உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 11/8 பக். 12-17
  • உலகத்தை வெளிப்படுத்திய அந்த மனிதன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தை வெளிப்படுத்திய அந்த மனிதன்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அரசவைப் பணியாளிலிருந்து அஞ்சாநெஞ்சுள்ள கப்பலோட்டியாக
  • ஸ்பெய்னின் அரசர் இணங்குவாரா?
  • “சரித்திரத்திலேயே மிகப்பெரிய கடற்பயண சாதனை”
  • பசிபிக்கில் சோதனை
  • அவலம்—ஒரு கனவு கலைகிறது
  • திரும்பிவரும் பயணம் பேராபத்து நிறைந்ததாகிறது
  • மெகல்லனுடைய பெயர் நிலைத்திருக்கிறது
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • வாஸ்கோடகாமாவின் சாதனை படைத்த கடல் யாத்திரை
    விழித்தெழு!—1999
  • கோட்டை கடத்தல்
    விழித்தெழு!—2002
  • “பிரிக்கப்பட்ட தேசம், ஐக்கியப்பட்ட உலகம்”—பனாமா கால்வாய்க் கதை
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 11/8 பக். 12-17

உலகத்தை வெளிப்படுத்திய அந்த மனிதன்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

நிலவுக்கு முதன்முதலாக மனிதர்கள் சென்றபோது, தாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள், எப்படி அங்கே போய் சேருவார்கள் என்பதை மிகத்துல்லியமாக திட்டமிட்டார்கள். அவர்களால் பூமியுடன் தொடர்புகொள்ளவும் முடிந்தது. ஆனால், பர்டினான்டு மெகல்லனுடைய a ஐந்து சிறிய மரக்கலன்களிலிருந்தவர்கள் ஸ்பெய்னைவிட்டு 1519-ல் புறப்பட்டபோது, தாங்கள் அறியாததை நோக்கி பயணம் செய்தனர்; அந்த மரக்கலன்களில் பெரும்பாலானவை ஒரு நவீனகால டிரெய்லரைப்போன்று ஏறக்குறைய 70 அடி நீளமுள்ளவையாக மட்டுமே இருந்தன. மேலும் அவர்கள் தன்னந்தனிமையில் இருந்தனர்.

எக்காலத்திலும் செய்யப்பட்ட கடற்பயணங்களிலேயே மிகத்துணிகரமானதும் மிகத்தைரியமானதுமான ஒன்றாக, மெகல்லனுடைய கப்பற்பயணங்கள் கண்டுபிடிப்பின் பெரும் சகாப்தத்திற்கான ஒரு நினைவுச் சின்னமாகும்; அந்தச் சகாப்தம் வீரத்திற்கும் பயத்திற்கும், சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும், கடவுளுக்கும் செல்வத்திற்குமான ஒரு சகாப்தமாக இருந்தது. அப்படியென்றால், வட போர்ச்சுகலில் பர்டினான்டு மெகல்லன் பிறந்த வருடமாகிய ஏறக்குறைய 1480-க்கு பின்னோக்கி சென்று, உலகத்தை வெளிப்படுத்திய தனிச்சிறப்புவாய்ந்த அந்த மனிதனையும் சரித்திரப் புகழ்பெற்ற அவருடைய பயணங்களையும் பற்றி சிந்திப்போம்.

அரசவைப் பணியாளிலிருந்து அஞ்சாநெஞ்சுள்ள கப்பலோட்டியாக

மெகல்லன் குடும்பத்தினர் உயர்குடியைச் சேர்ந்தவர்கள்; ஆகவே, நிலவியிருந்த வழக்கத்தின்படியே பர்டினான்டு இன்னும் வாலிபனாக இருக்கும்போதே அரசவை பணியாளாக வேலைசெய்யும்படி அழைக்கப்படுகிறான். இங்கே கல்வி பெறுவதோடு, புகழ்பெற்ற ஸ்பைஸ் தீவுகளுக்கு (இந்தோனீஷியா) மேற்கு கடல்வழிப் பாதையை கண்டுபிடித்துவிட்டு அப்போதுதான் அமெரிக்காக்களிலிருந்து திரும்பியிருந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் போன்றவர்களின் வீரச்செயல்களை பற்றியும் நேரடியாக அவன் தெரிந்துகொள்கிறான். தலைக்குமேல் பாய்மரம் பறக்கும் சப்தம் காதில் விழ, இன்னும் ஆய்வு செய்யப்படாத கடல்களின் சாரல் தன் முகத்தில் படும் அந்த நாள் தனக்கும் வராதோவென சீக்கிரத்தில் இளம் பர்டினான்டு கனவு காண ஆரம்பிக்கிறான்.

