டெங்கு—கொசுக்கடி காய்ச்சல்
பிலிப்பீன்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
சிறுமியின் பிஞ்சுக் கையில் நைசாக வந்து உட்காருகிறது ஒரு கொசு. ஊசி குத்துவதுபோல் சுருக்கென்று கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. சில விநாடிகளுக்குள்ளோ அம்மாவின் கண்களில் மாட்டிக்கொள்கிறது. ஓங்கி ஒரு அடி, செத்து பொத்தென்று விழுகிறது. அதோடு பிரச்சினை முடிந்துவிட்டதா? சொல்ல முடியாது. கொசு என்னவோ செத்துப்போயிருக்கலாம், ஆனால் ரத்தத்தை உறிஞ்சிய அந்த நொடிப் பொழுதில் அது நோய்க் கிருமிகளை கடத்திவிட்டது.
இரண்டே வாரத்தில் குளிர் நடுக்கம், தலைவலி, கண்ணுக்குள் வலி, பயங்கர மூட்டு வலி, கொதிக்கிற காய்ச்சல் என பிள்ளைக்கு ஒரே அவதி. அதன்பின் சிறு தடிப்புகளால் மேனியெல்லாம் சிவந்துபோகிறது. பிள்ளை சக்தியிழந்து துவண்டு விழுகிறது. அவளுக்கு டெங்கு காய்ச்சல். காரணம் கொசுக்கடி.
முக்கியமாய் பிள்ளைக்கு ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் வந்திருந்தால், இப்போது ரத்தக்கசிவு டெங்கு காய்ச்சல் (DHF) வரலாம். இது இன்னும் கொடியது. இந்தக் காய்ச்சலால் ரத்த நுண் குழாய்கள் (capillaries) உடைந்து தோலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். உடலுக்குள்ளும் ரத்தம் கசியலாம். சரியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நோயாளிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, (அதாவது உடலின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டு), ரத்தவோட்டம் தடைப்பட்டு, விரைவில் சாவைத் தழுவுவார்.
டெங்கு என்பது உண்மையில் என்ன? உங்களுக்கும் டெங்கு காய்ச்சல் வருமா? உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் எப்படி பாதுகாத்துக்கொள்வது? கொஞ்சம் விவரமாய் கவனிப்போம்.
டெங்கு என்பது என்ன?
கொசுக்கடியால் பலவிதமான வியாதிகள் பரவுகின்றன. அவற்றில் ஒன்றுதான் எலும்புமுறிவு காய்ச்சல் (breakbone fever) என்று அழைக்கப்படும் டெங்கு. உண்மையில் இதற்குக் காரணம் ஒரு வைரஸ் கிருமியே. நோய் பரப்பும் கொசு (அதாவது அந்நோயுள்ள ஒரு நபரைக் கடித்திருக்கும் கொசு) தன் உமிழ்நீர் சுரப்பிகளில் இந்த வைரஸை சுமந்துகொண்டு பறக்கிறது. பின் ரத்தத்தைக் குடிப்பதற்காக ஒரு நபரை கடிக்கையில் அந்த வைரஸை அவரது உடலில் செலுத்திவிடுகிறது.
நான்கு வகை டெங்கு வைரஸுகள் இருக்கின்றன. ஒருவகை வைரஸ் தாக்கிவிட்டது என்பதற்காக மற்ற மூன்று வகை வைரஸுகளும் நம் பக்கம் தலைகாட்டாது என சொல்வதற்கில்லை. வைரஸ் தொற்றப்பட்ட ஒரு கொசு, ஏற்கெனவே வேறொரு வைரஸால் தாக்கப்பட்ட ஒருவரை கடிக்கும்போது அவருக்கு DHF வரும்.
‘ஐந்தில் இரு பங்கு உலக மக்களுக்கு’ ஆபத்து
உலக சுகாதார நிறுவனத்தின்படி (WHO) 250 கோடி பேரை, அதாவது ‘உலக மக்களில் ஐந்தில் இரு பங்கினரை’ டெங்கு அச்சுறுத்துகிறது. ஏஷியாவீக் இவ்வாறு அறிக்கையிட்டது: “100-க்கும் அதிகமான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளில் டெங்கு திடீரென தீவிரமடைந்திருப்பதாய் அறிக்கை கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கானோர் இதனால் அல்லற்படுகின்றனர்; அவர்களில் 95% பிள்ளைகளே.”
