உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 6/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வறுமையும் சுற்றுப்புற சூழ்நிலையும்
  • விரக்தியால் வரும் ஆபத்து
  • வருடக் கணக்கில் பயணம்
  • மத்திய கிழக்கு நாடுகளின் நேரம்
  • பிரெஞ்சு மொழி வேண்டாமே
  • லஞ்சத்திற்கு முடிவு கட்டும் முயற்சி
  • கம்பளிப் பூச்சியின் டேஸ்ட் பிரமாதம்
  • புகைப்பதால் ஏற்படும் தீங்கை மாற்றமுடியுமா?
  • முகத்தை மாற்றுவதல்ல
  • எலும்பில்லா மாமிசத்தை ருசிக்க வாருங்கள்!
    விழித்தெழு!—2007
  • புகைபிடிப்போருக்கும் புகைபிடிக்காதோருக்கும் புகையிலையின் அபாயம்
    விழித்தெழு!—1988
  • மரணத்தை அவை பரவச் செய்கின்றனவா?
    விழித்தெழு!—1989
  • சிகரெட்டுகள்—நீங்கள் அவற்றை மறுக்கிறீர்களா?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 6/22 பக். 28-29

உலகை கவனித்தல்

வறுமையும் சுற்றுப்புற சூழ்நிலையும்

பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும்கூட, உலகில் உள்ள ஜனங்களில் 130 கோடிக்கும் அதிகமானவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு டாலரைவிட குறைவான பணத்தில் உயிர் வாழ்கின்றனர். வறுமை என்பது விடாப்பிடியாக இருப்பதோடுகூட தொடர்ந்து மோசமாகி வருகிறது. ஒரு கோடிக்கும் அதிகமான ஜனங்கள் 20, 30, அல்லது 40 வருடங்களுக்கு முன் சம்பாதித்ததைவிட குறைவாக சம்பாதிக்கிறார்கள். இது சுற்றுப்புற சூழ்நிலைகளின் அழிவிற்கு வழிநடத்தியிருக்கிறது, “ஏனென்றால் வறுமை உடனடியாக இயற்கை வளங்களை அழிப்பதற்கு வழிநடத்தி எந்தவித நீண்ட நாள் பாதுகாப்பு முயற்சிகளையும் தோல்வியடையச் செய்திருக்கிறது” என்பதாக யுனெஸ்கோ ஸோர்சஸ் என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. “இப்பொழுது இருக்கும் நிலைமைகளின் அடிப்படையில் கவனித்தால் கரீபியனில் இருக்கும் காடுகள் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் முற்றிலும் மறைந்துவிடும் . . . ஒவ்வொரு நாட்டையும் தனியே கவனித்தால் நிலைமைகள் இன்னும் படுமோசமாக இருக்கின்றன: பிலிப்பைன்ஸில் இன்னும் 30 ஆண்டுகள், ஆப்கானிஸ்தானில் 16 ஆண்டுகள், லெபனானில் 15 ஆண்டுகள் வரைதான் காடுகள் இருக்கும்.”

விரக்தியால் வரும் ஆபத்து

“ஒரு நாளில் 20 சிகரெட்டுகளை புகைப்பதால் இருதயத்திற்கு ஏற்படும் பாதிப்பை விரக்தி சாதாரணமாக ஏற்படுத்திவிடும் என்று . . . விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்” என்பதாக தி டைம்ஸ் என்ற லண்டன் பத்திரிகை தெரிவிக்கிறது. “பின்லாந்து தேசத்தில் நடுத்தர வயதுள்ள சுமார் 1,000 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், விரக்தியால் சிதல் தடிப்பு (atherosclerosis) அல்லது தமனிகள் கெட்டியாகும் அபாயம் மிகுந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.” ஒருவருடைய மனநிலை கணிசமான அளவிற்கு அவருடைய உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று அந்த ஆய்வு காட்டுகிறது. “மனோதத்துவ மற்றும் உணர்ச்சி பூர்வ அம்சங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் தொடர்ச்சியாக நிரூபிக்கின்றன” என்று இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய டாக்டர் சூசன் எவர்சன் என்பவர் குறிப்பிடுகிறார். “நம்பிக்கையின்மை உடல் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதித்து நோயின் வலிமையை அதிகப்படுத்திவிடும் என்பதை மருத்துவர்கள் உணரவேண்டும். தாங்கள் நம்பிக்கையிழந்த நிலைக்கு வந்து விரக்தியின் பிடியில் சிக்கிவிட்டோம் என்பதை ஜனங்கள் உணர்ந்துகொள்ளும்போது, அவர்கள் உடனடியாக உதவியை நாட வேண்டும்.”