வருத்தகரமாக, அவனது புரவலரான அரசனாகிய ஜான் 1495-ல் கொல்லப்பட்டு, கண்டிபிடிப்பில் நாட்டமில்லாமல் செல்வத்தில் அதிக அக்கறையுள்ள கோமானான மன்வேல் ஆட்சிக்கு வருகிறார். எந்தக் காரணத்தினாலோ மன்வேலுக்கு 15 வயதான பர்டினான்டை பிடிக்கவில்லை; அதனால் கடலுக்கு செல்லவேண்டும் என்ற அவனுடைய வேண்டுகோள்களை பல வருடங்களாக அசட்டை செய்துவிடுகிறார். ஆனால், அதிகமான நறுமணப் பொருட்களுடன் வாஸ்கோடகாமா இந்தியாவிலிருந்து திரும்பி வந்தபோது, மன்வேல் பெரும் செல்வத்திற்கான வாய்ப்பை காண்கிறார். கடைசியாக, 1505-ல் மெகல்லன் கடலுக்குப் போகும்படி அனுமதியளிக்கிறார். அரேபிய வர்த்தகர்களிடமிருந்து நறுமணப் பொருட்களின் வியாபாரத்தை கைப்பற்ற உதவுவதற்காக போர்ச்சுகீஸிய கப்பற்படையுடன் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மெகல்லன் புறப்படுகிறார். அதற்குப்பிறகு, மற்றொரு ராணுவ ஆய்வுப் பயணத்துடன் இன்னும் கிழக்கு நோக்கி மலாக்காவிற்கு பயணம் செய்கிறார்.

1513-ல் மொராக்கோவில் நடந்த சிறிய சண்டை ஒன்றில் மெகல்லன் தன் முட்டியில் மிகமோசமாக காயமடைகிறார். அதன் விளைவாக, தன் வாழ்நாள் முழுவதும் அவர் நொண்ட வேண்டியதாகிறது. தன்னுடைய ஓய்வூதியத்தை அதிகரிக்கும்படி மன்வேலிடம் கேட்கிறார். ஆனால், மெகல்லனுடைய சமீபத்திய வீரச்செயல்கள், தியாகம், தைரியம் ஆகியவையும்கூட மன்வேலின் கடும்வெறுப்பை இம்மியளவும் குறைக்கவில்லை. மிகவும் சொற்பமானதை அவருக்குக் கொடுத்து, ஒரு பணக்கார ஏழையாக வாழும்படி அவர் மெகல்லனை வேலையைவிட்டு நீக்கிவிடுகிறார்.

மெகல்லனுடைய வாழ்க்கையின் துயர்மிகுந்த இந்தக் காலப்பகுதியில்தான், அவருடைய பழைய நண்பனும் புகழ்பெற்ற கப்பலோட்டியுமாக இருக்கும் ஜோவா டெ லிஸ்போவா அவரை சந்திக்கிறார். ஸ்பைஸ் தீவை அடைய தென்மேற்காக சென்றுசேரும் வழிகளைப் பற்றி இருவரும் கலந்து பேசுகிறார்கள்; தென் அமெரிக்காவின் வழியாக செல்வதாய் சொல்லிக்கொள்ளப்பட்ட எல் பாசோ என்ற ஜலசந்தி வழியாக செல்லவும், அதன்பின், பால்போவா என்பவர் பனாமா பூசந்தியைக் கடக்கையில் சமீபத்தில் கண்டுபிடித்திருந்த கடலைத் தாண்டி செல்லவும் திட்டமிடுகின்றனர். இந்தக் கடலின் அடுத்தப் பக்கத்தில்தான் ஸ்பைஸ் தீவுகள் இருக்கின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள்.

கொலம்பஸ் செய்ய தவறியதை—கிழக்கிற்கு செல்ல மேற்கு பக்கமான வழியை—கண்டுபிடிக்க மெகல்லன் தீராத ஏக்கங்கொண்டிருந்தார்; அது கிழக்குப் பக்கமான வழியைவிட தூரம் குறைந்தது என அவர் நினைக்கிறார். ஆனால் அவருக்கு பொருளாதார உதவி தேவை. மன்வேலுடைய கோபத்தின் சீற்றத்தினால் இன்னமும் பாதிக்கப்பட்டிருந்தவராக, சில வருடங்களுக்கு முன் கொலம்பஸ் செய்ததையே தானும் செய்கிறார்; ஸ்பெய்ன் நாட்டு அரசனின் ஆதரவை நாடுகிறார்.

