உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 12/8 பக். 30-31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஐரோப்பிய நீதிமன்றம் கிரேக்க சாட்சிகளுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறது
  • தூக்கக் கடன்
  • அதிக வயதாகிவிடவில்லை
  • பெண் பணியாளர்களின் தொல்லைகள்
  • ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் பைபிள் கல்வி வகுப்புகள்
  • எய்ட்ஸ் கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் போய்விட்டதா?
  • சிறுவர் விபசாரம் ஆசியாவில் திடீர் அதிகரிப்பு
  • விரைவு வழிபாடு
  • விலங்குகளுக்கான பூசை
  • விழிக்களைப்பைக் குறைத்தல்
  • சர்ச்சுகள் விற்பனைக்கு
  • மென்னோட்டத்தின் மிகை முயற்சி
  • டெங்கு—கொசுக்கடி காய்ச்சல்
    விழித்தெழு!—1998
  • டெங்கு பரவி வரும் கொடிய காய்ச்சல்
    விழித்தெழு!—2012
  • எய்ட்ஸ்—நான் ஆபத்திலிருக்கிறேனா?
    விழித்தெழு!—1993
  • எய்ட்ஸ் வளரிளமைப் பருவத்தினருக்கு ஒரு பேராபத்து
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 12/8 பக். 30-31

உலகத்தைக் கவனித்தல்

ஐரோப்பிய நீதிமன்றம் கிரேக்க சாட்சிகளுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறது

பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பில், மே 25, 1993, அன்று யெகோவாவின் சாட்சிகள் சட்டவழக்கில் மாபெரும் வெற்றியடைந்தனர். அந்த வழக்கு, சட்டவிரோதமாக மதமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மீநோஸ் கோக்கினாக்கீஸ் என்ற 84 வயதுடைய சாட்சியை உட்படுத்தியதாகும். மார்ச் 20, 1986, அன்று கிரீட்டின் லஸீத்தீயிலுள்ள குற்றவியல் நீதிமன்றத்தால், அவர் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டார். எனினும், ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் ஆறுக்கு-மூன்று வீத (ஆறு நீதிபதிகளுக்கு எதிராக மூன்று நீதிபதிகள்) தீர்மானத்தில் அவருடைய தண்டனையை நிராகரித்தது. பல பத்தாண்டுகளாக, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சினால் பலமாக செல்வாக்குச் செலுத்தப்பட்ட கிரேக்க அரசாங்கம், சட்டவிரோதமாக மதம் மாற்றிய குற்றங்களுக்காக ஆயிரக்கணக்கான சாட்சிகளைக் கைதுசெய்யும்படி செய்தது. இவ்வழக்கில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய குழுவின்கீழ் உள்ள திரு. கோக்கினாக்கீஸின் உரிமைகளை கிரேக்க அரசாங்கம் மீறியிருந்ததாக ஐரோப்பிய நீதிமன்றம் கண்டுபிடித்தது. கிரீஸில் உள்ள 26,000-க்கும் மேற்பட்ட சாட்சிகள், இந்தத் தீர்ப்புத் தங்களுடைய துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவந்து, சட்டத்திற்கிசைவான தங்களுடைய ஊழியத்தை சமாதானத்தோடு செய்வதை அனுமதிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர். (g93 8/22)

தூக்கக் கடன்

“தூக்கத்தில் குறைவுபடும் ஜனங்கள் எல்லாரையும்போல நடக்கலாம், கேட்கலாம், பார்க்கலாம். எனினும், சீர்தூக்கிப்பார்ப்பதற்கான திறமையும், தீர்மானங்கள் எடுப்பதற்கான சக்தியும், சுறுசுறுப்பாக இருப்பதற்கான திறமையும் பலவீனப்படுத்தப்படுகிறது என்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது,” என்று வேஜா பத்திரிகை கூறுகிறது. அவசியமான தூக்கத்தை இழப்பதன் அபாயங்களைப்பற்றி எச்சரிக்கும் நிபுணர்களை அந்தக் கட்டுரை மேற்கோள் காட்டுகிறது. “வேலையில் ஏற்படும் ஒவ்வொரு 10 விபத்துக்களிலும் 2 விபத்துக்கள் இரவில் தூக்கம் போதாமையினால் ஏற்படுகிறது,” என்பதாக பிரேஸிலின் தூக்கத்திற்கான சங்கத் தலைவர், டாக்டர் டெனிஸ் மார்ட்டினஸால் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டுகிறது. குறைந்தளவே தூங்குபவர்கள், “உதாரணமாக, வெவ்வேறு இடங்களில் மூன்று வேலையை செய்பவர்கள், . . . வெறுமனே தங்களுடைய ஆரோக்கியத்தை வேலைச் சந்தையில் விற்கின்றனர்,” என்று டாக்டர் மார்ட்டினஸ் எச்சரிக்கிறார். (g93 8/22)