டெங்கு காய்ச்சல் உலகில் முதன்முதலில் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது இன்னும் புரியாப் புதிராகவே இருக்கிறது. 1779-ல் கெய்ரோவில் பரவியதாக சொல்லப்பட்ட “முழங்கால் ஜுரம்” உண்மையில் டெங்குவாகவே இருந்திருக்க வேண்டும். அது முதற்கொண்டு, உலகெங்கும் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றிய அறிக்கை வந்தவண்ணம் இருக்கிறது. முக்கியமாய் இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு, டெங்கு மனிதனது ஆரோக்கியத்திற்கு பெருமளவு கேடு விளைவித்திருக்கிறது; முதலில் தென்கிழக்கு ஆசியாவில் இது தன் கைவரிசையைக் காட்டியது. அதன்பின் வேறு பலவித வைரஸுகளின் தாக்குதலும் ஆரம்பித்ததால் அதிக ஆபத்தான ரத்தக்கசிவு டெங்கு காய்ச்சல் தோன்றியது. WHO-வின் ஒரு பிரசுரம் இப்படிச் சொல்கிறது: “ஆசியாவிலேயே மணிலாவில்தான் 1954-ல் முதன்முதலில் ரத்தக்கசிவு ஜுரம் திடீரென பரவ ஆரம்பித்தது.” அதன்பின் தாய்லாந்திலும் வியட்நாமிலும் மலேசியாவிலும் அண்டை நாடுகளிலும் அது பரவியது. முதலில் தென்கிழக்கு ஆசியாவில் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10-லிருந்து 50 சதவீதத்தினர் இறந்தார்கள். ஆனால் இந்த நோயைப் பற்றி அதிகம் கண்டறியப்பட்ட பிறகு சாவு எண்ணிக்கை குறைந்தது.
1960-கள் முதற்கொண்டு, வைரஸ் தொற்றிய கொசுக்களை ஒழிப்பதற்கான திட்டங்கள் சரிவர செயல்படுத்தப்படாததால், டெங்கு கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. டெங்குவின் அடிச்சுவடை பின்பற்றுவதாய் DHF-ம் தீவிரமடைந்திருக்கிறது. 1970-க்கு முன் 9 நாடுகளை மட்டுமே இந்த நோய் கைப்பற்றியிருந்தது, ஆனால் 1995-க்குள் அதன் ஆதிக்கம் 41 நாடுகளை எட்டிவிட்டது. ஒவ்வொரு வருடமும் 5,00,000 DHF நோயாளிகள் மருத்துவமனைகளில் தஞ்சம் புகுவதாக WHO கணக்கிடுகிறது.
வெப்பமண்டல நாடுகளாக இல்லாதவற்றில் இந்த நோய் அவ்வளவாக காணப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் சிலசமயங்களில் இங்கிருந்து வெப்பமண்டல பகுதிகளுக்கு பிரயாணம் செய்யும் நபர்கள் இந்த நோயின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். நாடு திரும்பியதும், மற்றவர்களும் அந்த நோயின் பிடியில் சிக்குவதற்கு இவர்கள் காரணமாகிறார்கள். உதாரணத்திற்கு, 1996-ன் முடிவில் ஐக்கிய மாகாணங்களிலுள்ள நியூ யார்க், ஆரிகான், டெக்ஸஸ், மாஸசூஸெட்ஸ் ஆகிய இடங்களையும் டெங்கு ஆக்கிரமித்ததாய் த நியூ யார்க் டைம்ஸ் அறிவித்தது.