வருடக் கணக்கில் பயணம்

இத்தாலி நாட்டின் முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டிலிருந்து வேலைக்கு செல்லுமிடத்திற்கும் அல்லது பள்ளிக்கு போய்வருவதற்கும் எக்கச்சக்கமான நேரத்தை பயணத்தில் கழிக்கின்றனர். எவ்வளவு நேரம்? நேப்பிள்ஸ் நகரத்தின் குடிமக்கள் ஒரு நாளுக்கு 140 நிமிடங்கள் இவ்விதம் பயணத்தில் கழிப்பதாக, லாகம்பைன்டே என்ற இத்தாலிய சுற்றுச்சூழல் அமைப்பு கணக்கிட்டிருக்கிறது. மனிதரின் சராசரி வயது 74 என்பதாக எடுத்துக்கொண்டு இதை ஒப்பிடும்போது ஒரு நேப்பிள் நகரவாசி தன் வாழ்நாளில் 7.2 ஆண்டுகள் பயணத்திலேயே இழந்து விடுவார். இதைப்போலவே நாளொன்றுக்கு 135 நிமிடங்கள் பயணம் செய்யும் ஒரு ரோமன் 6.9 ஆண்டுகளை இழப்பார். இந்த நிலைமையே மற்ற எல்லா நகரங்களிலும் இருக்கிறது. பலொக்நாவில் வசிப்பவர்கள் 5.9 ஆண்டுகளையும் மிலானில் வசிப்பவர்கள் 5.3 ஆண்டுகளையும் இவ்விதம் பயணத்தில் இழப்பர் என்று லா ரிப்புப்லீக்கா என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளின் நேரம்

மத்திய கிழக்கு நாடுகளில் நேரத்தின் மாற்றங்கள் மிகக் குழப்பமாக இருக்கலாம். பல ஆண்டுகளாக ஈரான் தன்னுடைய நேரத்தை, “மற்ற நாடுகளெல்லாம் ஒரு மணி நேர வித்தியாசத்தை கடைப்பிடிக்கும்போது கிரீன்விச் நேரத்திலிருந்து மூன்றரை மணி நேரங்கள் வித்தியாசத்தை அமைத்தது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சொல்கிறது. “உதாரணத்திற்கு, நீங்கள் காலை 5 மணி செய்தியை பிபிசியில் கேட்கவேண்டும் என்று விரும்பினால், காலை 8.30-க்கு கேட்கவேண்டும்; அப்பொழுது ஒலிபரப்பாகும் பிக்பென் கடிகாரத்தின் நேரத்தைக் கருத்தில் எடுக்கக்கூடாது, அவ்விதம் கவனித்தால் உங்கள் கையில் கட்டப்பட்டிருக்கும் வாட்ச் பொய் தகவலை அளிப்பதாகத் தோன்றும்.” சாதாரணமாக அந்தப் பிராந்தியத்தில் இருப்பவர்கள் செப்டம்பர் மாத வார இறுதியில் தங்கள் கடிகாரங்களை பகல் பொழுது நேரத்துக்கு இசைய அட்ஜஸ்ட் செய்வர்; கடந்த வருடம் இஸ்ரேல் செப்டம்பர் 13 அன்றே, அந்த மாற்றத்தைச் செய்தது. எதுதான் வார இறுதி என்று கண்டுபிடிப்பதும் கடினம். பெர்சிய வளைகுடாப்பகுதியில் இருக்கும் அநேக நாடுகள் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளை வார விடுமுறை நாட்களாக அனுசரிக்கின்றனர். ஆனால், எகிப்து மற்றும் அதற்கு அருகே இருக்கும் அநேக நாடுகளில் வெள்ளி, சனிக் கிழமைகளை வார விடுமுறையாகக் கொள்கின்றனர்; லெபனானில் இது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையாகும். “உதாரணத்திற்கு அபுதாபியில் புதன் மதியம் வந்து அங்கிருந்து பெய்ருட்டிற்கு வெள்ளி மாலை பயணம் செய்ய விரும்பும் ஒரு பயணி நான்கு விடுமுறை நாட்களை உடைய வாரத்தை அனுபவிக்கலாம். அதேபோல் வேலைப்பிரியர் வேலைக்குச் செல்லும்படி வார நாட்களில் வந்துசேர இதற்கு நேர் எதிர்மாறான ஒரு பயணத்தைத் திட்டமிட வேண்டும்,” என்பதாக டைம்ஸ் குறிப்பிடுகிறது.