ஸ்பெய்னின் அரசர் இணங்குவாரா?

வரைபடங்களை திறந்து வைத்துக்கொண்டு ஸ்பெய்னின் இளம் பேரரசரான முதலாம் சார்லஸிடம் மெகல்லன் தன் வாதங்களைக் கூறுகிறார். அது போர்ச்சுகீஸிய கப்பல் பாதைகளில் அத்துமீறி நுழைவதை தேவைப்படுத்தாது என்பதனால் ஸ்பைஸ் தீவுகளுக்கான மெகல்லனுடைய மேற்கு பக்க வழியில் சார்லஸ் அதிக அக்கறை உடையவராக இருக்கிறார். கூடுதலாக, ஸ்பைஸ் தீவுகள் போர்ச்சுகீஸிய பிராந்தியத்திலல்ல உண்மையில் ஸ்பானிய பிராந்தியத்தில்தான் இருக்கும் என்றும் மெகல்லன் கூறுகிறார்!—“டார்டசியஸின் ஒப்பந்தம்” என்ற பெட்டியைப் பார்க்கவும்.

சார்லஸ் நம்பவைக்கப்படுகிறார். ஆய்வு பயணத்திற்காக ஐந்து பழைய கப்பல்களை மெகல்லனுக்கு கொடுத்து சரிசெய்துகொள்ளும்படி கூறுகிறார். மேலும், அந்தக் கப்பற்படையின் தளபதியாக அவரை நியமித்து, திரும்பி வருகையில் கொண்டுவரப்படும் நறுமணப்பொருட்களின் லாபத்தில் ஒரு பங்கை கொடுப்பதாகவும் உறுதியளிக்கிறார். மெகல்லன் உடனடியாக வேலையை ஆரம்பிக்கிறார். ஆனால், இந்தத் திட்டத்தை முறியடிக்க அரசனாகிய மன்வேல் தந்திரமாக முயற்சி செய்ததால், அதன் வீரப்பயணத்தை துவங்க இந்தக் கப்பற்படை இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

“சரித்திரத்திலேயே மிகப்பெரிய கடற்பயண சாதனை”

செப்டம்பர் 20, 1519-ல் தென் அமெரிக்காவை நோக்கி பயணம் செய்தபோது, மெகல்லன் சென்ற கொடிக் கப்பலாகிய ட்ரினிடாட்-ஐ ஸான் அன்டோன்யோ, கான்செப்சியான், விக்டோரியா, சான்டியாகோ ஆகியவை பின்தொடர்கின்றன. அதில் மெகல்லனுடைய கொடிக் கப்பல் இரண்டாவது பெரியதாகவும் மற்றவை அளவில் இறங்கு வரிசையிலும் இருக்கின்றன. டிசம்பர் 13-ல் அவர்கள் பிரேஸிலை அடைகிறார்கள். உணர்ச்சியைத் தூண்டும் பௌன் டி அசூகர் அல்லது சுகர்லோஃப் மலையை நோக்கியவாறு, ரிப்பேர் செய்வதற்கும் தேவையானவற்றை வாங்குவதற்கும் ரியோ டி ஜனீரோவின் அழகான வளைகுடாவிற்குள் நுழைகிறார்கள். மற்றொரு பெருங்கடலுக்கு இட்டுச்செல்லும், பிடிபடாதிருக்கிற வழியாகிய எல் பாசோ-வை தேடிக்கொண்டே இப்போது அர்ஜன்டினாவாக இருக்குமிடத்தை நோக்கி தெற்கே பயணப்படுகிறார்கள். இதற்கிடையில், நாட்கள் அதிக குளிராகத் தொடங்கி கடலில் பனிப்பாறைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. கடைசியாக, மார்ச் 31, 1520-ல், குளிர்ச்சி வாய்ந்த துறைமுகமாகிய சான் ஹுலியனில் குளிர்காலத்தை கழிக்க மெகல்லன் முடிவு செய்கிறார்.