அதிக வயதாகிவிடவில்லை

‘கற்றுக்கொள்ள முடியாதளவுக்கு ஒருபோதும் உங்களுக்கு அதிக வயதாவதில்லை.’ இந்தப் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதற்காகவே நடந்ததைப்போன்று, 93 வயதுள்ள சுறுசுறுப்பான பர்னாபே ஏவான்ஹேலீஸ்டா, இரண்டு வருடகாலத்தில் தன்னுடைய பல்கலைக்கழக படிப்பை முடிப்பதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் ஸ்பெய்னிலுள்ள வாலன்சியா பல்கலைக்கழகத்தில் கலை பயின்றுவருகிறார். படிப்புக்கான அவருடைய முழு ஈடுபாடு, ஏற்கெனவே தலைசிறந்த கல்வி சாதனைக்கான பரிசை அவருக்குப் பெற்றுத்தந்தது. “படிப்பு மனநிறைவு தருகிற ஒரு காரியமாக இருக்கிறது,” என விவரிக்கிறார் பர்னாபே. அவர் அனுதினமும் காலை எட்டு மணிக்குப் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்து, அடிக்கடி இரவில் ஒன்பது மணிவரையில்கூட அவருடைய மாலை வகுப்புகளை முடிப்பதில்லை. முதியவர்கள் படிப்பதற்குப் பொன்னான ஒரு வாய்ப்பைக் கொண்டிருக்கின்றனர் என்று பர்னாபே நம்புகிறார். “வாழ்க்கையில் அதைச் செய்வதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்கக்கூடிய காலமாகும் அது,” என்கிறார் அவர். சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது வாழ்க்கையில் அவருக்கு ஒரு நோக்கத்தைத் தருகிறது என்று அவருடைய மனைவி மேலும் கூறுகிறார். (g93 8/22)

பெண் பணியாளர்களின் தொல்லைகள்

வேலையிலிருக்கும்போது பாலுறவு சம்பந்தமாக தொல்லைப்படுத்தப்பட்டிருப்பதைப்பற்றி கனடாவின் பெண் பணியாளர்களில் 70 சதவீதத்தினர் புகார் செய்திருப்பதாக கனடாவின் டோரன்டோவில் உள்ள டோரன்டோ மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு வெளிப்படுத்திற்று. தி டோரன்டோ ஸ்டார் சொல்லுகிறபடி, பெண்களில் 2 சதவீதத்தினர் பாலுறவு சம்பந்தமாக தாக்கப்பட்டிருப்பதாகவும், 1 சதவீதத்தினர் பாலுறவுக்காக அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும் அறிவித்தனர். பெண்களில் அநேகர் தாங்கள் “அவமரியாதைக் காட்டும் வகையிலோ தகுதியற்ற முறையிலோ அழைக்கப்பட்டனர்” என்றும், அதிக சதவீதத்தினர் “பாலுறவு சம்பந்தமான தமாஷ்களைப்பற்றியும் புகார்” செய்தனர். பெரும்பாலும் 60 சதவீத பெண் பணியாளர்கள் மருத்துவமனையின் “சில பாகங்களில் பாதுகாப்பற்றவர்களாக சில சமயங்களில் உணர்ந்தனர்,” என்று ஸ்டார் அறிக்கை செய்கிறது. (g93 9/8)

ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் பைபிள் கல்வி வகுப்புகள்

ஜப்பானின் புகழ்பெற்ற உவாசெத பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை மாணவர்கள் மத்தியில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு “அநேக மாணவர்கள் பண்டைக்கால இலக்கியங்களைப்பற்றி, குறிப்பாக பைபிளைப்பற்றி, கற்றுக்கொள்ள ஆர்வம் உடையவர்களாக இருப்பதாக” வெளிப்படுத்திற்று என்றும் “பிறநாட்டுப் பண்பாடுகளைப் புரிந்துகொள்வதில் பைபிள் அத்தியாவசியம் என்று உணரப்பட்டதாகவும்,” தி டெய்லி யோமியூரி அறிக்கை செய்கிறது. இலக்கியத்துறையில் ஏற்கெனவே தனிச்சிறப்புப் பெற்றிருக்கிற அந்தப் பல்கலைக்கழகம், 1993-ன் வசந்தகால செமஸ்டரில் தொடங்கவிருக்கும் அதன் பாடங்களில் பைபிள் கல்வி வகுப்புகளையும் சேர்த்துக்கொண்டது. தங்களுடைய கல்வித் திட்டத்தை மாற்றியமைத்துக்கொள்வதற்கான அதிக சுதந்திரத்தைக் கல்வி அமைச்சரகம் பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு வருடங்களுக்குமுன் கொடுத்தது. அதிலிருந்து கல்லூரி பாடத்திட்டத்தை உருவமைப்பதில் மாணவர்கள் பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டது ஜப்பானில் இதுவே முதல்முறையாகும். (g93 9/8)

எய்ட்ஸ் கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் போய்விட்டதா?

எய்ட்ஸ் உலகெங்கும் பரவுவது இப்போது கட்டுப்பாட்டை மீறிபோய்விட்டதா? இருக்கலாம், என்று சொல்கிறது ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட உலக எய்ட்ஸ் செயல்திட்ட கூட்டுறவு குழுவால் தொகுக்கப்பட்ட ஓர் 1,000-பக்க அறிக்கை. தி கார்டியன் உவீக்லி சொல்கிறபடி, எய்ட்ஸ் பரவுவதை எந்தத் தேசத்தாலும் தடுக்க முடியவில்லை என்றும் ஐரோப்பாவில் இந்நோய் உச்சநிலையை அடைந்திருப்பதாக சொல்பவர்கள் தவறாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கை காண்பிக்கிறது. அந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “HIV/எய்ட்ஸ் கொள்ளைநோய் ஆபத்தான, புதியதொரு கட்டத்திற்குள் நுழைகிறது. உலகளாவிய அச்சுறுத்தல் அதிகரிக்கும்போது, அதிகரித்துவரும் மனமகிழ்வு, பிடிவாதமான மறுதலிப்பு, மீண்டெழுகின்ற வேறுபாட்டுணர்ச்சி போன்றவற்றின் அநேக அறிகுறிகளும் தோன்றுகின்றன.” (g93 9/8)

சிறுவர் விபசாரம் ஆசியாவில் திடீர் அதிகரிப்பு

“பத்து வயதில் நீ ஒரு வயதுவந்த இளம்பெண், இருபதில் ஒரு கிழவி, முப்பதில் செத்த பிணம்.” அது, நேஷனல் ஜியாக்ரஃபிக் ட்ரேவலர் பத்திரிகையின்படி, தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள குழந்தை விபசாரிகளைப்பற்றி பொதுவாக சொல்லப்படும் பழமொழியாகும். ஆசியாவில் சுமார் 10 லட்சம் குழந்தை விபசாரிகள் இருக்கின்றனர். அவர்களில் அநேகர் பத்து வயதுக்குக் கீழுள்ளவர்களாகும். திடீரென பெருகிவரும் இந்தச் சட்டவிரோதமான தொழில் சுற்றுலாத்துறையால் வளர்த்துவிடப்படுகிறது என்பதாக அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐக்கிய மாகாணங்கள், மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள சிறுவர் புணர்ச்சி (pedophile) அமைப்புகள், ஆசிய நாடுகளுக்கு ‘பாலுறவு சுற்றுப்பயணங்களை’ ஏற்பாடு செய்கின்றன. ஒவ்வொரு வருடமும் நேபாள மலைகளிலிருந்து சுமார் 5,000 மங்கையர் இந்தியாவின் பம்பாயிலுள்ள விபசார விடுதிகளில் “சேர்க்கப்படுகின்றனர்,” என லண்டனின் தி டைம்ஸ் சமீபத்தில் அறிக்கை செய்தது. இப்போது அங்கு ஏறக்குறைய 2,00,000 பேர் இருக்கின்றனர். அவர்களில் பாதிக்குமேல் எய்ட்ஸை உண்டுபண்ணும் HIV வைரஸால் தாக்கப்பட்டிருக்கின்றனர். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம் மேற்கு ஐரோப்பாவிற்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் மங்கையரை ஏற்றுமதியும் செய்கிறது. (g93 9/8)