பிரெஞ்சு மொழி வேண்டாமே

வியட்நாமிலுள்ள ஹனோய் என்ற இடத்தில் பிரெஞ்சு மொழி பேசும் இடங்களிலிருந்து வந்தவர்கள், “பிரெஞ்சு மொழியின் உலகளாவிய பொதுத்தன்மையை” கொண்டாடுவதற்காக, மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொண்டனர் என்று லா ஃபீகரொ என்ற பாரிஸ் செய்தித்தாள் அறிவித்தது. இன்று 10 கோடி ஜனங்கள் பிரெஞ்சு மொழியை பேசுகின்றனர். அது மிகவும் பிரசித்தமாக இருந்த 17-ஆம் நூற்றாண்டில் சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையே இருந்த பிரச்சினைகளை தீர்க்க பிரெஞ்சு மொழி பயன்படுத்தப்பட்டது. “பிரச்சினை நிறைந்த ஐரோப்பாவில், சண்டைகளும் உள்நாட்டு கலவரங்களும் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தன” என்பதாக அந்தச் செய்திதாள் அறிவிக்கிறது. ஆனால் இப்பொழுதோ, “தன்னுடைய இடத்தை உலகத்தில் காத்துக்கொள்வதற்கே” பிரெஞ்சு மொழி முயற்சி செய்து வருகிறது. முக்கியமாக வாணிகத்தில் ஆங்கில மொழி பிரபலமடைந்ததே பிரெஞ்சு மொழி இவ்விதம் தேய்வடைவதற்கு காரணம். இந்த இடைவெளியைக் குறைக்க பிரெஞ்சு முதல்வர் இன்ஃபர்மேஷன் சூப்பர் ஹைவே எனப்படும் கம்ப்யூட்டர் இணைப்பில் பிரெஞ்சு மொழியைப் பிரபலப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். ஆகிலும், பிரெஞ்சு மொழியின் எதிர்காலத்தைப் பற்றி பயப்படும் ஒரு அரசியல்வாதி இவ்விதம் சொன்னார்: “உலகம் முழுவதுமாக பிரெஞ்சு மொழிப் பேசப்படவேண்டும் என்ற ஆர்வம் சாதாரண பொது மக்களுக்கோ, தகவல் தொடர்பு ஏதுக்களுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ இல்லை என்பதே உண்மை. இப்படிப்பட்ட அக்கறையின்மை மற்ற நாடுகளைவிட பிரெஞ்சு தேசத்தில்தான் மிக அதிகமாக காணப்படுகிறது.”