கொலம்பஸ் அட்லான்டிக்கை முதன்முதலாக கடந்தபோது எடுத்த நேரத்தைப்போல ஆறுமடங்கு அதிக நேரத்தை இந்தக் கடற்பயணம் எடுத்திருக்கிறபோதிலும் ஒரு ஜலசந்திக்கூட கண்ணில் படவில்லை! சான் ஹுலியனின் தட்பவெப்ப நிலையைப்போலவே அந்த மனிதர்களின் மனவுறுதியும் குறைந்திருக்கிறது. சில கப்பற்தலைவர்கள் அதிகாரிகள் உட்பட அநேகர் வீட்டிற்கு திரும்பிச்செல்ல துடிக்கின்றனர். அப்போது கலவரம் எழுந்ததில் ஒன்றும் ஆச்சரியமல்ல. ஆனால், மெகல்லன் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுத்ததால், அது தடுக்கப்படுகிறது; கும்பல் தலைவர்களில் இருவர் கொல்லப்படுகின்றனர்.

துறைமுகத்தில் அந்நிய கப்பல்கள் நின்றுகொண்டிருந்தது, பலமும் திடமுமுள்ள உள்ளூர் மக்களுடைய ஆவலை இயல்பாகவே தூண்டுகிறது. இந்த ராட்சதர்களுக்கு முன்னால் குள்ளர்களாக உணர்ந்த கப்பலோட்டிகள் அந்த இடத்தை பாடகோனியா என்று அழைக்கிறார்கள். “பெரிய கால்கள்” என்று அர்த்தப்படும் ஸ்பானிய வார்த்தையிலிருந்து வரும் இந்தப் பெயரே இதுவரைக்கும் நிலைத்திருக்கிறது. ‘கன்றுக்குட்டிகளை போன்ற பெரிய கடல் ஓநாய்களையும், நீருக்கடியில் நீந்துவதும் மீனை சாப்பிடுவதும் காக்கையைப்போல அலகு உடையதுமான, கருப்பு, வெள்ளை நிற வாத்துகள்’ ஆகியவற்றையும் அங்கே பார்க்கிறார்கள். ஆம், உங்கள் ஊகம் சரியே—அவை நீர்நாய்களும் பென்குவின்களுமே!

துருவப் பிரதேசங்கள், திடீரென்ற பயங்கர புயல்களால் அடிக்கடி தாக்கப்படுகின்றன; குளிர்காலம் முடிவதற்குள் சிறிய கப்பலாகிய சான்டியாகோ-ஐ அந்தக் கப்பற்படை முதலாவதாக இழக்க நேரிடுகிறது. நல்ல காலமாக, கப்பலோட்டிகளின் தொகுதி அந்தக் கப்பற்சேதத்திலிருந்து காப்பாற்றப்படுகிறது. அதற்குப் பிறகு, மீதமிருக்கும் நான்கு கப்பல்களும், விட்டுக்கொடுக்காத குளிர்ந்த புயற்காற்றின் வலிமையில் சிக்கித் தவிக்கும் சிறிய இறக்கைகளை உடைய விட்டில் பூச்சிகளைப்போல, இன்னும் தெற்காக அதைக் காட்டிலும் குளிர்ந்த தண்ணீருக்குள் அக்டோபர் 21 வரை தளராது செல்கின்றன. நீர்த்திவலைக்கும் உறைந்த மழைக்கும் மத்தியில், மேற்கு நோக்கிய ஒரு திறப்பையே எல்லா கண்களும் ஆர்வத்தோடு தேடுகின்றன. எல் பாசோ? ஆம்! கடைசியில், அவர்கள் திரும்பி, பின்னர் மெகல்லன் ஜலசந்தி என்று அழைக்கப்பட்டதிற்குள் நுழைகிறார்கள்! என்றபோதிலும், வெற்றிக்கான இந்த நேரமும் கறைபடுத்தப்படுகிறது. அந்த ஜலசந்தியின் பின்னலமைப்பிற்குள் சான் அன்டோன்யோ வேண்டுமென்றே நுழைந்து, பின் ஸ்பெய்னுக்குத் திரும்புகிறது.

இரண்டு பக்கங்களிலும் குளிர்ந்த இடுக்கமான கடற்பாதையும் பனி மூடிய சிகரங்களும் சூழ, வளைந்து நெளிந்து செல்லும் அந்த ஜலசந்திக்குள் மீதமிருக்கும் மூன்று கப்பல்களும் சளைக்காமல் செல்கின்றன. தெற்கில், ஒருவேளை இந்தியர்களின் குடியிருப்பில் பற்றவைக்கப்பட்டிருந்த எண்ணிறந்த நெருப்புகளை பார்க்கின்றனர்; ஆகவே அந்த இடத்தை டியரா டெல் ஃப்யூகோ, அல்லது “நெருப்பு நிலம்” என்று அழைக்கின்றனர்.

