எல்லா கண்களும் உங்களையே மொய்க்கும்போது
“ஐயோ ஏன் அந்தக் கொடுமையைக் கேட்கிறீங்க! ஒவ்வொருமுறையும் நான் வகுப்புக்குள் நுழையும்போது, எனக்கு பயங்கரமாக வியர்த்துக்கொட்டும், என்னுடைய வாயிலே கொழுக்கட்டை வைத்து அடைத்துவிட்டதைப் போல் இருக்கும். என்னால் சுத்தமாக பேச முடியாது. என்னைக் கொன்றுவிடுவதாக கூறினால்கூட பேசியிருப்பேனா என்பது சந்தேகம்தான். என்னுடைய கைகால், முகமெல்லாம் குப்பென்று சூடாகி, செக்கச்செவேல் என்று சிவந்துவிடும்” என்று அதை ஜெரி விவரிக்கிறார்.
மற்றவர்கள் நம்மை பார்க்கிறார்களோ, மற்றவர்கள் முன் அவமானப்படுவோமோ என்ற அச்சமே சமூக பயம். சமூக பயத்தால் ஜெரி மிகவும் கஷ்டப்படுகிறார். “சமூக பயமுள்ள ஒருவர், எல்லாருடைய கண்களும் தன்னையே மொய்ப்பதாக நினைத்துக்கொள்கிறார். இத்தகைய பயத்தால், இதயம் படபடவென்று துடிப்பது, மயக்கம் வருவது, மூச்சு இரைப்பது, பயங்கரமாக வியர்ப்பது போன்ற அறிகுறிகளோடு திகில் ஏற்படலாம்” என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த திகில் கோளாறு கூட்டமைப்பின் சிறுபுத்தகம்.
ஒருசிலர் தங்களுடைய வெட்கத்தை ஒருபுறம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, தங்களுக்கு இருக்கும் சமூக பயத்தை சட்டைசெய்யாமல் வலியச்சென்று, “மக்களோடு மக்களாய் சேர்ந்து பழகவேண்டும்” என்று யோசிக்கிறார்கள். சமூக பயத்தை விரட்டியடிக்கும் முன் அந்தப் பயத்தை முதலில் சந்தித்தாக வேண்டும் என்பது நினைவிருக்கட்டும். ஆனால் வெட்கத்திற்கும் சமூக பயத்திற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. “சாதாரணமாக வரும் வெட்கம் வேறு, சமூக பயம் என்பது வேறு. நாம் மக்களோடு தொடர்புகொள்ளும் எல்லா சந்தர்ப்பங்களிலும், அதாவது வேலைசெய்யும் இடத்தில், பள்ளியில் என்று இந்தச் சமூக பயம் தன் மூக்கை நுழைத்து, நம் அன்றாடக வேலைகளை ரொம்ப பாதிக்கிறது” என்கிறார் ஜெர்லின் ராஸ்.
இந்தச் சமூக பயத்தால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் உண்மை கவனமாக ஆராய்ந்தபோது தெரியவந்தது.a மக்களை செயலிழக்க செய்யும் ஒருசில பயங்களைப் பற்றி பார்க்கலாம்.
சமூக பயத்தின் திகில்கள்
மற்றவர்கள் முன் பேசும்போது. உள்ளூர் மக்கள் கூடியிருந்த ஒரு சின்னக் கூட்டத்தில் பேசும்படி டேக் என்பவரை கேட்டனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட உதறலை ஞாபகப்படுத்தி இவ்வாறு கூறினார்: “திடீரென்று உடம்பு முழுவதும் வியர்த்துக்கொட்டி, சில்லென்று ஆனது. என் மனசு திக்கு திக்கு என்று அடித்துக்கொண்டது. எனக்கு கைகாலெல்லாம் வெடவெடுக்க ஆரம்பித்தது. தொண்டை கம்மிக்கொண்டது, என்னால் வாயைத் திறந்து பேச முடியவில்லை.” உண்மைதான் எல்லாருக்குமே கூட்டத்திற்கு முன் நின்று பேசவேண்டும் என்றால் ஓரளவு பயம் இருக்கும். ஆனால், சமூக பயம் உள்ளவர்களுக்கு திகில் கவ்விக்கொள்வதோடு, அந்தத் திகில் அவர்களோடு நிரந்தரமாக ஒட்டிக்கொள்கிறது. எவ்வளவுதான் பயற்சி செய்தாலும் அது குறைவதில்லை. டேக் என்பவரைப் பொருத்தமட்டில், சின்ன பேச்சு கொடுக்கச் சொன்னால்கூட அவர் உயிரே போய்விடும்.