லஞ்சத்திற்கு முடிவு கட்டும் முயற்சி

சீனாவில் அதை ஹைலு என்று அழைக்கின்றனர், கென்யாவில் கிட்டு கிடோங்கோ. மெக்ஸிகோ உனா மொர்டிடா என்று அது அழைக்கப்படுகிறது; ரஷ்யாவில் ஃசியாட்கா என்றும், மத்தியக் கிழக்கு நாடுகளில் பக்ஷீஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். லஞ்சமே பல தேசங்களில் வாழ்க்கை முறையாக இருக்கின்றது; சில சமயங்களில் வியாபாரம் செய்ய, சில பொருட்களை வாங்க அல்லது நீதிமன்றத்தில் நியாயம் கிடைப்பதற்கும் இதுவே ஒரே வழியாக இருக்கின்றது. ஆனால் சமீபத்தில் 34 நாடுகள், சர்வதேச வியாபாரத்தில் லஞ்சத்தை ஒழிக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அவற்றில் பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 29 அங்கத்தினர்களும், அர்ஜென்டீனா, பிரேசில், பல்கேரியா, சிலி, ஸ்லாவக்கியா நாடுகளும் உட்படும். அதிகாரிகள் மத்தியில் இருக்கும் லஞ்சத்தை ஒழிக்க உலகத்தின் அதிமுக்கிய நிதி நிறுவனங்களான, உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனமும் நடவடிக்கை எடுக்கின்றன. உலக வங்கியின் ஒரு ஆய்வில், 69 நாடுகளில் 40 சதவீத வியாபாரம் லஞ்சம் கொடுத்தே நடத்தப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டியதன் அடிப்படையில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த இரண்டு பெரிய அமைப்புகளும் லஞ்சத்தைப் பொருட்படுத்தாத நாடுகளுக்கு அளிக்கும் நிதியை குறைப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன.

கம்பளிப் பூச்சியின் டேஸ்ட் பிரமாதம்

மோப்பேன் கம்பளிப் பூச்சிகளை உணவிற்காக தென் ஆப்பிரிக்காவின் கிராமங்களில் ஏழை ஜனங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர்; அவர்களுடைய உணவில் புரதசத்திற்காக அவற்றையே அவர்கள் நம்பியிருக்கிறார்கள். அவை அந்துப் பூச்சியின் வாரிசுகள், மோப்பேன் மர இலைகளை உண்பதால் இந்தப் பெயர் பெற்றன. ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெண்கள் கம்பளிப் பூச்சிகளை எடுத்து அவற்றின் குடலை நீக்கி, வேகவைத்து வெயிலில் உலர்த்துவர். அவற்றினுடைய புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், கலோரிக் மதிப்புகள் இறைச்சிக்கும் மீனுக்கும் சமமாக காணப்படுகின்றன. ஆனால் இப்பொழுதோ தென் ஆப்பிரிக்க ஹோட்டல்களில் மோப்பேன் கம்பளிப் பூச்சி உணவு பிரபலமாகி வருகிறது. இந்தக் கம்பளிப் பூச்சி உணவு மோகம் ஐரோப்பாவிற்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும்கூட பரவிவிட்டது; இதனால் தென் ஆப்பிரிக்காவிலுள்ள கிராம மக்கள் அதிகம் கவலை அடைந்திருக்கின்றனர். ஏன்? “டிமான்டு அதிகரித்துக்கொண்டே சென்றால் இந்தப் பூச்சியினம் தப்பிப்பிழைக்குமா என்பதே அந்தக் கவலை; ஏற்கெனவே அருகில் உள்ள போஸ்ட்வானா ஜிம்பாப்வி நாடுகளில் மோப்பேன் மறைந்தே விட்டது” என்று லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது.

புகைப்பதால் ஏற்படும் தீங்கை மாற்றமுடியுமா?