விரைவு வழிபாடு

“ஒரு சர்ச்சின் வழிபாடு ஏன் காலை 11 மணிக்குத் தொடங்கி ஒரு மணிநேரம் அல்லது அதற்கதிகமான நேரம் வரை நடைபெறவேண்டும்?” அ.ஐ.மா.-வின் ஃப்ளாரிடாவில் உள்ள ஒரு பேப்டிஸ்ட் ஊழியரால் எழுப்பப்பட்ட அந்தக் கேள்வி, டைம்ஸ்-உவெஸ்ட் வர்ஜீனியனில் தோன்றிய அஸோஷியேட்டட் ப்ரஸ் அறிக்கையின்படி, முன்கூட்டியே சொல்ல சாத்தியமாயிருந்த ஒரு பரிகாரத்திற்கு வழிநடத்திற்று. அந்த குரு ஒரு “சுருக்கமான சிறிய 22-நிமிட வழிபாட்டு சேவையை” அளிக்கிறார். அவர் வலியுறுத்திக் கூறுகிறபடி, அது “ஒரு பிரசங்கம் கொடுக்க, கீர்த்தனை பாட, வேதவசனங்கள் படிக்க, ஜெபம் செய்ய, சபையாரெல்லாரும் சர்ச்சிலிருந்து வெளியேற” போதுமான நேரத்தைக் கொடுக்கிறது. பிரசங்கம்தானே எட்டு நிமிடங்களுக்குச் சுருக்கப்பட்டதாய் இருக்கும். அஸோஷியேட்டட் ப்ரஸ் சொல்லுகிறபடி, அது “மேக் டானல்ட்ஸ் [விரைவு உணவு விடுதியினர்] உணவுக்கு என்ன செய்தனரோ அதையே சர்ச்சுக்குச் செய்ய” அந்த ஊழியரை அனுமதிக்கும். அந்த அறிக்கை மேலும் கூறுகிறது: இருப்பினும், “பணவசூல் தட்டைக் கொண்டுசெல்வதற்குத் தாராளமான நேரம் அனுமதிக்கப்படும்.” (g93 9/8)

விலங்குகளுக்கான பூசை

சமீபத்தில் விலங்குகள் இத்தாலிய குருவர்க்கத்திடமிருந்து குறிப்பிட்ட கவனத்தைப் பெறுவதாகத் தோன்றுகின்றன. பிரான்சிசுகளின் (Franciscans) மத அமைப்பு சமீபத்தில் இயேசு சங்கத்தினரை (Jesuits) “திருச்சபைக்கு முரணான கோட்பாட்டாளர்கள்” (heretics) “படைப்பின் விரோதிகள்” என்றெல்லாம் குற்றம் சாட்டியது. இதற்குக் காரணம் விலங்குகள் “அன்புசெய்யும் திறமையில்லாதவை” என்று இயேசு சங்கத்தினர் கூறியதே. கத்தோலிக்க மடத்தலைவர் மாரியோ காஞ்ச்சானி சர்ச்சின் கருத்தை இவ்வாறு விளக்குகிறார்: “[கத்தோலிக்க] சர்ச் உயிருள்ள எல்லா படைப்புகளுக்குமே பொதுவானது.” ஆகவே, இத்தாலிய செய்தித்தாள் லா ரேப்பூப்ளிகா கூறுகிறபடி, ரோமில் சர்ச்சுக்குச் செல்பவர்கள் வெகுகாலமாகவே தங்களுடைய “சிறிய வீட்டு விலங்கு நண்பர்களுக்கு” ஆசீர்வாதத்தைப் பெறக்கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நிகழ்ச்சியை அறிவிக்கும் வகையில், அந்தச் செய்தித்தாள் விவரிக்கிறது: “கிறிஸ்தவர்கள் என்று மிகத் தகுதியாக விவரிக்கப்படகூடியவர்களோடு, ஆசீர்வாதம் தேவையென்று உணரப்படுகிற பூனைகள், நாய்கள், கிளிகள், முயல்கள், மற்றும் எல்லா பிராணிகளும்கூட பூசைக்குச் செல்லலாம்.” (g93 8/22)