மற்றவர்களுக்கு முன் சாப்பிடும்போது. எல்லா கண்களும் தங்களையே மொய்ப்பதாக சமூக பயந்தாங்கொள்ளிகளின் நினைக்கிறார்கள். அதனால், மற்றவர்கள் முன் சாதாரண சாப்பாட்டை சாப்பிடுவதுகூட அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது. ‘ஐயோ! இனி கைகால் நடுங்குமே, சாப்பாட்டை சிந்திவிடுவேனே. அதை வாய்க்குள் போடுவதற்கு பதிலாக, எங்காவது போடப்போகிறேன். எனக்கு என்னவோ செய்கிறது’ போன்ற எண்ணங்களே இவர்களுக்கு இன்னும் அதிக டென்ஷனைக் கொடுக்கிறது. சொல்லி வைத்தாற்போல், எல்லாம் அப்படியே நடந்தும் விடுகிறது. தர்மசங்கடத்தில் மாட்டித் தவித்தல் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “தர்மசங்கடத்தில் மாட்டிக்கொள்வோம் என்று நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பயப்படுகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு பயம்தான் மிஞ்சும். ரொம்ப பயம் வந்தால், ரொம்பவே நடுங்கிவிடுவீர்கள் அல்லது திடீரென்று எதையாவது ஏடாக்கூடமாக செய்துவிடுவீர்கள். இந்தப் பிரச்சினை அப்படியே படிப்படியாக வளர்ந்து, கீழே போடாமல் அல்லது கீழே சிந்தாமல் எதையும் சாப்பிட முடியாத, குடிக்க முடியாத நிலைமைக்கு வந்துவிடுவீர்கள்.”
மற்றவர்களுக்கு முன் எழுதும்போது. மற்றவர்கள் முன்னிலையில் செக்கில் கையெழுத்து போடச்சொன்னால் அல்லது ஏதாவது எழுத்து வேலையைக் கொடுத்தால் சமூக பயந்தாங்கொள்ளிகள் பலர் நடுநடுங்கி விடுவார்கள். கையெழுத்து போடும்போது கை நடுங்குமே என்ற பயமும், கோழிக்கிறுக்கல் போன்ற கையெழுத்தை மற்றவர்கள் பார்த்துவிடுவர்கள் என்ற பயமும் வாட்டியெடுத்துவிடும். உதாரணத்திற்கு சாம் என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் வேலைபார்க்கும் கம்பெனியில் ஒவ்வொரு நாளும் பணியாளர் பதிவேட்டில் காவலர் முன்னிலையில் கையெழுத்து போட வேண்டும். இது முதலாளியின் உத்தரவு. ஆனால் கையெழுத்துப்போடுவதென்றால் சாமுக்கு ஒரே உதறல். “என்னால் கையெழுத்து போட முடியவில்லை. என்னுடைய கை பயங்கரமாக நடுங்கும். நடுங்கும் கையை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டே கோடிட்ட இடத்தில் எழுதினேன். எழுதியப்பிறகு பார்த்தால் யாருக்கும் எதுவும் புரியாது” என்கிறார் சாம்.
டெலிபோனில் பேசும்போது. டாக்டர் ஜான் ஆர். மார்ஷலை பார்க்க வரும் நோயாளிகள் பலர், தாங்கள் போனில் பேசுவதை முடிந்த மட்டும் தவிர்த்துவிடுவதாக சொன்னார்கள். டாக்டர் இவ்வாறு கூறினார்: “எங்கே சரிவர பதில் சொல்லாமல் இருந்துவிடுவோமோ என்று இவர்கள் பயப்படுவார்கள். அடுத்து என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியாமல் விழிப்பார்கள். ரொம்ப நேரம் ஒன்றுமே பேசாமல் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டு, எப்படியோ திக்குமுக்காடி பேச தொடங்குவார்கள். உடனே பயம் அவர்களை கவ்விக்கொள்கிறது. அந்தப் பயத்தால் அவர்களுடைய குரலே மாறிவிடுகிறது. நடுநடுங்கிப்போய், கீச் குரலில் பேசுவார்கள். திக்கித்திக்கி பேசிவிடுவோம் அல்லது தங்களுடைய பயத்தை ஏடாக்கூடமாக வெளிக்காட்டிவிடுவோம் என்கிற இவர்களது நினைப்பே குலை நடுங்கவைக்கிறது.”