புகைப்பதால் தமனிகளுக்கு ஏற்படும் தீங்கு மாற்ற முடியாதது என்பதே சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு. நேரடியாக புகைப்பிடிப்பதாலும், புகைப்பவர் அருகில் இருந்து அந்தக் காற்றை சுவாசிப்பதாலும் தமனிகளுக்கு மாற்றமுடியாத தீங்கு ஏற்படும் என்பதாக தி ஜர்னல் ஆப் அமெரிக்கன் மெடிகல் அசோஸியேஷன்-ல் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர். இந்த ஆராய்ச்சியில் 45 முதல் 65 வயது வரையிலிருந்த 10,914 ஆண்களையும் பெண்களையும் மிக கவனமாக ஆய்வு செய்து அவர்கள் இந்த முடிவிற்கு வந்தனர். இந்தத் தொகுதியில் புகைப்பிடிப்பவர்கள், புகைப்பிடிப்பதை விட்டுவிட்டவர்கள், புகைப்பிடிக்காதவர்கள் ஆனால் வழக்கமாக புகைப்பிடிக்கும் காற்றை சுவாசிப்பவர்கள், புகைக் காற்றை வழக்கமாக சுவாசிக்காத புகைபிடிக்காதவர்கள் ஆகியவர்கள் அடங்குவர். ஆராய்ச்சியாளர்கள் அல்ட்ரா ஒலி முறையைப் பயன்படுத்தி கழுத்தில் இருக்கும் கரோட்டிட் தமனியின் தடிப்பை கணக்கிட்டனர். இதே ஆய்வு மூன்று ஆண்டுகளுக்குப்பின் மறுபடியும் செய்யப்பட்டது.

எதிர்பார்த்தபடி வழக்கமாகப் புகைப்பவர்களுடைய தமனிகள் குறிப்பிடத்தக்க அளவில் தடித்திருந்தன—ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் பாக்கெட் என்ற அளவில் 33 ஆண்டுகள் தொடர்ந்து புகைத்தவர்களுடைய தமனிகள் 50 சதவீதம் தடித்திருந்தன. புகைப்பதை விட்டுவிட்டவர்களுடைய தமனிகளும் புகைப்பிடிக்காதவர்களுடைய தமனிகளைவிட 25 சதவீதம் வேகமாக குறுகியிருந்தன—புகைப்பிடிப்பதை விட்டு 20 வருடங்களுக்குப் பின்னும் இந்த மாற்றம் ஏற்பட்டது. புகை நிரம்பிய காற்றை வழக்கமாக சுவாசித்த புகைப்பிடிக்காதவர்களுடைய தமனிகள் அவ்விதம் சுவாசிக்காதவர்களுடைய தமனிகளைவிட 20 சதவீதம் தடித்திருந்தன. ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஒரு வருடத்திற்கு 30,000 முதல் 60,000 மரணங்களுக்கு இப்படிப்பட்ட புகை நிரம்பிய காற்றை வழக்கமாக சுவாசித்ததே காரணம் என்று அந்த ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

முகத்தை மாற்றுவதல்ல

எகிப்தில் இருக்கும் ஸபிங்க்ஸ் சிலையில் ஏழு ஆண்டுகளாக பழுதுபார்க்கும் பணி செய்யப்பட்ட பிறகு, இப்பொழுது அதைச் சுற்றி கட்டப்பட்டிருந்த சாரக்கட்டுகளில் இருந்து அது விடுதலை அடைந்துள்ளது. “1990 முதல் 1997-வரை இந்த ஸ்பிங்க்ஸ் சிலையை புதுப்பிக்க ஒரு லட்சம் கற்கள் உபயோகிக்கப்பட்டன;” ஆகிலும், இப்படிப்பட்ட கடும் உழைப்பில் “மாபெரும் சிலையின், சுண்ணாம்பு கல்லால் செய்யப்பட்ட பாதி சிங்கம் பாதி மனித வடிவம் கொண்ட பாதிக்கப்பட்ட முகம் உட்படவில்லை” என்று அந்தப் பகுதியின் பழமைச் சின்னங்களின் இயக்குனர் அச்மது அல்ஹகார் கூறினார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்