அல்லது உறவினைத் துறக்கும் செயல், அல்லது மதத்தில் ஒருவருக்கிருக்கும் ஸ்தானத்தின் காரணமாக அல்லது மதத்தை முக்கியமாய் கருதுவதன் காரணமாக” திருமணமாகாமல் இருக்கும் நிலைக்குப் பொருந்துகிறது.
கடந்த காலத்தில் எப்பொழுதோ, ஒரு சில முக்கிய மதங்கள், தம் ஊழியர்களுக்கு மணமாகாத நிலையை ஓர் அடிப்படை தேவையாக வகுத்திருக்கிறது. என்றாலும், கிறிஸ்தவமண்டல மதங்களிலேயே கத்தோலிக்க மதத்தில்தான் மணமாகாத நிலை மிகவும் முக்கிய அம்சமாய்த் தெரிகிறது. இன்றோ, கத்தோலிக்க மணமாகாத நிலை குறித்து ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. த வில்ஸன் குவார்ட்டர்லி என்ற பத்திரிகை, “12-வது நூற்றாண்டு முதல், கத்தோலிக்க மதகுருக்களுக்கு ஓர் அடிப்படைத் தேவையாய் இருந்துவரும் கட்டாய மணமாகாத நிலைக்கு, குருமார்களை பதவியில் அமர்த்தி, தொடர்ந்து அவர்களை பதவியில் வைத்திருப்பதில் சர்ச்சுக்கு இருந்த பிரச்சினையே மூல காரணமாய் இருக்கிறது என்று சமீப பத்தாண்டுகளில் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன” என குறிப்பிட்டது. மனித சமுதாய வளர்ச்சி பற்றிய ஆய்வாளர் ரிச்சர்ட் ஏ. ஷோன்ஹர் கூறுவதன்படி, “சரித்திரம் மற்றும் சமூக மாற்றத்தின் அப்பட்டமான உண்மைகள், கத்தோலிக்க குருத்துவத்தில் பிரத்தியேகமாக காணப்படும் ஆண்களின் மணமாகாத நிலைக்கு எதிராகவே இருந்திருக்கின்றன.” மணமாகாத நிலை குறித்து பைபிளின் கருத்து என்ன?
திருமணமா பிரமச்சரியமா?
சரித்திரம் முழுவதிலும், பக்தர்களான எண்ணற்ற ஆண்களும் பெண்களும் வெவ்வேறான பல மதங்களில் மணமாகாத நிலையைத் தெரிவு செய்திருக்கின்றனர். ஏன்? பல சந்தர்ப்பங்களில், “தீமைக்குக் காரணம்” உடல் சம்பந்தப்பட்ட, பொருள் சம்பந்தப்பட்ட ஆசாபாசங்களே என அவர்கள் நம்பினதால் அவ்வாறு செய்திருக்கின்றனர். இது, பாலியல் நடவடிக்கை அனைத்திலுமிருந்து விலகியிருப்பதன் மூலமாக மட்டுமே ஆவிக்குரிய சுத்தத்தைக் காத்துக்கொள்ள முடியும் என்ற தத்துவத்தைத் தோற்றுவித்தது. என்றாலும், இது பைபிளின் கருத்து அல்ல. பைபிளில், திருமணம், கடவுளிடமிருந்து வரும் புனிதமான, பரிசுத்த பரிசாக நோக்கப்படுகிறது. சிருஷ்டிப்பைப் பற்றிய ஆதியாகமப் பதிவு, திருமணம் கடவுளுடைய பார்வையில், “நல்லது” எனவும், கடவுளுடன் உள்ள புனிதமான ஆவிக்குரிய உறவுக்கு ஓர் இடைஞ்சலாக இல்லை எனவும் சித்தரித்துக் காட்டுகிறது.—ஆதியாகமம் 1:26-28, 31; 2:18, 22-24; நீதிமொழிகள் 5:15-19-ஐயும் காண்க.
