எமது வாசகரிடமிருந்து
வறுமைக்கு விடிவு ஜூன் 8, 1998, விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்த “வறுமைக்கு விடிவு விரைவில்” என்ற தொடர்கட்டுரைக்கு இதயங்கனிந்த நன்றி. வறுமை என்ன என்பதை புரிந்துகொண்டேன். எதற்கெடுத்தாலும் முணுமுணுக்கும் என்னுடைய மனநிலையை உணர்ந்து கொண்டேன். எனக்கு வேலையில்லை; ஆனால், கையில் தேவைகளுக்கு போக கொஞ்சம் பணம் இருக்கத்தான் செய்கிறது. நான் ஏழையென்று நினைத்து நொந்து கொண்டிருந்தேன். தவறு! என்னைவிட பரம ஏழைகளாக எவ்வளவோ பேர் இருக்கின்றனரென இந்த கட்டுரை படம்பிடித்துக் காட்டியது. உணவு, உடை, நல்ல உடல்நலம், அதோடு எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவா தேவன் என எனக்கிருப்பதை வைத்து நான் திருப்தியுடனிருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். வறுமையெனும் அரக்கனின் மரண நாளை மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கிறேன். புலம்புவதை இத்தோடு நிறுத்திவிட்டு, யெகோவாவின் ராஜ்யத்தை தொடர்ந்து தேடுவதே என்னுடைய திடதீர்மானம்.
சி. டபிள்யூ., நியூ ஜீலாந்து
மணமாகாத நிலை சில வருடங்களாக நான் உங்கள் பத்திரிகைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் பத்திரிகையில் வெளிவந்த “பைபிளின் கருத்து: கிறிஸ்தவ ஊழியர்களுக்கு மணமாகாத நிலை அவசியமா?” (ஜூன் 8, 1998) என்ற கட்டுரையில் கத்தோலிக்க சர்ச்சின் கோட்பாட்டை பற்றி நீங்கள் ஒருதலைப்பட்சமாக எழுதியிருப்பதை நான் ஆட்சேபிக்கிறேன். கத்தோலிக்க சர்ச்சில் “கட்டாய மணமாகாத நிலை” என்பதே இல்லை! சில குறிப்பிட்ட வாழ்க்கைப்பணிக்கு மட்டும் தாங்களாகவே தெரிவு செய்யும் மணமாகாத நிலை ஒரு முன்நிபந்தனையாக இருக்கிறது. மணமாகாத நிலைக்கு தான் கட்டாயமாக தள்ளப்பட்டேன் என்று சொல்லும் ஒவ்வொருவரும் பொய்யர்களே!
ஆர். ஜி., ஜெர்மனி
கட்டாய மணமாகாத நிலை என்ற சொற்றொடருக்கும் மணமாகாத நிலைக்கு மற்றவர்களை கட்டாயப்படுத்துதல் என்பதற்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறதென நாங்கள் நம்புகிறோம். உதாரணமாக, நிறுவனம் ஒன்று, குறிப்பிட்ட ஒரு உடை பாணியை அறிவுறுத்துகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு பணிந்து செல்லுபவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தி, அதை மீறுபவர்களை வேலைநீக்கம் செய்கிறது என்றால், இந்த நிறுவனம் “கட்டாய” உடை பாணியை கொண்டிருக்கிறது என்றுதான் சொல்வோம். இதைப்போலவே, கத்தோலிக்க குருவர்க்கத்தில் “கட்டாய மணமாகாத நிலை” இருக்கிறதென்று சொல்வது நியாயமானதே. இருப்பினும், மணமாகாத நிலையை கிறிஸ்தவ ஊழியர்களுக்கு முன்நிபந்தனையாக அறிவுறுத்துவது வேதப்பூர்வமற்றது என்ற குறிப்பையே முக்கியமாக எங்களுடைய கட்டுரை சுட்டிக்காட்டியது. (1 தீமோத்தேயு 3:2) விவாகமின்றி இருப்பதை வாழ்க்கை முறையாக தெரிந்தெடுப்பவர்களை குறை சொல்லவில்லை. அதற்கு பதிலாக, இதுவே “சிலருக்கு நன்மை அளிக்கும், ஆவிக்குரிய ரீதியில் விரும்பத்தக்க வாழ்க்கை முறையாக நிரூபித்திருப்பதாக” கட்டுரை குறிப்பிடுகிறது.—ED.