பசிபிக்கில் சோதனை

வேதனை தரும் ஐந்து வாரங்களுக்கு பிறகு, மிகவும் அமைதியாக இருக்கும் ஒரு பெருங்கடலுக்குள் நுழைகின்றனர்; அவ்வளவு அமைதியாக இருந்ததால் அதற்குப் பசிபிக் என்று மெகல்லன் பெயரிடுகிறார். அவர்கள் ஜெபம் செய்து, பாமாலைகள் பாடி, பீரங்கிகளை வெடிக்கச் செய்து வெற்றியை கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்களுடைய சந்தோஷம் சீக்கிரத்தில் மறைந்துவிடுகிறது. தாங்கள் இதுவரை எதிர்ப்பட்டிராத அளவு துன்பம் அவர்களுக்காக காத்திருக்கிறது; ஏனென்றால் அவர்கள் நினைத்தபடி அந்தக் கடல் அவ்வளவு சிறியதாக இல்லை. அது முடிவற்றதாக தோன்றியதால் அவர்கள் அதிக பசியும் பலவீனமும் நோயும் அடைகிறார்கள்.

அன்டோன்யோ பிகஃபெட்டா என்ற துணிகரமுள்ள இத்தாலியன் ஒரு டைரி வைத்திருக்கிறான். அவன் எழுதுவதாவது: “புதன் கிழமை, நவம்பர் 28, 1520-ல் நாங்கள் . . . பசிபிக் கடலில் நுழைந்தோம்; அங்கேயே மூன்று மாதங்களும் இருபது நாட்களும் எந்தப் பொருட்களும் பெறமுடியாமல் இருந்தோம் . . . புழுக்கள் நிறைந்ததும் எலிகளின் கழிவுப்பொருட்கள் உள்ளதுமான, உடைந்த பழைய பிஸ்கட்டுகளைத்தான் உண்டோம் . . . , மஞ்சளாகவும் நாற்றமும் அடித்த தண்ணீரை குடித்தோம். நாங்கள் எருதின் தோல்களையும் . . . , மரத்தூளையும், ஒவ்வொன்றும் 2.5 ஷில்லிங் மதிப்புள்ள எலிகளையும்கூட சாப்பிட்டோம்; ஆனாலும் போதுமானவை கிடைக்கவில்லை.” இப்படியாக, சுத்தமான காற்று அவர்களுடைய பாய்மரங்களை நிரப்ப, தெளிந்த தண்ணீர் கப்பலின் கீழ் ஓடிக்கொண்டிருக்க, அவர்கள் ஸ்கர்வி நோயால் மோசமாகிக்கொண்டு கிடக்கின்றனர். மார்ச் 6, 1521-ல் அவர்கள் மரியனா தீவுகளுக்கு வந்துசேருவதற்குள் பத்தொன்பது பேர் இறந்துவிடுகின்றனர்.

ஆனால், இங்கே தீவுவாசிகளிடமிருந்து வந்த எதிர்ப்புகளால், மறுபடியும் புறப்படுவதற்குள் சுத்தமான உணவை கொஞ்சம் மாத்திரமே அவர்களால் பெறமுடிகிறது. கடைசியாக, மார்ச் 16-ல் அவர்கள் பிலிப்பைன்ஸை பார்க்கின்றனர். இப்போது, எல்லாரும் நன்றாக சாப்பிட்டு, ஓய்வெடுத்து, தங்கள் உடல் நலத்தையும் பலத்தையும் திரும்பப் பெறுகின்றனர்.

அவலம்—ஒரு கனவு கலைகிறது

ஆழ்ந்த மதப்பற்றுடையவராக மெகல்லன், அநேக உள்ளூர்வாசிகளையும் அவர்களுடைய ஆட்சியாளர்களையும் கத்தோலிக்கர்களாக மாற்றுகிறார். ஆனால் அவருடைய வைராக்கியமே அவருடைய அழிவுக்கும் காரணமாகிறது. இனங்களுக்கு மத்தியிலான தகராறு ஒன்றில் அவர் தலையிட்டு, குறுக்கு வில், துப்பாக்கி மற்றும் கடவுளால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று எண்ணி, அறுபதே ஆட்களுடன் ஏறக்குறைய 1,500 உள்ளூர்வாசிகளை தாக்குகிறார். மாறாக, அவரும் அவருடைய ஆட்களில் அதிகமானவர்களும் கொல்லப்படுகின்றனர். மெகல்லனுக்கு ஏறக்குறைய 41 வயது. உண்மையுள்ள பிகஃபெட்டா இவ்வாறு புலம்புகிறான்: ‘எங்களுடைய மிகச் சிறந்த முன்மாதிரியையும், ஒளி விளக்கையும், ஆறுதலையும், உண்மையுள்ள வழிகாட்டியையும் கொன்றுவிட்டனர்.’ கொஞ்ச நாட்கள் கழித்து, தங்கள் கப்பலின் பாதுகாப்பிலிருந்து வெறுமனே பார்த்துக்கொண்டிருந்த ஏறக்குறைய 27 அதிகாரிகள், முன்பு தோழர்களாக இருந்த இனத்தலைவர்களால் கொல்லப்படுகின்றனர்.