மற்றவர்களோடு பழகும்போது. சமூக பயமுள்ள ஒருசிலருக்கு மற்றவர்களோடு பழக வேண்டும் என்றாலே கிலி. குறிப்பாக மற்றவர்களின் முகத்தைப் பார்த்து பேச வேண்டுமென்றால் உயிரே போய்விடும். “சமூக பயத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு பெரும்பாலும் எங்கே பார்த்து பேசுவதென்றே தெரியாது. அப்படியே யாராவது இவர்களுடைய முகத்தைப் பார்த்து பேசும்போது இவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்றே புரியாது. பேசும்போது எப்போது முகத்தைப் பார்க்க வேண்டும், எப்போது பார்க்கக்கூடாது என்பது தங்களுக்குத் தெரியாது என்று இவர்கள் நினைப்பதால் முகம் பார்த்து பேச மறுப்பார்கள். இவர்கள் திருதிருவென்று முழிப்பதைப் பார்த்து, மற்றவர்கள் தவறுதலாக புரிந்துகொண்டால் என்ன செய்ய என்று பயப்படுகிறார்கள்” என்கிறது த ஹார்வர்டு மென்டல் ஹெல்த் லெட்டர்.
சமூக பயத்தோடு வேறுசில பயங்களும் ஒட்டி உறவாடுகின்றன. உதாரணத்திற்கு, பொதுக் கழிவறைக்குப் போவதற்குக்கூட நிறையப்பேருக்கு பயம். இன்னும் சிலருக்கு கடைக்காரர் பார்க்கிறார் என்றால், பொருளை நன்றாக பார்த்து வாங்க, கைகால் நடுங்கும். இத்தகைய பிரச்சினை இருந்த ஒரு பெண் இவ்வாறு கூறினார்: “எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள் என்ற பிரம்மை வந்துவிடும். எனவே நான் சும்மா பொருளைத்தான் முறைத்துக்கொண்டிருப்பேனே ஒழிய, என் கண் இருண்டுவிட்டிருக்கும். கவுண்டரில் இருக்கும் ஆள் என்னைப்பார்த்து: ‘தேவையான பொருளை சட்டுபுட்டென்று எடுத்துக்கொண்டு, நேரத்தை வீணடிக்காமல் உடனே இடத்தை காலிசெய்’ என்று சொல்வதைப்போல் அல்லது சொல்லப்போவதைப் போல் நானாகவே எப்போதும் நினைத்துக்கொள்வேன்.”
இதற்கு அவர்கள் நாடும் தீர்வு?
சமூக பயம் என்னும் கோளாறை மற்றவர்கள் புரிந்துகொள்வது கஷ்டம். இக்கோளாறால் அவதிப்படும் ஒருவர் தன் நிலைமையை இவ்வாறு விவரித்தார்: “ஐயோ! அது மகா கொடுமை. யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது!” இன்னொருவர் சொல்கிறார்: “ஒவ்வொரு முறையும் எங்கேயாவது போய் தூக்குமாட்டிச் சாகலாம் என்று தோன்றும்.”
பாவம், சமூக பயம் உள்ள நபர்கள் பலர் தங்கள் பயத்தை மறைக்க மது புட்டியை நாடுகிறார்கள்.b அந்த நேரத்திற்கு வேண்டுமென்றால் கொஞ்சம் பயத்தை மறந்து இருக்கலாம். ஆனால் அதையே பழக்கமாக்கிக்கொண்டால், குடிக்கு அடிமையாகி நிலைமை இன்னும் மோசமாகிவிடும். டாக்டர் ஜான் ஆர். மார்ஷல் இவ்வாறு கூறுகிறார்: “என்னிடம் வந்த நோயாளிகளில், பலருக்கு குடிப்பழக்கம் இருப்பதை கவனித்தேன். பார்ட்டிகளில் குடிக்கும் பழக்கம் இல்லாத இவர்கள், மற்றவர்கள் முன் தங்களுடைய பயத்தை காட்டிக்கொள்ளாமல், நிதானமாக நடந்துகொள்ள நினைத்து, பார்ட்டி தொடங்குவதற்கு முன்போ அல்லது பார்ட்டியின் போதோ அளவுக்கு மீறி குடிக்கிறார்கள். பயத்தால் வரும் அவமானத்திற்கு பயந்து குடிக்கிறார்கள். ஆனால் குடியோ அவர்களுடைய மானத்தை மேலும் கப்பலேற்றி விடுகிறது.”