அப்போஸ்தலனாகிய பேதுருவும், ஆரம்ப கால கிறிஸ்தவ சபையில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருந்த, கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற ஊழியர்களும் திருமணமான ஆண்களே. (மத்தேயு 8:14; அப்போஸ்தலர் 18:2; 21:8, 9; 1 கொரிந்தியர் 9:5) சபை கண்காணிகளை, அல்லது ‘பிஷப்புகளை’ நியமிக்கும் விஷயத்தில் தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்த வழிகாட்டுக் குறிப்புகள் இதைத் தெளிவாக்குகின்றன. அவர் பின்வருமாறு எழுதினார்: “ஒரு பிஷப், குற்றஞ்சாட்டப்படாதவனாயும், ஒரே மனைவியையுடைய புருஷனாயும் இருக்க வேண்டும்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை; 1 தீமோத்தேயு 3:2, ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் வர்ஷன், கத்தோலிக்க பதிப்பு) “ஒரு பிஷப்” திருமணம் செய்துகொள்வது பொருத்தமற்றது என்று எந்த விதத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கவனியுங்கள். “ஒரு பிஷப்” பல மனைவிகளை உடையவராய் இருக்கக் கூடாது; திருமணம் செய்தவராய் இருந்தால், அவருக்கு ஒரே ஒரு மனைவிதான் இருக்க வேண்டும் என்பதையே பவுல் வெறுமனே குறிப்பிட்டுக் காட்டினார். உண்மையில், மெக்ளின்டாக், ஸ்ட்ராங் என்பவர்களின் ஸைக்ளோப்பீடியா ஆஃப் பிப்ளிக்கல், தியோலஜிக்கல், அண்ட் எக்லஸியாஸ்டிக்கல் லிட்டரேச்சர் இறுதியாகக் கூறுவதாவது: “பு[திய] ஏ[ற்பாட்டில்] உள்ள எந்தப் பகுதியையும் குறிப்பிட்டு, குருமாரை சுவிசேஷகராக அனுப்பும்போது திருமணத்துக்கு எதிராக அது தடைவிதித்தது என விளக்கம் சொல்ல முடியாது.”
திருமணத்துக்கு உயர்ந்த மதிப்பைக் காட்டினபோதிலும், சுதந்திரமாய் தெரிவு செய்யப்படுகையில் பிரமச்சாரியாய் இருப்பதை பைபிள் நிச்சயமாகவே தவறு என சொல்வதில்லை. சிலருக்கு அதுவே விரும்பத்தகுந்த ஒரு வழியாய் இருக்கும் என பைபிள் பரிந்துரைக்கிறது. (1 கொரிந்தியர் 7:7, 8) சில ஆண்களும் பெண்களும் மணமாகாத நிலையை விரும்பி தெரிவு செய்கின்றனர் என இயேசு கிறிஸ்து கூறினார். (மத்தேயு 19:12) ஏன்? திருமணம் செய்துகொள்வதுதானே ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடைசெய்யும் அசுத்தமான ஒரு பழக்கம் என்பதனால் அல்ல. மாறாக அவசரமான காலம் என அவர்கள் உணரும் இந்தக் காலப்பகுதியில் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் வெறுமனே தங்கள் முயற்சிகளை ஒருமுகப்படுத்தவே அவர்கள் இந்த வழியைத் தெரிவு செய்தனர்.
கட்டாய மணமாகாத நிலைக்கு எது வழிநடத்தியது
என்றாலும், கிறிஸ்துவின் காலத்தைத் தொடர்ந்து சூழ்நிலைகள் மாறின. நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளின்போது, “திருமணமான ஊழியர்களும் திருமணமாகாத ஊழியர்களும் இருந்தனர்” என டேவிட் ரைஸ் விளக்குகிறார்; இவர், திருமணம் செய்துகொள்வதற்காகவே குருத்துவத்தைத் துறந்த டொமினிக்கன் உறுப்பினர். பிறகு, பாலியல் மற்றும் திருமணத்தைப் பற்றி திரித்துக் கூறப்பட்ட நோக்குநிலையை உருவாக்கிய, “கிரேக்க மற்றும் பைபிள் கருத்துக்களின் கலவை” என மத எழுத்தாளர் ஒருவர் விளக்கிய ஒன்றால், கிறிஸ்தவர்களாக உரிமை பாராட்டிக்கொண்டவர்கள்மீது செல்வாக்கு செலுத்தப்படுதல் ஆரம்பமானது.
உண்மையில் சிலர், “கடவுளுடைய ராஜ்ய வேலைக்கென [தங்களை] அர்ப்பணிக்க முழுமையான சுதந்திரத்தைப் பெறுவதற்காக” மணமாகாத நிலையைத் தொடர்ந்து கடைப்பிடித்தனர். என்றபோதிலும், மற்றவர்கள், தாங்கள் ஊறிப்போய் இருந்த பொய்மத தத்துவங்களால் அதிகமாய் தூண்டுதல் அளிக்கப்பட்டனர். த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுவதாவது: “உடலுறவு கொள்ளுதல் அசுத்தமானது என்றும், [கிறிஸ்தவ சர்ச் என உரிமை பாராட்டிக்கொள்ளுவதில்] தோன்றிய பரிசுத்தத்துடன் ஒத்துப்போகாது என்றும் நம்பினதுதான், மணம் செய்துகொள்ளாமல் இருக்கும் பழக்கத்திற்கு முக்கிய தூண்டுதலாய் அமைந்தது.”