மெகல்லன் தனக்கு அறிமுகமான சூழலில்தான் இறந்தார். கொஞ்சம் தெற்கில்தான் ஸ்பைஸ் தீவுகள் இருக்கின்றன; அவர் 1511-ல் யுத்தம் செய்திருந்த மலாக்கா சற்று மேற்கில்தான் இருக்கிறது. சில சரித்திர ஆசிரியர்கள் நினைக்கிறபடி, மலாக்கா யுத்தத்திற்கு பிறகு அவர் பிலிப்பைன்ஸுக்கு பயணம் செய்திருந்தால், அவர் உண்மையில் பூமியை வலம் வந்திருந்தார்; ஆனாலும், நிச்சயமாக ஒரே கடற்பயணத்தில் அல்ல. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் அவர் பிலிப்பைன்ஸை அடைந்திருந்தார்.

திரும்பிவரும் பயணம் பேராபத்து நிறைந்ததாகிறது

இப்போது மிகக் குறைவான ஆட்களே மீதமிருப்பதால், மூன்று கப்பல்களை செலுத்துவது கடினமாக இருக்கிறது. ஆகவே அவர்கள் கான்செப்சியான்-ஐ மூழ்கடித்துவிட்டு, மீதமிருக்கும் இரண்டு கப்பல்களை தங்கள் முடிவான இலக்காகிய ஸ்பைஸ் தீவுகளுக்கு ஓட்டிச்செல்கின்றனர். பிறகு, நறுமணப் பொருட்களை நிரப்பிக் கொண்டு, இரண்டு கப்பல்களும் பிரிந்துசெல்கின்றன. என்றபோதிலும், செல்வதற்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ட்ரினிடாட்-ன் கப்பலோட்டி தொகுதியினர், போர்ச்சுகீஸியர்களால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

முன்னாள் கலகக்காரனான க்வான் செபஸ்தியான் டெ எல்கானோ நடத்திச்சென்ற கப்பலாகிய விக்டோரியா தப்பித்துக்கொள்கிறது. ஒரேயொரு துறைமுகத்தைத் தவிர மற்றெல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு, நன்னம்பிக்கை முனையை சுற்றிவர போர்ச்சுகீஸிய கடல் வழியை துணிந்து தெரிவுசெய்கின்றனர். என்றபோதிலும், உணவுப் பொருட்களுக்காக நிறுத்தாமல் செல்வது, அதிக தியாகத்தை உட்படுத்திய ஒரு திட்டமாகும். கடைசியாக, செப்டம்பர் 6, 1522-ல்—தாங்கள் கிளம்பியதிலிருந்து மூன்று வருடங்கள் கழித்து—அவர்கள் ஸ்பெய்னை வந்தடைந்தபோது, நோய்பிடித்த, மெலிந்துபோன வெறும் பதினெட்டு ஆண்களே தப்பிப்பிழைத்திருந்தனர். என்றபோதிலும், அவர்களே கேள்விக்கிடமின்றி முதன்முதலில் கப்பலில் பூமியை சுற்றிவந்தவர்கள். மேலும், டெ எல்கானோ ஒரு வீரன். வியக்கத்தக்க விதமாக, விக்டோரியா-விலிருந்த 26 டன் நறுமணப் பொருட்கள் அந்த முழு கடற்பயணத்திற்கான செலவையும் ஈடுசெய்கின்றன!