DHF தரும் ஆபத்துக்கள்
முன்பே குறிப்பிட்டபடி DHF, உயிருக்கு உலைவைக்கும் ஒருவகை டெங்கு காய்ச்சல். ஆபத்தற்றதுபோல் போலி வேஷம் போட்டு வலம்வரும் DHF உண்மையில் வெகு ஆபத்தானதே. அநேகர் அது ஃப்ளூ என நினைத்து அதன் போலி வேஷத்தை நம்பிவிடுகின்றனர். என்றாலும், அதன் உண்மையான சாயலை கண்டுணர்வதில் தாமதம் ஏற்பட்டால் நோயாளியின் நிலைமை அதோகதிதான்; அவரது ரத்தப் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை அபாய கட்டத்தை எட்டுமளவுக்குக் குறையும்; ரத்தக்கசிவு (உள்ளுக்குள்ளாகவோ அல்லது ஈறுகள், மூக்கு, தோல் போன்றவற்றிலோ) ஏற்படும்; ரத்த அழுத்தம் ஒரேயடியாக குறைந்துவிடும். நோயாளி நினைவிழந்து படுத்த படுக்கையாகிவிடலாம். குடும்பத்தார் உண்மை நிலையை புரிந்துகொள்வதற்குள், நோயாளியின் நிலை அபாய கட்டத்தின் வாயிலை எட்டுகிறது. அவரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைகின்றனர். அவருக்கு ரத்தவோட்டம் ஏற்கெனவே தடைப்பட்டிருப்பதை டாக்டர்கள் கண்டுபிடிக்கின்றனர். இந்த ஆபத்தான நிலையின் காரணமாய், திரவக் கரைசல் ஏற்றப்படுகிறது.
உங்கள் குடும்பத்தைப் பாதுகாத்தல்
இந்நோயின் பாதிப்புக்களைக் குறைக்க வழி உண்டா? டெங்கு பரவியிருக்கும் இடத்திலிருக்கும்போது கடுமையான ஜுரம் ஒரு நாளுக்கு மேல் நீடித்தால், டாக்டரிடம் செல்வது சாலச் சிறந்தது. அதுவும் முக்கியமாய் நோயாளிக்கு டெங்கு அறிகுறிகளான தடிப்புகள் அல்லது தசைகளிலோ மூட்டுகளிலோ கண்களுக்குள்ளோ வலி போன்றவை தென்படும்போது கண்டிப்பாக டாக்டரை சந்திக்க வேண்டும்.
டாக்டர் ரத்தப் பரிசோதனை செய்யலாம். சாதாரண டெங்கு காய்ச்சலுக்கு எளிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் DHF இருப்பதாக பரிசோதனை காட்டினால் உடலில் நீரிழப்பு ஏற்படாமலிருக்க உதவும் சிகிச்சையை டாக்டர் சிபாரிசு செய்வார். இதற்காக வயிற்றுப்போக்கிற்கு பயன்படுத்தப்படும் நீரூட்ட பானங்களைக் கொடுக்கலாம், அல்லது இன்னும் மோசமான நிலையிலிருந்தால் ரிங்கர்ஸ் கரைசல் அல்லது சலைன் கரைசல் போன்றவை ஏற்றப்படலாம். அதிர்ச்சி ஏற்படும்போது, ரத்த அழுத்தத்தையும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்காக டாக்டர் சில மருந்துகளை உட்கொள்ள சொல்லலாம்.
அதிகமான ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தம் ஏற்றப்பட வேண்டுமென டாக்டர்கள் சொல்வார்கள். இவர்களில் சிலர் வேறு சிகிச்சைகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் இப்படி ஆலோசனை கொடுக்கலாம். என்றாலும் அது கடவுளது சட்டத்திற்கு எதிராக இருப்பது மட்டுமல்லாமல் அவசியமற்றதாயும் இருக்கிறது. (அப்போஸ்தலர் 15:29) நோயின் ஆரம்ப கட்டத்திலிருந்தே உடலில் நீரிழப்பு ஏற்படாதபடி பார்த்துக்கொள்வது சிகிச்சையின் மிக முக்கிய அம்சம் என்பதை அனுபவம் காட்டியிருக்கிறது. இதில் நோயாளியும் மருத்துவரும் ஒத்துழைக்க வேண்டும்; அவ்வாறு செய்கையில் ரத்தமேற்றுதலைக் குறித்த விவாதங்களைத் தவிர்க்கலாம். ஒருவருக்கு DHF இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டியதன் அவசியத்தை இவை அனைத்தும் வலியுறுத்துகின்றன.—“அறிகுறிகள் என்ன?” என்ற பெட்டியைக் காண்க.
