எமது வாசகரிடமிருந்து
பிள்ளைகளும் போரும் மீளாத்துயரத்துடன், “போரால் பிள்ளைகளுக்கு சம்பவிப்பவை” (அக்டோபர் 22, 1997) என்ற தொடர்கட்டுரையை நான் வாசித்தேன். நானும் போரால் அவதிப்பட்ட பிள்ளைதான். இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானிய சித்திரவதை முகாம்களான எங்காவேயிலும் பாண்டுங்கிலும் நாலரை ஆண்டுகளைக் கழித்தேன். பத்து வயதில், என் குடும்பத்தை விட்டு பிரிக்கப்பட்டு, வாரத்தில் ஏழு நாட்களும் வெப்பமண்டல வெயிலில் மாடாய் உழைத்தேன். ஊட்டச்சத்து இல்லாமல், பெரிபெரி நோயாலும் வயிற்றுக்கடுப்பு நோயாலும் துவண்டேன். இருந்தாலும், இன்றுள்ள கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு இருக்கும் விவரிக்க முடியாத கொடுமையுடன் என் சோகக் கதையை ஒப்பிட அவை ஒன்றுமே இல்லை என்பதுபோல் தெரிகிறது. போரால் அவதியுறும் பிள்ளைகள் உட்பட, உலகளாவிய மக்கள் யெகோவா தேவனுடைய ஆறுதலான வாக்குறுதிகளைப் பற்றிய அறிவை அடைவதற்காக அவர் காலத்தை அனுமதித்திருப்பதை நினைத்து நாம் ஒருபோதும் சோர்ந்துவிடாதிருப்போமாக!
ஆர். பி., ஐக்கிய மாகாணங்கள்
கொழுப்பு நிறைந்த பானை நான் என் வாழ்க்கையை நினைத்தே வருத்தப்பட்டுக்கொண்டும் துக்கப்பட்டுக்கொண்டும் இருந்தேன். ஒரு வருஷத்துக்கு முன்பு என் கணவர், தனக்கு கிறிஸ்தவ மனைவி வேண்டவே வேண்டாம் என்று தீர்மானித்தார். இதனால், என்னையும் என் மகனையும் அழகிய வீட்டைவிட்டு விரட்டிவிட்டார். அந்த வீடு, அவர் எனக்காகவே வாங்கியிருந்ததாக சொல்லிக்கொண்ட வீடு. இதனால் நான் வறுமைக்குள்ளானேன். என் வாழ்க்கை இருண்டுவிட்டதாக தோன்றியது. ஆகவே நான் யெகோவாவின் உதவிக்காக மன்றாடினேன். என்னவென்று பார்த்தால், “கொழுப்பு நிறைந்த பானையிலிருந்து ஒரு பாடம்” (அக்டோபர் 22, 1997) என்ற கட்டுரையிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். அது, உண்ணவும் உடுக்கவும் போதுமென்ற மனதுடன் இருக்கவும் ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைக்கவும் எனக்கு நினைப்பூட்டியது.
கே. பி., ஐக்கிய மாகாணங்கள்
உடன்பிறந்தோர் பிரச்சினைகள் “இளைஞர் கேட்கின்றனர் . . . என் சகோதரனுக்கு மட்டும் ஏன் அதிக கவனிப்பு?” (அக்டோபர் 22, 1997) என்ற கட்டுரை, எங்களுக்குத் தக்க சமயத்தில் கிடைத்தது. எல்லா பிள்ளைகளையும் ஒரே விதமாய் நடத்தாமல் இருப்பது நியாயமற்றதல்ல என்பதை உணர்ந்துகொள்ள அது எங்களுக்கு உதவியது. பெற்றோர், நியாயமான காரணத்தோடுதான் எங்கள் உடன்பிறந்தோருக்கு அதிகப்படியான கவனத்தைச் செலுத்துகின்றனர் என்பதை நாங்கள் இப்போது புரிந்துகொண்டோம். இந்தக் கட்டுரையை உண்மையில் நாங்கள் ஆமோதிக்கிறோம்.