மெகல்லனுடைய பெயர் நிலைத்திருக்கிறது

பல வருடங்களாக மெகல்லனுக்கு, சரித்திரத்தில் அவருக்கு உரித்தான இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. ஸ்பானியர்கள், கலகக்கார கப்பல் தலைவர்களின் வார்த்தைகளால் அலைக்கழிக்கப்பட்டவர்களாய் அவர் மூர்க்கமுள்ளவர், தகுதியில்லாதவர் என்று கூறுவதன்மூலம் அவருடைய நற்பெயரை கெடுத்திருக்கின்றனர். போர்ச்சுகீஸியர்கள் அவருக்கு நம்பிக்கைதுரோகி என்ற பட்டம் கட்டிவிடுகின்றனர். வருத்தகரமாக, அவர் மரித்தபோது அவருடைய குறிப்புப் புத்தகமும் மறைந்துபோனது; அது எவர்களை வெளிப்படுத்துமோ அவர்களால் ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பூமியை சுற்றிவந்த 18 பேரில் ஒருவரான விட்டுக்கொடுக்காத பிகஃபெட்டா மற்றும் ஆய்வுப் பயணத்தின் மற்ற சுமார் ஐந்து பேர்களுடைய உதவியால், இந்த விசனகரமான ஆனால் விசேஷித்த கடற்பயணத்தை பற்றிய பதிவு கொஞ்சமாவது நமக்கு கிடைத்திருக்கிறது.

காலப்போக்கில் சரித்திரம் தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது; இன்று மெகல்லனுடைய பெயருக்கு அதற்குரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. ஒரு ஜலசந்தியும், தெற்கிலிருக்கும், அவருடைய ஆட்களால் முதலில் வர்ணிக்கப்பட்ட இரண்டு தெளிவற்ற நட்சத்திரக் கொத்துக்களான மெகல்லான் மேகங்களும், விண்வெளி ஆராய்ச்சிக் கலமான மெகல்லனும் அவருடைய பெயரை தாங்கியிருக்கின்றன. மேலுமாக, உலகின் மிகப்பெரிய கடலாகிய பசிபிகின் பெயருக்கும் நாம் மெகல்லனுக்கே கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

உண்மையில், “447 வருடங்கள் கழித்து அப்போல்லோ 11 நிலவில் தரையிறங்கியதற்கு முன்பு, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வேறு எந்த மனிதப் பயணமும் மேற்கொள்ளப்படாது” என்று ரிச்சர்ட் ஹம்பல், மெகல்லனுடைய கடற்பயணங்கள் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் எழுதுகிறார். இந்தப் பயணம் ஏன் அவ்வளவு முக்கியத்துவமுள்ளது? முதலாவதாக, கொலம்பஸ் நினைத்தபடி அமெரிக்காக்கள் ஆசியாவிற்கு அருகிலும் இல்லை அதின் பாகமாகவும் இல்லை என்பதை நிரூபித்தது. இரண்டாவதாக, பயணத்தின் முடிவில், தேதிகளில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டது சர்வதேச தேதி கோட்டிற்கான தேவையை வலியுறுத்தியது. கடைசியாக, விஞ்ஞான எழுத்தாளர் ஐசக் அஸிமஃப் கூறியபடி, பூமி ஒரு கோளம் என்பதை அது நிரூபித்தது. ஆம் இந்த விஷயத்தில், 2,250 ஆண்டுகளாக பைபிள் சொல்லிக் கொண்டிருந்ததைத்தான் நடைமுறையான விதத்தில் மெகல்லன் மெய்ப்பித்துக் காட்டினார். (ஏசாயா 40:22; யோபு 26:7-ஐ ஒப்பிடுக.) உலகத்தை வெளிப்படுத்திய, ஆழ்ந்த மதப்பற்றுள்ள மனிதனாக இருந்தவர் அதைக்குறித்து சந்தோஷப்பட்டிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

[அடிக்குறிப்பு]

a அவருடைய போர்ச்சுகீஸிய பெயர் ஃபர்னவுன் டெ மகல்யைன்ஷ்.

[பக்கம் 14-ன் பெட்டி]