தடுப்பு நடவடிக்கைகள்
ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற கொசுவே டெங்கு வைரஸ் பரவுவதற்கான முக்கிய காரணம். இந்த இனம் உலகெங்கிலுமுள்ள வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. (இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காண்க.) ஜனநெருக்கம் மிகுந்துள்ள இடங்களிலும்கூட ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் அடை அடையாக பெருகுகின்றன. இந்தக் கொசுக்களை ஒழிப்பது இந்த நோயை ஒழிப்பதற்கு சமம்.
உலகெங்கும் கொசுக்களை ஒழிப்பது சாமானியமே இல்லை. என்றாலும் உங்கள் சுற்றுப்புறத்தைப் பொருத்தவரை, அதன் ஆபத்தைக் குறைக்க நீங்கள் செய்ய வேண்டிய சில காரியங்கள் இருக்கின்றன. பெண் கொசு தண்ணீரில் முட்டையிடுகிறது. ஓட்டை டயர்கள், தூக்கியெறியப்பட்ட டின்கள், பாட்டில்கள், அல்லது கொட்டாங்கச்சிகள் போன்ற எவற்றிலாவது ஒரு வாரத்திற்கோ அதற்கும் கூடுதலாகவோ தண்ணீர் தேங்கினால் அதிலுள்ள கொசு முட்டைகள் பொரிக்கும். ஆகவே ஓட்டை உடைசல்களை அப்புறப்படுத்துவது, கொசு பெருக்கத்தைத் தடுக்கும். அதோடுகூட, பக்கெட்டுகளையும் படகுகளையும் கவிழ்த்து வைப்பது நல்லது. குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துவதும் உதவும். இந்தக் காரணத்திற்காகவே பள்ளி வகுப்பறைகளில் பூந்தொட்டிகளை வைக்கக்கூடாது என பிலிப்பீன்ஸின் உடல்நலத் துறை, 1997/98 பள்ளி ஆண்டின் ஆரம்பத்தில் அறிவித்ததென்றால் பாருங்களேன்!
வீட்டிலுள்ள எவராவது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், வேறு கொசுக்கள் அவரைத் தீண்டாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவை காய்ச்சலை பரப்பிக்கொண்டே இருக்கும். நோய்ப்பட்டவர் கொசுவலை அடிக்கப்பட்ட அல்லது ஏஸி பொருத்தப்பட்ட அறைகளில் இருப்பது பாதுகாப்பானது.
தடுப்பூசியைப் பற்றியதென்ன? தற்போது இதற்கான தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இது அவ்வளவு சுலபமல்ல, ஏனென்றால் அந்த நான்கு வகை வைரஸுகளையும் எதிர்க்கும் ஆற்றல்மிக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே முழு பாதுகாப்பு சாத்தியமாகும். ஒரேவொரு வகை வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்வது உண்மையில் DHF-ன் ஆபத்தை வலிய விலைகொடுத்து வாங்குவதாய் இருக்கும். அடுத்த ஐந்து அல்லது பத்து வருடங்களுக்குள் சக்திவாய்ந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
சில ஆராய்ச்சியாளர்கள் வேறொரு முறையை முயன்று பார்த்திருக்கிறார்கள். மரபணுவாக்கத்தின் (genetic engineering) மூலம், கொசுவின் உமிழ்நீரில் டெங்கு வைரஸ் பெருகுவதைத் தடுக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர். நினைத்தபடியே இது நடந்துவிட்டால், மரபணுவாக்கம் செய்யப்பட்ட கொசுக்களின் மூலம் அவற்றின் சந்ததியும் டெங்குக்கு எதிரான தடுப்பாற்றலைப் பெறும். கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இது எந்தளவு வெற்றியடையும் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
தற்போது டெங்குவை பூண்டோடு ஒழிப்பது சாத்தியமானதாய் தோன்றவில்லை. ஆனால் நடைமுறைக்கு பொருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்தக் கொசுக்கடி காய்ச்சலின் கொடிய ஆபத்துக்களை நீங்களும் உங்கள் அன்பானவர்களும் தவிர்க்கலாம்.