விழிக்களைப்பைக் குறைத்தல்

தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டர் திரையில் பார்த்ததால் ஏற்பட்ட விழிக்களைப்பினால் (eyestrain) நீங்கள் துன்பப்படுகிறீர்களென்றால், வெறுமனே அதைத் தாழ்வான மட்டத்தில் வைத்து அதன் திரை மேல்நோக்கி இருக்குமாறு வைப்பதால் நீங்கள் அந்தத் துன்பத்திலிருந்து விடுபடலாம். நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸின் செய்யும் இந்தச் சிபாரிசு, ஜனங்கள் கிடைநிலையில் (horizontally) பார்க்கும்போது தங்களுடைய கண்களைக் கீழ்நோக்கிப் பார்க்கும்போது செய்வதைவிட குறைவாக சிமிட்டி தங்களுடைய கண்களை அகலத் திறக்கிறார்கள் என்ற ஊகத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. குறைவாக சிமிட்டுதல் கண்ணின் குறைந்த உயவை (lubrication) அர்த்தப்படுத்துகிறது. கண்ணை அகலத் திறப்பது ஈரப்பசையுள்ள கண்ணின் பாதுகாப்புப் படலத்தின் ஆவியாதலை அதிகரிக்கிறது. (g93 9/8)

சர்ச்சுகள் விற்பனைக்கு

இத்தாலியிலுள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்குத் தனக்குச் சொந்தமான மத கட்டடங்கள் சரியாக எத்தனை இருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால் ஒரு காரியம் நிச்சயம்: அது அவை எல்லாவற்றையும் வைத்துப் பராமரிக்க முடியாது. கைவிடப்பட்டு சிறிது சிறிதாக சீரழிந்துகொண்டிருக்கும் சர்ச் கட்டடங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, மத நோக்கங்களுக்கு இனியும் பயன்படுத்தப்படாத குறிப்பிட்ட கட்டடங்களை விற்றுவிடலாமா என்று சர்ச் மதிப்பாய்வு நடத்திக்கொண்டிருக்கிறது என்பதாக இத்தாலிய சர்ச்சின் பண்பாட்டு மரபுரிமை குழுவின் தலைவர், பயட்ரோ ஆன்டானியோ கார்லாடோ சொன்னார். எத்தனை சர்ச்சுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்படும்? “இத்தாலியிலுள்ள 95,000-க்கும் அதிகமான சர்ச்சுகளின் 10 சதவீதம் என்பதாக தோராயமான முதநிலை கணக்கீடு ஒன்று குறிப்பிட்டுக் காட்டுகிறது,” என்று விவரிக்கிறார் இல் மெஸ்ஸாஜெரோவில் உள்ள பிஷப். (g93 9/8)

மென்னோட்டத்தின் மிகை முயற்சி

ஜெர்மனியின் பெர்லினிலுள்ள பல்கலைக்கழக எலும்பியல் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியின்படி, மென்னோட்டம் ஒரு சைக்கிள் ஓட்டுவதைக்காட்டிலும் உடலின் மூட்டுகளைப் பத்து மடங்கு மிகை முயற்சிக்குட்படுத்துகிறது. முக்கியமாக இந்த நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செயற்கை இடுப்பைப் பயன்படுத்தி, அந்தப் பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு செய்கைகளின்போதும் தனித்தனி மூட்டுகளுக்கும் கொடுக்கப்படும் மிகை முயற்சியை அளப்பதில் முதன்முறையாக வெற்றியடைந்துள்ளனர். “மென்னோட்டக்காரர்கள் தங்களுடைய தசைநாண்களையும் மூட்டுகளையும் சைக்கிள் ஓட்டுபவர்களைவிட அதிக மிகை முயற்சிக்குள்ளாக்குகின்றனர் என்று பொதுவாக ஊகிக்கிக்கப்பட்டிருந்தபோதிலும், இவ்வளவு அதிக வித்தியாசத்தைக் கண்டு அந்த ஆராய்ச்சியாளர்களேகூட ஆச்சரியப்படுகின்றனர்,” என்று ஸூடட்சே ட்ஸைடுங் தெரிவிக்கிறது. (g93 9/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்