நான்காம் நூற்றாண்டில், சர்ச், “புனித நன்மை வழங்குவதற்கு முந்தின இரவில் திருமணமான ஒரு மதகுரு பாலுறவு கொள்வதைத் தடைசெய்தது” என ரைஸ் கூறுகிறார். அன்றாடம் நன்மை வழங்கும் முறையை சர்ச் துவங்கியபோதோ, மதகுருக்கள் நிரந்தரமாகவே பாலுறவு கொள்வதிலிருந்து விலகி இருக்க வேண்டியதை அது அர்த்தப்படுத்தியது. காலப்போக்கில், மதகுருக்கள் திருமணம் செய்துகொள்வது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது. இவ்வாறு, சர்ச்சில் ஓர் ஊழியராகப் போகும் எவருக்கும் மணமாகாத நிலை கட்டாயப்படுத்தப்பட்டது.
அப்படிப்பட்ட காரியம் நிகழும் என்பதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். அவர் எழுதினதாவது: “ஆகிலும், ஆவி வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டுவிலகிப்போவார்கள். விவாகம்பண்ணாதிருக்கவும் . . . வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.”—1 தீமோத்தேயு 4:1, 3, ஜெரூசலம் பைபிள்.
“ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் [“நிரூபிக்கப்படும்,” NW].” (மத்தேயு 11:19) கடவுளுடைய தராதரங்களிலிருந்து விலகிச்செல்லும் முட்டாள்தனம், அதன் பலாபலன்கள் அல்லது விளைவுகளால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கட்டாய மணமாகாத நிலை என்ற விஷயத்தின் பேரில் அபிப்பிராயத்தை அறிய உலகமுழுவதிலுமுள்ள அநேக குருமார்களை ஆசிரியர் டேவிட் ரைஸ் பேட்டிகண்டார். அவர் பேட்டி கண்டவர்களில் சிலர் கூறினதாவது: “குருத்துவத்திலேயே இருந்துகொண்டு, முடிந்தவரை மக்களுக்கு நன்மை செய்யவேண்டியது; அத்துடன், பக்தியுள்ள பெண்கள், உங்களிடம் வசீகரிக்கப்பட்டு பாலியல் விஷயத்தில் தங்களை அளிக்க முன்வந்தால் விவேகத்துடன் அவர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.”
மத்தேயு 7:20-ஐ மேற்கோள் காட்டி ரைஸ் குறிப்பிடுவதாவது: “‘அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்’ என இயேசு சொன்னார்.” கட்டாய மணமாகாத நிலை ஏற்படுத்தியிருக்கும் அவல நிலைகுறித்து அவர் குறிப்புரைப்பதாவது: “கட்டாய மணமாகாத நிலையின் விளைவுதான், ஆயிரக்கணக்கான ஆண்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வதும், ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கை பாழாய்ப்போவதும், ஆயிரக்கணக்கான பிள்ளைகள் குருவான அப்பாக்களால் நிராகரிக்கப்படுவதும் ஆகும். அது மட்டுமல்ல, அப்படிப்பட்ட குருக்கள் குற்ற மனப்பான்மையுடனேயே புழுங்கிக்கொண்டு இருப்பர்.”
மதிப்புக்குரிய திருமணம் கடவுள் தரும் ஓர் ஆசீர்வாதமே. கட்டாய மணமாகாத நிலை ஆவிக்குரிய வகையில் சேதம் விளைவிப்பதாகவே இருந்திருக்கிறது. மறுபட்சத்தில், சுதந்திரமாய் தெரிவு செய்யப்பட்ட மணமாகாத நிலை பரிசுத்தத்திற்கோ, இரட்சிப்பிற்கோ அவசியமானதாய் இல்லாத போதிலும், சிலருக்கு பலன் தருவதாகவும் ஆவிக்குரிய வகையில் திருப்தியளிப்பதாகவும் உள்ள வாழ்க்கை முறையாய் நிரூபித்திருக்கிறது.—மத்தேயு 19:12.
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
Life