[பக்கம் 22-ன் பெட்டி]
அறிகுறிகள் என்ன?
டெங்கு காய்ச்சலுக்கும் ரத்தக்கசிவு டெங்கு காய்ச்சலுக்குமான (DHF) பொதுவான அறிகுறிகள்
• திடீரென கடும் ஜுரம்
• பயங்கரமான தலைவலிa
• கண்களுக்குள் வலி
• மூட்டு மற்றும் தசை வலி
• நிணநீர்க் கணுக்களின் வீக்கம்
• தடிப்புகள்
• கடும் சோர்வு
DHF-க்கே உரிய அறிகுறிகள்
• திடீர் நினைவிழப்பும், செயலிழப்பும்
• தோல் ரத்தக்கசிவு
• பொதுவான ரத்தக்கசிவு
• ஜில்லென்ற, பிசுபிசுப்பான சருமம்
• அமைதியின்மை
• தளர்ந்த நாடித் துடிப்புடன் அதிர்ச்சி (டெங்கு அதிர்ச்சி நோய்குறித்தொகுப்பு)
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். முக்கியமாய் பிள்ளைகளுக்கே ஆபத்து அதிகம்
[அடிக்குறிப்பு]
a ஆஸ்பிரினை தவிர்க்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர், ஏனென்றால் அது ரத்தக்கசிவை அதிகரிக்கும்.
[பக்கம் 23-ன் பெட்டி]
பிரயாணிகளுக்கு சில துணுக்குகள்
வெப்பமண்டல பகுதிகளுக்கு செல்லும் பிரயாணிகள் சிலசமயங்களில் டெங்கு வைரஸால் தாக்கப்படுகின்றனர், ஆனாலும் ரத்தக்கசிவு டெங்கு காய்ச்சல் வருவது அரிதே. ஏனென்றால் அதிக ஆபத்தான இது, இரண்டாவது முறை டெங்கு வைரஸால் தாக்கப்படும்போதே பொதுவாக வருகிறது. ஆகவே பிரயாணிகளே, உங்கள் பாதுகாப்பிற்காக இதோ சில துணுக்குகள்:
• முழு கை சட்டைகளையும் நீளமான பான்ட்டுகளையும் அணியுங்கள்
• கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள்
• ஜனநெருக்கம் மிகுந்துள்ள பகுதிகளில் தங்காதீர்கள்
• தங்கும் இடங்களில், கொசுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி ஜன்னல்களை மூடிவையுங்கள்
• வீடு திரும்பியவுடன் உங்களுக்கு காய்ச்சல் வந்தால், எங்கு பிரயாணம் செய்தீர்கள் என டாக்டரிடம் சொல்லுங்கள்
[பக்கம் 23-ன் வரைப்படம்/படம்]
சமீபத்தில் டெங்கு பரவியிருக்கும் பகுதிகள்
டெங்கு பரவும் ஆபத்திலுள்ள பகுதிகள்
டெங்குக்கு காரணமான “ஏடிஸ் ஏஜிப்டி” கொசு காணப்படும் பகுதிகள்
[படத்திற்கான நன்றி]
மூலம்: நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்கள், 1997
© Dr. Leonard E. Munstermann/Fran Heyl Associates, NYC
[பக்கம் 24-ன் படங்கள்]
கொசு பெருகும் இடங்கள் (1) ஓட்டை டயர்கள், (2) மழைநீர் வடிகால்கள், (3) பூந்தொட்டிகள், (4) பக்கெட்டுகள் அல்லது வேறு சாமான்கள், (5) தூக்கியெறியப்பட்ட டின்கள், (6) பீப்பாய்கள்
[பக்கம் 21 படத்திற்கான நன்றி]
© Dr. Leonard E. Munstermann/Fran Heyl Associates, NYC