டார்டசியஸின் ஒப்பந்தம்

தங்களுக்கு முன்னால் மிகப்பெரிய வாய்ப்பு திறந்திருந்ததால், புதிய நிலங்களில் வியாபார மற்றும் பேரரச உரிமைகளை பகிர்ந்துகொள்ள ஒப்பந்தத்தின் மூலம் போர்ச்சுகலும் ஸ்பெய்னும் ஒப்புக்கொண்டன. ஆகவே, போப் ஆறாம் அலெக்ஸாண்டர், இரண்டாம் ஜுலியஸ் ஆகியோரின் தலைமையின்கீழ் இன்று பிரேஸிலாக இருப்பதினூடே கற்பனையான ஒரு எல்லைக்கோட்டை வரைந்தார்கள். இந்தக் கோட்டிற்கு கிழக்கே கண்டுபிடிக்கப்படும் நிலங்கள் போர்ச்சுகலுடையதாகும்; மற்றவை ஸ்பெய்னுடையதாகும். துருவங்கள் வழியாக பூமியின் அடுத்த பக்கத்திற்கு இந்தக் கோடு நீட்டப்பட்டால் ஸ்பைஸ் தீவுகள் உண்மையில் ஸ்பெய்னின் உரிமைப்பகுதிக்குள் இருக்கலாம் என்று போர்ச்சுகீஸிய அரசன் மன்வேலிடம் மெகல்லன் ஞானமற்றவிதமாக கூறினார். பசிபிக் பெருங்கடல் சிறியது என்ற அப்போதைய கருத்தின் அடிப்படையிலான இந்தக் கபடமற்ற குறிப்பு, அவருக்கு பெரும் கண்டனத்தைப் பெற்றுத்தந்தது. நேர் எதிர்மாறாக, தான் எண்ணியது தவறு என்பதை மெகல்லனே நிரூபித்தார். இருந்தாலும்கூட, ஸ்பெய்னின் அரசனுடைய ஆதரவை நாட அந்த நம்பிக்கைதானே அவருக்கு கூடுதலான காரணத்தை கொடுத்தது.

[பக்கம் 15-ன் பெட்டி]

ஆரம்பகால கப்பலோட்டியின் வேதனைமிக்க நிலை

முக்கியமாக அநேக வருடங்கள் பெரும்பாலும் நீடித்த கண்டுபிடிப்பிற்கான நீண்ட கடற்பயணங்களில், ஏழ்மையான கப்பலோட்டிக்கு வாழ்க்கை இன்ப கடல்சுற்றுலாவைப்போல இருக்கவில்லை. கப்பலோட்டிகளின் வாழ்க்கை நிலை என்ன என்பதற்கு இது வெறும் ஓர் உதாரணம் மட்டுமே:

• வருந்தத்தக்க அளவு நெருக்கமான குடியிருப்பும், தனிமை இல்லாத நிலையும்

• கப்பல் தலைவனுடைய மனப்பாங்கைப் பொருத்து, அடிக்கடி கொடூரமான தண்டனை

• வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்கர்வி நோயும் மரணமும்

• கப்பற்சேதம், பசி, தாகம், மோசமான வானிலைக்கு ஆளாவது, உள்ளூர்வாசிகள் போன்றவற்றால் மரணம்

• அழுக்கான, நாற்றமடிக்கும் தண்ணீரால் சீதபேதி அல்லது டைஃபாய்டு

• கெட்டுப்போன, நோய்க்கிருமிகள் நிறைந்த உணவினால் உணவு விஷத்தன்மையாதல்

• பசியுள்ள எலிகளின் கடிகளால் ஏற்படும் எலிக்கடி காய்ச்சல்

• அழுக்கான உடல்களிலும் துணிகளிலும் நிறைந்திருக்கும் உண்ணிகளால் ஏற்படும் டைபஸ் ஜுரம்

• பெரும்பாலும், உயிருடன் வீடு திரும்புவதற்கான சாத்தியம் சுமார் 50 சதவீதம் மட்டுமே

படத்திற்கான நன்றி]

Century Magazine

மெகல்லன் ஜலசந்தி

[பக்கம் 16, 17-ன் வரைப்படம்/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மெகல்லனுடைய கடற்பயணம், 1519-22

சென்ற வழி ஆரம்பமும் முடிவும்

பிலிப்பைன்ஸில் மெகல்லன் கொல்லப்பட்டார்

க்வான் செபஸ்தியான் டெ எல்கானோ பயணம்செய்த கடைசி சுற்று

[படத்திற்கான நன்றி]

மெகல்லன்: Giraudon/Art Resource, NY; உலக வரைபடம்: Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.; ஆஸ்டிரோலேப்: Courtesy of Adler Planetarium

[பக்கம் 16-ன் படம்]

பர்டினான்டு மெகல்லன்

[பக்கம் 16-ன் படம்]

பூமியை சுற்றிவந்த முதலாவது கப்பல், “விக்டோரியா.” அவருடைய ஐந்து கப்பல்களில் அது அளவில் நான்காவதாக இருந்து, 45 ஆட்களை கொண்டுசென்றது. அந்தக் கப்பல் சுமார் 70 அடி நீளமாக இருந்தது

[பக்கம் 17-ன் படங்கள்]

கடற்பயண சாதனங்கள்: மணற்கடிகை நேரத்தை அளந்தது; கப்பலின் அட்சரேகையை ஆஸ்டிரோலேப் கணக்கிட்டது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்