மற்றவர்களோடு பழகும் வாய்ப்பை எப்படியாவது தட்டிக்கழிப்பதே சமூக பயம் உள்ளவர்கள் பெரும்பாலும் கையாளும் உத்தியாகும். அவர்கள் பயப்படும் சூழ்நிலைகளிலிருந்து அப்படியே ஒதுங்கிவிடுவார்கள். சமூக பயமுள்ள லாரேன் இவ்வாறு சொன்னார்: “அத்தகைய சூழ்நிலைகளை எவ்வளவு தவிர்க்க முடியுமோ, அவ்வளவு தவிர்த்தேன். போனில் பேசுவதாக இருந்தாலும்கூட தவிர்த்துவிட்டேன்.” ஆனால் இவ்வாறு ஒதுங்கி இருப்பதால், நாள்பட நாள்பட இவர்களுக்கு பாதுகாப்பு உணர்வுக்குப் பதிலாக, ஏதோ சிறையில் அடைக்கப்பட்ட உணர்வுதான் தலைதூக்குகிறது. “கொஞ்சநாள் போனதும், என்னை தனிமை வாட்டி எடுத்தது. ரொம்ப போரடித்தது” என்கிறார் லாரேன்.
ஒதுங்கியே வாழ்வது என்பது “நாமாகவே விரித்து வைக்கும் வலை போன்றது. ஒதுங்குதல் என்ற இந்த வலையில் ஒரு முறை விழுந்தால், அடுத்த முறை இன்னும் சுலபமாக விழுந்துவிடுவோம். இப்படியே விழுந்து விழுந்து, ஒருகாலக்கட்டத்தில் ஒதுங்கி வாழ்வதென்றால் நமக்கு ஆட்டோமெட்டிக்காக வந்துவிடும்” என்று எச்சரிக்கிறார் ஜெர்லின் ராஸ். இப்படி அவதிப்படும் நபர்கள் பலர் யாராவது சாப்பிட கூப்பிட்டால் உடனே மறுத்துவிடுவார்கள். அல்லது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய வேலை வாய்ப்புகளையும் அப்படியே ஒதுக்கிவிடுவார்கள். இவர்கள் இப்படி ஒதுங்கியே வாழ்வதால், பயம் வந்தால் என்ன செய்வது, பயத்தை எப்படி விரட்டி அடிப்பது என்று ஒருபோதும் கற்றுக்கொள்ள முடிவதில்லை. டாக்டர் ரிச்சர்டு ஹிம்பர்க் இவ்வாறு கூறுகிறார்: “யாரும் இவர்களை ஒதுக்கியிருக்க மாட்டார்கள், ஆனால் தங்களை ஒதுக்கிவிட்டதாக நினைத்துக்கொள்வார்கள். வேலைக்கு போகாமலே, அந்த வேலைக்கு தாங்கள் லாயிக்கல்ல என்று நினைத்துக்கொள்வார்கள். நடக்காததை நடந்ததாக நினைப்பதே இவர்கள் வாழ்க்கை ஆகிவிட்டது.”
ஆனால், சமூக பயமுள்ளவர்களுக்கு காது குளிரும் சேதி இதோ: இந்தப் பயத்தை விரட்டியடிக்க முடியும். இதன் அர்த்தம், எல்லா விதமான பயங்களையும், டென்ஷன்களையும் ஒழித்துவிட முடியும் என்று அல்ல. அப்படி செய்யவும் முடியாது. செய்வதும் நல்லது அல்ல. சமூக பயத்தால் அவதிப்படும் நபர்கள் தங்கள் பயங்களை அடக்கி ஆள கற்றுக்கொள்ளலாம். இதற்கு உதவும் வகையில் பைபிள் நடைமுறையான ஆலோசனையைத் தருகிறது.
[அடிக்குறிப்புகள்]
a கிட்டத்தட்ட எல்லாருக்கும் ஒருவித சமூக பயம் இருக்கும் என்பதை மனதில் வைக்க வேண்டும். உதாரணத்திற்கு, கூடியிருக்கும் மக்கள் முன்னால் வந்து பேச வேண்டும் என்றாலே பலருக்கு உதறல் எடுக்கிறது. ஆனால், சாதாரண செயலுக்குக்கூட மிதமிஞ்சி பயப்படும் நபர்களையே சமூக பயமுள்ளவர்கள் என்கிறோம்.
b சமூக பயம் உள்ள நபர்களுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பது ஆய்வுகளை நடத்தியபோது தெரிந்தது. அதேபோல் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும் சமூக பயம் அதிகம் உள்ளது. அப்படியென்றால், எது முதலில் வந்தது, பயமா, குடியா? முக்கால்வாசி குடிகாரர்களுக்கு, குடிக்கு அடிமையாவதற்கு முன்பே திகில் கோளாறு அல்லது ஏதோ ஒருவித சமூக பயம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
[பக்கம் 5-ன் படம்]
மற்றவர்களிடத்தில் சாதாரணமாகப் பேசுவதுகூட சமூக பயமுள்ள நபர்களுக்கு சிம்மசொப்பனமாக உள்ளது