பெற்ற தந்தை ஒரு பக்கம், பரம தந்தை மறுபக்கம், நான் யார் பக்கம் கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் சத்தியத்தை நான் என்னுடைய பள்ளி தோழன் ஒருவனிடம் இருந்து கற்றேன். அப்பொழுது எனக்கு வயது 14. என்னுடைய பெற்றோர், முக்கியமாக என்னுடைய அப்பா, நான் சத்தியம் படிப்பதை எதிர்த்தார். என்னை வீட்டிலிருந்து துரத்திவிடுவேன் என்று பயமுறுத்தினார். ஆனால், நல்ல வேளை அப்படியெல்லாம் செய்யவில்லை. நான் பைபிள் படிப்பை தொடர்ந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் முழுக்காட்டுதல் எடுத்தேன். கட்டுரையில் (ஜூன் 8, 1998) வந்த சகோதரரைப் போலவே, யெகோவாவின் நீதியுள்ள புதிய உலகில் வாழும் என்னுடைய நம்பிக்கையை என்னுடைய அப்பாவும் அம்மாவும் என்றாவது ஒரு நாள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
டபிள்யூ. எஸ். எல்., பிரேஸில்
இந்தக் கட்டுரையை படிக்கும்போதே என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. என்னுடைய நம்பிக்கைகளை வன்மையாக எதிர்ப்பவர் என் அப்பா. அவ்வப்போது நானும் என் அப்பாவும் சகஜமாக பேசிக்கொள்வோம். ஆனால், பைபிளைப் பற்றியோ அல்லது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியோ பேச்செடுத்தாலே போதும், அவர் எரிந்துவிழுவார் என்ற பயம் எனக்கு இப்பொழுதும் இருக்கிறது. பல தடவை அவர் என்னை அடித்திருக்கிறார். ஆனால், இப்பேர்ப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் உறுதியாக இருக்கவேண்டும் என்கிற உற்சாகத்தையும் தைரியத்தையும் இந்த கட்டுரை எனக்கு தந்தது.
ஐ. ஹெச்., ஜெர்மனி
அந்த கட்டுரை என் உள்ளத்திலே ஆழமாக பதிந்துவிட்டது. அந்த மாதிரி கடுமையான ஒரு தெரிவை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அது ஒரு வாலிபனின் உணர்ச்சிகளை எந்தளவுக்கு வேதனைக்குள்ளாக்கும் என்று மதத்தால் பிளவுபட்ட குடும்பத்தில் வளர்ந்த என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
எ. எம்., இத்தாலி
ஃபைப்ரோமையால்கியா,“ஃபைப்ரோமையால்கியாவை புரிந்துகொண்டு வாழுதல்” (ஜூன் 8, 1998) என்ற கட்டுரைக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள். நான் ஆறு வருடங்களாக ஃபைப்ரோமையால்கியாவால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் கட்டுரை தெள்ளந்தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதப்பட்டிருந்தது. மேலும், பெட்டியில் கொடுக்கப்பட்டு இருந்த வசனங்கள் எனக்காகவே கொடுக்கப்பட்டது போல் ஆறுதலாக இருந்தன.
என். எம்., அமெரிக்க மாகாணங்கள்
அந்த கட்டுரையைக் குறித்து வாசகர்கள் நிறைய கடிதங்களை எழுதியிருக்கின்றனர். அவற்றில் சிலவற்றை, இனி வரும் பிரதி ஒன்றில் வெளியிடுவோம்.—ED.