பி. கே., எச். கே., மற்றும் ஜி. யு. ஓ., நைஜீரியா
இரைச்சல் ஒரு பெரிய தொழிற்சாலையில் அநேக ஆண்டுகளாக நான் வேலை பார்த்திருக்கிறேன். நானும் என்னுடன் கூட சேர்ந்து வேலை செய்தவர்களும் அங்குள்ள பேரிரைச்சலின் தொல்லையால் கஷ்டப்பட்டிருக்கிறோம். நவம்பர் 8, 1997 (“இரைச்சல்—படுமோசமான மாசுப்பொருளா?”) இதழை வேலைக்கு எடுத்துச் சென்றேன். இதனால், எல்லா பணியாளர்களின் ஆரோக்கியத்தையும் காக்க தேவையான நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஆர். பி., இத்தாலி
என் பக்கத்து வீட்டுக்காரரால் உண்டாகும் இரைச்சலின் காரணமாக அநேக ஆண்டுகளாக நிலைகுலைந்தவனாய் இருந்திருக்கிறேன். அவர் இரவு வெகுநேரம் வரை தொழில் நடத்துகிறார். சிலசமயங்களில் நான் மிகவும் கோபமடைந்து விடுவதுண்டு. ஆனால், இதே போன்ற இரைச்சலுக்கு பலியாகியுள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் தன்னடக்கத்தை கடைப்பிடிப்பதால் இந்தத் தொல்லையை சமாளித்து வருகின்றனர் என்பதை அறிந்து பலப்படுத்தப்பட்டேன்.
டி. ஓ., ஜப்பான்
விடியற்காலையில் போன் பேசுவதன் மூலம் எனக்குத் தொந்தரவு தரும் ஒருவர் என் வீட்டுப்பக்கம் வசிக்கிறார். இந்த விஷயத்தை சிநேகப்பான்மையுடன், கிறிஸ்தவ முறையில் எவ்வாறு கையாள முடியும் என்பதைப் பற்றி அருமையான ஆலோசனைகளை இந்தக் கட்டுரைகள் கொடுத்துள்ளன.
ஜே. ஆர்., இங்கிலாந்து
மெகல்லன் “உலகத்தை வெளிப்படுத்திய அந்த மனிதன்” (நவம்பர் 8, 1997) என்ற தலைப்புடையதும், பர்டினான்ட்டு மெகல்லனைப் பற்றியதுமான அந்தக் கட்டுரையை உண்மையிலேயே நான் பாராட்டினேன். அது மிகவும் சுவாரஸ்யமாய் இருந்தது. இந்தக் கட்டுரை வெளிவந்தபோது, ஐந்தாம் வகுப்பில் அவரைப் பற்றி நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். சமூகவியல் வகுப்பில் நான் கற்றுக்கொண்டதைக் காட்டிலும் அதிக விஷயத்தை இந்தக் கட்டுரையிலிருந்து கற்றுக்கொண்டேன். என் பத்திரிகையை என் ஆசிரியரிடம் கொடுத்தேன். அவரும் அதை விரும்பிப் படித்தார்! ஓரிரு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பத்திரிகையை என்னிடம் திருப்பித் தந்துவிட்டார். அதில் மறுபடியும் எனக்கு நன்றி தெரிவித்திருந்த ஒரு குறிப்பு இருந்தது.
பி. வி., ஐக்கிய மாகாணங்கள்
அப்படிப்பட்ட தீர்மானமான மனிதரான பர்டினான்டு மெகல்லன், வரலாற்றிலேயே தலைசிறந்த சாதனைகளில் ஒன்றைப் படைப்பதற்காக பகைமையையும் வெவ்வேறு சிரமங்களையும் சமாளித்தார் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது மலைக்க வைத்தது. ஆர்வமூட்டும் ஒரு பொருளின்பேரில் கட்டுரை எழுதியிருந்ததற்காக உங்களுக்கு நன்றி.
எம். ஈ., இத்தாலி